Kalangalil aval vasantham -4(3)
Kalangalil aval vasantham -4(3)
“நீங்க ஜுபிடர் ரியல்ட்டர்ஸுக்கு ஜிஎம், மிஸ்டர் வாசுதேவன். யூ ஆர் வொர்க்கிங் ஃபார் மீ. அவங்களுக்கு தான் நீங்க லாயலா இருக்க முடியும்ன்னா அங்க போயிடலாம்…” இறுகிய முகத்தோடு கூறியவனை நேராக பார்த்தவர்,
“சாரி சர். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கறேன்…” என்று தலை குனிந்தபடி கூறிப் போனார்.
அவனுக்குத் தெரியும், அவரது நன்றியெல்லாம் சேர்மன் மாதேஸ்வரனிடம் தான் என்பது. அதை தெரிந்தும் தான் எதுவும் செய்யாமல் விட்டிருக்கிறான். மன்னிப்புக் கேட்டு விட்டு போனாலும், அவர் கண்டிப்பாக அவனது தந்தைக்காக தான் இருப்பார்.
இவர்கள் எல்லாம் காலம் காலமாக அதே நிறுவனத்தில் இருப்பவர்கள். அவர்களை மாற்ற முடியாது. மாற்றவும் அவன் நினைக்கவில்லை. தந்தை சம்பந்தப்பட்ட எதுவுமே தனது அலுவலகத்தில் இருக்கக் கூடாது என்று நினைத்திருந்தால், முழுமையாக அலுவலகத்தை மாற்றி அமைத்திருப்பான்.
அவன் அப்படி நினைக்கவில்லை என்பது தான் உண்மை!
“உங்க ஃபோன் என்னாச்சு பாஸ்?”
காலையில் அவள் கேட்க நினைத்த கேள்வியை காரோட்டிக் கொண்டு கேட்டாள்.
“நீ கூப்பிட்டப்ப ஸ்வேதா கிட்ட இருந்துதாம்…” கண்களை மூடியபடியே கூறினான்.
“ஏன் அவங்க கட் பண்ணாங்க?” அமைதியாகத்தான் கேட்டாள்.
“அவளோட கசின் கிட்ட பேசறதுக்கு டிஸ்டர்பா இருந்துதாம்…” என்றவனது குரலில் லேசான கசப்பு.
“இது எவ்வளவு பெரிய தப்புன்னு அவங்களுக்கு தெரியாதா?” நேரடியாக கேட்டாள்.
“ஹும்ம்…” ஒப்புக் கொண்டான். தவறென்றால் பிரீத்தியை பொறுத்தமட்டில் அது தவறு தான். அதை மறைத்து, பூசி மொழுகி எல்லாம் கூற மாட்டாள். மரியாதை எவ்வளவு உண்டோ, அதே அளவு நேரடியான பேச்சும் உண்டு!
ஆனால் இன்று ஸ்வேதா செய்ததை அவனாலும் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காலை முதலே அவளது செய்கைகள் சரியாகவே இல்லை. அதன் உச்சகட்டமாக ஃபோன் காலை கட் செய்வதெல்லாம் எந்த வகையில் சேர்த்தி? ப்ரீத்தி மட்டும் இவனது இன்னொரு எண்ணுக்கு அழைக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு மிகப் பெரிய தலைகுனிவாக அல்லவா இருந்திருக்கும்?
“ஈஸிஆரா பாஸ்?” ஸ்வேதாவின் வீட்டுக்கு போகிறானா அல்லது வேறு எங்குமா என்று கேட்டாள். அவனை அங்கு விட்டுவிட்டு, ஊபர் பிடித்து ஹாஸ்டல் வந்ததும் நடந்திருக்கிறது. அதற்காக பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.
“இல்ல… எங்கயாவது போ ப்ரீத்தி. லாங் டிரைவ்…” கண்களை மூடியபடியே கூறியவனை திரும்பிப் பார்த்தவள், எதுவும் பேசாமல் ஈஸிஆர் பீச் ரோட்டில் காரை விட்டாள்.
கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே!
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே!
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே!
பாடலை அனுபவித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“நான் தப்பு பண்றேனா ப்ரீத்தி?” அமைதியை உடைத்தபடி அவன் கேட்க, மீண்டும் அவனைப் பார்த்தாள்.
“ஏன் பாஸ்?”
