கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்…
அத்தியாயம் 24(1)
தனம் இத்தனை நாள் கொண்டிருந்த மகள் பாசத்தில் நிஜமாகவே நெகிழ்ந்து போனார்கள் . வேதா அண்ட் கோ.
வேதா , “அழாதிங்கம்மா, காலம் தான் எல்லாத்துக்கும் மருந்து.” அவரை தேற்ற,
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலமா,” வேதாவை கட்டிக் கொண்டு இன்னொரு மூச்சு அழுது தீர்த்தவர்,
இளாவின் கையை மீண்டும் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டார்.
“தனியா வளர்ந்தாலும் ,தக தகன்னு ஜோலிக்குற மாதிரி தங்கமா வளர்ந்து நிக்கிற ,நூறாயுசு நோய் நொடி இல்லாம, நல்லா இருக்கணும்யா நீ.”
இளாவினை மனதார வாழ்த்த, அவன் வேதாவை பார்க்க,
“காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ.,” சைகையில் கூறினார் அவர்.,
காலில் விழுந்து வணங்கியவனை,
தூக்கிய தனம், “நீ, என் குலத்தை காப்பாத்துன சாமியா தெரியுறப்பா. இத்தனை நாளாய், என் பேத்தி எங்க எப்படி கஷ்டப்பட்டாளோன்னு, தவிச்சிட்டுருந்த மனசுக்கு, நீ அவளை, தாங்கி நின்னு பேசுனப்பவே, சாந்தி கிடைச்சுட்டு. என் காலில் விழனும்னு அவசியம் இல்லை. கொஞ்ச நேரம் முன்னாடி நின்னியே அது போல கம்பீரமா இரு, அதான் அழகு உனக்கு.
என் பொண்ணு உன்னை அவ்ளோ சின்ன வயசுலயே நம்பி பாப்பாவை பார்த்துக்க தந்திருக்கான்னா, ரொம்ப சரியாத்தான் இருந்திருக்கு பாரு.”
மகளின் நம்பிக்கை பெற்றவன், பேத்தியை பாதுக்காத்தவன், இனம் புரியா பாசத்தையும் மரியாதையும் இளாவின் மேல் தர,
அவன் தோளை பாசமாக வருடியபடி சொல்ல, அவர் பாசத்தில் விழுந்தது ஆரா தான். இளாவினை அன்பு செய்த்ததில் மனமிளகி அந்த முதியவரை பிடித்துப் போனது ஆராவுக்கு,
“உங்களை நான் எப்படி கூப்பிடனும்..?”
அவருக்கு ரொம்ப சந்தோஷம்,
“பாட்டின்னு சொல்லலாம், ஜெயம் , தனம் பெரியம்மா மக்கள் அம்மாவோட அம்மா ,அம்மாச்சின்னு கூப்பிடுவாங்க, அப்படியும் கூப்பிடலாம்.” தனம்.
“நான் அம்மாச்சி கூப்பிடுறேன்.”
அனைவருக்கும் மகிழ்ச்சி.
பெரியவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க, தனம் வீட்டு சிறியவர்களுக்கு ஆராவை பிடிக்கவில்லை.
திடீரென வந்த புது உறவை ,காட்டப்பட்ட, அவள் மீதான அக்கறை கவனிப்பு பிடிக்கவில்லை. கடந்த நாட்களில் வீட்டில் எப்போதும் எங்கும் ஆராதனா என்ற பேச்சும் ஒரு முக்கிய காரணம். அவர்களுக்குள் வெளியே சொல்ல முடியாத இன்னும் ஒரு காரணமும் இருந்தது.
காலை உணவை அனைவரும் உண்டு, பேச ஆரம்பிக்க,
பெரியவர்கள் ,சிறியவர்கள் என்று கலந்த சபையாய்.
ஆரா, ரோஜா கிருஷ் இளா சூழவே அமர்ந்திருக்கவும்,
ஜெயம் எழுந்து, சின்னவர்களிடம் ஆராவை அழைத்து சென்று,
“ஆராவும், உங்களை போலவே நம்ம வீட்டு வாரிசு.
