கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  17

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  17

கீர்த்தனாவின் கன்னங்களை அழுந்த பிடித்து, “என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க? என் வாழ்க்கையில் லீலா மட்டும் தான். நான் என்னவோ உன்கிட்ட… ச்சச்ச..” என்று வாக்கியத்தை முடிக்காமல் விஜயேந்திரன் முகம் சுழித்து, அவள் முகத்தை வேகமாக விட, நீரின் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த கீர்த்தனா சரிந்து விழுந்தாள்.

விஜயேந்திரன் அவளைக் கவனிக்காமல் வேகமாக அவர்கள் அறைக்குள் சென்றுவிட்டான். எழுந்து அமர்ந்த கீர்த்தனா, கடலை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

‘நான் என்ன யோசிக்கறேன்? இவங்க என்ன பேசுறாங்க? நான் என்ன ச்சச்சவா ?’ என்ற எண்ணம் தோன்ற அவள் கண்கள் கலங்கியது.

‘முதல் நாள் லீலாவின் பெயரை சொன்னதை விட, இன்னைக்கு அதிகமாக வலிக்கிறதோ?’ என்ற சிந்தனை கீர்த்தனாவின் மனதில் எழுந்தது.

‘விஷயம் கை மீறி போய்கிட்டு இருக்கோ? நான் செய்வது தவறோ?  இவங்க யாரையோ விரும்புறாங்கன்னு சொன்னவுடனே இந்த வாழ்க்கை வேண்டாம்முன்னு  முடிவு பண்ணிருக்கணுமோ? நீயாச்சு, நீ கட்டின தாலியாச்சுன்னு கிளம்பி போயிருக்கணுமோ?’ என்ற எண்ணம் தோன்ற மறுப்பாகத் தலை அசைத்துக் கொண்டாள் கீர்த்தனா. செய்வதறியாமல் தாயில்லா அவள் மனம் அல்லாடியாது.

‘ஊரைக் கூட்டிப் பண்ணக் கல்யாணம் பொய்யா? நான் மனைவிங்கறது பொய்யா? அவங்க காதல் தான் உண்மையா?’ போன்ற கேள்விகள் மனதில் தோன்ற, இந்த கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

கீர்த்தனாவின் மனதைப் பயம் சூழ்ந்து கொண்டது. ‘நான் ஒருவேளை எல்லாத்தையும் அப்பா கிட்ட சொல்லிருக்கணுமோ? பெரிய பிரச்சனை வந்திருமோ?’ என்ற எண்ணத்தோடு, மீண்டும் அறைக்குள் செல்ல மனமில்லாமல், இருட்டில் தனியாக அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

அதே நேரம், விஜயேந்திரன் அறைக்குள் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். ‘என்ன பத்தி என்ன நினைக்குறா?’ என்ற கோபத்தில் ஆரம்பித்த அவன் சிந்தனை நேரம் செல்ல செல்ல  திசை மாறி இருந்தது.

‘பயந்திருப்பாளோ? நான் தான் அவசரப்பட்டு கோபப்பட்டுட்டேனோ? நான் கீர்த்தனாவுக்குச் செய்தது எவ்வுளவு பெரிய அநியாயம். எதையும் மனசில் வச்சிக்காம, என்கிட்டே எவ்வுளவு நல்லா நடந்துக்குறா? விஜய்… நீ கொஞ்சம் பொறுமையா நடந்திருக்கலாமோ?’ என்று தனக்கு தானே கூறிக் கொண்டு, அறை வாசலைப் பார்த்தபடி அறைக்குள் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

ஜன்னல் வழியாக அறைக்குள் வந்துகொண்டிருந்த வெளிச்சம் குறைந்து, நேரம் செல்வதைக் கூற, ‘அவளே வரமாட்டாளோ?’ என்ற கேள்வியை அவனுக்குள் விதைத்தது. வெளியே சென்று அழைக்க, அவன் தன்மானம் இடம் கொடுக்காமல் மறுக்க, மனமோ அவள் தனிமையை எண்ணி அஞ்சியது.

