செங்கதிரோன் தன் கதிர்களை உலகெங்கும் பரப்பி இவ்வுலகிற்கு விடியலை உணர்த்த தன் மேல் பட்ட ஒளிவீச்சில் சித்தார்த் துயில் கலைந்து எழுந்தமர்ந்தான்.
சிறு வயதில் இருந்தே தான் கண்ட கனவு நடந்துவிட்டு திருப்தி ஒருபுறம், முதன்முதல் மனதிற்குள் அரும்பிய காதலின் சந்தோஷ ஊற்று மறுபுறம் என்று ஒரு ஆனந்த வலயத்திற்குள் உள் நுழைந்தது போல மனம் நிறைந்த சந்தோஷத்துடன் தன் கடமைகளை எல்லாம் செய்து முடித்தவன் அதே மன நிலையுடன் தன் வேலைக்குச் செல்வதற்காக தயாராகி வந்தான்.
நேற்றிரவு நடந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து யசோதா முற்றாக வெளிவந்து இருக்காவிட்டாலும் ஓரளவிற்கு தன்னைத் தேற்றிக் கொண்டு வழமை போன்று தன் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
காலை உணவை முடித்து விட்டு தாமோதரன், கார்த்திக் மற்றும் கண்ணன் தங்கள் வேலைகளை கவனிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறி இருக்க சித்தார்த்தும் தன் அன்னையிடம் கூறிவிட்டு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் வண்டியை நோக்கி நடந்து சென்றான்.
காலையில் எழுந்தது முதலே மேக்னாவின் ஞாபகங்கள் மனதிற்குள் இனிய சங்கீதமாக ஆர்ப்பரிக்க ஒரு முறை அவளைப் பார்த்து விசாரித்து விட்டு செல்லலாம் என்று எண்ணிக் கொண்டே அவள் தங்கியிருக்கும் வீட்டின் முன் தன் வண்டியை நிறுத்தியவன் அவள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டு அவளது வருகைக்காக காத்து நின்றான்.
சித்தார்த்தை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் ஒரு சில நிமிடங்களில் கதவு திறக்கப்பட
“குட்மார்னிங் மேக்னா!” புன்னகையோடு கூறியவன் அவளது முகத்தை பார்த்து அதிர்ச்சியாகி நின்றான்.
இரவு முழுவதும் அழுதது போல அவள் கண்கள் இரண்டும் சிவந்து, வீங்கி முகமெல்லாம் கண்ணீரின் தடங்கள் பதிந்து போயிருந்தது.
“என்னாச்சு மேக்னா? ஏதாவது பிரச்சினையா? யாரும் ஏதாவது சொன்னாங்களா?” சித்தார்த் படபடப்புடன் அவளைப் பார்த்து வினவவும்
அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்
“அதெல்லாம் எதுவுமில்லை இன்ஸ்பெக்டர் சார்!” முயன்று வரவழைத்து கொண்ட புன்னகையுடன் கூறினாள்.
“நிஜமாகவே எதுவும் இல்லையா மேக்னா?”
“அது எல்லாம் எதுவும் இல்லை இன்ஸ்பெக்டர் சார்! அது போகட்டும் என்ன நீங்க காலையிலே இந்த பக்கம்?” தற்காலிகமாக அவள் பேச்சை திசை திருப்ப
ஒரு வேளை இரவு நடந்த சம்பவத்தை எண்ணி அழுதிருப்பாளோ அதை தான்
தன்னிடம் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லையோ என்பதை நினைத்து சிறிது மனம் வருந்தியவன் உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு
“உங்களுக்கு இந்த ஏரியா புதிது இல்லையா? அது தான் ஏதாவது உதவி வேணுமானானு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன் எல்லாம் ஓகே தானே?” என்று கேட்கவும் அவனைப் பார்த்து
புன்னகையுடன் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
“அப்போ நான் கிளம்புறேன் மேக்னா ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்க” அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு திரும்பி செல்ல போனவன்
“இன்ஸ்பெக்டர் சார் ஒரு நிமிஷம்!” என்ற மேக்னாவின் குரலில் ஆர்வமாக அவனை திரும்பி பார்த்தான்.
