kurumbuPaarvaiyile-22

குறும்பு பார்வையிலே – 22

ஸ்ருதி பதட்டத்தோடு கதவைத் திறக்க, அங்கு கார்த்திக் நின்று கொண்டிருந்தான். ஸ்ருதியின் பார்வை அவனைச் சந்தித்த  நொடியில் தன்னை சுதாரித்துக்கொண்டாள்.

“வேலையை முடிச்சிட்டு கான்பெரென்ஸ்க்கு வரேன்னு சொன்னியே. வர முடியலையோ? நேரம் ஆகிருச்சோ?” சாதாரணமாக கேட்க முயற்சித்து சற்று வெற்றியும் பெற்றாள்.

மற்றவர்கள் அவள் சுதாரிப்பில் ஏமாந்து போக வாய்ப்பு இருக்கிறதோ என்னவோ, சிறு வயதில் இருந்து ஸ்ருதியை  பார்க்கும் கார்த்திக் அவளைக் கூர்மையாக பார்த்தான்.

ஸ்ருதி அவனை அசராமல் பார்க்க, “ஆகாஷை பார்த்தியா?” அவன் கேள்வி நேரடியாக வந்து விழுந்தது.

“யார் ஆகாஷ்?” அசட்டையாகக் கேட்டாள் ஸ்ருதி.

அவளின் கேள்வியில், கார்த்திக்கிற்கு சற்று சிரிப்பு கூட வந்தது.  அவன் உதட்டை மடித்து, “ஆகாஷ், யாருன்னு உன் கண்கள், உன் முகம், உன் படபடப்பு எல்லாம் தெளிவா சொல்லுது.” என்று கார்த்திக் கேலி போல் உண்மையைச் சொன்னான்.

“ஆமா, இவன் பெரிய இவன்… பெருசா கண்டுபிடிக்க வந்துட்டான்.” என்று ஸ்ருதி தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.

“உன் தவிப்பு…” என்று கார்த்திக் மேலும் பேச ஆரம்பிக்க, “ஆமா ஆகாஷை பார்த்தேன். இப்ப அதுக்கு என்ன?” என்று சுள்ளென்று கேட்டாள்.

“இப்பவாது குழந்தையை பற்றி சொன்னியா?” என்று கார்த்திக் சற்று கோபமாகவே கேட்டான்.

“குழந்தை விஷயம் ஆகாஷுக்கு தெரிய கூடாது.” என்று அழுத்தமாகக் கூறினாள்.

“வாய்ப்பில்லை. ஆகாஷா, நம்மளை தேடி வந்திருக்கார். அவர் தேடி வரவே இல்லைன்னு நீ குறை பட்டிருக்க. இன்னைக்கு அவரா வந்திருக்கார். நான் நிச்சயம் சொல்லுவேன்.” என்று அழுத்தமாகக் கூறினான் கார்த்திக்.

“சாவகாசமா, நாலு, அஞ்சு வருஷம் கழித்து வந்தவர் கிட்ட, குழந்தையை காட்டி இந்த ஸ்ருதியை வாழ்க்கை பிச்சை கேட்க சொல்றியா கார்த்திக்? அவர் போடுற வாழ்க்கை பிச்சையில் வாழுற அளவுக்கு உன் பிரெண்டோட நிலைமை மோசமாகிருச்சு நீ நினைக்குறியா கார்த்திக்?” அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

“என் குழந்தையை ஆகாஷ் கண்ணில் கூட காட்ட மாட்டேன்.” அழுத்தமாக கூறினாள் ஸ்ருதி

‘இவ என்ன இப்படி பேசுறா?’ என்ற எண்ணத்தோடு கார்த்திக் அதிர்ந்து நின்றான்.