ஆரா, குமார் உனக்கு முறைப் பையன், மாமான்னு சொல்லணும். கிருத்தி உனக்கு அத்தாச்சி… மிச்ச எல்லாரும் உன்னோட பிரதர் , சிஸ்டர்ஸ் தான், கொடி பெரியம்மா சின்ன மக நிவேதா மட்டும் உனக்கு தங்கை. மிச்ச ரெண்டு பேரும் உனக்கு அக்கா , கனிஷ்க் உனக்கு அண்ணா.”
தனி தனியாக உறவுமுறை விளக்கிவிட்டு, அவரின் வீட்டு இளையவர்கள் கூட்டம் பார்த்து,
“இவ உங்க கசின் தான். அதனால.. இயல்பா பழகுங்க. நீங்க ஒதுக்கி வச்சா, அப்புறம் எப்படி நம்மளோட ஒட்டுவா..?” என்று கண்டிப்பு குரலில் கூறவும்,
“புதுசா திடீர்னு வந்து கசின்னு ஒட்டிக்கிட்டா.” ஒரு பெண்குரல் உயர்ந்து ஒலிக்க, மத்தவர்களிடம் இருந்து வெவ்வேறு வார்த்தைகளில் வெறும் முணு முணுப்பு மட்டும், அதிருப்தியாக கிளம்பியது.
“நான் சொல்லிகிட்டே இருக்கேன்,” ஜெயம் அவர்களைப் பார்த்து, குரலை உயர்த்த,
“பரவாயில்லங்க, நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன். அலார்ட் ஆறுமுகம் மாதிரி எல்லாரும் என்னை முறைச்சுக்கிட்டே இருக்காங்க. அதுக்காகலாம் ஒன்னும் திட்ட வேணாம் விடுங்க. இவுங்க கூடலாம் பெருசா ஜெல்லாகுற ஐடியாலாம் சுத்தமா எனக்கு இல்ல.”
ஆராவின் பதிலில் அயர்ந்து நின்றார் ஜெயம்.
“நான் உனக்கு பெரியம்மாடா… நீ அம்மான்னு கூட கூப்பிடலாம்.”
“அச்சோ , எனக்கு அம்மாவுக்கு அப்புறம் மாதாஜிதான் எல்லாம். சோ, நான் எதுவும் ஃபீல் பண்றேன்னு நினைச்சு, நீங்க புதுசா என்னை உங்க கூட , சேர்த்துக்க கஷ்டபடவெண்டாம். பிளீஸ்.”
அருகிலிருந்த வேதா, மனசு பூரிச்சாலும், “ஏண்டி இப்படி பேசுற, ஒழுங்கா பேசு.அவங்களை கூப்பிடறத்துக்கு என்ன..?” கண்டித்தார், சிறு குரலில்,
ஆரா கேட்டுவிட்டு அமைதியாக,
“மனசுல இருந்து கூப்பிட சொல்றேன்டா. இதுல என்ன கஷ்டம் எனக்கு.” ஜெயம் சுரமில்லாமல்,
“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க. புதுசா கூப்பிட. இதுவரைக்கும் நான் யூஸ் பண்ணாத வார்த்தைங்க எல்லாம். வாயில வரமாட்டெங்குது நிஜம்மா.” ஆரா,
அவரிடம் பேசி முடித்து, அவரின் மக்களைப் பார்த்து,
“இங்க பாருங்க கைஸ். நான் யாரையும் தேடி வரல. எதையும் பிடுங்கிட்டு போகவும் வரல. சோ, செயின் ஸ்னாட்ச்சரை பார்க்குற மாதிரி, இப்படி ஆக்வர்டா மூஞ்சி வச்சுப் பார்க்காதீங்க. ரொம்ப ஃபன்னியா இருக்கு.”
