Kalangalil aval vasantham 12(1)
Kalangalil aval vasantham 12(1)
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ!
வண்ணம் நீயே வானும் நீயே ஊணும்நீ உயிரும் நீ!
பல நாள் கனவே ஒரு நாள் நனவே, ஏக்கங்கள் தீர்த்தாயே!
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன், நான் தான் நீ வேறில்லை!
சிறு குரலில் பாடிக் கொண்டிருந்தார் சித்தாரா, காரிலிருந்த மியுசிக் ப்ளேயரில்!
பாடலில் ஆழ்ந்து இருந்தான் சஷாங்கன். வியாழக்கிழமை அனைத்து சைட்களையும் விசிட் அடிப்பது அவனது வழமை!
அன்றும் அதை விடாமல் பின்பற்றி சைட் விசிட் போயிருந்தான். உடன் எப்போதும் போல ப்ரீத்தி மட்டும்! அவள் தான் காரை ஒட்டிக்கொண்டிருந்தாள். ஓரப்பார்வையாக ஷானை பார்த்தபடி!
அவனது கண்களிலோரம் சிறு நீர் துளி. இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவன் இது போல கண்களை மூடி பின்னால் சாய்ந்து கொள்வது வழக்கம். இந்த பாடல் மட்டுமில்லை. இன்னும் சில பாடல்களும் இருக்கின்றன. அனைத்தும் அவனது தாயாரின் ஃபேவரிட் விருப்பப் பாடல்கள்.
ஸ்ரீமதிக்கு மிகவும் விருப்பம் என்பதால் அவனும் மிகவும் ரசித்து விரும்பும் பாடல்களாகி இருந்தன. அத்தனையிலும் இந்த பாடல் இன்னும் ஸ்பெஷல். ஸ்ரீமதியின் மடியை உறக்கத்திற்காக அவன் தஞ்சமடையும் போதெல்லாம், தலை கோதியபடியே அவர் பாடும் பாடல் என்று பலமுறை பிரீத்தியிடம் சொல்லியிருந்தான்.
அதனால் அவரை மனம் தேடும் போதெல்லாம் இந்த பாடலை ஒலிக்க விட்டபடி லாங் டிரைவ் போவது அவனது வழக்கம், உடன் ப்ரீத்தி இருக்க வேண்டும், காரை ஓட்ட! பாடலில் கரைந்த படியே உறங்கிப் போவதும் அவனது வழக்கம் தான்.
ஆனால் அவையெல்லாம் வேலை முடித்து போகும் போது, எப்போதாவது தான்! ஒருவாறாக புரிந்துதானிருந்தது, அவனது மனநிலை.
அதற்கேற்றார் போல அவளும் ஏதும் பேசவில்லை.
பேசும் வார்த்தைகள் தரும் நிம்மதியை விட பேசா வார்த்தைகள் சில நேரத்தில் அதிக நிம்மதியை தரக் கூடும்.
மாலையும் இரவும் சந்திக்கும் வேளை. பொன்னிற வானம் தகதகத்துக் கொண்டிருந்தது. கிழக்குக் கடற்கரை சாலையில் மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தாள். ட்ராபிக் இல்லாமல் கிழக்குக் கடற்கரை சாலையில் பயணிப்பது அலாதியான விஷயம். ஜன்னலை பாதி அளவுக்கு இறக்கி விட்டிருந்ததால் குளிர்ந்த பீச் காற்று அவளது பக்கவாட்டில் மோதி விழுந்தது. ஷான் கண் விழிக்கவில்லை.
ஞாயிறன்று அவனை மருத்துவமனையில் அட்மிட் செய்தபோது அவனிருந்த நிலை அவளது கண்முன் நிழலாடியது.
அவனது தந்தை, வைஷ்ணவி, மற்றும் அவள் என மூவருக்குமே உறக்கமில்லா இரவாக கழிய, காலை தான் வைஷ்ணவி வீட்டுக்கு சென்றிருந்தாள். அப்போதும் மாதேஸ்வரன் துளியும் உறங்கவில்லை. மெளனமாக எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவரை பார்க்கும் போதே மனம் பிசைந்தது.
