kiyaa-20

coverpage-5de724e5
kiyya... kiyaa... kuruvi

கிய்யா – 20

பல மணி நேர காத்திருப்புக்கு பின், அறுவை சிகிச்சை அறையிலிருந்து மருத்துவர்கள் வெளியே வர பதறிக்கொண்டு அவர்கள் முன் நின்றாள் இலக்கியா. நிர்மலா தேவி தன் மருமகளை மேலும் கீழும் பார்த்தார்.

மருத்துவர், சற்று நிதானித்து கொண்டார்.

“ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சிது. இன்னும் பேஷண்ட் கண் முழிக்க கொஞ்சம் நேரமாகும். பிசியோதரபிஸ்ட் வருவாங்க. நிறைய எக்ஸர்சைஸ் சொல்லுவாங்க. எல்லாம் சரியா செய்யணும்.” அவர் கூற, மடமடவென்று தலையை ஆட்டினாள் இலக்கியா.

சென்றவர் மீண்டும் இவர்கள் பக்கம் திரும்பி, “வலி இருக்கும். ஆனால், அது நார்மல் தான்.” கூறிவிட்டு மருத்துவர் செல்ல, இலக்கியா விஜயபூபதியின் அறையில் அவன் வருகைக்காக காத்திருந்தாள்.

விஜயபூபதி கண்விழிக்க சில மணிதுளிகள் ஆனது. அதன் பின், அவன் அறைக்கு மாற்றப்பட்டான்.

அவனை நெருங்கினர் நிர்மலாதேவியும், ரங்கநாத பூபதியும் அவன் முகத்தில் ஒரு புன்னகை கீற்று. அதில் சந்தோசம் தெரிந்தாலும், வலியும் பொதிந்து இருந்தது.

அவன் முன் குனிந்து, அவன் தலை கோதி, “வலிக்குதா அத்தான்?” அவள் கண்களில் கண்ணீர் மல்க கேட்டாள் இலக்கியா.

அவனுக்கு அவர்கள் சின்ன வயது சம்பவம் நினைவு வந்தது. எப்பொழுது கீழே விழுந்து அவனுக்கு அடிபட்டுவிட்டாலும், இப்படி தான், ‘வலிக்குதா?’ என்று அழுது கொண்டே கேட்பாள் இலக்கியா.

வலித்தாலும், அவள் அழுகையை நிறுத்த, அவன் தன் வலியை மறைத்து கொண்டு மறுப்பாக தலை அசைப்பான். இன்றும் அதே போல், அவளுக்காக ‘வலிக்கவில்லை…’ மறுப்பாக தலை அசைத்தான் விஜயபூபதி.

“நீங்க மாறவே இல்லை அத்தான்” அவன் செய்கையில் கட்டுண்டு அவள் விழிநீரோடு, அவன் செவிகளில் கிசுகிசுக்க, “நீயும் தான் இலக்கியா” அவன் புன்னகை வலியை மீறி விரிந்தது.

“இப்ப தான் ஆபரேஷன் முடிஞ்சி வந்திருக்கான். அதுக்குள்ள பேசியே கொல்லாத” நிர்மலாதேவி சிடுசிடுக்க, “நான் பேசலை. நீங்க பேசுங்க. இனிய கானமா இருக்கும்.” இலக்கியா கழுத்தை நொடித்து கொண்டாள்.

“விஜய், உன் கூட ஒருத்தர் தான் இருக்கணும்.” ரங்கநாத பூபதி பேச ஆரம்பிக்க, “நான் இருக்கேன் மாமா” பட்டென்று கூறினாள் இலக்கியா.

“அது தான் இலக்கியா. நீ பார்த்துக்கோ. நாங்க கிளம்புறோம்.” அவர் விடைபெற, நிர்மலாதேவி ஆயிரம் அறிவுரை கூறிவிட்டு கிளம்பினார்.

‘வலிக்கவில்லை…’ என்று அவன் கூறினாலும், வலி தெரியாமல் இருக்க அவன் மாத்திரை சாப்பிட்டிருந்தாலும், நேரம் செல்ல செல்ல, “வலி… வலி… வலிக்குது…” அவன் வலியில் துடித்தான்.