அவர்கள் ‘ ஆங்’ என்று வாயைப் பிளந்து பார்க்கும் போதே,
“அம்மாச்சியைப் பார்க்க பாவமா இருந்துச்சு. அதான் அம்மாச்சின்னு கூப்பிட்டேன். மத்தபடி நான் வெறும் ஆரா தான். யாருக்கும் கசினோ , திடீர்னு வந்து ஒட்டிக்கிட்ட பிசினோ இல்ல. ரொம்ப பேனிக் ஆகவெண்டாம் யாரும். “
தோள்களைக் குலுக்கியபடி சொல்லி முடித்து,
ஜெயத்திடம், “உங்களை ஹர்ட் பண்ணிருந்தா சாரி.”
மன்னிப்பும் கேட்டுவிட்டு வந்து மீண்டும் வேதாவிடம் அமர,
“லட்டு , அவங்க கூட நல்லா பேசணும்டா, இப்படி பேசினதுக்கு எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேளு.” கிசு கிசுத்தாலும், அமைதியில் கேட்டுவிட்டது.
“யாருக்கும் என்னை பிடிக்கல மாதாஜி. அதான் அப்படி சொன்னேன்.”
ரோஜா, அவள் தோளைப் பிடித்து அடக்க,
கிருஷ் ,”ஏய் அரிசி மூட்டை, ஒழுங்கா பேசுடி,” அதட்டினான்.,
“நல்லா கண்ணைத் திறந்து பாரு, அங்க, உண்மையிலேயே என்னை, அவங்க செயின் ஸ்னாட்ச் பண்ணினவ மாதிரி பாக்குறாங்க அண்ணா,” கொஞ்சினாள்.
“கொஞ்ச நாளிலே எல்லாம் சரியாகிடும்.” வேதா சிரித்து சமாளித்தார்.
தனம் மகனை பார்க்க, தனத்தின் மூத்த மகன் விமலன், பேச ஆரம்பித்தார்.
“இளா, நாங்க கொஞ்ச நாள் எங்க கூட ஆராதனாவ கூட்டிட்டு போயி வச்சுக்கலாமா…? நீங்க என்னம்மா சொல்றீங்க..?” வேதாவையும் பார்த்து கேட்க,
அவர் இளாவைப் பார்த்தார்.
“நாங்க லட்டு இல்லாமல் இருந்தது இல்ல. இப்படி நீங்க திடீர்னு கேட்டா…?” அவன் இழுக்க,
“இதை முன்னாடியே சொல்லி இருந்தா திருச்சி கிருஷ்ணா சுவீட்ஸ்ல இருந்து லட்டு ஒரு கிலோ வாங்கிட்டு வந்திருப் போமே…”
தனத்தின் இரண்டாவது மகள் கொடி வயிற்று பேத்தி பாகீரதியின் கலாயில் அவர்கள் கூட்டம் சிரிக்க, கொஞ்சம் அன்பாக தெரிந்த புது மணப் பெண் கிருத்திகா, ‘ ஷு’ சொல்லி அடக்க முயன்றாள்.
அவர்கள் வீட்டு பெரியவர்கள் அவர்களை முறைக்க , தனம் அதட்டினார். “இளாவும் குமார் போல உங்களுக்கு மாமா. மரியாதையா பேசணும்.”
“இருக்கட்டும் பாட்டி.” பதிலளித்த இளா, கலாய்த்தவளிடம் திரும்பி,
“உங்க பேர் என்ன..?”
“பாகீரதி.”
“பாருங்க பாகீரதி, எங்க லட்டை அப்படி காசு கொடுத்துலாம் வாங்கிட முடியாது. சொல்லப் போனா கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் எங்க லட்டுக்கு ஈடாகுது. நீங்க வாங்கிட்டு வர்ற லட்டு சாப்பிட மட்டும்தான் டேஸ்டா இனிப்பா இருக்கும், கொஞ்ச நேரத்தில் அந்த இனிப்பு காணாமயும் போயிடும்,ஆனா எங்க வீட்டு லட்டு ஆரா, கூட பேச, பழக, வாழன்னு வாழ்கையவே இனிப்பா மாத்திடும். அந்த இனிப்பு மனசில் காலமெல்லாம் ஒட்டியிருக்கும்.”
