Kandeepanin Kanavu – 26

Kandeepanin Kanavu – 26

                     காண்டீபனின் கனவு 26

 

கோடங்கி கிளம்பிச் சென்ற பிறகு, சக்ரவானா தன் தவத்தைத் தொடர்ந்தான். யாகம் வளர்த்து தன் தந்தையாகிய அர்ஜுனனின் ஆசையை நிறைவேற்ற போராடிக் கொண்டிருந்தான்.

அவன் விழுங்கிய நெருப்பு அவன் ஆயுளை அதிகப் படுத்தியது. கோடங்கி சொன்ன படி அவன் முறையாக அனைத்தையும் செய்தான். தன்னுடைய சந்ததிகள் இறந்த பிறகு அவர்களின் உடலைப் பதப்படுத்தி அதன் சக்தியையும் சேர்த்து வைத்தான்.

நூறுவது ஆளை எடுத்து வரும் தருணமும் வர, கிளம்பிச் சென்றான். அவனுடைய அடுத்த தலைமுறைகளை அழைத்து மீண்டும் ஒரு முறை தங்களின் வரலாற்றைக் கூறினான்.

அப்போது இருந்தவன் பெயரும் காண்டீபன் தான். அவனை அழைத்தான்.

“மகனே! நீ நம்முடைய வம்சத்தை இங்கிருந்து வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறாய். அதனால் உன் தலை மீது இந்தப் பொறுப்பை சுமத்துகிறேன்.” என்று கூறி தன்னிடம் இருந்த நீலக் கல்லை அவனிடம் ஒப்படைத்தான்.

“இதை வைத்து நான் என்ன செய்ய வேண்டும்?” கேள்வி எழுப்பினான்.

“இதை நீ, உனக்குப் பிறகு உனது மகன் , அவனுக்குப் பிறகு அவனது மகன் என வழி வழியாக வைத்து ஒவ்வொரு ஏகாதசிக்கும் பூஜை செய்யவேண்டும்.

அப்படி நள்ளிரவு வரை பூஜையில் லயித்து அர்ச்சனை செய்த பின் இந்தக் கல் நான் விழுங்கிய நெருப்பினால் சூடேறும். அப்படி அதும் சுடும் பொழுது என்னுடைய ஆவி அதில் இருப்பதாக அர்த்தம்.

கல்லின் சூட்டைத் தணிக்க, அதை ஒரு குளத்தில் போட்டு விடு.

இதற்காகவே தனியாக உன் அரண்மனைக்குப் பின் ஒரு குளம் வெட்டு. அந்தக் குளம் நம்முடைய கோடாங்கியின் மந்திரத்தால் மறைந்து இருக்கும். ஏகாதசிப் பொழுது அந்தக் கல்லின் சூட்டைத் தனிக்கும் பொருட்டு அந்தக் குளம் வெளியே வரும்.

இந்த ரகசியம் நம் குடும்பத்தைத் தவிற வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது. அப்படித் தெரிந்து அவர்கள் இதை தேடி வந்தால் அவர்களின் உயிர் போய்விடும்.

நம்முடைய குலதெய்வமான காண்டீப வில்லை அடையும் சக்தி இதில் தான் உள்ளது. காண்டீப வில்லை எப்போது தன் தந்தை அர்ஜுனன் அடைகிறாரோ அது வரை இந்த நீலக் கல் பூஜை நடக்க வேண்டும்.

ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்தினால் அது தடை பட்டால், நம் குடும்பத்தை சாபம் பீடிக்கும். அத்துடன் நமது தலைமுறையே அழிந்து விடும். அர்ஜுனன் தலை முறை அப்படி நாசமாக நாம் காரணமாக இருக்கக் கூடாது மகனே. இது தான் என் இறுதிப் பிரயானம். இதற்குப் பிறகு நான் அந்தக் குகையில் கல்லாக சமைந்து விடுவேன். அந்தக் குகையின் வாசலில் வேற்று மனிதர்கள் யாரும் காலை வைக்க முடியாது.