“அத்தான்…” என்று அவன் அருகே நாற்காலியை போட்டுகொண்டு, அவன் கைகளை பிடித்தபடி, “எல்லாம் சரியாகிரும் அத்தான்” அவனுக்கு ஆறுதல் கூறினாள் அவள்.

“உனக்கு எதுக்கு கஷ்டம். நீ படுத்துக்கோ இலக்கியா” அவன் கைகளை உருவிக்கொள்ள முயல, ‘உன் கடின பாதையில் என்றும் நான் இருப்பேன்.’ என்பது போல் அவன் கைகளை அழுந்த பற்றிக்கொண்டு , “எனக்கு கஷ்டமா இல்லையே அத்தான்.” அவள் இதழ்களை விரித்தாள்.

“இப்ப நடக்க முடியும். என் கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிறலாமுன்னு பாக்கறீங்களா அத்தான்?” அவன் கைகளை பற்றியபடி, அவள் கேலியில் இறங்கினாள்.

“உண்மை தான் இலக்கியா. உன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓட தான் போறேன். ஆனால், இன்னைக்கு இல்லை. கால் சரியாக இன்னும் கொஞ்சம் நாள் ஆகும். அதுக்கு அப்புறம் தான். உன் கூட யார் இருப்பா?” அவன் தன் வலியை மறந்து, வலியை மறக்க அவளிடம் பேச்சை வளர்த்தான்.

“அவ்வளவு சீக்கிரம் எல்லாம், நீங்க என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது அத்தான். நானா உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தா தான் உண்டு.” அவள் அவனை மிரட்டினாள்.

அவன் அவள் மிரட்டலை ரசித்து சிரித்தான்.

அவ்வப்பொழுது, அனைவரும் வந்து அவனை பார்த்துவிட்டு சென்றனர். மருத்துவமனையில், விஜயபூபதி இலக்கியாவின் நாட்கள் சற்று விறுவிறுப்பாகவே நகர்ந்தது.

எந்தவித பிடிமானமுமின்றி அவனால் நிமிர்வாக எழுந்து அமர முடிந்தது. தற்பொழுது சக்கர நாற்காலியில் இருந்தான். அவன் நடை பயிற்சி மேற்கொள்ள ஆரம்பிக்க, “வீட்டிற்கு செல்லலாம். பிசியோதெரபிஸ்ட் வீட்டிற்கு வந்து பயிற்சி கொடுப்பாங்க.” என்று கூறி அவனை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர்.

அவன் வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும் அவன் வருகைக்காக நடந்திருக்க, “நான் இலக்கியா இருக்கிற வீட்டிற்கு போகணும்” அவன் கூற, அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.

“இப்ப, அங்க எதுக்கு அத்தான். அப்ப, உங்களால் முடியாது, நான் உங்களை பக்கத்துலயே இருந்து பார்த்துக்கணும். நாம அங்க இருந்தோம். இப்ப தான் உங்களுக்கு குணமாக போகுதே.” இலக்கியா மறுப்பு தெரிவிக்க, “நான் அங்க வந்து இருக்கிறதா வாக்கு கொடுத்திருக்கேன்.” அவன் குரலில் அழுத்தம் இருந்தது.

“நான் தானே உங்களை அங்க வந்து இருக்க கேட்டேன். நானே இப்ப வேண்டாமுன்னு சொல்றேன்” இலக்கியா லகுவாக பேசினாள்.

“நீ வேணுமுன்னா சரின்னு சொல்லிட்டு நீ வேண்டாமுன்னு சொன்னா சரின்னு சொல்லனுமுனு எந்த அவசியமும் இல்லை.” அவனும் சிரித்த முகமாக லகுவாகவே பேசினான்.

இலக்கியாவின் புருவங்கள் ஒரு நொடி அவன் எதையோ கூறவருவதை புரிந்தவள் போல் நெரிந்தது.

அவன் பேச்சின் போக்கை அவள் புரிந்து கொண்டாள் என்று அறிந்தவன் போல் அவன் பெருங்குரலில் சிரித்தான்.

