kiyya – 9

coverpage-1587ca0f

kiyya – 9

கிய்யா – 9

 துர்கா கோபமாக அவள் வீட்டுக்குக் கிளம்பினாள்.

விஜயபூபதியின் உதவிக்காக அமர்த்தப்பட்ட  ஆண் செவிலியர் வந்ததும்,  அறைக்குள் சென்று தேவையான பணிவிடைகளை செய்து முடித்து வெளியே கிளம்பினான்.

விஜயபூபதிக்கு தன் நிலையை நினைத்து வருத்தம் மேலே எழும்பினாலும், இது தான் சில நாட்களுக்கு தன் நிலை என்று தன்னை சமன் செய்ய போராடினான்.

ஆண் செவிலியர் சென்றதும், அனைவரும் விஜயபூபதி முன் குழுமி இருந்தனர்.

“என்ன பொண்ணு இவ? இப்படி தான் பிடிவாதம் பண்ணுவாளா? உடம்பு சரி இல்லாதவன், கொஞ்சம் நாள் விட்டு பிடிக்கக் கூடாதா? இப்படியே இன்னைக்கே இவ்வளவு பிடிவாதம் பண்ணனுமா?” என்று பாட்டி முகத்தைச் சுளித்தார்.

“பாட்டி” இலக்கியா பழனியம்மாளை மிரட்டினாள்.

“உங்க பேரன் மேலையும் தப்பு இருக்கு. நினைச்ச படி கல்யாணம் நடக்கலை. அந்த வருத்தம், துர்காவுக்கும் இருக்குமில்லையா? ஏன், துர்கா பக்கத்தை யோசிக்க மாட்டேங்குறீங்க பாட்டி?” என்று இலக்கியா கூற, ரங்கநாத பூபதியின் நெற்றி சுருங்கியது.

விஜயபூபதி தன் கண்களை இறுக மூடிக்கொண்டான். 

‘பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருட்டுன்னு சொல்லுமாம்’ சற்றுமுன் துர்கா சொன்னது நினைவு வர, ‘நான் கண்களை மூடினால் என்ன? மூடவில்லை என்றால் என்ன? என் உலகம் இருட்டு தானே?’ அவன் உள்ளம் அவன் மேல் பட்சாதாபம் கொண்டது.

“நீ என்ன அவளுக்குச் சாதகமா பேசுற?” என்று கடுப்பாகக் கேட்டார் பாட்டி.

பாட்டியின் பேச்சை ஒதுக்கிவிட்டு, “மிஸ்டர் விஜயபூபதி, நீங்க செய்றது எதுவும் சரி இல்லை” இலக்கியா கூற, “இல்லை இலக்கியா, என் பேரன் செய்றது தான் சரி. இன்னைக்கு ஒரு நாள் கூட, இவன் கிட்ட பொறுமையா பேச முடியாத துர்கா, எப்படி இவனை பார்த்துக்க முடியும்?” அவர் பளிச்சென்று கேட்டார்.

அங்கு அமைதி நிலவ, “என் பேரனுக்கு உடம்பு சரி இல்லை.” அவர் கண்கலங்கினார்.

“என்ன பெருசா உடம்பு சரி இல்லை? ஏதோ நடக்க முடியலை. ஆபரேஷன் பண்ணா சரியாகிரும். மண்டையில் அடிபட்டு மூளை குழம்பி போச்சா? இல்லை, கால் மேல லாரி ஏறி நசுங்கி போச்சா? எல்லாம் நல்லாதானே இருக்கு. இதுக்கு எதுக்கு அத்தானும், நீங்களும் இவ்வளவு பில்டப் கொடுக்கறீங்க?” இலக்கியா சற்று கடுப்பாகவே கேட்டாள்.

“அது தானே, உன்னை பத்தி எனக்கு தெரியாது. என் மகனுக்கு இப்படி எல்லாம் ஆகணுமுன்னு உனக்கு ஆசை” என்று இத்தனை நேரம் பொறுமையாக இருந்த நிர்மலாதேவி அவள் மேல் பாய்ந்தார்.