அப்படி ஒரு மந்திரக் கட்டு செய்திருக்கிறேன். அர்ஜுனன் என்று பிறவி எடுத்து வருகிறாரோ அன்று தான் அந்தக் குகை திறக்கும். அது எத்தனை யுகமானாலும் நான் அங்கேயே காத்திருப்பேன். வருகிறேன். நீலக் கல் பத்திரம்.” என்றவர் தன்னுடைய நூறாவது சந்ததியின் பிணத்தை எடுத்துச் சென்றார்.

அவர் கூறிய படி தலைமுறை தலைமுறையாக இன்று வரை அந்த நீலக் கல் பூஜை நடக்கிறது.

கதை முழுவதையும் கூறி முடித்தான் வருண்.

அத்தனை நேரம் ஒரு மாய வலைக்குள் சிக்கி இருந்தது போன்ற உணர்விலிருந்து வெளியே வந்தான் வீர்.

அதே நேரம் தொங்கிக் கொண்டிருந்த சம்ரக்க்ஷா நீரில் குதித்தாள். வீர் இருக்கும் இடத்தை தேடி அலைய அவளுக்கு அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.

நீருக்கு வெளியே வந்து “வீரா…! வீரா!” கத்தத் தொடங்கினாள்.

அவளது சத்தம் பாதாளத்தில் இருக்கும் வருணுக்கும் வீராவிற்கும் நன்றாகக் கேட்டது.

“மொதல்ல என்னை இங்கிருந்து எப்படி போகணும்னு சொல்லு , சாம்-அ மொதல்ல காப்பாத்தணும். அவ இப்போ தண்ணீல இருந்து தான் கத்தரா.” வீரா பதறினான்.

“நீ இங்கயே இருந்து அந்த காண்டீப வில் எங்க இருக்குன்னு தேடு. நான் அவள கூட்டிட்டு வரேன்.” வருண் வாக்களித்துச் சென்றான். வீரா பதிலளிக்கக் கூட நேரம் கொடுக்காமல் கிளம்பிச் சென்றான்.

வீரா வேறு வழியின்றி அங்கு எங்கே அந்த காண்டீப வில் இருக்கும் என்று தேட ஆரம்பித்தான். அது ஒரு வெற்றிடமாகத் தான் தோன்றியது. ஆனாலும் இது வரை வருண் கூறிய அனைத்துக் கதையும் அவனுக்கு உண்மை தான் என்று பட்டாலும், தான் அந்த வம்சத்தில் வந்திருந்தாலும் , தான் அர்ஜுனன் என்று உணர்வு மட்டும் ஆத்மார்த்தமாக தோன்றவில்லை.

வெளியே சென்ற வருண் உடனே சம்ரக்க்ஷாவை கண்டு கொள்ள,

“சாம்..” குரல் கொடுத்தான்.

“ஹே!! வருண்..” என நீந்திக் கொண்டே அவனது அருகில் வர,

அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீராவை அழைத்துச் சென்றது போல கூட்டிச் சென்றான். அதே போல் பூமி பிளந்து அந்த பாதாள லோகத்திற்குச் சென்றான்.

வீராவை அங்கே கண்டதும் தான் நிம்மதியாக இருந்தது அவளுக்கு. ஓடி வந்து அவன் அருகில் நின்றாள்.

“ஹப்பா..! உன்னை பாத்ததும் தான் உயிரே வந்துச்சு.” மூச்சு வாங்கினாள்.

“ஏன் அங்க மலை மேல ஏறிப் போக வேண்டியது தான. உன்ன வராதன்னு தான சொன்னேன்.எதாவது ஆகிருந்தா என்ன ஆகறது.?” அவளைக் கண்டததில் அவனுக்குத் திருப்தியாக இருந்தாலும் செல்லக் கோபம் கொண்டான்.

அவன் பேச்சைக் கண்டு கொள்ளாமல், “கடலுக்கு அடியில் இப்படி ஒரு இடமா?” ஆச்சரியப் பட்டாள்.

“இப்போ அதுக்கெல்லாம் நேரமில்ல. மொதல்ல வில்லத் தேடு வீர்.” வருண் அவனை துரிதப் படுத்தினான்.

