முதல் பயணம்
தன் கல்லூரி இறுதிநாள் முடிந்து தோழிகளோடு பொழுதை போக்கிவிட்டு மாலை மயங்கும் நேரத்தில் வீட்டை நோக்கி பயணித்தாள் இனியா. அவள் வீட்டின் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க, “அப்பா இனியா வந்துட்டா” என்று கூறியபடி வீட்டிற்குள் வேகமாக ஓடினாள் தென்றல்.
“நான் வீட்டிற்கு வந்த விஷயத்தை ஊருக்கே சொல்ற மாதிரி கத்திட்டு போறா பாரு” என்று தனக்குள் பேசியபடி அவள் வீட்டிற்கு செல்ல நினைக்க, “ஏய் இனியா அங்கேயே நில்லு” என்று சுப்புவின் மிரட்டலில் திடுக்கிட்டு போனாள் இனியா.
சற்றுநேரத்தில் வெளியே வந்த சுப்புலட்சுமியின் கையில் பூசணிக்காயை வருவதைப் பார்த்து வியப்புடன் விழி விரிந்தது.
“சுப்பும்மா என்ன இது?” அவள் சிரித்தபடி கேட்க அவளின் தலையைப் பாசத்துடன் வருடிய செழியன், “நான்தான் குட்டிம்மா ஏற்பாடு செய்தேன், ஒரு டீக்கடை மாஸ்டரின் மருமகள் பட்டபடிப்பை முடித்துவிட்டால் என்று நினைக்கவே பெருமையாக இருக்கும்மா” என்றவரின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.
அவர் பெற்ற பிள்ளைகள் டிகிரி முடித்திருந்தால் கூட இப்படி சந்தோஷப்படுவாரா என்று தெரியவில்லை. அவரின் பாசத்திற்கு சற்றும் குறையாத பாசத்துடன் அவரின் அருகே நின்றிருந்த சுப்புலட்சுமி, “பாப்பா நேராக நில்லு” என்று அவருக்கு ஆரத்தி எடுத்தார்.
அவர் ஆரத்தி எடுக்கும்போது அமைதியாக நின்றவளின் கண்கள் அவளையும் மீறி கலங்கிட, “ஹே இனியா எதுக்கு இப்போ கலங்கற” அவளை அதட்டினாள் தென்றல்.
சுப்பும்மா பூசணிக்காய் உடைக்க செல்ல மற்ற மூவரும் வீட்டிற்குள் நுழைய, “அடுத்து என்னம்மா படிக்க போற?” என்ற கேள்வியுடன் அங்கிருந்த சேரில் அமர்ந்தார் செழியன்.
“அப்பா அவளுக்கு எம்.பி.ஏ படிக்க ஆசை. மேடம் பெரிய கம்பெனியை நிர்வாகம் பண்ணனும்னு நினைக்கிறாங்க” என்று அவளை வம்பிற்கு இழுத்தபடி தந்தையின் அருகே அமர்ந்தாள்.
அவர் கேள்வியாக இனியாவின் முகம் பார்க்க, “எம்.பி.ஏ. தான் அப்பா படிக்கலாம்னு இருக்கேன்” என்றவள் நின்றுகொண்ட இருக்க அவளை இழுத்து தன்னருகே அமர வைத்த செழியன், “கதிரு உன்கிட்ட பேசணும்னு சொல்லிட்டு இருந்தான்” என்றார்.
அதற்குள் வீட்டிற்குள் வந்த சுப்புலட்சுமி, “என்னங்க கடைக்கு போகணும்னு சொன்னீங்க வாங்க வந்து சாப்பிட்டு கிளம்புங்க” என்றதும் இனியாவிடம் தன் போனை கொடுத்து, “கதிருக்கு போன் பண்ணுடா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் கையில் கொடுத்து சென்ற பட்டன் செல்லையும், தன் கையிலிருந்த மாடன் ஐபோனையும் பார்த்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தவளின் அருகே வந்த தென்றல், “அண்ணா உங்கூட பேசணும்னு சொல்லி த்ரீ டைம்ஸ் கால்பண்ணான் இனியா, நீ அவனுக்கு போன் பண்ணிரு” என்றவள் அவளின் அறையை நோக்கி சென்றாள்.
மொத்தம் நான்கு அறைகள் மட்டுமே இருக்கும் ஓட்டு வீடுதான் என்ற போதும் அதிலிருக்கும் சந்தோசம் லட்சம் லட்சமாக போட்டு காட்டிய டார்ச் கட்டிடத்தில் இருப்பதில்லை.
