EswaraninEswari4

EswaraninEswari4

அத்தியாயம் – 4

முன் கோபம், அவரசர புத்தி இந்த இரண்டும் மனிதனுக்கு இருந்தால் அது எவ்வளவு பெரிய ஆபத்தைக் கொடுக்கும் பிறருக்கும், தனக்கும் என்று இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் மனிதர்கள்.

இப்பொழுது இந்த இரண்டும் தான் ஈஸ்வருக்கும், அவனின் தந்தைக்கும் இருந்து கொண்டு குடும்பத்திலே பிளவைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. தந்தையை எதிர்க்க வேண்டும் என்று மகனும், மகன் தன் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று தந்தையும் இருந்ததால், அதன் பின் விளைவுகளை இன்று சந்தித்து இருந்தது அக்குடும்பம்.

“ஏன் மா அப்படி என்ன தான் பிரச்சனை உங்களுக்கும், அப்பாவுக்கும்? இந்த அளவுக்கு உங்க சொந்தங்களை ஏன் அவர் இப்படி வெறுக்கிறார்? நீங்களும் இத்தனை நாள் இல்லாம, இன்னைக்கு அப்பாவையே வாய் அடைக்க வச்சுட்டீங்க, என்ன மா விபரம்?” என்று பொறுமையாக கேட்டான் ஈஸ்வர்.

“ம்கும்.. இப்போ வந்து கேளு இதை எல்லாம், உங்க அப்பா மாதிரி தானே நீயும் இருப்ப, அதே முன் கோபம், பிடிவாதம், அவசர புத்தி. எனக்கு இப்போ சொன்ன முஹுர்த்தத்தில் உனக்கும், ஈஸ்வரிக்கும் கல்யாணம் பண்ணனும். என் நினைப்பு முழுசும் இப்போ அதில் தான் இருக்கு, இப்போ எதையும் என் கிட்ட கேட்காத புரியுதா?” என்று கூறி மகனை கூர்ந்து பார்த்தார்.

“சரி மா, நான் எதுவும் கேட்கல. இப்போ கல்யாண வேலை ஏதும் நான் செய்யணுமா?” என்று கேட்டான் ஈஸ்வர்.

“இல்லை பா, ஏற்கனவே நான் உன் நண்பன் ஷ்யாம் வச்சு ஏற்பாடு பண்ணிட்டேன். நான் என் அம்மாவை பார்க்க போறேன், நீ உன் ரூம் போய் ரெஸ்ட் எடு” என்று அவனை அனுப்பிவிட்டு சாரதா அவரின் அம்மா லீலாவதியை காண சென்றார்.

அங்கே லீலாவதி மனதை அழுத்திய பாரத்துடன், அன்று தான் செய்த தவறை நினைத்து வருந்திக் கொண்டு இருந்தார். தன் மகளை பார்த்தவுடன், அவர் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

“ஹையோ பாட்டி! எப்போ பாரு வாட்டர்பால்ஸ் திறந்து விட்டுகிட்டே இருக்கீங்க, இது நல்லதுக்கு இல்லை. அதான் அத்தை வந்துட்டாங்கள, அப்புறம் இன்னமும் ஏன் உங்களுக்கு இந்த அழுகை, கண்ணை துடைங்க முதல” என்று ஈஸ்வரி அதட்டினாள்.
“நல்லா சொல்லு, எப்போ பாரு தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்ன்னு புலம்ப வேண்டியது. அடுத்து என்ன செய்யணும்ன்னு யோசி, சாரதா இந்த கல்யாணம் ஏன் இவ்வளவு அவசரமா நடக்கணும்ன்னு நீ நினைக்கிற?”

“இப்போ தான் உன் வீட்டுக்காரர் சண்டை போட்டுகிட்டு போய் இருக்கார், அவரை சமாதனப்படுத்தாம நீ இங்க இருக்கிறது சரியாய் படல தாயி” என்றார் காமாட்சி பாட்டி.

“இல்லை சித்தி, எனக்கு இப்போ தான் நான் சரியா முடிவு எடுத்து இருக்கேன்னு தோணுது. என் மூத்த மகனை தான் நான் இழந்துட்டேன், இவனையும் என்னால இழக்க முடியாது சித்தி”.

