YALOVIYAM 16.2
YALOVIYAM 16.2
யாழோவியம்
அத்தியாயம் -16
‘இவ ஏன் இப்படிப் பண்றா?’ என்று நினைத்தபடியே, அவள் அருகில் வந்து, “சுடர்” என்று அழைத்ததற்கு, “ம்ம்” என்றாள்.
“தூங்கலையா? ஏன் இப்படி உட்கார்ந்துகிட்டு இருக்க?” என்று கேட்டதற்கு, அமைதியாக இருந்தாள்.
அவள் முகத்தை நிமிர்த்தி, “உன் அப்பா பேசினது நினைச்சி இப்படி இருக்கியா?” என்று கேட்டான்.
கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லமால், அவன் முகத்தையே பார்த்தாள். அழுதிருக்கிறான் என்று தெரிந்தது. இத்தனை நாட்கள் கழித்து அம்மாவிடம் மனதின் அழுத்தங்களைக் கொட்டியிருப்பான் என்றும் புரிந்தது.
நடப்பது எதுவும் சரியில்லை என்றாலும், அவன் மனதின் பாரங்களைப் பகிர்ந்திருக்கிறான் என்பது சுடருக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது.
அந்த நிம்மதியில், “அம்மா சொன்னாங்களா?” என்று சத்தம் வெளியே வராத குரலில் கேட்டாள்.
அவள் பேச ஆரம்பிக்கிறாள் என்ற நிறைவில், “ம்ம்ம்” என்று சொல்லி, சோஃபாவில் அவளருகே அமர்ந்தான்.
கொஞ்சம் யோசித்தாள். பின், “ராஜாண்ணா… எங்களைப் பத்தி… அம்மா… வேற ஏதாவது சொன்னாங்களா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
‘சொல்லவா? வேண்டாமா?’ என்று ராஜா யோசிக்கும் போதே, “ஸோ, ஏதோ சொல்லயிருக்காங்க” என்று கணித்தாள். பின், “ப்ளீஸ் சொல்லேன்” என்று கெஞ்சவும் செய்தாள்.
லதா பேசியதைச் சொன்னான். மேலும், “கொஞ்ச நாள் கழிச்சி, இதைப் பத்தி அம்மாகிட்ட பேசறேன். பொறுமையா இரு” என்று ஆறுதலாகச் சொன்னான்.
“சரி” என்றவள்… விழிநீர் தேங்க, “ஆனா… இப்படி… எல்லாரும் வேண்டாம்னு சொன்னா… நானும் என்னதான் பண்ண?” என்று விரக்தி புன்னகையுடன் முடித்தாள்.
வருந்துகிறாள் என்று தெரிந்தது. ஆனால் அதை விரட்ட வழி தெரியவில்லை. ஓரிரு நொடிகள் பேசாமல் இருந்தவன், ‘எல்லாரும்’ என்ற அவள் வார்த்தை பிரயோகத்தினால், “வேற யார் வேண்டாம்னு சொன்னா??” என்று கேட்டான்.
அவன் கேட்டவுடனே சொல்லவில்லை. சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பின் திலோ பேசியது அனைத்தையும் சொல்லி முடித்து, தன்னைத் தேற்ற ஏதாவது சொல்வான் என்று பார்த்திருந்தாள்.
ஆனால் அவனோ, “நான் அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன்-ல, வெளிய போறதா இருந்தா என்கிட்ட சொல்லுன்னு? ஏன் சொல்லலை” என கண்டனக் குரலில் கேட்டான்.
இதை எதிர்பார்க்கவில்லை என்பதால், “அது… அது… நான் வரலைன்னுதான் சொன்னேன் ராஜாண்ணா. அவங்க ப்ளீஸ் பண்ணி கேட்டாங்க…. அதான்” என்று காரணம் சொன்னாள்.
“என்கிட்ட சொல்லவாது செஞ்சிருக்கலாமே” என்று அதிருப்தி காட்டியதும், யாரிடமும் சொல்லாமல் போனதை சுடர் ஒருமாதிரிதான் உணர்ந்தாள்.
