Kannan Rathai – 27
Kannan Rathai – 27
அத்தியாயம் – 27
பஸ்நிலையம் நெருங்கும் முன்னர் ஒரு திருப்பத்தில் கிருஷ்ணா வண்டியைத் திருப்ப எதிர்ப்பாராத விதமாக, எதிரே வந்த லாரியில் பலமாக மோதி இருவரும் கீழே சரிந்தனர். கிருஷ்ணா மட்டும் வண்டி இடித்த வேகத்தில் வானில் தூக்கி எரிப்பட்டான்.
இந்த விபத்தைக் கண்ட பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவர்கள் இருவரையும் பரிசோதித்த டாக்டர், “இவருக்கு அடி அதிகமில்லை. ஆனால் இன்னொரு நபரோட நிலை ரொம்ப மோசமாக இருக்கு. அவங்க வீட்டிற்கு தகவல் சொல்லி வர சொல்லுங்க” என்றார்.
அவர்கள் இருவரையும் கொண்டு வந்து சேர்த்ததோடு கடமை முடிந்தது என்று எல்லோரும் கிளம்பிவிட ராஜி என்ற பெண்மட்டும் தன் கையில் இருந்த போனை வெறித்தாள்.
அதன் திரையில் தாரிகாவின் முகம் மின்னி மறைய, ‘இவளோட அண்ணாதான் கிருஷ்ணா. நமக்கு இவமேல் கோபம் இருந்தாலும் ஆபத்துக்கு பாவம் இல்ல. ஒரு உயிர் விஷயத்தில் விளையாட கூடாது..’ என்று அவளுக்கு அழைத்தாள்.
தாரிகாவின் வகுப்பு தோழி. இருவரும் கீரியும் பாம்பும் போல சண்டையிட்டு கொண்டே இருப்பார்கள். ராஜிக்கு தாரிகாவை கண்டாலே பிடிக்காது. கல்லூரி படிப்பிற்காக சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள்.
காலை கல்லூரிக்கு செல்லும் வழியில் இந்த விபத்தைக் கண்டு மனம் பதறியவர்களில் இவளும் ஒருத்தி. எல்லோரும் சென்ற பிறகும் கிருஷ்ணாவின் செல்லில் இருந்து நம்பரை எடுத்து தாரிகாவிற்கு அழைத்தாள்.
மறுப்பக்கம் அழைப்பு எடுக்கப்பட, “ஹலோ யார் பேசுவது” என்று சந்தேகமாக ஒலித்த தோழியின் குரலை இனம்கண்டு, “உங்க அண்ணாவிற்கு ஆக்சிடெண்ட். நீங்க சீக்கிரம் கிளம்பி வாங்க” என்று மருத்துவமனையின் விவரத்தை கொடுத்தாள்.
அப்படியே கிருஷ்ணாவின் செல்லில் இருந்த மதுவின் புகைப்படம் கண்டு, “இவங்க அண்ணாவின் மனைவிதானே” என்று அவருக்கும் அழைத்தாள்.
அவளுக்கு பேச முடியாது என்பது இவளுக்கு தெரியும் என்ற போது தான் பேசுவதை தெளிவாக கேட்பார்கள் என்ற எண்ணத்தில், “அக்கா கிருஷ்ணா அண்ணாவிற்கு ஆக்சிடெண்ட். கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வாங்க” என்றாள்.
மறுப்பக்கம் இந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாத மது வேட்டிபோட்ட வாழைமரம் போல மயங்கிச் சரிய விஷ்ணு ஓடிவந்து அவளை கைகளில் தாங்கினான்.
அவளின் கையிலிருந்த போனை எடுத்து விஷ்ணு காதில் வைக்க அவள் மீண்டும் அதையே சொல்ல, “எந்த ஹோஸ்பிடல்” என்று விவரம் கேட்டு அவனின் உள்ளம் கலங்கியது. அந்த பெண்ணின் பதட்டம் அவனை தொற்றிக் கொண்டது.