“வருண்..ஆனா…” வீரா முன்னேறாமல் நிற்க,

“என்ன வில்? இங்கயுமா நீ வில் அம்புன்னு கெளம்பிட்ட?” சம்ரக்க்ஷா வேறு இடையிட்டாள்.

“கொஞ்சம் சும்மா இரு, இது வேற.. அப்பறம் சொல்றேன்.” அவளையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்தில் தேட,

வருண் ஒரு பக்கம் தேடிப் பார்த்துக் கொண்டிருக்க,

சுருக்கமாக வீரா சாமுக்கு கதையைக் கூறினான்.

“அப்போ நீ தான் அர்ஜுனனா?” இரண்டடி தள்ளி நின்று அவனைப் பார்க்க,

“ஹே லூசு.. எனக்கு அப்படி ஒண்ணுமே தோணல. இப்போவரைக்கும் உள்ளுணர்வு எதுவும் எனக்கு அப்படி சொல்லல.” அவன் சோர்ந்தான்.

“இல்ல வீரா. உனக்கும் அந்த இன்ஸ்டின்க்ட் எல்லாம் இருந்துச்சே.. யாரோ உனக்கு கனவுல ஹெல்ப் பண்ணாங்க. உனக்கு அந்த வழி எல்லாம் பின்ன எப்படித் தெரியும் சொல்லு. நீ தான் கண்டிப்பா அர்ஜுனன்.” சாம் அவனை முழுவதும் நம்பினாள்.

“நீ சொல்றது உண்மையா இருந்தா, அர்ஜனனுக்கு அந்த வில்லை அடைய அவ்வளோ ஆர்வம் இருந்தது. வெறி இருந்தது. எனக்கு இந்தக் கதைய கேட்ட பிறகாவது கொஞ்சமாவது அந்த சென்ஸ் வந்திருக்கணுமே. ஆனா அப்படி எதுவும் தோணாதது தான் உறுத்துது.” யோசித்தான் வீரா.

“இல்ல.. உனக்குத் தான் அந்த டட்டுஎல்லாம் வந்துச்சு. நீ தான் அந்த ராட்ஷசன் கதவை திறந்த.. நம்ம வீட்டுலயும் நீலக் கல் பூஜை செய்யறாரு தாத்தா. சோ நீ தான் அர்ஜுனன். இங்க எதாவது ஸ்பார்க் உனக்கு வரும். வேணும்னா பாரு! எனக்கு கரு நாக்கு. நான் சொன்னா அது நடக்கும். இங்க பாரு..” நாக்கை அவன் முன் நீட்ட,

அவளது ஈர உதடும் லேசாக சிவந்த நாக்கும் அவன் மனதை அன்று முத்தம் தந்த நினைவிற்குக் கூட்டிச் சென்றது.

“போதும் போதும்…” என திரும்பிக் கொண்டான்.

“ஹே வெய்ட்…”மீண்டும் திரும்ப, “வருண் எங்க?” என்றான்.

“வருண்… வருண்…!” குரல் சந்தேகத்துடனே எழ,

“என்ன ஆச்சு வீர்…?! எதாவது கிடைச்சுதா?” என ஓடி வந்தான் வருண்.

“நோ.. எனக்கு சில கேள்விகள் இருக்கு, அதுக்கு நீ பதில் சொல்லு. அப்போவே கேட்க நினச்சேன். ஆனா நீ சாம்-அ கூட்டிட்டு வர போய்ட்ட”

“என்ன கேளு..!” வில்லைப் பற்றி ஏதோ கேட்பான் என்று நினைத்தான் வருண்.

“நீ யாரு? எனக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்? மொதல்ல எங்க ஆபீஸ்க்கு வந்த, வந்த அடுத்த நாளே இந்த ட்ரிப் ப்ளான்.

யாருமே வர முடியாத மலையும் குகையும் உனக்கு மட்டும் எப்படி வழி விட்டது?