‘ஆகாஷ் என்ன சொன்னாருன்னு தெரியலை, குழந்தை விஷயத்தைக் கூட சொல்லாம இவ கிளம்பி வந்துட்டா. இத்தனை வருஷமா ஸ்ருதியை  தேடி அவர் வரலை. ஸ்ருதி அதை காரணமா சொன்னா. இத்தனை வருஷம் கழித்து ஆகாஷ் வந்திருக்கார். அவரும் ஸ்ருதியை தேடி வீட்டுக்கு வரலை. இவளாவது ஆகாஷ் கிட்ட மனசு விட்டு பேச கூடாதா? இப்பவும் என்னன்னவோ சொல்றா… ஐயோ!’ என்று நொடிக்குள் தன்னை குழப்பிக்கொண்டான் கார்த்திக்.

“ரொம்ப யோசிக்காத. போய் வேலையை பாரு.” என்று உறுதியாகக் கூறினாள் ஸ்ருதி.

கார்த்திக் மௌனமாக கிளம்பிவிட்டான்.

அப்பொழுது குழந்தை கார்த்திக்கை வழி மறைந்து கொண்டு நின்றது. “அங்கிள்… என்னை வெளிய கூட்டிட்டுபோங்க. ஐ அம் ஸோ அங்கிரி.” என்று தன் கைகளை அசைத்து அசைத்து கோபத்தையும் அழகாக கடுப்போடு வெளிப்படுத்தியது.

‘நீயுமாடா?’ என்று அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தான் கார்த்திக். “வீட்ல தமிழ் தான் பேசணுமுன்னு சொல்லிருக்கேன்ல?” என்று ஈஸ்வரன், பார்வதி இருவரும் ஒரு சேர கூற, “ஓகே…” என்று சம்மதத்தையும் ஆங்கிலத்தில் வழங்கியது குழந்தை தலை அசைத்துக்கொண்டு.

பாட்டி, தாத்தா இருவரும் ஒரு சேர சிரித்துக்கொண்டனர். அவர்கள் சந்தோசம் பேரக் குழந்தையிடம் மட்டுமே இருப்பது போல்.

“எங்க டா போகணும்?” என்று கார்த்திக் கேட்க, “அம்மா நான் கேட்ட பொம்மை வாங்கி தரலை. ஸோ பொம்மை வாங்கிட்டு, ஐஸ் கிரீம் சாப்பிடலாம்.” என்று கண்சிமிட்டியது குழந்தை.

கார்த்திக் தலை அசைத்துக்கொண்டு அவன் காரில், குழந்தையின் கார் சீட்டை மாட்டிக்கொண்டு, அதில் குழந்தையை அமரவைத்து காரை கிளப்பினான்.

கார்த்திக்கின் எண்ணம் வேகமாக ஓடியது. ‘ஆகாஷ் தங்கியிருக்கும் ஹோட்டல் பக்கத்தில் போவோம். ஒருவேளை இருவரும் சந்தித்துவிட்டால்… நான் எதுமே சொல்லமாட்டேன். ஆகாஷே கண்டுபிடித்துவிட்டால்? ஸ்ருதியின் வாழ்க்கை சரியாகிவிடும்.’ இந்த சிந்தனை ஓட்டத்தில்  அவன் மனம் மகிழ்ந்தது.

காரை வேறுபக்கம் திருப்ப, “அங்கிள்! எங்க போறோம்?” என்று கேட்க, “ஐஸ் கிரீம் சாப்பிட தான்.” என்று கூற, “அது தான் இங்கயே இருக்கே?” என்று தெளிவாக கேட்டது குழந்தை.

“டேய்… நீ உங்க அம்மா, அப்பா விட விவரம் டா….” என்று குழந்தைக்கு கேட்காதவாறு முணுமுணுத்துவிட்டு, “டிப்பிங் டாட்ஸ், வேணுமா வேண்டாமா?” என்று கேட்டான் கார்த்திக்.

“சரி… சரி…” என்று கூறியது குழந்தை.

கார்த்திக் பலத்த வேண்டுதலோடு, ஆகாஷ் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே உள்ள கடையில் பொம்மையை வாங்கி கொடுத்துவிட்டு, டிப்பிங் டாட்டஸ் கடைக்குச் சென்றான்.

அப்பொழுது டிப்பிங் டாட்ஸ் ஐஸ்கிரீம் அவன் வாங்கி கொண்டிருக்க, விதியா? இல்லை இறைவனின் அருளா?இல்லை கார்த்திக்கின் வேண்டுதலா? தெரியவில்லை அகாஷிற்கு அறையில் மூச்சு முட்டியது.

