Final

வார நாட்களில் எல்லாம் அலுவலகம் அலுவலகம் என ஓடித் திரிபவர்களுக்கு வாரத்தின் இறுதி நாட்கள் என்பது ஒரு வரப்பிரசாதம்.

அந்த வரத்தை முழுமையாக அனுபவிக்கும் நோக்கத்தோடு அந்த பூங்காவிற்குள் நுழைந்தாள் மிதுரா.

உள்ளே நுழைந்தவளின் தலையை இளங்காற்று தலைக் கோதி வரவேற்றது.

காற்றில் அலையாடிய கேசத்தை தன் காதோரம் சொருகியபடி பசுமைப் படர்ந்து இருந்த அந்த பூங்காவைத் தன் கண்களால் பருகியவள் வழக்கமாக தான் அமரும் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்.

தன் கைப்பையைத் துழாவி அதில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து விரித்தவளது மனம் அந்த புத்தகத்தில் மூழ்கத் துவங்கிய நேரம் அவளருகே வந்து யாரோ அமர்ந்தார்கள்.

அவள் அதை கவனித்தாலும் புத்தகத்தில் இருந்து  பார்வையை விலக்கவில்லை.

பக்கத்தில் இருந்தவனிடம் அடுத்து லேசாக தொண்டை செருமல். அதையும் அவள் கண்டு கொள்ளவில்லை. 

“சிரி கால் மோஸ்ட் ப்யூட்டிஃபுல் கேர்ள் சிட்டிங் நெக்ஸ்ட் ஆஃப்டர் மீ”  என்று அருகில் இருந்தவன் ஐஃபோனில் சிரி என்னும் சாஃப்ட்வேர் சிஸ்டத்திற்கு கட்டளையிட்டான் தன் குரலால்.

அந்த குரலை வைத்தே அதற்கு சொந்தக்காரனை கண்டுப்பிடித்துவிட்டாள்,  மிதுரா.

அவன் வேறு யாரும் இல்லை தீரனே தான்.

ஆனாலும் நிமிராமல் புத்தகத்திலேயே பார்வையை புதைந்து இருந்தவளுக்கோ  சந்தேகம் துளிரிட்டது.

‘அவன் அருகில் நான் தானே அமர்ந்து இருக்கின்றேன்.  ஒரு வேளை அவன் தனக்கு தான் கால் செய்ய சிரிக்கு கட்டளையிடுகிறானா இல்லை வேறு யாரையாவது சொல்கிறானா?’ என லேசாக மனம் நெருடிய நேரம் மிதுராவின் அலைப்பேசி அலறியது.

ஆக அவன் அழைத்தது தன்னை தான்.

ஆனால் அந்த  சிரி எப்படி சரியாக அழகான பெண் என்றதும் எனக்கு கால் செய்தது என்ற யோசனையோடே தீரனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவள் உள்ளத்தின் கேள்வியைப் படித்துவிட்டவன் புன்னகையுடன், “சிரிக்கு என் மனசைப் பத்தி தெரியும் தீராமா, இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்ப ரொம்ப அழகா தெரியறவ நீ மட்டும் தான்னு. அதான் கரெக்டா சொல்லிடுச்சு.” என்றான் கண்களில் காதல் மின்ன.

“டேய் ஆதா. இந்த டயலாக் பேசுனதுலாம் போதும். ஒழுங்கா எப்படி சிரி எனக்கு கால் பண்ணுச்சுனு சொல்லு”  என்றாள் குழம்பியபடி.

“நீ இன்னைக்கு ஈவினிங் காஃபி ஷாப் வந்தா தான் பதில் சொல்லுவேன். வில் சீ யூ இன் காஃபி ஷாப்” என்று சொல்லியவன் அவள் மறுத்துப் பேசும் முன்பு சிட்டாக பறந்துவிட்டான்.

அவளுக்கோ தலையைப் பிய்த்துக் கொள்ளும் நிலை. எப்படி சிரி சரியாக தனக்கு அழைத்தது என குழம்பியபடி யோசித்துக் கொண்டிருக்க சரியாக விமலிடமிருந்து அழைப்பு வந்தது.

எப்போது மிதுரா குழப்பத்தில் இருந்தாலும் சரியான நேரத்திற்கு அழைப்பவன் இப்போதும் சரியாக அழைத்திருந்தான்.

