Kannan Rathai – 28 Pre – Final
Kannan Rathai – 28 Pre – Final
அத்தியாயம் – 28
அவளைத் தன்னிடமிருந்து விலகிவிட்டு அவளின் தாமரை முகத்தை இரண்டு கரங்களில் தாங்கிக்கொண்டு அவளின் விழிகளில் கசிந்த கண்ணீரை பேரு விரலால் மெல்ல துடைத்துவிட்டு முகத்தில் விழுந்த கற்றை முடியை அவளின் காதோரம் ஒதுக்கிவிட்டு, “என் மது பேசிட்டா” அசுர வேகத்தில் அவளின் முகத்தில் முத்தமிட்டான்.
கணவனின் தவிப்பு புரியாத அவளோ இமைக்கமறந்து அவனையே திகைப்புடன் நோக்கினாள். அவன் பேசியதை இன்னும் அவளால் நம்ப முடியவில்லை.
“கிருஷ்ணா நீ பேசற..” என்று அவனின் முகத்தை இரு கரங்களில் தாங்கியவள் அவனை விட வேகமாக முகமெங்கும் முத்தமிட அவனும் அதற்கு உடன்பட்டான்.
தன்னுடைய கணவன் தான் சொன்ன மறு நிமிஷமே பேசிவிட்டத்தை நினைத்து கர்வம் கொண்டவளோ அவனை முத்தமிடுவதை நிறுத்திவிட்டு ராகவின் பக்கம் திரும்பி,
“பாரு என் பாலா பேசறார். இன்னொரு முறை ஊமைன்னு சொன்ன நீ அவ்வளவுதான்” என்று அவள் விரல்நீட்டி எச்சரிக்கும் போதுதான் தான் பேசுவதை உணர்ந்து பட்டென்று நிமிர்ந்து கணவனைப் பார்க்க அவனும் அவளின் பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டான்.
மதுவின் குரல்கேட்டு திகைப்பில் இருந்து வெளியே ராகவ், “டே ஆறு மாசம் பெட்டில் வந்து படுத்தும் உனக்கு கொழுப்பு தீரல. ஒரு நிமிஷத்தில் ஊமையாக நடித்து எங்க உயிரை எல்லாம் வாங்கிட்ட இல்ல” என்றவன் கோபத்தில் கத்திட அதுவரை கிருஷ்ணா ஆடிய நாடகம் வெட்ட வெளிச்சமானது.
அதுவரை புரியாத சில விஷயம் மற்றவருக்கு புரிய கிருஷ்ணாவின் தாய் தந்தை இருவரும் மகனை முறைத்தனர். ஆனால் மகனின் முயற்சியில் மறுமகள் பேசியதை நினைத்து அவர்களின் மனம் சந்தோஷத்தில் நிறைந்தது.
அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. அவள் பேசுவாள் என்று அவன் எதிர்பார்ப்பு இன்று உண்மையானதை நினைத்து அவனின் விழிகள் கலங்கியது.
தன் மார்பில் புதைந்து கண்ணீர் விடும் மனைவியை தன்னால் முடிந்தளவு மார்போடு சேர்த்து இறுகியணைத்து கொண்டான் கிருஷ்ணா. அவனின் உதட்டில் புன்னகை அரும்பிட அவனின் கண்கள் அதற்கு நேர்மாறாக கண்ணீரில் பளபளத்தது.
மது கணவனை முறைக்க, “என்னடி முறைக்கிற” என்று கேள்வியாக புருவம் உயர்தியவனை கொலைவெறியுடன் பார்த்தாள் மது.
“இந்நேரம் வரை என்னிடம் நடிச்சீங்களா?” அவள் கோபம் குறையாமல் கேட்க, “ஆமா” என்றான் அவளின் மீது பார்வை பதித்தபடி.
“அப்போ ராகவ் அண்ணா உங்களுக்கு சப்போர்ட் பண்ணிருக்காங்க இல்ல” அவள் அடுத்த கேள்விக்கு தாவிவிட கிருஷ்ணாவிற்கு நடப்பு புரியவில்லை.
