kiyya-27

kiyya-27
கிய்யா – 27
துர்காவின் வீடு கோலாகலம் பூண்டிருந்தது.அவளை அன்று பெண் பார்க்க வருவதாக ஏற்பாடு. தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். வீட்டை விட்டு கிளம்பி விட வேண்டும் அவள் அறிவு அப்படி தான் கூறியது.
ஆனால் மனம்? ‘நான் வெளிய போய்ட்டா. பொண்ணு ஓடி போய்ட்டான்னு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எவ்வளவு அவமானம்?’ நிதானமாக சிந்தித்தபடி ஓரிடத்தில் அமர்ந்தாள்.
கலைச்செல்வி முகத்தில் அத்தனை பதட்டம். “நீ டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒன்னுமாகாது. துர்கா எந்த பிரச்சனையும் பண்ண மாட்டா. நான் இப்ப பார்த்திருக்கிற மாப்பிள்ளை ரொம்ப நல்ல குணம்.” அவர் கூற, கலைச்செல்வி முழு மனதில்லாமல் தலை அசைத்து கொண்டார்.
துர்கா செம்மஞ்சள் நிறத்தில் மெல்லிய பட்டு உடுத்திருந்தாள். மெலிதாக சில நகை அணிந்திருந்தாள்.
“மாப்பிள்ளை பெயர் ராஜேஷ். மாப்பிள்ளைக்கு அம்மா இல்லை. அப்பா மட்டுந்தான். தங்கமான குணம். பெரிய கம்பனி வச்சிருக்கார்.” குமரன் பேசிக்கொண்டே போக, ‘யாருக்கோ வந்த விதி’ என்பது போல் அமர்ந்திருந்தாள் துர்கா.
அவள் கண்முன் விஜயபூபதி வந்து பெண் பார்த்து சென்ற தினம் நினைவு வந்தது.
‘வாழ்க்கையில் சிலவற்றை மறக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதை கடக்க கற்றுக் கொள்ள வேண்டும்.’ தனக்கு தானே அறிவுறுத்தி கொண்டாள் துர்கா.
குமரன் அதிகமாக பேசவில்லை. மாப்பிள்ளை வீட்டினரும் வந்துவிட்டனர்.
துர்கா, பெயருக்காக அவர்கள் முன் வந்து நின்றாள். ராஜேஷ் அனைவரோடும் கலகலவென்று பேசி கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில், “நான் துர்கா கிட்ட தனியா பேசலாமா?” பட்டென்று கேட்டான் ராஜேஷ்.
“ஹா…ஹா…” கலகலவென்று சிரித்தார் ராஜேஷின் தந்தை.
“மை பாய்! பொறுமை. என் மருமகளை பார்த்தா ரொம்ப அமைதி மாதிரி தெரியுது. உன் வேகத்தை எல்லாம் தாங்குற மாதிரி எனக்கு தெரியலை.” ஏதோ பெரிய ஹாஸ்யம் கூறி விட்டது போல் பெரிதாக சிரித்தார்.
‘நான் அவங்க வீட்டு மருமகன்னு என்னை கேட்காமலே முடிவு பண்ணுவாங்களா?’ துர்கா தன் அறைக்குள் பற்களை நறநறத்தாள்.
“தாராளமா பேசுங்களேன்.” குமரன் கூற, அவர்கள் பேசுவதற்காக தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.
துர்கா எங்கோ பார்த்து கொண்டிருக்க, “ஹை… என் பெயர் ராஜேஷ்” என்று அவன் கூற, ‘இவனை பேசியே எப்படி வெளியே அனுப்புவது?’ என்று தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தாள் துர்கா.
“பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ பெயரை சொல்லி அறிமுக படுத்திக்கிறதில் என்ன தப்பு இருக்கு?” அவன் அடுத்த கேள்வியை தொடுக்க,”உங்க பெயர் ராஜேஷ்ன்னு எனக்கு தெரியும். என் பெயர் துர்கான்னு உங்களுக்கு தெரியும். அப்புறம் எதுக்கு இந்த தேவை இல்லாத பேச்சு.” அவள் பட்டென்று கூற அவன் சிரித்து கொண்டான்.
அவள் பேசட்டும் என்று அவன் மௌனம் காக்க, “நான் நேரடியா விஷயத்திற்கு வரேன். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை.” அவள் பட்டென்று கூறினாள்.