முகத்தில் மலர்ந்த புன்னகையோடு அந்த அழைப்பை ஏற்றவள் தன் சந்தேகத்தைக் கேட்க விமல் சொன்ன பதிலில் அவள் புருவங்கள் உயர்ந்தது.

“ஓ இதான் அந்த ட்ரிக்கா?” என அவள் கேட்க

“இது தான் அந்த ட்ரிக் மிதுமா.” என்று அவள் குழப்பத்தை தீர்த்து வைத்தான் அவன்.

💐💐💐💐💐💐💐

கஃபே காப்பி ஷாப்.

சுற்றி வீசிய குளம்பியின் வாசத்தை நாசியில் நிறைத்துக் கொண்டே பார்வையை அந்த கதவோரம் பதித்திருக்க அவன் செவிகளில் ஒலித்தது அந்த பாடல் வரிகள்

அவள் வருவாளா?
என் உடைந்துப் போன நெஞ்சை
ஒட்ட வைக்க அவள் வருவாளா?

இந்த வரிகளைக் கேட்டுத் திரும்பிய நேரம் சரியாக மிதுரா உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தாள். அவன் இதழ்களில் புன்னகை.

இது தான் டைம்மிங் போல!

“தீரா நான் இங்கே வந்ததுக்காக ரொம்ப சிரிக்காதே. இதை உன் கிட்டே சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்.” என்றவள் அவன் செய்ததுப் போலவே தன் அலைப்பேசியை எடுத்து “சிரி கால் த பர்சன் ஐ யம் கோயிங் டூ ப்ரேக் அப்” என்று சொல்ல சரியாக தீரனிற்கு அழைப்பு வந்தது.

தீரனின் விழிகள் திகைப்பில் தெறித்தது.

அவனது அதிர்வைக் கண்டு நகைத்தவள் தன் ஃபோனை அவனின் முன்பு நீட்டினாள்.

அதில் தீரனின் எண் “கால் த பர்சன் ஐ யம் கோயிங் டூ ப்ரேக் அப்” என்றிருந்தது.

ஆஹா! அப்படியானால் இவளுடைய எண்ணை “மோஸ்ட் ப்யூட்டிஃபுல் கேர்ல் சிட்டிங் நெக்ஸ்ட் ஆஃப்டர் மீ” என்று சேவ் செய்ததை கண்டுபிடித்துவிட்டாளா என  திருதிருத்தபடி பார்க்க அவளோ “ஆமாம் கண்டுபிடிச்சுட்டேன்” என்றாள் இவன் மனதைப் படித்தபடி.

“உன் கோக்குமாக்கு வேலை எல்லாம் கண்டுபிடிச்சுட்டேன். அடுத்து என்னை சமாதானப்படுத்த வேற ஏதாவது பெட்டர் ஐடியாவா கொண்டு வா. அப்புறம் வேணா மன்னிக்கிறது பத்தி கன்சிடர் பண்றேன்.  ஐ வான்ட் மோர் எமோஷன்” என்று அவனின் முன்பு முறைப்பாக சொல்லிவிட்டு திரும்பியவளின்  இதழ்களோ புன்னகையை அடக்க சிரமப்பட்டது.

இதை அறியாத தீரனோ முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு ஆறிப் போன காஃபி கப்பையே சோகமாக பார்த்துக் கொண்டிருக்க அவனது அலைப்பேசி சிணுங்கி அடங்கியது.

எடுத்துப் பார்க்க ராஜ்ஜிடமிருந்து குறுஞ்செய்தி.

“மச்சான் நான் சொன்ன ப்ளான் வொர்க் ஆச்சா?” என்று கேட்டிருக்க,

“ஊத்திக்கிச்சுடுடா” என்றான் இவன் சோகமாக

“டோன்ட் வொர்ரி மச்சான். ப்ளான் பி எக்ஸிக்யூட் பண்ணிடுவோம்” என ராஜ் சொல்ல தீரனின் முகத்தில் நம்பிக்கைசுடர் படர்ந்தது.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

அன்று  அந்த அலுவலக அறைக்குள் கடுகடுப்பாக நுழைந்தாள் மிதுரா.

பின்னே வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று வரச் சொன்னால் கோபம் வராதா பின்னே?

அதுவும் எல்லாரும் வராமல் குறிப்பிட்ட நான்கு பேரை மட்டும் வர சொன்னால் வெறுப்பாக இருக்காதா என்ன?

அந்த கடுப்புடன் அமர்ந்து இருந்தவளின் அருகே தீரன் வந்து அமர்ந்தான்.