“என்ன மேக்னா சொல்லுங்க?”
“இங்க பக்கத்தில் எங்கே கடை இருக்கன்னு சொல்லமுடியுமா இன்ஸ்பெக்டர் சார்? இந்த இடம் எனக்கு கொஞ்சம் பழக்கம் இல்லை இல்லையா அதனால் தான் கேட்கிறேன்”
“என்ன வேணும்னு சொல்லுங்க மேக்னா அப்பா கிட்ட சொல்லி நான் ஏற்பாடு பண்ணுறேன்”
“அய்யய்யோ! அதெல்லாம் வேண்டாம் இன்ஸ்பெக்டர் சார் நானும் எல்லாம் பழகத்தானே வேணும் எப்போதும் உங்க உதவியையே எதிர்பார்த்து இருக்க முடியாது இல்லையா?”
“ஏன் முடியாது? காலம் பூராவும் உனக்கு உதவி செய்ய நான் தயாராக தான் இருக்கிறேன் மேக்னா”
“என்ன?” மேக்னா அதிர்ச்சியாக சித்தார்த்தை நிமிர்ந்து பார்க்க
‘ஐயோ! ஒரு ஆர்வத்தில் அவசரப்பட்டு உளறிட்டோமோ?’ மனதிற்குள் தன்னைத்தானே கடிந்து கொண்டவன்
அவளைப்பார்த்து சமாளிப்பாக புன்னகைத்து கொண்டே
“அது வந்து மேக்னா நான் என்ன சொல்ல வந்தேன்னா சொந்தக்காரங்க ஒருத்தருக்கு ஒருத்தர் காலம் பூராவும் உதவி செய்தாலும் ஒன்னும் தப்பில்லையே அதைத்தான் சொல்ல வந்தேன்” என்று கூற
அவளும்
“ஓஹ்! அப்படியா?” என்று கேட்டு விட்டு
“இப்போ நானும் வரலாமா இன்ஸ்பெக்டர் சார்?” அவனை கேள்வியாக நோக்கினாள்.
“ஓஹ்! தாரளமாக வரலாம்”
“ஒரு ஐந்து நிமிஷம் சார்” அவசரமாக வீட்டிற்குள் திரும்பி சென்றவள் சிறிது நேரத்தில் தனது பணப்பையுடன் வெளியேறி வந்தாள்.
சித்தார்த் தன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு அவளை பார்க்க அவளோ தயக்கத்துடன் கையை பிசைந்து கொண்டு நின்றாள்.
அவளது மனநிலையை புரிந்து கொண்டது போல புன்னகையுடன் தன் வண்டியில் இருந்து இறங்கி நின்றவன்
“வாங்க மேக்னா போகலாம்” என்றவாறே தன் வண்டியைத் தள்ளிக் கொண்டு நடக்க தான் எதுவும் கூறாமலேயே தன் மனநிலையை புரிந்து கொண்ட அவனை வியப்பாகப் பார்த்துக்கொண்டே அவளும் அவனைப் பின் தொடர்ந்து நடந்து சென்றாள்.
‘யார் இவன்? எனக்காக ஒவ்வொரு விடயமும் பார்த்து பார்த்து செய்யும் இவன் யார்? நான் ஒரு விடயத்தை வாய்திறந்து சொல்வதற்கு முதலே அதைப் புரிந்து கொள்கின்றானே! நானாக உதவி என்று கேட்க முதலே எனக்கு உதவி செய்ய வந்து நின்றான் ஒவ்வொரு விடயத்திலும் எனக்காக யோசித்து யோசித்து செயல்படுவதால் இவனுக்கு என்ன இலாபம்? ஒருவேளை இவன் மனதிற்குள் என் மீது!’ தன் மன எண்ணத்தை எண்ணி அதிர்ச்சியாக சித்தார்த்தை பார்த்துக்கொண்டே யோசனையுடன் மேக்னா நடந்து வந்துக் கொண்டிருக்க
“என்ன மேக்னா ரொம்ப அமைதியாக வர்றீங்க? அப்படி என்ன பலத்த யோசனை?” அவனது கேள்வியில் தனது சிந்தனை கலைந்தவள்
“உங்களைப் பத்திதான் இன்ஸ்பெக்டர் சார்! எதை நினைத்து எனக்காக நீங்க இவ்வளவு பண்ணுறீங்கன்னு யோசித்தேன் சொல்லுங்க சார் என்ன காரணம்?” கேள்வியாக அவனை நோக்கினாள்.
