Kandeepanin Kanavu – 31

                 காண்டீபனின் கனவு 31

 

திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தாலும், வீராவால் முழுமையாக அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. சம்ரக்க்ஷாவால் வருணின் அந்த உருவ மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவனை வீட்டில் வைத்திருப்பதே அவளுக்குப் பிடிக்கவில்லை. யாரிடம் சொல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்க, வீரா அவளின் அறைக்கு வந்தான்.

கட்டிலில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தவள், வீராவைக் கண்டதும் எழுந்து ஓடி வந்தாள்.

“என்ன பண்ற?” எதார்த்தமாகக் காட்டிக் கொண்டாலும் அவன் மனம் அமைதியாக இல்லை என்பதை உணர்ந்தாள்.

“என்ன ஆச்சு வீர்? ஏன் ஒரு மாதிரியா இருக்க? வருண் விஷயம் தான?” அவன் மனதைப் படித்தாள்.

“ம்ம்.. ஆமா சாம். இப்போ கல்யாணம்னு சொல்லிருக்காங்க. அது ஒரு பக்கம் இருந்தாலும், நம்ம கோடங்கி கிட்டயும் தாத்தாகிட்டையும் சில விஷயங்களை பத்தி விளக்கமா பேசணும்.

நீயும் வந்து, நீ பார்த்த விஷயத்தை பத்தி சொல்லு. அதுக்குத் தான் உன்னை கூப்பிட வந்தேன்.” காரணத்தைக் கூறினான்.

“சரி, வீட்ல எல்லாரும், துணி அப்பறம் கல்யாண பர்சேஸ் பண்றத்துக்கு போயிருக்காங்க. இப்போ தாத்தா தனியா தான இருப்பாரு. வா நாம போய் பேசுவோம்.” இருவரும் தாத்தாவின் அறைக்குச் சென்றனர்.

தாத்தாவை அங்கே காணவில்லை. பின் பூஜையறையில் சத்தம் கேட்க, அங்கே சென்றனர். உள்பக்கமாக கதவு சாத்தப் பட்டு இருந்தது.

தட்டிப் பார்த்தான் வீரா. யாரும் வந்து திறக்கவில்லை.

“தாத்தா…! கதவைத் திறங்க. நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.” வெளியில் இருந்தே குரல் கொடுத்தான்.

பின் மெல்ல கதவு திறந்தது. கோடங்கியும் தாத்தாவும் அங்கே அமர்ந்திருந்தனர்.

இவர்கள் இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

“என்ன தாத்தா இது. கதவைப் பூட்டிட்டு பூஜை ரூம்ல இருக்கீங்க. ஏன்?” சம்ரக்க்ஷா கேட்டாள்.

“அந்த வருணுக்கு நாம இங்க செய்யற பூஜை தெரிய வேண்டான்னு தான். “ தாத்தா பொதுப்படையாகக் கூறினார்.

கோடாங்கி உடனே விளக்கம் தந்தார்.

“கண்ணுங்களா… அந்த வருண் நம்ம வீட்டுக்கு வந்தப்ப ஒரு மை வெச்சுப் பார்த்தோம். அதை வெச்சா, நம்ம குடும்பம் இல்லாதவங்க, நம்ம வீட்டுல்ல ஒரு வேளை சாப்பிட்டாலும் அவங்க அதை வாந்தி எடுத்துடுவாங்க. ஆனா அந்தப் பையன் எடுக்கல. அவன் இந்தக் குடும்பத்துப் பையன்னு ஏத்துக்கவும் முடியல. அது நமக்குத் தெரியற வரை அவனுக்கு நம்ம பூஜைகள் மந்திரங்கள் காதுல விழ வேண்டான்னு தான் இப்படி கதவ சாத்தி வெச்சேன்.”

“சரி! அதுக்கும் மந்திரம் அவன் காதுல விழறத்துக்கும் என்ன சம்மந்தம்?” வீரா கேட்க,

“நாம நீலக் கல் பூஜை மந்திரம், அவனை காண்டீபத்துக்கு ஆசைப்பட வைக்கும். அது தான் காரணம்.” தாத்தா கூற, இருவரும் திடுக்கிட்டனர்.

“நாங்களும் அதைப் பத்தித் தான் பேச வந்தோம் தாத்தா.” வீர் சொல்ல,

“என்னப்பா என்ன நடந்தது?” பதட்டப் படாமல் கேட்டார்.

