kannan Rathai – 25

அத்தியாயம் – 25

அடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் செல்ல விஷ்ணு பிரீத்திக்கு விசா வாங்கும் ஏற்பாடுகளை செய்ய ராகவ் வேலையில் கவனத்தை திருப்பிவிட்டான். கிருஷ்ணா – மதுவும் வழக்கம்போல வேலைக்கு செல்வதும் மீண்டும் வந்து வீட்டில் எல்லோரோடும் அரட்டை அடிப்பது என்று நாட்கள் ரெக்கைகட்டி பறந்தது..

அன்று காலை மதுவை அவளது ஆபீசில் இறக்கி விட்டுவிட்டு அவன் சென்றுவிட அவள் அலுவலகத்தில் நுழைந்தாள். அப்போது ராகவ் ஒரு பொண்ணுடன் நின்று பேசுவதைப் பார்த்தபடி அவர்களின் அருகே செல்ல அங்கே நின்ற ருத்ராவைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தாள்.

அப்போது எதர்ச்சியாக திரும்பிய ராகவ் மதுவைக் கண்டதும், “ருத்ரா இது என்னோட உடன்பிறவா தங்கை” என்று அவளை அறிமுகபடுத்த அவளும் புன்னகை முகமாக, “ஹாய் மது” என்றாள்.

அவளின் பேச்சில் தன்னை மீட்டெடுத்த மது, ‘நீங்க இங்கே எப்படி?’ என்று கேட்க, “நான் புதுசாக இங்கே வேலைக்கு சேர்ந்திருக்கேன்” என்றாள்.

இருவரும் இயல்பாக பேசுவதைப் பார்த்து, “மதுவை உனக்கு முன்னாடியே தெரியுமா ருத்ரா” என்றான் ராகவ் சந்தேகமாக இழுத்தபடி.

“அவளை ரொம்ப நல்லாவே தெரியும்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு அவள் வேலையைக் கவனிக்க சென்றுவிட ராகவ் கேள்வியாக மதுவை நோக்கினான். அவளும் விளக்கம் கொடுக்காமல் நகர்ந்துவிட்டாள். அதன்பிறகு வந்த நாட்களில் இயல்பாக இருவரும் பேசினாலும் ராகவின் ஆராய்ச்சி பார்வை மட்டும் இவர்களை பின் தொடர்ந்தபடி இருந்தது.

அன்று மாலை பொழுது வேலை எல்லாம் முடித்துவிட்டு மது வீடு திரும்ப வழக்கத்திற்கு மாறாக முன்னாடி வந்து சேர்ந்த கிருஷ்ணா எதையோ எழுதியபடி இருந்தான். அவளின் கொலுசொலி கேட்டு நிமிர்ந்தவனோ, “மது ரொம்ப தலை வலிக்குதுடி. பிளீஸ் ஒரு காபி கொண்டுவா” என்றான் சோர்வுடன்.

அவள் சரியென தலையசைத்துவிட்டு தன்னறைக்கு சென்றாள். சிலநொடிகளில் கைகால் எல்லாம் கழுவிவிட்டு வெளியே வந்தவள் சமையலறைக்கு செல்ல, “நான் மாடிக்கு போறேன் மது நீ மேலே காபி எடுத்துட்டு வா” என்று சென்றுவிட்டான்.

அவன் சென்ற சிலநொடியில் வீட்டிற்குள் நுழைந்த விஷ்ணு, “மது எங்கே இருக்கிற” என்று கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்தவன் பிரீத்திக்கு விசா கிடைத்த விஷயத்தை சொல்ல அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

வீட்டின் உள்ளே பார்வையை சுழற்றிய ராகவ், “ஆமா கிருஷ்ணா எங்கே” என்று கேட்க அவன் மாடிக்கு சென்றான் என்றாள் சைகை மூலமாக. மதுமட்டும் காபி எடுத்து வருவதாக சொல்லிவிட மூவரும் மாடிக்கு சென்றனர்.

அவர்கள் மூவரும் மாடிக்கு செல்லும்போது கிருஷ்ணா எழுதியதை மனப்பாடம் செய்யும் வேலையில் மும்பரமாக இறங்கியிருக்க அவனை கண்ட ராகவ், “இவன் என்ன எக்ஸாம் போற பையன் மாதிரி விழுந்து விழுந்து படிக்கிறான்” என்ற சந்தேகத்துடன் அவனை நெருங்கியவன் அவனின் கையிலிருந்த பேப்பரை பிடிங்கினான்.