“இன்னும் எத்தனை நாளைக்கு தான், நானும் எங்க அம்மாவை பிரிஞ்சு இருக்கிறது? மன்னிப்பு கேட்டும் அவர் மன்னிக்கல அப்படினா என்ன அர்த்தம், வீம்பு பிடிச்சு இருக்கு தானே அர்த்தம் சித்தி” என்று சாரதா தன் தரப்பை சொல்ல, இதற்கு மேலும் பேசுவது வீண் என்று அறிந்தார் பாட்டி.

“சரி! இப்போ அடுத்து என்ன செய்ய போற? இங்க திருவிழா முடிகிற வரைக்கும் ஒன்னும் செய்ய முடியாது. எப்படியும் உன் மாப்பிள்ளையும் யோசிக்க தானே செய்வாரு, ஒரு பத்து நாள் திருவிழா முடிஞ்சு கிளம்புங்க”.

“நாங்களும் அப்புறம் ஈசு வீட்டுக்கு போய், கல்யாண வேலை எல்லாம் தொடங்குறோம். ஈசு! போய் உங்க அம்மாவை நான் கூப்பிட்டேன் சொல்லி கூட்டிட்டு வா, அப்படியே ரேகாவை கூட்டிட்டு போய் சரசு கிட்ட சாயிந்திரத்துக்கு காப்பி, பலகாரம் எல்லாம் தயார் பண்ண சொல்லு”.

“திருவிழாக்கு இன்னும் நம்ம சொந்தம் எல்லாம் வருவாக, அவிகளுக்கு ரூம் எல்லாம் ரெடியா இருக்கான்னு கீதா கிட்ட கேட்டுக்க” என்று மேலும் பல வேலைகளை சொல்லி, அங்கு இருந்து ஈஸ்வரியை அனுப்பி வைத்தார்.

அவளோ, அங்கே ரேகாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டு அவளின் அறைக்கு செல்ல மாடிப்படி ஏறினாள். எதிரே ஈஸ்வர் வர, அவனுக்கு இவள் வழி விட அவனோ ஏதோ யோசித்துக் கொண்டே வந்ததால், இவளை கவனிக்காமல் அவளை சிறிது உரசி செல்ல கடுப்பின் உச்சிக்கே சென்றாள்.

“டேய் தடிமாடு! கண்ணு தெரியலையா உனக்கு? இப்படி இடிச்சிகிட்டு வர லூசு” என்று திட்டியவளை பார்த்து, கடுப்பானான்.

“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என்னை நீ உரசிக்கிட்டு வந்து நின்ன, அப்போவும் நான் தடிமாடு தானே. புதுசா என்ன வந்துச்சு உனக்கு? பெரிய பத்தினி இவ!” என்று கூறி முகத்தை சுழித்துக் கொண்டு சென்றான்.

அவனின் முக சுழிப்பில் இவளுக்கு ஆத்திரம் வந்தது, விறுவிறுவென்று அவளின் அறைக்கு சென்று முகத்தை கழுவிக் கொண்டு உடுத்தி இருந்த தாவணியை மாற்றி சுடிதார் அணிந்து கொண்டு விறுவிறுவென்று கீழே இறங்கினாள்.

கண்கள் நாலா பக்கமும் சுழன்றது, அவனை தேடி. அவனின் முக சுழிப்பிற்கு பதில் கொடுக்கவில்லை என்றால், அவள் ஈஸ்வரி இல்லையே.

“ஹே ஈஸ்வரி! யாரை தேடுற?” என்று கேட்டாள் ரேகா.

“வேற யாரை தேட போறேன் அக்கா, அந்த ஈஸ்வரை தான். நிறைய கணக்கு பெண்டிங்ல இருக்கு, அதை எல்லாம் செட்டில் பண்ணனுமே” என்று கூறியவளை பார்த்து சிரித்தாள்.

“இனி எதுவா இருந்தாலும் கல்யாணம் முடிஞ்சே, உன் கணக்கை செட்டில் பண்ணிக்கோ. இப்போ தான் பாட்டி சொன்னாங்க, திருவிழா முடிஞ்சு வர முஹுர்த்தத்திலே உங்க கல்யாணம் அப்படின்னு” என்று ரேகா கூறியதை கேட்டு அதிர்ந்தாள்.

“பாக்கியம் அக்கா, மாடியில் இவ திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு கீழே என் ரூம் பக்கத்தில் வச்சிடுங்க” என்று ரேகா அடுத்த அதிர்ச்சியை அளிக்கவும், இவள் பாட்டியை தேடி சென்றாள்.

