kanavum nanavum ondreyanaal

WhatsApp Image 2021-10-25 at 12.27.15 PM-557b5af2

கனவும் நனவும் ஒன்றேயானால்…

-அபிராமி

நிலவின் கதிர்கள் எல்லாம் ஓய்வெடுக்கும் அமாவாசை இரவு. பார்க்கும் திசை எல்லாம் இருட்டின் ஆதிக்கம். மலையடியில் காடுகளின் நடுவே நீண்ட நெடிய சாலை. சிறு வயதில் இருந்தே இருட்டுக்கு பயந்த ஜ்வாலாமுகி, அந்தச் சாலையில் பயத்தில் நடுங்கி கொண்டு, நடந்து கொண்டிருந்தாள்.

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, அவளினுள் ஒரு நடுக்கம். “என் பெயரில் உள்ள நெருப்போட வெளிச்சம், இங்க இருந்து இருந்தா, நான் இந்த அளவுக்குப் பயந்திருக்க மாட்டேனோ?”

காலையில் கண்ணுக்கு ரம்மியமாய் இருக்கும் காட்டு பகுதி, இருட்டில் அவளுக்கு ‘இது பேயா ? இது பிசாசோ?’ என்ற பயத்தை மட்டுமே தருவதாய். இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டுமோ? அவளே அறியாதது. கொண்டாட்டத்திற்காக வந்த இடத்தில் அவள் திண்டாடியது தான் மிச்சம்.

“பார்க்குற இடம் எல்லாம் நாகினி சீரியல் கணக்கா பயங்கரமா இருக்கே? ஒரு வேளை, நாம நாகினி இருக்குற இடத்துக்குத் தப்பி தவறி வந்துட்டோமோ? போன் கூட இப்போவா என் பழிய கொட்டிக்கணும்?” அவளுள் ஒரு பயம் கலந்த சலிப்பு.  சீன பெருஞ்சுவர் மாதிரி நீண்டு கொண்டே போன சாலையில், மெலிதாய் ஒரு வட்ட வடிவான வெளிச்சம்.

“கடவுளாவது நம்ம பக்கம் இருக்காரே? அது வரச் சந்தோஷம்!” வெளிச்சத்தை மையமாய் கொண்டு, அதை நோக்கி ஓட, அதை நெருங்க நெருங்க அந்த வெளிச்சமும் அவளை நெருங்கியது.  சிறு தூரம் சென்றபின் வெளிச்சம் இரண்டாகப் பிரிய, காப்பாற்ற ஆள் கிடைத்த சந்தோஷத்தில் அவளது ஓட்டத்தின் வேகமும் அதிகரித்ததோ?  “வெளிச்சம், கிட்ட போகப் போகப் பெருசாகுதே. என்ன இப்படி கண்ணைக் கூசுது?”

அவளுள் குழப்பமும் ஓங்க, “என்ன ஆனாலும், அந்த வெளிச்சத்தை பிடிச்சாதான், நாம இந்த இருட்டு காட்டுல இருந்து தப்பிக்க முடியும். நிக்காத ஜ்வாலா. ஓடு… ஓடு!” தனக்கே சொல்லிக் கொண்டாள்.  வெளிச்சத்தை நெருங்க நெருங்க, அவளது கண்கள் மிகவும் கூசி போக, மிகவும் நெருங்கிய நொடியே அது ஒரு லாரி என்று அறிந்தவளால், அவளது வேகத்தைக் குறைக்க முடியாமல் தவிக்க,

“கடைசில நாம இந்தக் காடே கதின்னு ஆவியாகப் போறோமா? எந்த மரத்தைப் பார்த்துப் பேய்னு பயந்தோமோ, அந்த மரத்துல வேதாளம் மாதிரி தொங்க போறோமா? கடவுளே ஹெல்ப் பண்றனு நினைச்சேன். கடைசில நீயும் வேற வேலைல பிஸி ஆகிட்டியா?” ரணகளத்திலும் அவளது நக்கல் கொஞ்சமும் குறையவில்லையே!