ராஜாவிற்கோ… அவர் பேசியது நியமாகவே இருந்தாலும், சுடர் அப்படி ஒரு சூழலில் நின்றது பிடிக்கவில்லை என்பதால், “இனிமே இப்படி ஏதும்னா… என் அண்ணன்கிட்ட பேசிக்கோங்கன்னு சொல்லிடு…” என்றான்.
‘சரியென்று’ என்று அவள் தலையசைத்ததும், “இது டிசிக்கு தெரியுமா?” என்று கேட்டான்.
“அவங்க அம்மா சொல்லியிருக்கலாம்” என்றதும், “போ… டிசிக்கு ஃபோன் பண்ணி சொல்லு” என்று கொஞ்சம் கட்டளை தொனியில் சொன்னான்.
உடனே எதுவும் சொல்லவில்லை. பின், “அதான் முடியலை ராஜாண்ணா” என இதயத்தின் இயலாமையுடன் சொன்னவள், “அவன்கூட பேசியே… ரொம்ப நாளாச்சு ” என்ற போது, குரலில் மெல்லிய சோகம் இருந்தது.
“ஏன்?” என்று அதிர்ச்சியாகக் கேட்டான்.
சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின், “அவங்க அப்பா-க்கு இப்படி ஆனதுக்கப்புறம் பேசலை… அவன்கிட்ட முன்ன மாதிரி பேச முடியுமா-ன்னும் தெரியலை” என்று ஒரு அசௌகரியமான குரலில் சொன்னாள்.
“ஏன் இப்படி இருக்க? நீ ஃபோன் பண்ணி அவனுக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா? நீ பண்றது தப்பு” என கொஞ்சம் கடுமையாகவே சொன்னான்.
கொஞ்ச நேரம் கண்களை மூடித் தவித்தவள், “எப்படிச் சொல்ல? அவங்க அப்பா இல்லாததுக்கு காரணம்… என் அப்பா. அப்படி இருக்கிறப்ப எப்படிச் சொல்ல முடியும்? என்று கேட்டாள்.
அப்படிக் கேட்டபிறகு, அவள் உள்ளமெங்கும் அடர்த்தியான ஒரு அழுத்தம் சூழ்ந்து கொண்டது. ராஜா எதுவும் பேசவில்லை. அமைதியாக அவள் விழிகளில் தெரியும் வலிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
விழியின் ஓரத்தில் ஒருதுளி கண்ணீர் நின்றபடியே இருக்க, “உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்… ஆனா நீங்க இப்படி நிக்கிறதுக்கு காரணம்… எங்கப்பான்னு நினைக்கிறப்போ… உங்க ரெண்டு பேரையும் பேஸ் பண்ணவே கஷ்டமாயிருக்கு இருக்கு…
ஏதோ தப்பு பண்ண பீல்… கொஞ்சம் குற்றவுணர்வு கூட… எனக்கு இதுலருந்து வெளிய வரமுடியுமான்னு தெரியலை… லைஃப் புல்லா இது இருக்கும் போல…” என மனதில் அழுத்தங்களைச் சொன்னாள்.
“ஏன் சுடர், இப்படியெல்லாம் நினைக்கிற? உன் அப்பா பண்ணதுக்கு, நீ என்ன பண்ணுவ சொல்லு?” என்று கேட்டான்.
கொஞ்ச நேரம் நெற்றியைப் பிடித்துக் கொண்டு இருந்தாள். பின், “தெரியலை ராஜாண்ணா… எனக்கு இப்படித்தான் நினைக்கத் தோணுது” என்றாள்.
என்ன சொல்லி அவளை வழிக்கு கொண்டு வர என யோசித்தவன், “சுடர், ஒருவேளை உன் அப்பா பண்ற தப்பு முன்னாடியே தெரிஞ்சி, நீ எங்க ரெண்டு பேர்கிட்டயும் சொல்லாம இருந்தா… நீ பீல் பண்றதுல ஒரு அர்த்தம் இருக்கு.