அவனைத் திரும்பியும் பாராமல் கணினியில் கடுப்புடன் தட்டச்சு செய்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து தொண்டையை செருமினான்.

“சாரி என் கிட்டே விக்ஸ் மாத்திரை இல்லை.” என்றாள் கண்களை கணினித்திரையில் இருந்து விலக்காமல்.

“தீராமா என்னை கலாய்க்காதே. நான் பாவம் தானே.” என்றான் முகத்தை சிடுசிடுத்தபடி.

“மிஸ்டர் தீரன். ஆஃபிஸ்லே பர்சனல் விஷயங்களுக்கு இடமில்லைனு உங்களுக்கு தெரியாதா? ஒழுங்கா வேலையைப் பாருங்க” என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

“அது வீக் டேஸ்லே தான் பர்சனலுக்கு இடமில்லை மிதுமா. பட் வீக்-என்ட்ல அனுமதி உண்டே” என சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தவனின் முன்பு கோபமாக வந்து நின்றான் ராஜ்.

“தீரா, உன்னை காதல் பண்ண ஆஃபிஸ்க்கு வர சொல்லைல. ஏகப்பட்ட இஷ்யூ இருக்கு. ஒழுங்கா அதை க்ளியர் பண்ணு” என ராஜ் வாயசைக்க மிதுரா புன்னகையுடன் நிமிர்ந்தாள்.

“சபாஷ் ராஜ் அப்படி சொல்லுங்க, நல்லா அவன்  மூளைக்கு உரைக்கிறா மாதிரி இன்னும் சொல்லுங்க” என்ற மிதுராவைக் கண்டு தீரன் முறைக்க ,

“ஓய் இங்கே பேசிட்டு இருக்கும் போது அங்க என்ன லுக்கு” என தீரனின் கழுத்தைத் திருப்பியபடி சொன்ன ராஜ் “ஒழுங்கா வேலையைப் பாரு” என்றான் கண்டிப்பாக.

இவர்களது சம்பாஷனைகளைக் கண்டு அபி,சிற்பி, அதிதி பதற்றத்துடன் எழுந்து வந்தனர்.

“டேய் நீ என்னடா என்னை வேலை பார்க்க சொல்றது. நான் வேலைப் பார்க்க மாட்டேன்டா. என்ன பண்ணுவ?” என்று தீரன் நெஞ்சை நிமிர்த்திக் கேட்க “என் கிட்டேயே முடியாதுனு சொல்றீயா” என ராஜ், தீரனின் சட்டையைப் பிடித்தான்.

“மச்சான் இந்த சட்டையைப் பிடிக்கிற வேலை எல்லாம் என் கிட்டே வேண்டாம். அப்புறம் இந்த தீரனை நீ வேற மாதிரி பார்ப்ப” என்று இவனும் ராஜ்ஜின் சட்டையைப் பிடித்தான்.

“டேய் என் சட்டையிலேயே கை வைச்சுட்டியா?”
ராஜ் கேட்டபடி தீரனின் கன்னத்தில் தன் ஐவிரல்களை அழுத்தமாகப் பதித்தான்.

அதைக் கண்டு அபி,சிற்பி,அதிதி திகைத்து விழிக்க மிதுராவோ “அப்படி தான் ராஜ். இன்னும் பலமா இரண்டு அடி போடுங்க என் சார்பா” என்றாள் கைத்தட்டியபடி.

“ஓகே மிது” என்று சந்தோஷமாக சொன்ன
ராஜ் தீரனின் மறுகன்னத்தில் இன்னொரு அறை வைத்தான்.

தீரன் பரிதாபமாக முழிக்க மிதுராவோ அப்படியே தலையிலே கொட்டு ராஜ் என்றாள் சப்தமாக.

ராஜ்ஜும் அவளது வேண்டுதலை சிரித்தபடி நிறைவேற்ற தீரனோ ராஜ்ஜின் சட்டைக்காலரைப் பற்றி வெகு அருகில் இழுத்து கிசுகிசுத்தான்.

