கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 31

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 31

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 31

கீர்த்தனா விஜயேந்திரனின் மார்பில் விசும்ப, அவள் காதில் அவள் கேட்ட வார்த்தைகள் எதிரொலித்தது.

‘என்னை பிரெண்டுன்னு சொன்னீங்க. உங்க எல்லா பிரென்ட் கிட்டயும் இப்படி தான் நடந்துப்பீங்களா?’ என்று அவள் கேட்டது நினைவு வர, நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள் கீர்த்தனா. அவன் கண்களில் நீர் ததும்பி நின்றது.

“நீங்க பண்ணது தப்பு தான். என்னால், அதை மறக்க முடியுமான்னு தெரியலை. ஆனால், நான் உங்களை இப்படிக் கேட்டது, என்னை நானே அசிங்க படுத்திகிட்ட மாதிரி.” என்று அவள் கண்கலங்க, “விடு கீர்த்தி. ஏதோ பதட்டத்துல கேட்டுட்ட.” என்று விஜயேந்திரன் அவளைச் சமாதானம் செய்தான்.

“என்னை திட்டிருங்க.” என்று கீர்த்தனா பரிதாபமாகக் கூற, மறுப்பாகத் தலை அசைத்தான் விஜயேந்திரன்.

“நான் செய்த தப்பு தானே, உன்னை இப்படிப் பேச வச்சிருச்சு. உன்னை திட்டுற உரிமை, தகுதி எதுவும் எனக்கு கிடையாது. நான் உனக்குச் செய்த தப்பு. ரொம்ப பெருசு.” என்று விஜயேந்திரன் கூற, ‘இவங்க நல்லவங்க தான். ஆனால், அந்த ஒரு நாளை தவிர்த்துப் பார்த்தால்! என்னால் அந்த நாளை தவிர்க்க முடியுமா? மறக்க முடியுமா?’ என்ற எண்ணத்தோடு விலகி நின்றாள் கீர்த்தனா.

மீண்டும் குளிர்ந்த காற்று வீச, “உள்ள போவோமா?” என்று கேட்டான் விஜயேந்திரன். கீர்த்தனா தலை அசைக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

கீர்த்தனா மெத்தையில் படுத்துக் கொண்டு, விசும்பினாள். அவள் அழுகைக்குக் காரணம், அவள் பேசிய பேச்சுக்கள் மட்டுமில்லை. பல ஏமாற்றங்கள். திருமணமான நாள் முதல் இன்று வரை. அன்பைக் கொடுக்க அவன் மறுத்த நாட்கள்… அவன் கொடுக்க காத்திருந்தும் ஏற்க மறுக்கும் இவள் மனம் என்று அலை மோதிய எண்ணங்கள் கண்ணீராய் வெளி வந்து கொண்டிருந்தது.

விஜயேந்திரன் மௌனமாக மேல் சுவரைப் பார்த்தபடி படுத்திருந்தான். கீர்த்தனாவின் விசும்பல் சத்தம் அடங்கவில்லை.

‘நான் இவளை என்ன சொல்லி சமாதான படுத்துவேன். நான் செய்த தவறால், அவள் மனதில் ஏற்பட்ட வலி, ஒரு நாளும் ஆறாதோ? லீலா இல்லாததால் இவளிடம் வந்து விட்டேன் என்ற இவள் எண்ணம் ஒரு நாளும் மாறாதோ?’ பல கேள்விகள் தோன்றி விஜயேந்திரனை அச்சப்படுத்தியது.

தன் எண்ண ஓட்டத்தின் வடிகாலாகப்  பாட ஆரம்பித்தான் விஜயேந்திரன்.

எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று    

நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு    

ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு    

சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு”

விஜயேந்திரனின் பாடல் இசையோடு இனிமையாக ஒலித்தாலும், அவன் குரல் சோகத்தை அப்பிக் கொண்டு ஒலித்தது.

அவன் பாடலில், கீர்த்தனா விசும்பல் சற்று குறைந்தது.

“எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது    

எப்போதுமே பகலாய் போனால்    

வெப்பம் தாங்காதே…”  

தனக்குத் தேவையானதை எடுத்து லாவகமா பாடினான் விஜயேந்திரன்.

“சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது    

சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது    

தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்    

நம் உறவின் பெயரேத்தெரியாதோ உனக்கு?   

உயிரைத் தருகின்றாய் 

உன் உச்சந்தலையைத் தீண்ட    

ஓர் உரிமை உண்டா பெண்ணே    

உன் உள்ளங்காலில் தலையைச் சாய்த்தால் போதும் கண்ணே? “

என்று விஜயேந்திரன் கேள்வியாக நிறுத்தி மன்னிப்பை யாசிக்க, அந்த கேள்வியில் கீர்த்தனாவின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

“ஓர் உரிமை உண்டா பெண்ணே    

உன் உள்ளங்காலில் தலையைச் சாய்த்தால் போதும் கண்ணே?”

என்று விஜயேந்திரன் அந்த வரியில் அழுத்தம் கொடுத்துப் பாட,

மனதால் தோய்ந்து அழுது கொண்டிருப்பவள் என்று சொல்ல முடியாதபடி அந்த கேள்வியில் வேகமாக உருண்டு அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் கீர்த்தனா.

“ஏன் இப்படி எல்லாம் பாடுறீங்க?” என்று கீர்த்தனா அழுகையினோடு கேட்க, “நீ பாட மாட்டேங்கறியே கீர்த்தி. அது தான்.” என்று வேதனையோடு கூறினான்.

“நான் பாடுறேன். நீங்க இப்படி எல்லாம் என் கிட்ட பாடாதீங்க… நான் கொஞ்ச நாளில் பாடுறேன்… கண்டிப்பா…” என்று கீர்த்தனா இறைஞ்சுதலாக உறுதிமொழியோடு  கட்டளையிட, “கீர்த்தி…” என்று அழைத்து, அவள் தலை முடியை ஆதரவாகக் கோதினான் விஜயேந்திரன்.

“நான்… நான்… நான்… எங்க அப்பா கிட்ட போறேன்.” என்று சிறுகுழந்தையாய் கூறினாள் அவள்.  “எதுக்கு?” என்று உரிமையாக ஒலித்தது அவன் குரல். காலையில் இல்லாத உரிமையைக் கொடுத்தது எது? யார்? என்ற கேள்விகள் எதுவும் அவனுள் எழவில்லை. இயல்பாய் அவளும் அவன் கைகளுக்குள் பொருந்தி இருந்தாள்.

“ம்… க்கும்…” என்று அவள் விசும்பல் தொடர, “எதுக்குன்னு கேட்டேன்?” என்று அழுத்தமாகக் கேட்டான் விஜயேந்திரன். “எனக்கு உங்களை பிடிக்கலை.” என்று கீர்த்தனா அழுகையினோடே கூற, “ம்… சரி…” என்று அவள் பேச்சுக்கு ஆமோதிப்பாக ம் கொட்டினான் விஜயேந்திரன்.

“என்ன சரி?” என்று அவன் மேல் சாய்ந்து கொண்டு, முகத்தை மட்டும் உயர்த்தி அவள் கோபமாகக் கேட்க, “உண்மையை சொல்லு.” என்று விஜயேந்திரன் கண்களை அவள் முகத்தில் பதித்துக் கேட்டான் விஜயேந்திரன்.

கீர்த்தனா காட்டும் நெருக்கம், தன்னை குற்றம் சாட்டிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு என்று விஜயேந்திரனுக்கு புரிந்தது.

‘அவள் என் மேல் கொண்ட அன்பு, மனைவி என்ற உரிமை… அதனால் கீர்த்தியால் இயல்பாக இருக்க முடிகிறது. நான் தான் முடிவு எடுக்கத் தெரியாமல் தடுமாறி, இவளைக் காயப்படுத்திவிட்டேன். கீர்த்தியின் மனதில் என் மேல் முழு நம்பிக்கை வர வேண்டும். என் மனதில் அவள் மட்டும் தான் இருக்கிறாள். அவள் மட்டுமே இருக்கிறாள், என்று அவளுக்குப் புரிய வைக்க வேண்டும்.’ என்று விஜயேந்திரன் தனக்கு தானே வலியுறுத்திக் கொண்டான்.