வீரா தாங்கள் அவனை சந்தித்தது முதல், ஊருக்குக் கிளம்பும் முன் அவனும் தானும் பாதிப் பாதி என்று கூறியது, பின் சம்ரக்க்ஷா அவன் மானாக மாறி, மீண்டும் மனிதனானது வரை அனைத்தையும் கூறி முடித்தான்.

கோடாங்கிக்கு சற்று வியர்த்தது.

“ஐயா, அன்னிக்கு பூஜைல எனக்குத் தெரிஞ்ச அதே வெள்ளி மானைத் தான் இவங்களும் பாத்திருக்காங்க. ஆனா அதைப் பத்தி நாம பேசக் கூடாதுன்னு உத்தரவிருக்கு.” வருத்தப்பட்டார்.

 

“என்ன உத்தரவு? யார் போட்ட உத்தரவு?” வீரா கடுப்பானான்.

“என்னோட அண்ணன் தான் காண்டீபா. அவர் நம்ம குடும்பத்துக்காக செஞ்ச தியாகம் மதிப்பில்லாதது.!” தாத்தா அவரது அண்ணனின் கதையைக் கூறினார்.

“என்ன தாத்தா சொல்றீங்க? அப்போ இந்த வருண் எப்படி அவர மாதிரி இருக்க முடியும்?” சாமிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அதே சந்தேகம் தான் எங்களுக்கும். அவர் கட்ட பிரம்மச்சாரி. அதுவும் பெண்ணா மாறிட்டவர். இது எப்படி சாத்தியம்?” கோடங்கி மலைத்துப் போனார்.

“சரி அப்போ இதுக்கு ஒரே வழி நாம அவரையே கேட்கறது தான்.” வீரா முடிவு செய்தான்.

“நீ சொல்றது சரி தான் வீரா. ஆனா நாங்க கடசியா அவர பாத்தப்ப, அவர் அடுத்த ஏகாதசிக்குத் தான் நீலக் கல் பூஜை செய்யணும்னு சொல்லிட்டாரு. ஆனா எனக்கு பயமா இருக்கு. இந்த வருண் யாருன்னு முழுசா தெரிஞ்சுக்காம என்னால நிம்மதியா இருக்க முடியாது.” கோடங்கியின் வருத்தம் புரிந்தது.

“எல்லாம் நல்ல படியா நடக்கணும்னு கடவுள வேண்டிக்கறது தான் இப்போ இருக்கற ஒரே வழி. உங்க கல்யாணத்த அவசரமா செய்யறதுக்கும் காரணம் நாளை மறுநாள் ஏகாதசி. அந்த நீலக் கல் பூஜைய நீ தான் செய்யணும் காண்டீபா. உங்க கல்யாணம் முடிஞ்சுட்டா, உன் உயிருக்கு ஆபத்து வராதுன்னு நான் முழுசா நம்பறேன்.” தாத்தா எழுந்து கொண்டார்.

தாத்தாவின் பின்னே வீராவும் சாமும் சென்றுவிட, தாத்தாவின் கவலையை தன்னுடையதாக நினைக்கும் வல்லையா ஒரு முடிவிற்கு வந்தார்.

தன்னுடைய அறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்டார்.

திருமண ஏற்பாடுகள் கலகலப்பாக நடந்து கொண்டிருந்தது. பட்டாடை, மாலை வீட்டில் தோரணம் என அரை நாளில் கல்யாணக் களை கட்டியது வீடு.

அனைவர்க்கும் விருந்து சமைத்துக் கொடுத்தனர். வேலையாட்கள் வர போக இருந்தனர். தாத்தாவும் தன் பேரக் குழந்தைகளின் கல்யாணத்தைப் பார்க்கப் போகும் ஆவலில் மற்ற கவலைகளை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு இவர்களோடு சேர்ந்துகொள்ள,

வருண் மாப்பிள்ளைத் தோழனாக அருகில் நின்றான். இருவரையும் அடிக்கடி கேலி செய்ய, வீரா முகம் சுளிக்காமல் சமாளித்தாலும், சம்ரக்க்ஷா அவனைக் கண்டாலே பல்லைக் கடித்தாள்.

