Kalangalil aval vasantham – 4(2)

அதை சஷாங்கன் பார்த்து ஒப்புதல் கொடுத்தப் பின், முறையான கலந்துரையாடல் நிகழும். அதன் பின்னர், தான் அடுத்தகட்ட செயல்முறைகள் தொடரும்.

இதில் அட்மினிஸ்ட்ரெட்டிவ் டீம், பிளானிங் டீம், ஃபைனான்ஷியல் டீம், மார்க்கெட்டிங் டீம், ஃபீல்ட் டீம் என்பதெல்லாம் தனித் தனியான குழுக்கள். அனைவருக்கும் பொதுவான பாலம் ப்ரீத்தி தான்.

அனைத்தும் சுறுசுறுப்பாக நிகழ்ந்து கொண்டிருந்த போது தான் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்கள் உள் தணிக்கையாளர்கள். மொத்த ஜுபிடரின் ஆடிட்டிங்கை கையாள்பவர்கள்.

அதாவது இன்டெர்னல் ஆடிட் டீம். கார்பரேட் அலுவலகங்களின் கணக்குகளை தணிக்கைக்கு ஆட்படுத்தும் முன்பே, அவர்களது ஆடிட்டர்கள் உள்தணிக்கை செய்வார்கள். அந்த உள்தணிக்கை தொடர்ந்து நடைபெறும். ஆனால் ஜுபிடர் ரியல்ட்டர்ஸ், ஜுபிடர் குழுமத்தில் ஒரு நிறுவனம் என்றாலும், இதுவரை சுதந்திரமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது!

எந்த வகையிலும் தாய் குழுமத்தோடு பிணைத்துக் கொண்டதில்லை. இதுவரை கணக்கு வழக்குகள் அனைத்தும் தனிப்பட்ட முறையில் தான் கையாளப்பட்டுக் கொண்டிருந்தது. முறையாக டைரக்டர்ஸ் மீட்டிங், வருடாந்திர பங்குதாரர்கள் சந்திப்பு எல்லாம் நடந்து கொண்டுதான் இருந்தது.

ஆனால் இதுவரை இன்டெர்னல் ஆடிட் என்று தலைமையகத்திலிருந்து யாரும் வந்ததில்லை.

இப்போது ஆடிட்டர்கள் குழு வந்ததை அவளால் நன்மைக்கென்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவனுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமென்று சொல்லக் கூட முடியவில்லை. அதிலும் அவன் குடும்பம் இருக்கும் நிலை, அவனது நிலை அனைத்தும் தெரிந்த பிரீத்தியால் அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை உணர முடிந்தது.

அவனது தன்மானம் அடிபடுமே என்று நினைத்தபோது உள்ளுக்குள் பதட்டம் ஊற்றெடுத்தது! எப்படிபட்ட பிரச்சனை என்றாலும், ஜுபிடர் குழுமத்திடம் அவன் சென்று நின்றதில்லை. அது போல அவர்களையும் இங்கு உள்ளே வர சஷாங்கன் அனுமதித்ததில்லை.

அவனுடையது என்றால் அவனுடையது மட்டும் தான்! அதற்கு வேறு பெயர் இல்லை.

சமாளித்துக் கொண்டு புன்னகைத்தபடி அவர்களை பார்த்தாள்.

வந்தது இருவர். கிருஷ்ணன் நாயர், ஆப்ரஹாம் சாலமன். அவர்களை நன்றாகவே அறிவாள். அவள் மேல் மிகுந்த மரியாதை உண்டு அவர்களுக்கு!

“ஹலோ சார்… எப்படி இருக்கீங்க?” இயல்பாக கேட்பதை போல கேட்க,

“ஃபைன் ப்ரீத்தி…” என்ற கிருஷ்ணன் நாயர், “யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்…” என்று சிரித்தார்.

“தேங்க்ஸ் சர்… என்ன இந்த பக்கம்?” புன்னகையோடு கேட்டாள்.

