கதிரின் வருகை
அர்ஜூன் காரை எடுக்க அவனின் பின்னோடு தன்னுடைய பைக்கில் பின் தொடர்ந்தான் ஸ்ரீதர். அவன் பின்னோடு வருவதைக் கவனித்த அர்ஜூன், “இனியா” என்றான்.
அவள் கலக்கத்துடன் நிமிர்ந்து பார்க்க கண்ணாடியைக் காட்டி, “அவன் எதுக்கு நம்மள பின் தொடர்ந்து வரான்” என்றான் கேள்வியாக புருவம் உயர்த்தியபடி.
“எனக்கு தெரியல அண்ணா” என்று இனியா சொல்லிவிட்டு வெளியே வேடிக்கைப் பார்க்கும்போதுதான் கார் செல்லும் பாதையைக் கவனித்தவள் சட்டென்று திரும்பி அர்ஜூனின் முகம் பார்த்தாள்.
அவளின் பார்வை தன்மீது படிவத்தை உணர்ந்து, “ஒரு முக்கியமான நபரை பிக்கப் பண்ணனும் இனியா. அதன் நம்ம இருவரும் ஏர்போர்ட் போறோம்” என்றவன் வேறு எதுவும் சொல்லாமல் சாலையின் மீது பார்வையை பதித்துவிட இவளோ வெளியே வேடிக்கை பார்த்தாள்.
அர்ஜூனிடம் விளக்கம் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை என்பது அவளின் நடவடிக்கையில் வெளிப்படுத்தினாள். ஸ்ரீதர் பண்ணிய வேலையை நினைத்து அவள் மனம் நொந்துதான் போனாள்.
‘கதிர் மாமாவை நானா இப்படியொரு கேள்வி கேட்டேன். பாவம் மாமா எனக்காக எதெல்லாம் இழந்துட்டு இருக்காரு. அவரைப் போய்’ அவள் தன்னை அறியாமல் தலையில் அடித்துக்கொண்டாள்.
அவளுக்கு மட்டும் இப்போது சிறகு இருந்தால் வானில் பறந்து சென்று தன்னுடைய மாமாவிடம் இதற்கான விளக்கத்தை கட்டாயம் கொடுத்திருப்பாளோ என்னவோ? நடப்பது எதுவும் நம்கையில் இல்லை என்பது அவளின் விசயத்தில் உண்மையானது..
அர்ஜூன் அவளின் செயல்களை கவனித்தபோதும் அதற்கு அவன் விளக்கம் கேட்காமல் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, “நீ காரில் இரு. நான் போய் அவரை அழைச்சிட்டு வறேன்” என்று அர்ஜூன் சென்றுவிட்டான்.
அவன் சென்ற சிலநொடியில் அங்கே வந்த ஸ்ரீதர் காரின் கதவைத் திறந்து அவளின் கரத்தைப்பிடித்து வெளியே இழுக்க, “ஸ்ரீதர் என்னடா நினைச்சிட்டு இருக்கிற மனசில்” என்றாள் கோபத்துடன்.
“இங்கே பாரு இனியா மூன்று மாசமாக உன்னோட பழகுறேன். எந்த இடத்தில் என் மனசு உன்னிடம் சலனபட்டுச்சுன்னு எனக்கே தெரியல. யாரோ ஒருத்தரிடம் நான் உன் லவ்வர் என்று சொன்னதும் என்னை அடிச்சிட்டு வர உனக்கு என்ன தைரியம்” என்றான் அவள் அடித்த கன்னங்களை வருடியபடி.
அவனின் கேள்வி நியாயமானது என்ற போதும் தன்னோடு தோழியாக பழகியவளின் இதயத்தில் யார் இருக்கிறார் என்று கூட ஒருவன் இருப்பானா? என்ற சந்தேகம் அவளின் மனதில் எழுந்தது.
அவனை ஆழ்ந்து நோக்கியவள், “நீ சொன்னது யாரோ ஒருத்தரிடம் இல்ல. நான் உயிருக்கு உயிரா நேசிக்கிற என் கதிர்மாமாகிட்ட நீ காதலன் என்று சொல்ற” என்று பற்றிய கரத்தை பட்டென்று விட்டான்.
“உன்னோட லிமிட்டிடன் பழகி இருக்கணும். நண்பன் தானே என்று நினைத்த என் புத்தியை நான் செருப்பால அடிக்கனும்டா” என்று அவள் கோபத்துடன் பேச அவள் முன்னே கைநீட்டி தடுத்தான்.