‘நீ கண்டிப்பா அர்ஜுனனா இருக்க முடியாது. இந்த குடும்பத்துல ஒருத்தனா கண்டிப்பா இருக்கவே முடியாது. நீ ஏதோ மாய மந்திரம் தெரிஞ்சவனா எங்க குடும்பத்து குலதெயவத்த திருடிட்டு போக வந்தவனா தான் இருக்கணும். பிராடு..’ மனதில் அவனைத் திட்டித் தீர்த்தாள்.

“இனிமே இந்த பேன்ட் சட்டை, சுடிதார் எல்லாம் மூட்டைகட்டி வெச்சுட்டு கல்யாணப் பொண்ணு மாதிரி புடவை கட்டு.” சொல்லிவிட்டு அவரே கட்டியும்விட்டார். புடவையில் அவள் பெண் போல லட்ச்சனமாக இருந்தாள். அழகாகப் பொட்டு வைத்து, தலையில் சரம் சரமாக மல்லிகையை சூட்டினார். இரண்டு வளையல்களும், கழுத்துக்கு ஒரு சங்கிலியும் போட்டதுமே சம்ரக்க்ஷா பேரழியாகத் தெரிந்தாள்.

பெண்ணின் அழகை ரசித்தவர், அவளுக்கு காதடியில் மறைவாக த்ரிஷ்ட்டிப் பொட்டும் வைத்தார். அவளது கன்னம் வழித்து தலையில் நெட்டிமுறித்தார்.

“எவ்வளது லட்ச்சனமா இருக்கன்னு நீயே பாரு! சும்மா ஆம்பள பையன்னுக்கு சரி சமமா பேன்ட் அது இதுன்னு இருக்காத.” என்று கூற, தன்னையே கண்ணாடியில் ரசித்தாள் சாம்.

அன்று ஒரு முறை, வீரா கூறியது நினைவில் வந்தது.

‘தலையில் பூவெச்சு , புடவை கட்டி பொட்டு வெச்சு லட்ச்சனமா இருக்கற பெண்ணைத் தான் கட்டிப்பேன்னு சொன்னான். இப்போ என்னையே அப்படி மாத்திட்டான். சரியான…’ ஏதோ சொல்ல வந்தவள் வேதாவைக் கண்டதும் மறந்தாள்.

“என் மருமக என்ன அழகு!” என அவரும் திருஷ்டி கழித்து  கைகளில் மருதாணி வைத்தார்.

“அத்தை, இப்போ மருதாணி வெச்சா, நான் எப்படி சாப்பிடுவேன்.” அதிமுக்கிய கேள்வியைக் கேட்க,

“எத்தன பேர் இருக்கோம். நாங்க ஊட்டி விடறோம். இல்லனா உன் வருங்கால புருஷன ஊட்ட சொல்றேன்.” தன் பங்கிற்கு ஏதோ கேலி சொல்லி அவரே சிரிக்க,

தன் குடும்பத்தின் இந்த அழகிய உறவுகளை எண்ணி பூரித்துப் போனாள்.

“மருதாணி காயற வரை ரூம விட்டு வெளிய வராத. எல்லாரும் போக வர இருக்காங்க. கலஞ்சிடப் போகுது” என அவளை அங்கேயே விட்டு விட்டு சென்றார்.

அவரவர் வேலையில் அனைவரும் மூழ்கிவிட, சாம்ரக்க்ஷா விட்டத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் மறக்காமல் தன் மகனை அழைத்து உணவு கொடுத்து, ஒரு அழகிய கிண்ணத்தில் சம்ரக்க்ஷாவிற்காக உணவைப் பிசைத்து மகனிடமே கொடுத்து,

“என் மருமக கையில மருதாணி வெச்சுட்டு அவ ரூம்ல இருக்கா.. நீ போய் ஊட்டிட்டு வா.” என கையில் திணித்தார்.

“அம்மா.. இது ஓவர்.. அவளுக்கு நான் ஊட்டனுமா..” அவரின் முன்பு தன் மனதைக் காட்டிக் கொள்ளாமல் நடிக்க,

“போடா…போய் கத்துக்கோ. அவளுக்கு நீ தான் செய்யணும்.” என திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார்.

மனதில் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினான் அவளது அறைக்கு.

கதவைத் திறந்தவன், அங்கு வீசிய மல்லிகை மனம், மருதாணி வாசனை இரண்டிலும் மதி மயங்கினான்.

கதவை தாழிட்டு வந்தவன், கட்டிலில் பதுமையென அமர்ந்திருக்கும் தன் மனைவியாகப் போகிறவளின் அழகில் சொக்கியே போனான்.

