sippayinmanaivi 9

மலையமான் கோட்டை

கலப்பட்டினம் பாலம் அருகே புரவிகளை இளைப்பாற கட்டிய பின்னர் சித்திரை,முகிலன் மற்றும் கதிரவன் அங்கிருந்த வணிக சத்திரத்தில் சிறிது உணவருந்திவிட்டு ஓய்வும் எடுத்துச்செல்லலாம் என்று சித்திரை சொன்னதும் கதிரவனும் முகிலனும் பின்தொடர்ந்தனர். அங்கே ஒரு சில பயணிகள் உணவருந்திக்கொண்டிருந்தனர். அவர்களை கண்டால் வெகுதூரம் பயணித்து வந்தவர்கள் போல் தோன்றியது. முகிலன் சிறிது பேச்சை வளர்க்க முற்பட்டான்.

‘ஐயா எங்கிருந்து வருகிறீர்கள்?’

‘நாங்கள் வணிகர்கள், ஐநுறுவர் மாநாட்டிலிருந்து கலப்பட்டினம் துறைமுகம் செல்கிறோம். நாளை நாங்கள்  தரும நாடு நோக்கி பயணப்படுவோம்.’

‘தரும நாட்டில் என்ன வாணிபம் செய்கிறீர்கள்?’

‘இங்கிருந்து சிறுதானியங்கள் கொண்டு செல்கிறோம்.’

‘அதற்கு ஏன் ஐயா தரும நாடு வரை செல்ல வேண்டும்? தெற்கிலே இருக்கும் முத்தூரு துறைமுகம் அருகிலிருக்கும் தருமசாலையில் விற்கலாமே, அதற்காக தானே இப்படி நாகர் நாடு முழுவதும் வெளிநாட்டவரின் தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது’

‘சரி தான் ஐயா இதற்கு முன்னர் இப்படி தான் செய்தோம் ஆனால் சில திங்கள்கள் கழித்து சிற்றரசர்கள் குறும்பாக (சிற்றரசர்களால் ஆளப்படும் நிலப்பகுதி தான் குறும்பு) பிரிக்கப்படுகிறது அல்லவா அதன் பிறகு நிதி தலைவர் கணியன் கடுமையான விதிகள் கொண்டுவரப் போகிறார் போலும் அது மட்டுமல்லாமல் இறை(வரி) கடுமையாக வசூலிக்கப்படும் என்றும் சேதிகள் காதில் விழுகிறது. அதனால் தான் நாங்கள் எதற்கும் முன்னேற்பாடாக சென்று வணிக வழிகளை காணச் செல்கிறோம்’ என்று ஒரு வணிகன் கூறினான். முகிலனும் வியந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

‘தவறாக எண்ண வேண்டாம். வணிகர்கள் தான் சோனா மலைக்கு கீழ் உள்ள நாடுகள் அனைத்தையும் மறைமுகமாக ஆள்கிறார்கள் என்று சேதி’ முகிலன் சொன்னான்.

‘இருக்கலாம், பொன்ஆம்பல்  சிற்றரசருக்கு உட்பட்ட துறைமுகம்-பூம்புகாரில் ஏற்பட்ட போருக்கு பின்னர் அனைத்தும் வேறாகி விட்டது’ வணிகர் சொன்னார். சித்திரை திகைத்துப் பார்த்தாள் கதிரவனும் தான்.

வணிகர் தொடர்ந்தார், ‘சின்னர்களும் தருமர்களும் முத்தூரு துறைமுகம் தாண்டி பூம்புகார் வரை வரக் காரணம் நாம் நாகர் என்ற ஒரே காரணம் தான். அந்நாட்டு வணிகர்கள் நம்புவது கணியனை மட்டும் தான்’.

‘உங்களுக்கு பிரம்பி போர் நினைவிருக்கிறது அல்லவா, சிற்றசர் கந்தனின் தந்தை கார்மேகம் உயிர் நீத்த போர்’

‘ஆம் ஐயா’

‘அந்த சேதி காட்டு தீ போல் பரவியது, கார்மேகமும் படைத்தளபதி மாடனும் செய்த வீர செயல்கள் இன்றும் சிலிர்ப்பளிக்கிறது’ முகிலன் சொன்னான்.

‘வணிக சத்திரத்தில் இன்றிரவு உறங்கிவிட்டு நாளை கதிரவன் தோன்றும் முன்னர் புறப்படுவோம்’  சித்திரை சொன்னாள்.

அன்றிரவு சித்திரையும் முகிலனும் அடுத்த சில திங்கள்களில் ஆபத்து வரப்போவதாக முருகு இறங்கிய பெண் கூறியதை எண்ணியவாரே தூங்கினார்கள். அடுத்த நாள் காலை களப்பட்டினத்தின் துறையில் பல கலன்கள் வைகை கடலில் கலக்குமிடத்தில் கரை ஒதுங்கின. அங்கிருந்த வணிகர்கள் அந்தக் கலன்களை நோக்கி நகர சித்திரை, முகிலன் மற்றும் கதிரவன் களப்பட்டினத்தின் பாலத்தின் மேல் நின்று வைகையும் கிழக்கு கடலும் கலக்குமிடத்தில் கூடியிருந்த கூட்டதையும் மற்றும் மஞ்சள் நிற அலகுகளுடன் வெண்சிவப்பு நிற கால்களுடன் வெண்கரும் இறகுகளை விரித்து வானில் பறக்கும் கடல் புறாக்களையும் கண்டு ரசித்தனர்.