“இதை நான் வரதுக்கு முன்னாடியே சொல்லிருக்கலாமே? பெட்ரோல் டீசல் விக்குற விலைக்கு, எனக்கு உங்க வீட்டுக்கு வர கார் பெட்ரோல் செலவு மிச்சமாகிருக்கும். உங்க வீட்டில் பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்டு என் உடம்பில் ஏறிய கொலஸ்ட்ராலை நான் தவிர்த்திருப்பேன்” அவன் தீவிரமாக கூறினான்.
“உங்களை பார்த்தா பெட்ரோல் போட வழி இல்லாதவர் மாதிரியும், கொலஸ்ட்ரால் ஏறின உடம்பு உள்ளவர் மாதிரியும் தெரியலை.” துர்கா சற்று கடுப்பாகவே கூறினாள்.
“வாவ்! பார்க்க ஹேண்ட்ஸம்மா, நல்ல வசதியான வீட்டு பையன் மாதிரி இருக்கேனா?” அவன் கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான்.
“எனக்கு உங்களை பிடிக்கலை.” அவள் பட்டென்று கூற, “காரணம்?” அவன் அவளை பார்த்து கூர்மையாக கேட்டான்.
அவளிடம் மௌனம். “எங்க வீட்டு கண்ணாடி பொய் சொல்லாதுங்க. பார்த்ததும் பிடிக்காமல் போகிற அளவுக்கு நான் மோசமா இல்லை. இப்ப நீங்களும் சொன்னீங்களே” அவன் விடாக் கொண்டனாய் நின்றான்.
“பிடிக்கறதுக்கு காரணம் இருக்கலாம். பிடிக்காமல் போறதுக்கு காரணம் இருக்கணும்னு அவசியமில்லை.” அவள் கூற, “ரொம்ப படம் பார்ப்பீங்களோ? சினிமா டைலாக் மாதிரி இருக்கு.” அவன் அவளிடம் உதட்டை பிதுக்கினான்.
அவள் என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினாள். எப்படி சொல்வது என்று அறியாமல் தவித்தாள்.
அவன் மௌனமாக நின்றான். அவளிடமும் மௌனம். பல போராட்டம்.
“நான் வேற ஒருத்தரை விரும்பினேன்.” கூறிவிட்டாள் துர்கா.
“ம்…. விரும்பினீங்களா? இல்லை விரும்பறீங்களா?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.
“இது ரொம்ப முக்கியமா?” அவள் சிடுசிடுக்க, “ஆமாங்க, ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. இப்ப விரும்பறீங்க அப்படினா, நான் நடையை கட்டிக்கிட்டு போய்கிட்டே இருக்கணும். முன்னாடி விரும்பீனீங்கன்னா அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. நாம டைம் மெஷின்ல போய் முன்னாடி வாழ போறதில்லை. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு எதிர்காலத்தில் தான் வாழ போறோம். கடந்த காலத்தை பத்தி என்ன கவலை?” அவன் அசட்டையாக தோள்களை குலுக்கினான்.
“ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுக்க என்னை குத்தி காட்டவா?” அவள் அவனை நோகடிக்கவென்றே பேசினாள்.
“இது என்ன அநியாயமா இருக்கு? எல்லா ஆண்களையும் ரகுவரன், பிரகாஷ்ராஜ், மன்சூர் அலிகான், பாபி சிம்ஹா மாதிரி வில்லனாவே பார்க்க கூடாது. விஜய், அஜித், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் மாதிரி நான் ஹீரோங்க” அவன் பேசிக்கொண்டே செல்ல, “நீங்க தான் ரொம்ப படம் பார்ப்பீங்க போல.” அவள் அவன் பேச்சை அங்கு நிறுத்தினாள்.
‘விட்டா ஊரு உலகத்தில் உள்ள எல்லா ஹீரோவும் நான் தான்னு சொல்லுவாங்க போல.’ அவள் உள்ளம் முரண்டு பிடித்தது.
“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க ஃபோட்டோ பார்த்ததுமே கொஞ்சம் பிடிச்சது” அவன் வெளிப்படையாக பேசினான்.