கடைசியாக அவளைப் புடவையில் பார்த்தது அவள் வயதிற்கு வந்து சடங்கு செய்த போது தான். அதன் பிறகு இப்போது தான் பார்க்கிறான்.

என்ன வனப்பு! என்ன களை! கண்களுக்கு மை தீட்டி, அது ஒரு கண்ணில் லேசாக கலைந்து , தோள் வரை நீண்ட மல்லிகையும், அவள் கட்டியிருந்த சிவப்பு பட்டுப் புடவையும், அந்த மெல்லிய அலங்காரமும் அவனை ஏதோ செய்தது.

உணவுக் கிண்ணத்தை ஒரு ஓரத்தில் வைத்தவன், அவளை நோக்கி வந்தான்.

சம்ரக்க்ஷா, அவனது இந்த ஆசைப் பார்வையை எதிர்நோக்க முடியாமல், தான் முதன்முதலில் அவன் முன்பாக இப்படி புடவையில் அவனுக்குப் பிடித்த மாதிரி நிற்கிறோம் என்ற நினைப்பே வெட்கத்தைத் தர, திரும்பி நின்றாள்.

அருகே வந்தவன், அவளது அழகை கண்களாலேயே அளந்தான்.

லேசாகத் தெரிந்த அவளின் இடையில் ஒரு கையை வைக்க, அவள் துடித்துத் திரும்பினாள்.

“நோ வீர்.. கைல மருதாணி வேற இருக்கு, அப்பறம் அழிஞ்சிடும்.” அவனை மிரட்ட,

“அப்போ அசையாம நில்லு.” உத்தரவிட்டான்.

“வேணாம். பக்கத்துல வராத.”

“என்னடி புதுசா சொல்ற. நேத்து இங்க தான கட்டிட்டு உக்காந்திருந்த, இப்போ மட்டும் நான் தொடக் கூடாதா.” அவனது குரல் வேறுவிதமாக ஒலிக்க,

சாமிற்கு தான் சங்கடமாகிப் போனது.

‘உன் விஷயத்துல நான் இவ்வளவு வீக்கா…’ என கண்ணை மூடி நினைத்தவள் அப்படியே நின்று விட,

வீரா அருகில் வந்து அவளது தலையை வருடி, சூடியிருந்த மல்லிகையில் வாசம்பிடித்தான். அவன் தொடாமல் இதைச் செய்தது, அவனது சூடான மூச்சுக் காற்று அவள் மேல் பட, உடல் சிலிர்த்தாள்.

அவளது புடவையை மட்டும் தொட்டு இழுக்க, அவள் ‘பின்’ போட்டு அடக்கியதில் அவன் இழுப்பிற்கு வரவில்லை.

“ப்ச்” என வருந்தியவன், அவள் இடையை பின்னிருந்து வருடி புடவைக்குள் கை விட்டு அவள் இடையைச் சுற்றிக் கொண்டான்.

அப்படியே இருவரும் சில நேரம் நிற்க, உலகம் மறந்தது.

அவளது தோளைப் பற்றித் திருப்பி, அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“எனக்குப் புடிச்ச மாதிரி இருக்க கண்ணம்மா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றான்.

அவனது அந்த அழகிய வார்த்தைகள் அவளைக் கட்டிப்போட, அவன் மார்போடு சாய்ந்தாள்.

மல்லிகை மனத்தோடு தன் மங்கையையும் அணைத்துக் கொண்டான்.

பின் அவளது மருதாணி கலையாமல் அவளை அமர வைத்து, கொண்டு வந்த உணவை அவளுக்கு ஊட்டிவிட்டான்.

இருவரும் தங்களுக்குள் ஏற்கனவே வளர்ந்து இருந்த காதலை இன்று நன்றாக உணர்ந்தனர்.

லேசாகக் கண் கலங்கினாள் சம்ரக்ஷா.

“என்ன டா ஆச்சு?” என பதறியவன்,

“நீ இல்லாம நான் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிருந்தா ரொம்ப கஷ்டப் பட்டிருப்பேன் டா…” உணர்ச்சிப் போங்க கூற,

“ஆமா ஆமா. இப்போ நான் தான் கஷ்டப் படனும்..” என சொல்லி சிரிக்க, அவளுமே சிரித்தாள்.

தன் கையால் அவளது கண்ணீரைத் துடைத்து கலைந்திருந்த மையை சரி செய்தவன், கண்களில் முத்தம் வைத்தான்.