பதில் கூற முடியாமல், கீர்த்தனா விலகிச் செல்ல முயல, தன் கைகளை வாகாக அவள் செல்ல வழி இல்லாமலும், அதே நேரம் அவளைத் தொடாமலும், “எதுக்கு போகணும்?” என்று அழுத்தமாகக் கேட்டான் விஜயேந்திரன். ‘இந்த மனநிலையில் கீர்த்தனா அங்குச் செல்லக் கூடாது.’ என்று அவன் அறிவு அவனை எச்சரித்தது.

விஜயேந்திரனின் கைவளைவிற்குள் இருந்த கீர்த்தனா, அவன் முகம் பார்த்து, “எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.” என்று மென்மையான குரலில் கூறினாள் கீர்த்தனா.

இத்தனை நேரக் களேபரம் மறந்து, விஜயேந்திரன் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்றுத் தோன்றியது.

“சரியா சொல்லு பிடிச்சிருக்கா? பிடிக்கலையா?” என்று அவன் நேரடியாகக் கேட்க, “உங்களை பிடிச்சிருக்கு. நீங்க செய்த வேலை பிடிக்கலை. இங்க இருந்தா நான் உங்களை கஷ்டப்படுத்திருவேன்னு பயமா இருக்கு. என்னால், அதை மறக்க முடியலை. நிதர்சனம் அறிவுக்கு புரிஞ்சாலும், என் மனசுக்குப் புரியலை. நான் விலகி இருந்தால், ஒரு வேளை என் மனசு மாறலாம்.” என்று கீர்த்தனா கூற, “மாறலைனா?” என்று அவன் புருவம் உயர்த்த, அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் கீர்த்தனா.

“நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்று விஜயேந்திரன் கேட்கத் தலை அசைத்தாள் கீர்த்தனா. “இன்னும் கொஞ்ச நாள் நம்ம வீட்டில் இரு. நீ என்னைக் காயப்படுத்தினாலும், திட்டினாலும் நான் அதை வாங்கிப்பேன். நான் செய்த தப்புக்குத் தண்டனை அது தான்.” என்று விஜயேந்திரன் உறுதியாக கூற, அவன் பேச்சை தன் கைகளால் நிறுத்தி, மறுப்பாகத் தலை அசைத்தாள் கீர்த்தனா.

அவள் கைகளை அகற்றி, “நீ போகாத. இங்க என் கூட நம்ம வீட்டில் இரேன்.” என்று அவன் கெஞ்சுதலாகக் கேட்க, அவன் விழிகளில் தன்னை தொலைத்து சம்மதமாகத் தலை அசைத்தாள் கீர்த்தனா.

நாட்கள் நகர, அன்றைய விடியல் நிரஞ்சனாவுக்கும், முகுந்தனுக்கு சிற்பபாக அமைந்தது.

“டேய்… டேய்… சூப்பர் டா… உன் கைகள் எல்லா வேலையும் செய்ய ஆரம்பிச்சிருச்சு.” என்று நிரஞ்சனா ஆரவாரத்தோடு கூற, “எல்லாம் உன்னால் தான். எனக்கு காலில் கூட நல்ல வித்தியாசம் தெரியுது. சீக்கிரம் நடக்க ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கறேன். எல்லாம் உன்னால் தான் நீரு.” என்று முகுந்தன் கைகளை மேலே தூக்கி, அசைத்துக் கொண்டு கூற, “ஆமாம்… என்னால் தான்… ஏன்னா, நான் தானே டாக்டர்க்கு படிச்சிருக்கேன்.” என்று நிரஞ்சனா நக்கல் தொனித்த குரலில் கூறினாள்.

“அப்படி இல்லை டீ… உன் உழைப்பு அதிகம். தேங்க்ஸ் நீரு.” என்று முகுந்தன் தீவிரமாகக் கூற, “ஐயடா. உன் தேங்க்ஸ் யாருக்கு வேணும்.” என்று நிரஞ்சனா ரோஜா செடிக்கு அருகே சென்று கேட்டாள்.

முகுந்தன், நிரஞ்சனாவின் அழிச்சாட்டியத்தை ரசித்தபடி அவளைப் பார்க்க, “உன் வீல் சேரை நீயே ஆபரேட் பண்ண முடியும். வா, வந்து, எனக்கு ரோஜா பறித்து என் தலையில் வை முகுந்த்.” என்று நிரஞ்சனா அவனை மிரட்டினாள்.

