Kalangalil aval vasantham 17(2)

Kalangalil aval vasantham 17(2)

“இனிமே இந்த வீட்டுக்கு வந்தா என்னை ஏன்டா வந்தன்னு கேளுங்க. இந்த மானங்கெட்ட வீட்ல பொண்ணெடுத்தது என் தப்பு…” என்று தலையிலடித்துக் கொண்டவன், வெளியேற, தொப்பென்று சோபாவில் அமர்ந்தார் ஸ்ரீமதி. அவன் வந்தது, பேசியது எதுவும் யாருக்கும் தெரியாது. அவர் தெரியப்படுத்தவுமில்லை.

அவர் இது போல கோபப்படுபவர் அல்ல. ஆனால் அவரையும் மீறி கோபப் பட வைத்துவிட்டான். தனது மகளின் பிடிவாதத்துக்கு செவி சாய்த்தது மிகத் தவறோ என்று தோன்றியது அவருக்கு.

ஆனால் ஏதோவொரு ஓரத்தில் தாஜ் சென்று பார்த்தால் என்ன என்றும் தோன்றியது. வாழ்நாளிலேயே செய்யக் கூடாத அந்த தவறை அவர் தவறிப் போய், நம்பிக்கை தவறிப் போய் செய்தார், இல்லை அவரை தவற செய்தான் ரவி. அந்த தவறு அவரது மனதை, நம்பிக்கையை, வாழ்வை உடைத்தது.

வாழ்வை வெறுத்துப் போய் கண்கள் வெறித்தபடி அமர்ந்திருந்த தாயின் மடியை தஞ்சமடைந்த மகனிடம் கூறினார்,

“யாரோட நம்பிக்கையையும் உடைச்சுடாதே ஷான். அது ரொம்பப் பெரிய பாவம்…” உணர்வுகளற்று கூறியவரை நிமிர்ந்து பார்த்தவன்,

“என்னம்மா சொல்ற?” என்று கேட்டான். அர்த்தமில்லாமல் அவர் கூறுவதாக நினைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு பதில் கிடைக்கவில்லை, கண்களிலிருந்து உருண்டு அவன் மேல் தெறித்த கண்ணீரை தவிர!

என்னவென்று கேட்டபோதும் அவர் எதுவும் கூறவில்லை. இரவு படுத்தவர் காலையில் எழவில்லை. ஹார்ட்அட்டாக்கில் உலகை விட்டுப் பிரிந்திருந்தார்.

***

ஸ்ரீமதியின் அதே உறுதியையும் தீர்க்கத்தையும் கண்டான் ரவி, பிரீத்தியிடம்! அவளை பளாரென ஒரு அரை விட வேண்டும் போல தோன்றியது. இது போன்ற ஆளுமை மிக்க பெண்களை அவனுக்குப் பிடிக்காது.

பெண் என்பவள், போதைப் பொருள். அதுவும் அவனுக்கு உபயோகமாகும் வரை மட்டுமே! அதில் விதிவிலக்கு வைஷ்ணவி. அவளை பொறி வைத்து பிடித்தவன் அவன். அவள் போகுமிடமெல்லாம் அறிந்து வைத்துக் கொண்டு, எதேச்சையாக பார்ப்பது போல பார்த்து, டென்னிஸ் பயிற்சியின் போது எப்படியெல்லாமோ பேசி அவளை வளைத்துப் பிடித்திருந்தான்.

அதை அவன் மட்டுமே அறிவான்! அவள் அவனுக்கு தங்க முட்டையிடும் வாத்து. அதனால் மிக மிக நிதானமாக தான் அவளை எப்போதும் கையாள்வான்.

அவளைத் தவிர்த்து மற்ற பெண்கள் அனைவரும் அவனைப் பொறுத்தவரை ஒன்றுதான். அது ஸ்வேதாவாக இருந்தாலும் கீதாவாக இருந்தாலும், அவனது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வளவே! அதை தாண்டி பேசுவதும் சுயமாக சிந்திப்பதும் தேவையில்லாத ஒன்று, அவனைப் பொறுத்தவரை!

அப்படிப்பட்டவனுக்கு ப்ரீத்தியை பார்க்கையில் கடுப்பாக இருந்தது.

“ஓகே கைஸ்… கிளம்பறேன்…” என்றவன், எழுந்து கொள்ள,

“சரி மாமா… ஃப்ரீ ஆகிட்டு வாங்க…” என்றான் ஷான்.