அவன் இதை சற்றும் எதிர்பார்க்காத காரணத்தால், “டேய் அதை கொடுடா” என்று பேப்பரை வாங்க முயற்சித்தான்

“என்ன கிருஷ்ணா என்ன படிச்சிட்டு இருக்கிற” பிரீத்தி கேள்வியாக புருவம் உயர்த்திட, “நாளைக்கு ஒரு பிரபல நடிகையை பேட்டி எடுக்கணும் அதுக்காக ப்ரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன்” என்றான் சாதாரணமாக.

அவன் சொல்லும் முன்னே அவனின் கையிலிருந்த பிடிங்கிய ராகவ் அதை வேகமாக வாசித்துவிட்டு, “விஷ்ணு இவன் சொல்வது உண்மைதான். எப்படி எல்லாம் கேள்வி கேட்கணும் என்று எழுதி வெச்சிருக்கான்” என்றான் அதிர்ச்சியுடன்.

ராகவ் சொன்னதும் கிருஷ்ணாவைக் கேள்வியாக நோக்கிய விஷ்ணு, “நீ மேனேஜர் வேலைக்குதானே போற? அங்கே எப்படி நடிகை பேட்டி?” அவனின் சந்தேகமே தங்களுக்கும் என்று மற்ற இருவரும் கேள்வியாக நோக்கினர்.

“அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும்” குறும்புடன் கண்சிமிட்டி கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்றான். மூவருக்கும் எதுவும் புரியவில்லை. ஆனால் அவன் ஏதோ தங்களிடம் மறைக்கிறான் என்று புரிந்தது.

மேற்கே சூரியன் மறைய மறைய வானம் செவ்வனமாக மாறியது. அடர் சிவப்பும் அல்லாது அடர்ந்த மஞ்சளும் இல்லாமல் இரண்டு நிறங்களும் ஒன்றாக கலந்ததில் வெள்ளை நிற மேகங்கள் புதுவிதமான நிறத்தில் இருந்தது. செந்நிலா வானில் மறைய வானில் சிறகடித்து பரந்த பறவைகளின் மீது பார்வையைப் பதித்தான்.

அவனின் ரசனையான பார்வையில் அவர்களால் எதையுமே கண்டுபிடிக்க முடியாமல் போக, “இந்த இதமான மாலைபொழுதில் இதமான தென்றலில் மனதை தொலைத்துவிட்டு நீங்கள் செல்லும் வழிகளில் இனிமையான கானங்களுடன் உங்களோடு இணைந்திருப்பது உங்கள் நண்பன் ஆர். ஜே. பாலா” என்றான் அவனுக்கே உரிய குரல் பாணியுடன்.

அவர்கள் மூவரும் அவன் கொடுத்த அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றனர். அவன் பேசிய பாணியைவிட அவன் கூறிய பெயர்தான் மூவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

“கிருஷ்ணா நீ ஆர். ஜே. பாலாவா” என்றான் விஷ்ணு வேகமாக

“மது மாலை நேரம் கேட்பது உன்னோட பிரோகிராமா?” என்றாள் பிரீத்தி திகைப்புடன்.

“அந்த குரலுக்கு நான் அடிமை என்று சொல்வாளே. அது உன்னோட குரலா கிருஷ்ணா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் ராகவ்.

மூவரும் கேள்விகளுக்கும் அவன் புன்னகையை பதிலாக கொடுக்க அவர்கள் இழுத்து பிடித்த பொறுமை எல்லாம் காற்றில் பறந்தது. “அப்போ போன மாசம் உன்னைப் பார்க்கத்தானே அவ வந்தாள். நீ ஏன் அவளைப் பார்க்கல” என்று மூவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

“மது உன்னைத்தான் விரும்பறா என்று தெரிஞ்சும் ஏண்டா நீ இத்தனை நாள் உண்மையை சொல்லல” என்று ராகவ் கோபத்துடன்.