அவளது அந்த திடீர் கேள்வியில் தன் நடையை சட்டென்று நிறுத்தியவன் “நீ…நீங்க கேட்க வர்றது எனக்கு புரியலையே மேக்னா!” தயக்கமாக அவளைப் பார்த்து கூற
புன்னகையுடன் அவன் முன்னால் வந்து நின்றவள்
“எல்லா உதவிக்கும் பின்னாடி ஒரு காரணம் இருக்கும் இன்ஸ்பெக்டர் சார்! நீங்க பண்ணுற இந்த உதவிக்கும் பின்னாடி உங்க அம்மா கொடுத்த வாக்கு மட்டும் காரணம் இல்லை வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கு அது எனக்கு தெரியும் ஆனா அது என்ன காரணம்னு தான் எனக்கு இன்னும் சரியா தெரியல கூடிய சீக்கிரம் அதை கண்டுபிடித்து விடுவேன் இன்ஸ்பெக்டர் சார்” என்று கூறவும்
“பரவாயில்லையே! குட் ஜாப் மேக்னா! பார்க்கலாம் உங்கள் திறமையை! இதோ இருக்கு அப்பாவோட கடை என்ன வேணுமோ வாங்கிக்கோங்க நான் ஈவ்னிங் வந்து உங்களைப் பார்க்கிறேன் நான் வர்றேன்” சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்து தலையசைத்து விட்டு தன் வண்டியில் ஏறி புறப்பட்டுச் சென்றான்.
‘மேக்னா நீ இவ்வளவு ஷார்ப்பா இருப்பேன்னு நான் நினைத்துக் கூடப் பார்க்கல பரவாயில்லை இதுவும் நல்லதுக்கு தான்! கூடிய சீக்கிரம் என் மனதில் உள்ளதையும் நீ புரிந்து கொள்ள முடியும்’ புன்னகையுடன் தன் மனதுக்குப் பிடித்த பாடல் ஒன்றை ஹம் செய்தபடியே தன் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தான்.
மறுபுறம் மேக்னா கடைக்குச் சென்று தாமோதரனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தனக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு தன் வீட்டை நோக்கி திரும்பி வருகையில் அந்த தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள் எல்லோருமே அவளை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு நின்றனர்.
அதை எதையும் கண்டும் காணாதது போல கடந்து வேகமாக தன் வீட்டை வந்து சேர்ந்தவள் கண்களை இறுக மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
அந்த நபர்களது பார்க்கான காரணம் தெரிந்திருந்தாலும் அதை கடந்து செல்வது என்னவோ அவளுக்கு அத்தனை சுலபமாக இருக்கவில்லை.
“அந்த ஜெயிலுக்குப் போயிட்டு வந்த பொண்ணு தானே இது?!”
“அந்த இரட்டை கொலை செய்த பொண்ணா இவ?”
“இவளை எப்படி ரிலீஸ் பண்ணாங்க?” அவள் காதுபடவே பலபேர் பலவிதமாகச் அவளைப் பற்றி விதவிதமான வார்த்தைகளில் பேச அதைக் கேட்கும் போதெல்லாம் அவள் மனதிற்குள் இருந்த தனபால் மீதான பழிவாங்கும் உணர்வு எல்லை மீறி உச்சம் தொட ஆரம்பித்தது.
இருந்தாலும் சிரமப்பட்டு தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவள் வீட்டில் இருந்த வேலைகளை எல்லாம் செய்து தன் கவனத்தைத் திசை திருப்ப முயன்றாள்.
ஆனால் அவள் எவ்வளவோ முயன்றும் அவள் மனதை திசை மாற்ற முடியவில்லை.