அவ்வப்போது நர்ஸ் ஷானின் வைட்டல்சை பார்த்துக் குறித்துக் கொண்டிருந்தார். கண்கள் கனமாகி மூடப் பார்த்தாலும், அவளால் உறங்க முடியவில்லை.
“நீ கிளம்பு ப்ரீத்தி. நாங்க தான் இருக்கோம்ல…” என்று வைஷ்ணவி கூறினாலும் அவள் மனம் ஒப்பவில்லை. ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டபடி, ஐசியூவை பார்த்தவள்,
“இல்ல மேடம். பரவால்ல…” ஒரே வார்த்தையில் முடித்திருந்தாள்.
அதன் பின் நடந்தவை எல்லாம் இப்போது நினைத்தாலும் கனவு போலத்தான் தோன்றுகின்றன. ஆனால் அவையெல்லாம் கனவிலும் நினையாதவை!
என்றாவது நினைத்துப் பார்த்திருப்பானா, தனக்கு கொக்கைன் ஓவர்டோஸ் ஆகி, சிகிச்சைக்கு வருவோமென! அவனென்ன, தானென்ன? யாருமே நினைத்தும் பார்த்திராததாயிற்றே!
ஆனால் ஏன்? எதனால்? யார் செய்திருக்கக் கூடும்? அவளது மனதுக்குள் பலவிதமான குழப்பங்கள்!
அந்த குழப்பத்திலேயே காரோட்டிக் கொண்டிருந்தவளை,
“கன்ஃபியுஷன்ல இருக்கியா ப்ரீத்தி? ஓரமா வேண்ணா நிறுத்தேன்…” கண்களை மூடியபடி கூறியவனை, ஓரக்கண்ணில் பார்க்க, அவன் இன்னமும் கண்களை மூடியபடிதான் இருந்தான்.
எப்படிக் கண்டுபிடித்தான்? வியப்பாக இருந்தது அவளுக்கு!
புருவம் உயர்ந்து, லேசாக புன்னகை அரும்பியது! ஆனால் இதுவொன்றும் புதிதல்லவே!
“எப்படி கண்டுபிடிச்சீங்க பாஸ்?”
“நீ வெடுக் வெடுக்குன்னு பிரேக்க மிதிக்கும் போதே தெரியுதே!” அவன் கூறிய விதத்தில் அவளது உதட்டோரம் புன்னகை அரும்பியது.
“பிரேக்க மிதிக்கற நேரத்துல, பிரேக்க மிதிக்காம வேற யாரை மிதிக்கறது பாஸ்?” கிண்டலாக கேட்டவளை ஒற்றைக் கண்ணை மூடியபடி ஓரப்பார்வையாகப் பார்த்து,
“என்னை மிதிக்கத்தான கேட்ட?” என்று அவளது உள்ளுணர்வை படித்தவனை, இன்னமும் விரிந்த புன்னகையோடு பார்த்தாள், காரை ஓட்டியபடியே!
“உங்க அறிவே அறிவு பாஸ்…” போலியாக அவனை பாராட்டும் அவளது கிண்டலைப் புரிந்து கொண்டவன்,
“ஆனாலும் உனக்கு இருக்க தைரியம் யாருக்கு வரும்?” என்றவன், சாய்ந்திருந்த இருக்கையை, முன் கொண்டுவந்து, நிமிர்ந்து அமர்ந்தான்.
“உங்க அறிவப் பாராட்டினது ஒரு குத்தமா பாஸ்?” அப்பாவியாக கேள்வி கேட்டவளை, புன்னகையோடு பார்த்தவன்,
“ரொம்ப பாராட்டிட்ட, முன்னாடி பார்த்து ஓட்டு…” என்று சிரித்தான். அவனுக்குள் வியப்பு தான். அவனது உணர்வுகளை சரியாக படம் பிடிக்கவும், அதை மாற்றி விடவும் இப்போதைக்கு அவளால் மட்டுமே முடிந்தவொன்று!