“ஆமா ஆசை. உங்களுக்கு மகனா மட்டும் இருந்திருந்தா அப்படி தான் ஆசைப்பட்டிருப்பேன். எங்க மாமாவுக்கும் மகனா போய்ட்டாரில்லை. அதனால், இப்படி எல்லாம் ஆசைப்பட மாட்டேன்.” இலக்கியா தன் தோள்களை அசட்டையாகக் குலுக்கினாள்.

இலக்கியா இடக்காகப் பேசினாலும், அவள் பேச்சு விஜயபூபதிக்கு சற்று ஆறுதலாகவே இருந்தது.

“விஜய் இவளை வெளிய போக சொல்லு” நிர்மலாதேவி இப்பொழுது கோபமாக கூற, “நான் கிளம்புறேன்” என்று கூறிக்கொண்டு அறையின் வெளியே சென்றவள் மீண்டும் உள்ளே வந்து நிர்மலாதேவி முன் நின்றாள்.

“உங்க மாமியாரை பத்திரமா என் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டிருங்க.” விஜயபூபதியின் தாயிடம் சற்று அதிகாரமாகவே கூறிச் சென்றாள் இலக்கியா.

பாட்டி இலக்கியாவை முறைக்க, அவள் படபடவென்று வெளியே சென்றாள்.

விஜயபூபதியின் வீட்டைவிட்டு வெளியே வேகமாக சென்றவளை, “இலக்கியா…” என்ற அவள் மாமனின் அழைப்பு நிறுத்தியது.

“என்ன மாமா?” அவர் முன் பவ்யமாக நின்றாள் இலக்கியா.

“தலை வலிக்குதா இலக்கியா? ஹாஸ்பிடல் போவோமா?” அவர் அக்கறையாக கேட்டார்.

“மாமா சின்ன காயம் தான். எனக்கு ரொம்ப வலிக்க கூட இல்லை. அடிபட்டப்ப ரத்தம் வந்தது. இப்ப ரத்தம் கூட நின்றுச்சு பாருங்க” தன் தலை காயத்தை காட்டி இயல்பாக பேசினாள் இலக்கியா.

அவர் தொண்டையை  செருமிக்கொண்டார். 

அவள் தன் மாமாவை ஆழமாகப் பார்த்தாள். ‘அத்தானின் விபத்துக்குப் பின் மாமா அழவில்லை. புலம்பவில்லை. ஆனால், மாமாவுக்கு வயசு பத்து கூடின மாதிரி ஆகிருச்சு.’

சிறு அமைதிக்கு பின் ரங்கநாத பூபதி எதுவோ பேச, அவளும் பேசினாள். நேரம் கடக்கவே, நிர்மலாதேவி விஜயபூபதியின் அறையிலிருந்து வெளியே வந்தார்.

இவர்களை பார்த்தார்.

‘என்ன பேசுகிறார்கள்?’ என்று அறிந்து கொள்ள முயற்சித்த நிர்மலாதேவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நீண்ட பேச்சுக்கு பின், இலக்கியா அழுது கொண்டே அவள் வீட்டிற்கு ஓடிச் சென்றாள். அதே நேரம் துர்கா அவள் வீட்டை அடைந்திருந்தாள்.

துர்காவின் பெற்றோர் அவளை எதுவும் கேட்கவில்லை. அவள் அறைக்குச் சென்ற துர்கா, அவள் மெத்தையில், “பூபதி… பூபதி…” என்ற முனங்களோடு குப்புறப் படுத்துக் கதறினாள்.

“நீ இப்படி அங்க போய் அவமானபட்டுகிட்டே   இருந்தா உனக்கு என்ன மரியாதை?” என்று அழுத்தமாக கேட்டார் துர்காவின் தந்தை குமரன்.