“மச்சான். நான் உன்னை அடிக்கிறா மாதிரி நடிக்க தானே சொன்னேன். இப்போ என்னடா நிஜமா அடிக்கிற. அதுவும் அவள் என்னை காப்பாத்த வராம நல்லா போட்டு அடிங்கனு சொல்லிட்டு ரெஸ்ட்லிங் மேட்ச் பார்த்துக்கிட்டு இருக்கா?” என்று தீரன் மெல்லிய குரலில் பரிதாபமாக கேட்க,

“மிது கேட்டு என்னாலே செய்யாம இருக்க முடியாது. அவள் என் நண்பி. நீ பதிலுக்கு என்னைப் போட்டு அடிடா. அப்போவாவது ஏதாவது எமோஷன் காட்டுறாளா பார்ப்போம்.” என்று யாரும் பார்க்காதவாறு வாயசைத்த ராஜ் மீண்டும் தீரனின் கன்னத்திலேயே ஒரு அடி வைத்தான்.

“என்னையே அடிக்கிறியா. உனக்கு இருக்குடா” என்ற தீரன் ராஜ்ஜைப் பிடித்துக் கொண்டு தரையில் உருளத் துவங்க

“கமான் தீரா அப்படி தான். இன்னும் நல்லா நாலு அறை கன்னத்துலேயே போடு” என இப்போது அதிதி கத்தினாள்.

“கமான் ராஜ். உங்களையே அடிச்சுட்டான். அவனை விடாதீங்க. அவனைப் போட்டு குமுறி எடுங்க” என மிதுரா இன்னொரு பக்கம் பெருங்குரலோடு சொன்னாள்.

இவர்கள் இருவரின் கத்தலைப் பார்த்து ‘ஙே’ என நின்றுக் கொண்டிருந்தனர் அபியும் சிற்பியும்.

கீழே உருண்டு புரண்டு கொண்டிருந்த ராஜ், அதிதியின் கத்தலைக் கேட்டவுடன் கோபமாக தீரனின் வயிற்றில் ஒரு குத்துவிட்டான்.

தீரனோ மிதுரா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு ராஜ்ஜின் முகத்தில் இன்னொரு குத்துவிட்டான்.

இவர்கள் இருவரும் மாறி மாறி அடித்துக் கொள்ள அதுவரை சிலையென சமைந்து நின்ற அபி, அந்த ரெஸ்ட்லிங் போட்டியின் ரெஃப்ரியாக நடுவில் நின்றுக் கொண்டு கையைக் காட்டி நிறுத்த முயன்றான்.

அதுவரை அடித்துக் கொண்டிருந்த தீரனும் ராஜ்ஜூம் ஒரு சேர அபியை கோபத்தில் எட்டி உதைக்க சிற்பிகா அவனை விழாமல் பிடித்துக் கொண்டாள்.

“சிற்பிமா என் உயிரைக் காப்பாத்திட்டேடா தங்கமே” என்றான் அவளது கைகளை இறுகப் பற்றியபடி.

தீரன் ராஜ்ஜின் காதுகளில் குசுகுசுப்பாக “மச்சான் இந்த அக்காளும் தங்கச்சியும் சேர்ந்துக்கிட்டு நம்மளை உண்மையாவே அடிச்சுக்க வைச்சுடுவாங்க போல. சண்டை போட்டது போதும் எழுந்துக்கலாம்” என்று சொல்ல ராஜ் முதலில் எழுந்து நின்று  தீரனை நோக்கி  கையை நீட்டினான். 

அவன் அந்த கைகளை இறுகப் பிடித்தபடி எழுந்து நின்றுவிட்டு ராஜ்ஜின் கசங்கிய சட்டையை சரி செய்ய ராஜ்ஜோ தீரனின் கசங்கிய சட்டையை சரி செய்தான்.

சிறிது நேரத்திற்கு முன்பு இவர்கள் அடித்துக் கொண்டார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாதபடி அப்படியொரு அன்னியோன்யம் இருவரது செயலிலும் விரவிக் கிடந்தது.

“சிற்பி, இதுக்கு முன்னாடி தானே பாட்ஷா – ஆன்டனி மாதிரி சண்டைப் போட்டுக்கிட்டாங்க. இப்போ ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் படத்துல வர விஜய் – சூர்யா மாதிரி இருக்காங்க. என்ன தான் நடக்குது இங்கே” என்று அபி குழம்பியபடி கேட்க மிதுராவோ சின்னசிரிப்போடு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் வெளியே செல்வதைப் பார்த்த தீரன் வேகமாக மிதுராவின் பின்னால் சென்று, பக்கத்தில் காலியாக இருந்த கான்ஃபரென்ஸ் அறையில் அவளைத் தள்ளிக் கொண்டு போனான்.