பிரீத்தி ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, “மது மது” என்று அவளின் கன்னம்தட்டி எழுப்பினர். அவள் எழுந்ததும் கிருஷ்ணாவை நினைத்து அழுக தொடங்க அவளை அதட்டி மிரட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கே உயிருக்கு போராடிய கிருஷ்ணாவைப் பார்த்தாள் மது. அவனின் உடல் முழுவதும் ரத்தமும் காயமுமாக காட்சியளித்தான். ஐ.சி.யூவில் உயிருக்கு போராடியவனை கண்டு தன்னை மீறி கதறியழுத மதுவை யாராலும் தேற்ற முடியவில்லை.
அவள் பேசும் பெண்ணாக இருந்திருந்தால் ஒரு வேலை மனதில் தோன்றுவதை வாய்விட்டு கூற முடியும் ஆனால் இவளால் பேச முடியாமல் தவிக்கும் தவிப்பை அவர்களால் உணர முடிந்தும் கூட ஒன்றும் செய்ய இயலவில்லை.
இவர்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் கிருஷ்ணாவின் குடும்பம் முழுவதும் வந்து சேர, “மது என்னம்மா ஆச்சு. கொஞ்சநேரம் முன்னதானே நல்லா பேசினான்” என்று கண்ணீரோடு கேட்ட தாமரைக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
சங்கீதாவோ மதுவின் நிலை உணர்ந்து மகனை கணவரிடம் கொடுத்துவிட்டு, “மது இங்கே பாருடா கிருஷ்ணாவுக்கு ஒண்ணும் ஆகாதும்மா” என்று அவளை தேற்றும் முயற்சியில் இறங்கினாள்.
அதுவரை அங்கே நடந்த அனைத்தும் பார்த்தபடி திரும்பிய தாரிகா தூரத்தில் நின்ற ராஜியை கண்டதும், “ரொம்ப தேங்க்ஸ் ராஜி. நீ மட்டும் இல்லன்னா எங்க அண்ணாவுக்கு அடிப்பட்டது எங்களுக்கு தெரியாது ராஜி” என்று கலங்கியவளை தோளோடு சாய்த்து ஆறுதல் அளித்தாள்.
கிருஷ்ணாவின் நிலை உணர்ந்து டாக்டர்கள் கையெழுத்து வாங்க வர கண்ணீரோடு கையெழுத்து போட்டு கொடுத்த ஆறுமுகம், “விஷ்ணு உன்னை பார்க்க சந்தோசமாக கிளம்பி வந்தோம். ஆனா கிருஷ்ணாவிற்கு இப்படியா நடக்கணும்” என்று தன் வயதையும் மீறி கதறினார் கிருஷ்ணாவின் தந்தை.
அடிப்பட்ட சிறிதுநேரத்தில் ராகவ் கண்விழித்து அனைவரையும் இனம்கண்டு விபத்து நடந்தது பற்றி கூறினான். ஆனால் கிருஷ்ணாவின் நிலையோ இன்னும் நாற்பத்தி எட்டு மணிநேரத்திற்கு பின்பே சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டனர்.
மதுவிற்கு யாரின் பேச்சும் காதில் விழவில்லை. அவள் கண்களில் கண்ணீர் கூட வற்றிப்போக மனதில் இருந்த தெம்பையும் இழந்து கணவன் கண்விழிக்க காத்திருந்தாள். நேரம் கடந்து செல்ல விஷ்ணு, மாதவ் இருவரும் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க மது மட்டும் அங்கிருந்து நகர கூட மறுத்தாள்.
இரண்டு நாட்களும் மின்னல் வேகத்தில் செல்ல, டாக்டரை அவர்களின் அறைக்கு சென்று சந்தித்தனர் ஆண்கள் மூவரும்.
“பாலக்கிருஷ்ணனின் இன்றைய நிலையில் கோமா என்று சொல்லலாம்” அவர் குண்டைத்தூக்கி போட, “ஸார்” என்று அதிர்ந்தனர்.
“இந்த விபத்தில் அவருக்கு உடலில் ஏற்பட்ட அடிகளைவிட மனதில் பெரிய அடி பலமாக இருந்திருக்கு. அவருக்கு சுயநினைவு கொஞ்சம் கொஞ்சமாக போயிட்டு இருக்கு. அவர் இன்றைய நிலையில் கோமாவிற்கு சென்றால் எப்போது நினைவு திரும்பும் என்று சொல்ல முடியாது. அதனால் அவனோடு பேச்சு கொடுக்க இதுவரை நடந்ததை சொல்ளுங்கள்” என்று கூறினார்.