“ஜஸ்ட் ஒரு சின்ன இன்ஃபார்மல் ஆடிட்…” கூறியது சாலமன்.

“வாட்? சர் கிட்ட…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ஜிஎம் வாசுதேவன் வந்துவிட, அனைவரது முகத்திலும் சிறு குழப்பம். கடந்த எட்டு வருடங்களில் ஒருநாளும் இப்படி அவர்கள் வந்ததில்லை. அதாவது தனக்கு இந்த நிறுவனம் மட்டும் போதுமென்று சஷாங்கன் முடிவெடுத்து, இந்த நிர்வாகத்தில் மட்டுமாக காலெடுத்து வைத்தது முதல், அப்படித்தான்!

ஏஜிஎம் இயல்பாக வருவதை போல, செல்பேசியில் சஷாங்கனை பிடிக்க முயன்று கொண்டிருந்த பிரீத்தியின் அருகில் வந்தவர், “பாஸுக்கு இன்பார்ம் பண்ணு பிரீத்திம்மா…” என்று முணுமுணுத்தார்.

“ட்ரை பண்ணிட்டே தான் சர் இருக்கேன். லைன் போகுது, பாஸ் பிக் அப் பண்ணல…” என்றவள், தன்னை முதலில் சமநிலைப் படுத்திக் கொள்ள முனைந்தாள். தன்னுடைய பதட்டத்தை அவன் மேல் திணித்து, அதற்கும் மேல் அவன் பதட்டப்பட்டானென்றால் வண்டியோட்டும் போது கவனம் சிதறி விடக் கூடும். சும்மாவே தாறுமாறாக வண்டியோட்டுபவனாயிற்றே என்ற கவலை வேறு அவளுக்கு!

“விடாதம்மா… எப்படியாவது பிடி…” என்றவரின் குரலிலும் அதே பதட்டம். “ஏதாவதுன்னா செத்தோம்…”

“ஆமா சர்…” என்றவள், மீண்டும் முயற்சிக்க, முழு ரிங் போய் கட்டானது.

“சொல்லுங்க சர்…” என்று ஜிஎம் அவர்களிடம் பொதுவாக கேட்டுக்கொண்டிருந்தார்.

கண்ணாடியால் மூடியபடி இருந்த பால்கனிக்கு தனியாக சென்றவள், அங்கேயே நின்றபடி, மீண்டும் மீண்டும் அவனுக்கு முயற்சித்தாள், அவ்வப்போது உள்ளே நடப்பதையும் கவனித்தபடி!

இவள் இங்கே முயற்சி செய்தபடி இருக்க, வந்தவர்களை வரவேற்று பேசியபடி அவரது கேபினுக்கு அழைத்துப் போனார் ஜிஎம், வாசுதேவன். கூடவே ஏஜிஎம்மும் தொடர்ந்தார், பிரீத்தியை பார்வையால் கேள்வி கேட்டபடி!

அலுவலகம் முழுவதும் அமைதியோ அமைதியாக இருந்தது.

அவர்கள் கேட்கும் தஸ்தாவேஜுகளை ஜிஎம்மின் உதவியாளர் கொண்டு போய் கொடுக்க, அதை தடுக்க முடியாமல், நிற்கதியாக நின்றிருந்தாள். அந்த நேரத்தில் அவளுக்கு வேறு எதுவுமே தோன்றவில்லை. இது சஷாங்கனுக்கு விரிக்கப்படும் வலை என்பது புரிந்து விட்டது.

அவனை எப்படியாவது பிடித்து விட முடியாதா என்ற எண்ணத்தில், மீண்டும் அவனது எண்ணுக்கு அழைத்தாள், விடாமல்!

இந்த முறை அழைப்பு துண்டிக்கப்பட, அவளது பதட்டம் இன்னும் அதிகமானது.