“போலாமா?” அவன் ஒற்றை வார்த்தையில் கேட்க, இலக்கியா அவனை அவள் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

“பார்த்தீங்களா? என் பையனை என்கிட்டே இருந்து மொத்தமா பிரிச்சிட்டா. இவ வேண்டாமுன்னு இதுக்கு தான் நான் சொன்னேன்.” நிர்மலாதேவி புலம்ப, “எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிரும்” அவர் கூற, பாட்டியின் முகத்திலோ புன்னகை.

‘பேரனுக்கு சரியாகிருச்சு. அவன் பார்த்துப்பான். இனி, இலக்கியாவின் வாழ்க்கையிலும் பிரச்சனை இல்லை.’ அவர் முகத்தில் திருப்தி.

விஜயபூபதியின் முகத்தில் சிந்தனை ரேகைகள். ‘எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிரும். நான் இனி என்ன செய்ய வேண்டும்?’ அவனுக்கு புரியவில்லை.

‘இலக்கியாவிற்கு, நான் தாலி கட்டியிருக்கிறேன். கணவனாக என் கடமையை செயலாற்ற வேண்டுமா?’ அவன் முகத்தில் ஒரு கேலி புன்னகை தோன்றியது.

‘இலக்கியாவிற்கு என் மேல் பாசம் உண்டு. அவளுக்கு என்னை பிடிக்கும். எனக்கும் இலக்கியா மேல் பாசம் உண்டு. எனக்கும் அவளை பிடிக்கும். ஆனால்…’ அவன் புருவங்கள் நெரிந்தன.

‘துர்கா…’ அவன் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய்!

“கிய்யா… கிய்யா…” என்று விஜயபூபதி அலைபேசியில் சத்தம் எழுப்ப, அவன் முன் அவசரமாக அவள் உடல் மேலும் கீழும் துடிக்க அவள் மூச்சு வாங்கி கொண்டு நின்றாள்.

“எதுவும் வேணுமா அத்தான்?” அவள் கேட்க, அவள் அங்கத்தின் அசைவை கவனித்தவன், “ம்… ச்…” மறுப்பாக தலை அசைத்தான்.

“கூப்பிட்டீங்களே?” அவள் கண்களில் கேள்வி. ஆனால், அதையும் தாண்டிய அக்கறை அவள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.

“குருவியை கூப்பிட்டேன்” அவன் உதட்டோரத்தில் நமட்டு புன்னகை.

அவள் திரும்பி செல்ல, மீண்டும் “கிய்யா… கிய்யா…” சத்தம். அவள் முகத்தில் ரகசிய புன்னகை. அவள் புன்னகையை அவனும் கண்டுகொண்டான்.

“உன் கேக் பிசினெஸ் பாதிக்கப்பட்டிருக்கும். என் கூடவே ஹாஸ்பிடலில் இருந்திட்ட” அவன் கூற, “அதெல்லாம் இல்லை அத்தான். இனி எல்லாம் பார்த்துக்கலாம்.” அவள் கூற, பிஸியாதெரபிஸ்ட் வரவும் சரியாக இருந்தது.

எப்பொழுதும் மற்றவர்கள் அவனுக்கு உதவி செய்யும் பொழுது வெளியே நின்று கொள்வாள். ‘இன்று அத்தானுக்கு வலிக்குமே.’ அவள் உள்ளம் அச்சம் கொண்டது.

அவளால் வெளியே செல்ல முடியவில்லை. சற்று தள்ளி நின்று கொண்டிருந்தாள். பிஸியாதெரபிஸ்ட் அவன் உடைகளில் சில மாற்றங்கள் செய்ய, அவளுக்கு சற்று கூச்சமாக இருந்தது. அவள் முகம் சிவந்து போனது.

முகத்தை திருப்பி கொண்டாள். அவனுக்கு பயிற்சி ஆரம்பிக்க, அவன் வலியால் துடித்தான்.

அவள் கூச்சமும், வெட்கமும் மறைந்து அவள் இதயம், அவன் வலியில் துடிக்க ஆரம்பித்தது.

அவன் கதறலில் அவள் உடல் நடுங்கியது. ‘அத்தான்… அத்தான்… அத்தான்…’ அவள் உள்ளம் அலறியது.

அவள் கண்கள் அவனை விட்டு அகலவே இல்லை.