“அதுக்காக பூபதியை அப்படியே விட சொல்லுறீங்களா அப்பா?” என்று துர்கா கேட்க, “எதுக்கு அப்படியே விடணும்? கொஞ்சம் விட்டு பிடி. நீ போகலைன, அவங்களே உன்னை தேடி வருவாங்க. அவங்களுக்கும் மூச்சு விட கொஞ்சம் காலம் கொடு. நீ அவங்களை ரொம்ப தொந்தரவு செய்யற” என்றார் துர்காவின் தாய் கலைச்செல்வி தன்மையாக.

‘நான் தொந்தரவா?’ துர்காவின் கண்களில் யோசனை பரவியது. 

குமரன், தன் மனைவியை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தார்.

“அம்மா, சொல்றது தான் சரி துர்கா. எப்படியும் இந்த நிலையில் விஜயபூபதியை யாரும் கல்யாணம் செய்துக்க மாட்டாங்க. நீ எதுக்கு இப்ப இப்படி கல்யாணம் கல்யாணமுன்னு  அவசரப்படுற? கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிரும். உடம்பு சரியாகலைனாலும், விஜயபூபதியின் மனசு மாறும். எல்லாம் சரியாகும்.” அவர் எடுத்துக்கூறினார்.

“இப்ப போய் பேசினா பூபதிக்கு கடுப்பு தானே ஆகும். நீங்க சொல்றதும் சரி தான். நான் விலகி இருந்தால், பூபதி என்னை தேடுவான் தானே? அப்புறம், பூபதி அவன் முடிவை மாத்திப்பான் தானே அப்பா? மாத்திக்கிட்டு என்னை ஏத்துப்பான் தானே அப்பா?” கண்களில் பரிதவிப்போடு கேட்டாள் துர்கா.

அவள் மூளையில் வேறு எதுவும் பதியவில்லை. விஜயபூபதி அவளை ஏற்றுக் கொள்வான் என்ற எண்ணம் மட்டுமே அவளைச் சூழ்ந்தது.

“கண்டிப்பா துர்கா.” அவள் பெற்றோர் அவளை மேலும் மேலும் விதவிதமாக பேசி, விஜயபூபதியைப் பார்க்கச் செல்வதைத் தடுக்கும் திட்டத்தைத் தற்காலிகமாகச் செயல்படுத்திக் கொண்டனர்.

“சரி அம்மா… சரி அப்பா… நான் இப்ப போய், அவனைப் பார்த்து தொந்தரவு பண்ண மாட்டேன்.” சிறுபிள்ளை போல் அழுது புலம்பினாள் துர்கா.

“இன்னைக்கும், நாளைக்கும் நான் போகலை. இரண்டு நாள் தானே?” அவள் பாவமாக கேட்டாள்.

“ரெண்டு நாள் என்ன ரெண்டு நாள். ஒரு வாரமாவது இரு.” என்று குமரன் கண்டிப்போடு கூறினார்.

‘ஒரு வாரமா?’ என்று அதிர்ந்தாலும், “ஒரு வாரம் தானே… ஒரு வாரம் தானே… நான் சமாளிச்சிப்பேன். நான் சமாளித்து கொள்வேன்.” அவள் தனக்கு தானே பலவாறு தேற்றிக்கொண்டாள்.

அவள் தந்தை, அவளுக்கு ஆறுதலாக தலை கோதினார். அவள் தாய் தலை சாய்க்க மடி கொடுத்தார்.

துடிக்க துடிக்க அவள் காதல் சிறகுகள் அறுக்கப்பட்டாலும், அவள் பெற்றோர் என்ற கூட்டுக்குள் அரவணைக்கப்பட்டாள்.

அதே நேரம், ரங்கநாத பூபதியிடம் பேசிவிட்டு கண்களில் கண்ணீர் மல்க தன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள் இலக்கியா.

இலக்கியாவின் வீட்டில் யாரும் இல்லை. இலக்கியா கதவை மூடிக் கொண்டு விம்மினாள். சற்று நேரத்தில் தன் தலையில் அடித்துக் கொண்டு, “அம்மா… அப்பா….” என்று கதறினாள்.