இனியாவின் பூர்வீகம் சேலம் ஆத்தூர். அவளின் சுந்தரம் அப்பாவும், செழியனின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அவள் பிறக்கும் போதே தாயை இழந்துவிட்டதால் சுந்தரம் தனி ஆளாக மகளை வளர்த்தார். அவர் ஒரு கார் விபத்தில் எதிர்பாராத விதமாக இறந்துவிட அவரின் இறப்பிற்கு வந்தவர்கள் காரியத்தை மட்டும் முடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
ஆனால் செழியனால் அப்படியே விட்டுவிட்டு வர முடியவில்லை. ஏழு வயதில் இனியாவைப் பார்த்தவரின் கண்முன்னே அவரின் மகள் தென்றல்தான் தனித்து நிற்பதுபோல தோன்றியது. அதனால் இனியாவை தன்னுடன் அழைத்து வந்துவிட்டார்.
இவர் சங்ககிரியில் பஸ்ஸ்டாண்டின் பக்கத்தில் தென்றல் டீ & காபி ஸ்டாலின் ஓனர். கதிரோவியன், கலைதென்றல் இருவரும் அவரின் மகனும் மகளும்! சுப்புலட்சுமி கணவனின் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே செயல்படுத்தும் நடத்தர குடும்பத்தின் தலைவி.
இந்த வீடு அவரின் சம்பத்தியத்தில் கட்டப்பட்ட வீடு. தனக்கு இனி இரண்டு மகள்கள் என்று அவர் முடிவெடுக்க சுப்புலட்சுமியும் கணவனின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லவில்லை.
அன்றிலிருந்து இன்றுவரை மகள்களின் விருப்பத்திற்கு மட்டுமே செவிசாய்க்கும் செழியன் ஒரு முறைகூட கதிரின் விருப்பத்தை கேட்டதில்லை.
இதோ இன்று அவள் எம்.பி.ஏ. படிக்கிறேன் என்றதும் சரியென்று சொல்லிவிட்டு செல்லும் இதே செழியன் அன்று தன் மகனுக்கு கூட இந்த பதிலை சொல்லவில்லை என்ற வருத்தத்துடன் மெளனமாக அமர்ந்திருந்தாள்.
“இனியா, தென்றல் இருவரும் வந்து சாப்பிடுங்க” என்ற சுப்புலட்சுமி கணவனோடு சேர்ந்து கடைக்கு கிளம்பிவிட்டார். தன் சிந்தனையிலிருந்து விடுபட்ட இனியா எழுந்து சென்று கைகால்கள் கழுவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தாள்.
“அண்ணா உனக்கு ஃபாரினில் படிக்க ஏற்பாடு செய்திருக்கான் போல. அப்பாகிட்ட அவன் போனில் பேசும்போது கேட்டேன்” என்று தென்றல் தனக்கு தெரிந்த உண்மையை போட்டு உடைக்க அதுவரை அமைதியாக இருந்த இனியா,
“ஏன் சாருக்கு நான் இங்கிருப்பது பிடிக்கலயோ? நாடுவிட்டு நாடு கடத்திட்ட நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்காரோ” என்றவள் எரிச்சலோடு சாப்பிடாமல் எழுந்து சென்றாள்.
“மாமா உங்க மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க” என்று போனை எடுத்தும் எரிந்து விழுக தென்றல் சாப்பாடு எடுத்துகொண்டு இனியாவின் அறைக்கு நுழைந்தாள்.
“……………….” மறுப்பக்கம் என்ன பதில் வந்ததோ, “என்னால் போக முடியாது, நான் இங்கேதான் எம்.பி.ஏ. பண்ண போறேன்” என்றாள்.
அதன்பிறகு அவன் என்ன பேசினானோ இனியாவின் முகம் கடுகடுவென்று ஆகிவிட, “என்னை அனுப்ப முடிவு பண்ணிட்ட இல்ல, உன் விருப்பம் போல பண்ணு நானும் போய் தொலைகிறேன்” அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் போனை வைத்துவிட்டாள்
“இனியா அண்ணா என்ன சொன்னான்?” என்றாள் தென்றல் மெல்லிய குரலில்.
“அடுத்த மாசம் அமெரிக்கா பிளைட். நான் அங்கிருக்கும் யுனிவர்சிட்டியில் படிக்க ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டாராம். நீ கிளம்புற வழியை மட்டும் பாருன்னு துரை போனில் ஆர்டர் போடுறாரு” என்றாள் அவள் சரியான கோபத்துடன்.