எந்த நேரத்தில் தான் இப்படி அழைப்பை தூண்டிப்பது என்று விவஸ்தை இல்லை இவனுக்கு என்று மனதுக்குள் பொறுமியபடி, மீண்டும் முயற்சிக்க, அதே போல இன்னொரு முறையும் துண்டிக்கப்பட, அவளால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை.

மூச்சை இழுத்து விட்டு தைரியத்தை சேகரித்துக் கொண்டவள், ஜிஎம் அறைக்கு விரைந்தாள். கதவை மெலிதாக தட்ட, ஜிஎம், “கம்மின்…” என்றார்.

தஸ்தாவேஜுகளை பார்வையிட்டபடி கணக்குகள் சம்பந்தமாக கேள்விகள் கேட்க ஆரம்பித்து இருந்தனர் அவ்விருவரும். ஜிஎம்மும் அதற்கான பதில்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவள், “ஜெண்டில்மேன், கேன் யூ ப்ளீஸ் வெய்ட் ஃபார் ஃபியூ மோர் மினிட்ஸ்?” என்று அமைதியாக கேட்க,

“ஒய் ப்ரீத்தி? இட் இஸ் ஜஸ்ட் ஏ கேஷ்வல் விசிட்…” என்று புன்னகைத்தபடி கிருஷ்ணன் நாயர் விளக்கம் கொடுத்தார்.

“இட் மே பி சர். ஆனா எம்டி இல்லாத நேரத்துல காண்பிடென்ஷியல் ஃபைல்ஸ‌ அக்ஸெஸ் பண்ண அலோ பண்ண முடியாது…” உறுதியான குரலில் அவள் கூறிய செய்தி, ஜிஎம்முக்கே சற்று அதிர்வை வரவழைத்தது.

தான் பெரிய ஆளா? அல்லது இவள் பெரிய ஆளா? சற்று எரிச்சலோடு அவர் பார்க்க,

“அதான் ஜிஎம், ஏஜிஎம் இருக்காங்களே?” சாலமன் அவ்விருவரை காட்டி கேட்டார்.

“பட் சர், நான் எம்டி சாரோட பர்சனல் அசிஸ்டண்ட் கூட. உங்க கிட்ட இருக்க ஃபைல்ஸ் எல்லாம் என்னோட கஸ்டடில இருந்தது. ஐ ஹேவ் டூ ஆன்சர் அவர் எம்டி… சோ ப்ளீஸ் வெய்ட் ஃபார் சம் டைம்…” என்றவளின் குரலில் அத்தனை உறுதி. அது கிட்டதட்ட கட்டளையாக, மீறினால் விளைவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்பதை கூறாமல் கூறியது. என்னவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற உறுதி!

“எஸ் சர். ஷீ இஸ் ரைட். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க ப்ளீஸ்…” ஏஜிஎம் அவரது பங்குக்கு கொளுத்திப் போட, இருவரையுமே சற்று எரிச்சலாக பார்த்தார், வாசுதேவன்.

“ப்ரீத்தி, யூ ஆர் கிராசிங் யுவர் லிமிட்ஸ்…” அவரிடமிருந்து பலமான எதிர்ப்பு கிளம்ப,

“சாரி ஜிஎம் சர். ஆனா என்னோட கஸ்டடில இருக்க ஃபைல்ஸை எம்டி சர் ஓகே சொல்லாம என்னால யாருக்குமே குடுக்க முடியாது…” மிக கறாராக கூறியவளை கோபமாக பார்த்தார் வாசுதேவன். ஆனால் அவளை எதுவும் சொல்ல முடியாது. சஷாங்கனின் பிரதிநிதி அவள்!

“நீ எப்படி இங்க கண்டிநியூ பண்றன்னு நானும் பார்க்கறேன்…” வெளிப்படையாக சவால் விட்ட வாசுதேவனை பார்க்கும் போது உள்ளுக்குள் பயம் எழுந்தாலும், அதை அவள் வெளிக்காட்டவில்லை.