“அவளுக்கு ரொம்ப காரமாலாம் பேசி மத்தவங்களை கஷ்டப்படுத்த தெரியாது. வெறும் தித்திப்பை மட்டுமே தந்து சந்தோஷப்படுத்த தெரியும். சோ , அவளை கேலி பேசி, மறைமுகமாக குத்தி சிரிக்க வேண்டாம். அவளுக்கு அப்படிலாம் பிரிச்சு பார்க்க தெரியாது. நீங்க தர்றதை அப்படியே திருப்பி தந்துடுவா. ஏதாவது கேட்கணுமுன்னு ஆசைப்பட்டீங்கன்னா அவள்ட்ட நேராவே கேட்கலாம். வேற ஏதாவது டவுட் இருக்கா.?” இளாவின் கடைசி வார்த்தையில்,
அவள் கேள்வியாக பார்க்க,
“டிபரன்சஸ் பெட்வீன் த லட்டூஸ்….ல….? மிஸ் பாகீ…ரதி…?” இளா, கேட்க,
கிருஷ்,ரோஜாவிடம் “உங்கண்ணன் ஒரு லட்டு வெறியன்னு தெரியாம, சொல்லிட்டா அவ. ஒரு லட்டு போட்டு கிண்டல் பண்ணினதுக்கு, இந்த பய ஓராயிரம் லட்டு போட்டு, அவளை சுண்டல் பண்ணிட்டான். பாவம் , பாகீரதி, பகீர் ரதியாகிட்டு, இவன் ஆத்துன உரையில்,” நக்கலடிக்க,
“உன்னை மீ, ஏன் மவுன விரதம் இருக்க சொன்னாங்கன்னு இப்பத் தெரியுது எனக்கு.” மூடுடா வாயை.
“எல்லாருக்கும் முன்னாடி, ஹவ் கேன் ஐ டூ லிப்லாக் டா பேபி. தண்ணி குடிக்குறேன்ன்னு சொல்லித் தனியா வா, அங்க வாயால வாயை மூடுறேன்.” ஹி ஹி ஹி இளித்து வைக்க,
” உன்னைய மனுஷன் திருத்த முடியாதுடா,” அவனை பார்வையில் கடித்து குதறி விட்டு, நல்ல பிள்ளையாய் சபையில் சேர்ந்து கொண்டனர் இருவரும்.
இளாவின் லட்டுரை விளக்கத்தில் சின்னவர்கள் அனைவரும் தலை குனிய, கேட்டிருந்த அவர்கள் வீட்டு பெரியவர்களுக்கு சங்கடமாய் போய்விட்டது.
ஜெயம் , “தம்பி தப்பா எடுத்துக்காதீங்க. அவங்க ஏதோ தெரியாம,”
இழுக்க,
“நான் தப்பா எடுத்துக்கலைங்க. அவங்கதான் ஆராவை தப்பா எடுத்துக்கிட்டாங்க. எங்ககிட்ட, இங்க வர்றேன்னு சொன்ன நீங்க, அவுங்ககிட்டயும் இன்னாரை பார்க்க போறோம்ன்னு சொல்லி, அவங்க விருப்பம் கேட்டு, கூட்டிட்டு வந்திருக்கலாம். இப்ப பாருங்க, தேவை இல்லாத சங்கடம். உங்களுக்கு.”
சொல்லிவிட்டு, விமலனிடம்,
“சார், நான் பேச வந்தது எங்கயோ போயிட்டு சாரி., நீங்க சொல்லுங்க,”
” ஆராதனாவை எங்க கூட அனுப்பி வைக்குறீங்களா..? கொஞ்ச நாளைக்கு, என் பொண்ணு கிருத்தி கல்யாணம் வரை மட்டுமாவது… கேட்க ரைட்ஸ் இல்ல, ஆனா எங்களுக்கும் அவளை எங்க கூட வச்சுப்பார்க்கணும்னு, அதுவும் எங்கம்மாவுக்கு ரொம்ப ஆசையிருக்கு.” விமலன் அவர்கள் குடும்பத்தின் விருப்பத்தை கோடிட்டு காட்ட,
“கேட்கிறேன்னு யாரும் தப்பா எடுத்துக்காதீங்க சார். உங்கம்மாவுக்கு ஆராவை வச்சுப்பார்த்துக்க இருக்கிற ஆசை, உங்கப்பாவுக்கு இல்ல போல,?”
