20
மறுபடியும் அவனின் போன் சத்தமிட்டது. இந்த முறை அவள் அதை கையிலெடுத்து,
“என்னடா! உனக்கு அறிவில்லை? எத்தனை தடவை போன் பண்ணி எங்களை தொல்லை செய்வ!”
“ஆ…நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது?”
பாட்டாகவே படித்துவிட்டான் விஷ்ணு.
“விஷ்ணு” என்று இவள் இந்த பக்கம் சிணுங்க,
“வள்ளி அண்ணன் போன் உன் கையில்… எப்படி? அடிப்பாவி அவனை எதுவும் செஞ்சிட்டியா!”
அவனின் சீண்டல் பேச்சில் சிரித்துவிட்டாள்.
“ஆமா அப்படியே உன் அண்ணனை ஏதாவது செஞ்சிட்டாலும்! பீச்ல இருக்கோம்…வரோம்!”
“எத்தனை நேரம் சிப்பி எடுப்பீங்க அந்த கடலில்! கிளம்பு டி சீக்கிரம் வீட்டுக்கு போகணும்!”
விவேக்கை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே,
“விஷ்ணு லேட் ஆச்சுன்ன நீங்க வேணா முன்னாடி கிளம்புங்க, நான் … நான் அவர் கூட வரேன்!”
இப்போது நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க, அவள் சொல்லியிருந்த பதிலில் புன்னகை மன்னனாக மாறியிருந்தான் அவன்.
“அப்படியா! நான் காதால் கேட்ட இந்த வார்த்தைகள் நிஜம்தானா? மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமாட்டியே? மயூரி ஆர் யூ ஓகே பேபி!” விஷ்ணு அவளை விடுவதாக இல்லை!
“லூசு உனக்கு எல்லாத்தையும் விளக்கணுமா! விளக்கெண்ணை. வை டா போனை!”
இருவரின் சம்பாஷனைகளை கவனித்துக் கொண்டிருந்த விவேக்கின் முகத்தில் புன்னகை மாறி ஆர்ப்பாட்டமான சிரிப்பு குடிகொண்டுவிட்டது. செல்லமாய் தன்னவளின் தலையில் கொட்டிவிட்டான்.
அவனுடன் அதன் பின் என்ன பேசினாள், எப்படி வீடு வந்து சேர்ந்தனர் எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை. எல்லாமே ‘ஸ்வீட் நத்திங்ஸ்’. அவளை மிகவும் நேசிக்கிறானாம், இனி கொஞ்ச நாள் கூட அவளில்லாமல் இருக்க அவனால் முடியாதாம். அவன் பேசிய வசனங்களை எல்லாம் ரிவைண்ட் செய்தே அந்த இரவு அவள் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் விடிகாலையில் கோலம் போட வாசலுக்கு வந்த அமுதாவை, கையில் ஒரு பூங்கொத்துடன் வரவேற்றது அவளே தான்.
“அத்தை, உங்க பையன் விவேக்கை எனக்கு கல்யாணம் செஞ்சி வைங்க!” என்ற கோரிக்கையுடன்! இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தார் அமுதா. அவர் அவளை கேட்டது போய் இப்போது வலிய வந்து சொல்கிறாள். இந்த காலத்து பிள்ளைகளை நினைக்க அவருக்கு ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும் மயூரவள்ளி இப்போது சொன்ன விஷயத்தின் ஆனந்தத்தில் கண்கள் கலங்கிவிட்டது. விஷ்ணு மூலம் ஏற்கனவே விஷயம் அரசல்புரலாக அறிந்தும் இந்நொடி மயூரவள்ளியின் மூலம் நேரிடையாக கேட்டது அவரை நிரம்பவும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
அவளை அணைத்து உச்சி முகர்ந்தவர்,
“ரொம்ப சந்தோஷமா இருக்கு வள்ளி மா, எனக்கு இப்ப என்ன சொல்றதுன்னே தெரியலை”
விஷ்ணுவும் மனைவியை மருத்துவமனையில் அப்போதுதான் இறக்கி விட்டுவிட்டு வந்திருக்க இங்கே நடந்த கூற்றின் சந்தோஷம் அத்தனையும் அவனையும் தொற்றிக் கொண்டது.