“மது நீ என்ன கேட்கிற”என்று அவன் கேள்வியாக புருவம் உயர்த்திட, “நான் வரும் முன்னாடியே இவனும் நீங்களும் சேர்ந்து போட்ட பிளான் தான் இதுவா? ஐ மீன் நீங்க இந்நேரம் வரை ஊமையாக நடித்தது” அவள் இந்த பிரச்சனையை இத்தோடு விடுவதாக இல்லை.
இவள் கேள்வியைக் கேட்க இன்னொரு பக்கம் ராகவோ, ‘இவன் கண் முழித்த மறுநொடியே இவனை செக்பண்ண டாக்டர் ரூமிற்கு வந்துட்டாங்க. அவங்க போனதும் நாங்க உள்ளே நுழைந்தோம். இவனுடம் பேச நினைக்கும்போது இவ வந்துட்டா’ என்று சிந்தனை ஒரு பக்கம் ஓடியது.
அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்து கிருஷ்ணா தன்னை மீறி வாய்விட்டு சிரிக்க மதுவுடன் ராகவும் சேர்ந்து அவனை முறைத்தனர்.
“இவனை நடிடா என்று பிளான் போட்டு கொடுத்த ஓவர் ஆக்சன் பண்ணி காரியத்தைக் கெடுத்துவிடுவான் மது. அதன் ஒன் மென் ஆர்மி மாதிரி நானே களத்தில் இறங்கி வேலை பார்த்தேன்” என்று சொல்லி அவளிடம் வசமாக மாட்டிக்கொள்ள ராகவ் அவனை அடிக்க ஏதாவது கிடைக்கிறதா என்று அறைக்குள் தேடினான்.
“ஏய் பிராடு என்னை பேச வைக்கத்தான் ஆக்சிடன்ட் என்ற பெயரில் வந்து பெட்டில் படுத்திருக்கியா? ஆறு மாசம் தவிக்கவிட்டு இப்போதான் எழுந்திருக்க என்று பார்க்கிறேன் இல்ல என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்றவள் கோபத்துடன் அவனின் மார்பில் குத்தினாள்.
“ஏண்டா குரல் போவது உனக்கு சாதாரண விஷயமா? பாவம்டா மது சின்ன குழந்தை மாறி என்ன பேசுவது எப்படி பேசுவது என்று தெரியாமல் அவள் தவிச்ச தவிப்பு எங்களுக்கு தான் தெரியும்” என்றார் கோபத்துடன்.
“நீயில்லாத நாளில் உன்னோட ஜானுவுடன் அவள் அழுதபடி பேசும் போது என் மனம் கனத்துதான் போச்சு தெரியுமா” என்று தாய் சொல்ல அவனோ புன்னகையுடன் அவரை எதிர்கொண்டான்.
“தீயின்னு சொன்ன வாய் சுட்டுவிடுவதில்லை அம்மா. அவளுக்கு நல்லாக இது ஒரு வழி அவ்வளவுதான். எனக்கு தோணுச்சு நான் செய்தேன். இப்போ உங்க மருமக நல்ல வாய் பேசுவா ரெடியாக இருங்க மாமியார் மருமகள் சண்டை ஆரம்பமாக இன்னும் ரொம்ப நாள் இல்ல” என்று அவன் குறும்புடன் சொல்லிவிட்டு மனையாளின் பக்கம் திரும்பி,
“நான் சொன்னது சரிதானே மது” என்று கேட்டவனை இரண்டு கரங்கள் கொண்டு அவனின் மார்பில் குத்தினாள் வேகமாக.
“செய்வது எல்லாம் அயோக்கிய தொழில் இதில் நீ நியாயம் பேசுறீயா” என்று அவனோடு சண்டையிடும் மருமகளை வியப்புடன் பார்ப்பதோடு மட்டும் இல்லாமல், “நல்ல நாலு போடு மருமகளே.. அப்போழுதாவது திருந்துவானா என்று பார்ப்போம்” என்று அவளுக்கு சப்போர்ட் போட்ட தாய் தந்தையை முறைப்பது இப்போது கிருஷ்ணாவின் முறையானது.
“என்ன அங்க முறைக்கற.. இங்கே பதில் சொல்லு” என்று கணவனை மிரட்டியபோதும் தன்னை பேச வைத்துவிட்ட அவனின் மீது கோபடப்பட அவளால் முடியவில்லை. இந்த ஆறு மாதமும் அவள் பட்ட துன்பம் அவனின் மீது கோபத்தை தூண்டிவிடவே செய்தது..