“தீரா இப்போ எதுக்கு என்னை இந்த ரூம்க்குள்ளே தள்ளிட்டு வந்தே. ஒழுங்கா வழியை விடு” என அவள் நகர முயல அவனோ அவளது முன்பு இரு கையை நீட்டித் தடுத்தான்.

“மிது, எதுக்காக ராஜ்ஜை என்னை அடிக்க சொன்னே?” என்றுக் கோபமாக கேட்க அவள் விழிகளை சுருக்கி ஒரு பார்வைப் பார்த்தாள்.

அதைப் பார்த்து தடுமாறியவன், “ஏன் அடிக்க சொன்னேனு கேட்டதுக்கு இப்படி சந்தேகமா குறுகுறுனு என்னையே பார்த்தா என்ன அர்த்தம்” என்றான் முகத்தை எங்கோ பார்த்தபடி.

“தீரா உனக்கு நடிக்க வராதுல. அப்புறம் ஏன் நடிக்க ட்ரை பண்ற. எனக்கு பச்சையா தெரிஞ்சது நீ தான் உன்னை அடிக்க சொல்லி ராஜ் கிட்டே சொன்னேன்றது”

“அவ்வளவு பச்சையாவா தெரிஞ்சது” என்றான் அசட்டு சிரிப்பு சிரித்தபடி.

“என்ன ஆனாலும் உன் நண்பனை விட்டுக் கொடுக்காத நீ, இந்த சின்ன விஷயத்துக்காக சண்டை போடுறதை எப்படி என்னாலே நம்ப முடியும். அதான் ராஜ் கிட்டே நல்லா நாலு போட சொன்னேன்” என்றாள் சிரித்தபடி.

“மிது, என்னையும் என் நட்பையும் புரிஞ்சுக்கிட்ட  நீ என் லைஃப் பார்ட்னரா வரதுக்கு நான் எவ்வளவு கொடுத்து வெச்சு இருக்கனும் தெரியுமா” என்றான் அவளை தன்னருகில் இழுத்தபடி.

“ஹலோ ஹலோ எனக்கு உன் மேலே இருக்கிற கோபம் இன்னும் போகல. அப்புறம் எப்படி லைஃப் பார்ட்னர் ஆக முடியும். நம்ம தான் எப்பவோ ப்ரேக் அப் பண்ணியாச்சே” என்றாள் அவனைத் தள்ளிவிட்டபடி.

சட்டென அவளது கைகளைப் பிடித்தவன் அங்கே இருந்த பிரதிபலிக்கும் கண்ணாடி சுவரருகே கொண்டு சென்று நிறுத்தி பின்னால் இருந்து இறுக்கி அணைத்தவாறே மெதுவாக அவளது காதுமடலைத் தீண்ட அவளது உடல் முழுக்க சட்டென வெட்க நதி பாய்ந்தது.

“தீராமா” என்று மென்மையாக ஒலித்த அவன் குரலைக் கேட்டு “ஹ்ஹ்ம்ம்” என ஈனஸ்வரத்தில் முனங்கியது அவள் உதடு.

“நீ என்னோட லைஃப் பார்ட்னர் இல்லையா?” என்றுக் கேட்டபடி அவளது கழுத்தை வருடினான். இதுவரை கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த சின்ன சின்ன பூனை முடிகள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றன.

அந்த சிலிர்ப்பை ரசனையாய்ப் பார்த்தவன் வேகமாக அவளைத் தன் பக்கம் திருப்பினான்.

இருவரி ஹைக்கூ கவிதையாய் இருந்தது அவளது உதடுகள். செவ்வரியோடிய இதழ்களைப் பார்த்ததும் படிக்கத் தூண்டியது மனது.

சித்தாரின் கம்பியாக அவனது விரல்கள் மெல்ல அவள் இதழை மீட்டிப் பார்க்க அதில் இருந்து காதலின் ஸ்வரங்கள் கசிந்தது.

அவள் முகமெங்கும் குங்குமத்தைக் கொட்டியதைப் போன்ற சிவப்பு.

அவளது நாணத்திலும் முகச்சிவப்பிலும் தீரன் மெல்ல மெல்ல தன்னை இழக்கத் துவங்கியிருந்தான்.

