Kandeepanin Kanavu-13

WhatsApp Image 2020-07-22 at 9.05.41 AM

                காண்டீபனின் கனவு 13

அந்த ராட்ஷசனின் படத்தைக் கண்டு அவர்கள் திகைத்ததை விட, தமிழில் எழுதி இருந்தது இன்னும் வியப்பளித்தது.

“என்ன வீர் இது!?” சாம் அந்தப் படத்தின் அருகில் வந்தாள்.

“ஹே தொடாத…!” வருண் அவளை எச்சரித்தான்.

“நான் தொடல..இங்க தமிழ் ல எழுதிருக்கு? அத விட முக்கியம் இப்போ வீர் இத தொட்டுட்டானே! உனக்கு எதாவது ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு வீரா..!” தன்னிச்சையாக அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவளின் பயம் உணர்ந்தவன், “ ச்ச …இதுக்கு போய் ஏன் பயப்படற. இது பழைய காலத்துல எழுதி வெச்சுட்டுப் போயிருக்காங்க. இப்போ போய் இத நம்பலாமா..லூசு” அவளது தோளைத் தொட்டு ஆறுதல் கூறினான்.

“வீரா? அப்போ கேட்டப்ப உன்னோட கனவ பத்தி நீ சொல்லல. நேத்து உன் கனவுல இந்த படம் வந்துச்சா?” வருண் நீண்ட நேரமாக கேட்க நினைத்ததை இதை சாக்காக வைத்துக் கேட்டான்.

“இல்ல.. இது நான் கனவுல கூட பார்க்காத ஒன்னு.” மீண்டும் கனவைக் கூறாமல், அந்த ராட்ஷசன் படத்தை கேமெராவில் பதிவு செய்து கொண்டான் வீரா.

“அப்படி என்ன தான் கனவுன்னு சொல்லேன். முன்னாடியே கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கலாமில்ல” சாமும் சேர்ந்து அவனைத் துளைத்து எடுக்க,

“பெருசா ஒண்ணுமில்ல. ஆக்சுவலி என்ன கனவுன்னு ஞாபகமில்ல. ஆனா கண்டிப்பா இது மாதிரி எதுவும் வரல.” சமாளித்து விட்டான்.

“சரி அத விடுங்க. இப்போ நெக்ஸ்ட் நாம என்ன பண்ணலாம். இந்த இடம் தான் எண்டா (end)? இதுக்கு அப்பறம் எதுவும் இருக்கற மாதிரி தெரியல.” அந்த இடத்தை சுற்றி வலம் வந்தான்.

அவன் பின்னோடு மற்றவர்களும் செல்ல,

“எனக்கு இங்க வேற ஏதோ ஒன்னு இருக்குன்னு தோணுது வீர்.” வருண் கூறினான்.

“ம்ம்ம் லெட்ஸ் சீ!” என அடுத்த அடி எடுத்து வைக்க, ஏதோ ஒன்று மினுமினுத்தது. சூரிய ஒளி அந்த பாதி வரைந்த மனிதன் ஓவியத்தின் மேல் விழுந்தது.

ஆங்காங்கே தங்கக் கோடுகள் அந்த ஓவியத்தில் கலந்திருப்பது தெரிய, அங்கே ஓடிச்சென்று அந்தப் படத்தைப் பார்த்தனர்.

“இந்த ஒளி இங்க கரெக்டா படுத்துன்னா, இங்க ஏதோ ஒன்னு இருக்கணும்.” வீரா யோசித்தான்.

“பாதி வரஞ்ச படத்துல என்ன இருக்கு?” சாம் அலட்ச்சியமாக சொல்ல,

“சரி அப்போ மீதிய நாம வரைஞ்சு வைப்போம்.” விளையாட்டாக தன் கைகளாலே மீதி மனித உருவத்தை வரைந்தான் வீரா.

வரைந்த பின் எதாவது நடக்குமோ என எதிர்ப்பார்த்தனர். ஆனால் ஒன்றும் ஆகவில்லை.

“சீ நத்திங்… டைம் வேஸ்ட். சரி வாங்க போலாம்.” சம்ரக்ஷா சிரிக்க,

தாமதமாக ஒன்று நடந்தது. இப்போது சூரிய ஒளி மனிதன் ஓவியத்திலிருந்து அரைவட்டம் மீது விழுந்தது.

“இங்க பாறேன். இப்போ சன் லைட் அந்த படத்துக்கு போய்டுச்சு. ஒரு வேளை அதையும் வரைய சொல்லுதோ??” வருண் சொல்ல,

“சரி வரைஞ்சு தான் பாப்போமே! அடுத்து தாமரை வரைய சொல்லுதான்னு.” வீரா விடாமல் சென்று அதையும் வரைந்தான். இப்போது அது ஒரு சக்கரம் போல ஆனது.

