kurumbuPaarvaiyil-21

குறும்பு பார்வையிலே – 21

ஆகாஷின் முகம் இறுகியது என்னவோ நொடிகள் தான். அவன் தன்னை சுதாரித்துக்கொண்டான்.

‘ஒருவேளை ஸ்ருதிக்கு திருமணம் ஆகி இருக்கலாம். இதில் எனக்கென்ன கஷ்டம்?’ அவன் மனசாட்சி அவனை இடித்துரைத்தது.

‘உண்மை தானே? நான் அவளை வேண்டாமுன்னு முடிவு பண்ணிட்டேன். அவளும் என்னை வேண்டாமுன்னு முடிவு பண்ணிட்டா? நானும் அவளைத் தேடி வரலை?அப்புறம் என்ன?’ என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டு தன்னை சரி செய்து கொண்டான் ஆகாஷ்.

‘ஸ்ருதி சொல்றது சரி தானே! எதுக்கு பழைய கதை?’ என்று எண்ணிக்கொண்டு அவளுக்காகக் காத்திருந்தான் ஆகாஷ்.

அனைவரையும் வழி அனுப்பிவிட்டு, அவள் இவன் பக்கம் திரும்ப, அவன் இவளைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

இவளும் அவனை ஆழமாகப் பார்த்தாள்.  ‘முன்பு போல், சிலும்பிக் கொண்டிருந்த கேசம். கூர்மையான கண்கள், ஆனால், அந்த விழிகள் எதையோ இழந்து இருக்கிறதோ? பழைய துள்ளல் இல்லையோ?’என்ற கேள்வி அவளுள்.

‘எல்லாம் உன் பிரமை.’ என்று அவள் அறிவு இடித்துரைக்க, ‘புன்னகை சிந்தும் அவன் உதடுகள், அவை மறந்து மடிந்து கொண்டு நிற்கிறதோ?’ அவளுள் மீண்டும் கேள்வி.

‘ச்… ச்சீ… நான் என்ன யோசிக்குறேன்?’ என்று சுதாரித்துக் கொண்டு தன்னை மீட்டுக்கொண்டாள்.

“எப்படி இருக்கீங்க?” இத்தனை நிமிடங்கள் கடந்து அவள் கேள்வி அவளையும் மீறி வந்தது.

“காலம் தாழ்ந்தாலும். அக்கறை அக்கறை தானே?” அவன் பதில் இப்பொழுதும் கேலியே பேச, அவள் அவனைக் கோபமாக முறைக்கும் முன், அவன் முந்திக்   கொண்டான்.

“நல்லாருக்கேன். ரொம்ப நல்லாருக்கேன்.” அந்த ‘ரொம்ப’ வில் சற்று அழுத்தம் கொடுத்துக் கூறினான்.

‘இவனுக்கென்ன, அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, தங்கையென்று…’ என்று சிந்திக்கும் பொழுது அவள் எண்ணம் சட்டென்று நின்றது.

‘ஒருவேளை, யாரையும் திருமணம் செய்திருப்பானோ? மனைவின்னு ஒருத்தி இருப்பாளோ?’ என்ற எண்ணம் தோன்ற அவனை அளவிட்டாள் அவள்.

‘இல்லை… இல்லை… அப்படி இருக்காது.’ அவள் மனம் ஓலமிட்டது.

அறிவோ , ‘உனக்கு அவன் வேண்டாமுன்னு வந்துட்ட, அப்புறம் எப்படி இருந்தா உனக்கென்ன?’ என்று கேட்க, அவள் அறிவின் பேச்சில் நியாயம் இருக்க, மௌனித்துக் கொண்டாள்.

ஆகாஷ் புருவங்களை உயர்த்த, ஸ்ருதி  சற்று பதட்டமாகத் தலை அசைத்துக்கொண்டாள்.

“அப்படியே நடந்துக்கிட்டே பேசலாமா?” அவன் கேட்க, அமைதியாக நடந்தாள்.

இருவரும் சற்று தூரம் மெதுவாக நடந்தனர். மௌனமாக நடந்தனர்.