இருவருக்கிடையே இருந்த அந்த மெல்லிய தூரத்தை தன் இதழ்களால் கடக்க நினைத்தவன் மெல்ல அவளை நெருங்கியவாறே “இவ்வளவு காதலை கண்ணுலே வெச்சுக்கிட்டு ப்ரேக்-அப் பண்ணிக்கலாம்னு இனி சொல்லுவியாடி” எனக் கேட்டபடி அவள் இதழ்களை தன் உதடுகளால் சிறைப்பிடிக்க முனைந்த நேரம் அவன் நாசியில் விழுந்து உடைந்தது அவள் கண்ணீர்.

மின்னல் தாக்கிய மரமாய் சட்டென்று அவனது உணர்வுகள் எல்லாம் ஒரே நொடியில் கருகிப் போக ஸ்தம்பித்து நின்றவனின் சட்டைக் காலரை மிதுரா அழுகையோடு பிடித்து இழுத்தாள்.

“அப்புறம் ஏன்டா நீ அவ்வளவு காதலை   வெச்சுக்கிட்டு என் கிட்டே ப்ரேக்-அப் சொன்னே? என்னை ஈசியா உன்னாலே தூக்கிப் போட முடிஞ்சுடுச்சுல” என மிதுரா கேட்க தீரனின் முகத்தில் கண்ணீர் கோடாய் வழிந்தது.

அவனிடம் பதில் மொழி இல்லை.

கண்ணீரை துடைத்தபடி செல்லும் மிதுராவையே தடுக்க வார்த்தைகளின்றி மௌனமாய் வெறித்தான்.

அதன் பின்பு வீடு வந்து சேரும் வரை இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்த மிதுராவிற்கு தன்னை நினைத்தே கோபமாக வந்தது. அவளுக்கு தீரனின் மீதிருந்த கோபம் போய்விட்டது தான். ஆனால் ஆறாமல் இருக்கும் இந்த வருத்தத்தைத் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.

காதலோடு நெருங்கியவனை கண்ணீரோடு நிற்க வைத்துவிட்டோமே என மனது தவித்துக் கொண்டிருந்த நேரம்
அவளின் விழிகளில் விழுந்தது அந்த பாக்கெட் சைஸ் ரேடியோ.

எப்போதும் சோகமாய் இருக்கும் போது ஆதனின் தோளில் சாய்பவள் இன்றும் சாய விரும்பினாள்.

ஆனால் ஒலியாக அல்ல. ஒளியாக!

தனது அலைப்பேசியை எடுத்தவள் “ஐ வான்ட் டூ மீட் யூ” என்று  குறுஞ்செய்தி அனுப்பிய அடுத்த நொடியே, “பீச் ஓகே வா” என்ற கேள்வி உட்பெட்டியில் விழுந்தது.

ஓகே என்று பதில் அனுப்பியவள் நேராக அந்த கடற்கரையில் வந்து நின்றாள்.

உயர்ந்து தாழ்ந்து அடங்கி கொண்டிருந்தது அலை முத்துகள். இப்படி தானே வாழ்க்கையும் உயர்ந்து தாழ்ந்து அடங்கி கொண்டிருக்கிறது என பெருமூச்சுவிட்ட நேரம் அவளின் முன்பு தீரன் வந்து நின்றான்.

ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தவர்களின் இடையே புகுந்து ஒளிர்ந்தது சந்திரனின் கிரணத்தூறல்கள்.

இருவரிடையே வீசிய அந்த மௌனப்புயலை கரை கடக்க செய்தது மிதுராவின் வார்த்தை.

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் இப்போ என் ஆதன் கூட பேசணும். அவனோட தோளிலே சாஞ்சுக்கனும்.” என்று சொன்னவள் அவனது தோளை சுட்டிக் காட்டி “சாஞ்சுக்கவா?” என்றுக் கேட்டாள்.

அடுத்த நொடியே தனது தோள்களில் சட்டென்று அவளை தாங்கிக் கொண்டான் ஆதன்.

இருவரது கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அதை துடைத்தபடியே எதிரே இருந்த கடற்கரையை வெறித்தனர்.

“உன்னை அந்த தீரன் ரொம்ப கஷ்டப்படுத்தேறான்ல மிதுரா” என ஆதன் கசந்த புன்னகையோடு கேட்டான்.