ரோஜாச் செடியிலிருந்த மலரைப் பறித்து, முகுந்தன் நிரஞ்சனாவின் தலையில் சூட, நிரஞ்சனாவின் கண்கள் கண்ணீரைத் தாரை தாரையாக வடித்தது.

நிரஞ்சனாவை தன் பக்கம் திருப்பிக் கொண்டு, அவளை தன் மடி மீது அமர வைத்தான் முகுந்தன்.

அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கதறினாள் நிரஞ்சனா. “நீரு…” அவள் முகம் உயர்த்தி, கண்ணீரைத் துடைத்தான் முகுந்தன்.

“நீரு… ரொம்ப வருத்தப்பட்டல்ல?” என்று அவன் அவள் கண்களைப் பார்த்தபடி கேட்டான் முகுந்தன். “ச்… ச… அப்படி எல்லாம் இல்லை. ஆனால், உன்னைக் கல்யாணம் பண்ணி இப்படி ஆக்கிட்டனோன்னு செத்துட்டேன் டா. நீ காரில் தான் போயிருப்ப. என்னால் தான், இப்படி… இப்படி…” என்று நிரஞ்சனா மீண்டும் விசும்ப, “ஏய்… என் கை சரியாகிருச்சு. உன் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வர விடமாட்டேன். உன் கண்ணீர் கீழ வரதுக்கு முன்னாடி என் கைகள், அதைத் தாங்கி பிடிக்கும். இதெல்லாம் நான் சொன்னென்கிறதுக்காக இப்படி அழுதுகிட்டே இருக்கக் கூடாது. எனக்கும் கை வலிக்கும்.” என்று முகுந்தன் கொஞ்சினான்.

முகுந்தன் பேச்சில் சிரிப்பினொடு, “போடா…” என்று அவள் அவன் தோளில் அடிக்க, “அடிக்காத டீ.” என்று அவன் அவள் கைகளைப் பற்றினான்.

“சரி வா… ரூமுக்கு போகலாம்.” என்று நிரஞ்சனா எழுந்து செல்ல, ஜன்னல் வழியாக பூமாவின் கண்கள் இவர்களை நோட்டமிட, “டேய்… உங்க அம்மா, நம்மளை பாக்குறாங்க டா.” என்று முகுந்தனின் காதில் கிசுகிசுத்தாள் நிரஞ்சனா.

அவர்கள் அறையை கடக்கும் பொழுது , “முகுந்த். இன்னும் கொஞ்ச நாளில், நீ நடக்க ஆரம்பிச்சுருவ, அப்புறம் என்னை தூக்கிட்டு தான் தோட்டத்திற்கு வரணும்.” என்று நிரஞ்சனா ஜன்னல் வழியாக பார்த்தபடி கூற, “கருமம்… கருமம்…” என்று காதுகளை மூடினார் பூமா.

நவநீதன் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, “ஐயோ… இவங்க பண்ற வேலை தாங்கலை. கை, கால் முடியாதப்பவே, இவங்க ரொமான்ஸ் ஓவரா இருந்துச்சு. இப்ப, முடியலைங்க.. அவன் மடியில் அவ உட்காரதும்… இவளை அவன்… ச்ச… நான் என் வாயால் சொல்லமாட்டேன்… தோட்டத்தில் வைத்து… கண் கொண்டு பார்க்க முடியல.” என்று பூமா புலம்பினார்.

“நீ ஏன் பாக்குற?” என்று நவநீதன் கேட்க, “நான் எங்க பார்த்தேன்? பாக்குற மாதிரி நடந்துக்குறாங்க.” என்று கூறிய பூமா, “ஏங்க… விஜய், கீர்த்தனா இப்படியா இருக்காங்க.” என்று பூமா கேட்க, “அதை அவங்க பால்கனியை பார்த்தா தெரியும்.” என்று நமட்டு சிரிப்போடு கூறினார் நவநீதன்.

பூமா, தன் கண்களை விரித்து, “நீங்க பார்த்தீங்களா?” என்று பூமா கேட்க, “நேத்து ராத்திரி  ஏதோ தோட்டத்தில் சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. அப்ப கண்ணில் பட்டுது. நான் பார்க்கலை ” என்று நவநீதன் கூற, “ஆஅ…” என்று வாயைப் பிளந்தார் பூமா.