‘உன்னைப் பார்க்க வந்தேன். ஆனால், உனக்காக வரலை.’ அவன் வார்த்தை மீண்டும் அவள் செவிகளில் ஒலித்தது.

‘இவன் எனக்காக வருவானா? நான் என்ன பிரெஷ் பீஸா? இவன் எனக்காக என்னைத் தேடி வர?’ அவன் அன்று  கூறிய வார்த்தைகள் இன்று போல் அவளை வாட்டியது.

‘ஒருமுறை இவனிடம் பழகி, தவறிவிட்டு நான் வாழ்க்கையில் பட்டது போதும். இனி இவன் சவகாசம் வேண்டாம்.’ என்று எண்ணியபடி, அவனை நேராகப் பார்த்தாள்.

“என்னை பார்க்க வந்தீங்க. எனக்காக வரலை. நீங்கள் வர வேண்டிய அவசியமுமில்லை. உங்கள் வரவை யாரும் இங்க விரும்பவுமில்லை. போதுமா விளக்கம்? இப்ப சொல்லுங்க எதுக்காக வந்தீங்க?” என்று கண்டிப்பான குரலில் கேட்டாள் ஸ்ருதி.

அவனுக்குக் கோபம் வரவழைக்கும் கேள்வி தான். ஆனால் அவன் முகத்தில் கோபம் இல்லை. தன் கண்களைச் சுருக்கினான்.

‘எனக்கு கோபம் தான் வரணும். கண்ராவி! உன்னை பார்த்தா, பல வருஷ கோபம் கூட சட்டுனு போயிருது. நான் உன்னை தேடி வந்திருக்கணுமோ? வந்திருந்தால்… உன்னை நேரில் பார்த்திருந்தால்… என்  கோபம் அன்னைக்கே காணாமல் போயிருக்குமோ?’ என்ற எண்ணம் ஓட, ஸ்ருதியை பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்கள் சட்டென்று அவளை அளவிட்டது.

‘ஒருவேளை இத்தனை வருஷத்தில் ஸ்ருதிக்கு கல்யாணம் ஆகிருக்குமோ? ஹஸ்பண்ட்டுன்னு சொன்னாளே! கோபத்தில் சொன்னாளா? என்னை கடுப்பேத்த சொன்னாளா? இல்லை உண்மையில்…’ அவனால் மேலும் சிந்திக்க முடியவில்லை.

‘இவளால் எப்படி என்னை விட்டுட்டு போகமுடிஞ்சிது?’ அவன் எண்ணம் கடைசியில் அங்கு வந்து நின்றது.

அவன் கை முஷ்டி இறுகியது. அவன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

‘ஸ்ருதியை நேரில் பார்த்துட்டா நடந்தது எல்லாம் இல்லைன்னு ஆகிருமா? நீ வேண்டாமுன்னு தூக்கி போட்டுட்டு, உன்னை அவமானப்படுத்திட்டு, உன் காதல் வேண்டாமுன்னு போனவ முன்னாடி என்ன யோசனை?’ அவன் மனம் ரணமாகத் துடிக்க, தன் தலையை மறுப்பாக அசைத்துக்கொண்டான்.

‘நான் என்ன இவளை தேடியா வந்தேன். பேச வந்ததைப் பேசுவோம்.’ என்று எண்ணிக்கொண்டு அவன் கண்களைத் திறந்தான். ஆனால், கேட்க முடியாமல் அவன் தடுமாற, ஸ்ருதியின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

“என்ன பெருசா கேட்க போறீங்க? உங்க குடும்பத்திற்கு தான் எதாவது கேட்க வந்திருப்பீங்க?” அவள் நக்கலாகக் கூற அவள் அவனைத் திடுக்கிட்டுப் பார்த்தான்.

‘இவள் இத்தனை புத்திசாலியா இருந்திருக்க வேண்டாம்.’ என்று சலிப்பாக உணர்ந்தான்.