அவளின் ‘லிமிட்’ என்ற வார்த்தை அவனின் மனதை காயப்படுத்தியது. இன்றுவரை ஒரு எல்லையுடன் தான் நிறுத்தபட்டிருக்கும் விஷயம் புரிந்து அவனுக்கு தலை வின் வின் என்று வலித்தது.
“லிமிட்டுடன் பழகணுமா? நான் என் மனதில் இருந்ததை சொன்னதுக்கு இந்த அளவுக்கு பேசற” என்று கோபத்தில் இருக்கும் சூழ்நிலை மறந்து கத்திட அவர்களை கடந்து சென்ற சிலர் அவர்களை திரும்பிப் பார்த்துவிட்டு சென்றபோதும் அதை ஒரு பொருட்டாக அவன் மதிக்கவில்லை.
ஆனால் இந்தியாவின் வளர்ந்த அவளுக்கு தான் உடல் கூசிபோனது. யாரென்று தெரியாதவர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்துவது போல உணர்ந்தாள்.
“இனியா லவ் வந்துட்டா அங்கே நட்புக்கு இடமில்லை. நான் உன்னை விரும்பறேன். யாருக்காகவும் உன்னை மற்றவருக்கு விட்டுகொடுக்க தயாரா இல்ல” என்றான் தன்னுடைய கோபத்தைக் கட்டுபடுத்திக்கொண்டு.
அதுவரை அமைதியாக இருந்த இனியா சட்டென்று நிமிர்ந்து, “அதுக்காக நான் ஒண்ணும் பண்ண முடியாது. நீ எப்பவும் எனக்கு நண்பன்தான் உனக்கு விரும்பம் இருந்தா பேசு இல்லாட்டி விலகி போயிரு, அதுக்காக கதிர்மாமாவை என்னால விட்டுகொடுக்க முடியாது” என்றாள் தெளிவாக.
இருவரின் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இருவரும் இருக்கும் இடத்தை உணராமல் சண்டை போட இனி நடக்க போவதை பார்க்க விதி குதுகலத்துடன் காத்திருந்தது.
இனியா ஸ்ரீதரை அடித்ததற்கு கதிர் கேட்ட கேள்வியும் அதற்கு அவள் கொடுத்த பதிலும் கதிரின் மனதில் ஆழமாக பதிந்துவிட, ‘நான் யாரோதான்’ என்ற நினைவுடன் அவளைவிட்டு விலகுவது என்று தெளிவான ஒரு முடிவை எடுத்தான். அவள் அனுப்பிய கவிதை பார்த்து உள்ளம் வலித்தது.
இதோ அவளைப் பார்க்க ஏர்போர்ட் வந்து இறங்கிவிட்டான். நாளை அவளின் பிறந்தநாள். இதுநாள் வரை தாய் தந்தையின் பிரிவை கூட உணராத அளவிற்கு அவளை வளர்த்திய செழியனும், சுப்புவும் அவளுக்கு பிறந்தநாள் பரிசை மகனிடம் கொடுத்து அனுப்பியிருந்தனர்.
இதெல்லாம் நிகழுமென்று அவன் அமெரிக்கா வரும்முன்னே நினைக்கவில்லை. ஆனால் நிகழ்ந்த எதையும் மாற்ற முடியாது. நிதர்சனம் புரிந்துவிட, ‘நான் முடிவெடுத்துவிட்டேன். இனியும் நான் உன் வாழ்க்கையில் குறுக்க வர விரும்பல. இனிமேல் உன்னை படிக்க வைப்பது மட்டும் என் கடமை’ என்ற முடிவுடன் இருள் சூழ்ந்த வானிலை பார்த்தான்.
இனியாவின் மீது அவன் வைத்த அதிகமான காதல்தான் இப்போது காயத்தையும் கொடுக்கிறது என்று மனதார உணர்ந்தான். ஒருவர் மீது வரும் காதலை வெளிப்படுத்தினால் தான் அது காதலா? அப்போ இதற்கு பெயர் என்ன?
அவனிடம் கேள்விக்கு விடையில்லை. அவன் குழப்பத்துடன் ஏர்போர்ட்டில் நின்றிருக்க அவனை அழைத்துச் செல்ல வந்திருந்தான் அர்ஜூன்.