அப்படியே நீ என்ன வெச்சு இங்க வந்திருந்தாலும் எங்க குடும்ப கதை உனக்கு எப்படி தெரியும்? உனக்கு யார் சொன்ன? ஓரு வேளை இந்த வில் கிடச்சா அதை திருடிட்டு போகறது தான் உன் ப்ளானா?” அவன் கேட்கக் கேட்க சம்ரக்ஷா வருணை சந்தேகமாகப் பார்க்க ஆரம்பித்தாள்.

“இப்போ அதெல்லாம் சொல்ல நேரமில்ல, நீ வில்லைத் தேடு. அது தான் முக்கியம்.” வருண் கட்டளையிட,

“முடியாது.” கையைக் கட்டிக் கொண்டு நின்றான் வீரா.

“என்ன வீரா. ஏன் இப்படி பிஹேவ் பண்ற. சொன்ன புரிஞ்சுக்கோ.” இறங்கி வந்தான் வருண்.

“வீரா கேட்கறது நியாயமான கேள்வி தான. பதில் சொல்லுங்க.” அவனோடு சேர்ந்துகொள்ள,

“இங்க நாம ரொம்ப நேரம் இருக்கக் கூடாது. சோ நான் சொல்றத கேளுங்க.” வருண் அவனது பிடியில் நின்றான்.

**

மோகன் தனது குடும்பத்திடம் இந்தக் கதையைக் கூறி முடித்தார். வேதாவும், சுஜாதாவும் அயர்ந்து பயந்து அமர்ந்து விட்டனர்.

தாத்தா, “மோகன். போதும். அவங்க பயந்துட்டாங்க.” என்க,

“அவங்க மட்டுமில்ல, நானும் தான். என் மகன் அர்ஜுனனா? எனக்கு அதுக்கு பதில் சொல்லுங்க.” மோகன் அழும் நிலைக்கு வந்தார்.

“தம்பி, நீங்க நம்ப மறுத்தாலும் அது தான்ங்க உண்மை.” வல்லையா குறுக்கிட்டார்.

“எத வெச்சு சொல்றீங்க? அவன் தன்னையே உணரலையே? அர்ஜுனனா இருந்தா அவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சி இருக்கணுமே.?”

“அதுக்கான நேரம் இது தான். அவன் அவன உணர வேண்டிய காலமும் இது தான். அதிலிருந்து வெளிய வந்து அந்த வில்லை அவன் எடுத்து அவனாவே வருண பகவானுக்கு சமர்ப்பணம் செய்யணும். அது வரை இந்த குடும்பத்துக்கு வந்த சாபம் தீராதுங்க. வீரா அதெல்லாம் கண்டிப்பா சமாளிப்பான்.” வல்லையா தைரியமூட்டினார்.

“என் மகனுக்கோ என் மருமகளுக்கோ எதாவது ஆச்சுனா நான் உயிரோட இருக்க மாட்டேன். என்னை என் பையன் கிட்ட கூட்டிட்டுப் போங்க.” வேதா உடைந்து அழுதார்.

சுஜாதா அவரது அருகில் வந்து தாங்கிப் பிடித்தாலும் அவராலும் கண்ணீரைக் கட்டுப் படுத்த இயலவில்லை.

“அப்பா, எதாவது செய்ங்க. நம்ம பசங்கள நாம தான் பாதுகாக்கணும்.” சுஜாதா வேண்டினார்.

“அதுக்குத் தான் இங்க வந்திருக்கேன். நம்ம கோடங்கியும் நானும்  இப்போ தான் தமா கிட்ட பேசினோம்.” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

“அவர் யாரு.?” சுஜாதா கேட்க,

“அவர் தான் உன் பெரியப்பா!”

அனைவரும் அதிர்ந்தனர். மோகன் உள்பட.

“என்ன பெரியப்பாவா?” மோகன் கண்களில் அதிர்ச்சி.

“அப்பா அவர் இறந்துட்டாரே!” சுஜாதா கேட்க,

“இல்ல மா. இல்ல. அவர் நம்ம குடும்பத்துக்காக தன்னோட வாழ்க்கைய அழிச்சுக்கிட்டவரு. நம்ம பிள்ளைங்க சந்தோஷமா இருக்கணும்னு அவர் கல்யாணம் பண்ணிக்காம இருந்தாரு.”