அவன் முகபாவனை வெளிப்படுத்திய சலிப்பில், “அது தானே.. நான் சொன்னது சரி தான்.” அங்கிருந்த சற்று பெரிய சொகுசு சோபாவில் அமர்ந்து ஒரு கையை அதன் கைப்பிடியில் போட்டுக்கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் ஸ்ருதி.

“உங்க குடும்பம்… உங்க ஸ்டேட்டஸ்… இதெல்லாம் உங்களுக்கு முக்கியம் இல்லையா? உங்க ஸ்டேட்டஸ் தாண்டி…” அன்று அவன் கூறிய வார்த்தை வரவும் அவள் அலட்சியமாக நிறுத்த, அவன் அவளை யோசனையாகப் பார்த்தான்.

“நீங்க சொன்ன வார்த்தை தான்.” அவள் ஒற்றை புருவம் உயர்ந்தது.

அவள் அமர்ந்திருந்த விதம், அவள் ஒரு இளவரசி என்று கூறுவது போல் இருந்தது.

அவனும் அதையே நினைத்துக்கொண்டான். ‘என் மனதில் அமர்ந்திந்த மகாராணி ஒரு காலத்தில். இன்று ராட்சசி. என்னவெல்லாம் பேசுறா?’ அவளைக் கடுப்பாகப் பார்த்தான்.

“உங்களுக்கு தெரியுமா மிஸ்டர் ஆகாஷ். இப்ப என் ஸ்டேட்டஸ் உங்க ஸ்டேட்டஸ் விட அதிகம். உங்க பிசினெஸ் இன் ருபீஸ். என் பிசினெஸ் இன் டாலர்ஸ்.” என்று சற்று தோரணையாகவே கூறினாள் ஸ்ருதி.

“ஸோ… என் பிசினெஸ், என் ஸ்டேட்டஸ் எல்லாம் தாண்டி நான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். நீங்க பேச வந்ததை சட்டுன்னு சொன்னீங்கன்னா, நான் கிளம்புவேன். என் பேமிலி எனக்காக காத்திட்டு இருக்கும்.” என்று அவன் அன்று அலட்சியப்படுத்திய அதே தோரணையில் இன்று ஸ்ருதி பேசினாள்.

ஆகாஷிற்கும் அந்த நாள், நன்றாக நினைவிலிருந்தது. அவன் அவளைத் தொலைத்த நாள். தன் உயிரை, இன்பத்தை முழுதாக தொலைத்த நாள் அன்றோ!

ஆகாஷுக்கு கோபம்  வரவில்லை. ‘இவள் எதையும் மறக்கவில்லை. என்னையும் மறக்கவில்லை!’ என்ற எண்ணத்தோடு  அவன் உள்ளம் இப்பொழுது சற்று துள்ளாட்டம் போட்டது.

‘ஸோ… ஹஸ்பண்டுமில்லை. ஒண்ணுமில்லை. நான் அன்னைக்கு பேசின கேலிப்பேச்சை இன்னைக்கும் நினைச்சுகிட்டு அப்படியே இருக்கா? இதுல வீம்பு வேற?’ என்று அவளை ஆழமாகப் பார்த்தான்.

‘பழைய கோபத்தை விட்டுட்டு, நான் இறங்கி வரலாமா? நான் பேசவந்த விஷயத்தை விட, இது தான் முக்கியமோ? இல்லை, இதைச் சரி செய்தால், நான் பேச வந்த விஷயம் எளிதா முடிஞ்சிருமோ?’ அவன் எண்ணம் பலவாறு ஓட ஆரம்பித்தது.

‘ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். ஆனால், என்னை விட்டுட்டு போன இவ கிட்ட எப்படி இறங்கி போறது?’ அவன் தன்மானமும், காதலும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, எழுந்து நின்று அவன் முகத்தின் முன் சொடக்கிட்டாள் ஸ்ருதி.

அவன் சிந்தனை கலைந்து, இவளை பார்க்க, “என்ன சிந்தனை? ஒருவேளை உங்க ஒய்ப் பத்தின சிந்தனையோ?” அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் அதை மறைத்துக்கொண்டு சமாளிக்கும் விதமாகவே கேட்டாள்.