“சியூர்…” என்றவன் அடுத்த அடியை எடுத்து வைக்கும் முன்,

“ஷான் இங்க வா…” அவசரமாக அழைத்தாள் ப்ரீத்தி. அவளது கண்கள் அவளுடைய லேப்டாப் மானிட்டரை பதட்டமாக பார்த்துக் கொண்டிருந்தது.

“என்னடா…” என்றவன், சட்டென எழுந்து அவளிடம் போக, ரவியும் வந்தான். ப்ரீத்திக்கு வியர்த்தது. அவள் தன்னை சரிப்படுத்திக் கொள்ள முயன்றாலும், அந்த சூழ்நிலை அவளுக்கு மிகப் புதிது என்பதால், அதை அவளால் செய்ய முடியவில்லை. தன்னால் தான் ஏதோ பாதிப்போ என்று சற்று பயந்து தான் போயிருந்தாள்.

லேப்டாப் ஸ்க்ரீனில் விதவிதமான மாறுதல்கள். தானாக நிறைய விண்டோஸ் திறந்துகொண்டிருந்தது. திடீர் திடீரென விதவிதமான உருவங்களும், எண்களுமாக அதை பார்க்கும் போதே சற்று குழப்பமாக இருந்தது.

“என்ன பண்ண ப்ரீத்?”

“நான் ஒன்னும் பண்ணல. எல்லாம் முடிச்சுட்டு ஷட் டவுன் பண்ணலாம்ன்னு பார்க்கும் போது ஏதோ விண்டோ ஓபன் ஆச்சு. அதை க்ளோஸ் பண்ணேன். பண்ணவுடனே, ஸ்க்ரீன்ல கன்னாபின்னான்னு விண்டோ ஓபன் ஆகுது, என்னென்னமோ நடக்குது. ஆஃப் பண்ண முடியல. ரீஸ்டார்ட் பண்ண முடியல. எஸ்கேப் பட்டன் கூட அழுத்த முடியல. கம்ப்ளீட்டா ஃப்ரீஸ் ஆகிடுச்சு ஷான்.” என்றவளின் குரலில் பதட்டம்.

நெற்றியை சுருக்கியபடி லேப்டாப்பை பார்த்தான்.

“சர்…” அவசரமாக உள்ளே நுழைந்தான் ஆகாஷ். அவனது முகத்திலும் பதட்டம்.

“சொல்லுங்க ஆகாஷ்…” ஷானுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அர்த்தமாக ப்ரீத்தியை பார்த்தான்.

“சர்… எல்லா சிஸ்டமும் ஹேங் ஆகிடுச்சு. ரொம்ப வியர்ட்டா பிஹேவ் பண்ணுது… சம்திங் இஸ் ராங்…”

அவனது மானிட்டர் புறம் திரும்பியவன், அதை இயக்கிப் பார்க்க, ப்ரீத்தியுடையதைப் போலவே இயங்கியது, அவனுடையதும். அவசரமாக வெளியே ஓடினான் ஷான். கூடவே ரவியும் ப்ரீத்தியும். முதலிலிருந்த சிஸ்டமை இயக்கிப் பார்த்தான்.

இயங்கவில்லை. அதே நிலை. இரண்டாவது, மூன்றாவது, என்று அனைத்தும் அப்படியே.

“எல்லா சிஸ்டமும் ஹேக் ஆகியிருக்குன்னு நினைக்கறேன்…” மெல்லிய குரலில் ப்ரீத்தி கூற, “எஸ்…” என்றான் அழுத்தமாக. அவளை பார்த்தவன், பார்வையால் ஏதோ கூற, மெல்ல நகர்ந்தாள் ப்ரீத்தி, யாரும் அறியாமல். இப்போது சற்று நிதானமாகியிருந்தாள். முந்தைய பதட்டமான மனநிலை மாறியிருந்தது.

அருகில் நின்று கொண்டிருந்த ரவியை ஓரப்பார்வையாக பார்த்தபடி, “யாரும் பதட்டமாக வேண்டாம். எல்லாமே சரியாகிடும். கொஞ்ச நேரம் ப்ரேக் எடுத்துக்கங்க… உங்க இடத்தை நீங்க கிளியர் பண்ணிக் கொடுங்க…” சப்தமாக அனைவருக்கும் கேட்கும்படி கூறினான் ஷான்.

ஒவ்வொருவர் முகத்திலும் குழப்பம். இதுநாள் வரை இப்படி ஆகாத நிலையில், ஹேக்கிங்க்கு இலக்காவது எல்லாம் அவர்கள் எதிர்பார்த்திராத ஒன்று. அனைவருமே ஐடி சம்பந்தப்பட்டவர்கள் அல்ல, தங்களது வேலையில் கணிப்பொறியை எப்படி உபயோகிப்பது என்பதை மட்டுமே அறிந்தவர்கள், அதுவுமில்லாமல், பல வருட அனுபவம் கொண்டவர்கள், அதாவது நடுத்தர வயதை தாண்டியவர்கள்.

அவர்களுக்கு இது போன்றவை எல்லாம் மிகப் புதிது.

ஆகாஷ் அத்தனை அலுவலகங்களிலிருந்தும் வந்த கால்களை அட்டென்ட் செய்து கொண்டிருந்தான். அவற்றிற்கு ஷானும் பதில் கூறிக் கொண்டிருந்தான்.

இது யாருமே எதிர்பார்க்காத ஒன்று.

கண் மூடி விழிக்கும் முன், ஜுபிடர் ஸ்கொயர் முழுவதையும் பதட்டம் சூழ்ந்து கொண்டது. ஜுப்பிடரின் வலைத்தளங்கள், சர்வர்கள் என்று எதையும் விட்டு வைக்கவில்லை ஹேக்கர்கள்.

அனைத்து மானிட்டர்களிலும் அவர்களது நிழல் உருவம் மட்டுமே இருந்தது இப்போது. அத்தனை அலுவலகங்களில் இருந்த சிஸ்டம் அனைத்தும் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டிருப்பது அவனது சந்தேகத்தை இன்னும் விசிறி விட்டது.

செய்தி வெளிவட்டத்திலும் பரவ ஆரம்பித்து விட்டது என்பது செல்பேசிக்கு வரும் அழைப்புகள் உணர்ந்த்த ஆரம்பித்து விட்டது. அதற்குள் எப்படி பரவும்? அவன் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை. ஆகாஷ் தான் அதற்கும் பதில் கூறிக் கொண்டிருந்தான்.

இது பெரிய விஷயமாக பேசப்பட்டால், ஷேர் மார்க்கெட் வரை அவர்களது பங்குகள் அடிவாங்க வேண்டியிருக்கும். அது இதை காட்டிலும் மோசம்.

“இப்ப என்ன பண்றது ஷான்?” என்று ரவி கேட்க,

“நீங்க கிளம்புங்க மாமா. என்ன செய்றதுன்னு பாக்கறேன். நமக்கிது பெரிய லாஸ்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவனை பரிதாபமாக பார்த்தான் ரவி.

“ஓகே ஷான். டேக் கேர்.” என்றவன், எல்லாவற்றையும் ஒரு கழுகுப் பார்வை பார்த்துவிட்டு கிளம்பினான். அவன் போன பின் அலுங்காமல் வந்தாள் ப்ரீத்தி.

கட்டை விரலை உயர்த்திக் காட்டியவள், அவன் அருகில் வந்து, “டன்…” என்றாள். மற்றவர்களை அமைதிப்படுத்திவிட்டு இருவரும் அறைக்குள் சென்றனர்.

“குட்…” என்றவன், நெற்றியை பிடித்தபடி அமர்ந்து கொண்டான். இப்போது என்ன செய்வது என்ற யோசனை தான். மொத்தமாக அத்தனையும் பாழாக கூடாதே. இது இதுவரை ஜுபிடர் சந்திக்காத நஷ்டமாக இருக்கக் கூடும் என்ற எண்ணம் வந்தபோது மனம் வருந்தியது.

“ஹேக்கர்ஸ்க்கு ஹேக்கர்ஸ தான் கரெக்ட்…” என்ற முடிவுக்கு வந்தவன், “என்ன சொல்ற?” என்று கேட்டான்.

“எஸ். கண்டிப்பா…”

“அப்படீன்னா நமக்குத் தேவை ஒரு ஹேக்கர்ஸ் க்ரூப்…”

“உங்களுக்கு யாரையாவது தெரியுமா?” என்றவள், தனது நினைவடுக்குகளில் அப்படி யாராவது இருக்கிறார்களா என்று யோசிக்கத் துவங்கினாள்.

“அதான் யோசிக்கறேன்…” நெற்றியை தேய்த்துவிட்டுக் கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்துக்கு வந்தவன்,

“ஆல்வின் அந்த ஃபீல்ட் தான் ப்ரீத், ஜி7ஆன்ட்டி வைரஸ் அவங்களோடதுதான்…” என்றவனுக்கு சந்தோஷம். எப்படியும் இதை சரி செய்துவிடலாம் என்று தோன்றியது.