அவர்கள் அறையைவிட்டு வெளியே வந்து விவரம் சொல்ல அவனின் நிலையை எண்ணி பெரியவர்கள் மனதிற்குள் வருந்தினர். அனைவருக்கும் அங்கிருந்த மது கண்ணில் தெரியவில்லை போல உண்மையைக் கூறிவிட்டனர்.
மது மெதுவாக அங்கிருந்து நகர்ந்து கிருஷ்ணாவின் அறைக்கு சென்றாள். முதல் முறையாக அவனை கத்தி அழைத்து எழுப்ப வேண்டும் என்ற வேகத்தில் முயற்சித்தாள். ஆனால் காற்றுதான் வந்தது அவளின் வாயில் இருந்து.
அந்தநொடி அவள் இந்த உலகத்தை வெறுத்தால் என்று சொல்லலாம். இதுவரை பேசாமல் இருப்பது ஒரு குறையாக அவள் நினைத்ததில்லை. ஆனால் இன்று நாம் பேசாமல் போனது தான் செய்த பாவமா என்று நினைத்து உள்ளுக்குள் கலங்கினாள்.
அங்கே அவனின் கைகளைப்பிடித்துக் கொண்டு கதறி அழுதவளை பார்க்கவே பாவமாக இருந்தது. விஷ்ணு நிர்மலாவிற்கு அழைத்து விவரம் சொல்ல, “ஐயோ என்னோட மகளோட வாழ்க்கை இப்படியா ஆகணும், கிருஷ்ணா ரொம்ப நல்லவன் ஆச்சே.. அவனுக்கா இப்படி” என்று கதறியவர் மகளை காண இந்தியா வருகிறேன் என்றார்.
ஆனால் விஷ்ணு வேண்டாம் என்று சொல்லிவிட அவர் உலகில் உள்ள அணைத்து தெய்வத்திடமும் வேண்டுதல் வைத்தார். ராம்குமாரிடம் அவர் விஷயத்தை சொல்ல, “அவனுக்கு ஒண்ணும் ஆகாது. நம்ம மகள் நல்லா வாழ்வாள்” என்பதோடு பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தார்.
இவர்கள் எல்லோரும் வீட்டிற்கு செல்ல மீண்டும் திரும்ப என்று இருந்தனர். விஷ்ணு ஒரு மாதம் தங்கையுடன் இருந்துவிட்டு மீண்டும் லண்டன் கிளம்பினான். அவரவர் வேலைகளைப் பார்க்க சென்றுவிட கிருஷ்ணாவின் உடல்நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை.
மது மட்டும் அவன் இன்று கண்விழிப்பான் நாளை விழிப்பான் என்று மருத்துவமனையில் தவம் கிடந்தாள். ஆனால் அவன் கண்விழிக்கவே இல்லை. அவர்களுக்கு மதுவை சமாளிப்பது ஒரு பக்கம் கவலையைக் கொடுக்க இன்னொரு பக்கம் கிளியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மொத்த குடும்பமும் திண்டாடியது.
நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. மது சைகையில் கூட யாருடனும் பேசுவதில்லை. அவள் தனக்குள் வட்டத்தை அமைத்து அதற்குள் சுருங்கினாள். கிருஷ்ணாவின் நிலையைக் கண்டு எல்லோரும் அவனோடு தினமும் ஒரு மணிநேரம் பேச அதெல்லாம் அவனின் உடல்நிலையில் மாற்றத்தை கொண்டுவரவில்லை. ஆனால் அவன் கோமா என்ற நிலைக்கும் செல்லவில்லை.
அவனின் நினைவுகள் உயிர்ப்புடன் இருந்த போதும் அவன் கண்விழிக்கவில்லை. ஆனால் மது மட்டும் அவனின் அருகே சேரைப் போட்டுகொண்டு அழுகையுடன் சைகையில் பேசுவாள். அதை கண்டு அனைவரின் மனமும் கலங்கும்.