“நீ என்ன பண்ணபோற?” என்று குறும்புடன் கண்சிமிட்டிய தென்றலைப் பார்த்து, “நான் என்ன செய்யனும்னு அவரு முடிவெடுக்கக்கூடாது, இந்த இனியாவோட முடிவுதான் இறுதியான முடிவு” என்றவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.
“இந்த முறை ஆடுபுலி ஆட்டத்தில் யாரு ஜெய்க்கிறாங்க என்று நானும் பார்க்கத்தானே போறேன்” என்றவள் இனியாவிற்கு சாப்பாடு பரிமாற அவளோ தென்றலுக்கு பாசத்துடன் ஊட்டிவிட்டாள்.
இனியா என்றாலே தென்றலுக்கு உயிர். சின்ன வயதில் இருந்தே தன்னுடைய அண்ணனின் இடத்திலிருந்து அவளோட ஒவ்வொரு தேவையையும், விருப்பத்தையும் முகம் சுளிக்காமல் நிறைவேற்றி வைப்பவள்.
தென்றலின் மனசை யாரும் காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும் இனியாவிற்கு கதிரை அவ்வளவு பிடிக்கும். அவனுடைய ஓவ்வொரு அசைவுக்கும் இவளிடம் பெரிய விளக்கமே இருக்கும்.
ஆனால் இருவருக்கும் இடையே சண்டை வந்தால் வீடே ரணகளமாக மாறிவிடும். கடைசியில் அவர்களின் பிரச்சனையைத் தீர்த்து வைத்து அவர்களை பழையபடி பேச வைப்பதற்குள் தென்றலுக்கு போதும் போதும் என்றாகிவிடும்.
இனியா அவளின் முடிவில் உறுதியாக இருக்க அன்று இரவு கடையைப் பூட்டிவிட்டு வந்த செழியனிடம், “மாமா நான் சென்னையில் படிக்க போறேன்” என்றாள் தெளிவாக.
“கதிரு உன்னை வெளிநாடு அனுப்ப முடிவெடுத்து இருப்பவனுக்கு நாங்க என்னம்மா பதில் சொல்றது” என்று இனியாவின் அருகே வந்தார் சுப்பு.
சிறிதுநேரம் சிந்தனைக்கு பிறகு, “இல்லம்மா என்னால் முடியாது, நீங்க எல்லோரும் இங்கே இருப்பீங்க நான் மட்டும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி போய் படிக்கணுமா?” என்றாள் அவளின் பக்கமிருக்கும் நியாயத்தை எடுத்துரைத்தாள்.
தென்றல் அங்கே நடப்பதை கவனித்தபடி தன் செல்லில் செமினாருக்கு நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க செழியனோ இனியா சொன்னதைப் பற்றி சிந்திக்க தொடங்கினார்.
அதன்பிறகு சுப்பு, இனியா இருவரும் சேர்ந்து இரவு உணவை ரெடி பண்ண இரவு உணவை முடித்துவிட்டு கணவன் மனைவி இருவரும் பின் வாசலிற்கு சென்று அமர்ந்தனர். அவருக்கு இனியா பேசுவதில் இருக்கும் நியாயம் புரிதாலும் மகனின் ஏற்பாட்டை தட்டிகழிக்க மனம் வரவில்லை.
“சுப்பு இப்போ என்னம்மா பண்றது?” என்று மனைவியிடம் அவர் கேட்க, “எனக்கு என்னவோ கதிரு எடுத்த முடிவு சரின்னு படுத்துங்க” என்றார்.
அவர் மனைவியைக் கேள்வியாக நோக்கிட, “இனியாவைக் கைக்குள் வைத்து வளர்த்தியதால் அவ வெளி உலகம் தெரியாமல் வெகுளியா இருக்காங்க, என்னைக்கா இருந்தாலும் அடுத்த வீட்டுக்கு வாழபோற பொண்ணு” என்றவர் நிறுத்துவிட்டு கணவனின் முகம் பார்த்தார்.
“நான் தவற நினைக்கல சுப்பு நம்ம மட்டும் மனசில் ஆசையை வளர்த்து என்ன பண்றது?” என்றவர் மனைவிக்கு ஊக்கம் கொடுக்க அவரும் தன் மனதில் நினைத்ததை பளிச்சென்று சொல்லிவிட்டார்.
“என்னதான் கையில் படிப்பிருந்தாலும் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாதுன்னு சொல்வாங்க, அவளுக்கு வெளியுலகம் புரியணும். நம்ம கதிரு சொல்ற மாதிரி அவளை வெளிநாடு அனுப்பி படிக்க வைக்கலாம்” என்றார்.