“வாடா நல்லவனே. அவளுக்கு பிறந்தநாள் என்றதும் அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்து இருக்கிற” உயிர் நண்பனை கேலி செய்தபோதும் அவனின் முகத்தில் பழைய துள்ளல் இல்லாமல் இருந்தது.
தன் நண்பன் சிந்தனையில் இருப்பதைக் கவனித்துவிட்டு, “நீ வீட்டிற்கு வா. அங்கே போனதும் எல்லாம் பேசிக்கலாம்..” என்று அவன் ஏர்போர்ட் வாசலுக்கு வர தூரத்தில் இனியாவிடம் யாரோ பேசுவது கதிரின் விழியில் விழுந்தது.
“அர்ஜூன் இனியா ஏர்போர்ட் வந்திருக்காளா?” என்று கரகரத்த குரலை சமன்செய்தபடி கேட்க, “ஆமா வரும் போது யுனிவர்சிட்டி போய் கூட்டுட்டு வந்தேன்” என்றான் எதார்த்தமாக. அர்ஜூன் இப்படி செய்வான் என்று கதிர் எதிர்பார்க்கவில்லை.
அவனின் மனநிலை உணராத அர்ஜூன், “உன்னை இப்படி திடீரென்று பார்த்த அவ ரொம்ப சந்தோசப்படுவா இல்ல அதன் சொல்லாமல் கூட்டிட்டு வந்துட்டேன்” அவன் குறும்புடன் கண்சிமிட்டு காரை நோக்கி நடந்தான்.
இருவரும் காரை நெருங்கிட அவளின் எதிரே நின்றவனைப் பார்த்து கதிர் கேள்வியாக புருவம் உயர்த்தும்போது அவனின் கன்னத்தில் கைவிரல் தடத்தைப் பார்த்தும் புரிந்து கொண்டான். சிறிதுநேரத்திற்கு முன்னர் அவள் அடித்தது இவனைத்தான் என்று!
கதிர் மற்றும் அர்ஜூன் இருவரும் காரை நெருங்க, “இனியா என்னை புரிஞ்சிக்கோ. அவரிடம் நான் விளையாட்டுக்கு அப்படி சொல்லல. நிஜமாவே நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னோட கடைசி வரை இருக்கணும்னு மனசு நினைக்குது” என்று அவளின் கையைப்பிடித்து கெஞ்சினான்.
அங்கே நடந்த அனைத்தையும் கண்ணால் பார்த்த அர்ஜூனின் உள்ளம் துடிக்க நண்பனை திரும்பிப் பார்த்தான். அவனோ கற்சிலைபோல நின்றிருக்க அவனின் விழிகள் ஜீவனை தொலைத்திருந்தது. அர்ஜூன் இனியாவை நெருங்கிட அவனின் கரம்பிடித்து தடுத்தான்.
“டேய் அவளுக்காக எல்லாம் பண்றவன் நீ” என்றான் கோபத்துடன்.
“அதுக்காக அவள் என்னை காதலிக்கணும் என்று நினைப்பது சுயநலம்” என்றான் தெளிவான குரலில்.
“அதுக்காக அப்படியே விட சொல்றீயா?” என்றான் எரிச்சலோடு.
“அவளோட வாழ்க்கை அவளோட முடிவு. இதில் தலையிட நம்ம யாருக்குமே உரிமை இல்ல. அதை மனசில் வெச்சு பேசு” நண்பனை கண்டிப்புடன் பார்த்துவிட்டு இனியாவை நோக்கிச் சென்றான்.
அப்போது அவர்களின் அருகே வந்த கதிர், “மேம் கொஞ்சம் வழிவிடுங்க” என்று கரகரப்புடன் தன்னை சமன்செய்தபடி கூறினான். ஸ்ரீதர் தன்னுடைய வாக்குவாதத்தை மறந்து நிமிர்ந்து கதிரின் முகத்தைப் பார்க்க அவனின் குரலை இனம்கண்ட மறுநொடி விக்கித்து பயத்துடன் திரும்பினாள் இனியா.
“கதிர்மாமா” அவள் பெயரை சொன்னதும் கதிரை அடையாளம் கண்டுகொண்ட ஸ்ரீதரின் உதடுகள் ஏளனமாக வளைய திகைப்புடன் மூவரையும் பார்த்தான் அர்ஜூன்.அவன் திடீரென்று வருவான் என்று ஸ்ரீதர் நினைக்கவில்லை.