ஈஸ்வர் நேராக ஐஸ்வர்யாவை தேடி தான் சென்றான், அவனுக்கு தான் ஏமாந்து இருக்கிறோம் ஒரு பெண்ணிடத்தில் என்பது அவமானமாக இருந்தது.
“ஹே ஈஸ்வர்! என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க? அவ போட்டுக் கொடுத்துட்டாளா உங்க அப்பா கிட்ட, அதான் இப்படி அப்சட்டா இருக்கியா?” என்று அவனை பார்த்த ஐஸ்வர்யா கேள்விகளை அடுக்கினாள்.

“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்ற ஒற்றை கேள்வி மட்டுமே அவளின் கண்களை பார்த்து கேட்டான்.

அந்த ஒற்றை கேள்வியில், சர்வாங்கமும் ஆடியது ஐஸ்வர்யாவுக்கு. அவளின் திருமணம் பற்றி, ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும், வேறு யாருக்கும் தெரியாது.
இவனின் சொத்துக்களை அடைய மட்டும் இல்லாமல், அவனையும் தனக்கு அடிமையாக வைத்து இருந்தால், அதை வைத்து ஒரு ராஜாங்கம் ஆள அவள் கணக்கிட்டு இருந்தாள். இதுவரை அவனை அப்படி ஒரு அழுத்தத்துடன் பார்த்து இராதவள், இன்று ஒரு அழுத்தத்துடன் அவனை பார்க்கும் பொழுது அவளின் முதுகு தண்டு சில்லிட்டது.

“சே எஸ் ஆர் நோ?” என்று இப்பொழுது சத்தமும், அழுத்தமும் கூடி வந்தது அவனிடம்.
பயத்தில் ஆமாம் என்பது போல் அவள் தலை ஆட்டவும், ஒரு முறை கண்ணை மூடி கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்றவன், அவளை ஒரு அற்ப பதரை போல் பார்த்துவிட்டு, இனி யாரையும் ஏமாற்ற துணிந்தால் என்ன நடக்கும் என்பதை கூறிவிட்டு சென்றான்.

அதில் அவள் மிரண்டு போய், தன்னுடைய திருகுதாளம் யாருக்கும் தெரியாமல் இருக்க அன்றே ஊரை விட்டு ஓடி விட்டாள்.

இங்கே வீட்டுக்கு வந்த ஈஸ்வர், அங்கே நடந்து கொண்டு இருந்த கூத்தை பார்த்து அதுவரை இருந்த அழுத்தம் மாறி, புன்னகை வந்தது. காரணம், அங்கே ஈஸ்வரி அவள் பாட்டியிடம் மல்லுகட்டிக் கொண்டு இருந்தாள்.

“பாட்டி! எனக்கு பரீட்சை முடிஞ்ச உடனே கல்யாணத்தை வைக்கலாம். இப்போவே வேண்டாம், என் தோழிகள் யாரும் கல்யாணத்துக்கு வர முடியாது அப்போ, சொன்னா புரிஞ்சிகோங்க” என்று மன்றாடிக் கொண்டு இருந்தாள்.

அப்பொழுது தான் அவனுக்கும், சீக்கிரம் திருமணம் வைக்க தன் தாய் முடிவெடுத்து விட்டார் என்று புரிந்தது. இதில் அவனுக்கு தாயை ஜெய்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே, ஈஸ்வரியை அவன் கணக்கில் எடுக்கவில்லை.

அவளின் மனநிலையையும், அவன் அறிந்து கொள்ளவில்லை. அவனின் தலையிலும், மனதிலும் அப்பொழுது தன் தந்தை தோற்க வேண்டும் என்பது தான். ஒவ்வொரு முறையும், அவருக்கு அடிபணிந்து சென்ற தன் வாழ்கையை எண்ணி பார்த்தவனுக்கு, இந்த முறை அவரின் கண் முன்னே தாயின் சபதத்தை ஜெய்க்க வைத்து விட வேண்டும் என்ற வெறி மட்டுமே அப்பொழுது மனதில்.

“பாட்டி! நான் கொஞ்சம் அவ கிட்ட பேசட்டுமா?” என்று பவ்யமாக அவன் கேட்கவும், ஈஸ்வரியோ அவனின் இந்த பவ்யத்தில் அவனை குறுகுறுவென்று பார்த்தாள்.
“எலி ஏன் இப்படி அம்மனமா ஓடுதுன்னு தெரியலையே! என்னவா இருக்கும்?” என்று யோசித்தாள்.