காற்று வாங்க வெளியே நடந்து வந்தான். அவன் கண்களில் பட்ட  அந்த ஐஸ்கிரீம் பார்லர் பழைய நினைவுகளாக அவனை  சூறாவளியாக சூழ்ந்தது.

‘வாலெண்டைன்ஸ் டே அன்னைக்கு கூட ஐஸ் கிரீம் சாப்பிடத்தானே போனோம். ஸ்ருதிக்கு ஐஸ்கிரீம்ன்னா பிடிக்கும்.’ அவளை வெறுத்தாலும், அவள் மேல் கோபம் கொண்டாலும் அவள் எண்ணத்தோடு அவன் கால்கள் கடைக்குள் சென்றது.

கடையில் அவ்வளவு கூட்டம் இல்லை. ஆனால், வரிசையில் கூட்டம் இருக்கத்தான் செய்தது. பலர் வாங்கிவிட்டு, கடையில் இருந்து வெளியே நடந்தபடி சாப்பிட்டனர்.

கார்த்திக் வரிசையில் நிற்கும் பொழுது ஆகாஷை கண்டுகொண்டான்.

கார்த்திக்கின் கண்களில் எதிர்பார்ப்பு கூடியது

குழந்தை அவனுக்காக ஒரு மேஜை அருகே காத்திருக்க, அருகே இருந்த மேஜையில் அமர்ந்தான் ஆகாஷ். கார்த்திக் பின்னே நகர்ந்தபடி ஐஸ்கிரீம் வாங்குவதை தாமத படுத்திக்கொண்டிருந்தான்.

அங்குமிங்கும் வேடிக்கை பார்த்த குழந்தை ஆகாஷ் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்து, “ஹல்லோ… யூ டின்ட் பை ஐஸ்கிரீம்?” என்று குழந்தை தலை அசைத்து மழலையோடு கேட்டது.

குழந்தையின் மழலையை ரசித்தபடி, ஆகாஷ் “நோ…” என்று கூறுகையில் அவன் அலைபேசி ஒலித்தது.

அவன் யாரிடமோ தமிழில் பேச, ” ஃப்ரம்  இந்தியா?” என்று கேட்டுக்கொண்டு உரிமையோடு அவன் அருகே சென்று அமர்ந்தது.

‘எனக்கும், ஸ்ருதிக்கும் குழந்தை பிறந்திருந்தால் இந்த வயசு இருக்குமோ?’ என்ற எண்ணம் தோன்றக் குழந்தையை ஆசையாக பார்த்தான் ஆகாஷ்.

‘குழந்தை ஸ்ருதியை போலவே இருக்கோ?’ என்ற கேள்வி எழ, ‘எனக்கு எப்பப்பாரு அவ நினைப்பு.’ தன் எண்ணப்போக்கை ஒதுக்கிக் கொண்டான்.

துறுதுறுப்பான கண்கள்.  பண்ட்,ஷர்ட் அணிந்திருந்தான். கையில் கடையில் புதிதாக வாங்கிய பொம்மை. அவன் கால்களில் ஸ்பைடர் மென் சாக்ஸ். வீட்டில் செய்த சாக்ஸ் என்று தெரிந்தது. அதில் சிப்பியில் ஆன கண்கள். ஆகாஷின் உடல் நடுங்கியது.

‘ச்… ச்ச…’ தன்னை மீண்டும் நிதானப்படுத்திக் கொண்டான்.

குழந்தையின் முகத்தை ஆராயும் விதமாகப் பார்த்தான். அவன் எண்ணம் தறிகெட்டு ஓட, ‘குழந்தையை என் கண்ணில் காட்டாமல் வளர்த்துட்டாளா? இல்லை வேற…’ அவன் எண்ணம் அங்கு நின்றது.

“நீங்க ஐஸ்கிரீம் வாங்கலையா?” என்ற கேள்வியோடு அவன் சிந்தனையை கலைத்தது குழந்தை.