“ஹாப்பி ஃபார் யூ வள்ளி”
என்றவன் தோழி அன்னை இருவரையும் ஒன்று சேர கட்டிக் கொண்டான்.
அதன் பின் மயூரி அமுதாவுடன் சேர்ந்து கிட்சனை ஒரு வழி செய்ய விஷ்ணு,
“அமுதா இதெல்லாம் நல்லாயில்லை பார்த்துக்கோ. எத்தனை நாளா நானும் கேசரியும் வடையும் வேணும்னு கேட்குறேன்! அப்பெல்லாம் செய்யாம இன்னிக்கி உன் மூத்த மருமக ஒரு நல்ல விஷயம் சொன்னான்னு தடபுடல் பண்றியா! இரு உன்னை வச்சிக்கிறேன்.”
“அதான் உனக்கு பொண்டாட்டி வந்துட்டால்ல? நீ கேட்குறதெல்லாம் அவளை செய்ய சொல்றா!” மயூரி அமுதாவுக்கு சாதகமாய் பேசினாள்.
“ஒரே ஒரு நாள் டீ போட்டு கொடுத்தே எனக்கு புரிய வட்சிட்டா. சமையலுக்கும் அவளுக்கும் ரொம்ப தூரம்னு! நீ வேற ஏன் டி மனுஷனை ரணமாக்கிட்டு!”
“அதானா… ஹ ஹ”
மயூரியும் அமுதாவும் ஒன்றாய் கைகொட்டி சிரிக்க விஷ்ணு அவர்கள தன் பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான்!
விவேக் வண்டியில் அவன் பின்னே அமர்ந்திருந்தாள் மயூரி. கை அவன் தோளை பற்றியிருக்க, மனம் முழுவதற்கும் அவன் எண்ணம் தான். இது தான் தனக்கான இடம், அவன் வேண்டும் அவளுக்கும்! மருத்துவமனை வாசலில் அவளை இறக்கி விட்டவன்,
“கண்டிப்பா இன்னிக்கு போயாகணுமா மயூரி! லீவ் வேணா கேட்டு பாரேன்.” அவன் கண்களில் அத்தனை ஏக்கம்.
“ஆளைப்பாரு. அதெல்லாம் ரொம்ப கஷ்டம். சீக்கிரம் ஆபிஸுக்கு கிளம்புங்க மிஸ்டர். சாயங்காலம் பார்க்கலாம்”
கையசைத்துவிட்டு போனவளை ஆசைதீர பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றான் விவேக்.
“எங்களுக்கும் கோவிலில் கல்யாணம் வச்சிக்கணும்னு இருக்கு. மண்டபம் எல்லாம் எடுக்க வேண்டாம். விஷ்ணு நீ கொடுத்த அட்வான்ஸ திரும்ப வாங்கிடு!”
விஷ்ணு இவர்கள் விஷயம் சரியான நாளிலிருந்து பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தான்.
கனகவேல் கொஞ்சம் உதவினாலும் கூட முக்கால்வாசி காரியம் இவன் செய்தது. அன்று அதற்கான பேச்சுவார்த்தை வீட்டில் எடுக்க மண்டபம் முடியாது என்று ஒன்றாய் சொல்லிவிட்டனர் இருவருமே!
“அடடடா இதுங்க ஒத்துமையை பார்க்க எனக்கு இரண்டு கண்ணு பத்தலை அமுதா! எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி இருக்குதுங்க! இந்த பிடிவாதம் அதில் முதலில் வருது”
அன்னையின் காதில் ஓதியவனை கண்டு முறைத்தாள் மயூரி.