பாட்டி சம்மதம் அளிக்கவும், அவளை அழைத்துக் கொண்டு பின் பக்க தோட்டத்திற்கு அழைத்து சென்றான். அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்சில் இருவரும் அமரவும், அந்த மாலை வேளையில் அடிக்கும் ஊத காத்து அவள் மேனியை தழுவி செல்ல, அதை சுகமாக அனுபவித்தாள்.

“உனக்கு எங்க பரிட்சையில் மார்க் கம்மி ஆகிடுமோன்னு பயமோ? இல்லை அப்படினா, உனக்கு என்னை பார்த்து பயம் நினைக்கிறன், என்ன செய்துடுவேனோ உன்னை அப்படினு, அப்படி தானே?” என்றவனை பார்த்து முறைத்தாள்.

“உன்னை பார்த்து பயப்பட, நீ என்ன சிங்கமா? இல்லை புலியா? ஓவரா சீன் போடாத, பாட்டி கிட்ட சொன்ன மாதிரி என் பிரண்ட்ஸ் வர முடியாது, அவங்க சொன்ன தேதியில், அதான் மாத்தி வைக்க சொன்னேன்” என்று கூறி அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

“அப்போ என்னை பார்த்து நிஜமாவே பயம் இல்லை? அப்படித்தானே!” என்று திரும்பவும் கேட்கவும், அவளோ லூசாப்பா நீ என்பது போல் ஒரு லுக் விட்டாள்.
அருகில் அமர்ந்து இருந்தவன், அவளை இன்னும் ஒட்டி அமர்ந்து கொண்டு அவனின் இடது கையை தோளோடு சேர்த்து அணைத்து, அவளின் முகம் நோக்கி குனிய, அனிச்சையாக அவளின் கண்கள் மூடிக் கொண்டது, உதடுகளோ பயத்தில் துடிக்க தொடங்கியது.

அதுவரை அவளை பயம் காட்ட எண்ணிய ஈஸ்வர், துடிக்கும் அவளின் இதழ்களை பார்த்து என்ன தோன்றியதோ, சட்டென்று அவளை விட்டு விலகினான். விலகிய வேகத்தில், வேகமாக வீட்டிற்குள் நுழைந்து அவனின் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக் கொண்டான்.

இங்கே ஈஸ்வரிக்கு, அவளின் நெஞ்சாங்கூடு ஏறி இறங்கிக் கொண்டு இருந்தது. அவ்வளவு அருகில், ஒரு ஆணின் முகம் அதுவும் அவளின் மனம் கவர்ந்தவன் முகம், வெட்கம் அவளை முதல் முறையாக ஆட்டி படைத்தது.

ஏனோ, பாட்டி முடிவு பண்ணிய தேதியில் இப்பொழுது சரி சொல்ல தோன்றியது. அதை அவள் உடனே உள்ளே சென்று பாட்டியிடம், உங்கள் இஷ்டம் என்று கூறிவிட்டு கீழே அவளின் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

அது சரி, பேரன் ஜெகஜால கில்லாடி தான். இனி ரெண்டு பேரை பத்தி கவலை பட தேவையில்லை என்று எண்ணியவர் உடனே மருமகளை அழைத்தார்.

“சாந்தா, சங்கரனை அந்த தேதியில் கல்யாண மண்டபம் பிடிக்க சொல்லு. அப்படியே ஒன்பதாவது நாள் திருவிழா அப்போ பொங்கல் வைக்க, இந்த தடவை பேத்தி வைக்கட்டும். அதுக்கும் சேர்த்து எல்லா ஏற்பாடும் பண்ணிடுங்க, சாராதாவையும் அப்போ அப்போ கலந்து பேசிக்கோ”.

“அவங்க வீட்டுல என்ன முறை செய்யணுமோ, அதை எல்லாம் சரியாய் செய்திடணும் சரியா. பத்தாம் நாள் திருவிழா முடிஞ்சு, கொடி இறங்கின அடுத்த நாள் பேத்திக்கு சடங்கு செய்துட்டு அப்புறம் கூட்டிட்டு போக எல்லா ஏற்பாடும் செய்துடுங்க” என்று காமாட்சி பாட்டி, அடுத்து அடுத்து கட்டளைகள் பிறப்பித்தார்.