“என்னங்க… என்னங்க…” என்று மீண்டும் பூமா, தயக்கத்தோடு பேச ஆரம்பிக்க, “என்ன?” என்று கேட்டார் நவநீதன்.

“இந்த பொண்ணு நல்லவ தாங்க.” என்று பூமா தயக்கத்தோடு கூற, “எந்த பொண்ணு?” என்று நக்கலாக கேட்டார் நவநீதன்.

“அதுதாங்க… நம்ம முகுந்த்  கட்டிக்கிட்டு வந்த பொண்ணு.” என்று பூமா கூற, “ஏன் பூமா? அவ நல்லவன்னு தெரியுது. வேற ஒரு பொண்ணு இந்த நிலைமையில், இவ்வளவு பக்குவமா நம்ம முகுந்தனை பார்த்துப்பாளா? அன்னைக்கு நிரஞ்சனா, கீர்த்தனா கிட்ட பேசினதைக் கேட்ட, பாவமா இருந்துச்சுன்னு சொன்ன… இப்ப கூட, மருமக, நிரஞ்சனான்னு சொல்லக் கூடாதா?” என்று நவநீதன் கேட்டார்.

தன் கணவனின் பேச்சில் உள்ள நியாயம் மனதைத் தொட, பூமா மௌனம் காத்தார்.

“பூமா… கல்யாணம் நடந்த விதம் தப்பு தான். ஆனால், பாவம் என்ன சூழ்நிலையோ? நிரஞ்சனாவை பார்த்தா, பணத்துக்காக கல்யாணம் பண்ண மாதிரி தெரியலை. ஏதோ விரும்பிட்டாங்க. கல்யாணம் பண்ணிகிட்டாங்க…” என்று நவநீதன் மேலும் பேச, “மருமகளா ஏத்துக்கிட்டு ரொம்ப நாள் ஆச்சு. ஆனால், கீர்த்தனா கிட்ட நடக்குற மாதிரி நிரஞ்சனா கிட்ட நடக்க முடியாது.” என்று பூமா பட்டென்று கூற, நவநீதன் பூமாவை கேள்வியாகப் பார்த்தார்.

“ஆமாங்க… கீர்த்தனா நாம, என்ன சொன்னாலும் கேட்பா. இவ அப்படி இல்லைங்க… என்னைக் கிண்டல் பண்ரா!” என்று பூமா குற்றம் வாசிக்க, நவநீதன் மாமியார், மருமகள் பனிப்போரை ரசித்துச் சிரித்தார்.

அதே நேரம், நிரஞ்சனா, முகுந்தனிடம், “முகுந்த்… நான் உன்னை, என்னை தோட்டத்துக்கு  தூக்கிட்டு வரணும்னு சொன்னேன். நீ சரின்னு சொல்லவே இல்லை.” என்று நிரஞ்சனா சண்டைக்குத் தயாராக, “நீ… என் கிட்டயா சொன்ன? ஜன்னல் வழியா எங்க அம்மா கிட்ட தானே சொன்ன?” என்று முகுந்தன் நிரஞ்சனாவை நக்கலடிக்க, அகப்பட்டுக் கொண்ட நிரஞ்சனா மேலும் மேலும் ஏதோ பேச… அவள் பேச்சை நிறுத்த, அவளை வேகமாக இழுத்து தன் சக்கர நாற்காலியில் சாய்த்து, அவள் இதழ்களை தன் இதழ்களால் சிறை செய்தான்.

நிரஞ்சனா, பேச முடியாமல் அவன் இதழணைப்பில் வெட்கி சிவக்க, அந்த குங்கும சிவப்பு, முகுந்தனை ஏதேதோ செய்ய, அவன் கைகள் எல்லை மீற, நேற்று கீர்த்தனாவை நெருங்கிய வண்டு, இன்று இவர்களை நெருங்க வெட்கப்பட்டுத் திரும்பிச் செல்ல, அந்த ரிங்கார சத்தத்தில் தன்னிலை உணர்ந்த நிரஞ்சனா, “உங்க அம்மா டா…” என்று சத்தம் செய்ய, முகுந்தன் பதட்டத்தில் படக்கென்று தன் கைகளை உருவிக் கொண்டான்.