“ஆஸ் யூ விஷ் சர். ஆனா இப்ப என்னால இதை மட்டும் தான் சொல்ல முடியும்…” என்றபடி, அவனுக்கு மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருக்க, மீண்டும் மீண்டுமாய் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சஷாங்கனுக்கு பர்சனல் நம்பர் இருக்கிறதே… சட்டென தோன்றியது.

அந்த எண் முழுக்க முழுக்க ரகசியமானது. வெகு சிலருக்கு மட்டுமே அந்த எண்ணை கொடுப்பான், எதாவது மிக முக்கியமான வேலை என்றால் மட்டுமே, அந்த எண்ணுக்கு இவளும் அழைத்திருக்கிறாள்.

அவசரமாக பேசியில் தேடி எடுத்தவள், மனம் படபடக்க அழைத்தாள். இதையாவது இவன் எடுத்துத் தொலைய வேண்டுமே என்ற கடுப்பு வேறு!

இன்னும் எத்தனை நேரம் இவர்களை பிடித்து வைக்க முடியும்?

ஒரு முழு ரிங் போய் முடிக்கும் போது, “சொல்லு ப்ரீத்தி…” அவனது குரலில் சிறு பதட்டம். அவ்வளவு எளிதாக இந்த எண்ணுக்கு அழைத்து விட மாட்டாள் என்பது அவனுக்கும் தெரியும். சட்டென அவர்களிடமிருந்து பிரிந்து வந்து, தனியாக நின்று கொண்டு,

“எங்க இருக்கீங்க பாஸ்?”

“ஸ்வேதா வீட்ல தான்… அவளோட கசின் வந்துருக்கான்டா…” சுதி சற்று குறைந்திருந்தது.

“சரி, உங்க ஃபோன் என்னாச்சு?”

பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கேட்டு முடித்த பத்தாவது நிமிடம் அங்கிருந்தான்.

***

அப்படியே கிளம்பி வந்திருப்பான் போல, ஜீன்ஸ், முழுக்கை டிஷர்ட்டிலேயே வந்திருந்தான். வேக நடையிட்டு, முழங்கை வரை டிஷர்ட்டை இழுத்தபடி, அவன் வந்த தோரணையை பார்த்தவர்களுக்கு என்னவாகுமோ என்ற கிலியை பரவச் செய்தது.

நிச்சயமாக அவனது கோபத்தின் உச்சி அது!

ஜிஎம் கேபினுக்குள் நுழையாமல், அவனது கேபினுக்குள் போக, அவனை நோக்கி அவசரமாகப் போனாள் ப்ரீத்தி.

“ஸ்டே கூல் பாஸ்…” என்று கிசுகிசுப்பாக கூற, அவனது சேரை தள்ளி விட்டு அமர்ந்த தோரணையிலேயே அவனது கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது.

“செல்வா…” அமர்ந்தவாக்கில் ஆஃபீஸ் உதவியாளரை சப்தமாக அழைக்க, எங்கிருந்தோ பறந்து வந்தான் செல்வம்.

“சர்…”

“அவங்களை இங்க வர சொல்லு…”

“எஸ் சர்…”

மூடிய அறையில் அவனுக்கெதிரில் வந்தமர்ந்த கிருஷ்ணன் நாயருக்கு அறுபதை தொட்டிருக்கலாம். ஜுபிடரோடு முப்பது ப்ளஸ் வருடங்களுக்கும் மேலான பந்தம். இவனது பாட்டனார், தந்தை அடுத்து இவன் என மூன்றாவது தலைமுறையோடு வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பெருமையோடு உரைப்பவர். அவரோடு வந்திருந்த சாலமனுக்கும் அதே அனுபவம் உண்டு. அவர்களது அனுபவத்துக்கு அவர்களை இவன் போய் ஜிஎம் கேபினிலேயே பார்த்து இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு முக்கியமான ஒன்றை உணர்த்தியாக வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டான்.