“சொல்லு…”
“எந்த விஷயத்துல?”
“ஸ்வேதா…”
“தப்பு சரிக்கு எந்த ஸ்டண்டர்ட் டெஃபெனிஷனும் இல்ல பாஸ்…”
“நான் ஜெனரல் டெஃபெனிஷன் கேக்கலை. நீ டிஃபைன் பண்ணு…”
சஷாங்கனுக்கு அவளால் பதில் கூற முடியவில்லை. தவறு என்பதையோ தவறில்லை என்பதையோ அவளால் எப்படி கூற முடியும்? அதை ஒப்புக் கொள்வானா என்பதை காட்டிலும், அந்த விஷயத்துக்குள் அவள் போக விரும்பவில்லை.
“அது உங்க பெர்சனல் பாஸ்…”
“ஒரு ஃபிரெண்டா நீ என்ன நினைக்கறன்னு எனக்கு தெரிஞ்சுக்கனும். உன்னோட பார்வைல நான் குறைவா தெரியக் கூடாது…”
“நான் உங்களை ஜட்ஜ் பண்ணல பாஸ். உங்களை பற்றி எனக்குத் தெரியும். ஆறு வருஷமா உங்களை பார்த்துட்டு இருக்கேன். பழகிட்டு இருக்கேன். ஆனா ஸ்வேதா விஷயத்தை வெச்சு மத்தவங்க உங்களை ஜட்ஜ் பண்றது எனக்கு பிடிக்கல. எரிச்சலா வருது. அதனால உங்க மேல கோபம் வருது…”
எந்தவிதமான முன்முடிவும் இல்லாத அவளது வார்த்தைகளை அவனுக்குப் பிடித்திருந்தது. அது சரிதானே!
“எனக்கு ஸ்வேதாவ பிடிச்சிருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு. அவ செய்யற சில விஷயம் எனக்கு பிடிக்கல தான். ஆனா அவளோட சரி, தப்புன்னு எல்லாத்தையும் நான் அக்ஸெப்ட் பண்ணிக்கறேன். இது எங்க ரெண்டு பேர்குள்ள இருக்க விஷயம் தானே? இதை ஏன் மத்தவங்க ஜட்ஜ்மெண்டலா பார்க்கணும்? என்னோட ஸ்பேஸ்ல மத்தவங்க வர்றது தப்பில்லையா?”
“உங்க அப்பாவும், அக்காவும் மத்தவங்கங்கற சர்க்கிள்ல வருவாங்களா பாஸ்?”
கூர்மையான வார்த்தைகள் தான். ஆனால் சத்தியம் அதுதானே!
அதற்கு அவனால் பதில் கூற முடியவில்லை!
என்ன சொல்வது? காலம் மிகச்சிறந்த சர்வாதிகாரி. நரியை பரியாக்கி, பரியை நரியாக்கிப் பார்ப்பதில் அதற்குத் தான் எவ்வளவு விருப்பம்?!
பரியென அவன் நினைப்பதில் சில கழுதைப் புலிகளும் அடக்கம் என்பதை அவன் உணர்வானா?
பிரீத்தியின் செல்பேசி அழைத்தது. காரை ஓட்டிக் கொண்டே எடுத்துப் பார்த்தாள். அவளது தங்கை!
“எக்ஸ்கியூஸ் மீ பாஸ்…” என்றவள், பேசியை எடுத்து, “சொல்லு காயூ…” என்றாள்.
“அக்கா…” என்றபோதே அவளது குரல் அழுகையில் குளித்திருந்தது.
“சொல்லுடா… என்னாச்சு?” என்றவளுக்கு மனம் பதறியது! காயத்ரி அவ்வளவு எளிதாக அழுபவள் அல்ல.
“இங்க யாரோ நடேசன்னு ஒருத்தர், வீட்டுக்கு வந்து மிரட்டறார்க்கா… கூட வந்தவங்க அடியாளுங்க மாதிரி இருக்காங்க…” என்றவள், அழ, சட்டென ரோட்டின் ஓரத்துக்கு போனவள், பிரேக்கடித்து காரை நிறுத்தினாள்.