தன் மகன் மீண்டு வந்தும் இல்லாமல் மது பேசியதும் சேர்த்து இரட்டிப்பு சந்தோஷம் தந்தது. ராகவ் அவனின் பங்கிற்கு இரண்டு அடி போட்டாலும் அவனை கட்டியணைத்துக் கொண்டான்.
இந்த விஷயமறிந்து விஷ்ணு புறப்பட்டு வருவதாக சொல்ல கிருஷ்ணா வேண்டாமென்று சொல்லிவிட்டான். இங்கே எல்லாம் சரியானதும் நாங்களே அங்கு வருவதாக உறுதியும் கொடுத்தான்.
மொத்த குடும்பத்துடன் சென்னை வருவதாக சொல்லிவிட்டு ஆறுமுகம், தாமரை இருவரும் மதுரை சென்றனர். அதன்பிறகு ஒரு வாரம் மருத்துவமனை இருக்க சொல்லி அவனுக்கு அனைத்து செக்கப்பும் எடுக்கப்பட்டது. மது அன்றைய நாளுக்கு பிறகு இயல்பாக அவனுடன் பேசவில்லை.
அன்று காலை உணவுடன் தன்னருகே வந்த மனைவியின் கரம்பிடித்து அருகே அமர வைத்தான். அவள் பேசாமல் மெளனமாக இருக்க, “மது என்மேல் இன்னும் கோபமா?” என்றான் அவளின் கைகளில் அழுத்தம் கொடுத்தபடி.
சிலநொடி மௌனத்திற்கு பிறகு, “கோபம் இல்லாமல் இருக்குமா? ஆறுமாசம் நடிப்புதானே நடிச்சீங்க. உங்களுக்கு குரல் போயிருச்சு என்று தெரிஞ்சதும் நான் எவ்வளவு துடிச்சேன் அப்போ கூட நீங்க உண்மையை சொல்லல” என்றாள் அவனின் முகம் பார்க்காமல்.
“எனக்கு விபத்து ஏற்பட்டது பொய் என்னோட பிளான் என்று நினைக்கிற” என்றவன் இறுகிய குரலில் கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மது.
“இல்ல நான் அப்படி சொல்லல” என்றாள் வேகமாகவே.
“மது ஆறுமாசம் நான் கோமாவிற்கு போகல. காரணம் என்னன்னு உனக்கு தெரியுமா? என் நினைவுகளை பிடித்து வைக்க உன்னால் மட்டும் முடியும். நீ பேசணும் என்ற எண்ணம் என்னோட பிடிவாதமும் இணைந்து என்னை கண்ணைத் திறக்கவே விடல ஆனா என்னோட உடல்நிலை மட்டும் தேறியது. அது எப்படி சாத்தியம் யோசித்து பாரு மது” என்றான் பொறுமையுடன்.
அவள் புருவங்கள் சிந்தனையில் சுருங்க கண்டு அவன் வேகமாக பேசினான்.
“இந்த அதிர்ச்சியில் நீ பேசிட்டா கூட சந்தோஷம் என்று அடிபடும் போது நினைத்தேன். நான் இவ்வளவு சீக்கிரம் குணமாக நீயும் ஒரு காரணம். தினமும் நீங்க பேசும் அனைத்தும் எனக்கு கேட்கும். அதில் உன்னை பற்றிய தகவல் இருக்கும். நீ பேச முயற்சி பண்ற விஷயம் கூட இவங்க எல்லாம் சொல்லி தெரிஞ்சிதான்.” என்றான் நிதானமாகவே .
அவள் கேள்வியாக புருவம் உயர்த்திட, “மது இந்த மாதிரி சின்ன சின்ன நினைவுகளின் தொகுப்பு ஒருவர் சொல்ல சொல்ல என் மனம் நினைவுகளை மீண்டு வர காரணம். ஆன கண்ணை மட்டும் முழிக்கவே முடியாது..” என்றவன் நிறுத்திவிட்டு மனையாளின் முகம் நோக்கினான்.