“இதப் பார்த்தா கிருஷ்ணர் கைல வெச்சிருப்பாரே சக்கரம், அது மாதிரி இருக்கு.” வருண் அசால்ட்டாகக் கூற,

“சக்கரம்..!!.சக்கரவானா!?” வீர் யோசித்தபடி முணுமுணுத்தான்.

“என்ன சொன்ன.. வீர்..?” வருண் அருகில் வந்து சந்தேகத்துடன் கேட்க,

“சக்கராவானா.. எங்க தாத்தா இந்த பேர எப்பயோ சொல்லி நான் கேட்டிருக்கேன்.” என்றான்.

“ஒ… நானும் இப்படி ஒரு பேர் கேள்விப் பட்டிருக்கேன். எனக்கும் சரியா தெரில.” வருணும் யோசித்தான்.

“இப்போ இந்த மனுஷனுக்கும் இந்த சக்கரத்துக்கும் என்ன சம்மந்தம்?” சாம் விஷயத்திற்கு வந்தாள்.

“அது தெரிஞ்சா ஏன் இப்படி முழிக்கப் போறோம். அடுத்து என்னனு ஒண்ணுமே புரியல. தலைய பிச்சுக்கலாம் போல இருக்கு. இதெல்லாம் ஒரு க்ளூவா?” வீரா அலுத்துக்கொண்டான்.

அப்போது மீண்டும் சூரிய ஒளியால் அந்த சக்கரம் முழுதும் இப்போது ஒளிர்ந்தது.

“ஹே..அங்க பாரு” வருண் கைகாட்ட,

முன்னை விட சக்கரம் பிரகாசமாக ஒளிர ஆரம்பித்தது. அந்த ஒளி ஒரு குவியலாக மாறி பாதி தாமரைப் படத்தின் மீது விழுந்தது. இப்போது யாரும் வரையாமலே மீதி தாமரை தானே வெளிப்பட,

தாமரையின் மீது பட்ட ஒளி மீண்டும் மனிதன் படத்தில் விழுந்தது. மூன்றும் இப்போது ஒரு முக்கோணம் போல ஒளியை அந்த இடத்தில் படரச் செய்தது.

மூவரும் திகைத்து சுற்றி சுற்றிப் பார்க்க, இவர்கள் அந்த முக்கோணத்தின் நடுவில் இருந்தனர்.

“வாங்க இந்த ஒளிக்கு மத்தில நாம நிக்க வேணாம். தேவையில்லாத கதிர்கள் நம்ம மேல பட வாய்ப்பிருக்கு.”சொல்லிக் கொண்டே வருண் முதலில் அதைவிட்டு ஒதுங்கி நிற்க, அடுத்து சாம் வெளியே வர, வீரா மட்டும் அதை கவனிக்காமல் அந்த ராட்ஷசன் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“வீரா வா..சீக்கிரம்” சாம் அலற,

அதைக் கேட்டு அவன் வெளியே வருவதற்குள் அந்த ஒளிக் குவியல் நேராக அவன் நெஞ்சில் வந்து படர்ந்தது.

உடல் சிலிர்த்து வீரா நிற்க,

“வீரா..வா டா…”, சாம் அவன் மேல் ஒளி படர்வைத் கண்டு, அவனை அதிலிருந்து இழுக்க ஓட எத்தனிக்க, அவளைப் பிடித்து நிறுத்தினான் வருண்.

“இங்கயே இரு. உனக்கும் எதாவது ஆகிட போகுது. வீரா வ நான் கூட்டிட்டு வரேன்.” அவளை நிறுத்தி தான் முன்னேற,

“வீ..ரா…!!” சாம் கண்களில் கண்ணீர்.

அதற்குள் அந்த ஒளி அவனது நெஞ்சிற்குள் புகுந்து வீராவை சற்று தளர்த்தி விட்டது. சட்டென வருண் புகுந்து அவனை அந்த முக்கோனத்திலிருந்து வெளியே கொண்டு வந்தான்.

வெளியே வந்தவன் கீழே மயக்கம் வந்து விழ,

“வீரா… என்ன டா ஆச்சு..இங்க பாரு டா..” சாம் அவனை மடியில் கிடத்திக் கொண்டாள்.

“தண்ணீ..!” என மூச்சு வாங்க கையில் சைகை செய்தான் வீரா.

உடனே தன் பையிலிருந்த பாட்டிலை எடுத்தாள். வீராவின் கண்கள் சொருகுவதைக் கண்டதும் சம்ரக்க்ஷாவின் கண்களில் தாரையாக நீர்ப் பெருகியது.