“இந்த வாய் மட்டும் கொஞ்சம் அடங்கிச்சுனா, நீ எப்பயோ உறுப்புற்றுப்படி!” தாயின் வசவு சொற்கள் காதில் கேட்க, “யம்மோவ்! உன்னோட பேச்ச நான் இனிமே தவறாம கேட்குறேன்.  இந்தச் சிக்கல்ல இருந்து காப்பாத்துமா!” உடன் இல்லாத தாயை தேடும் பிள்ளையாக அவள் மாற, இன்னும் ஒரு இன்ச்தான் மிச்சம் இருக்க, பெருங்குரல் எடுத்து அவள் கத்தினாள்.

லாரி டிரைவர் ஃபுல் போட்டு இருப்பார் போல, இதை எல்லாம் கவனிக்கும் நிதானத்தில் இல்லை.  உயிர் போய்விடும் என்று ஜ்வாலா தவித்த கடைசி நொடி, அவளை வேகமாக ஒரு கை இழுத்து, சட்டென்று விடுவிக்க, இழுத்த வேகத்தில் அவள் அருகில் இருந்த கல்லில் விழ, கையிலும் காலிலும் நல்ல சராய்ப்புக்கள்.  அவள் எதையும் உணரவில்லை. 

“இறந்துட்டோம் இறந்துட்டோம்” அவள் மனம் விடாது இதையே மந்திரமாய் ஜபிக்க, “ஹலோ மேடம்… மேடம்… மேடம்… “, இழுத்தவன் கத்தி கூப்பிட்டு பார்த்துச் சலித்து, “மேடம் நீங்கச் சாகல. கண்ணைத் திறங்க. நீங்கச் சாகல” அவளது மனதை புரிந்தவனாய், அழுத்தமாய் கூற, அப்போதுதான் அவள் தனது கண்ணையே திறந்தாள்.

சுதாரித்து கொண்டு, காப்பாற்றியவனை அவள் காண, “ரொம்ப தேங்க்ஸ் சார். செத்துட்டேன்னு நினைச்சேன். நீங்க? உங்க பேரு?” ஏதோ உந்துதலில் அவள் கேட்க, குழி சிரிப்போடு அவன் கூறினான், “ஜெகதீஷ்” என்று! “ஜெ… க… தீஷ்…” ஒவ்வொரு எழுத்தையும் அவள் உச்சரித்து பார்க்க, “என்னது ஜெகதீஷா? யாரடி அது ஜெகதீஷூ? இன்டர்வியூ இருக்கு. சீக்கிரம் எழுப்புன்னு என்னை நைட் எல்லாம் தூங்க விடாம கடுப்பேத்திட்டு, இப்போ நீ இவளோ நேரம் கனவு கண்டுட்டு இருக்கியா? ஏன்டி ஜ்வாலா எழுந்துருடி?”

அன்னையின் காட்டு கத்தலான சுப்ரபாதத்தில் அவள் மெல்ல துயில் களைய, “அட எல்லாம் கனவாப்பா? எவளோ பயங்கரமா இருந்துச்சு.  இருந்தாலும் அந்தக் கண்ணக் குழி அழகாதான்யா இருந்துச்சு?” சிரித்து கொண்டாள் அவள்.  இன்டர்வியூவின் முக்கியத்துவத்தை அவளது தாய், மீண்டும் ஒரு முறை அழகாக அவளது பாணியில் கூற,  அடுத்த அரை மணி நேரத்தில்,  அந்த ஆறடுக்கு வளாகத்தின் முன் நின்றாள்.