“விஷ்ணு நீ என்ன வேணா சொல்லிக்கோ. நீ மட்டும் சிம்பிளா பண்ணிகிட்டு எங்களுக்கு மட்டும் ஏன் டா தடபுடல் பண்றே! அதெல்லாம் வேண்டாம். மாங்காடு கோவிலில் கல்யாணம், அதுக்கு பிறகு நம்ம வீட்டில் விருந்து, டன்”
“சரிங்க அண்ணிங்க” என்று சரணடைவதை தவிர வேறு வழியில்லை அவனுக்கு!
இள ஆரஞ்சு நிறத்தில் ஒரு பட்டு சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருந்தான், அதற்கு தோதாய் பட்டு வேஷ்டி. வழக்கத்துக்கு மாறாய் கழுத்தில் மெலிதாய் ஒரு தங்க சங்கிலி, நெற்றியில் சின்ன கீற்றாய் திருநீறு. ஜம்மென்று புது மாப்பிளையாய் இருந்தான் விவேக். மயூரி இத்தனை நேரமும் அவனை கவனித்திருக்கவில்லை.
சுற்றியும் அவர்கள் வீட்டு சொந்தங்கள், அறிந்தவர் தெரிந்தவர், கேமராமேன் என அல்லோல் பட்டிருக்க அவளால் அவனை ஒழுங்கே காண முடிந்திருக்கவில்லை.
அவனை பார்த்து முடித்தவள் அடுத்ததாய் தன் கழுத்தில் புதிதாய் சேர்ந்திருந்த அந்த மஞ்சள் கயிற்றை கையில் ஏந்தி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த மந்திரம் அவள் மனதில் வலம் வந்தது.
மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபகே
சஞ்சீவ சரதா சதம்
அவள் உடல் சிலிர்த்தது. நடக்கவே நடக்காதோ என்று நினைத்த விஷயம் இன்று நடந்தேவிட்டது. கெட்டியாய் அந்த பொக்கிஷத்தை தன் கைகளுக்குள் பொதித்து வைத்து கொண்டாள், ‘லவ் யூ விவேக்’ அவள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டது.
விஷ்ணு இவளிடம் வந்தான்,
“அண்ணிங்க, ஆல் ஓகே? பசிக்கிதா ஏதாவது வேணுமா? இப்போதைக்கு இந்த ஜூஸ் குடி. இன்னும் ஒரு அரைமணி நேரம், ரெஜிஸ்டிரேஷன் முடிச்சிட்டு வீட்டுக்கு போயிடலாம்”
அமைதியாய் சரியென்று தலையாட்டியவளை கண்ணெடுக்காமல் பார்த்தான் அவள் உயிர் நண்பன்.
“ஆஹா…இன்னிக்கு ஏக அம்சமா இருக்கே வள்ளி, இரு வரேன்!”
எங்கிருந்தோ கறுப்பு மையை தன் சுண்டு விரலில் எடுத்து கொண்டு வந்தவன் அவள் கன்னத்தில் ஓரமாய் வைத்துவிட்டு,
“இனி எந்த கண்ணும் உன் மேல படாது வள்ளி!”
அவனின் அன்பு செய்கையில் அவனை பார்த்து புன்னகை புரிந்தவளை நெருங்கினான் விவேக்கும்.
“விஷ்ணு எனக்கு!”
சொன்னது விவேக் இல்லை! விஷ்ணுவை நெருங்கி வந்த ராஜி! தன் கன்னத்தையும் அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.
“இந்தாடி செல்லம் உனக்கும்”
அவளுக்கும் வைத்து விட்டான்.
அடுத்த வேலைக்காக அவன் நகரும் முன் அங்கே அவர்களிடம் வந்தார் அமுதா வயதொத்த பெண்மணி ஒருவர்.
“என்னடா விஷ்ணு, நீ யாரோ ஒரு பொண்ணை வீட்டுக்கு தெரியாம இழுத்திட்டு போய் கல்யாணம் பண்ணிகிட்டியாமே? இப்ப தான் உங்க அம்மா சொல்றா! நெஜமாவா டா”
அவர் பேச்சு சத்தத்தில் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இவர்கள் பக்கம் திரும்பினர். வெட்கத்தில் வாயடைத்து போன விஷ்ணுவின் முகத்தை பார்க்க மயூரிக்கு சிரிப்பாய் இருந்தது.