அவள் செய்வதறியாது இருப்பதைக் கண்டதும், வருண் உடனே நீரை அவளிடமிருந்து பிடுங்கி, வீராவின் முகத்தில் தெளித்து, அவன் வாயைத் திறந்து நீரை சிறிது ஊற்ற, பின் மட மடவென் நீரைக் குடித்தான் வீரா.

“வீர், இப்போ எப்படி இருக்கு?” வருண் அவனது கன்னத்தைத் தட்டினான்.

முகத்தை ஒரு கையால் துடைத்த படி வீரா எழுந்து அமர,

“நத்திங்.. ஐ அம் ஃபைன்.” என்றான்.

இப்போது அந்த முக்கோண ஒளியும் மறைந்து வீரா வரைந்த படத்தின் பாகங்களும் மறைந்துவிட்டிருந்தது.

மூவரும் அதிர்ந்து போயினர்.

“இங்க நம்மளையும் மீறி ஒரு சக்தி இருக்கு. என்னால அத உணர முடியுது.” வீரா உறுதியாகக் கூறினான்.

அந்த ராட்ஷசன் படம் மட்டும் அப்படியே இருந்தது. வீராவிற்கு மட்டும் அந்தப் படத்தின் கண்கள் முன்னால் மூடி இருந்து இப்போது திறந்து கொண்டது போலத் தோன்ற, எழுந்து சென்று மீண்டும் அதைத் தொட சென்றான்.

“வீரா.. போதும் வா இங்கிருந்து போய்டலாம். எனக்கு பயமா இருக்கு.” கலங்கிய கண்களுடன் சாம் நிற்பதை இப்போது தான் அவன் கண்டான்.

பதறி அவள் அருகில் ஓடி வந்து,

“என்ன மா? ஏன் அழற? இப்போ என்ன ஆச்சு?” அவளது கண்ணீரைத் துடைத்துக் கேட்க,

“ஒரு நிமிஷம் உனக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு நான் பயந்துட்டேன். நீ கண்ண திறக்கற வரைக்கும் எனக்கு ஒண்ணுமே ஓடல..போடா!” உரிமையோடு அவனை அடித்து மீண்டும் கண்ணீர் விட,

“சரி சரி… ஈசி… ஒண்ணுமில்ல. நான் நல்லா தான் இருக்கேன். கவலைப் படாத..” அவளை தன் மேல் சாய்த்து சமாதனம் சொன்னான். அவளது முதுகை வருடி தேற்றினான்.

“இங்கிருந்து போலாம்..இப்போவே!” அவள் அடம் பிடிக்க,

“சாம், நாம சும்மா சுத்திப் பார்க்க வரல. அஃபீஷியலா வந்திருக்கோம். அப்படி எல்லாம் சட்டுன்னு கிளம்ப முடியாது. நான் இருக்கறப்ப நீ பயப்பட வேண்டியதே இல்ல.”

இவர்களின் இந்த சம்பாஷனைகளை வருண் பார்த்துக் கொண்டு, அவர்கள் காதல் மெல்ல மெல்ல வெளி வருவதை ரசித்துக் கொண்டிருந்தான்.

“ஆமா, அடுத்து என்னன்னு தெரியாம இங்க நின்னு என்ன பண்ணப் போறோம்.” எதிர் கேள்வி கேட்டாள்.

“இவ்வளவு நேரம் இதெல்லாம் கண்டு பிடிச்சோம் இல்ல. சோ இன்னும் கொஞ்ச நேரம் இருந்து தேடிப் பார்ப்போம். வா பேசாம.” பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது இதயத்திற்கு மேல் சிறு வலி உண்டாகியது. அவன் தடவிக் கொள்ள,

“வலிக்குதா வீரா?” அருகில் வந்தான் வருண்.

சம்ரக்க்ஷாவை அருகில் வைத்துக் கொண்டு அவன் தன் வலியை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

“இல்ல இல்ல. அந்த ரேஸ் பட்டதுல கொஞ்சம் மயக்கம் வந்துச்சு அவ்வளோ தான். வலி எல்லாம் இல்ல.” என மீண்டும் தேடலைத் துவங்க, அந்த ராட்ஷசன் அருகில் சென்றான்.

“முதல்ல இந்தப் படத்துக்கு கண் இருந்துச்சா? எனக்கு இப்போ தான் வந்தா மாதிரி தோணுது.” வீரா கேட்க,

“எனக்கு முன்னாடியே இருந்த மாதிரி தான் இருக்கு வீரா.” வருணும் அருகில் வர, இருவரும் அந்த படத்தின் முன் நின்றனர்.