முன்னரெல்லாம் ஸ்ரீமதி செய்து கொண்டிருப்பார் அதை… பசியோ, தாகமோ, கோபமோ, எரிச்சலோ, அவனது முகத்தைப் பார்த்தே கண்டுகொள்வதில் அவனது தாயை யாரும் மிஞ்ச முடியாது. அது போல இப்போது, ப்ரீத்தி!
அவனது மன வருத்தத்தை மடை மாற்ற முயல்கிறாள் என்பது புரிந்திருந்தது. ஆனாலும் அவனால் மாறிவிட முடியவில்லை.
யார் தனக்கு கொக்கைன் தந்திருக்க முடியும்? உடனிருந்தது ஸ்வேதா மட்டும் தான். அதுவும் ஓவர்டோசாகும் அளவு கொக்கைன் தருவதில் அவளுக்கென்ன லாபமிருக்க முடியும்? அவள் அவனது உயிரில்லையா? அவனது வாழ்வே ஸ்வேதா தானே!
ஸ்வேதாவை வேறு மாதிரியாக நினைக்க முடியுமா?
முடியவே முடியாதென்று மனம் அடித்துக் கூறியது. அவன் மருத்துவமனையில் அட்மிட் ஆனதெல்லாம் அவளுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால், கண்டிப்பாக அவளால் நிம்மதியாக இருந்திருக்க முடியாது என்று அவனது மனம் திண்ணமாக நம்பியது!
அவன் அறிவான் அவனது ஸ்வேதாவை!
“என்ன பாஸ்?” அவனது புருவச் சுளிப்பைப் கவனித்தவள், கேட்க,
“கொக்கைன் ஓவர்டோஸ் பண்ற அளவு போயிருக்காங்கன்னா, அது யாரா இருக்கும்ன்னு யோசிக்கறேன்…”
“எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுடலாம் பாஸ்…” உறுதியாக கூறியவளை திரும்பிப் பார்த்தவன், வெகு அழுத்தமாக,
“சீக்கிரமா ரிப்போர்ட் பண்ண சொல்லு…” என்று இடைவெளி விட்டவன், “இனிமே தான பார்க்க போறாங்க, இந்த சஷாங்கன் யாருன்னு…” என்றவனின் முகத்தில் அத்தனை சீற்றம்!
அது ஒருவிதமான பழியுணர்வு! யாரோ தன்னை அழிக்க நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்த சர்ப்பத்தின் சீற்றம்!
தன்னை தாக்கியவர்களை விடாது சென்று தாக்குமாம் கட்டுவிரியன்!
இத்தனை காலமும் அத்தனையும் பொறுமையாக சகித்துக் கொண்டு போன சஷாங்கனை என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று எண்ணிக் கொண்டார்களா என்ன?
பற்களை இறுகக் கடித்தவன், கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்!
யாராக இருக்கக் கூடுமென்ற யூகம் இருக்கிறது. ஆனால் சட்டென அவர்கள் தானென முடிவெடுத்துவிட முடியாது. இதில் அவனது வாழ்க்கை மட்டுமல்ல, அவனது தமக்கையின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது!
“ஒரு விஷயம் சொல்லட்டா?” சற்று கீழிறங்கிய குரலில் ப்ரீத்தி கேட்க, அவள்புறம் திரும்பி அமர்ந்தவன்,
“சொல்லு ப்ரீத்…” என்று கேட்டான்.
“கொக்கைன் குடுத்துருக்காங்கன்னா, குடுக்கற அளவுக்கு நீங்க இடம் குடுத்துருக்கீங்க பாஸ்…” அவனை போலவே அழுத்தமாக ப்ரீத்தி கூற,
“நீ என்ன சொல்ல வர்ற ப்ரீத்தி?” அவன் விரும்பாத பக்கத்தை ப்ரீத்தி தொடுவதாக பட்டது அவனுக்கு!
“உண்மைய மட்டும் தான் நான் சொல்ல வர்றேன்…”
“இல்ல… நீ ஸ்வேதாவ சொல்ற மாதிரி எனக்குப் படுது…”
“படுதில்ல… அதை தான் நானும் சொல்றேன்…”
“இல்ல… ஸ்வேதாவ நீ இதுல கோர்த்துவிட பார்க்காத ப்ரீத்தி…” கட்அன்ட் ரைட்டாக கூறினான். ஸ்வேதாவின் பெயர் இதில் இழுபடுவது அவனுக்கு பிடிக்கவில்லை.
“நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும், அவங்க தான் என்னோட லிஸ்ட்ல முதல்ல இருக்காங்க…” என்று தெளிவாக கூற,
“அவளை இழுக்காத. அவளுக்கும் இதுக்கும் சம்பந்தமே இருக்காது. ரவிய சொன்னா கூட அர்த்தமிருக்கு. ஸ்வேதா… சான்ஸே இல்ல…” வெகு பிடிவாதமாக கூறியவனை பரிதாபமாக பார்த்தவள்,
“ஸ்வேதாவை இழுக்கறது உங்களுக்குப் பிடிக்காம இருக்கலாம் பாஸ். ஆனா உண்மை என்னன்னு கண்டிப்பா தெரிஞ்சாகனும். இதுல நீங்க தலையிடாதீங்க. நீங்களே ஒரு பக்கம் பயஸ்டா யோசிக்கும் போது உங்களால அந்த அவுட்புட்டை டைஜஸ்ட் பண்ண முடியாம போகலாம்.”
அழுத்தம்திருத்தமாக கூறிய ப்ரீத்தவை நேராகப் பார்த்தவன், திரும்பி நிமிர்ந்து அமர்ந்து கொண்டான். ப்ரீத்தி அவ்வளவு எளிதாக தன்னை பைபாஸ் செய்பவள் அல்ல என்பது அவனுக்கும் தெரியும். அவனை தலையிட வேண்டாமென சொல்கிறாள் என்றால், அவளுக்கும் இருக்கும் கோபம் தான் எனவும் அவனுக்குத் தெரியும். இரண்டு நாட்களாக எதுவுமே பேசாமல், தன்னோடே இருந்து கொண்டிருப்பவள்.
தந்தை, வைஷ்ணவிக்கு அடுத்து உடனிருந்து ஒவ்வொரு நொடியும் அவனது நலத்தை நாடிக் கொண்டிருப்பவள். அவளது மனதுக்குள் இந்த கோபம் நியாயமானதுதான் என்று அவனது அறிவு அடித்துக் கூறியது!
ஆனால் அவனது மனதோ, இந்த விஷயத்தில் ப்ரீத்தாவை எப்படி அவனால் சந்தேகப்பட முடியாதோ, அதே அளவு ஸ்வேதாவையும் சந்தேகப்பட முடியாது என்பதை பிடிவாதமாகப் பற்றிக் கொண்டது.
நேராக சாலையை பார்த்தபடி, “சரி. விலகிக்கறேன். ஆனால் ஸ்வேதாவ ஏன் சந்தேகப்படறன்னு கேக்கறேன்?” எந்த உணர்வையும் காட்டாமல் சஷாங்கன் கேட்க, காரின் வேகத்தைக் குறைக்காமல், ஒரு நொடி அவனை திரும்பிப் பார்த்தாள்.
“ஒய் நாட் ஸ்வேதா? அவங்க எப்படி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவங்க ஆகறாங்க?”
“இது உன்னோட அசெம்ஷனா இல்லைன்னா திருமதி ரவியோட அசெம்ஷனா?”
“யாரா இருந்தாலும் வேலிட் பாயிண்ட்னா ஒத்துக்கணும் பாஸ்…” என்று இடைவெளி விட்டவள், “நானாத்தான் கேக்கறேன்…” என்று கூறிவிட்டு சற்று மௌனமாகியவள், “அன்னைக்கு முழுசும் அவங்க கூட மட்டும் தான் இருந்தீங்க, அவங்க கூடத்தான் சாப்ட்டீங்க…”
“உன்னோட கூடத்தான் எப்பவுமே இருக்கேன். உன்னோட கூடத்தான் சாப்பிடறேன். அப்படின்னா உன்னை சந்தேகப்பட முடியுமா?” அவள் புறம் பார்த்து, சட்டென்று கூறியவனை திரும்பி அழுத்தமாக பார்த்தாள், அவனது கண்களை, நேருக்கு நேராக!