“ஐயோ ஆன்டி அப்படியெல்லாம் இல்லை. இந்த அமுதாவோட கிசுகிசுப்பு எல்லாம் நம்பாதீங்க. அதுவுமில்லாம கொஞ்சம் மெதுவா தான் பேசுங்களேன்”
சுற்றி முற்றி அவருக்கு கண் காட்டினான், எதும் பிரயோசப் படவில்லை!
“அப்புறம் ஏன் டா அப்படி செஞ்சே? உங்க அம்மாவே சொல்றாளே”
“ஐயோ என்னை நம்புங்க. நான் ஒண்ணுமே செய்யலை. வள்ளி நீ கொஞ்சம் சொல்லேன் டி”
அவள் நகைத்துக் கொண்டிருந்தாளே ஒழிய அவனுக்கு ‘சப்போர்ட்டுக்கு’ வருவது போல் தெரியவில்லை.
“படு பாவி, நேரம் பார்த்து காலை வாரி விடுறியே டி! எங்க போனா இந்த ராஜி! இவ்ளோ நேரம் இங்க தானே இருந்தா! கொஞ்சம் இருங்க இதோ வரேன்” அங்கேயிருந்து கழண்டு கொண்டவன் ராஜியை தன்னுடன் இழுத்துக் கொண்டு வந்தான்.
“ஒரு நிமிஷம் இங்கே வா டி. என் மானம் காத்தில் கோயிங்” அவளிடம் சின்ன குரலில் சலித்துக் கொண்டவன்,
“இது தான் எங்க கல்பனா ஆன்டி, இப்போ வேற ஏரியாக்கு மாறி போயிட்டாங்க. அந்த ஏரியா இவங்களால் என்ன பாடு படுதோ தெரியலை…நல்ல ஏரியான்னு சொல்லிட்டிருந்தேன் ஆன்டி…ஹி ஹி…இது தான் என் பொண்டாட்டி. நீங்க அவ கிட்டையே உண்மையை கேட்டுக்கலாம்! எனக்கு வேலை இருக்கு, நான் வரேன்!” என்றவன் அங்கிருந்து நழுவிவிட, அவரோ ராஜியிடம்,
“இப்ப எத்தனையாவது மாசம் மா உனக்கு” என்று கேட்டது அவன் காதிலும் விழுந்தது.
‘இன்னிக்கு வீட்டில் எனக்கு தர்ம அடி இருக்கு’ என்று நினைத்துக் கொண்டான்.
மயூரியுடன் தனிமைக்காக காத்திருந்த விவேக்குக்கு அது மெதுவாய் இரவு பத்து மணிக்கு மேல் கிடைத்தது. அவர்கள் வீட்டில் மயூரிக்கு என்று முன்பு ஒதுக்கப்பட்டிருந்த அதே அறை. இன்று பார்க்கவே புதிதாய் முழுவதும் பூ அலங்காரங்களுடன் அழகாய் இருந்தது. அதையெல்லாம் ஒன்றுமில்லை என்பதுபோல் வந்தாள் அவனின் மயூரி.
தலைநிறைய பூவும், எளிமையான அலங்காரத்திலும் அவனை தன் வசம் ஈர்த்து விட்டிருந்தாள்.
அவனுக்கோ பேச நினைத்து வைத்திருந்தது எல்லாம் மறந்து போனது. வாயில் வார்த்தை வரவில்லை. இதய துடிப்பு எல்லாம் எகிறிப்போயிருந்தது. கண் மாத்திரம் வழக்கத்தை விட அதிக பார்வை கூர்மையை வெளிப்படுத்தியது.
எல்லாவற்றுக்குமான தீர்வு அந்த ஒரு டாக்டரால் மட்டுமே அவனுக்கு தர முடியும். அதற்கான காலம் நேரம் எல்லாம் இந்நொடி கூடி வந்திருந்கிறது…
வாழ்க வளமுடன்.