“நான் வேற ஒருத்தரை விரும்பினேன்னு சொல்றேன். வெட்கமே இல்லாம, இப்படி சாதாரணமா பேசறீங்க?” அவள் எகிற, “கல்யாணமான ஒருத்தரை விரும்பினேன்னு வெட்கமே இல்லாம நீங்க சொல்லும் பொழுது, நான் சொல்றதில் என்ன தப்பு இருக்கு?” அவன் புரியாதவன் போல் கேட்டான்.
அவன் குறிப்பிட்ட விஷயத்தில், அவள் அவனை அதிர்ச்சியாக பார்க்க, “எனக்கு எல்லாம் தெரியும். உங்க அப்பா எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாங்க.” அவன் நிதானமாக கூறினான்.
“ஓ! காலம் ரொம்ப முன்னேறிடுச்சுனு சொல்லுங்க. ஒரு பெண் காதலித்திருந்தால் கூட, அதெல்லாம் பரவாயில்லைனு ஏத்துக்குற அளவுக்கு ஆண்கள் மனம் விசாலமா இருக்கு?” அவள் புருவம் உயர்த்த, “இதுல தியாகம்ன்னு சொல்ற அளவுக்கோ விசாலம்முனு சொல்ற அளவுக்கோ எதுவுமே இல்லைனு நான் சொல்லுவேன்.” அவன் நிறுத்த அவளிடம் மெல்லிய சிந்தனை.
“விஜயபூபதிக்கு பெரிய ஆக்சிடென்ட். அந்த வலி முன்னாடி அவருக்கு காதல் பெருசா தெரியலை. அவருக்கு நிறைய இழப்பு. நீங்க ஏமாற்றப்படலை. அவருக்கு கல்யாணமே ஆகிருச்சு. இன்னும் நீங்க அதில் தொங்கிட்டு இருக்கிறது உங்களுக்கு சரின்னு தோணுதா?” அவன் நேரடியாக கேட்டான்.
“என் மேல உங்களுக்கு அப்படி என்ன அக்கறை?” அவள் அவன் பேச்சின் உண்மையை ஏற்றுக்கொள்ள இயலாமல் கேட்டாள்.
“உண்மையை சொல்லணுமுனா, எனக்கு உங்களை பார்த்ததும் பிடித்தது. அதை விட, உங்களை பத்தி கேட்டதும் ரொம்ப பிடிச்சி போச்சு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொண்ணுங்க காதலனை கழட்டிவிடத் தான் நினைப்பாங்க.” அவன் கூற,
“ஹலோ, எங்களை எல்லாம் பார்த்தா சீரியல் வில்லி மாதிரி இருக்கா? நாங்களும் நயந்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் மாதிரி ஹீரோயின் தான்” அவள் பட்டென்று கூறினாள்.
அவள் பேச்சை ரசித்து, அவன் கலகலவென்று சிரித்தான்.
“நானும் இதை தான் சொல்றேன். இந்த உலகம் நல்லவர்களால் நிறஞ்சதுன்னு” கூறிவிட்டு அவளை ஆழமாக பார்த்தான்.
“அவர் தான் உங்களை விலக்கி வச்சிருக்கார். நான் அவரை தப்பா சொல்லலை. அவரும் உங்க நல்லதுக்காகத்தான் பண்ணிருக்கணும். இருந்தாலும், உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” அவன் கூற, அவள் முகத்தில் சிந்தனை ரேகைகள்.
“நான் அப்பாவோட வளர்ப்பு. விளையாட்டு, பிசினெஸ் இது மட்டும் தான் நான். எனக்கு காதலில் நம்பிக்கை கிடையாது. சிலரை பார்க்குறோம். பிடிச்சிருக்கு கூட ட்ராவல் பண்ணனும்னு நினைக்குறோம். நடக்கலாம். நடக்காமல் போகலாம். அதனால் நம்ம பயணம் நின்னு போய்டுமா என்ன?”அவன் சிரிக்க, அவளுக்கு அவன் பேச்சு பிடித்திருந்தது.
“உங்க மேல எனக்கு காதல்ன்னு எல்லாம் சொல்லமாட்டேன். ஆனால், என்னை மாதிரி ஒரு வெளிப்படையான ஆளோட பயணம், உங்களை மாதிரி ஒரு நேர்மையான ஆள் கூட இருந்தா நல்லாருக்கும்னு நினைக்குறேன்” அவன் தன் பேச்சை நிறுத்தி கொண்டான்.