அவன் முகத்தில் கேலி புன்னகை பூக்க விரும்பி மறைந்து கொண்டது.

“இல்லை… நான் என்னை மனைவி பற்றி ரொம்ப யோசிக்குறதில்லை. அவ தான் என்னைப் பற்றி எப்பவும் யோசிப்பா. ஷி ஐஸ் ஸோ லவ்லி.” என்று ரசனையோடு கூறினான்.

அவள் முகம் சொத்தென்று விழுந்துவிட, ஆகாஷ் முகத்தில் மெல்லிய குறும்பு புன்னகை அரும்பியது.

“என் மனைவி ரொம்ப அழகு. குணம் அதை விட அழகு. பட்டுபட்டுன்னு எல்லாம் கோவம் வராது. ஸோ ஸ்வீட் தெரியுமா?” என்று புருவம் உயர்த்தி நிறுத்தினான்.

“என்ன கேலி பண்ணினாலும், என் கேலியை ரசிப்பா…” என்று அவன் ரசனையோடு கண்களை உருட்ட, ‘அது சரி… உனக்கு அந்த மாதிரி ஆள் தானே வேணும்.’ என்று கடுப்பாக எண்ணினாள்.

“அதுவும் இந்த மாமனுக்கு, சகலமும் என் மனைவி தான்.” என்று அவன் ரசித்து கூற, “ஓ… மாமோய்ன்னு கூப்பிடுற மாதிரி எதுவும் கிராமத்துப் பெண்ணை கல்யாணம் பண்ணி கிட்டிங்களா?” என்று அவள் சந்தேகம் கேட்டாள்.

‘இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை?’ என்று அவன் கடுப்பாக எண்ணிக்கொண்டு, “இல்லை… இல்லை… இந்த மாமோய்க்கு பின்னாடி லவ் அண்ட் லவ் ஒன்லி.” என்று தன் தோளைக் குலுக்கினான் ஆகாஷ்.

“எனக்கு எப்பவும் ஆபீஸ் டென்ஷன். நான் வீட்டுக்கும் வந்ததும், அப்படியே ஒரு எக்ஸ்ஓ அப்புறம் எக்ஸ்ஓ அப்படியே…” என்று அவன் இழுக்க, அவள் அவனைக் கோபமாக முறைத்தாள்.

“அமெரிக்கால இருக்க, இது கூட புரியலையா?” என்று அவன் இழுக்க, “அது தான் ஸ்ருதி… ஒன்லி ஹக்ஸ் அண்ட் கிஸ்ஸஸ்.” என்று யாருக்கும் கேட்கா வண்ணம் மெல்லமாக கிசுகிசுத்தான்.

‘இதெல்லாம் எனக்கு தெரியாதா? இவன் கிட்ட யார் கேட்டா?’ என்று அவள் சிலுப்பிக் கொள்ள, “காலையிலே அவள் முகத்தில் தான் முழிப்பேன். அவள் கையால் தான் காபி. அப்புறம் குளிக்க…” என்று அவன் இழுக்க, “ஐயோ…” என்று அவள் தன் காதுகளை மூடிக்கொண்டாள்.

“ஹே… பயப்படாத… அதெல்லாம் சொல்ல மாட்டேன். எங்க பர்சனல்.” என்று வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டான்.

அவள் முகம் மொத்தமாகக் கடுப்பை வெளிப்படுத்தியது. “மொத்தத்தில், லைப் இஸ் ஸோ ஸ்வீட். ஒரு இனிய கீதமா போகுதுன்னு சொல்லலாம் ஸ்ருதி.” என்று அவன் நிறுத்திக்கொள்ள, அவள் கண்கள் பட்டாம்பூச்சி போல் படபடத்துக்கொண்டு, ‘எங்குக் கண்ணீர் விட்டுவிடுவோமோ?’ என்று அதன் பயத்தை வெளிப்படுத்தியது.

ஸ்ருதி தன் படபடப்பை சரிப்படுத்திக்கொள்ள முயல, ஆகாஷ் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.