உனக்கே இப்பதான் தெரியும்-ங்கிறப்ப… நீ என்ன பண்ண முடியும்? தேவை இல்லாம உன் அப்பா பண்ண தப்பை, நீயேன் உன் மேல தூக்கிப் போட்டுக்கிற?” என்றான்.
அவன் சொல்வதை முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் சில சதவீதங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமென தோன்றியது.
குறைந்து போன குரலில், “ஊழல் செஞ்சவரோட பொண்ணுங்கிற அடையாளம் இருக்கும்-ல ராஜாண்ணா… அது வேற கஷ்டமா இருக்கு” என்று, மனதின் மற்றொரு அழுத்தத்தைச் சொன்னாள்.
“எனக்கும் அதே அடையாளம்தான் இருக்கு. நம்மதான் மாத்தணும். இப்படியே உட்கார்ந்துகிட்டு இருந்தா எதையும் மாத்த முடியாது” என நம்பிக்கையாகச் சொன்னதும், யோசித்துப் பார்த்தாள்.
யோசிப்பின் முடிவில் அவன் சொல்வதை நூறு சதவீதம் ஒத்துக் கொள்ள வேண்டுமென தோன்றியது.
கொஞ்சமாவது அவளை இந்த எண்ணங்களில் இருந்து வெளியே கொண்டு வர நினைத்தவன், “அம்மாகிட்ட நான் பேசாததுக்கு காரணம் தெரிஞ்சதா?” என்று அவள் யோசனைகளை வேறு பாதைக்கு அழைத்துச் சென்றான்.
“ம்ம்ம் புரிஞ்சது… ஆனா… என்கிட்ட மட்டும் ஏன் பேசின?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“பேசலைன்னா, ‘இவன் என்ன செய்றான்னு?’ உனக்கு டவுட் வரும். கண்டுபிடிக்க பார்ப்ப…. அப்புறம் இந்தப் பிரச்சனைக்குள்ள நீயும் வருவ… அது எதுக்குன்னு யோசிச்சிதான்… இப்படி!”
“ஓ! அதான் அன்னைக்கு ரூம்-ல நான் எடிட் பண்ண நியூஸ் பார்த்தியா?” என கேட்கையில் அவள் குரல் கொஞ்சம் சரியாக ஆரம்பித்தது.
“ம்ம், பார்த்தேன். தடுக்க நினைச்சேன். பட் தடுத்தாலும், உனக்கு டவுட் வரும்-ன்னுதான் விட்டுட்டேன்” என்றவன், “வேற ஏதாவது கேள்வி இருக்கா?” என்று கேட்டான்.
“நீயேன் அந்த எவிடென்ஸ் வச்சிருந்த?-ன்னு கேள்வி… அப்போ இருந்தது… இப்போ இல்லை” என்றவள் குரல் கொஞ்சம் சாதரணமாக இருந்தது.
“ஆக்சுவலா அன்னைக்கு உன்மேல அவ்வளவு கோபம்”
“ஏன் ராஜாண்ணா? உனக்குத் தெரியாம எடுத்திட்டுப் போயிட்டேன்-னா?”
“இல்லை. அது இந்த வருஷம் முறைகேடு நடந்ததுக்கான எவிடென்ஸ். பெய்டு பிராக்சி போட்டோ இருந்த அட்மிட் கார்டு… எந்த ஸ்டுடென்ட்ஸ்-க்காக அவங்க பெய்டு பிராக்சியா இருந்தாங்க-ங்கிற டீடெயில்ஸ்.
நீ அதைக் கண்டிப்பா நியூஸா மாத்துவன்னு தெரியும். அது இந்த இயர்-னால, ராகினி மூலமா உனக்குப் பிரச்சனை வரும்-ல?