‘ஈரத்துணி. இப்படி இருந்தால் காய்ச்சல் வந்திருமே.’ என்ற எண்ணம் தோன்ற, மனம் அவனை வென்று விட மீண்டும் கடற்கரை நோக்கிச் சென்றான் விஜயேந்திரன்.

அவன் காலடி ஓசையில், கீர்த்தனாவின் உடல் இறுகியது.  ‘இவருக்கு லீலா மட்டும் தானே? அப்புறம் எதுக்கு இங்க வரணும்?’ கீர்த்தனாவின் மனம் முரண்டு பிடித்தது.

“ம்… க்கும்…” என்று விஜயேந்திரன் சத்தம் எழுப்ப, அசைய மனமில்லாமல் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

“கீர்த்தனா.” என்று விஜயேந்திரன் மென்மையாக  அழைக்க, அவள் மௌனம் காத்தாள். “கீர்த்தனா.” என்று விஜயேந்திரனின் குரல் அடுத்ததாக ஓங்கி ஒலிக்க, சிறு குழந்தையின் பிடிவாதத்தோடு, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் கீர்த்தனா.

ஷார்ட்ஸ், டீ-ஷர்ட் அணிந்து தன் கைகளை இறுகக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்த, விஜயேந்திரனின் முகத்தில் கோபம் தணிந்து, மெல்லிய புன்னகை பூத்தது.

“கீர்த்தி…” என்று அவன் அழைக்க, படக்கென்று திரும்பிப் பார்த்து, “என்னை அப்படி கூப்பிடாதீங்க. என் பெயரை சுருக்கி கூப்பிடாதீங்க. எனக்கு பிடிக்காது.” என்று இன்னும் முகத்தை சுருக்கி கொண்டு கீர்த்தனா கூற, அவன் புன்னகை பெரிதாக விரிந்தது.

“சரி. கூப்பிடலை. டிரஸ் மாத்திக்கோ. உடம்பு சரி இல்லாம போயிடும்.” என்று அவன் கூற, “ஆமா. என்னை பத்திரமா திருப்பி கொடுக்கணும். அப்ப தானே உங்க வேலை ஈஸியா முடியும். நீங்க எந்த பிரச்சனையும் இல்லாமல் அந்த லீலா கிட்ட போக முடியும்.” என்று அவள் கூறிக்கொண்டே, மேலும் பேச மனமில்லாமல் எழுந்து வேகமாக உள்ளே செல்ல கீர்த்தனா எத்தனித்தாள்.

அவன் கூறிய வார்த்தை தான். ஆனால், அதை அவள் கூறி கேட்கையில் நாராசமாக விஜயேந்திரனின் செவிகளில் ஒலித்து, அவன் கோபத்தை விர்ரென்று ஏற்றியது.

கீர்த்தனாவின் வழியை மறைத்து. அவள் முன் நெருக்கமாக நின்று, தன் கைகளை சொடக்கிட்ட படி  “என்ன சொன்ன?” என்று விஜயேந்திரன் கூர்மையாக தன் கண்களைச் சுருக்கி கேட்க, சிறிதும் தயக்கமின்றி அங்கிருந்து நகர மனமில்லாமல், “உண்மை சுடும். கோபம் வரும். நான்  உண்மையைச் சொன்னேன்.” என்று கீர்த்தனா அழுத்தமாக கூறினாள்.

“நான் உன்னை ஒரு வேண்டாத பொருள் மாதிரியா நடத்துறேன்?” என்று விஜயேந்திரன் கேட்க, கீர்த்தனா மௌனித்தாள்.  “நான் உன்னை ஒரு நாள் கஷ்டப்படுத்திருக்கேனா? உனக்கு நான் மரியாதை கொடுக்கலை? உன் மேல் நான் அக்கறையா இல்லை? உனக்குப் பிடித்ததைச் செய்ய உனக்குச் சுதந்திரம் இல்லை?” என்று கீர்த்தனாவை நெருங்கி கொண்டே ஒவ்வொவரு கேள்வியாக  விஜயேந்திரன் கோபமாகக் கேட்க, அவர்கள் இடைவெளி மெல்லமாக குறைந்து கொண்டே வந்தது.