சஷாங்கன் புறம் திரும்பியவள், “சாரி பாஸ். ஒரு ஃபைவ் மினிட்ஸ்…” என்று கேட்க,
“நோ ப்ராப்ளம்…” என்றவனுக்கு புருவம் சுளித்திருந்தது. இவனது பிரச்சனையில் பிரீத்தியை கவனிக்கவில்லை. காலையிலேயே அவளது குரல் சரியில்லையே! காரை விட்டு இறங்கியவள், அவனுக்கு கேட்க கூடாது என்பதற்காக சற்று தள்ளி நின்று கொண்டு,
“ரொம்ப பிரச்சனையா காயூ?” என்று கேட்க,
“ஆமாக்கா… விட்டா அப்பாவ அடிச்சிருப்பான் அவன்…” என்றவள் அழ, ‘கடவுளே’ என்று நினைத்தபடி கையால் வாயை மூடிக் கொண்டாள் ப்ரீத்தி. கண்கள் கலங்கிவிடும் போல இருந்தது. முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். சிறு பெண்ணிடம் அதைக் காட்டிக் கொள்ள முடியாது. இன்னும் பயந்துவிட கூடும்.
“இப்ப அவங்க இருக்காங்களா?”
“இல்லக்கா… இப்பத்தான் போனாங்க…”
“அம்மா எங்க காயூ?”
“அழுதுட்டு இருக்காங்கக்கா…” என்றவள், இடைவெளி விட்டு, “தெருவே கூடிருச்சுக்கா. ரொம்ப அசிங்கமா இருக்கு…” என்று அழ,
“அழாதடா…” என்றவள், “அப்பா கிட்ட குடு…” என்று கூற, தந்தையிடம் பேசியைக் கொடுத்தாள் காயத்ரி.
“பாப்பா…” எனும் போதே அவர் மிகவும் பயந்திருப்பது தெரிய,
“என்னாச்சு?” என்று கேட்டாள்.
“வியாபாரிங்கள வெச்சு நடேசன் கிட்ட பேசலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன் பாப்பா. அதுக்குள்ள அவனே வீடு வரைக்கும் வந்துட்டான்…” என்றவர், சற்று நிறுத்திவிட்டு, “ரொம்ப அசிங்கம் பண்ணிட்டான் கண்ணு…” என்று உடைய,
“சரி… பாத்துக்கலாம்… விடுங்க…” என்றவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாளே தவிர, எப்படி பார்ப்பது?
“எட்டரை லட்சம் கேக்கறான் பாப்பா. இது அநியாயம். அவன் கிட்ட நான் வட்டிக்குக் கூட வாங்கல… இடத்துல ஏமாந்ததுக்கு வேணா என்னை அவன் பொறுப்பு சொல்லலாம். ஆனா இடத்துக்கு குடுத்த பணத்துக்கு வட்டி போட்டு கேக்கறான் பாப்பா…” என்றவருக்கு நடேசனின் உண்மை முகத்தை அப்போதுதான் தெரிந்து கொண்ட பயம்.
“அவன் கிட்ட வாங்கினது நம்ம தப்பு…” இறுக்கமாக கூறினாள்.
“இப்ப என்ன பண்றதுன்னே தெரியல பாப்பா…” என்றவர், தான் தந்தை என்பதை மறந்து அழ, அவளால் அப்போதும் கறாராக இருக்க முடியவில்லை. இத்தனை காலத்தில் இது போன்ற பிரச்சனைகளை அவர் பார்த்ததில்லை. சற்று சுகமான வாழ்க்கை முறை தான் அவருடையது. வளைந்து கஷ்டபட்டதில்லை. மனைவி, மகள் என்று அவர்களது தயவிலேயே வாழ்ந்து பழகி விட்டவர். ஏமாந்து விட்டுத்தான் வருவாரே தவிர யாரையும் ஏமாற்றியதில்லை.
“நாளைக்கு உங்களுக்கு தெரிஞ்ச வியாபாரிங்க நாலு பேரை கூட கூட்டிக்கிட்டு அவனைப் போய் பாருங்க. வட்டியை விட சொல்லுங்க. வாங்குன பணத்தை மட்டும் குடுத்துடறேன்னு பேசுங்க…” அந்த நிலையிலும் தெளிவாக இருக்க பிரீத்தியால் மட்டுமே முடியும்.
“அப்படீன்னாலும் அஞ்சு லட்சம் பாப்பா…” என்றவருக்கு குற்றமிழைத்த உணர்வு!