ஆல்வின் ஷானுடைய பள்ளித் தோழன். ஒரே வகுப்பு. பள்ளிப் பருவம் முழுவதும் இருவரும் ஒன்றாகவே திரிந்தவர்கள். இஞ்சினியரிங் படிக்க போகும் போதுதான் பிரிந்தார்கள். இவன் சிவில், அவன் ஐடி என! அதன் பின் இவன் மேற்படிப்புக்கு வெளிநாடு சென்று விட்டான். ஆல்வின், அப்போதே சிறு ஸ்டார்ட் அப்பை ஆரம்பித்து விட்டான். அதுதான் இப்போது முதன்மையாக திகழும் ஜி7 டெக்னாலஜிஸ். இப்போதும் இருவருக்கும் பேச்சுவார்த்தை உண்டு தான் என்றாலும், தொழிலில் கவனம் செலுத்திய பின்பு, அது இருவருக்குமே சற்று கடினமாகத்தான் இருந்தது. வெகு நாட்கள் கழித்து, ஸ்வேதாவின் பிரச்சனையின் போது பேசியது தான். அதனால் தான் ஷானுக்கு ஆல்வின் நினைவு வந்தது.

அவனுக்கு அழைத்தவன், நிலைமையை விளக்கினான்.

“கண்டிப்பா ஹேக் பண்ணிருக்காங்கடா…” என்ற ஆல்வின், “செக்கியுரிட்டி ஃபயர்வால் எதுவும் இல்லையா?” என்று கேட்க,

“டேய் நானே, இப்ப ஒன் வீக்காத்தான் இங்க வர்றேன். அதை பற்றியெல்லாம் ஒன்னும் இன்னும் தெரியல. நீ வந்து பாரு…” என்று கூறினான்.

“நானும் வரேன்டா. இப்ப உனக்கு அர்ஜண்ட்டா ஆளை அனுப்பி விடறேன். அவனுங்க எதை வேணும்னாலும் ஹேக் பண்ணுவாங்க. செம டேலன்ட்டான ஆளுங்க… அவங்க அசெஸ் பண்ணட்டும். அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்…” என்று கூற, அதுவும் சரியாகப் பட்டது அவனுக்கு.

“ம்ம்ம் எஸ். எனக்கு அதுதான் வேணும் ஆல்வின். கொஞ்ச சீக்கிரமா அனுப்பி வை…” என்று முடித்தான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவன் முன் நின்றார்கள் அந்த இருவரும். அவர்களிடம் கேட்டான்,

“ரிவர்ஸ் ஹேக்கிங் தெரியுமா?”

“தெரியும் சர். வி கேன் டூ இட்…” என்று கூற,

“அப்படீன்னா, பண்ணுங்க…” என்றவனை சற்று ஆச்சரியமாக பார்த்தனர்.

“இந்த சிஸ்டம் எல்லாம் சரி பண்ணிட்டு, அப்புறமா ரிவர்ஸ் ஹேக்கிங் பண்ணலாமே…” என்று அதில் ஒருவன் கூற,

“சிஸ்டம் எல்லாத்தையும் சரி பண்ணனும் தான். ஆனா எனக்கு மொதல்ல இந்த அட்டாக்’கோட சோர்ஸ் தெரியனும். யார் இதை பண்ணாங்கன்னு தெரிஞ்சுக்கணும். இதை என்னால அப்படியே விட முடியாது பாய்ஸ். அதை மொதல்ல செய்ங்க…” என்றவனின் குரலில் கடுமை.

அருகில் நின்று கொண்டிருந்த ப்ரீத்தி, அவனது தோளை மென்மையாக அழுத்திப் பிடித்தாள்.

“கூல் ஷான்.” என்றவள், அவர்கள் புறம் திரும்பி, “ஓகே கைஸ், நீங்க உங்க வேலைய ஸ்டார்ட் பண்ணுங்க.” என்று கூறிவிட்டு, இவன்புறம் திரும்பி, மெல்லிய குரலில், “ரவியோட கார்ல ட்ராக்கர் டிவைஸ் ஃபிக்ஸ் பண்ணிட்டேன் ஷான்.” என்று கூற, அழுத்தமாக தலையாட்டினான்.

“எஸ். நாம நினைச்சதை விட ரவி கொஞ்சம் வேகமா இருக்கான் போல… அக்கௌன்ட்ஸ நோண்டக் கூடாதுன்னு மொத்த கம்பெனியையும் முழுசா ஹேக் பண்றான்னா, அவன் பண்றது ரொம்ப பெருசு ப்ரீத்தி.” என்றவன், “ஆனா இனியும் அவன் இப்படி விளையாட முடியாது. காட்றேன். நான் யாருன்னு காட்றேன்…” என்றவனுக்குள் வெறி!

பழிவெறி!

error: Content is protected !!