‘உனக்கு அறிவே இல்லை ஆகாஷ். இப்படி பேசிப்பேசித் தான் எதோ ஒன்னு பெரிய பிரச்சனை ஆகிருச்சு. இன்னமும் இப்படி பேசணுமா?’ என்று மனம் கேட்க, ‘அவள் மட்டும் ஹஸ்பண்டுன்னு சொல்லலாமா?’ என்று அவனே அவன் மனத்திடம் முறுக்கிக் கொண்டான்.

‘உன்னை கடுப்பேற்றுவேன் ஸ்ருதி. உன்னை சீண்டி பார்ப்பேன். ஆனால், நீ அழணுமுன்னு நான் நினைத்ததே இல்லை ஸ்ருதி. இதை எங்க போய் சொல்லுவேன்.’ என்று அவன் ஸ்ருதியின் வருத்தத்தைப் பார்க்க முடியாமல் முகம் திருப்பிக் கொள்ள… அவளைச் சமாதானம் செய்யும் வழி தெரியாமல் அவன் மௌனித்துக்கொள்ள…

“மொத்தத்தில் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிரெஷ் பீஸ் கிடைச்சாச்சுன்னு சொல்லுங்க?” என்று அவள் கேலி பேச, அவன் காதிலோ அது நாராசமாக ஒலிக்க, “ஏய்!” என்று கர்ஜித்தான் அவன்.

“எதுக்கு இப்ப டென்ஷன் ஆகுறீங்க? நீங்க சொன்ன வார்த்தை தான் ஆகாஷ்.” என்று அவள் கூற, ‘நான் என்னத்த சொன்னேன். இவை ஏன் என்னை விட்டுட்டு போனான்னு, எனக்கு அன்னைக்கே தெரியலை. இப்ப எதுக்கெடுத்தாலும், இவ என்னையே சொல்லுறாளே?’ என்று எண்ணிக்கொண்டு  தன் கோபத்தை மறைத்துக்கொண்டு பேச்சை வேறு பக்கம் திருப்பினான்.

“நாளைக்கும் மீட்டிங் இருக்குல்ல?” என்று அவன் கேட்க, “எதுக்கு என்னை தேடி வந்தீங்க?” காரியத்தில் கண்ணாக நின்றாள் ஸ்ருதி.

” நீங்க பேசுறது ரொம்ப கடுப்பா இருக்கே? உங்க ஹஸ்பேண்ட் உங்களை எப்படி சமாளிக்குறாங்க?” அவன் சீண்டலாகக் கேட்டான்.

‘இவன் என்ன, என் ஹஸ்பண்டை பார்க்கனனுமுன்னு சொல்லிருவானோ? இல்லாத ஹஸ்பண்டுக்கு நான் எந்த கடைக்குப் போவேன்?’ என்று  ஸ்ருதி அவனை அதிர்ந்து நோக்கினாள்.

‘ஹஸ்பேண்ட்டுன்னு பொய்யா சொல்ற? அதுவும் என்கிட்டவேவா? நீயா நானான்னு பார்த்திருவோம்?’ அவன் விடாமல் அவளைப் பார்த்தான்.

“அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை? அதை கேட்க தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா? உங்க கிட்ட பேச எனக்கு நேரமில்லை.” அவள் கிளம்ப, “அதை பத்தி எனக்கு கவலை இல்லை. உன்னை பார்க்க, உன் வீட்டுக்கு வருவேன். கடல் தாண்டி வந்தவனுக்கு, உன் வீட்டுக்கு வரத்தெரியாதா?” அவன் குரல் அவளை கேலியோடு தெரியாது.

“வேண்டாம். நீங்க என் வீட்டுக்கு வர வேண்டாம்.” அவள் சற்று சத்தமாகப் பேச, அங்கு அவர்களைக் கடத்த இரு அமெரிக்கர்கள் அவர்களைத் திரும்பிப் பார்க்க, “சாரி…” என்று அவள் சின்ன குரலில் கூறினாள்.