அவரும் மனைவியின் கருத்திற்கு செவி சாய்க்க இனியாவை வெளிநாடு அனுப்பும் முடிவுடன் கணவன், மனைவி இருவரும் தூங்கச் சென்றனர். அதன்பிறகு வந்த நாட்கள் தெளிந்த நீரோடு போல சென்றது.
செழியன் கதிர் சொன்ன நாளில் குடும்பத்துடன் சென்னை சென்று சேர்ந்தனர். அவர்கள் அங்கே பிறகு இனியா அப்ளிகேஷன் வாங்க காலேஜ் எல்லாம் சுற்றிவிட்டு வீடு வந்து சேர அவளுக்காக ஹாலில் காத்திருந்தான் கதிரோவியன்.
அவனின் பேச்சைக் கேட்காமல் சென்னையில் காலேஜ் படிக்கிறேன் என்று அப்ளிகேஷனுடன் வந்து நிற்கும் அவளை கொலைவெறியுடன் பார்க்க இனியாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தைரியமாக வீட்டின் உள்ளே நுழைந்தாள்
“அப்பா நீங்க என்ன முடிவு எடுத்திருக்கீங்க?” என்றவனின் கேள்விக்கு இனியாவை ஒரு பார்வை பார்த்தவர், “உன் விருப்பம்போல செய்ப்பா” என்று சொல்ல தென்றலோ இனியாவைத் திரும்பிப் பார்த்தாள்.
கடைசியில் அவன்தான் ஜெய்ப்பான் என்று அவளுக்கு தெரியுமே. ஆனால் இந்த விஷயத்தை இனியா எப்படி எடுத்துக்க போறாளோ என்ற பயம் தென்றலின் முகத்தில் தெளிவாக தெரிந்தது.
“அப்பா நீங்களும் அவரோட சேர்த்துட்டு இப்படி பேசறீங்க” என்று அவள் அழுகையுடன் கேட்க அவளின் அனுமதியின்றி அவளின் கண்கள் கலங்கியது.
செழியன் – சுப்புலட்சுமி இருவரும் மகனைக் கேள்வியாக நோக்கிட, “இனியா மாமாவை நிமிர்ந்து பாரு” என்று அவன் போட்ட அதட்டலில் பயந்து அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று மறைந்தாள்.
அவளின் பின்னோடு சென்றவனோ, “இனியா” என்றழைக்க, “நீ ஏன் மாமா என்னை வெளிநாடு போக சொல்ற?” என்று படுக்கையில் அமர்ந்து கண்ணீருடன் கேட்டாள்.
வெள்ளை நிற சட்டை, புளூ ஜீன்ஸில் கம்பீரமாக தன் முன்னே நின்றவனின் முகத்தில் ஏதோவொரு வித்தியாசம் இருப்பதைக் கண்டு கண்களில் இருந்த கண்ணீரை வெடுக்கென்று துடைத்துவிட்டாள்.
அவனுக்கு பெண்கள் அழுதாளே பிடிக்காது என்று தெரியும் அதை செய்துவிட்ட தன் மடத்தனம் எண்ணி அவள் தலைகுனிய, “உன் நல்லதுக்குதான் வெளிநாடு போக சொல்றேன் இனியா. என்னாலதான் வெளிநாடு போய் படிக்க முடியல. அட்லிஸ்ட் நீயும், தென்றலும் வெளிநாடு போய் படிச்சா எனக்கு நிம்மதியா இருக்கும்” என்றவனின் குரல் கரகரத்தது.
அவனின் முகம் சோகத்தில் இருப்பது கண்டு, “சரி மாமா நான் வெளிநாடு போறேன்” என்றாள் இனியா மெல்லிய குரலில்.
அடுத்தநொடியே அவளின் கன்னத்தில் முத்தமிட்டு, “தேங்க்ஸ்டி” என்றவன் அங்கிருந்து சென்றுவிட இவளோ அதிர்ச்சியில் சிலையாகி அமர்ந்திருந்தாள். இப்போது அவனின் விருப்பபடி அமெரிக்காவில் படிக்க தனியாக அவளின் முதல் பயணம் இனிதாக தொடங்கியது.
அதற்கே உண்டான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது சென்னை விமான நிலையம். அங்கிருந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில் வேலை விஷயமாக செல்வதை பார்த்தபடி சேரில் அமர்ந்திருந்தாள் இனியா. அவளின் விழிகள் அவனை நோக்குவதும் பிறகு கலங்குவதுமாக இருந்தது.
அவனோ இவளின் பார்வையை உணர்ந்தபோதும் கண்டும் காணாமல் அமைதியாக நின்றிருப்பவனை பார்க்கும் போது அவளுக்கு உள்ளுக்குள் எரிச்சலாக வந்தது.