“சொல்லுங்க மிஸ்டர் நாயர்…” என்றவனை கூர்ந்து பார்த்தார் கிருஷ்ணன். ‘அங்கிள்’ எப்போது மிஸ்டர் நாயர் ஆனது?’

அதை கேட்க வாயெடுக்க, “இது ஜஸ்ட் ஒரு கேஷுவல் விசிட் தான் ஷான்…” என்றார், உடன் வந்த ஆப்ரஹாம் சாலமன்.

“என்கிட்ட ஏன் இன்ஃபார்ம் பண்ணல?”

“இது ஃபார்மல் இன்டெர்னல் ஆடிட் கிடையாதுப்பா… ஜஸ்ட் சின்ன கிளாரிபிகேஷனுக்கு…” நாயர் கூற, அவன் இறுக்கமாக மறுதலித்தான்.

“என்னோட நாலேட்ஜ் இல்லாம ஃபார்மலோ, இன்ஃபார்மலோ இன்டெர்னல் ஆடிட் இனிஷியெட் பண்ண நீங்க யார்? அதுவும் என்னோட கம்பெனில?” கூர்மையாக கேட்டவனை பார்த்த கிருஷ்ணன்,

“ஃபார் யுவர் இன்பர்மேஷன், இது சப்ஸிடரி பிரைவேட் லிமிடட் கம்பெனி, இதுல வைஷ்ணவி, உங்கப்பா எல்லாருமே ஷேர்ஹோல்டர்ஸ் அண்ட் டைரக்டர்ஸ் தான் ஷான். சோ அவங்களுக்கு இந்த கம்பெனில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க உரிமை இருக்கு…”

“எனக்கு ரிட்டன் இன்ஃபர்மேஷன் குடுத்தீங்களா?”

மௌனமாக இருந்தார் கிருஷ்ணன் நாயர்.

“ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன், நீங்க எனக்கு இன்ஃபார்ம் பண்ணி இருக்கணும், பிகாஸ் நான் தான் இங்க மேஜர் ஷேர் ஹோல்டர், வித் செவண்டி பர்சண்ட் ஆஃப் ஷேர்ஸ். அவங்களுக்கு ஏதாவது தெரிஞ்சுக்கணும்ன்னா ஏஜிஎம் மீட்டிங் இருக்கு, குவார்ட்டர்லி மீட்டிங் இருக்கு. என் கம்பெனில என்ன நடக்குதுன்னு அங்க தெரிஞ்சுக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு நான் இல்லாதப்ப எதுக்காக என்னோட ஆஃபீஸை குடையறீங்க?”

“கம்பெனி பணத்தை நீங்க டைவர்ட் பண்றதா, மிஸ்யூஸ் பண்றதா ரிப்போர்ட்ஸ் வந்திருக்கு ஷான். சோ உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க டைரக்டர்ஸுக்கு ரைட்ஸ் இருக்கு…”

“பண்ட்ஸ் டைவர்ட் பண்றது என்னுடைய தனிப்பட்ட உரிமை மிஸ்டர் நாயர். லாபம் வருதா இல்லையா? அதை மட்டும் டைரக்டர்ஸ் பார்த்தா போதும்…” என்று கத்தியை கொண்டு கிழித்தார் போல சொல்ல, தோளை குலுக்கிக் கொண்டார் அந்த நாயர்.

“அப்படி சொல்ல கூடாது. நமக்கு மொராலிட்டி முக்கியம்…”

அந்த பதிலில் அதிர்ந்தவன், “இங்க எதுக்கு மொராலிட்டிங்கற டெர்ம் வருது?” சூடாக சஷாங்கன் கேட்க,

“இந்த பிராஜக்ட்ல ரெண்டு ஃப்ளாட்டை ஏதோவொரு பொண்ணுக்கு நீங்க கொடுத்து இருக்கறதா டைரக்டர்ஸ் சொல்றாங்க ஷான்… அவங்க அதை முறையா பர்சேஸ் பண்ணாங்களா? இல்ல நீங்க ப்ரெசெண்ட் பண்ணதா?”