‘அத்தான், படுத்திருக்கும் பொழுதை விட, அத்தான் இப்படி வலியால் துடிக்கும் பொழுது ரொம்ப கஷ்டமா இருக்கே.’ அவள் மனம் கதறியது.

அவள் கண்கள் விழிநீரை தேக்கி கொண்டு அவனை பார்க்க, அவன் முகத்தில் சொல்லில் வடிக்க முடியாத உணர்வலைகள்.

‘இவள் ஏன் என் மேல் இத்தனை பாசத்தை சுமக்கிறாள்?’ அவன் வலிகளுக்கு இடையிலும் கேள்வி பறந்தது.

அவன் பார்வையில் அவள் உணர்வு போராட்டம் மட்டுமே நிறைந்து நின்றது.

பயிற்சி முடித்துவிட்டு, “இதை தினமும் செய்யணும்.” பிஸியோதெரபிஸ்ட் இலக்கியவிடம் கூற, அவள் தலை அசைத்தாள்.

“ரொம்ப வலிக்குமோ?” அவள் பரிதாபமாக கேட்க, “உங்க ஒய்ஃப்புக்கு உங்க மேல பயங்கர லவ் போல. உங்களை விட அவங்க துடிக்குறாங்க உங்க வலியில். விட்டா அழுதிருவாங்க போல” அவர் கேலி செய்ய, “ஆமாங்க, என் மனைவிக்கு என் மேல பயங்கர லவ்.” அவளை பார்த்து கண்சிமிட்டி விஜயபூபதி கூற, இலக்கியா அவனை முறைத்து பார்த்தாள்.

“செய்யும் பொழுது கொஞ்சம் வலி இருக்கும். அப்புறம் சரியாகிரும். தினமும் எக்சர்ஸைஸ் செய்தால் எல்லாம் ஆறு மாசத்தில் சரியாகும்.” அவர் கூற, “ஆறு மாசமா?” கண்களை விரித்தாள் இலக்கியா.

“எலும்பு சேர மாச கணக்கு ஆகும் மேடம்.” கூறிவிட்டு, தன் வேலை முடிந்துவிட்டது என்று அவர் கிளம்பி சென்றார்.

“ஆறு மாசம் ரொம்ப கம்மியான கால அவகாசம் தான் இலக்கியா. ஒரு பெரிய விபத்து நடந்தா பழைய வாழ்க்கை திரும்ப ஒரு வருஷமாவது ஆகும் தானே.” விஜயபூபதி இப்பொழுது இலக்கியாவிடம் பொறுமையாக எடுத்துரைத்தான்.

“ஆறு மாசத்துக்கு உங்களுக்கு வலிக்குமா அத்தான்.” அவள் கண்களில் வலியோடு கேட்டாள்.

அவன் அவளை ஆழமாக பார்த்தான். அவளை கண்களால் அருகே அழைத்தான். அவள் தலை கோதினான். “முதல்ல தான் வலிக்கும். அப்புறம் வலிக்காது.” அவன் கூற, “உங்க வலியை தாங்க முடிந்தால் நான் தாங்கிப்பேன் அத்தான்.” அவள் குரல் பிசிறியது.

“என் இலக்கியா பேச்சு மாதிரி இல்லையே?” அவன் கண்கள் சுருங்க, அவளுள் மெல்லிய தயக்கம்.

“கிய்யா… கிய்யா மேஜிக்?” அவன் புருவம் உயர்த்த, அவள் முகத்தில் வெட்க புன்னகை.

“என் கிய்யா… கிய்யா மேஜிக்கிற்கு வேற அர்த்தம்.” அவள் கூறி கொண்டே விலகி செல்ல, அவன் அவள் கைகளை பிடித்து இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில், அவள் அவன் நாற்காலியின் கைப்பிடியை தாங்கி கொண்டு நின்றாள்.

அவன் விழிகளும், அவள் விழிகளும் மில்லிமீட்டர் இடைவெளியில் மோதிக்கொண்டன .

“என்ன அர்த்தமுன்னு சொல்லு” ரகசியமாய் அவள் காதில் அவன் கேட்க, “நேரம் வரும் பொழுது சொல்றேன் அத்தான்.” அவள் அவனைவிட மெலிதாக அவன் செவியோரத்தில் கிசுகிசுத்தாள்.