“என்னப்பா சொல்றீங்க.?” அனைவரும் தாத்தாவைப் பார்க்க,

“என் அண்ணன், என்னை விட ஐந்து வயது மூத்தவர். எங்க அப்பா அவருக்கு இருபது வயசு  வரும் போது இந்த வல்லயாவோட அப்பா கூட சேந்து அவருக்கு கதையெல்லாம் சொன்னங்க. என் அண்ணன் தான் அப்போலேந்து நீலக் கல் பூஜைய செஞ்சாரு. அப்போ அவருக்கு ஒரு நாள் தெய்வம் உடம்புல இறங்குச்சு. சாமி ஆட ஆரம்பிச்சுட்டாரு.

வல்லையாவோட அப்பா, கொஞ்ச நேரத்துல அவர கட்டுப் படுத்தி அவர தூங்க வெச்சதும், அவருக்குள்ள பல போராட்டங்கள் ஏற்ப்பட்டு இந்தக் குடும்பத்தோட சாபத்தை அவர் உயிரோட இருக்கும் போதே தீரத்துடனும்னு நினச்சு மனசுக்குள்ள ஒரு சபதம் செஞ்சாரு.

வல்லயாவோட அப்பாகிட்ட அதுக்கு உதவி கேட்டு பல விதமான பூஜைகளும், ப்ராத்தனைகளும் செஞ்சாரு.

கடைசில அதுக்கு பலன் கிடச்சுது.

ஒரு நாள் ஏகாதசி பூஜை முடியற சமயம், வருண பகவான் கிட்ட அர்ஜுனன் தான் உயிரோட இருக்கும் போதே தன்னுடைய மகனாவோ பேரனாவோ பிறக்கணும்னு வேண்ட, அப்போ அவருக்கு ஒரு சித்தர் மாதிரி ஒருத்தர் வந்து பதில் சொன்னார்.

நீ உன்னுடைய இளமைய த்யாகம் பண்ணு, கல்யாணம் பண்ணிக்காம, ஆணோட உணர்வும் பெண்ணோட உணர்வும் உனக்குள்ளேயே நீ கொண்டு வரணும்.

அப்படி செஞ்சா உன் வம்சத்துல அர்ஜுனன் நூத்தி ஒன்னாவது பிறவி எடுப்பான். அந்த நூத்தி ஒன்னாவது பிறவில தான் அவன் யார்ன்னு அவன் உணர்வான்.

அப்போ உன் வம்ச சாபம் தீரும்.” ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.

வல்லயாவோட அப்பாவ கெஞ்சி தனக்குத் தானே சூனியம் வச்சுக்கிடாரு.

அப்போ அவரால கல்யாண பந்தம் அற்றவரா துறவு பூண்டாரு. கடவுள் மட்டுமே பிரதானமா இருந்தாரு.

அப்படி இருந்தும் அவரால ஒரு பெண்ணா மாற முடியல.

அப்போ வல்லையா வோட அப்பா, அந்த சித்தர தேடி போகச் சொன்னாரு.

அப்போ போனவரு எனக்குக் கல்யாணம் ஆகி மோகன் பிறந்து சுஜாதா நாலு வயசா இருக்கறப்ப தான் திரும்பி வந்தாரு.

அப்பவும் அவர் அவரா தான் இருந்தாரு.

நீலக் கல் பூஜை எல்லாம் ஒழுங்கா நடக்குதான்னு என்கிட்டே கேட்டுட்டு, இனிமே வீட்டுக்கு தான் வரமாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டார்.

நம்ம வீரா பொறந்தப்ப நான் செஞ்ச ஏகாதசி பூஜைக்கு தான் வந்தாரு. மலை அடிவாரத்துல நான் நீலக் கல்ல குளத்துல போட்டதும். அதுல தாமரைகள் பூக்க வெச்சு, என்னைப் பார்க்க மலையில் இருந்து இறங்கி வந்தாரு.

வந்தவர் அப்போ ஆணாவும் இல்ல. பெண்ணாவும் இல்ல.. திருநங்கை.!”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!