தனபாலன் மற்றும் சுதர்சனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் இருவரும் எப்படியாவது அந்த தண்டனையிலிருந்து வெளிவந்து விடுவார்கள் என்பது அவள் மனதிற்கு மிக நன்றாகவே புரிந்தது.
அவர்கள் வெளியே வந்து தன்னையும், நர்மதாவையும் ஏதாவது செய்து விடுவதற்குள் அவர்கள் இருவருக்கும் ஒரு முடிவை உருவாக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் அதற்காக வெகு சீக்கிரமாக ஒரு திட்டம் தீட்ட வேண்டும் என்று தன் மனதை தயார் படுத்த தொடங்கினாள்.
இங்கு மேக்னா மனம் முழுவதும் பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்க மறுபுறம் சித்தார்த் அது எதைப் பற்றியும் அறியாமல் காதல் என்ற மாயைக்குள் தன்னையும் அறியாமல் இழந்து மேக்னாவை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டே இருந்தான்.
*********************************************
நாட்கள் அதன் பாட்டுக்கு மெல்ல மெல்ல நகர்ந்து செல்ல சித்தார்த் தன் காதலை மேக்னாவிடம் சொல்வதற்காக தகுந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கினான்.
ஆனால் அவளோ தன் மனதிற்குள் வேறு பல திட்டங்களுடன் வெளியே வெகு இயல்பாக இருப்பது போல அனைவருக்கும் தன்னை காண்பித்து கொண்டு இருந்தாள்.
அன்று வழக்கம்போல சித்தார்த் தன் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் அந்த வழியில் இருந்த ஒரு பேருந்து நிறுத்தத்தில் மேக்னா தனியாக நின்று கொண்டிருந்தான்.
அவளை அங்கு எதிர்பாராத சித்தார்த் அவளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே அவள் முன்னால் சென்று நின்று
“என்ன மேக்னா இந்த நேரத்தில் இங்க நிற்குறீங்க?” என்று கேட்கவும்
திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு போய் திரும்பிப் பார்த்தவள் தன் முன்னால் நின்றவனைப் பார்த்து
“இன்ஸ்பெக்டர் சார் நீங்களா!” சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“கூல் மேக்னா! என்ன இன்னும் வீட்டுக்கு போகாமல் இங்கே நிற்குறீங்க?”
“வேலை விஷயமாக ஒருத்தரை பார்க்க வந்தேன் வந்த இடத்தில் கொஞ்சம் லேட்டாயிடுச்சு வீட்டுக்கு போகலாம்னு தான் இங்க வந்தேன் வந்து ஒரு மணித்தியாலத்திற்கு மேலாகிடுச்சு பஸ் எதையுமே காணல! வீட்டில் நர்மதா வேற தனியா இருப்பா என்ன பண்ணுறதுன்னே புரியல இன்ஸ்பெக்டர் சார்” தடுமாற்றமும், பதட்டமும் ஒன்று சேர மேக்னா கூறவும்
“பதப்படாதீங்க மேக்னா! நான் வீட்டுக்கு தான் போறேன் வாங்க நான் டிராப் பண்றேன் ரொம்ப நேரம் நீங்க தனியா இங்கே நிற்க வேண்டாம்” சித்தார்த் எந்த தயக்கமும் இன்றி அழைக்க சிறிது நேரம் யோசித்துப் பார்த்தவள் நர்மதாவை எண்ணிப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அவன் பின்னால் சென்று அமர்ந்து கொண்டாள்.
வீட்டிற்கு செல்லும் வழி முழுவதும் சித்தார்த் எதையோ சாதித்து விட்ட வெற்றிக் களிப்போடு சென்று கொண்டிருக்க மேக்னாவோ ஒரு இனம்புரியாத தவிப்போடு அமர்ந்திருந்தாள்.
என்னதான் பல பேரை எதிர்த்து நிற்கும் தைரியமான பெண்ணாக இருந்தாலும் காதல் என்ற ஒரு உணர்வு வந்து விட்டால் எந்த பெண்ணின் மனதும் மென்மையாய் மாறி விடுவதே இயற்கையின் நியதி.