“கடவுளே, எனக்கு மட்டும் யாருமில்லையா? என்னை ஏன் சின்ன வயசிலிருந்து சோதிக்குற?” ஆறுதல் கூற ஆளில்லாமல் வெடித்து அழுதாள். சாய மடியின்றி தனிமையில் சோர்ந்து சுருண்டு விழுந்தாள்.

நொடிகள், நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளிகளாகி கதவு தட்டும் ஓசை கேட்க விழுக்கென்று நிமிர்ந்தாள் இலக்கியா.

ஓடி சென்று முகம் கழுவினாள். கண்கள் அவள் சோகத்தை பிரதிபலிக்க, அதற்கு கண்மை இட்டுக்கொண்டாள்.

வேலைக்கார்களின் உதவியோடு, பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார்.

“ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்று பாட்டி கேட்க, “பாட்டி, வெயிலில் வந்ததில் உங்களுக்கு கண்ணு கோளாறு ஆகிருச்சு. என் முகம் எல்லாம் நல்லா தான் இருக்கு.” மெட்டு விடாமல் பதில் கூறினாள் இலக்கியா.

இரண்டு நாட்கள் கடந்திருந்தது.

விஜயபூபதிக்கு, பலர் உதவிக்கு இருந்தனர். அவன் கட்டிலை சற்று சரித்து வைக்க, அவன் உட்கார்ந்த வாக்கில் லேப்டாப்பை பார்த்து கொண்டிருந்தான்.

அவன் எண்ணங்கள் துர்காவை சுற்றி வந்தது.

‘ரெண்டு நாள் ஆச்சு. துர்கா வரலை. அவளுக்கு கோபம் எல்லாம் என் மேல் வந்திருக்காது. ஆனால், அவ அப்பா, அவளை எப்படியாவது பேசி சமாளிச்சிருப்பாங்க. இது தான் நல்லது. இப்படியே துர்கா தள்ளி இருக்கட்டும். இது தான் துர்காவின் வாழ்க்கைக்கு நல்லது’ அவன் துர்காவின் எண்ணங்களை ஒதுக்கி வைக்க முயன்றான்.

‘காதலும், திருமணமும் மட்டும் தான் வாழ்க்கையா?’ அவன் தன் எண்ணத்தை உலகத்தை சுற்றி வரவைக்க முயன்றான்.

‘கொரோனாவின் ஆட்டம் உக்கிரமா இருக்கு. நம்ம மால், சினிமா தியேட்டர் எல்லாம் மூடி இருக்கு. இன்னும் கொஞ்ச மாசத்துக்கு எல்லாருக்கும் காசு கொடுக்கலாம். அப்புறம் என்ன ஆகும். பணம் வரவு இருக்காது. ஆனால், எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கணும்.’ அவன் எண்ண ஓட்டம் அவன் பொருளாதார நிலைமையை சுற்றி வந்தது.

‘நானும் ஒரு இடத்தில் தேங்கி இருக்கிறேன். தொழிலும் ஒரு இடத்தில தேங்கி இருக்கிறது. பொருளாதார நிலைமையும் ஒரு இடத்தில் தேங்கி நிற்கிறது?’ அவன் தன் கண்களை இறுக மூடினான்.

“ம்… க்கும்…” சத்தத்தில் தன் கண்களை திறந்தான் விஜயபூபதி.

“என்ன மேடம் பயங்கர பிசி போல? ஊரே லாஃடவுன்ல இருக்கு உனக்கு மட்டும் கேக் ஆர்டரா?” அவன் கேலியில் இலக்கியா சிரித்தாள்.

“அத்தான், இப்படியே இருங்க. தளர்ந்து போகாதீங்க. எல்லாம் சீக்கிரம் சரியாகிரும். இந்த நிலைமை கஷ்டந்தான்” கம்மலான குரலில் கூறினாள் இலக்கியா.

“இலக்கியா…” அவன் அவளை ஆழமான குரலில் அழைத்தான்.

“அழுதியா?” அவன் அவளை கூர்மையாக பார்க்க, “அட, நான் எல்லாம் அழுவேனா? நாலு பேரை அழ வைப்பேன். நாலு பேரை இல்லைனாலும், குறைஞ்சபட்சம் உங்க அம்மாவை அழவைப்பேன்.” இலக்கியா மெட்டு விடாமல் சிரித்தாள்.