அவளின் இருபுறமும் அமர்ந்திருந்த செழியன் மற்றும் சுப்புலட்சுமி இருவரும் அவளுக்கு ஆயிரம் அறிவுரைகள் செல்வது அவளின் காதுகளில் விழவில்லை. அவளின் கவனம் முழுவதும் அவனின் மீதே நிலைத்து இருந்தது.
சட்டென்று அவளின் கண்கள் கலங்கிட, “ஷ்.. இனியா என்னடா இப்படி குழந்தை மாதிரி கண்ணை கசக்கிட்டு இருக்கிற..” என்று சுப்பு அவளின் கண்களை துடைத்துவிட்டார்.
செழியன் அவளின் கரத்தை பிடித்துகொண்டு, “நீ படிக்க போற இடத்தில் ரொம்ப கவனமாக இருக்கணும் இனியா. இங்கே மாதிரி விளையாட்டாக இருக்காதே..” என்று சொல்ல அவளோ ஜீவனே இல்லாமல் தலையசைக்க அவள் கிளம்பவேண்டிய நேரம் வந்தும் அவன் அருகே வந்தான்.
“இனியா ஃபிளைட்டிற்கு நேரமாச்சு” என்றவனை அவள் கோபத்துடன் முறைக்க அவனோ அவளின் பார்வையைத் தவிர்த்து வேறுபுறம் பார்த்தான்.
“என்னை இங்கிருந்து அனுப்ப முடிவு பண்ணிட்ட இல்ல மாமா” என்றவள் மறுபேச்சு பேசாமல் இரண்டடி எடுத்து வைக்க அவளின் கரம்பற்றி தடுத்தவனை அவள் எதிர்ப்பார்ப்புடன் நோக்கினாள்.
“சீக்கிரம் படிப்பை முடிச்சிட்டு வா” என்ற அவளை புன்னகையுடன் வழியனுப்பி வைத்தான். அவள் தன் கண்ணைவிட்டு மறையும்வரை புன்னகையுடன் நின்றிருந்தவனோ அதற்குமேல் தன்னை கட்டுபடுத்த முடியாமல் வேறுபுறம் திரும்பி நின்று கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டான்.
இனியாவை அனுப்பிவிட்டு வெளியே வந்த செழியன் – சுப்பு இருவரின் கண்களும் கலங்கியது. சிறுவயதில் இருந்து கைக்குள் வைத்து வளர்த்த பிள்ளையை கண்காணாத தேசத்துக்கு அனுப்பிவிடாமே என்று இருவரின் மனமும் ஊமையாய் கலங்கியது.
“அம்மா, அப்பா என்ன குழந்தை மாதிரி கண்கலங்கி நிற்கிறீங்க? இனியாவை பிரிவது கஷ்டம் தான், ஆனா இதெல்லாம் அவளோட நல்லத்துக்குத்தான்” என்று கதிர் இருவரையும் தேற்றும் முயற்சியில் இறங்கினான்.
“அடப்போடா நீ பையன் எங்கே இருந்தாலும் கவலை இல்லாமல் இருக்கலாம், ஆனா அவ பொண்ணுடா ஆயிரம் தான் சொல்லு அவளை தனியா அனுப்பிவைக்க எனக்கு மனசு வரல தெரியுமா?” என்று அவளை அனுப்பிவிட்டு மகனோடு சண்டை போட்டார் சுப்பு.
அவன் சிரித்தபடி தந்தையைப் பார்க்க, “என்ன திட்டினாலும் சிரிச்சிக்கிட்டே இருப்பாடா. அவள பார்த்த மனசு பாரமெல்லாம் மறந்தே போயிரும், என்னமோ அவளை அனுப்பிட்டு மனசு கிடந்து துடிக்குதுடா” என்ற செழியனை காரின் ஏறிட மறுப்பக்கம் சுப்பு ஏறிக்கொள்ள டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான் கதிர்.
அவன் சீரான வேகத்தில் சென்றாலும் அவனின் மனமோ அவளின் அருகாமையைத் தேடியது. இதோ அவளை அரைமனதுடன் அனுப்பிவிட்டு பெற்றவர் படும் துன்பத்தைக் கண்ணால் பார்த்தவனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
இனியாவின் டைரியிலிருந்து..
“உன் மனம் உணராமல்
உன்னருகே நானும் இருக்க
நினைத்த நினைவுகளைத்
தொலைத்துவிட்டு இதோ
உனக்காகவே என்
முதல் பயணம்!”