தன் மனதிற்குள் சித்தார்த் மீது இருப்பது காதலா? இல்லை மரியாதையா? அவளால் சரியாக அந்த உணர்வை வேறு பிரித்தறிய முடியவில்லை.
தனக்கென்று ஒரு சொந்தம் சிறு வயதில் இருந்தே தனக்கு இதைப் பற்றி எல்லாம் சொல்லி தந்து இருந்தால் இன்று தான் தேவை இல்லாமல் இந்த தவிப்புக்கு ஆளாக வேண்டி இருக்காதே என்று எண்ணிப் பார்த்தவள் அந்த வண்டியின் பக்க கண்ணாடி வழியாக தெரிந்த சித்தார்த்தின் உருவத்தை ஆழ்ந்து நோக்கினாள்.
ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம் என்று எதுவும் இல்லை.
காவல் துறை அதிகாரிகளுக்கு என்று இருக்கும் கட்டுக் கோப்பான உடல், வெகு இயல்பான தோற்றம், சாயலில் சற்று யசோதாவை ஒத்திருப்பது போன்று அவளுக்கு தோன்றியது.
சித்தார்த் தன் காதலை வெளிப்படையாக தெரிவித்து இருக்காவிட்டாலும் அவனது செய்கைகள் எல்லாமே தன் மீது காதல் இருப்பதை உணர்த்துவது போலவே அவளுக்கு தோன்றியது.
வீட்டிற்கு வந்து சேர்ந்ததைக் கூட உணராமல் மேக்னா தன் சிந்தனைகளோடு லயித்து இருக்க வண்டி நின்ற பின்பும் இன்னும் மேக்னா வண்டியில் இருந்து இறங்காததைப் பார்த்து சித்தார்த் குழப்பமாக அவளை திரும்பி பார்த்தான்.
“மேக்னா! மேக்னா!”
“ஆஹ்! என்ன? என்னாச்சு இன்ஸ்பெக்டர் சார்?” கனவிலிருந்து விழிப்பதை போல அவனைப் பார்த்து கேட்க
அவளை விசித்திரமாக பார்த்தவன் “என்னாச்சு மேக்னா உங்களுக்கு? நான் வீட்டுக்கு வந்தாச்சுன்னு இவ்வளவு நேரமா சொல்லியும் நீங்க ஏதோ யோசனையில் இருக்கீங்க? ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்கவும்
அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்
“சேச்சே! பிரச்சினை எல்லாம் எதுவும் இல்லை இன்ஸ்பெக்டர் சார் வேலையை பற்றி யோசித்து பார்த்துக் கொண்டு இருந்தேன் அது தான் நீங்க சொன்னதை கவனிக்கல ஐ யம் ஸாரி இன்ஸ்பெக்டர் சார்!” தடுமாற்றத்துடனும், படபடப்புடனும் கூறிவிட்டு விரைவாக தன் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
அவளது இந்த தடுமாற்றத்தையும், விசித்திரமான நடவடிக்கைகளையும் பார்த்து குழம்பிப்போன சித்தார்த்
“என்ன ஆச்சு மேக்னாவிற்கு? இவ இதற்கு முதல் ஒரு நாளும் இப்படி தடுமாறி பேசியதே இல்லையே! அவ பேச்சைக் கேட்டு நாமதானே எப்பவும் தடுமாறுவோம்? இன்னிக்கு என்ன இது புதுசா இருக்கு? ஏதாவது ஒரு பிரச்சினையாக இருக்குமோ?” பலத்த சிந்தனைக்கு வயப்பட்டவனாக தன் வண்டியை தள்ளிக் கொண்டு சென்று தங்கள் வீட்டிற்கு முன்னால் நிறுத்தியன்
வீட்டிற்குள் செல்வதற்காக காலடி எடுத்து வைக்க
“அங்கேயே நில்லு சித்தார்த்!” யசோதாவின் அதட்டலான குரலில் திடுக்கிட்டு போய் நிமிர்ந்து பார்த்தான்…….