நாட்கள் அதன் போக்கில் வேகமாக செல்ல, பொங்கல் வைக்கும் நாளும் வந்தது. சாரதாவும், சாந்தாவும் பொங்கல் வைக்கும் முறையை ஈஸ்வரிக்கு நன்றாக விளக்கிக் கொண்டு இருந்தனர்.

அவளும் அதை எல்லாம் கர்ம சிரத்தையாக கேட்டுக் கொண்டு விட்டு, தன் புடவையை நன்றாக சரி செய்துக் கொண்டு, விறகு அடுப்பில் பொங்கல் வைக்க தொடங்கினாள். அன்னைக்கு துணையாக அங்கே இருந்த ஈஸ்வரின் பார்வை முழுவதும், ஈஸ்வரியின் மீது தான்.

அன்று அந்த சம்பவத்திற்கு பிறகு, அவள் இவனின் கண்களுக்கு தென்படவில்லை. அப்பொழுது அவனுக்கும் வேறு வேலைகள் இருந்ததால், அவன் அதை கவனிக்கவே சரியாக இருந்தது.

அதன் பிறகு இன்று தான், அவளை பார்க்கிறான். ஆகாய வண்ண புடவையில், தேவதையென இருந்தவளை, கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“இந்த பிசாசு, இவ்வளவு அழகா! புடவையில் நல்லா பெரிய பொண்ணா, தெரியுறா” என்று எண்ணியவனுக்கு அவனின் மனசாட்சி காரி துப்பியது.

“புடவையில் பெரிய பொண்ணா தான் எல்லோரும் தெரிவாங்க, அதுவும் அவளுக்கு கல்யாண வயசு தானே பெரிய பொண்ணா தெரியாம என்ன செய்வா? அன்னைக்கு முத்தம் கொடுக்க போனப்ப, பெரிய பொண்ணா தெரியலையோ?”

எப்படி டா இப்படி இருக்கீங்க? என்று நொந்து கொண்டது அவனின் மனசாட்சி.
அவனோ அதை எல்லாம் சட்டை செய்யாமல், அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த கண்கள் சிரிக்கும் சிரிப்பில், அவன் நெஞ்சம் தடுமாறி தான் போனது.

ஐஸ்வர்யாவிடம், அவனுக்கு பிடித்ததே அவனை ஒத்த சிந்தனை அவளுக்கும் இருந்ததை வைத்து தான். அவளை அவன், இப்படி எல்லாம் கவனித்து பார்த்தானா என்றால், அவனுக்கு சத்தியமாக அதற்கு பதில் தெரியவில்லை.

தன்னை ஏமாற்றி இருக்கிறாள் என்று தெரியவும், உடனே அவனால் அவளை தன் மனதில் இருந்து தூக்கி போட முடிந்ததற்கு காரணம், இதோ இந்த ஈஸ்வரியே தான்.
கல்லூரியில் தன்னிடம் இருந்ததை போல் தான், இப்பொழுது வரை அவள் இருக்கிறாள். எந்த ஒரு இடத்திலும், அவளின் குணம் மாறவில்லை. இது தான் ஈஸ்வரியை நோக்கி, அவன் அடி எடுத்து வைக்க முதல் காரணம்.

“அத்தான், அக்காவை சைட் அடித்தது போதும். உங்களை அங்க கூப்பிடுறாங்க, போங்க” என்று ஈஸ்வரியின் சித்தி பெண் ராஜி வந்து கூறவும் தான், இவ்வளவு நேரம் தான் இருந்த நிலை புரிந்தது.

“அடேய் ஈஸ்வர்! இப்படி பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்க்கிற மாதிரி, அவளை இப்படி கோவில்ல வச்சு இப்படி பார்த்து இருக்கியே, உனக்கு அறிவே இல்லை டா” என்று தன்னை தானே திட்டிக் கொண்டு, அங்கே தன் தாயை நோக்கி சென்றான்.

“பேராண்டி! சாமிக்கு மாலை எடுத்து வச்ச தட்டை எடுத்துட்டு முன்னாடி போ பா. ஆத்தா ஈசு! பொங்கல் பானையை தூக்கிட்டு சாமிக்கு படைக்க வாத்தா” என்று பாட்டி காமாட்சி அழைக்கவும் எல்லோரும் கோவிலினுள் பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றனர்.