அவர்கள் இடைவெளி குறைய, குறைய, விஜயேந்திரனின் கண்களில் உள்ள ரௌத்திரம், கீர்த்தனாவின் மனதைத் தாக்க,  கீர்த்தனா அச்சத்தோடு  பின்னே நகர்ந்தாள்.

அவள் விலக, விஜயேந்திரனின் கோபம் அதிகரிக்க, கீர்த்தனாவின் கைகளை இறுகப் பற்றினான் விஜயேந்திரன். கீர்த்தனாவின் விலகல், இவனுக்கு ஏன் வலிக்க வேண்டும் என்று விஜயேந்திரனுக்கு தெரியவில்லை. அவன் மனம் தன் பக்கம் திரும்பிக் கொண்டு இருக்கிறது என்று அந்த பேதைப்பெண்ணும் புரிந்துகொள்ளவில்லை.

‘பேசுறது ஒன்னு. செய்றது ஒன்னு.’ என்ற எண்ணி, கீர்த்தனா தன் பற்களை நறநறக்க, “கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லு.” என்று அவன் மிரட்ட, “ஆமாம்.” என்று அழுத்தமாகக் கூறினாள் கீர்த்தனா.

“ஓ!” என்று அவன் பெருமூச்சோடு கூற, அந்த வெப்பக்காற்று அவள் குளிர்ந்த தேகம் தொட அவனைச் சிலிர்ப்போடு பார்த்தாள் கீர்த்தனா.  ‘என்ன நினைச்சி, என்னை இப்படி கிட்டக்க பிடிச்சி வச்சிருக்காங்க?’ என்றெண்ணி யோசனையோடு அவனைப் பார்க்க, “இனி உனக்குப் பிடிக்காததைத் தான் செய்வேன். நீ சொல்றதை கேட்க மாட்டேன்.” என்று அவன் அழுத்தமாகக் கூற, ‘இப்ப மட்டும் என் கிட்ட கேட்டுட்டு தான் எல்லாம் செய்ற மாதிரி.’ என்று கீர்த்தனா எண்ணினாள்.

“என்ன பாக்குற? ஒகே கீர்த்தி?” என்று அவன் சீண்ட, “எங்க அம்மா, அப்பா வச்ச பெரு.” என்று அவள் உதட்டைச் சுழித்து  கூற, “எல்லாருக்கும் அம்மா, அப்பா தான் பெயர் வைப்பாங்க.” என்று அவன் பெரிய கண்டுபிடிப்பு போல கூற, “செம்ம ஜோக்…” என்று தன் பற்கள் தெரியச் சிரித்தாள் கீர்த்தனா.

ஒற்றை விரலால் கீர்த்தனாவின் முகத்தை உயர்த்தி, “இனி இப்படி பேசாத, நான் பழைய மாதிரி இருக்க மாட்டேன். எதோ நம்ம பக்கம் தப்பு இருக்குனு, கொஞ்சம் பொறுமையா போனா, நீ ரொம்ப பேசுற. நான் வேற மாதிரி நடந்துப்பேன்.” என்று அவன் மிரட்ட, ‘அவங்க தானே லவர் இருக்குனு சொன்னாங்க? இப்ப இப்படி பேசுறத பார்த்தா எதோ எனக்குப் பழைய  லவ் இருக்கிற மாதிரி தெரியுது?’ என்றெண்ணி தன்னை தானே நொந்து கொண்டு, அவனை மேலும் கீழும் பார்த்தாள் கீர்த்தனா.

“உள்ள வா கீர்த்தி.” என்று அவன் கண்டிப்போடு  அழைக்க, மேலும் அங்க நின்று அவனிடம் மேலும் தர்க்கம் செய்ய விருப்பமில்லாமல், உள்ளே சென்றாள் கீர்த்தனா.