சிலநொடியில் கருத்துவிட்ட அவனின் முகம் மீண்டும் இயல்புக்கு திரும்பிட, “ஹாய் நான் இனியா லவர்” தன்னை அறிமுகம் படுத்திகொள்ளும் எண்ணத்துடன் அவனை நோக்கி கை நீட்டினான்.
“நான் கதிரோவியன். இனியாவின் மாமா பையன்” என்று அறிமுகபடுத்திகொண்டு இனியாவை விலக்கிவிட்டு அவன் காரில் ஏறியமர அர்ஜூன் டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.
இனியா இன்னும் திகைப்புடன் நிற்பதை கண்டு, “ஸ்ரீதர் இனியாவிற்கு எங்களோட வர விருப்பம் இல்ல போல. நீங்க அவளை வீடு வரைக்கும் கொண்டுவந்து விட முடியுமா” என்று கேட்ட நண்பனை அர்ஜூன் கொலைவெறியுடன் பார்த்தான்.
அவனின் பேச்சில் தன்னிலை உணர்ந்து கோபத்துடன் நிமிர்ந்த இனியா, “மாமா என்னை என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. ஊர்க்கு வந்த இடத்தில் மானத்தை வாங்க வேண்டான்னு பார்க்கிறேன். இல்ல இங்கே நடப்பதே வேற” என்று அவனை விரல்நீட்டி எச்சரித்தாள்.
அதற்கெல்லாம் அசராமல், “நீங்க இருவரும் காதலர்கள்தானே. அப்போ நான் சொல்வது சரியாகத்தானே சொன்னேன். இவ எதுக்கு என்னிடம் சண்டைக்கு வரா” என்று அர்ஜூனிடம் அவன் புரியாமல் கேட்க அவனோ வேறு பக்கம் முகத்தை திருப்பினான்.
அவனுக்கு கதிரின் மீது அவ்வளவு கோபம் இருக்க அங்கே நிலவிய இறுக்கத்தை தளர்த்துவிட நோக்கத்துடன் இனியாவின் கரம்பிடித்த ஸ்ரீதர், “என்மேல் இவ்வளவு நம்பிக்கை வெச்சி இருக்கீங்க. நானே அவளை கூட்டிட்டு வரேன்” என்றான் புன்னகையுடன்.
அவனின் பார்வையில் இனியாவை வென்றுவிட்ட களிப்பு. அவனின் உதட்டில் புன்னகை அரும்பிட இனியாவிற்கு பிபி எகிறியது. கதிரின் பார்வை சிலநொடி இருவரின் கரங்களின் மீது படித்தது.
ஆனால் தலையைக் குலுக்கி நிமிர்ந்த கதிர், “நம்பிக்கை யாரின் மீது வெச்சிருக்கிறேன் என்று சிலருக்கு சொல்லாமல் புரியும்” என்றான் தெளிவான குரலில் இனியாவை பார்த்தபடி.
அடுத்த நிமிடமே அவனின் கைகளை உதறிவிட்டு, “நீ உன்னோட காதலை சொல்லிட்ட நான் வேண்டான்னு சொல்லிட்டேன். இதுக்கு மேல உனக்கும் எனக்கும் இடையே எந்தவொரு தொடர்பும் இல்ல. சோ என்னை தொடர்ந்து வர வேலை வெச்சுக்காத அது உனக்கு நல்லது இல்ல” என்றாள் மிரட்டலாக.
கதிர் பொறுமையுடன் காரில் அமர்ந்திருக்க, “அப்படிதான் உன்னை பின்தொர்ந்து வருவேன், நீ எனக்கு மட்டும் தான்” என்றான் அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தபடி.
அவளோ அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு காரில் ஏற அவன் நகர்ந்து அமர அர்ஜூன் காரை எடுத்தான். மூவருக்கும் இருக்கும் மனநிலை சரியில்லை என்ற ஒரே காரணத்தை மையமாக வைத்து அவன் பாடலை ஒலிக்கவிட அது மற்ற இருவரின் மனதையும் படம்பிடித்து காட்டியது.
“உயிர் கொண்ட ரோஜாவே உயிர் வாங்கும் ரோஜாவே
கிள்ளிபோகவே வந்தேன் பக்கம் வந்த ரோஜாபூ
பக்தன் என்று சொல்லியதால் பூஜை அறையிலே வைத்தேன்
அன்று காதலனா இன்று காவலனா
விதி சொன்ன கதை இதுதானா நெஞ்சமே?” என்ற வரிகள் அவனின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்க வெளியே முகத்தை திருப்பிக் கொண்டான்.