“ஒரு சின்ன மெயில் எங்க வாழ்க்கையை புரட்டிப் போட்டுடுச்சு ஆதா. தீரன் மேலே இருந்த கோவம் கொஞ்சம் கொஞ்சமா போயிடுச்சு. ஆனால் என்னை ஈஸியா வேண்டாம்னு சொல்லிட்டானேன்ற வருத்தம் மட்டும் என் மனசை குத்திக்கிட்டே இருக்கு . நான் அவனுக்கு முக்கியமில்லாதவளா போயிட்டேன்னு நினைக்கும் போதுலாம் கஷ்டமா இருக்கு. என்னாலே அவனை மன்னிக்க முடியல” என மிதுரா சொல்ல ஆதன் அவளது கைகளை தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டான்.

“மிது இந்த தீரன் பையன் இருக்கான்ல அவன் நட்புக்காக உயிரையும் கொடுக்கிறவன். அவனுக்கு காதல்  முக்கியமா தெரியாது. அதோட அருமை புரியாது. அதனாலே அவனை நீ மன்னிக்காதே. காதலிக்காதே” என்ற ஆதனின் வார்த்தைகள் மிதுராவுக்குள் திகைப்பை ஏற்படுத்தியது.

“அப்போ நான் தீரனை காதலிக்க வேண்டாம்னு சொல்றியா ஆதா?” என்று அதிர்வுடன் கேட்டவளின் நெற்றியில் இதமாக முத்தமிட்டவாறே ஆமாம் என்று தலையசைத்தான்.

“உன்னை அளவுக்கு அதிகமா காதலிச்சது தீரன் இல்லை, கார்த்திக் தான். உன்னையும் உன் கவிதையையும் அதிகமா ரசிச்சவன் கார்த்திக். எங்கே காதலிச்சுடுவோமோனு பயந்து பயந்தே காதலிலே விழுந்தவன் அவன்.
உனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு யோசிச்சு மனசுக்குள்ளே மருகுனவன் அவன் தான்.
அதனாலே அந்த தீரனை ப்ரேக்-அப் பண்ணிட்டு கார்த்திக்கை லவ் பண்ணு” என்ற ஆதனின் வார்த்தைகள் மிதுராவின் மனதினில் அதுவரை வீசிக் கொண்டிருந்த வருத்தப் புயலை வலுவிழக்க செய்தது.

புன்னகையோடு ஆதனை இறுக அணைத்து கொண்டாள்.

“ஆமாம் இப்போ நீ கட்டிப்பிடிக்கிறது ஆதனையா,தீரனையா இல்லை கார்த்திக்கையா?” என்றுக் கேட்டான் குறும்பாக.

“சந்தோஷத்திலேயும் வருத்தத்திலேயும் என் ஆதனோட தோளிலே தான் எப்பவும் சாய்வேன்” என்றவளின் பதிலுக்கு “ஓ” என்றான் உதடு குவித்து.

“மிஸ்டர். ஆதன் இப்போ நீங்க போயிட்டு தீரனை வர சொல்லுங்க. அவன் கிட்டே பேசணும்.” என அவள்  சொல்ல ஆதனோ நீர்ப்பட்ட கோழியாய் உடம்பை சிலுப்பி நிமர்ந்தான்.

இப்போதோ எதிரில் தீரன்.

மிதுரா தீரனைப் பார்த்ததும் கோபமாய் முறைத்தாள்.

“டேய் தீரா. இனி உனக்கும் எனக்கும் ஒன்னுமில்லை. ப்ரேக்-அப் பண்ணிக்கலாம்” என மிதுரா சொல்ல இருதய நோயாளியைப் போல நெஞ்சைப் பிடித்துக் கொண்டான் தீரன்.

“போதும் போதும் ஆக்டிங் கொடுத்தது. நீ போயிட்டு என் கார்த்திக்கை அனுப்பு” என அவள் சொல்ல தீரன் மீண்டும் உடம்பை சிலுப்பிக் கொண்டு நிமிர்ந்தான்.

இப்போது எதிரே கார்த்திக்.

மிதுராவை காதலாகப் பார்த்தவன்  “மிதுமா. நாம மறுபடியும் முதலிலே இருந்து காதலிக்கலாமா?” என கண்களில் காதலைத் தேக்கியபடி கேட்க சட்டென்று மிதுரா அவனது கன்னத்தில் தன் இதழைப் பதித்தாள்.

முதலில் ஆனந்த அதிர்வுக்குள் சிக்கி கொண்டவன் அடுத்த நொடியே அவளது இதழை சிறைப்பிடித்திருக்க காதல் மழைச்சாரல் அவர்களின் மீது மெல்ல வீச துவங்கியது.

காதல் தீண்டியதோ!