இருவரின் உடல் எடையோ அல்லது வேறு எதுவோ இப்போது அந்த படம் வரையைப் பட்ட சுவர் லேசாகப் பெயர்ந்து வருவது போல விரிசல் விட்டது.

“ஐயோ இது பழைய கல் சுவர், அதுனால விரிசல் வருது போல.” வருண் சற்று தள்ளி நின்றான்.

வீரா துணிந்து அந்தச் சுவரை தொட, இப்போது அது அழுந்தி உள்ளே சென்றது.. ஒரு கதவு போல.

“ஹே இது ஏதோ ஒரு கதவு போலிருக்கு.” வருண்  ஆர்வமாக அந்த சுவரை மேலும் அழுத்தினான். அவன் தொட்டதும் அது அசையவில்லை.

வீராவும் சேர்ந்து அதைத் தள்ள, அந்தக் கற்சுவர் உள்ளே சென்றது.

கதவு போல, ஒரு துவாரத்தை காட்ட, உள்ளே இருட்டாக இருந்தது.

சாம் கண்கள் விரிய வீராவின் பின் நின்று அதைப் பார்த்தாள்.

“என்ன இவ்வளோ இருட்டா இருக்கு.உள்ள போகனுமா?” சாம் தயங்க,

“கண்டிப்பா.. நீ வேணும்னா இங்கயே இருக்கியா? நாங்க போயிட்டு வரோம்.” வீரா கூற,

“ஐயையோ.. இங்க தனியாவா… நான் மாட்டேன். உங்கூடவே வரேன்.” என்றதும்,

கலகலவென சிரித்தான் வருண்.

“உன்ன டெர்ரர் பீசுன்னு நெனச்சேன். என்ன இப்படி சொல்லிட்ட..” நக்கலடித்தான் வருண்.

“அவளுக்கு பில்டிங் ஸ்ட்ராங்…பேஸ்மென்ட் வீக்..” வீராவும் சேர்ந்து கொண்டான்.

“ஆமா..நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் ஹீரோ..நடங்க டா..” பேச்சுவாக்கில் வருணையும் டா என்று சொல்லிவிட்டி நாக்கைக் கடிக்க,

“பேச்சுவாக்குல அண்ணன வா டா போடான்னு ஏதும் சொன்னியா…!” வீர் போட்டுக் கொடுக்க,

“சாரி வருண். இவன சொல்லப் போய் அப்படியே வந்துடுச்சு..” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

“ம்ம்ம் பரவால்ல.. நான் சீரியஸா எடுத்துக்கல..”

மூவரும் உள்ளே செல்ல, வருண் அப்போது சேமித்த தனது ஹெட் லைட்டை ஆன் செய்து பார்த்தான்.

அது எரிய, மூவரும் உள்ளே சென்றனர். பத்தடி தூரத்தில் ஒரு பாதாள இடம். கற்களால் படிக்கட்டு அமைந்திருக்க மெல்ல இறங்கினர். 

முப்பது படிக்கட்டுக்கள் இறங்கியதும் தரை வந்தது.

மேலே இருந்தது போன்ற பெரிய இடமாகத் தெரிய, சுற்றிலும் வரிசையாக ஆறடி நீள பொந்து. அதில் வரிசையாக சாத்தி வைக்கப் பட்ட பிணங்கள்.. துணிகளில் சுற்றப் பட்டு இருந்தது.

“மம்மீஸ்” வருண் சொல்ல,

அவனது ஹெட் லைட் வெளிச்சத்தில் அதைக் கண்ட சாம், வீராவின் முதுகோடு சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டு அவனைக் கட்டிக் கொண்டாள்.

வீர் முதல் முதலாக அவளது ஸ்பரிசத்தை வேறு விதமாக உணர்ந்தான். பெண்மையின் மென்மை அவன் மனதை கலைத்தது.

அவளது கைகள் அவன் மார்பைத் தழுவியது. அவளது கையைப் பிடித்து அழுத்தியவன், இது சஞ்சலப் படும் நேரமல்ல என்பதை உணர்ந்தான்.

“என் கைய புடிச்சுட்டு வா” என கை கோர்த்து அழைத்துச் சென்றான்.

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட மம்மீக்கள் அங்கே இருந்தன. இறந்தவர்களை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி அவர்களை அங்கே நிற்க வைத்திருந்தனர்.

ஹெட் லைட்டின் உதவியால் இவற்றை பார்த்துக் கொண்டே வர, அங்கே மையத்தில் ஒரு பெரிய முனிவரின் சிலை நடுநாயகமாக தவக்கோலத்தில் வீற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!