சில தூரம் சென்று அவளை திரும்பி பார்த்தான். அவளிடம் பதில் இல்லை என்று அவனுக்கு தெரியும். ஆனால், அவள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டாள் என்று அவன் மனம் கணித்து கொண்டது.
“நானும் எல்லார் கிட்டையும் இப்படி உரிமையா பேசுற ஆள் கிடையாது. உங்க கிட்ட பேசணும்னு தோணுச்சு. பேசிட்டேன்” கூறிவிட்டு மடமடவென்று சென்றான் ராஜேஷ்.
அதன் பின் அவர்கள் என்ன பேசினார்கள் என்று துர்காவுக்கு தெரியவில்லை. அவள் அவர்களை கவனிக்கவுமில்லை.
‘திருமணம் தான் வாழ்க்கையா என்று ஓட ஆரம்பித்தேன். ஆனால்…’ அவளுக்கு மேலே என்னவென்று தெரியவில்லை.
‘நாட்கள் செல்லட்டும்…’ என்று தற்காலிகமாக முடிவு எடுத்து கொண்டாள் துர்கா.
அன்று மாலை!
பூங்காவில் இலக்கியா துர்காவின் வருகைக்காக காத்திருந்தாள்.
இலக்கியாவின் சில நிமிட காத்திருப்புக்கு பின் துர்கா அங்கு வந்தாள். இருவருக்கும் இடையே முகமன் புன்னகை. இலக்கியா புல் தரையில் அமர, அவள் அருகே துர்கா அமர்ந்து கொண்டாள்.
“என்னை வர சொன்னீங்க?” என்ன காரணம் என்று அறிந்து கொள்ள கேட்டாள் துர்கா.
“பழைய விஷயம் பேச எனக்கு விருப்பமில்லை. இனி என்ன நடக்கபோகுதுன்னு பேச உங்களை கூப்பிட்டேன்.” இலக்கியா கூற, “…” துர்காவிடம் மௌனம்.
“நான் விலகி போயிடுறேன். நீங்க அத்தானை கல்யாணம் பண்ணிக்கோங்க.” இலக்கியா கூற, “யாரை?” என்று கேட்டாள் துர்கா.
“அத்தானை…” இலக்கியா உறுதியாக கூற, “யாரை?” என்று மீண்டும் கேட்டாள் துர்கா.
“அத்தானை…” என்று இலக்கியா இன்னும் உறுதியாக கூற, துர்கா சிரித்து கொண்டாள்.
“இது தான் உண்மை. பூபதி உனக்கு அத்தான் மட்டும் தான். அதை யாரும் மாற்ற முடியாது. என் நல்லதுக்காக என்னை விட்டு விலகி போன பூபதி. விலகிப் போன பூபதி தான்.” துர்கா உறுதியாக கூறினாள்.
“பழைய பாக்யராஜ் படம் வசனமா இருந்தாலும், இது தான் நிஜம். என் காதலன் உன் கணவனாக முடியும். உன் கணவன், என் காதலனாக மாறவே முடியாது.” துர்கா கூற, “இல்லை… அத்தான் ஒரு நாளும் என் கணவனாக முடியாது.” இலக்கியா பிடிவாதமாக கூறினாள்.
“பூபதி, உனக்கு கணவனாகி பல நாள் ஆகுது. நீ தான் இன்னும் பூபதியின் மனைவியாகலை” துர்கா கூற, இலக்கியா ஸ்தம்பித்து நின்றாள்.
“என்னை வைத்து என் அப்பாவும், பூபதியும் என்னன்னவோ பேசிக்கிட்டாங்க. எனக்கு முதலில் எதுவும் தெரியாது. ஆனால், அப்புறம் எனக்கு எல்லாம் தெரியும். நான் பூபதியை காதலித்தது நிஜம். ஆனால், எங்க அம்மா, அப்பாவை மீறி ஒரு நாளும் அவனை கல்யாணம் செய்துக்க நினைச்சதே இல்லை. அது என் வீட்டுக்கு அவப்பெயர்.” துர்கா ஆழ மூச்செடுத்துக் கொண்டாள்.