“உஃப்ப்…” என்று வாயைக் குவித்து பெருமூச்சு விட்டாள். கண்கள் கலங்கும் போல இருந்தது. யாருக்கும் முகத்தைக் காட்டிவிட கூடாது என்று தலையை குனிந்தபடி இமை கொட்டி விழித்து, தன்னை சமநிலை செய்து கொண்டாள். சுற்றிலும் கவிழ்ந்திருந்த இருள் அவளுக்கு உதவி செய்தது.
அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டா, கடல் காற்றில் படபடவென அலைகழிய பறந்து கொண்டிருந்தது.
“பார்த்துக்கலாம். ஏதாவது வழி கிடைக்கும். நாளைக்குப் போய் பேசிட்டு சொல்லுங்க…” என்று கூறிவிட்டு வைத்தவளால் சட்டென இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.
வாழ்க்கையோடு இன்னும் எவ்வளவுதான் போராடுவது? எப்போதும் போல மனம் கேள்வி கேட்க, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு திரும்பினாள்.
ஜன்னலை திறந்து விட்டபடி, அவள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான் சஷாங்கன்!
கேட்டிருக்கலாம் என்று தோன்றினாலும், அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. கடல் காற்றில் தாறுமாறாக பறந்த முடியை ஒதுக்கிப் பார்த்தாள். அடங்கவில்லை.
போட்டிருந்த ரப்பர் பாண்டை கழற்றி, முடியை முடிந்து கொண்டையாகப் போட்டுக் கொண்டாள். சற்று தேவலாம் போல இருந்தது. இரு கைகளாலும் அழுத்தமாக முகத்தை துடைத்து விட்டவளால் இப்போது அவளது உணர்வுகளை மறைத்துக் கொள்ள முடியும் என்று தோன்றியது.
“சாரி பாஸ்… கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…” என்று உற்சாகமாக தன்னைக் காட்டிக் கொண்டவள், காரை ஸ்டார்ட் செய்ய, அவன் பதில் குடுக்கவில்லை.
லாங் டிரைவ் என்றெண்ணியபடி தூரத்தைக் கவனிக்காமல் ஓட்டிக் கொண்டு வந்திருந்தாள். இப்போது பார்த்தபோது நகரை விட்டு மிகவும் தள்ளி வந்திருப்பது தெரிந்தது.
நேரமாகிவிட்டது என்று நினைத்தபடி, “திரும்பிடலாமா பாஸ்?” என்று மணியைப் பார்த்தாள். எட்டரையைக் கடந்திருந்தது.
அவளை கூர்மையாகப் பார்த்தான்.
“வேண்டாம்…”
“ரொம்ப டைமாச்சு பாஸ்…”
மௌனமாக அவளைப் பார்த்தான்.
“என்னாச்சு?”
“என்னாச்சுன்னா? என்ன பாஸ்?”
“என்ன பிரச்சனை?”
“நத்திங் பாஸ்…”
“இந்த நத்திங் சொல்லி தப்பிக்க பார்க்காத பிரீத்தி…” என்றவனின் குரலில் கண்டிப்பிருந்தது.
“சின்ன ப்ராப்ளம் பாஸ். ஒண்ணும் பெரிய விஷயமில்ல…” என்று முடிவாக சொல்லியவள் கண்டிப்பாக உண்மையைக் கூற போவதில்லை என்று புரிந்தது.
“நான் உனக்கு பாஸா ஃப்ரெண்டா?” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கூற வருவது புரிந்தது.
ஆனாலும் மௌனமாக இருந்தாள்.
“கிருஷ்ணன் நாயர் கிட்ட ஃபைல்ஸ் தரவே முடியாதுன்னு சொன்னயா?”
“எஸ் பாஸ்…” மெல்லிய குரலில் அவள் கூற,
“ஏன்? ஜிஎம் இருந்தார். அவருக்கு ஃபைல்ஸை குடுக்கறதுல எந்த பிரச்சனையும் இல்லைங்கும் போது, நீ ஏன் குடுக்க முடியாதுன்னு அடம் பண்ண?”
“இன்டெர்னல் ஆடிட்டை நீங்க விரும்ப மாட்டீங்க…”
“அது சாதாரணமா நடக்கற ஒண்ணுதானே?”