அவர் எப்படி தெரியும் என்று பார்க்க,
“உங்கப்பாவை பத்தி பேசரப்போ பாட்டி முகத்தில் களையில்ல. உங்க சிஸ்டர் ஒரு மாதிரியும், நீங்க ஒரு மாதிரியும் மாத்தி மாத்தி அவங்க வராததை சொன்னீங்க. அதுலதான் உத்தேசமா சொல்றேன். உங்கப்பாவுக்கு, அன்னைக்கு அத்தை மேல, ஆரா மேல இருந்த கோபம் , இன்னும் போகல போல, அப்புறம் எப்படி ஆராவை அனுப்பி வைக்கிறது சார். இது சரியா வருமுங்களா…?”
“அவங்களும் விருப்பட்டு, எங்க லட்டுக்கும் வர பிடிச்சிருந்தா கண்டிப்பா அனுப்பி வைக்கறோம். கொஞ்ச நாள்,..”. அவன் அழுத்தி சொன்னான்.
அவர் தனத்தை பார்க்க,
“கூடிய சீக்கிரம் அவர் வருவாருப்பா. கிருத்தி கல்யாணப்
பத்திரிக்கையோட, அப்போ லட்டு குட்டி கூட, நீங்க எல்லாரும் வரணும் எங்க வீட்டுக்கு.” அழைத்து விட்டு,
“அப்ப தாத்தாவோட, நான் வந்து கூப்பிட்டா நீ வருவியாடா லட்டு பாப்பா.”
ஆராவை ஆவலாய் பார்த்துகேட்டார்.
“நான் வரமாட்டேன் அம்மாச்சி.”
“பாப்பா…?” அவர் கண்களும் குரலும் தழு தழுக்க அழைக்க,
“சாரி, அம்மாச்சி… ஆல்ரெடி உங்க வீட்டுல , ஒன் டூ, த்ரீ…”
சின்னத் தலைகளை எண்ணி
“அஞ்சு பேருக்கு என்னைப் பிடிக்கல, எப்படியும் தாத்தாவையும் நீங்க கெஞ்சி கூத்தாடி கூட்டிட்டு வருவீங்க, அவருக்கும் பிடிக்காது. அவரும் இங்க வந்து, என்னை முறை முறைன்னு முறைச்சுட்டு இருப்பார், அப்போ மொத்தமா அரை டஜன் பேருக்கு உங்க வீட்டுல என்னை பிடிக்காத போது, அங்க வந்தா, ரொம்ப கஷ்டம் … பின்ன ஏன் அம்மாச்சி இதெல்லாம்…?”
“நான் பாட்டுக்கு ஜாலியா , இளா கூட சிரிச்சு பேசிட்டு, ரோஜா அண்ணி பாப்பா கூட கதை சொல்லிட்டு, மாதாஜி மடியில படுத்துகிட்டு, கிருஷ் அண்ணா கிட்ட சண்டை போட்டு பிடுங்கி சாப்பிட்டுன்னு சந்தோஷமா இருந்துட்டு போறேன்னே பிளீஸ்.”
அவள் உலகம் விளங்கியது அனைவருக்கும், ஜெயம் உட்பட அனைத்து பெரியவர்களும் இதற்கும் சிறியவர்களை முறைக்க,
“பார்க்க அப்பாவி போல இருந்துக்கிட்டு,, நம்மளையும்யும் கோர்த்து விட்டு உஷாரா தாத்தாகிட்ட இருந்தும் எஸ்ஸாகிட்டா,”
ஜெயத்தின் மகள் ஸ்வேதா பல்லை கடித்தபடி கூற,
“அதோட அம்மாச்சி எனக்குன்னு கோல் இருக்கு வாழ்க்கையில,”ஆரா,
“கோலா உருண்டைக்கு, கோல்லாம் இருக்கா…? ஒருவேளை என்ட்ட புடுங்கி தின்றது பத்தாதுன்னு என் புள்ளைட்டயும் புடுங்கி தின்பாளோ…?”