ஏன்னா நீ என்ன செஞ்சாலும், கேள்வி கேட்டாலும் உன் அப்பா உன்னை எதுவும் செய்ய மாட்டாருன்னு தெரியும். பட் ராகினி அப்படி கிடையாதே. அதான் கோபம்”
அவன் சொல்வது சரியென்றே தோன்றியது. தான் இந்த முறைகேடு பற்றி எழுதுவதாகச் சொன்ன பின்பும், ‘கவனமா இரு’ என்று சொன்னாரே தவிர… வேறு எதுவும் சொல்லவில்லை.
அதுவே இந்த ஆதாரங்கள் கொண்ட காணொளி பதிவேற்றலுக்குப் பின் நடந்த தாக்குதலைப் பற்றி யோசித்தாள். அது ராகினியின் ஏற்பாடாக இருக்கும் என்று புரிந்தது.
கூடவே அம்மா நலனிற்காக யோசித்து நடந்து கொண்டது… தனக்காகப் பார்ப்பது… முறைகேட்டை வெளிக்கொணர செயல்பட்டது… என, ராஜா செயல்களை நினைத்தவளுக்குப் பெருமையாக இருந்தது.
ஆனால் அதேநேரத்தில் இதனால் அவனுக்கு என்ன ஆதாயம் கிடைத்தது? ஒன்றுமேயில்லை. ஆதாயம்கூட வேண்டாம். இந்த இழப்பவாது இல்லாமல் இருந்திருக்கலாமே? என்று தோன்றியது.
எவ்வளவு பெரிய இழப்பு அவனுக்கு!
அடுத்த நொடியே அதற்கு காரணமாவர் தன் அப்பாதானே என்ற உண்மை உள்ளத்தை உறுத்தியது. மீண்டும் குற்றஉணர்ச்சிக்குள் சிக்கிக் கொண்டாள்.
அதற்கடுத்த நொடி சட்டென எழுந்தாள். “மாறா-கிட்ட பேசறேன்னு மெசேஜ் பண்ணியிருந்தேன்…. அதான் போறேன்…” என்று சொல்லி முடிக்கும் போது கண்கள் கலங்கியிருந்தது.
அவனும் அவசரமாக எழுந்து, “சரியாயிட்ட-ன்னு நினைச்சேன். திரும்பவும் இப்படி இருக்க?” என்று கவலையுடன் கேட்டான்.
“உடனே சரியாக முடியுமான்னு எனக்குத் தெரியலை. கொஞ்ச நாளாகலாம்… நிறைய நாள்கூட ஆகலாம்… எனக்குத் தெரியலை” என்றாள்.
சிறிது இடைவெளி விட்டு, “அவன் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பான். நான் போறேன்” என்று போகப் போனவள், ஒரு நிமிடம் யோசித்து நின்றாள். பின் திரும்பி ராஜாவைப் பார்த்தாள்.
‘என்ன?’ என்பது போல் அவளைப் பார்த்தபடி நின்றான்.
“யாரும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா யாருக்கும் இது தெரியப் போறதில்லை. பட் நான் சொல்லுவேன். ஏன்னா எனக்குத் தெரியும்” என்று கரகரத்த குரலில் சொன்னாள்.
கொஞ்சம் கூட அவள் பேச்சு புரியாமல், ‘என்ன சொல்லப் போகிறாள்?’ என்று கேள்வியுடன் நின்றான்.
ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், “விசில் ப்ளோவர் ஆஃப் திஸ் ஸ்கேம் ராஜாதான்… நீதான்… என் அண்ணன்தான்…” என்று சொல்லி முடிக்கும் போது, பெருமை எந்தளவுக்கு இருந்ததோ அதே அளவிற்கு கண்ணீரும் இருந்தது.
தங்கையின் பேச்சில் உணர்ச்சிகளில் பிடியில் நின்று கொண்டிருந்தவனால் எதுவுமே பேச முடியவில்லை. அக்கணம், “மாடிக்குப் போறேன் ராஜாண்ணா” என்று சொல்லிவிட்டு, கடகடவென ஓடிவிட்டாள்.
அப்படியே அமர்ந்துவிட்டான்.