அவள் கண்ணீரோடு அந்த நாளின் நினைவுகளுக்கு செல்ல அவளை இழுத்து மார்புடன் அணைத்துக்கொண்டு, “பிடிவாதம் உங்க அப்பா மாதிரியே. என்னோட மகள் பேசினா நான் எழுந்து நடப்பேன் என்று இருக்காரு இல்ல அந்த மாதிரி எனக்குள் ஒருவிதமான பிடிவாதம் உன் குரல் கேட்ட மட்டும் படுக்கையைவிட்டு எழுந்திரிப்பேன் என்ற உறுதி.” என்றான் மனைவியின் முதுகை வருடியபடி.
அவள் நிமிர்ந்து அவனைக் கேள்வியாக நோக்கிட, “உங்க அப்பா இன்னைக்கு வரை அப்படிதானே இருக்காரு. நீ மட்டும் முயற்சி பண்ணிருந்தா அப்போவே பேசி இருக்கலாம். உன்னை நான் சைகையில் பேசதேன்னு சொல்ல இதுவும் ஒரு காரணம் முயற்சியே பண்ணாமல் கடைசி வரை உன்னை முடவன் நிலையில் இருக்க வெச்சுட்டாங்க.” என்றவன் பேசிய பிறகுதான் அவளுக்கு நிதர்சனம் புரிந்தது
“ஆனால் என்னால் நீ பேசியது உன்னோட காதலின் ஆழத்தை அழுத்தமாக சொல்லுது மது. எனக்கு பாலா வேண்டாம், கிருஷ்ணா வேண்டாம் என்னோட பாலகிருஷ்ணன் வேணும் என்று சொன்னபோது எப்படி இருந்தது தெரியுமா” என்றவன் அவளை இழுத்து அவளின் முகம் முழுவதும் முத்தமிட்டான்.
அவன் சொல்லாத விஷயத்தை அவனின் முத்தம் அவளுக்கு புரிய வைக்க, “என்னை மட்டும் யோசிக்கிறீங்க கிருஷ்ணா இது சுயநலம் இல்லையா” என்றாள் கண்ணீர் குரலில் அவனைவிட்டு விலகாமலே.
அதில் தெரிந்த வழியை உணர்ந்தபோதும் அவன் பொறுமையாகவே பதில் கொடுத்தான்.
“இதில் என்ன சுயநலம் இருக்கு. என் மனைவிக்கு என் குரல் அவ்வளவு பிடிக்கும், அது போச்சு என்று தெரிஞ்சா அவ கண்டிப்பா பேசுவாளே என்ற எண்ணம் தான் என்னை மீண்டும் அந்த இருளில் இருந்து இழுத்து வந்தது. எனக்கு இது தப்பா தெரியலடி” என்றான் அவளின் கன்னத்தில் இதழ்பதித்து.
அவனின் மார்பில் இருந்து நிமிர்ந்த மது அவனையே பார்க்க, “நான் மதுமதியின் பாலகிருஷ்ணன்” அவன் குறும்புடன் கண்சிமிட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவளின் இதழில் இதழ் பதித்தான்.
இத்தனை நாள் விலகல் எல்லாம் சேர்ந்து அவனை அவளுக்குள் முழ்கும் நிலையில் இருந்தான். அவளின் இதழைவிட்டு அவன் விலகாமல் இருக்க அவளோ கிறக்கத்தில் விழிமூடினாள். இந்த இதழ் முத்தம் எவ்வளவு நேரம் நீண்டதோ எங்கோ கேட்ட குழந்தையின் அலறல் சத்தத்தில் பட்டென்று விலகினர்.
இருவரின் இடையே இருந்த சிறிய பிணக்கும் அப்போது முடிந்துவிட்டது. அவளின் உயிரில் கலந்தவன் இப்போது அவளின் உயிரும் ஆகவிட்டான். மருத்துவமனையில் இருந்து இருவரும் வீடு வந்து சேர பிரீத்தி அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.
அவனை கண்டநொடி, “கிருஷ் வந்தாச்சு”என்று ஜானு சந்தோஷத்தில் அங்கும் இங்கும் பறந்தது. அவன் கிளியுடன் விளையாடிட அதும் அவனோடு அழகாக செல்லம் கொஞ்சியது.