“அவங்க ஏதோவொரு பொண்ணு இல்ல…” என்று நிறுத்தியவன், சுற்றிலும் இருந்த ஜிஎம், ஏஜிஎம், ப்ரீத்தி ஆகியவர்களை பார்வையிட்டபடி சற்று இடைவெளி விட்டு, “என்னோட பார்ட்னர். வி ஆர் லிவிங் டூகெதர்…” கொஞ்சமும் தடுமாறாமல் சொல்ல, அவர்களது முகம், அதிர்ந்து உறைந்தது.

லிவிங் டூகெதர் என்பது இப்போது பரவி வரும் கலாச்சாரம் தான். ஆனால் பண்பாடுகளை கட்டிக் காக்கும் இந்த குடும்பத்திலா இப்படியொரு செயல்? அதையும் இவ்வளவு வெளிப்படையாக அவன் கூறியது இன்னுமே அதிர்வுகளை ஏற்படுத்தியது. அவர் சிறுவயதும் முதல் அறிந்த ஷான் இவனில்லை என்று நினைத்துக் கொண்ட கிருஷ்ணன் நாயர், ஒரு பெருமூச்சொடு சாலமனை பார்த்தபடி சற்று சாய்ந்தமர்ந்து கொண்டார்.

அவன் இயல்பாக கூறியதை பிரீத்தியும் பார்த்துக் கொண்டுதானிருந்தாள். அவன் எதையும் மறைத்து வைக்க நினைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் சுயசார்பும் அவனுக்கு அதிகம்!

அதோடு தைரியம் மிக மிக அதிகம்!

“ஆனா இது லீகல் கிடையாதில்லையா?” விடாமல் நாயர் தான் கேட்டார்.

“லீகல் இல்லீகல் எல்லாம் நான் பார்த்துக்குவேன் மிஸ்டர் நாயர். என்னோட பெர்சனல் லைஃப் எப்படி இங்க வந்தது? அதை பற்றி யாரும் பேசறதை நான் அனுமதிக்க மாட்டேன். இன்டெர்னல் ஆடிட் இங்க தேவையில்லை. அப்படி லீகலா இனிஷியெட் பண்ணனும்ன்னா ஒரு போர்ட் மீட்டிங் அரெஞ்ச் பண்ணுங்க. அங்க இதை பற்றி பேசுங்க. அப்புறமா நீங்க ஆடிட் பண்ணலாமா வேணாமான்னு முடிவு பண்ணலாம். இப்போதைக்கு எங்களை நாங்க பார்த்துக்கறோம். என்ன கேட்கணும்னாலும், டைரக்டர்ஸ் மீட்டிங்ல கேட்க சொல்லுங்க…” என்று முடிவாக முடித்துவிட, அதற்கும் மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் குழப்பமாக பார்த்துக் கொள்ள, ஜிஎம் விழித்தார்.

அந்த பதிலுக்குப் பின் வேறெதுவையும் கேட்க முனையவில்லை. இதற்கும் மேல் என்ன பேசுவதாம்?

கிருஷ்ணன் மட்டும் செல்பேசியில் பேசிவிட்டு வர, அவரை பார்த்து “மிஸ்டர் நாயர்…” என்றவன், “இன்டெர்னல் ஆடிட் இனிஷியெட் பண்ணது யார்?” என்று கேட்க,

தோளை குலுக்கியவர், “என்னோட அனுபவம் அளவுக்கு கூட உனக்கு வயசில்ல ஷான்…”

“சோ வாட்?”