சுடரின் கண்ணீர்… மாறனின் நிலைமை… தனது இழப்பு… இப்படித் தங்களின் தவிப்புகளை நினைத்து… அப்படியே அசையாமல் இருந்தான். கவி நினைவில் கண்கள் கலங்க ஆரம்பித்தன. வழக்கம் போல் தனியாக அமர்ந்து தவிக்கத் தொடங்கினான்.
அவன் தவிக்கின்றான் என தெரிந்ததோ? என்னமோ? – ஓரிரு வினாடிகளிலே லதா அங்கே வந்து, “ராஜா தூங்கலையா? இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என கேட்டு நின்றார்.
நேராக அமர்ந்தவன், “தூங்கணும்-மா. சுடர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்” என்றதும், அவனருகில் அமர்ந்து கொண்டார்.
“நீங்க போய் தூங்குங்க” என்று சொன்னதற்கு, லதா எதுவும் சொல்லவில்லை. அதே நேரத்தில் எழுந்தும் செல்லவில்லை.
சிலபல நொடிகள் இருவருக்கும் இடையே அமைதி நிலவியது. அதன்பின் வந்த நொடிகளில் ஏதேதோ நினைத்து ராஜாவின் மனம் அரற்றிக் கொண்டு வந்தது.
அதன்பின் வந்த ஏதோ ஒரு நொடியில், “ம்மா!” என்றழைத்து, மீண்டும் அவர் மடியில் தலைசாய்த்து ஆறுதல் தேடினான். மேலும் அவரது கரத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.
மெல்ல அவனை… அவன் மனப்பாரத்தை தாங்கிக் கொண்டார். பின், “தூங்கு” என்று பரிவுடன் சொல்லி, தோளில் தட்டிக் கொடுத்தார். அப்படியே அவரும் சோஃபாவில் சாய்ந்து கண்மூடிக் கொண்டார்.
சிலபல நொடிகள் கடந்த பின்னர் வந்த ஏதோ ஒரு நொடியில் இருவரும் உறங்கியிருந்தனர்.
லதா, இதுவரை வாழ்ந்த வாழ்வு பொய்யாகப் போன வருத்தத்தில் இருக்கிறார். ராஜா, வாழவேண்டிய வாழ்வை இழந்த வருத்தத்தில் இருக்கிறான்.
ராஜா இழந்ததை திருப்பித் தர யாராலும் முடியாது! ஆனால் இழப்பின் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க லதாவின் பாசம் ஒன்றே போதுமானது!!
இனிமேல் தனது பாசத்திற்காக லதாவை, ராஜா ஏங்க வைக்க மாட்டான். மேலும்… கணவரின் செயல்களினால், பேச்சினால் அவர் அடைந்த மன வருத்தங்களை போக்கும் சக்தி ராஜாவின் பாசத்திற்கு உண்டு.
இருவருக்கும் இடையே இருப்பது விசித்திர பந்தம். அந்தப் பந்தமும், அவர்களின் பாசப் பிணைப்பும் ஒருவரின் காயத்தை மற்றொருவர் ஆற்றும் மருந்தாகும்!
காலப்போக்கில் காயம் ஆறும்! ஆம், காலப்போக்கில்தான்!!
இதே நேரத்தில் மாடி அறையில்
மாறனிடம் பேச என்று மாடிக்கு வந்தவள், கதவைத் தாளிட்டு அதில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.
திலோ பேச்சிலிருந்த நியாயம், லதா பேச்சில் இருந்த கவலை… என எல்லாம் சரிதான் என்று தோன்றியது. கூடவே லிங்கத்தின் பேச்சினால் வந்த பயம், அவள் மனதை சரியில்லாமல் ஆக்கியது.
கடைசியில் இந்தக் காதல் சரி வராதோ? என்ற கேள்விக்கு… பெரிய கேள்விக்குறிதான் பதிலாக கிடைத்ததில், ‘என்ன செய்ய?’ என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள், யாழோவியத்தின் மறுபாதியான ஓவியச்சுடர்!!