அவன் அவள் கைகளில் இருந்த அவள் பிடிமானத்தை விலக்கவில்லை. அவள் சுவாச காற்று அவன் மீது காட்டும் அக்கறை அவனுக்கு இதமாக இருந்தது.

“அத்தான், எனக்கு வேலை இருக்கு.” அவள் விலகி செல்ல எத்தனிக்க, “என்னை உன் வீட்டுக்கு கூப்பிட்டு நீ என்னை கவனிக்காம, வேலை பார்த்தா எப்படி?” அவன் வம்பிழுத்தான்.

“அத்தான், நான் உங்களை கூப்பிடலை. நீங்க ஏன் என் வீட்டுக்கு வந்தீங்க?” அவள் அவன் பிடியில் இல்லாத மற்றோரு கையால் அவன் காதை திருகினாள்.  

அவன் அவள் மறுக்கையும் தன் பிடிமானத்திற்குள் கொண்டு வந்து, “ஊரு உலகத்துல எல்லாவனும் பொண்டாட்டி பேச்சை கேட்குறான். நான் மட்டுமென்ன விதி விலக்கா? நீ ஒரு தடவை சொன்னால் போதும். அது தான் என் வேத வாக்கு” அவன் பரிதாபமாக உதட்டை பிதுக்கினான்.

“அது எல்லா புருஷன் பொண்டாட்டிக்கும் பொருந்தும். நமக்கு பொருந்தாது” அவள் அவனிடமிருந்து விலக அவள் கைகளை விலக்க, அவள் பிடிமானதை விட கூடாது என்று அவன் தன் அழுத்தத்தை கூட்ட, அவர்கள் மில்லிமீட்டர் இடைவெளியும் குறைந்து கொண்டே இருந்தது.

“நீ என் பொண்டாட்டி இல்லையா?” அவளை வாகாக நெருக்கத்தில் வைத்து கொண்டு, அவன் அப்பாவியாக கேட்க, “அத்தான்…” அவள் முறைத்து பார்த்தாள்.

“சத்தியமா பயமா இல்லை. பிஸியாதெரபிஸ்ட் சொன்ன மாதிரி உன் காதல் பார்வையில் விழுதிருவேன்னானு எனக்கு பயமா இருக்கு” அவன் பயப்படுவது போல பாவனை செய்ய, “நீங்க தப்பா பேசுறீங்க” அவள் அவனை கண்டித்தாள்.

“நீ, எடுத்துகிட்ட கதாபாத்திரத்தை முழுசா நிறைவேற்ற வேண்டாமா?” அவன் புருவம் உயர்த்த, ‘உடம்பு சரியானதும், அத்தான் பேச்சே சரி இல்லையே?’ அவள் அவனிடமிருந்து விலகி நிற்க முடிவு செய்தாள்.

அவனிடமிருந்து விலகி நின்றாலும், அவன் கிய்யா… கிய்யா அழைப்புக்கு அவளால் விலகி நிற்க முடியவில்லை. அவ்வப்பொழுது அங்கு பறந்து சென்ற குருவிகளின் ‘கிய்யா… கிய்யா…’ சத்தம் அவளுள் பல உணர்வுகளை ஏற்படுத்தியது.  

அவனின் அழைப்பு அவள் இதயத்தை வருட, அவள் கண்கள் அவளறியாமல் அவனை காதலோடு பார்த்தது. அவள் கண்கள் வெளிப்படுத்திய காதல் மொழியை அவன் கண்கள் புரிந்து கொண்டது. பாவம், ஏற்கனவே காதலுள் சிக்குண்ட அவன் விழிகள், அவளிடம் அதை பிரதிபலிக்க முடியாமல் தடுமாறியது.

அவனிடம் பேச்சை குறைத்து கொண்டாள். வம்பு வளர்ப்பதை குறைத்து கொண்டாள். ஆனால், அவனுக்கு செய்யும் உதவியை அவளால் மறுக்க முடியவில்லை.

அவன் கால்களுக்கு அவள் பயிற்சி கொடுக்க, முதலில் அவன் வலியால் துடிக்க, அவள் மனமும் துடித்தது. இப்பொழுது அவன் வலி குறைந்துவிட்டது.