பேச முடியாதவர்களின் உணர்வுகளை விழியால் மட்டுமே காண முடியும். ஆனால் இங்கே கிருஷ்ணா கண்மூடி கிடக்க அவனை மீட்டுகொண்டு வர முடியாமல் தவித்தாள்.
நாட்கள் செல்ல செல்ல மதுவின் நம்பிக்கை குறைய, ‘தான் பேசினால் மட்டுமே கிருஷ்ணா மீண்டும் கண்விழிப்பான்’ என்று உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பேச முயற்சித்தாள்.
அவளின் முயற்சி கண்டு டாக்டர் கூட, “இவர் நினைவுகளை மறந்து கோமாவிற்கு செல்லவில்லை. அவர் கண்விழிக்காமல் இருக்க பிடிவாதம் கூட காரணமாக இருக்கலாம். எனக்கு தெரிந்து இந்த பெண் பேசினால் கண்டிப்பாக அவன் இந்த நிலையிலிருந்து மீண்டு வர வாய்ப்பு இருக்கு” என்று அவளுக்குள் நம்பிக்கையை வித்தைத்தனர்.
இப்படியே ஆறு மாதம் சென்ற நிலையில் ஒருநாள் கண்விழித்தான் கிருஷ்ணா. அவன் கண்விழித்த நேரம் மது வீட்டிற்கு சென்றிருக்க எல்லோரும் சந்தோசமாக, “கிருஷ்ணா என்னப்பா இப்படி ஆறுமாதம் எங்களை இப்படி தவிக்க விட்டுட்ட” என்று தாய் தந்தை இருவரும் பதறினார்.
ராகவ் அவர்களின் உடன் இருக்க பிரீத்தி வேலைக்கு சென்று இருக்க கண்விழித்த கிருஷ்ணாவின் பார்வை மதுவைத் தேடியது. அவனின் தேடல் புரிந்து, “மதுவிற்கு தகவல் சொல்லியாச்சு, கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவாள்” என்று புன்னகைத்தான்.
அவனின் முதுகிற்கு தலையணை கொடுத்து அமர வைக்கவும் அவள் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது. தன்னை சுற்றி நின்றவர்களை தாண்டி கிருஷ்ணாவின் பார்வை மதுவின் மீது படிந்தது.
இந்த ஆறு மாதத்தில் அவள் ரொம்ப மெலிந்து போயிருக்க இவனைக் கண்டதும் அவளின் கண்களில் கண்ணீர் அருவியாக பெருகியது.
அவள் அவனை நெருக்கிட மற்றவர்கள் அறையைவிட்டு வெளியேற கிருஷ்ணாவின் முகத்தை இமைக்க மறந்து பார்த்தபடியே அவனின் அருகே சென்று கட்டிலின் விளிம்பில் அமர்ந்தாள்.
‘மது எப்படிடா இருக்கிற’ என்று கிருஷ்ணா கேட்க அவள் முதலில் அவனிடம் மாற்றத்தை அவள் உணரவில்லை. அவனின் கன்னத்தை வருடி நெற்றியில் இதழ் பதித்தவளின் கண்ணீர் அவனின் கன்னத்தில் வடிந்தது.
மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்திய கிருஷ்ணா, ‘எனக்கு ஒண்ணும் இல்லடி. ரொம்ப பயந்துட்டியா’ என்று அவன் கேட்க இவளோ தனக்கு காதுகள் கேட்கவில்லையோ என்று மீண்டும் காதுகளை அழுந்த தேய்த்துக் கொண்டாள்.
அவளின் செய்கைகளை கண்டு தன்னை மீறி சிரித்தவன், ‘மது விளையாடாதே என்னோட கேள்விக்கு பதில் சொல்லுடி’ என்று கண்சிமிட்டிவிட்டு மதுவின் இரு கன்னத்திலும் மெல்ல தன் வறண்ட இதழ்களை ஒற்றி எடுத்தான்.