கிருஷ்ஷின் கிசு கிசு கேள்வியில் ,
ரோஜா அவன் காலை ஒரே மிதி. அவன் அதோடு, கப் சிப்.
“அப்ப மொத்தமாவே எங்களை வேனாம்முன்னு வெட்டி விட்டுட்டியாடா , நான் வேண்டாமா? உங்கம்மாவோட குடும்பம் வேண்டாமா உனக்கு?” தனம் மீண்டும் கலங்க,
“அப்படிலாம் நீங்க தப்பிச்சு போயிட முடியாது.”
கிருத்தியை காட்டி,
“இவங்களுக்கு வெட்டிங்க் சாரி நான்தான் டிசைன் பண்ணுவேன். அதோட உங்க எல்லாருக்கும், நானே வெட்டிங்க்கு போட ட்ரெஸ் டிசைன் பண்ணித் தரேன். பிடிச்சிருந்தா போட்டுக்கொங்க. ஆனா அம்மாச்சி, நீங்க நான் டிசைன் பண்ணித்தர சாரியைத் தான் கண்டிப்பா கட்டணும் எஸ்கேப்பாக முடியாது,”
கூறி புன்னகை முகத்தோடு ஆரா ஒவ்வொருவராக பார்க்க, இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி.
தனமும் இணைந்து சிரிக்க, ஜெயம்,
“எல்லாரும் நீ கொடுக்கிற ட்ரெஸ் தான் கல்யாணத்துக்கு போட்டுப்போம்.”
சுபமாய் பேசி முடித்து வைத்தார்.
அனைத்து பெண்மணிகளும், ரோஜாவின் பிரசவம் பற்றி பேசி, மீண்டும், ஆராவை சூழ்ந்து கொண்டு ஆசையாய் பேசிக் கொண்டிருக்க, அப்போதும் கிருத்திகாவை தவிர, மற்றவர்கள், ஓரமாய் முணு முணுப்புடன்,
“அம்மா சின்ன வயசு ஃபோட்டோலாம் வீட்டுல இருக்கா..? எனக்கு தர்றீங்களா..? உண்மையில் என்னைப் போலதான் இருப்பாங்களா ?அங்க சென்னையில் நான் பொறந்ததுக்கு அப்புறம் உள்ள போட்டோஸ்தான் இருக்கு. கொஞ்சம் டிஃபரண்ட்டா இருப்பாங்க அதுல.” ஆரா ஆசையாய் கேட்டாள்,
“ஆமாடா, எல்லாமே அப்படியேதான் இருக்கு, அவ ரூம்ல , நீ எங்க கூட வந்தா கண்டிப்பா பார்க்கலாம்.” இப்படியாவது வரமாட்டாளா, ஆசையில் தனம்.
“வேணாம் அம்மாச்சி, தாத்தாக்கு பிடிக்காது என்னை.”
சிறிது நேரம் யோசித்து,
“பாட்டி, உங்க ஃபோன் கொடுங்க,”
வாங்கி தன் நம்பர் பதிந்து விட்டு,
“எனக்கு, அம்மா, அவங்க ரூம், பெட், திங்ஸ், எல்லா ஃபோட்டோவும் அனுப்பி விடுறீங்களா..? இந்த நம்பருக்கு பிளீஸ்.” ஆராவின் முகத்தை பார்த்து தனம் வேதனை காட்ட,
“கண்டிப்பா அனுப்பறோம் பாப்பா.” சொல்லி ஜெயம் தோளைத் தொட்டு, தன் தாயை இயல்பிற்கு கொண்டு வந்தாள்.