“இனிஷியெட் பண்ணது மிஸஸ் வைஷ்ணவி…” என்று நிறுத்தியவர், “உங்க அக்காவுக்கு கூட நீங்க என்ன பண்றீங்கன்னு தெரியக் கூடாதுன்னு நினைக்கறீங்க… அப்படின்னா அது சரியான விஷயமான்னு யோசிங்க…”

“ஐ ஆம் லீஸ்ட் பாதர்ட்…” என்றவனின் முகத்தில் அத்தனை வெறுப்பு மண்டிக் கிடந்தது.

அவனிடம் கைக்கொடுத்து விடைபெறுவதற்கு முன் பிரீத்தியை பார்த்த கிருஷ்ணன் நாயர்,

“டேக் கேர் ப்ரீத்தி…” என்று அவளிடம் கூறியவர், இவன் புறம் திரும்பி, “செம புத்திசாலி. தைரியலக்ஷ்மி. மாதேஷ் கிட்ட சொல்லி பிரீத்தியை முதல்ல ஹெட் ஆஃபீஸுக்கு ஆட்டயப் போடச் சொல்லப் போறேன்…” தளர்வாக சிரித்தபடி கூற, சஷாங்கனுக்கும் அவன் கொண்டிருந்த இறுக்கம் குறைந்தது.

“சான்ஸே இல்ல மிஸ்டர் நாயர்…” என்று அவளையும் பார்த்தபடி புன்னகைத்தான்.

அவனது அந்த புன்னகையைப் பார்த்தபின் தான் இவளது இறுக்கம் தளர்ந்தது. ஆனால் ஜிஎம்மின் முகம் இறுகியது.

***

போகும் பாதை தூரமில்லை

வாழும் வாழ்க்கை பாரமில்லை

சாய்ந்து தோள் கொடு

இறைவன் உந்தன் காலடியில்

இருள் விலகும் அக ஒளியில்

பிசாசு பட பாடலை மூன்றாவது முறையாக ரிப்பீட் மோடில் கண்களை மூடியபடி கேட்டுக் கொண்டிருந்தான் சஷாங்கன். அந்த வயலின் இசை அவனுக்கு பிடிக்கும். மனதை ஆற்றிக் கொண்டிருந்தது.

ப்ரீத்தி தான் காரோட்டிக் கொண்டிருந்தாள். மணி ஏழாகி இருந்தது.

அவனுக்கு மனம் சரியில்லை என்றால் அவளிடம் காரைக் கொடுத்துவிடுவது அடிக்கடி நடப்பதுதான். பொதுவாக அவனது காரை டிரைவர்களிடம் கொடுப்பதே இல்லை. எத்தனையோ முக்கியமான விஷயங்களை பேசுவது காரில் தான். சைட்டுக்கும், அலுவலகத்துக்கும் பயணம் செய்யும் நேரத்தில் தான் பெரும்பாலும் செல்பேசி பேச்சுக்களும் நடக்கும். அதனால் அவன் டிரைவர் இருப்பதை விரும்ப மாட்டான். ஆனால் ப்ரீத்தி எப்போதும் இருப்பாள். அவளிடம் பேசும் விஷயங்களும், அவளிருக்கும் போது பேசும் விஷயங்களும், எதுவுமே வெளியில் சிறு துரும்பு கூட கசிந்ததில்லை. கசியவும் விட மாட்டாள்.

ஆடிட்டர்கள் இருவரும் போன பின், ஜிஎம்மை வெளுத்து வாங்கியிருந்தான் தனிமையில்.

“எப்படி நீங்க ஃபைல்ஸ எடுத்து குடுத்தீங்க மிஸ்டர் வாசுதேவன்?”

“அவங்க கேட்டாங்க. அதான் குடுத்தேன் சர்…”

“அவங்க கேட்டா எதை வேணும்னாலும் குடுத்துடுவீங்களா?”

“வைஷ்ணவி மேடமும், சேர்மன் சாரும் இனிஷியெட் பண்ணியிருக்காங்க. அதை எப்படி நான் டிஸ்ஒபே பண்ண முடியும் சர்?”