காரின் வேகம் சற்று குறைந்தது! அது அவனது பேச்சின் விளைவினால் ஏற்பட்ட அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். மனதுக்குள் மெல்லிய வலி பரவியது. ஆனால் அடுத்த நொடியே தன்னை சுதாரித்துக் கொண்டு,
“ஒய் நாட்?” என்று தீர்க்கமாக கூறியவளை இன்னமும் ஆழமாகப் பார்த்தான் சஷாங்கன்!
ப்ரீத்தாவை எப்படி அவனால் சந்தேகப்பட முடியாதோ, அதை காட்டிலும் ஸ்வேதாவை அவனால் சந்தேக வளையத்துக்குள் உட்படுத்தவே முடியாது என்பதைத்தான் அவன் கூற நினைத்தான். ஆனால் வார்த்தைகளை சரியாக போடத் தெரியவில்லை அவனுக்கு!
“டோன்ட் பி ஸ்டுப்பிட்…” எரிச்சலாக அவன் கூற, ஈசிஆரின் வாகன நெரிசலிலிருந்து வெளிவந்து, சாலை ஓரமாக அமைந்திருந்த அந்த ரெஸ்டாரன்ட்டினுள் நுழைந்து நிறுத்தினாள். அதற்கு மேலும் அவளால் காரோட்ட முடியுமென்று தோன்றவில்லை.
கண்களை இறுக்கமாக மூடித் திறந்தாள். நீ என்னை சந்தேகப்படுகிறாயா? உன் பிரச்சனை, எப்படியோ போ என்று சாதாரணமாக மனதாங்கலில் விட்டுவிடக் கூடிய பிரச்சனை இல்லையென்று மனம் திடமாக நம்பியது! அதோடு சில நாட்களுக்கு முன் ஸ்வேதாவின் அங்கிளை ரவியோடு சேர்த்து பார்த்தது வேறு மனதுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. ஸ்வேதாவுக்கும் ரவிக்கும் ஆகாது என்பதை இவன் சொல்லித்தான் அறிவாள். ஆனால் அவர்களுக்குள் வேறு ஏதோ கொடுக்கல் வாங்கல் இருக்கிறது என்பதையும் அவளது மூளை சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தது! ஆக பேசுவதை கண்டிப்பாக பேசித்தானாக வேண்டும்!
“நாட் அட் ஆல். யாருமே சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவங்க இல்ல. உங்களை பொறுத்தவரை, அது நானா இருக்க கூட நிறைய சான்ஸ் இருக்கு. ஏன்னா எனக்கு பணத்தேவை அதிகமா இருந்தது. அது உங்களுக்கு மட்டுமில்ல, இன்னும் சிலருக்கும் தெரிஞ்சு இருக்கு. அப்படியிருக்கும் போது, நான் சந்தேக வளையத்துக்குள்ள வர்றதை தப்புன்னு சொல்ல மாட்டேன். அதே மாதிரி என்னோட சந்தேக வளையத்துக்குள்ள யாரையாவது நான் கொண்டு வந்தா அதையும் நீங்க அக்ஸெப்ட் பண்ணிதானாகனும். ஏன்னா அட் தி எண்ட் ஆஃப் தி டே, உண்மை வெளிவரனும்! உங்களுக்கு கொக்கைன் கொடுத்தது பெரிய விஷயம் கிடையாது ஷான். ஆனா அதன் மூலமா வேற எதுவோ பெருசா பிளான் பண்ற மாதிரி தெரியுது… நிச்சயம் தப்பா தெரியுது…”
மிகத் தெளிவாக, உறுதியாக கூறியவளை பதில் கூறாமல் பார்த்தான்! ஸ்வேதா அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கண்டிப்பாக ப்ரீத்தி அறிவாள். ஆனாலும் அவள் இந்தளவு கூறுகிறாள் என்றால்? எதை நம்புவது, எதை நம்பக் கூடாது என்பதையே அவனால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. தலை சுற்றும் போல இருந்தது.