அவள் செல்லவிருக்கும் ஆறாவது மாடிக்கு, லிப்ட் மூலம் செல்ல, இறங்கும்போது, அவளது கழுத்தை சுற்றி போட்ட துப்பட்டா, லிப்ட்டிற்குள் மாட்டி இருக்க, அதைக் கவனியாத யாரோ ஒருவர், கீழ்தளத்திற்கு அவசரமாய் செல்ல வேண்டும் என்ற காரணத்தால், லிப்ட் கதவை மூடிச் செல்ல, கழுத்தறுக்கும் நிலையால்,  இவள் தவித்து இருக்க,  அவளது துப்பட்டாவை அவளது கழுத்திலிருந்து அகற்றி, அவளை இழுத்து வேறொரு பக்கம் ஒருவன் தள்ளி விட, கீழே விழுந்த அவள் தொண்டை கமறலால் தவிக்க,  உடனே தண்ணி கொடுத்து அவளை ஆசுவாசம் செய்ய,  இத்தனையும் செய்தவருக்கு நன்றி சொல்ல நிமிர்ந்து பார்த்த ஜ்வாலா திகைத்தாள்.

“ஜெ… க… தீஷ்…”  உதடு அவளை அறியாது கூறியது, கனவில் கண்ட அதே கண்ணக்குழி சிரிப்பழகனைப் பார்த்து!  “எஸ்… ஐ…ஆம்…” குழப்பமும் ஆச்சரியமும் கலந்த பாவனை அவனுள்! அவளது காயங்களைக் கவனித்து,  அவளுக்கு முதல் உதவி செய்ய,  அப்போதுதான் அவளுக்குத் தனது இன்டெர்வியூவே நியாபகத்துக்கு வர,  “இன்டர்வியூ இருக்கு தீஷா.  நேரம் ஆச்சு.  கொஞ்சம் சீக்கிரம்”

அவளையும் அறியாது அவனிடம் ஓர் உரிமையை அவள் காட்டி இருந்தாள்.  அதைக் கவனித்தும் கவனியாதது போல் ஜெகதீஷ் அவளது காயங்களுக்கு மருந்திட்டு,  அவனே இன்டர்வியூ நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.  “பொறுமையா பண்ணு.  ஆல் தி பெஸ்ட்”  வாழ்த்துக்கூறி அவன் செல்ல, அவன் வார்த்தைகளில் இவள் உயிர்பெற்று இன்டெர்வியூவில் அசத்தி விட,

“சூப்பர்.  அப்போ நானும் தீஷாவோடு ஒன்னா வேலை பார்க்கப் போறேனா?” அவளுள் குதூகலம்.  “ரிசல்ட் பார்த்தேன்.  என்னோட டீமுக்கு தான் அநேகமா உன்னைப் போடுவாங்க.  சரிவா, உன்னை நான் வீட்ல ட்ரோப் பண்றேன்.  அரை நாள் பெர்மிஷன் வாங்கிட்டேன்”  ஜெகதீஷ் அவனது இயல்பிலிருந்து மாறிக்கூற,  “எதுக்கு தீஷா?பரவாயில்லை”  அவளுள் ஒரு சங்கோஜம்.

“நீ இப்படியே போனா வீட்ல கண்டிப்பா பயந்துப்பாங்க.  இதே நானும் கூட வந்தா, சேர்ந்து சமாளிக்கலாம்”  அவனுக்கே அவன் கூறியதில் ஆச்சரியம்தான். பெயர்கூட தெரியாத பெண்ணுக்குத்தான் ஏன் இத்தனை மதிப்பு கொடுக்கிறோமென்று.  வீட்டில் அவளது தாயை அவன் ஏதேதோ பேசிச் சமாளிக்க,  அவனை அவனது தாய்க்கு மிகவும் பிடித்துப் போனதை எண்ணி,  அவள்தான் பரவசமடைந்து இருந்தாள்.

இது பூர்வஜென்ம பந்தமா,  இல்லை கனவில் வந்ததால் வந்த ஈர்ப்பா,  இல்லை நேசமாகி பின் காதலாகி போகுமா,  இல்லை நட்பில் தொடருமா, அவள் அறியாள்.  ஆனால், அவளுக்கு ஆபத்தான நேரம் வரும்போது,  அவன் மட்டுமே இனி தன்னை காப்பாற்றுவான் என்று முழுவதுமாய் நம்பினாள்.  காலத்தின் போக்கைக் காலத்திடமே விட்டு விட்டு, நிஜத்தை கண்ணக்குழி அழகனோடு வாழத் தீர்மானித்திருந்தாள்.

-*முற்றும்*-