ஆகாஷ், மறுப்பாக தலை அசைக்க, “ஐஸ்கிரீம் வாங்காம கடையில் சும்மா உட்காந்திருந்தா, போலீஸ் உங்களை பிடிச்சிட்டு போயிரும். ஷுயரா ஐஸ்கிரீம் சாப்பிடணும்.” என்ற குழந்தையின் பேச்சில் அவன் சிந்தனை கலைந்து கவனம் முழுவதும் குழந்தையிடம் திரும்பியது.

‘டேய்… நீ என்னை விட பயங்கரமான ஆளா இருக்கியே.’ என்ற எண்ணத்தோடு,  “குறும்பா…” ஆகாஷின் உதடுகள் முணுமுணுத்தது.

‘அம்மாவும் என்னை இப்படி தான் கூப்பிடுவாங்க.’ என்ற எண்ணத்தோடு குழந்தை விழுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தது.

ஆகாஷ் குழந்தையை ரசித்துக் கொண்டிருந்தான். “உன் பெயர் என்ன?” என்று ஆகாஷ் ஆர்வமாகக் கேட்க, “கிருஷ்.” என்று கூறினான் குழந்தை.

‘ஆகாஷ், ஸ்ருதி எனக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தால் நானும் இந்த பெயரைத் தான் வைத்திருப்பேன். எங்கள் பெயரின் எழுத்துக்களின் கலவையோடு உள்ள பெயர்.’ என்ற எண்ணத்தோடு, அவனுக்குக் குழந்தை மேல் உள்ள ஈடுபாடு அதிகமாகியது.

“கிருஷ்…” ஆகாஷின் உதடுகள் மெல்ல அன்போடு அவனை அழைத்தது.

ஐஸ்கிரீம் வர தாமதமானதால், குழந்தை திரும்பி வரிசையைப் பார்த்தது.

“எ பிக் லைன். உங்களுக்கும் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரச்சொல்லவா?” கிருஷ் கேட்க, ஆகாஷ் மறுப்பாகத் தலை அசைத்தான்.

“ஐஸ்கிரீம் பார்த்திட்டு சாப்பிடலைனா, பாடி ஹாட் ஆகிரும்.” என்று தன் கண்களைப் பெரிதாக்கிக் கூறினான் கிருஷ்.

” இது என்ன புது கதை! அது எப்படி டா?” என்று ஆகாஷ் சந்தேகம் கேட்க, “ஐஸ்கிரீம் பக்கத்துல கொல்டா இருக்குமா?”என்று தன் கையை ஆட்டி, கேள்வி கேட்க குழந்தையின் உடல் பாவனையில் லயித்து ஆகாஷ் தலை அசைத்தான்.

“நம்ம பாடி ஐஸ் கிரீம் வேணுமுன்னு நினக்குமா?” என்று கிருஷ் கேள்வியாக நிறுத்த, ஆகாஷின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“நீங்க சாப்பிடலைனா, கோல்டு ஐஸ்கிரீம் கிடைக்கலைன்னு கோபத்தில் பாடி செம்ம ஹாட் ஆகிரும்.” என்று குழந்தை அதிவேகமாகக் கதை அளக்க, ஆகாஷ் குலுங்கி குலுங்கி சிரித்தான்.

“கிருஷ்… நானே பரவால்லை டா… நீ என்னை விட கதை அளக்குற.” என்று ஆகாஷ் கூற, “என் அம்மாவும் அப்படி தான் சொல்லுவாங்க. உங்க அப்பா கூட நீ விடுற கதையில் தோத்து போயிருவாங்கன்னு.” என்று பெருமையாகக் கூறினான் கிருஷ்.

‘தனக்கும் இப்படி குழந்தை இருக்குமோ?’ என்ற கேள்வி எழ, திடுக்கிட்டு நிமிர்ந்தான். ‘இந்த எண்ணம் என்னைக் கொன்று விடும்.’ என்று குழந்தையிடமிருந்து விலகிச் செல்ல எழுந்து கிளம்பினான்.