அவனின் அருகே வந்து அமர்ந்த ராகவ், “உனக்கு அடிப்பட்ட நாளில் இருந்து கிளியை சமாளிக்கவே முடியல தெரியுமா? அப்புறம் டாக்டரிடம் பர்மிசன் வாங்கி உன்னோட ரூமிற்கு வாரம் ஒரு முறை கூட்டுட்டு வருவோம் கிருஷ்ணா” என்றான் புன்னகையுடன்.
“என்னை பார்க்க ஹோஸ்பிடல் வந்தியா?” என்று கேட்க அது ஆமா ஆமா என்று தலையசைக்க அவனுக்கு சிரிப்பு வந்துவிட, “என் செல்லம் ஜானு. அதன் சமத்து புள்ளையா இருந்துருக்கு” என்றபோது காபியுடன் வந்தாள் மது.
“ஜானு இங்கே வாடி நம்ம காபி குடிக்கலாம்” என்ற மறுநொடியே அவளின் தோளுக்கு தாவிவிட்டது கிளி. ஒரு குட்டி மூடியில் அவள் டீ ஊற்றி வைக்க அது சத்தம் இல்லாமல் குடிப்பதைப் பார்த்து, “எல்லோரையும் மயக்கி வெச்சிருக்கா” என்றான் கிருஷ்ணா பொறாமையுடன்.
மதுவின் காதுகளில் அது தெளிவாக விழுந்துவிட, “ஜானு கிருஷ்ணாவை போடா சொல்லுடா” என்றாள் குறும்புடன்.
ராகவ், பிரீத்தி இருவரும் ஜானுவை இமைக்க மறந்து பார்க்க, “போடா” என்றது தெளிவான குரலில். அதை கேட்ட மறுநொடி பக்கென்று சிரித்துவிட்ட கிருஷ்ணா, “இருவரும் கூட்டு சேர்ந்து என்னை போடா சொல்றீங்களா? இவ வாய்பேச ஆரம்பித்ததும் இவளோட கூட்டு சேர்ந்துட்ட” என்று மதுவின் காதைபிடித்து திருகினான் கிருஷ்ணா.
“கிருஷ்ணா வலிக்குதுப்பா” என்றாள் மது சிணுங்கிட,“மது பாவம் சொல்லு ஜானு” என்றாள் பிரீத்தி புன்னகையுடன். அவள் இரண்டு மூன்று முறை சொன்னதும் அது திரும்ப சொல்லியது.
“எல்லோரும் ஒன்னு கூடிட்டிங் இல்ல” என்று கிருஷ்ணா ஜானுவைத் துரத்திட, “மது காப்பாத்து மது காப்பாத்து” என்று குட்டிகுட்டி சந்துக்குள் புகுந்து ஓடிய ஜானுவைப் பார்த்து கிருஷ்ணாவை தடுக்க அவனின் பின்னே ஓடினாள் மது.
“கிருஷ்ணா பாவம்டா என் ஜானு” என்று அவள் கிளிக்கு சப்போர்ட் போடவே, “ஏய் ஒழுங்கா நகருடி. இன்னைக்கு அது மட்டும் கையில் கிடைச்சுது அப்போ இருக்கு அதுக்கு” என்று கிருஷ்ணா கிளியை தேடினான் கட்டிலின் சந்துக்குள்.
கிருஷ்ணாவை திசைதிருப்ப நினைத்த மது அவனை இழுத்து கட்டிக்கொண்டு, “கிருஷ்ணா நம்ம ஷாப்பிங் போலாமா” என்றாள் மெல்லிய குரலில்.
அதுவரை இருந்த கோபம் மறந்து அவளை அணைத்துகொண்ட கிருஷ்ணா, “இப்படி கூப்பிட்ட எங்கே வேண்டும் என்றாலும் போலாமே” என்று அவளின் கழுத்தில் கிறக்கத்துடன் முகம் புதைக்க அவளின் பளிங்கு முகமோ குங்குமமாக சிவந்தது.
“மது மது” என்ற கிளியின் குரல்கேட்டு, “இதை அடிக்கத்தான் இவ்வளவு வேகமாக வந்தேன். இப்போ இவ என்ன என்னவோ சொல்லி மனுஷனை தூண்டி விட்டுட்டா” என்று கோபத்துடன் மனைவியை முறைக்க முயன்றும் முடியாமல் போனது அவனால்.