“அவ உன்னை விரும்புவது தெரிந்துதான் நீ அவளை கல்யாணம் பண்ணியா?” விஷ்ணு ஒருப்பக்கம் கேட்க, “ஏண்டா இந்த உண்மையை முதலில் எங்களிடம் சொல்லல” அவனோடு சண்டைக்கு வந்தாள் பிரீத்தி.

“ஆமா நான்தான் ஆர்.ஜே. பாலா. உங்களோட இயல்பாக பழகிய கிருஷ்ணா. என்னோட முழு பெயர் பாலகிருஷ்ணன். மதுவுக்கு சின்ன வயசில் குரல் போனபோது அவளுக்காக ஏதாவது செய்ய நினைச்சேன். அவளை பேச வைக்க நினைச்சேன். அதுக்குள்ள அவ என்னைவிட்டு விலகி வந்துட்டா” என்றவன் பேச மற்ற மூவரும் விக்கித்து நின்றனர்.

“அதுக்கு பிறகு அவளோட நினைவுகளில் வளர்ந்தேன். எனக்காக நான் படித்த படிப்பிற்காக மேனேஜர் வேலை சேர்ந்தேன். அவளை தேடும் எண்ணத்தோடு அவளுக்காகவே பார்ட் டைம் ஜாப்பில் ஆர்.ஜே. பாலாவாக பேச ஆரம்பித்தேன். காரணம் அவளுக்கு சின்ன வயதில் இருந்தே ரேடியோ கேட்கும் பழக்கம் இருக்கு என்ற ஒரே காரணம்தான்” என்றவன் அருவிபோல மனதில் இருந்ததைக் கொட்டினான்.

அவன் சுயநலத்திற்காக எல்லாம் செய்தான் என்று நினைத்த விஷ்ணுவிற்கே கிருஷ்ணாவின் பேச்சு வியப்பைக் கொடுத்தது.

“இங்க வந்தபிறகு ராகவ் நட்பு, உங்க குடும்பத்தின் அறிமுகம் எல்லாம் கிடைச்சுது. ஆனா எனக்கு உங்களோட முகங்கள் எல்லாம் மறந்துபோன காரணத்தால் இவதான் என் மதுன்னு என்னால கண்டுபிடிக்க முடியல” என்றான் வானத்தில் பரந்த பறவைகளைப் பார்த்தபடி.

ராகவ், விஷ்ணு, பிரீத்தி மூவருக்குமே அவன் பேசுவது ஆச்சர்யமாக இருந்தது. அதே நேரத்தில் மது மேலே வருகிறாளா? என்ற கேள்வியுடன் அவர்களின் பார்வை படிக்கட்டை நோக்கி பாயவும் செய்தது.

“எனக்கு கல்யாணம் ஏற்பாடு செய்தபோது அம்மா சொன்னாங்க. மது என் கல்யாணத்திற்கு வரான்னு..” என்றவன் பேச்சை நிறுத்திவிட்டு மூச்சை இழுத்துவிட்டான்.

அவன் எந்த அளவுக்கு தனிமையை உணர்ந்திருப்பான் என்பது அவன் சொல்லாமல் மூவருக்கும் புரிய, “நான் மதுரையில் மீண்டும் மதுவைப் பார்த்தேன். அவளோட ஆயிரம் சண்டைபோடும் போது புரியாத விஷயங்கள் புரிந்தது” என்றவனின் பார்வை இப்போது விஷ்ணுவின் மீது நிலைத்தது.

அவனின் நேர்கொண்ட பார்வையை விஷ்ணுவால் எதிர்கொள்ள முடியாமல் அவன் வேறு திசையில் பார்வையை திருப்ப, “அவளை முறைப்படி  பெண்கேட்டு போய் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன். ஆனா அதுக்கு முன்னாடியே எங்க கல்யாணம் நடந்துவிட்டது”  தன்னை சமாதானம் செய்ய சில நிமிடம் எடுத்துக் கொண்டான்.

அதன்பிறகு நடந்த விசயங்கள் மூவருக்கும் தெரியும் என்பதால், “மது உன்னிடம் பாலா விஷயத்தை சொல்லவே இல்லையா?” என்று கேட்டான் ராகவ்.

“நான் பாலா என்ற ஒருவனை காதலிச்சேன்னு. அவர் ரேடியோ ஸ்டேஷன்ல வேலை பார்க்கிறாருன்னு சொன்னா” என்றான் மெல்லிய குரலில்.