குளியலை முடித்துவிட்டு, சந்தன நிற பூக்கள் கொண்ட கருப்பு நிற புடவையில் சிலையாய் ஜன்னல் அருகே நின்றாள் கீர்த்தனா.  “கீர்த்தி.” என்று அவன் குரலை மென்மையாக அந்த அறையில் ஒலித்தது. “என்னவோ, என் பெயரை சுருக்கினால் பிடிக்காது. அப்படி கூப்பிடாதீங்க.” என்று அவள் கூற, “எனக்கு பிடிச்சிருக்கு.” என்று தோள்களைக் குலுக்கினான் விஜயேந்திரன்.

கீர்த்தனாவின் கூந்தல் சுருண்டு, அவள் முகத்தில் விழ, அதை ஒதுக்கி விட விஜயேந்திரனின் கைகள் பரபரத்தது. ஏதோ ஒன்று அவனைத் தடுக்க, அவன் தடுமாறினான். கீர்த்தனாவை விஜயேந்திரனின் கண்கள்  அப்பட்டமாக ரசிக்க ஆரம்பித்தது. இரவு வேளை. ஜன்னல் வழியாக அறையைத் தீண்டிய குளிர் காற்று. யாருமில்லா தனிமை. அறிவு, மனம் இரண்டும் ஏற்க மறுத்தாலும் கணவன் என்ற உரிமை நிஜம் என்ற சூழ்நிலை. விஜயேந்திரன் தடுமாற ஆர்மபித்தான்.

“நீ ஏன் எப்பவும் சேலை கட்டுற கீர்த்தி?” அவன் கேள்வி மென்மையாக வெளிவந்தது. அவன் எண்ணம், அவன் மனம் அவனுக்கு புரிந்ததோ இல்லையோ? அவளுக்குப் பல செய்திகள் கூறியது.  ‘விஜயேந்திரனுக்கு தான் மனைவி என்றது நிஜம்.’ என்று கீர்த்தனாவின் அறிவு எடுத்து உரைத்தாலும், ‘ஆனால்?’ என்ற கேள்வி கீர்த்தனாவின் மனதில் மலையளவு பெரிதாக அமர்ந்தது.

‘நான் இவருக்கு மனைவி. ஆனால், அவங்க மனம், அறிவு முழுக்க முழுக்க நான் மட்டும் தான் இருக்கணும். அந்த லீலா…’ என்ற எண்ணம் தோன்ற, “நாம சென்னை கிளம்புவோமா?” என்று கேட்டாள் கீர்த்தனா.

இந்த முறை விஜயேந்திரன் கோபப்படவில்லை. எங்கோ இடரும் எண்ணம் அவன் மனதிலும் தோன்றியது. ‘என்னால், லீலாவுக்கு துரோகம் செய்ய முடியாது. அவள் வாழ்வை நாசமாக்கிய குற்ற உணர்ச்சி என்னைக் கொன்றுவிடும். கீர்த்தனாவிடம் இந்த நெருக்கம் நல்லதில்லை.’ என்ற எண்ணம் தோன்றச் சம்மதமாகத் தலை அசைத்து அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

அந்த இரவு வேளையில் அவன் காரை கிளப்ப, அங்கு மௌனம் நிலவியது.  கார் சாலையில் வேகமாகச் செல்ல, அந்த மௌனத்தைக் குலைக்க, பாடலை ஒலிக்கச் செய்தான் விஜயேந்திரன்.

 “மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்ட உடன் சுட்டதென்ன”

இருவருக்கும் அவன் கடற்கரையில் அவள் கைகளைப் பிடித்த காட்சி கண்முன் விரிய, அவர்கள் அறியாமல் அவர்கள் விழிகள் ஒருவரை ஒருவர் தழுவ, நான்கு கண்களும் பேசிய மொழிக்கு அந்த கார் மட்டுமே சாட்சி.

 “கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடதென்னும் வானம் உண்டோ சொல்”  என்ற வரிகள் வர, இருவரும் சுய அலசலில் இறங்க,

“மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே.”  என்று பாடல் மீண்டும் தொடங்க, இருவரும் தடுமாறினார்.