“இல்லாத ஹஸ்பேண்ட் விஷயம், எனக்கு தெரிஞ்சிருமுன்னு பயம்.” அவன் குரல் சற்று ஏளனமாக ஒலித்தது.

“இல்லை. உங்களால், என் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம் போதும். நான் நிம்மதியா இருக்கேன். அதை கெடுத்துறாதீங்க.” அவள் இப்பொழுது எகிறவில்லை. கெஞ்சவுமில்லை. ஆனால், கண்டிப்போடு கூறினாள். அவனைத் தூர நிறுத்தும் குரலோடு கூறினாள்.

ஆகாஷ், அவளை அடிபட்ட பார்வை பார்த்தான். ‘உண்மையில், ஸ்ருதிக்கு வேறு ஒரு திருமணம் நடந்திருக்குமோ?’ அவன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது.

அவன் குழப்பத்தை குழைக்கும் விதமாக அவள் அலைபேசி ஒலித்தது. அவள் பதட்டத்தில் அதை  ஆன் செய்ய, அது ஸ்பீக்கரில் விழுந்தது. “அம்மா! எப்ப வருவீங்க?” மழலையோடு குழந்தையின் குரல், அவன் நடுங்கி போனான்.

அவளும் தான். ‘இவ்வளவு வருஷம் பார்க்க வரமால் இருந்துட்டு, ஹஸ்பேண்ட் இல்லையான்னு சந்தேகம் வந்ததுக்கே இந்த குதிகுதிக்கறான். இவனுக்கு மட்டும் குழந்தை விஷயம் தெரிஞ்சது… ஐயோ, தெரிஞ்சிருச்சே!’ அவள் மனம் அலறியது.

“மாம்…” இப்பொழுது ஆங்கிலத்தில். அவன் அங்கிருந்த சோபாவில் மொந்தென்று அமர்ந்தான்.

இத்தனை  நேரம் அவனிடமிருந்த துள்ளாட்டம், இப்பொழுது தகிடத்தித்தோம் போட ஆரம்பித்தது.

அவன் திடுக்கிடலில் அவள் சுதாரித்துக் கொண்டாள். “செல்லம்… அம்மா இப்ப கொஞ்ச நேரத்தில் வந்திருவேன்.  என் பட்டுக்குட்டி, வீட்ல சமத்தா இருப்பீங்களாம். அம்மா, வரும் பொழுது உனக்கு இன்னைக்கு பொம்மை வாங்கிட்டு வரேன். ஒகே செல்லம்?” என்று அவள் கொஞ்ச, “ஓகே மாம்.” என்று கூறிக்கொண்டு அலைபேசி பேச்சை முடித்துக்கொண்டது குழந்தை.

ஆகாஷ், அவளைப் பார்க்க, “நல்ல கணவன், அழகான குழந்தை. என் வாழ்க்கை சிறப்பா போகுது. அதை நீங்க கெடுக்க வேண்டாம். ஒகே?” என்று கேட்டுக்கொண்டு, சூழ்நிலையைச் சாதமாக்கி அங்கிருந்து கிளம்பினாள்.

அவனைப் போல் வளவளக்க அவளுக்குத் திறமையும் இல்லை . விருப்பமும் இல்லை.

‘நம்பியிருப்பானா?’ என்ற சந்தேகம் எழ தன் தலையைத் திருப்பி, அவனை நோட்டமிடும் விதமாகப் பார்த்தாள். ஆகாஷ் யோசித்துக் கொண்டிருந்தான்.

‘கடவுளே… ஆகாஷ் என்ன கேட்க என்னை பார்க்க இத்தனை தூரம் வந்திருப்பான்? நான் எதுவானலும் செய்து கொடுத்திருவேன். ஆனால், என்னால், என் வாழ்க்கையை நேராக்க முடியாது. நான் தப்பு பண்ணவ தான். ஆனால், அந்த பேச்சை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டு வாழ முடியாது. அதுவும் ஆகாஷின் வாயிலிருந்து அந்த வார்த்தை வரும் ஒவ்வொரு தடவையும் நான் செத்துச் செத்துப் பிழைப்பேன். அந்த பிழைப்பு எனக்கு வேண்டாம். நான் செய்த தப்புக்கு இந்த தனிமை தான் எனக்கு தண்டனை.’ என்று மனதார வேண்டிக்கொண்டு, காரை வீட்டை நோக்கிச் செலுத்தினாள்.