அவன் பதட்டம் கொடுத்த வேகம், பிடிமானமின்றி நிரஞ்சனா, கீழே விழ, அந்த நொடி பக்கென்று சிரித்து விட்டான் முகுந்தன்.

அவன் சிரித்ததில் கோபம் கொண்ட, நிரஞ்சனா தன் கைகளை உதறிக் கொண்டு தோம் தோமென்று நடக்க, அந்த சக்கர நாற்காலியை இயக்கிக் கொண்டு, அவள் பின்னே சென்று, “நீ அம்மான்னு பொய் சொன்னதால் தான் இவ்வளவும் நீரு. சாரி டீ.” என்று முகுந்தன் நமுட்டு சிரிப்போடு, அவள் கோபத்தை ரசித்து கொஞ்சினான்.

“அம்மான்னு சொன்னா, என்னை கீழ விட்டருவியா? நான் கீழ விழுந்தா சிரிப்பியா?” என்று நிரஞ்சனா சண்டை பிடிக்க, “கீழ எங்க விழுந்த, லைட்டா சரிஞ்ச… பார்த்ததும், என்னை அறியாமல் சிரிப்பு வந்திருச்சு.” என்று அவன் அவள் கைகளை பிடித்தான்.

“உங்க அம்மா வந்தா என்னை விட்டருவியா? உனக்கு தான் எல்லாரும் இருக்காங்க… வருவாங்க.” என்று நிரஞ்சனா முணுமுணுத்தபடி கண்கலங்க, “நீரு. என் கால்கள் சரியானவுடனே, நான் உன்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அண்ணன், அண்ணி வைத்தோ, இல்லனா அம்மா, அப்பா வைத்தோ பேச சொல்றேன். சரியா?” என்று நிரஞ்சனாவின் உணர்வைப் பிடித்து, அவன் கூற, நிரஞ்சனா ஏதோ பேசுவதற்குள் அங்கு வந்தார் பூமா.

“முகுந்தன், உன் மனைவி ஏதோ வேண்டுதலுன்னு சொன்னா… நீ, உன் மனைவி, கீர்த்தனா, விஜய் எல்லாரும் கோவிலுக்கு போயிட்டு வாங்க.” என்று கூறினார் பூமா.

“சரி… அம்மா.” என்று முகுந்தன் கூற, “உன்கிட்டயும் தான் சொல்றேன்.” என்று பூமா கூற, சிரித்த முகமாகத் தலையை அசைத்தாள் நிரஞ்சனா, தன் மாமியார் தன்னிடம் முதல் முறையாகப் பேசிவிட்ட சந்தோஷத்தில்!

அனைவரும் கோவிலுக்குக் கிளம்பிச் செல்ல, முகுந்தன் நிரஞ்சனாவின் நெருக்கம், அன்று கீர்த்தனா வீட்டில் பார்த்த காட்சியை நினைவுபடுத்த, விஜயேந்திரனுக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றியது.

நிரஞ்சனா, முகுந்தனைக் கோவிலில் இறக்கி விட்டுவிட்டு, மீண்டும் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி காரை கீர்த்தனா வீட்டை நோக்கிச் செலுத்தினான் விஜயேந்திரன்.

கோவிலில்  நிரஞ்சனாவின்  குடும்பம் இருக்க, அங்கு அரங்கேறிய காட்சியில் முகுந்தன் செய்வதறியாமல் திகைத்தான்.

கீர்த்தனா வீட்டில், விஜயேந்திரனின் செய்கையிலும், சொல்லிலும் கீர்த்தனா பின்னே நடந்து சுவரில் சாய்ந்து நின்றாள். அவள் இமைகள் படபடக்க, அவள்  இதயம் வேகமாகத் துடிக்கச் செய்வதறியாமல் திகைத்தாள்.

கீர்த்தனாவின் இல்வாழ்க்கை கைகூடுமா? நிரஞ்சனாவை அவள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா?

பதிலைத்  தேடி கண்ணாடி மாளிகையில் நம் பயணம் இறுதிக் கட்டத்தை நோக்கி…

 

error: Content is protected !!