அவன் கொஞ்சநேரமாக தன்னுடன் பேசுகிறான் என்று அவளின் அறிவு சொன்ன போதும் அவனின் குரல் சத்தம் கேட்காமல் தனக்குள் குழம்பினாள். அப்போதுதான் அவனின் உதடுகளை ஆழ்ந்து கவனித்தாள் மது.
அவனின் உதடுகள் அசைந்தது ஆனால் பேச்சு வரவில்லை. அவள் பயத்துடன் மீண்டும் அவனையே பார்க்க, ‘என்ன மது’ என்றான் அவளின் மீது பார்வை பதித்தபடி.
‘கிருஷ்ணா உனக்கு பேச்சு வரலையா?’ என்று கேட்கும்போதே அவள் தன்னையும் மீறி அழுதுவிட அவளின் உதட்டசைவை சரியாக புரிந்து கொண்டவனுக்கே ஒண்ணும் புரியவில்லை.அப்போது அறைக்குள் நுழைந்த ராகவின் பக்கம் திரும்பினான்.
‘ராகவ் உனக்கு இப்போ எப்படி இருக்குடா’ என்ற நண்பனிடம் வந்த கேள்வியை அவனால் புரிந்து கொள்ள முடிந்தபோதும் அவன் வாய்திறந்தால் காற்று வருவதை கவனித்த மறுநொடி அதிர்ச்சியில் சிலையென உறைந்தான்.
கிருஷ்ணா இருவரையும் மாறிமாறிப் பார்க்க, “கிருஷ்ணா உனக்கு உனக்கு.. வாய்ஸ் போயிருச்சா” என்று அதிர்ச்சியுடன் கேட்டதும் பட்டென்று நிமிர்ந்தாள் மது.
அப்போது தான் கிருஷ்ணா மதுவிடம் பேச முயற்சிக்க அவளின் காதுகளுக்கு இவனின் குரல் எட்டவில்லை என்று உணர்ந்து அதிர்ந்து மனையாளின் முகத்தைப் பார்த்தான்.
“கிருஷ்ணா இனிமேல் உன்னால் பேசவே முடியாதா?” என்றவன் அவன் வேகமாக வெளியேறி அங்கிருந்த கிருஷ்ணாவின் பெற்றோரிடம் சொல்ல அவர்கள் பதறியடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தனர்.
“என்னப்பா இத்தனை நாள் கழித்து கண்விழித்த நிம்மதியில் இருந்தோமே. இப்போ அதுவும் போச்சே” என்று தாமரை தன் மகனைப் பார்த்து கண்ணீர் விடவே மது கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்தாள்.
அவள் கிருஷ்ணாவின் உடையைப் பிடித்து, ‘கிருஷ்ணா பேசு.. கிருஷ்ணா பேசு’ என்று உலுக்க ஆரம்பிக்க கிருஷ்ணாவோ அமைதியாக இருந்தான். அவனால் நடப்பை உணர முடியவில்லை.
அவளை அவனிடமிருந்து விளக்குவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட ராகவ் தான் பொறுமை இல்லாமல் மதுவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டான்.
அதை பார்த்து மூவரும் அதிர, “அவனுக்கு தான் பேச்சு வரவில்லையே. அவனை எதுக்கு பேச சொல்ற மது. ஒன்னு இழந்த தான் ஒன்னு கிடைக்கும். இது எழுதபடாத நியதி. நீ அவனுக்கு குரல் வரவில்லை என்று துடிக்கிற. எங்களுக்கு அவன் பிழைத்து வந்ததே போதுமென்று இருக்கு’ என்றவனை வெறித்துப் பார்த்தாள் மது.
“அவன் காலம் முழுக்க ஊமையாக இருக்கணும் என்று அவனின் தலையில் எழுதியதை மாற்றவா முடியும்” என்று தன்னையும் மீறி ராகவ் கிருஷ்ணாவை ஊமை என்று சொல்லிவிட அந்தநிமிடமே தன்னலை மறந்தாள் மது.
அவனின் கன்னத்தில் பளார் என்று அறைந்த மது, ‘என் கிருஷ்ணாவை ஊமைன்னு சொன்ன பேச வாய் இருக்காது’ என்று விரல்நீட்டி எச்சரித்தாள்.