“அது நீதான் என்று உனக்கு தோணவே இல்லையா” என்று விஷ்ணு கோபத்துடன் தொடங்க அவன் மறுப்பாக தலையசைத்தான்.

“ஏண்டா” என்றாள் பிரீத்தி

“சென்னையில் எத்தனை ரேடியோ ஸ்டேஷன் இருக்கு. அதில் என்னை மாதிரி பாலா எத்தனை பேர் இருப்பாங்க? அவள் ரேடியோ பெயரும் சொல்லல அவள் கேட்கும் பிரோகிராம் பெயரும் சொல்லல அப்புறம் எப்படி அது நான்தான் நினைக்கறது” அவனின் நியாயமான கேள்வியில் மூவரும் விக்கித்து நின்றனர். அவனின் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

அவனோ எதையோ நினைத்து சட்டென்று வாய்விட்டு சிரிக்க மூவரும் அவனை கேள்வியாக நோக்கிட, “அவ சொன்ன பாலா யாரோன்னு அவன் மேல செம கோபத்தில் இருந்தேன், ஆனா இப்போ நினைக்கும்போது சிரிப்புதான் வருது” என்றதும் இவர்களின் உதடுகளிலும் புன்னகை தவழ்ந்தது.

“அப்போ அந்த பாலா நீதான் என்ற விஷயமே உனக்கு தெரியாதா?” விஷ்ணு கேள்வியாக நோக்கிட, “எனக்கு தெரிஞ்சிருந்தா ரொம்ப சந்தோசப்பட்டு இருப்பேனே” என்றான் மீண்டும் சிரித்தபடி.

அன்று நடந்த விஷயத்தை சொல்லிவிட்டு, “மது நேரில் வந்து நின்றதும் என்னால் எதையும் புரிஞ்சிக்க முடியல. அதுவும் அவள் பாலா என்று என்னை தேடி வந்தது கனவில் நடக்கிற மாதிரி இருந்தது. ஆனா நான்தான் பாலா என்று அவளுக்கு நான் என்னை வெளிபடுத்தல” என்றவனை மூவரும் கொலைவெறியுடன் நோக்க அவனோ அசடு வழிய சிரிக்க ராகவ் அடிக்க காட்டையை தேடினான்.

“அவ நேரில் வந்தும் சொல்லாமல் இருந்திருக்கிற உனக்கு என்னவொரு தைரியம்” என்று அவன் தேடிபிடித்து ஒரு கட்டையுடன் அவனை நோக்கி வர விரிந்த புன்னகையுடன் அவனை எதிர்கொண்டான்.

“என்னோட குரலை அவளா கண்டுபிடிக்கும்போது அவளோட முகத்தில் வரும் சந்தோசத்தை நான் நேரடியாக பார்க்கணும் அதுக்கு தனிமை தேவை என்று நினைச்சேன். அதனால் இன்னைக்கு வரைக்கும் நான்தான் பாலா என்ற விசயம் அவளுக்கு தெரியாது” என்று சொல்லவும் மது மாடியில் படிக்கட்டை கடந்து வரும் சத்தம்கேட்டது.

அவர்கள் மூவரும் திரும்பிப் பார்க்க, ‘நாலு பேருக்கும் காபி கொண்டு வந்திருக்கேன்’ என்றவள் கொடுக்க விஷ்ணு, ராகவ், பிரீத்தி மூவரும் மெளனமாக இருந்தனர்.

“மது எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா. நான் இந்த பேப்பரில் சில விஷயம் எழுதி இருக்கேன். அதெல்லாம் உன்னிடம் சொல்றேன் சரியா ஒப்பிகிறேனா என்று பாரேன்” என்றான் மற்ற மூவரையும் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டியபடி.

அப்போது அவன் கையில் இருந்த கட்டையை கவனித்துவிட்டு, ‘இது எதுக்கு’ அவள் புரியாமல் கேள்வி கேட்க, “சும்மா பேசத்தான்” என்றாள் பிரீத்தி கிருஷ்ணாவை முறைத்தபடி.