அவள் விழிகள், அவள் சிரிப்புக்கு ஒத்துழைக்கவில்லை.

“அப்பா, எதுவும் சொன்னாங்களா?” அவன் கேட்க, அவள் ஒரு நொடி அதிர்ந்து தன்னை சமாளித்து கொண்டாள்.

“ஏன் உங்க அம்மா சொல்லிருக்க கூடாதா?” அவள் புருவம்  உயர்த்த, “எங்க அம்மா சொல்லிருந்தா, நீ இந்நேரம் அவங்களை துவைத்து காய போட்டிருக்க மாட்ட?” அவன் மீண்டும் கேலி பேசினான்.

இலக்கியா மௌனிக்க, “என்ன பிரச்சனைனு கேட்டேன். இல்லை, இந்த நோயாளியால் எதுவும் செய்ய முடியாதுனு என்கிட்டே சொல்ல மாட்டேங்குறீயா?” அவன் சிடுசிடுத்தான்.

“நான் என்ன கேட்டாலும் செய்வீங்களா?” அவள் கறாராக கேட்டாள்.

அவன் நெற்றி சுருங்கியது. ‘கேள்…’ என்றது அவன் விழிகள்.

“என்னை கல்யாணம் செய்துக்கறீங்களா அத்தான்?” அவள் கேட்டுவிட்டாள்.

அவன் சிரித்தான்.

“என்ன விளையாட்டு இலக்கியா?” அவன் கேட்க, “நீங்க தான் துர்காவை கல்யாணம் செய்யலைனு சொல்லிடீங்களே?” இலக்கியா விளையாட்டாகவே கேட்டாள்.

“உனக்கு எல்லாமே விளையாட்டு? எல்லாமே கேலி தானா?” அவன்  மறுப்பாக தலை அசைத்து கேட்டான்.

“நான் கேட்ட கேள்விக்கு பதில். என்னை கல்யாணம் செய்துக்கறீங்களா?” அவள் பிடிவாதமாக கேட்டாள்.

“லூசா நீ இலக்கியா? துர்கா இல்லைனா இலக்கியான்னு என் வாழ்க்கை என்ன விளையாட்டா? இல்லை, நீ என்ன செகண்ட் சான்ஸா?” அவன் அவளை கண்டித்தான்.

“சரி, அப்ப துர்காவை கல்யாணம் செய்துக்கோங்க. நான் மத்தவங்களை சமாளிக்கிறேன்” அவள் கூறிவிட்டு நாக்கை கடிக்க, “யாரை சமாளிப்ப?” அவன் அவள் கேள்வியை தொடுத்தான்.

“அவங்க வீட்டை…” இலக்கியா சமாளிக்க, “துர்காவை வேண்டாமுன்னு சொன்னது நான். அவ வாழ்க்கை நல்லாருக்கணும்” அவன் அழுத்தமாக கூறினான்.

“நீங்க இப்படி இருக்கும் பொழுது, துர்கா எப்படி நல்லாருப்பாங்க?” இலக்கியா கேட்க, “அதுக்காக நான் உன்னை கல்யாணம் செய்யணுமா? இந்த கேவலமான ஐடியாவை கொடுத்தது யாரு?” அவன் அவளை அழகாக சுற்றி வளைத்து பேசி அவன் வலையில் சிக்க வைத்தான்.

அகப்பட்டுக்கொண்டவள் போல் அவள் விழிக்க, “மதர் தெரேசாவாவோ இல்லை நைடிங்கேலாவோ உங்களை மாற்றிய அந்த நபர் யாரு? பாட்டியா? என் அப்பாவா?” அவன் பற்களை நறநறத்தான்.

“அவங்க எல்லாம் காரணம் இல்லை. நானே தான் கேட்குறேன்.” அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

அவன் அவளை தலை அசைத்து அருகில் அழைத்தான். அவளை கண்காட்டி, அவன் அருகே அமரச் செய்தான்.