“உன்ன எப்பவுமே கஷ்டப் பட நான் விடமாட்டேன்.” என உறுதியளித்தான்.

அன்று இரவு தான் தன் அறையை விட்டு வெளியே வந்தார்  கோடங்கி. வந்தவர் முகம் வெளிறிப் போயிருந்தது. தான் தெரிந்து கொண்ட விஷயத்தை கல்யாணம் முடியும் வரை தாத்தாவிடம் கூற வேண்டாம் என முடிவு செய்தார்.

அவரது மகிழ்ச்சியை குலைக்க மனம் வரவில்லை. மறுநாள் வரை காத்திருக்க எண்ணினார்.

அன்று இரவு கடந்து, மறுநாள் விடிந்தது நாதஸ்வரமும் மேள சத்தமும் அனைவரையும் எழுப்பியது.

வேதாவும் சுஜாதாவும் முன்னமே எழுந்து சம்ரக்க்ஷாவையும் எழுப்பி, அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

வீராவை மோகனும் கிருஷ்ணனும் எழுப்ப,

“இன்னிக்காவது சீக்கிரம் எழுந்திரு” மோகன் கூற, அவனும் குளிக்கச் சென்றான்.

தண்ணீர் மேலே பட்டதும் அவனுக்கு அன்று ஏற்பட்ட அந்த டாட்டூ எரிய ஆரம்பித்தது.

“ஆ!” வெனக் கத்தியவன், “என்னாச்சு ?” வெளியில் இருந்து மோகன் கேட்ட கேள்வியில் பொறுத்துக் கொண்டான்.

“ஒண்ணுமில்ல, தண்ணி ரொம்ப சூடா இருந்துச்சு” சமாளித்தான்.

ஒருவழியாக குளித்து முடித்து வெளியே வந்தவன் , இன்னும் எரிச்சல் அடங்காமல் இருந்ததை உணர்ந்தான்.

யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் பட்டு சட்டை பட்டு வெட்டி கட்டி நெற்றியில் சந்தனம் வைத்து மாபிள்ளையாக வெளியே வந்தான்.

அவனை மணவறையில் அமர வைத்து வருண் பக்கத்தில் நின்றான்.

மந்திரங்கள் அனைத்தும் கூறி முடிக்க, பெண்ணை அழைத்து வரச் சொல்ல,

அவன் அருகில் வந்து அமர்ந்தாள் அவனது ஆசை சம்ரக்ஷா.

கூரப் பட்டு சேலையில் தேவதை போலத் தெரிந்தாள்.

அனைவரும் வாழ்த்த , ஐயர் தாலியைக் கொடுக்க, சம்ரக்ஷாவின் கழுத்தில் கட்டினான் வீரா.

நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, இவள் என் மனைவி என அனைவருக்கும் பறைசாற்றினான்.

பிறகு வந்த சடங்கு சம்பரதாயம் அனைத்தும் முடிந்து, உணவு உண்ணச் சென்றனர்.

அப்போது வீரா மாலையைக் கழட்ட, அவனது அந்த டாட்டூ இருந்த இடம் மட்டும் சட்டையில் பொசுங்கி இருந்தது.

“என்ன வீர் அது..?” சாம் பதறிப் போக,

“ஒண்ணுமில்ல இதோ வரேன்.” என அவசரமாக அறைக்குச் சென்று சட்டையை மாற்றினான்.

அந்த டாட்டூ இருந்த இடம் தீயினால் சுட்டது போல இருந்தது.

அதைத் தொடும் போதே அவனுக்கு வலித்தது. ஒரு ஆயின்மென்ட்டை தடவிக் கொண்டு வேறு சட்டை மாற்றி வந்தான்.

சாம் அவனிடம் என்னவென்று ஜாடையாகக் கேட்க

“நத்திங்” என தோளைக் குலுக்கினான்.

திருமண விருந்து முடிந்து அனைவரும் சென்றுவிட, வீட்டு ஆட்கள் மட்டும் நிம்மதியாக அமர்ந்திருந்தனர்.

கோடங்கி தாத்தாவை அழைத்தார். அதற்குள் வருண் தன் கையில் எதையோ தூக்கிப் போட்டு பிடித்துக் கொண்டு வர,

அது என்னவென்று அனைவரும் பார்க்க, அது அவர்கள் வணங்கும் அந்த நீலக் கல் தான்.