சாமிக்கு படைத்து விட்டு, அங்கே எல்லோரும் நன்றாக வேண்டிக் கொண்டு கோவிலுக்கு வெளியே வந்தனர். அங்கே எல்லோருக்கும் பொங்கல் விநியோகித்து, அங்கே செய்ய வேண்டிய முறைகளையும் முடித்துக் கொண்டு வீடு திரும்பினர்.
புடவையை மாற்ற, ஈஸ்வரி அறைக்குள் நுழைய அவளின் பின்னேயே ரேகா வந்துவிட்டாள்.

“அக்கா என்ன அக்கா? எதுவும் வேணுமா?” என்று கேட்டாள்.

“ஆமா ஈசு குட்டி, இன்னைக்கு உன்னவர் பார்வை முழுசும் உன் மேல தான் இருந்தது. என்னமா அப்படி பொரிஞ்சு தள்ளின, இப்போ என்ன அப்படினா, பேரை கேட்டாலே முகம் சிவக்குது” என்று கேட்டாள்.

“போங்க அக்கா, மாமா உங்களை கூப்பிடுறாங்க” என்று அவளை விரட்டுவதில் குறியானாள்.

“சரி! சரி! நடக்கட்டும் நடக்கட்டும், நீங்க நல்லா இருந்தா சரி” என்று கூறிவிட்டு உடனே வெளியேறினாள்.

வேகமாக சென்று கதவை அடைக்க வந்தவள், அங்கே ஈஸ்வர் கதவை அடைத்துக் கொண்டு நின்று இருந்தான்.

“என்ன வேணும்?” என்று கேட்டவளை பார்த்து அவனின் பார்வை அவளை அளக்க தொடங்கியது.

அதில் அவளுக்கு, கூச்சம் ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம் வந்து தொலைத்தது. அவனை முறைக்க தொடங்க, அவனோ அவளை பார்த்து கண்ணடித்து விட, அவள் சிலையானாள்.

அவள் அசந்த அந்த நேரத்தில், அவன் அவளின் கன்னத்தில் தன் முதல் அச்சாரத்தை பதித்து விட்டு சென்றான். அதில் சுய உணர்வுக்கு வந்தவள், அவனை ஒன்றும் செய்ய முடியாமல், வெட்கத்துடன் அந்த முத்ததத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தாள்.
மேலே தனதறைக்கு வந்த ஈஸ்வர், அவனின் செல்பேசி சிணுங்கவும் எடுத்து யார் என்று பார்த்தான். அதில் அவனின் தந்தை பேர் இருக்கவும், எடுத்து பேசுவதற்கு முன் அறைக் கதவை நன்றாக சாற்றி விட்டு, வந்து பேச தொடங்கினான்.

“என்னடா பிளான் பண்ண மாதிரி தானே, எல்லாம் சரியா போகுது. இல்லை எதுவும் சொதப்பி வச்சுடுவியா?” என்று கேட்டார்.

“அப்பா! அம்மாவுக்கு கூட தெரியாத அளவு பக்காவா எல்லாம் பண்ணிட்டேன், இதுல ஈஸ்வரி தான் ஷார்ப். சோ அவளை என்னை மட்டும் நினைக்க வைக்குற மாதிரி வச்சுட்டு, இங்க மத்த ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டேன்” என்றான் ஈஸ்வர்.

“ம்ம்.. இருந்தாலும் பார்த்து இரு டா, அந்த பொண்ணு ஈஸ்வரி மட்டும் இல்லை உங்க அம்மாவும் லேசு பட்ட ஆள் கிடையாது புரியுதா? கவனமா இருந்துக்கோ, நான் வைக்கிறேன்” என்று கூறிவிட்டு போனை வைத்தார்.

அவ்வளவு எளிதில், தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை மறந்து விடுவானா என்ன? ஆயிரத்தெட்டு சண்டைகள் இருவருக்கும் உண்டு இப்பொழுது வரை, ஆனால் அவமானம் ஒன்று தந்தைக்கு என்றால் அதை பார்த்துக் கொண்டு எந்த மகன் தான் சும்மா நிற்பான்.

அதனால் தான் ஒரு முடிவுடன், அவன் இக்குடும்பத்தை அதே போன்றதொரு அவமானம் ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறான். அது வெற்றி அடையுமா? இல்லை தோல்வி அடையுமா? பொருது இருந்து தான் காண வேண்டும்.

தொடரும்..

error: Content is protected !!