ராகவ் கோபத்துடன் நிமிர்ந்து, “இப்போ மட்டும் அவன் ஊமை இல்ல.. இனிமேல் அவள் என்னைக்கும் ஊமைதான்” என்றான் அவனும் பொறுமை இழந்து.
மீண்டும் பளார் என்று ஒரு அறைவிட்டாள். போன முறைபோல இல்லாமல் தொடர்ந்து அறைந்தவளை தடுக்க முடியாமல் கிருஷ்ணாவின் தாய் தந்தை தவித்தனர். அவள் கொடுத்த அத்தனை அடிக்கும் அவன் அசரவே இல்லை. ஆறு மாதமாக கல்போல இருந்தவள் இன்றுதானே தன் உணர்வுகளை காட்டுகிறாள்.
கிருஷ்ணாவிற்கு மதுவின் இந்நிலை கண்டு கண்கள் கலங்க அவர்கள் எல்லாம் நினைத்தற்கு எதிர் மறையாக, “என்னடா நினைச்சிட்டு இருக்கிற மனசுல. என் கிருஷ்ணா காலம் முழுக்க ஊமையாக இருப்பதை நான் பார்க்கணும் என்று நினைக்கிறீயா? உன்னை கொன்றே விடுவேன். ஒன்னை இழந்த ஒன்னு கிடைக்குமென்று யார் சொன்னது..” என்று அவள் எகிற மற்றவர்கள் அவளையே இமைக்க மறந்து பார்த்தனர்.
“உனக்கு பாலா வேணுமா? கிருஷ்ணா வேணுமா? என்ற கேள்விக்கு இங்கே இடமில்லை. எனக்கு என்னோட பாலகிருஷ்ணன் மதுமதியின் பாலாகிருஷ்ணன் வேணும்.. என்னோட பெயருக்கு பின்னாடி அவன் பெயர் சேர்ந்ததால் அவர் ஊமையானர் என்று சொல்வதை கேட்க நான் தயாராக இல்ல.. எனக்கு என் பாலகிருஷ்ணன் வேணும்” என்று தன்னை மீறி அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தினாள்.
ஒன்றை இழந்தால் மற்றொன்று கிடைக்கும் என்ற இயற்கையின் நியதி அங்கே வென்றது. கிருஷ்ணாவின் குரல் போனால் தான் இவளின் இதழில் வார்த்தைகள் வருமென்று எழுதபட்ட விதி அங்கே ஜெய்த்தது. அவள் கிருஷ்ணாவிற்கு ஆபத்து என்றபோது கூட அவள் பேசவில்லை. ஆனால் இன்று அவனுக்கு குரல்போய்விட்ட அதிர்ச்சியில் பேசினாள். அவளை மறந்து கத்தினாள்.
அவனின் பிடிவாதம் அங்கே ஜெய்த்தது, கிருஷ்ணா கண்ணீரோடு மனைவியைப் பார்த்தான். அது சந்தோஷத்தில் வந்த கண்ணீர். அவளை பேச வைத்துவிட்டேன் என்ற கர்வத்தில் வந்த கண்ணீர். ராகவிடம் பேசிவிட்டு திரும்பிய மது கிருஷ்ணாவின் அருகே வந்தாள்.
அவள் இன்னும் தனக்கு நிகழ்ந்த அதிசயத்தை உணராமல் கிருஷ்ணாவின் முகத்தை இரு கரங்களில் ஏந்தி அவனின் விழிகளை இமைக்க மறந்து பார்த்து கொண்டே, “கிருஷ்ணா எனக்காக பேசு கிருஷ்ணா. நீ வந்து என்னோட சண்டை போடு, அவன் உன்னை ஊமைன்னு சொல்றான்.. நீ ஊமை இல்லை இல்ல.. நீ நல்ல பேசுவ இல்ல.. அவனுக்கு சொன்ன புரியல கிருஷ்ணா” என்று அவனின் மார்பில் புதைந்து அழுதவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
ராகவ், ஆறுமுகம், தாமரை மூவரும் சிலையென நின்றிருந்தனர்..
கிருஷ்ணாவிற்கு பேச்சு வருமா?