“ஆனா அந்த ஆடிட், நீங்க ஸ்வேதாக்கு குடுத்த பிளாட்ஸ் சம்பந்தமான டீட்டைல்ஸ் பார்க்கத்தான்னு நான் கெஸ் பண்ணேன். உங்க சுயமரியாதையை அப்படி விட்டுக் குடுக்க முடியாது பாஸ்…” தலைகுனிந்தவாக்கிலேயே அவள் கூறியதை கேட்டபோது அவனுக்கு உண்மையில் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
இதுதான் அவள். அவனது தோழி!
“ஆனா, நான் மட்டும் உன்னோட சுயமரியாதையை விட்டுக் கொடுக்கலாம். இல்லையா?”
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் கண்ணீரின் பளபளப்பு! வாயை இறுக்கமாக பூட்டியபடி, தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள். என்ன நிலையில் தனது வீடு இப்போது இருக்கும் என்ற பயம் அவளது மனதை கவ்வியது. தந்தைக்கு தைரியம் சொல்லியிருந்தாள் தான். ஆனால் ஏதாவது ஒன்றை செய்து கொண்டு விட்டால் என்னாவது என்ற அச்சம். இதையெல்லாம் அவனிடம் கூற முடியவில்லை. எப்படி கூறுவது?
மௌனமாகவே இருந்தாள். அவளால் பேச முடியவில்லை. தொண்டையை அடைத்தது.
அவள் மௌனமாகவே இருப்பதை பார்த்தவனுக்கு மனதுக்குள் கோபம். அவள் தன்னிடம் வெளிப்படையாக இருக்க வேண்டுமென நினைத்தான். ஆனால் அவளது பயத்தை, பிரச்சனையை, கஷ்டத்தைக் கூட தன்னிடம் கூறாமல், மறைத்து வைப்பதை பார்க்கையில் அந்த கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது. தான் நினைப்பதைப் போல அவள் நினைக்கவில்லையா? எதையும் வெளிப்படையாக்கி அவளுக்கு தான் பழக்கமே இல்லையே!
கார் கதவைத் திறந்தவன், அவளிடம் எதையும் கூறாமல் நடந்தான், அருகிலிருந்த கடலை நோக்கி!
சற்று நேரம் ஓட்டுனர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தவள், மௌனமாக இறங்கினாள்.
மனதுக்குள் அழுத்தம் இன்னும் அதிகமானது…
கடற்கரையை ஒட்டியபடி இருந்த சிமிண்ட் திட்டில் கைகளை கட்டியபடி அமர்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான் சஷாங்கன்.
அலைகள் ஆக்ரோஷமாக ஒன்றையொன்றுத் துரத்திக் கொண்டிருந்தது. பிடிக்க முடிக்கிறதோ இல்லையோ, அந்த ஆக்ரோஷத்தை அவன் விரும்புவான். ஆனால் இப்போது எதுவும் தோன்றவில்லை. நிர்மலமான மனதுடன் அந்த அலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது வலப்புறத்தில் அமர்ந்தவள், கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.
“ஜஸ்ட் ஒரு சின்ன பணப் பிரச்சனை தான் பாஸ். சமாளிச்சுடுவேன்…” சிறு குரலில் அவள் கூறியதற்கு அவன் எந்தவிதமான பதிலையும் கூறவில்லை. அவள் இன்னமும் உண்மையான நிலையை சொல்லவில்லை என்பது தெரியும்.
அவனது மௌனத்தை அவளால் மொழிபெயர்க்க முடியும். அவளிடம் உண்மையை எதிர்பார்க்கிறான்!
தலை குனிந்து முகத்தை கைகளால் மூடியபடி தாங்கிக் கொண்டவள்,
“பயமா இருக்கு…” என்றவளை திரும்பிப் பார்த்தான். “போராட முடியல. மூச்சு வாங்குது…” என்றவள், இடைவெளி விட்டு, “அழனும் போல இருக்கு. யார்கிட்ட அழறதுன்னு தெரியல ஷான்…” என்றவள், அதற்கும் மேல் பேச முடியாமல், உடைந்து போய் அழ, அவளை தன்னுடைய தோளில் தாங்கிக் கொண்டான்.
அவனது கண்களிலும் லேசான கண்ணீர் பளபளப்பு!
நதிபோகும் கூழாங்கல் பயணம் தடையுமில்லை!
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை!
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு!
நம் கண்ணீர் இனிக்கட்டுமே!
காரில் ரிப்பீட் மோடில் இன்னமும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது!