KKE–EPI 2

அத்தியாயம் 2

 

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும்.

 

வந்திருந்த பெண்கள் எல்லோரும் தமிழர்கள் மெய் லிங்கை தவிர. எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் இல்லாதவர்கள். ஒரே நாட்டில் இருந்தாலும், இந்த ட்ரீப்புக்காக மட்டுமே ஒன்றாக இணைந்தவர்கள்.

வேனின் மேல் லக்கேஜ்களை ஏற்றி அனைவரும் உட்கார உதவினான் மங்கி. ஓட்டுனரின் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் மெய் லிங்.

“எல்லோரும் செட்டில் ஆகிட்டீங்களா? காலை உணவு சாப்பிட கிளம்பலாமா?” என கேட்டான் ஜம்பு.

மற்றவர்கள் சரி என சொல்ல, மெய் லிங் மட்டும் விழித்தபடி அமர்ந்திருந்தாள். ட்ரைவரின் பின்னால் சீட்டில் அவள் அமர்ந்திருந்ததால் ரியர் வியூ கண்ணாடியின் வழி நோட்டமிட்டவனுக்கு அவளின் பேய் முழி புன்னகையை வரவழைத்தது.

“டேய் மங்கி! சைனா சிட்டுக்கு தமிழ் தெரியுமான்னு விசாரிடா” என ஏவினான் ஜம்பு.

பின்னால் திரும்பிய மங்கி,

“மெய் லிங், யூ அண்டர்ஸ்டேண்ட் தமிழ்?” என கேட்டான்.

“ஒன்லி பியூ வோர்ட்ஸ் லைக் சோறு வேணும், ஆமா, இல்லை, முடாள்(முட்டாள்), பத்தியம் (பைத்தியம்). தட்ஸ் ஆல்”

ஜம்பு தலையைக் குனிந்துக் கொண்டான். அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

‘சோறு வேணும் மட்டும் எல்லா நாட்டுக்கும், இனத்துக்கும் பொருந்தும் போல’ சிரிப்பில் அவன் முதுகு குலுங்கியது.

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி!!!! அண்ணே தமிழ் வராதாம். இனிமே எது சொல்லுறதா இருந்தாலும் தமிழும், இங்கிலீசும் கலந்து சொல்லுங்க” என்றான் மங்கி.

“எனக்கு இங்கிலீசு வந்தா, உன்ன ஏன்டா அவ கிட்ட பேச சொல்லுறேன்! இவன் ஒருத்தன் நம்ம பிரச்சனைப் புரியாம நொய் நொய்ன்னுட்டு. சாப்பட போறோம்னு அந்த சைனா மொட்டு கிட்ட சொல்லு”

அவளிடம் ஆங்கிலத்தில் சாப்பிட போவதாக சொல்லியவன் ஜம்புவிடம்,

“நல்லா ரைமிங்கா தான் பேசறீங்க அண்ணாத்தே! சிட்டு, செட்டு, மொட்டுன்னு! அவளுக்கு மட்டும் புரிஞ்சது சீனத்துலயே கிழி கிழின்னு கிழிச்சிருவா!” என்றான்.

“அவள பார்த்ததுல இருந்து ப்ளோல வருதுடா! பாஷை தெரியாம, என்ன தைரியத்துல இங்க வந்துருக்கா? அதுவும் டெம்பிள் டூர்! வந்தவங்க எல்லாம் வயசானவங்க, இவ மட்டும் தான் சின்ன வயசா இருக்கா! இந்த வயசுல நம்ம சாமி மேல இவளுக்கு என்ன பக்தின்னு தெரியலையே”

“நம்ம கடமை, குடுத்த காசுக்கு பத்திரமா பாத்துகிட்டு சுத்தி காட்ட வேண்டியது. எதுக்கு வந்துருக்காங்கன்னு நமக்கு ஏண்ணா ஆராய்ச்சி? ஆனாலும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குண்ணா. நமக்கு கோவா ட்ரீப்லாம் குடுக்காம எப்ப பாரு கோயில் குளம்னு தள்ளி விடறாங்க. எப்பவும் ஓல்ட் கட்டைங்களையே பார்த்து பார்த்து கண்ணுலாம் கருவடைஞ்சி போச்சு. இன்னிக்குத்தான் ஒரு சேஞ்சா இருக்கு. நீங்க வேணா பாருங்களேன், இந்த ட்ரீப் ஃபன்னா இருக்கப் போகுது” மெய் லிங்கை லேசாகத் திரும்பி பார்த்து சிரித்து வைத்தான் மங்கி. அவளும் கள்ளமில்லாமல் சிரித்தாள்.

“டேய் மங்கி, கொன்னுருவேன்டா உன்னை. பரதேசி! இவங்கல்லாம் நம்ம கஸ்டமர்ஸ். மரியாதையா நடந்துக்கனும். ஜொள்ளிக்கிட்டு இருந்த, டங்குவார அத்துருவேன்” நன்றாக முறைத்தான் ஜம்பு.

“விடுண்ணா, சும்மா சொன்னேன். கோயில் குளத்துக்குப் போறப்போ இப்படிலாம் ஜொள்ள மாட்டேன். டோண்ட் வோரி”

வேனை ஒரு தரமான ஹோட்டலில் நிறுத்தினான் ஜம்பு.

“எல்லாரும் சாப்பிட போகலாம். நாற்பது நிமிஷத்துல சாப்பிட்டுட்டு வந்துறனும். அப்போத்தான் தங்கற இடத்துக்குப் போய் செக் இன் பண்ண சரியா இருக்கும்” ஜம்பு தமிழில் சொல்ல, அதையே ஆங்கிலத்தில் மெய் லிங்கிடம் சொன்னான் மங்கி.

உள்ளே நுழைந்த பெண்கள் இரு மேசைகளில் அமர்ந்தனர். இவர்கள் இருவரும் அவர்கள் கண் பார்வையில் இருக்கும்படி அருகிலேயே உட்கார்ந்தனர்.

மெய் லிங் மட்டும் இவர்கள் இருக்கும் மேசைக்கு வந்து ஜம்புவின் அருகில் அமர்ந்தாள்.

அவள் ஆங்கிலத்தில் அவசரமாகப் பேச, ஜம்பு பேய் முழி முழித்தான். அவளின் ஆங்கிலம் மங்கிக்கு கூட சற்று சவாலாகவே இருந்தது. இருவரின் முகத்தையும் பார்த்த மெய் லிங், பின் நிறுத்தி நிதானமாகப் பேசினாள்.

அவள் பேசிய வார்த்தைகளில், மணி(money) மட்டுமே புரிந்தது ஜம்புவுக்கு. அவள் முகபாவத்தை வைத்தாவது புரிந்துக் கொள்ளலாம் என அவள் முகத்தை கூர்ந்து நோக்கியவனுக்கு மூச்சடைத்தது. மிக அருகில் பார்க்க சைனா பொம்மை மாதிரியே இருந்தாள் அவள்.

‘வெத்தலை ஷேப்ல முகம், குட்டி சப்பை மூக்கு, சின்ன மேல் உதடு, சதைப்பற்றான கீழ் உதடு. ஆனா கண்ணு மட்டும் நம்ம தமிழ் பொண்ணுங்க மாதிரி முட்டையா இருக்கே. சீன படத்துல வர பொண்ணுங்களுக்கு கண்ணு இருக்கா இல்லையான்னு பூத கண்ணாடி வச்சு தேடுற அளவுக்கு சின்னதா இருக்குமே! புருவம் கூட நேர்த்தியா இருக்கே. மாசு மருவு இல்லாத முகத்துல, ஒரே ஒரு குட்டி மச்சம். அதுவும் தாவாங்கட்டையிலே. சைனா பட்டு ரொம்ப அழகா இருந்து தொலைக்கறாளே! எப்படி கட்டிக் காத்து பத்திரமா திருப்பி அனுப்பப் போறேனோ!’ பெரிய மூச்சொன்றை இழுத்து விட்டான் ஜம்பு.

“அண்ணே!” சத்தமான அழைப்பில் தன் உணர்வு பெற்றவன், சட்டென அவள் முகத்தில் இருந்துப் பார்வையை விலக்கினான்.

“சொல்லுடா, என்னவாம் இவளுக்கு?”

“சிங்கப்பூர் டாலர் தான் இருக்காம் அவங்க கிட்ட. அவங்க ப்ரேண்ட்லாம் இங்க வந்து மாத்துனா இன்னும் ரேட் கூட கிடைக்கும்னு சொன்னாங்களாம். அதனால இப்ப சாப்பிட காசு இல்லையாம்.”

“பரவாயில்ல சாப்பிட சொல்லு, காசு நான் கட்டிக்கறேன். அப்புறமா காசு மாத்த கூட்டிட்டுப் போறேன்.”

ஜம்பு சொன்னதை ஆங்கிலத்தில் அவளிடம் சொன்னவன், சாப்பாடு ஆர்டர் செய்ய சொன்னான் அவளை. மறுபடியும் பெண்கள் மேசைக்குப் போகாமல், ஜம்புவின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டாள் மெய் லிங்.

சிங்கப்பூரில் இரு முறை நண்பர்களுடன் இந்திய உணவு உண்டிருக்கிறாள். அவர்களே ஆர்டர் செய்துக் கொடுத்ததால், பெயர் தெரியவில்லை. ஏற்கனவே இவளை ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்க்கும் இவர்கள் முன்னே சாப்பாடு பற்றி தெரியாது என சொல்ல சங்கடப்பட்டுக் கொண்டு முதல் பக்க மெனுவில் ஒன்றாம் இடத்தில் இருந்த ஐட்டத்தை ஆர்டர் செய்தாள். உணவு வரவும், விழி விரித்தாள் மெய் லிங்.

வந்த சர்க்கரைப் பொங்கலை ஒரு வாய் வைத்தவள், முகத்தை அஷ்டக் கோணலாக்கினாள். இனிப்பு அவளுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதுவும் காலையிலேயே அறவே ஆகாது. காலை தேநீர் கூட சீனி இல்லாமல் தான். வேறு வழியில்லாமல் கஷ்டப்பட்டு விழுங்கினாள். இரண்டு வாய்க்கு மேல் முடியவில்லை.

“ஐ எம் நாட் ஹங்கரி” என சொல்லியவள் தட்டை நகர்த்தி வைத்து விட்டு வெறும் தண்ணீரை குடித்தாள். கண்ணை கரித்துக் கொண்டு கண்ணீர் வருவது போல இருந்தது அவளுக்கு. தன் அவசரத்தால் தெரியாத, புரியாத ஊரில் வந்து மாட்டிக் கொண்ட உணர்வில் தவித்துப் போனாள் மெய் லிங்.

ஓரக்கண்ணால் அவளையேப் பார்த்திருந்த ஜம்பு, தான் இன்னும் சாப்பிடாத இட்லியை அவள் புறம் தள்ளி வைத்தான்.

“சாப்பிடு” என சொல்லி சைகைக் காட்டினான்.

வேண்டாம் என தலையாட்டினாள் அவள்.

“எனர்ஜி வேணும். ஈட்” தமிழும் அவனுக்கு தெரிந்த ஆங்கிலமும் கலந்துக் கட்டி அடித்து விட்டான் ஜம்பு.

தோசை சாப்பிடிருக்கிறாள் அவள். இட்லி இதுவரை சாப்பிட்டது இல்லை. இரண்டு நாளாக சரியாக சாப்பிடாத வயிறு வேறு பேய் ஆட்டம் போட்டது.

“ஹொவ் டூ ஈட்?” என ஜம்புவைப் பாவமாகப் பார்த்துக் கேட்டாள் மெய் லிங்.

மெய்மறந்து இட்லியை மொக்கிக் கொண்டிருந்த மங்கியின் தட்டை தனதருகில் இழுத்த ஜம்பு,

“வேற ஆர்டர் பண்ணிக்கோடா” என அசால்ட்டாக சொல்லிவிட்டு, எப்படி சாப்பிடுவது என இவளுக்கு சொல்லிக் கொடுத்தான்.

அவன் சாம்பாரில் எப்படி இட்லியைக் குளிப்பாட்டி வாயில் வைத்தானோ, அதே போல இவளும் செய்தாள். இட்லியின் சுவை இவளுக்குப் பிடித்துவிட்டது. மடமடவென இரண்டு இட்லியும் காலி ஆனது.

“நைஸ்!” என்றபடி சிரித்தாள் மெய் லிங். அதற்குள் மங்கியின் அடுத்த இட்லி வந்திருந்தது. அதையும் தன்னருகில் இழுத்தவன், மெய் லிங்கிடம் கொடுத்தான்.

“நைஸ்? இன்னும் ஈட்” என சொன்னான். அவளும் மறுக்காமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

“அண்ணே! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். என் பாவம் உங்கள சும்மா விடாது. மனுஷன் இட்லில கை வைக்கறப்பலாம் பொசுக்கு பொசுக்குன்னு தட்டை இழுக்கறீங்க! எதை வேணும்னாலும் விட்டுக் குடுப்பான் இந்த மங்கி, தன் சாப்பாட்டை மட்டும் விட்டுக் குடுக்க மாட்டான்” பொங்கி விட்டான் அவன்.

“மறுபடியும் ஆர்டர் பண்ணிக்கடா. பாவம்டா சீனா லட்டு! வந்தாரை வாழ வைக்கும் நாமதானே, இவள நல்லா பார்த்துக்கனும். நம்ம பண்பாடுடா இது!” சமாளித்தவன் மங்கிக்கு இன்னும் இரண்டு ப்ளேட் ஆர்டர் செய்து கொடுத்தான்.

“மோர்(more) வேணுமா?” என மெய் லிங்கை கேட்கவும் தவறவில்லை ஜம்பு. மீண்டும் அவன் ஒரு பில்டர் காபி அடிக்க, இவள்,

“தே ஓ” என ஆர்டர் செய்தாள்.

பேரர் ஜம்புவைப் பார்த்து,

“என்னங்க சீனாக்கார பொண்ணு ஓ போட சொல்லுது? ஓன்னு ஒரு தண்ணியும் இல்லையே!” மண்டையை சொரிந்தார்.

“அப்படினா என்னடா மங்கி?”

“யாருக்குத் தெரியும்? இவ ஊருக்குக் கிளம்பறதுக்குள்ள நம்ம மண்டையில உள்ள முடிலாம் கொட்டிப் போயிரும் போல”

பால், சீனி போடாத தேநீரைத் தான் சிங்கப்பூர் மலாய் பாஷையில் கேட்கிறாள் என கேட்டுத் தெளிவுப் படுத்திக்கொண்டு ஆர்டர் செய்தான் மங்கி.

அவள் இரண்டு வாய் சாப்பிட்டு வைத்த பொங்கலை தன்னருகே நகர்த்திக் கொண்டான் ஜம்பு. அவள் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க,

“ஃபூட் நோ வேஸ்ட்!“ என சொல்லியவன் ஒரே வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டான்.

‘பொங்கல் கூடுதல் இனிப்பா இருக்கே! இவள் வாய் பட்டதுனாலேயா? வேணாம்டா ஜம்பு. லோக்கல் பார்ட்டிகளே உன் முகத்தப் பார்க்கறது இல்ல, இதுல சிங்கப்பூர் மேட் சைனா டால் எல்லாம் உனக்கு ரொம்பவே அதிகம். கண்ட்ரோல் பண்ணிக்கோ!’ தன்னையே திட்டியவன், மங்கியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு மெய் லிங்கை திரும்பிப் பார்க்காமல் வேனுக்கு சென்று விட்டான்.

எல்லோரும் வந்து ஏற மறுபடியும் பயணம் ஆரம்பித்தது. பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு வர, இவள் ஜன்னலில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள். அதிகாலை சென்னைக் காற்று, இவளைத் தாலாட்டி மடி ஏந்தியது. சில நாட்களாக வராமல் போக்குக் காட்டிய உறக்கம், இன்று ஆசையாக தழுவி கொள்ள ஜன்னல் கண்ணாடியில் சாய்ந்தவாறே உறங்கினாள் அவள். மேடு பள்ளம் தூக்கிப் போடும் போது மண்டை ஜன்னலில் முட்ட, கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்து தலையைத் தேய்த்துக் கொள்ளுபவள், மீண்டும் கண் சொக்க ஜன்னலில் போய் முட்டிக் கொண்டாள். அதைக் கவனித்த ஜம்பு பார்த்து பதமாக வேனை ஓட்டினான்.

இவர்களுக்கான தங்கும் இடம் வந்ததும், வேனைப் பார்க்கிங்கில் போட்டான் ஜம்பு. பணம் மாற்ற வேண்டியவர்களை அருகே இருந்த எக்ஸ்சேஞ்க்கு அழைத்து சென்றவன், அவர்களுக்கு உதவினான். அதற்குள் லக்கேஜை எல்லாம் இறக்கி இருந்தான் மங்கி. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் செக் இன் சீக்கிரமாக முடிந்தது.

எல்லோருக்கும் தனி தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் சின்ன குழு, அதோடு ஒருத்தரை ஒருத்தர் அறியாதவர்கள். அதனால் தான் அவர்களின் விருப்பப்படி இந்த ஏற்பாடு.

“எல்லோரும் குளிச்சு ரெப்ரெஷ் ஆகிட்டு சரியா பத்து மணிக்கு லோபிக்கு வந்திருங்க. லேட் பண்ணாதீங்க. அப்புறம் நம்ம ஸ்கேடுல் படி எல்லா இடத்துக்கும் போக முடியாம போயிரும்.” என்றவன் மங்கியைப் பார்த்தான்.

மெய் லிங்கிற்கு விளக்கி சொன்னான் அவன். தலையை சரி என ஆட்டிக் கொண்டவள், தன் பேக்கை தானே எடுத்துக் கொண்டாள். ரொம்ப சிறிய பேக்.

‘துணிமணி எடுத்துட்டு வந்துருக்காளா இல்லையா? போட்டதையே திருப்பி திருப்பிப் போட்டுக்குவாளோ? துவைச்சுப் போடக் கூட நேரம் இருக்காதே, நம்ம டைட் ஸ்கேடுல்ல’ ஆராய்ச்சியாக அவளைப் பார்த்தான் ஜம்பு. எல்லோரும் ரூமுக்குப் போக, இவள் மட்டும் தயங்கி தயங்கி இவன் முகம் பார்த்தாள்.

இனிமேல் அவளிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என முடிவு செய்து வைத்திருந்தான் ஜம்பு. தேவையிலாமல் கண்டதையும் மனதில் உளப்பிக் கொள்ள விரும்பவில்லை அவன். ஆனாலும் அவளின் பாவ முகம் இவனை அசைய விடவில்லை.

“டேய், மங்கி! என்னன்னு கேளுடா!” என அவனை ஏவினான்.