“ஹலோ… உங்க மொபைல் விட்டுட்டு போறீங்களே?” என்று குழந்தை கூற, சட்டென்று சந்தேகத்தோடு  திரும்பினான்  ஆகாஷ்.

“ட்ரு…” என்று கிருஷ் கூற, சிரித்துக்கொண்டு ஆகாஷ் கிளம்ப, “பை… சொல்லாம போறீங்க? எங்க அம்மா, கிளம்பும் பொழுது சொல்லிட்டு தான் போகணும். இல்லைனா லைப் கீவ்ஸ் யு ஹார்ட் டைம்ன்னு சொல்லுவாங்க.” என்று கிருஷ் அவனை வழி அனுப்ப மனமில்லாமல் பேச்சை வளர்த்தான்.

‘உங்க அம்மாக்கு தெரிந்தது ஸ்ருதிக்கு தெரியலை.’ என்ற எண்ணத்தோடு அவன், “பை…” கூறினான்.

“என் டாலிக்கும் சொல்லுங்க.” என்று பொம்மையை நீட்டினான் கிருஷ்.

“டாலி?” அவன் புருவங்கள் உயர்த்த, “என் பொம்மை பெரு  டாலி.” என்று தோள்களைக் குலுக்கினான் கிருஷ்.

குழந்தையின் டாலி என்ற அழைப்பும், அவன் தோள் குலுக்கலும் தன்னையே நினைவுபடுத்த, ஆகாஷ் அதிர்ந்து நின்றான்.

‘எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது?’ என்ற ஆகாஷ் தன்னை அலசி கொண்டிருக்க, கிருஷ் அடுத்த குண்டை தூக்கிப் போட்டான்.

“டாலி எ காமன் நேம்… உங்க குறும்பா மாதிரி… எங்க அம்மா கூட என்னை எப்பவும் குறும்பான்னு தான் கூப்பிடுவாங்க. நீங்க கூப்பிட மாதிரி.” என்று கிருஷ் சர்வசாதாரணமாகக் கூறினான்.

‘குறும்பா ஒரு காமன் நேமா இருக்கலாம்… டாலி ஒரு காமன் நேமா இருக்கலாம்… ஆனால், இரண்டும் ஒரே இடத்தில் காமன் நேமா எப்படி இருக்க முடியும்?’ அவன் மீண்டும் அமர்ந்தான்.

‘குழந்தை பார்க்க ஸ்ருதி போலவே இருக்கிறானோ? அவன் சாக்சில், சிப்பியாலான கண்கள்… கிருஷ் என்னை போலவே குறும்பு பேசுகிறானே!’ அவன் உலகம் தட்டாமாலை சுற்றியது.

“உங்க அம்மா பெயர் என்ன?” என்று அவன் கேட்க, “அம்மா பெயர் ஸ்ருதி. அப்பா பெயர் ஆகாஷ்.” என்று தெளிவாகக் கூறினான் கிருஷ்.

“உங்க அப்பாவை பார்த்திருக்கியா?” என்று ஆகாஷ் கேட்க, “மத்தவங்க பேமிலி மேட்டர் கேட்கறது பேட் ஹபீட்.” என்று அழுத்தமாகக் கூறினான் கிருஷ்.

இத்தனை நேரம் குழந்தையிடம் தன்னை பார்த்துக்கொண்டிருந்தான். இப்பொழுது ஸ்ருதியை கண்டதும் அவன் தன் கண்களை இறுக மூடினான்.

‘இப்படி குழந்தையை மறைத்து வளர்க்கும் அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்?’ அவன் கை முஷ்டி இறுகியது.

‘என் குழந்தை… என் கிட்ட சொல்லவே இல்லையே பாவி.’ அவன் மனம் பரிதவித்து.

கார்த்திக், மௌனமாக இவர்கள் இருக்கும் மேஜைக்கு வந்தான். குழந்தையிடம் டிப்பிங் டாட்ஸ் ஐஸ்கிரீமை  நீட்டினான்.

ஆகாஷின் முகபாவனையிலிருந்து கார்த்திக் சில விஷயங்களைப் புரிந்து கொண்டான்.