அவனுக்கும் முழு உணர்வு வந்துவிட, அவள் தீண்டலில் அவனிடமும் சலனம். அவள் செவிலியாய் மட்டுமில்லை என்பதை அவன் மனம் உணர்ந்திட, “இலக்கியா…” அவன் அவளை ஆழமான குரலில் அழைத்தான்.

அவன் குரலில் தெரிந்த அழைப்பில், அவள் நிமிரவில்லை. அவன் அலைபேசி, “கிய்யா… கிய்யா…” என்ற சத்தத்தை எழுப்ப, “அத்தான், இப்படி என்னை கூப்பிடாதீங்க.” அவள் குரல் எதையோ மறுக்க நினைத்து பேசியது.

“நீங்க கூப்பிட்டா கூட நான் பேசாமல் போயிடுறேன். ஆனால், இந்த சத்தம் என்னை ரொம்ப பாதிக்குது. இந்த சத்தம் வந்தால், முன்னாடி, எனக்கு குருவி நியாபகம் தான் வரும். இப்ப, இது என்னை என்னவோ செய்யுது. உங்க நியாபகம் வருது. நான்… நானா இல்லை அத்தான்.” அவன் கால்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டே கூறினாள்.

“கணவன் நினைப்பு வர்றது அவ்வளவு குற்றமா? நான் வேண்டாமுன்னு சொல்ல சொல்ல நீ தானே என்னை கல்யாணம் பண்ணின?” அவன் காட்டமாக கேட்டான்.

“அது வேற, இது வேற…” அவள் கூற, “நானும் அதை தான் சொல்றேன். அது வேற… இது வேற…” அவன் கூற, அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.

“நீ ஒரு நர்ஸா மட்டும் இருக்க முடியாதுன்னு சொல்றேன். அது வேற… இது வேற… நர்ஸ் வேற… மனைவி  வேற…” அவன் அவள் முகத்தை நிமிர்த்தி கூற, அவள் கண்கள் தான் காட்ட வேண்டிய பாவனையை மறந்து பரிதவித்தது.

அவன் அவள் கண்களை பார்த்தபடி,  “என்னை தவிர, வேற யாருக்கும் உன்னால் இதை செய்ய முடியுமா?” அவன் கேட்க, அவனை தீண்டி கொண்டிருந்த இடத்தையும், அவள் தொடுகையில் இருந்த உரிமையும் எண்ணி அவள்  முகம் சிவந்தது.

அவள் பதில் கூறாமல், தன் பணியை செய்ய, “கேள்விக்கு பதில்” அவள் கைகளை அவனோடு அழுத்தி அவன் அழுத்தமாக கேட்டான்.  

“அத்தான், வலிக்குது கையை விடுங்க.” அவள் உறுவிக்கொள்ள முயல, “எங்க வலிக்குது இலக்கியா. நான் பிடித்ததால் உன் கையா? இல்லை, பணிவிடைன்னு உன்னை நீயே ஏமாத்திக்கிட்டு நீ பிடித்து கொண்ட இந்த உறவால் உன் மனசா?” அவன் கேள்வி சாட்டையாக எழுந்தது. சற்று கோபமாகவும் கூட!

“அத்தான், நீங்க…” அவள் தடுமாற, “என்ன நான் தப்பா பேசுறேனா?” அவன் சிடுசிடுக்க, “எல்லாத்துக்கும் சீக்கிரம் முடிவு வந்திரும் அத்தான்” அவள் அங்கிருந்து விலகி ஓடினாள்.

‘எத்தனை நாளுக்கு இவள் இப்படி ஓடுவாள்?’ என்று அவன் பார்வை அவளை தொடர்ந்தது.

‘இலக்கியா என்ன செய்ய காத்திருக்கிறாள்’ என்று அவனால் கணிக்க முடியவில்லை. ஆனால், அவள் கண்களில் தெரியும் அன்பு, இலக்கியா தன்னை விட்டு பிரிய மாட்டாள் என்ற நம்பிக்கையை அவனுக்கு கொடுத்தது.

‘தான் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வியும் அவனை வண்டாக குடைந்தது.

சிறகுகள் விரியும்…