‘ஹஸ்பேண்ட் அவள் கூறிய வார்த்தை நிஜம் தானா? ஸ்ருதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துவிட்டதா? அதுவும் குழந்தை.’ பல கேள்விகள் அவனுள். ஆகாஷ், நொறுங்கிப் போயிருந்தான்.  அவன் அறைக்குள் நுழைந்து கொண்டான். தலையணைக்குள் முகம் புதைத்துக் கொண்டான்.

‘நான் தான் அவளைத் தேடி வரலை. தப்பு தான். தப்பு தான். என்னை வேண்டாமுன்னு விட்டுட்டு போய்ட்டான்னு கோபம். எனக்கு கோபம் வர கூடாதா? நான் அப்படி என்ன பண்ணினேன்னு என்னை விட்டுட்டு போனா?’ அவன் மனம் அழுதது.

‘என்னால் வேற யாரையும் நினைச்சி கூட பார்க்க முடியலையே? ஆனால், ஸ்ருதியால் மட்டும் எப்படி? அது ஒரு குழந்தை வேற?’

“நல்ல கணவன், அழகான குழந்தை.” அவன் அறைக்குள் கத்தினான். தலையணை பறந்தது.

“நான் தான் வேண்டாம்னு சொன்னேன். ஸ்ருதியை பார்க்க வந்திருக்க கூடாது. அவளைப் பார்த்ததும் என் மனசு தடுமாறுது. நான் இங்கிருந்து உடனே கிளம்பனும். ஸ்ருதி சொன்ன மாதிரி அவ வாழ்க்கையை நான் கெடுக்கக் கூடாது.” என்று தனக்கு தானே பேசிக்கொண்டான்.

‘நான் வந்த விஷயம்?’ கேள்வி எழ, ‘அதை முடிக்காமல் , எப்படி செல்வது? இது என்ன சோதனை?’ என்று நொந்துக்கொண்டு அவன் மெத்தையில் புரண்டு படுத்தான்.

கண்களை இறுக மூடினான்.

ஸ்ருதி அவன் அருகே நெருங்கினாள். அவனைத் தீண்டினாள். அவன் அவளைத் தீண்ட, அவள் விலகிச் சென்றாள். ‘அவள் கண்களில் எனக்கான தேடல் இருந்தது. அவள் பார்வை என்னை உரிமையோடு தழுவியது. கோபத்தைத் தாண்டி, அதில் என் டாலி இருந்தாள். எனக்கான காதல் இருந்தது.’ அவன் மனம் உருப்போட்டது.

அவளின் கண்களில் தெரிந்த ஏதோவொன்றில், அது வருத்தமா? காதலா? தேடலா? அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், இடையிலான வருடங்களை  ஒதுக்கிக் கொண்டான்.  ‘அம்மா…’ என்று குழந்தையின் குரல் மீண்டும் அவன் காதில் ஒலித்தது. திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.

இப்பொழுது ஆகாஷ், அவனுக்குச் சாதமாக, அவன் கோபம், வருத்தம் அவர்களுக்கு இடையே இருக்கும் அனைத்து இடைவெளியையும் ஒதுக்கிக் கொண்டான்.

அவன் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது.

‘ஒருவேளை… ஒருவேளை… குழந்தை.’ அவன் உடல் நடுங்கியது. அவன் சிந்தனை ஓட்டம் அங்கு நின்றது.

‘ச்ச… ஒரு நாளில் எப்படி குழந்தை வந்திருக்கும்?’ தலை அசைத்துக்கொண்டான்.

அவன் நெஞ்சை நீவிக்கொண்டான். எங்கோ ஏதோ ஒன்று அவனை இப்பொழுது தைத்தது.