“நான் என் காதல் விஷயத்தை முதலில் வீட்டில் சொல்றதை கூட, அத்தனை பக்குவமா தான் சொன்னேன். எங்க காதல் இனக்கவர்ச்சி இல்லை. பொய்யும் இல்லை. உண்மை தான். பக்குவப்பட்ட வயதில் வந்த ஒரு காதல். இந்த பிரிவில் வலி இல்லைனு நான் சொல்ல மாட்டேன். வலி தான். ஆனால், அன்னைக்கு அளவுக்கு இன்னைக்கு வலி இல்லை.” துர்காவின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.
“நான் வேற ஒரு கல்யாண வாழ்வில் என்னை இணைத்து கொள்வேனானு எனக்கு தெரியலை. ஆனால், நிச்சயம் காலம் என்னை மாத்தும்முனு நான் நம்புறேன்.” துர்கா நிதானமாக பேசினாள்.
“…” இலக்கியாவிடம் மௌனம்.
“பூபதி உன்னை கல்யாணம் பண்ணதும் எனக்கு முதலில் பயங்கர கோபம் தான். உன்னை எப்படி கல்யாணம் பண்ணிகிட்டான்னு நிதானமா யோசிச்சேன்…” அவள் நிறுத்த, “சூழ்நிலை…” இலக்கியா பதட்டமாக முந்திக் கொண்டாள்.
“பூபதியை, அது தான் உன் அத்தானை நான் தப்பா நினைக்க மாட்டேன். பூபதிக்கு… அது தான் உன் அத்தானுக்கு என்னை நல்லா தெரியும். என் வீட்டை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்னு. காதலா? குடும்பமான்னு என்கிட்டே கேட்டால், நான் காதலுக்காக என் குடும்பத்தை தூக்கி எறியும் விடலை பெண் இல்லைன்னு உன் அத்தானுக்கு என் பூபதிக்கு என்னை நல்லா தெரியும்.” கூறிவிட்டு, “சாரி…” துர்கா தடுமாறினாள்.
“என் பூபதின்னு நான் சொன்னது… என்னை பத்தின முடிவு எடுக்கும் பொழுது உன் அத்தான் என் பூபதி தானே? அது தான்.” துர்கா தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
“பூபதியின் முடிவு வலிச்சாலும், அதில் நியாயம் இருக்கு.” துர்கா கூற, ‘இவள் அத்தானை எத்தனை புரிந்து வைத்திருக்கிறாள்?’ என்று ஒரு நொடி அவள் மீது, இலக்கியாவிற்கு மெல்லிய பொறாமை எட்டி பார்த்தது.
“எனக்கு ஏற்பட்ட வலி, பூபதிக்கும் உண்டு. ஆரம்பத்தில், அவன் கண்களில் நான் அந்த வலியை பார்த்தேன். ஆனால், அவனுக்கு பல வலிகள். அத்தோடு, இதையும் சேர்த்தே கடந்துட்டான். நான் தனிமரமா நிக்குறதால், உங்க எல்லாருக்கும் என் வலி பெருசா தெரியுது.” துர்கா கூற, “…” இலக்கியாவிடம் மௌனம்.
“துர்கா…” இலக்கியா ஆரம்பிக்க, “பழசை பேச வேண்டாமுன்னு முதலில் சொன்னது நீ தான் இலக்கியா. அப்படி பார்த்தா நீ பேசிட்டு இருக்கிற பூபதி துர்காவின் காதல் தான் பழைய விஷயம். பூபதி, இலக்கியாவின் அன்பு கணவராய் மாறி பல மாசமாகுது.” துர்கா புல்தரையிலிருந்து எழுந்து கொண்டாள்.
அவள் உடையில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டாள்.
“வேண்டாத விஷயங்களை, இப்படி தட்டிவிட்டு போய்கிட்டே இருக்கணும்.” துர்கா கூற, இலக்கியாவிடம் சிந்தனை.
‘நீ என்னை தட்டிவிட்டு செல்.’ என்று துர்காவின் கட்டளை அவள் செயலில் பொதிந்து இருக்கிறது போல் உணர்ந்தாள் இலக்கியா.
“நான் கிளம்புறேன் இலக்கியா. இனி இதை பத்தி பேச எதுவுமில்லை.” துர்கா விடுவிடுவென்று நடந்து சென்றாள்.
‘இதை எப்படி சரி செய்வது?’ என்று சிந்தித்துவிட்டு, பின்பக்கம் திரும்பிய இலக்கியா அதிர்ந்து போனாள்.
சிறகுகள் விரியும்…