ராகவ் மற்றும் பிரீத்தி இருவரும் அவர்களிடம் விடைபெற்று செல்ல மற்ற இருவரும் ஷாப்பிங் செல்ல கிளம்பி சென்றனர். அங்கே மது மொத்த குடும்பத்திற்கும் துணிமணிகள் தேர்வு செய்ய கிருஷ்ணா கண்ணாடியின் வழியாக செல்லும் பெண்களை குறும்புடன் சைட் அடித்தான்.
அதை கவனிக்காத மது, “கிருஷ்ணா இந்த பிரவுன் கலர் உனக்கு செட் ஆகும் இல்ல” என்றவள் சட்டையை அவனின் மீது வைத்து பார்க்க அவனின் எதிரே நின்றிருந்த ஒரு பெண்ணோ அவனை பார்த்து, ‘சூப்பர்’ என்றாள்.
அவன் புன்னகையுடன் கண்சிமிட்ட அதை கண்ணாடி வழியாக கவனித்துவிட்ட மது, “டேய் அங்கே என்னடா பார்வை” என்று இடையில் கையூன்றி அவனோடு சண்டைக்கு தயாரானாள்.
“சும்மா சைட் அடிச்சேன் பட் அந்த பொண்ணு ஓகே ஆகிருச்சு. உன்னை நேரில் பார்க்கும் முன்னாடி அவளை பார்த்து இருந்தா இன்னைக்கு என்னோட வாழ்க்கை இப்படி ஆகிருக்குமா” என்று அவன் சோககீதம் வாசிக்க தன் எடுத்த துணிகளை பில் போட கொடுத்துவிட்டு வருவதற்குள் கிருஷ்ணா அந்த இடத்தைவிட்டு ஓடிவிட அவ்வளவு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் அவனைத் துரத்தினாள் மது.
“உன்னோட வாழ்க்கை என்னால் வீணா போன மாதிரி பேசற” என்று அவள் அவனை அடிக்க துரத்த, “ஆமாண்டி உன்னால் தான் எல்லாம்” என்று குறும்புடன் கூறியபடி ஓடியவனை வளைத்து பிடித்து அடிக்கத்தாள்.
“அன்னைக்கு அந்த ருத்ராவை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமாக இருக்க நினைச்சேன். அதுக்குள்ளே நீ இடையில் வந்து காரியத்தையே கெடுத்துட்ட” என்றான் அவளிடம் வம்பிழுக்கும் நோக்கத்துடன்
“நான் வேண்டான்னு சொல்லலையே. அவளையே போய் கட்டிக்கோ. இனிமேல் என்னிடம் வந்து மது ஒரு கிஸ் தாடி. ஒரு ஹக் தா என்று சொல்லி பக்கம் வந்த கொலையே விழும் மகனே.” என்றவளுக்கு கோபம் குறைவேனா என்றது.
அவளைப் பார்த்து கிருஷ்ணா சிரிக்க, “இன்னும் சிரிக்கிற நீ. இவனோட அழகுக்கு இன்னொருத்தி கேட்குதா. வீட்டுக்கு வா உன்னை ரூமில் வெச்சு பூட்டி விடுகிறேன். ஷாப்பிங் வந்ததும் சைட் அடிக்கிறான்” என்றவள் அவனை அடிக்க கையை ஓங்கினாள்.
அவன் தவறுதலாக பின்னே நகர அவள் அவனை அடிக்க வீசிய கைகள் மோதி அவளின் ஐஸ்கிரீம் கீழே விழுந்தது. அதை அறியாத இருவரும் சுவாரசியமாக சண்டைப்போட்ட மதுவை வியப்புடன் நோக்கினாள் அவள்.
அப்போதுதான் அங்கே நடந்ததை நினைத்து திரும்பிய மது எதிரே நின்றவளைப் பார்த்தும் அதிர்ச்சியுடன் கிருஷ்ணாவைப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்தான்.
இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்ப்பது கண்டு கேள்வியாக புருவம் உயர்த்தினாள் அவள்..