ஸ்ருதி வீட்டிற்குள் நுழைந்தாள்.

“ஏன் ஸ்ருதி ஒரு மாதிரி இருக்க?” என்று பார்வதி கேட்க, “ஒன்னும் இல்லை அம்மா. தலை வலி.” என்று கூறிக்கொண்டு அனைவரையும் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள்.

ரோபோட்  அவனுக்குப் பரிசுப்பொருள் கொடுக்கும் எடுத்த படத்தை, எடுத்தாள்.

மிக நெருக்கத்தில் ஆகாஷின் படம்.

அவன் படத்தைத் தடவிக்கொடுத்தாள்.

நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அந்த நெருக்கத்தில், அவள் வெறுத்தாலும், அவள் தவிர்க்க நினைத்தாலும் ஓர் நிம்மதி பரவத்தான் செய்தது.

‘இத்தனை வருடத்தில் மற்ற நாட்களில் எப்படியோ?’ இன்று அந்த நிம்மதியை அவள் ரசித்தாள். ஆகாஷை பார்த்த அதிர்ச்சியில், அவளுக்கு ஆசுவாசம் தேவைப்பட்டது.

அவள் தொலைத்த அனைத்தையும் அவன் புகைப்படத்தின் அருகாமையில் ரசித்தாள்.

சில நொடிகள் தான். அதற்குள் தன்னை மீட்டுக்கொண்டாள்.

“எனக்கு உன்னை பிடிக்கலை. நீ பேசினது பிடிக்கலை. உன் கேலிக்கு நான் ஆளில்லை. ஏன் இங்க வந்த ஆகாஷ். அடியே, முட்டாள் ஸ்ருதி… ஸ்ருதிக்கு ஆகாஷை மட்டும் தான் பிடிக்கும். எத்தனை தூரம் தொலைந்து போனாலும்… எத்தனை வருஷம் ஓடினாலும். நான்  காதலில் தோற்று போன முட்டாள். ஏமாளின்னு சொல்ல வந்தியா?” என்று கண்ணீர் மல்க கேட்டாள்.

“நான் உனக்கு முடிந்த கதையா?” அவன் கூறிய வார்த்தைகளை அவள் தனக்கு தானே கேட்டு, தலையணை தூக்கி எறிந்தாள்.

‘நான் ஏன் அழணும்?’ கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

‘உன்னை பார்க்க வந்தேன்… உனக்காக வரலை. திமிர். ஆண் வர்க்கத்தின் திமிர். நானும் குறைந்தவல்லிலை.’

“ஆகாஷை வீட்டு பக்கம் விடக்கூடாது. என் முன் நீ தோற்று ஓடி போகணும்.  இத்தனை வருஷம் என்னை தேடி வராமல் இப்ப எதுக்கு வரணும்? நீ இல்லாமல் நான் சந்தோஷமா வாழறேன்னு உனக்கு புரிய வைக்கிறேன்.” சத்தமாகச் சூளுரைத்துக்கொண்டாள்.

அப்பொழுது அவள் அறையை நோக்கி அழுத்தமான காலடி ஓசை கேட்டது.

ஸ்ருதியின் இதயம் இப்பொழுது வேகமாக ‘தடக்… தடக்…’ என்று ஓட ஆரம்பித்தது.

‘ஒருவேளை ஆகாஷ் எதையும் கண்டுபிடித்திருப்பானோ? வீட்டிற்கு வந்திருப்பானோ? வீட்டில் எல்லாரையும் பார்த்திருப்பானோ?’

கதவு அந்நேரம் பலமாகத் தட்டப்பட்டது. கதவைத் தட்டும் சத்தத்தில் கோபம் எதிரொலிக்க, ஸ்ருதியின் முகத்தில் வியர்த்தது.

‘எது நடக்க கூடாதுன்னு நினைச்சானோ, அது நடந்திருச்சோ?’ அவள் பதற, கதவு இன்னும் வேகமாகத் தட்டப்பட்டது.

குறும்புகள் தொடரும்…

 

error: Content is protected !!