“எனக்கே கொஞ்ச வருஷம் கழித்துத் தான் தெரியும். ஆனால், நீங்க இத்தனை வருஷம் தேடி வரலைன்னு…” கார்த்திக் மேலே பேச முடியாமல் தடுமாறினான்.

ஆகாஷ்  எதுவும் பேசவில்லை. கார்த்திக்கை ஆழமாகப் பார்த்தான்.  “நீங்க இங்க வந்தது தெரிஞ்சதும். நான்…” கார்த்திக்கிடம் மீண்டும் தடுமாற்றம்.

“ஐஸ்கிரீம் சாப்பிடுங்க…” என்று குழந்தை இருவரிடமும் நீட்ட, கார்த்திக் தர்மசங்கடமாக நெளிந்தான். “ஐஸ்கிரீம் எப்படி கையில் வாங்குறதுன்னு யோசிக்குறீங்களா? அது தான் டிப்பிங் டாட்ஸ் ஐஸ்கிரீம் ஸ்பெஷல். கையில் வாங்கி, ஆ போட்டுக்கலாம்.” என்று கிருஷ் கூற, ஆகாஷ் தன் குழந்தையிடம்  கைகளை ஆசையாக நீட்டினான். அவன் கை நடுங்கியது.

‘ஆகாஷ் திரும்ப கேட்டு விடுவானோ?’ என்ற எண்ணத்தோடு,  “ஒன் டைம் தான் குடுக்கணும். நிறைய குடுத்தா உங்களுக்கு ஸ்டொமக் பெயின் வந்திரும்.” என்று கிருஷ் அசராமல் கூற, ஆகாஷின் முகத்தில் புன்னகை கீற்று.

“இப்படி பொய் சொன்னா, உங்க அம்மா திட்ட மாட்டாங்களா?” என்று குழந்தையின் காதில் கிசுகிசுப்பாக கேட்டான் ஆகாஷ்.

“திட்டினா… ஜஸ்ட் பார் ஃபன். அப்படி சொல்லிட்டா மாம் வில் அண்டர்ஸ்டாண்ட்.” என்று கிருஷ் பெருமையாகக் கூறினான்.

“எங்க அம்மாவுக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும்.” என்று கூடுதல் தகவலை கிருஷ் கூற,  குழந்தை அருகே இருப்பதை நினைத்து மகிழவா, இல்லை கை தவறிய காலத்தை எண்ணித் துடிக்கவா ஆகாஷுக்கு தெரியவில்லை.

‘பிறக்கும் பொழுது எப்படி இருந்திருப்பான்? எப்படித் தவழ்ந்திருப்பான்? எப்படி நடக்க ஆரம்பித்திருப்பான்?’ என்ற பல ஆசை நிறைந்த கேள்வி அவனுள்.

அத்தனையையும் நிராசையாக ஆக்கிய, அவள் மீது அவன் கோபம் முழுவதும் விகாரமாக மெல்ல மெல்ல திரும்பி கொண்டிருந்தது.

குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்க, கார்த்திக் மௌனமாக அமர்ந்திருந்தான். பேச கூடாது என்ற எண்ணம் அவனிடம் இல்லை. ஆனால், என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை.

ஆகாஷ் தன் புருவத்தைச் சுருக்கி தீவிரமாக யோசித்தான்.

சில நிமிடங்களில்,  “குழந்தை என்கிட்டே இருக்கட்டும். ஸ்ருதியை என்னை பார்க்க வர சொல்லு. என்னை விட்டுவிட்டுப் போன ஸ்ருதி, என்னைத் தேடி வரணும்.” அழுத்தமாகக் காட்டமாக ஒலித்தது ஆகாஷின் குரல்.

‘இது என்ன வில்லங்கம்?’ என்று அதிர்ந்து பார்த்தான் கார்த்திக்.

‘ஸ்ருதி வேண்டாமுன்னு தானே சொன்னா. நான் குழந்தையை அழைத்து வந்து பெரிய பிசகாகிப்போனதோ?’ என்ற கேள்வியோடு, கார்த்திக் ஸ்தம்பித்து நின்றான்.

குறும்புகள் தொடரும்…