“துரத்தில் இருக்கையில் அண்மையில் இருந்தாய் கரை மேல் அலையாக..” என்ற வரிகள் அவளின் மனதை என்னவோ செய்ய அவனின் கரத்தைப் பிடித்து அழுத்தம் கொடுத்து கெஞ்சுவது போல பார்த்தாள். அவளின் கரங்களை இமைக்காமல் பார்த்தவனின் முகம் பாரங்கல் போல இறுகி இருந்தது.
“கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது உள்ளத்தில் நிலநடுக்கம்” என்றவன் சொல்லவேண்டிய விஷயத்தை பாடல் எதிரொலிக்க சட்டென்று கைகளை விலக்கிக்கொண்டு நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள்.
“ஒரு சொர்க்கத்துக்குள் சிறு நரகமடி என் முகமேதான் முகமூடி பாரடி” என்றது பாடலின் வரிகள். அவனின் காதலை முகத்திரை போட்டு தனக்குள் புதைத்தான்.
அவளுக்கு மனம் நிலையில்லாமல் தவிக்க, ‘நான் வேண்டும் என்றே பேசல மாமா. என்னை புரிஞ்சிக்கோ நான் தெரியாமல் வாய்விட்டுவிட்டேன்’ என்று அவளின் உள்ளம் ஊமையாக கதறியது.
கதிர் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் அவனின் மௌனம் அவளிடம் ஆயிரம் கதை சொல்ல அவனிடம் தன்னை எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் தவித்தவளின் விழிகளில் கண்ணீர் ததும்பியது.
“கண்களில் இருந்து உறக்கத்தை முறித்து இரவில் எரித்துவிட்டேன்.
நெஞ்சத்தில் இருந்து காதலை உரித்து பாதியில் நிறுத்திவிட்டேன்
ஒரு சில சமயம் உயிர் விட நினைத்தேன் உனக்கே உயிர் சுமந்தேன்
அடி சிநேகிதியே உன் காதலியே என் நெஞ்சோடு என் காதல் வேகட்டும்” என்ற வரிகளை கேட்க அவள் கதிரின் மார்பில் புகுந்து அழுதாள். அவன் அவளை அரவணைக்கவில்லை. அவனின் கரங்கள் மரம்போல கிடந்தது உணர்வுகளை தொலைத்து கற்சிலைபோல அமர்ந்தவனிடம், “மாமா நான் பேசியது தப்புதான் ஐ அம் சாரி” என்றாள்.
தன்னுடைய குரலை சரி செய்துகொண்டு, “அவனோட விருப்பத்தை அவன் சொல்லிட்டான். நீ உன்னோட முடிவை சொல்லிட்ட இதில் நான் யாரு இடையில் நீ என்ன நினைக்கிறீயோ அதை மட்டும் செய்”
“நாடு விட்டு நாடு வந்தால் சில பிரச்சனை வரும். அதில் நீ எப்படி மீண்டு வருகிறாய் என்பதே உன்னோட மனோபலம். மற்றபடி எங்களைப்பற்றி நீ யோசிக்காத உன்னோட படிப்பை மட்டும் பாரு” என்றவன் கார் நின்றதும் பட்டென்று கதவைத் திறந்து இறங்கிவிட்டான்.
அவளின் பிறந்தநாளுக்கு செழியன் – சுப்பு, தென்றல் கொடுத்த பரிசுகளை அவளிடம் கொடுத்துவிட்டு அன்று மட்டும் அவளோடு இருந்துவிட்டு மறுநாளே எல்லோரிடமும் விடைபெற்று இந்தியா கிளம்பிவிட்டான்.
அவன் ஏர்போர்ட் சென்றடைய அவனின் செல்போன் சிணுங்கியது..
“நீ கைதொடும் தூரத்தில்
நான் இருக்க கலக்கம்
தான் ஏனோ கண்ணா?
பிரிவு நிலையானது அல்ல
அதுக்கு நம்மை பிரிக்கும்
சக்தியும் இல்ல..
இது ஒரு புதிய திருப்பம்
உன் மனதை எனக்கு
உணர்த்திய காதல் தருணம்
மறவேன் கண்ணா..” என்று கவிதை வரிகள் அவளின் உள்ளத்தை பிரதிபலித்தது.