 

“தாமரை மேலே நீர் துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன…” கீர்த்தனாவின் விழிகள் அவனைக் கேள்வியாய் தொடர,

“சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்கை தான் என்ன சொல்…” பாடல் ஒலிக்க, மேலும் பாடலை கேட்க மனதில் தைரியம் இல்லாமல், பாடலை அணைத்தான் விஜயேந்திரன்.

ஏன்னென்று கேட்க கீர்த்தனாவின் மனம் துணியவில்லை. அவளுக்கும் அந்த அமைதி தேவைப் பட்டது போலும்!

அதே நேரம் இரவு வேளையில், அவர்கள் அறையில் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டே, முகத்தில் கிரீம் அப்ளை செய்தபடி கண்ணாடி வழியாக, தன் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா.

அவளைப் பார்த்த முகுந்தன், எழுந்து அவள் அருகே சென்று பின்னோடு அணைத்துக் கொண்டான்.

“நீரு… என்ன டீ கிரீம் இது? இவ்வுளவு மணமா இருக்கு?” என்று நிரஞ்சனாவின் கழுத்தில் முகம் புதைத்து அவளை வாசம் செய்தபடி முகுந்தன் கேட்க, “முகுந்த்.” என்று மெல்லமாக அழைத்தாள் நிரஞ்சனா.

“சாயங்காலம், உன் பார்வைக்குப் பொருள் புரிஞ்சுது நீரு. அது தான் உன் எக்ஸாமுக்கு முன்னாடி, உங்க வீட்டில் யாரையாவது, பார்த்தா நீ சந்தோஷமா இருப்பன்னு உன்னை உன் தங்கையைப் பார்க்க ஏற்பாடு பண்ணினேன். வேற என்ன வேணும்? தயங்காமல் கேளு நீரு.” என்று அவளை அதே நெருக்கத்தில் வைத்துக் கூற, நிரஞ்சனா முகுந்தன் பக்கம் திரும்பிக் கொண்டு அவன் முகம் பார்த்தாள்.

“ஸ்வாதி, உங்களைப் பயங்கரமா பாராட்டிட்டா. நான் உங்களை நல்லா பார்த்துக்கணும்னு அட்வைஸ் வேற.” என்று நிரஞ்சனா அவன் தோள் மீது கைபோட்டுக் கூற, “ஆகான்?” என்று அவன் கேட்க மீண்டும் தயங்கினாள் நிரஞ்சனா.

அவள் கூறட்டும் என்று அவன் காக்க, “நீங்க என்னை விரும்புற அளவுக்கு, நான் உங்களை விரும்பலையோ? எப்பப்பாரு, நீங்க தானே எனக்கு எதாவது செய்யறீங்க?” என்று அவன் பேச அவள் உதடுகளை தன் விரல்களால்  மூடினான் முகுந்தன்.

“நீ என் மேல வச்சிருக்கிறது, காதல், அன்பு  இதெல்லாம் இல்லை. அதுக்கும் மேல. நம்பிக்கை.” என்று முகுந்தன் கூற, அவனை புரியாமல் பார்த்தாள் நிரஞ்சனா. “இந்த சின்ன மூளைக்கு அதெல்லாம் புரியாது. படு. நாளைக்கி எக்ஸாம். நல்லபடியா முடிஞ்சவுடனே. நாம ஒரு டூர் போலாம். ஒகே நீரு?” என்று அவன் கேட்க, சிரித்த முகமாகத் தலை அசைத்தாள் நிரஞ்சனா.

‘உன் நம்பிக்கையைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கு.’ என்றெண்ணியபடி தன் மனைவியை ஆழமாகப் பார்த்தான் முகுந்தன்.

அன்பு, காதல், நம்பிக்கை இதன் மேல் கட்டப்பட்டு யாரின் தலையீடு இல்லாமல் சுமுகமாக இவர்கள் வாழ்க்கைச் செல்ல, விதி, சமுதாயம், குடும்பம் சுற்றுப் புறம் இவர்களை நிம்மதியாக வாழ விடுமா? தாமரை இலை மேல் நீர் போல் வாழும் தம்பதியைப் பிரிந்து செல்ல அனுமதிக்குமா இந்த சமுதாயம்.

பல திருப்பங்களோடு கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…