அவளிடம் பேசிவிட்டு ஜம்புவிடம் வந்தவன்,

“ண்ணா! அவ கிட்ட ஜீன்ஸ் ஷேர்ட் தான் இருக்காம். இங்க வாங்குனா விலை குறைவுன்னு சொன்னாங்களாம் அவ ப்ரேண்ட்ஸ். அதனால ஒன்னும் வாங்கலையாம் அங்க. ஷோப்பிங் கூட்டிட்டுப் போக முடியுமான்னு கேக்கறாண்ணா” என சொன்னான்.

“இம்சைடா இவ!” முனகினான் ஜம்பு.

“கஷ்டமா இருந்தா விடுண்ணா! நான் கூட்டிட்டுப் போய்ட்டு வரேன்.”

“டேய், அடங்க மாட்டியாடா? சாவடி அடிச்சிருவேன் படவா! எப்ப பாரு அவள பார்த்து ஜொள்ளிக்கிட்டு” கடுப்பாக கத்தினான்.

‘நீ பண்ணுறது மட்டும் என்னவாம்?’ என அவன் மனசாட்சி காறி துப்பியது. பதட்டமாக முகத்தைத் துடைத்துக் கொண்டவன்,

“ரூம்ல போய் முகத்த கழுவிட்டு பதினைஞ்சு நிமிசத்துல வர சொல்லு. பத்து மணிக்குள்ள ஷோப்பிங் முடிச்சுட்டு திரும்பிறலாம். கடை ஒன்னும் இப்ப தொறந்துருக்காது. அவசரத்துக்கு நம்ம மாரிய கடை தொறக்க சொல்லுறேன்” என்றான்.

மாரி இவர்கள் நண்பன் தான். சொந்தமாக துணிக்கடை வைத்திருந்தான். சின்னக் கடைதான், பெரிதாக டிசைன் எல்லாம் இருக்காது. ஆனால் எல்லா வகை ரெடிமேட் ஆடைகளும் இருக்கும்.

இவன் போய் சொன்னதும், அவளின் முகம் பூவாய் மலர்ந்தது. ஜம்புவின் அருகில் வந்தவள்,

“தேங்க் யூ சோ மச். யுவர் நேம் ப்ளிஸ்?” என கேட்டாள்.

ஏற்கனவே தன்னை எல்லோரிடமும் அறிமுகப் படுத்தி இருந்தான். ஆனால் இவள் மீண்டும் பெயரைக் கேட்கவும், மனதில் குட்டி எரிச்சல் அவனுக்கு.

‘என் பேரு கூட ஞாபகம் வச்சிக்க முடியலையா உனக்கு. போடி போ’ என முறுக்கிக் கொண்டான்.

“ஜம்புலிங்கம்”

“ஜம்ப்லிகம்! நைஸ் டூ மீட் யூ” மீண்டும் இரண்டாவது முறையாக கைக்குலுக்கினாள் மெய் லிங்.

“அண்ணே ஜம்ப்லிகம்மாம்” கிண்டலாக சிரித்தான் மங்கி.

மங்கி சிரிப்பதைப் பார்த்தவள் தப்பாக சொல்லிவிட்டோமோ என சங்கடமடைந்தாள்.

“சாரி, ஐ வில் கால் யூ ஜம்ப் தென்!” ஜம்ப் தான் தனக்கு வாயில் நுழைகிறது என சொல்லியவள், அவன் கையில் இரு நூறு ரூபாயைத் திணித்தாள்.

“வொய்?” என கேட்டான் நம் ஜம்பு.

“ப்ரேக்பஸ்ட் மணீ”

“ஆமா நீ சாப்பிட்ட மூன்றை இட்லிக்கு 200 ரூபாயா? வெளங்கிரும்.” முனகினான்.

“பரவாயில்ல, வேணா!” என சொல்லியபடியே வேண்டாம் என கை ஆட்டியவன், மறுபடியும் அவள் கையில் ரூபாயைத் திணித்துவிட்டு வேனுக்கு சென்றுவிட்டான்.

தோளைக் குலுக்கி விட்டு தன் ரூமை நோக்கி நடையைக் கட்டினாள் மெய் லிங்.

error: Content is protected !!