அவள் கைகளை பிடித்தான்.

“நான் இந்த கைகளை எப்ப பிடிச்சேன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்டான்.

அவள் உதட்டை பிதுக்கி அறியாதவள் போல் தலை அசைக்க, “அம்மா, அப்பாவை இழந்து நீ சின்ன குழந்தையா இங்க வந்தப்ப… பாட்டி என்ன சொன்னாங்ன்னு  தெரியுமா? இவளுக்கு நீ தான் பொறுப்புன்னு.” அவன் நிறுத்த, அவள் கண்கள் கலங்கியது.

“நான் உன்னை திட்டிருக்கேன். நான் உன்கிட்ட சண்டை போட்டிருக்கேன். நான் தான் உன்னை பார்த்துக்குறேன்னு சொல்லிருக்கேன். என்னைக்காவது உன்னை எங்க வீட்டை விட்டு வெளிய போன்னு சொல்லிருக்கேனா?” அவன் கேட்க, அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“துர்கா யாரு?” அவன் கேட்க அவளிடம் மௌனம்.

“அவள் என் காதலி. நான், அவளை உயிராய் நேசிச்சேன். ஆனால், எனக்கு துர்காவை சில வருஷங்களாக தான் தெரியும். அவளுக்காகவே இவ்வளவு யோசிக்கிற நான், உனக்காக யோசிக்க மாட்டேனா?” என்று அவன் கேட்க, அவள் விழிகள் கலங்கியது.

“உங்களுக்கு ஒண்ணுமில்லை. உங்களை கல்யாணம் செய்தா துர்கா நல்லா தான் இருப்பாங்க” அவள் கூற, “எனக்கு சரியாகும், சரியாகாமலும் போகும். ஆனால், அதுக்கு பல வருஷங்கள் கூட ஆகலாம். நான் துர்காவின் வாழ்க்கையை கெடுக்க விரும்பலை. அவ நல்லாருக்கணும்னு விலகிக்கவே விரும்புறேன். இனி துர்காவை பற்றி பேசாத” அவன் ஆணையோடு அவள் பேச்சை முடித்து விட்டான்.

“துர்கா நல்லாருக்கணும்னு விலகி போகத்தான் நினைப்பேன். ஆனால், நீ நல்லாருக்கணும்னு  உன்னை என் கண்ணெதிர்லே வைத்து பார்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு.” அவன் கூற, அவள் கண்ணீர்த்துளி அவன் கைகளை தொட்டது.

அவன் அவள் விழி நீரை துடைத்து விட்டான். “பேரனுக்கு இப்படி ஆகிருச்சுனு, பாட்டி உன் கிட்ட ஏதாவது சொல்லலாம். பையனுக்கு இப்படி ஆகிருச்சுன்னு அப்பா உன்கிட்ட ஏதாவது சொல்லலாம். அத்தானுக்கு இப்படி ஆகிருச்சின்னு நீ  உன்னை குழப்பி என்னை கல்யாணம் செய்யறேன்னு லூசு மாதிரி பேசிட்டு திரியாத” அவன் அன்பாக பேச ஆரம்பித்து கண்டிப்போடு பேசி முடித்தான்.

“கல்யாணம் மட்டும் தான் வாழ்க்கையா? நான் யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன். அது மட்டுமில்லை, என் மனதில் துர்காவுக்கு மட்டும் தான் இடம் உண்டு. இப்படி விளையாட்டு பேசி பேசிக்கிட்டு அலையாத. கிளம்பு.” அவன் கூற, அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

‘நான் மட்டும் என்ன துர்காவுக்கு துரோகம் செய்யவா நினைக்குறேன்? ஆனால்,’

‘ஆனால்…’ என்ற அந்த கேள்வி அவளை அறுத்தது.

இவனுக்கு இவள் இவளுக்கு  இவன்

இவர்கள் இயற்கை இணைத்த இருவர்

இருவரும் இடம் இடற இயலுமா?

சிறகுகள் விரியும்…  

Leave a Reply

error: Content is protected !!