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மச்சான். நீ உன்னோட வேலையைப் பாரு” ராகவ் அங்கிருந்து நகர, “பிரீத்தி நைட் ஷோக்கு டிக்கெட் புக் பண்ணிருக்கேன். இப்போ போன ஷாப்பிங் போயிட்டு அப்படியே படத்திற்கு போக சரியாக இருக்கும்” என்று அவனும் அங்கிருந்து நழுவினான்.

பிரீத்தி எதுவும் பேசாமல் விஷ்ணுவின் பின்னோடு செல்ல கிருஷ்ணா மூவருக்கும் நன்றியைக் கூறினான் பார்வையில். அவன் கொடுத்த பேப்பரில் இருந்த கேள்விகளை படித்துவிட்டு அவனை கேள்வியாக நோக்கிட அவன் வேறுபுறம் திரும்பி ஒப்பிக்க தொடங்கினான்.

அவன் கேட்ட கேள்விகள். அந்த விளம்பரங்களுக்கு இடையே அவன் சொல்லும் சில கவிதை துணுக்குகள், சின்ன சின்ன மருத்துவக்குறிப்புகள், வீட்டு குறிப்புகள் எல்லாம் சொல்ல அவளின் மனம் எதையோ தேடி பயணித்தது.

அவளின் விழிகள் கிருஷ்ணாவின் முதுகை வெறிக்க அவனின் காந்தக்குரல் அவளுக்குள் பிரளயத்தை உருவாக்கியது. அவனின் குரலை இனம்கண்டு, ‘பா..லா..’ என்ற அதிர்ச்சியில் அவள் எழுந்து நிற்க அவளின் மடியில் இருந்து செல் கீழே நழுவியது.

ஏதோ பட்டன் தானாக கிளிக் ஆகி தானே பாட தொடங்கியது. கிருஷ்ணா அவளுக்கு முதுகு காட்டி நின்றிருக்க மதுவின் கண்கள் தானாக கலங்கியது. அவளின் கண்களின் அருவிபோல கண்ணீர் பொங்கிட மூச்சுவிடாமல் அழுதாள்..

“பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு

பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு

ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு

புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு..” என்ற வரிகளில் அவன் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

“கோகுல வாசமோ ராதையின் சுவாசமோ..

துவாரகை வீதியில் மலர்களும் பேசுமோ..

மௌனமே மயங்குமோ.. இது என்ன மாயமோ..” என்ற வரிகள் கேட்டு அவனின் விழிகளின் தன் பார்வையை கலக்கவிட்டாள் பெண்ணவள்.

“மிதிலையில் நான் அன்று வில்லை முறித்தது

சீதை தோளில் சேரவே..

தீயினில் மூழ்கி என் தங்கம் ஜொலித்தது

ராமன் பெருமை கூறவே..

அக்பரது ராஜ்யத்தில் நீ அனார்கலி

சந்தான தேர் நானா வந்த சலீம் நானடி..” என்றவனின் விழிகள் அவனோடு காதல் மொழி பேசிட சிணுங்கலோடு தலை குனிந்தாள்.

“ஏதேனின் தோட்டத்தில் ஏவாளும் நானாக

ஆதமின் நெஞ்சத்தில் ஆனந்த தேனாக” அவன் அவளை நோக்கி கைநீட்ட மறுப்பாக தலையசைத்துவிட்டு ஓடிவந்து அவனைக் கண்டிக்கொள்ள அவளின் இடையோடு கரம்கொடுத்து அவன் இறுகி அணைக்க அவனின் மார்பில் முகம் புதைத்தாள் மது..

மெல்ல அவளின் காதோரம் முடிகளை ஒதுக்கிவிட்டு,

“இரவும் பகலும் இணைந்து கலந்த ஞாபகம் இருக்குதா? இதயமும் சிவக்குதா?” என்றவன் மெல்லிய குரலில் பாட அவனின் மீசைமுடிகள் அவளின் காது மடல்களை தீண்டி அவளை கிறக்கத்தில் ஆழ்த்திட கலங்கி சிவந்த விழியுடன் அவனை ஏறிட்டாள்..

இருவரின் பார்வையும் ஒன்றாக கலந்து காதல் மொழி பேச அங்கே மௌனம் நிலையானது. இனிவரும் பிரளயத்தை உணராமல் இரு மனங்களும் காதலில் இணைய துணை நின்றது காதல்.

error: Content is protected !!