பெருங்கலூர் சந்தை சாலை மிக பரபரப்பாகயிருந்தது, இன்று கொண்டாட்டத்திற்கு ஊரே தயாராகி கொண்டிருந்தது. அந்த கூட்டத்தின் நடுவில் சித்திரை புரவியில் வருவதை பல பெண்கள் ஏதோ புதியதை கண்டது போல் திகைத்தனர். சித்திரை புன்முறுவலுடன் சந்தை சாலையை கடந்து பெருங்கலூர் கோட்டைவாசலை அடைந்தாள். வாசலை தாங்கி நிற்கும் கோட்டைச்சுவர் மட்டும் ஐந்து ஆள் உயரமிருக்கும். காவலர்கள் வாசலின் இருபுறமும் கைகளில் வேலுடன் தொடர் சங்கிலி போல் இருந்தனர். வாசலைத் தாண்டி சென்றால் பல வேலி நிலங்கள் – பெருங்கலூர் ஊர் மக்கள் அனைவரையும் அந்த கோட்டைச்சுவரின் உள் அடைத்துவிடலாம். பெருங்கலூர் சிற்றரசன் மலையமான் மற்றும் சிற்றரசி ரத்தினமணி அவர்களை வரவேற்றனர். ரத்தினமணி பட்டுடை அணிந்திருந்தாள், உடலெங்கும் தங்கமாக இருந்தது. புன்னகைத்தாலும் ரத்தினமணிக்கு சித்திரையின் காட்டுத்தனமான தோரணை சிறிது வெறுப்பை தந்தது. மலையமான், அவன் மகன்களான குன்றரசன்  மற்றும் நீலிமானை அறிமுகப்படுத்தினான். கதிரவனை அவர்கள் இளையவர்களுக்கான இடத்திற்கு அழைத்து சென்றனர். சித்திரையை ரத்தினமணி பெண்கள் கூடியிருக்கும்  உறைவிடத்திற்கு அழைத்துச் சென்றாள். இந்தக் கொண்டாட்டத்தில் பிற சிற்றூர்களிலிருந்து முக்கிய விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப் பட்டுருந்தனர். அவர்களோடு பெருங்கலூர் ஊர் மக்களும் இணைந்து கொள்வார்கள். மேலும் பல வணிகர்கள் வந்திருந்தனர். கோட்டை கிழக்கு பகுதியில் சுமார் இருநூறு பேருக்கு ஒரே சமயத்தில் பகல் விருந்தளிக்கபட்டது. கோட்டையின் உள் நடைபாதையில் ஊர் மக்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. திறந்த அரங்கில் மாலை நடைபெறவிருக்கும் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரங்கின் உயர்ந்த பகுதியான நெடுமாடத்து அறையில் சில இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒவ்வொரு படி நிலைகளாக இறங்கி கீழ் உள்ள வட்டவடிவிலான தரையில் முடிந்தது.

மலையமானும் முகிலனும் சந்தித்து பல நாட்கள் ஆன நிலையில் இந்தச் சந்திப்பால் உணர்ச்சிகளின் பெரும்வெள்ளத்தில் இருவரின் மனமும் மூழ்கியது.

‘தோழா, அடுத்த திங்களில் நீ தனி நாடாளும் அரசன், மிக்க மகிழ்ச்சி’ முகிலன் சொன்னான்.

‘தோழா, ஆம் நாம் இத்தனை ஆண்டுகள் காத்திருந்த விடுதலை’ மலையமான் சொன்னான்.

‘இந்தப் பிரிவினால் நமக்கு வணிக இழப்புகள் நேரிடும் என்று வணிகர்கள் வரும் வழியில் பேச கேட்டேன்’

‘ஆம், ஆனால் நாம் உணவு தயாரிக்கும் வேளிர் மக்கள் நமக்கு எதற்கு அந்த கவலை’

‘இருந்தாலும் தனி நாடான பின் ஆயுதம், போர் செலவுகள், அரசு செலவுகள் என பல உள்ளதே’

‘இருக்கட்டும், நம் மக்கள் திரை காசுகளை சரி வர பயன்படுத்தினால் போதும்’

‘வணிகர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள் அவர்களும் உன் நாட்டு மக்களே, தனி நாடாக பிரிந்து பெரும் சோதனைக்கு உள்ளாகி உள்ள வகனர்கள் நமக்கு எடுத்துக்காட்டு’

‘வகன அரசர்கள் பேராசை கொண்டவர்கள், ரோமர்களை கண்டு செல்வமிகுந்த பெரும் வணிகர்கள் போல் வாழ ஆசைப்பட்டு நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறார்கள்’

‘தோழா இருந்தும் இதை கண்காணிக்க வேண்டும், மக்களிடையே சிறு குழப்பம் வந்தாலும் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும்’

‘சரி தோழா, நாளை இதைப் பற்றி பேசுவோம், இன்று கொண்டாட்டத்திற்கான நாள்.’

அன்று மாலை அரங்கில் மக்கள் சிறுமீன்கள் கூட்டம் போல் கூடியிருந்தனர். பேர் ஆரவாரம் காதுகளை அடைத்தது, இனம் புரியாத மகிழ்ச்சி அனைவர் முகத்தில் தெரிந்தது.

மலையமான் வரும் அறிக்கை அறிவிக்க முரசு இசைக்கப்பட்டது. கூட்டம் சிறிது சிறிதாக இரைச்சலை குறைத்து கடைசியில் முழு அமைதி அடைந்தது. நெடுமாடத்து அறையில் உள்ள இருக்கைகளில்  மலையமான் மற்றும் சில சிற்றூர் தலைவர்கள் இருந்தனர் அவர்களில் ஒருவனாக முகிலனை இருக்கவைத்தனர், ஆனால் அங்கு இருக்கவேண்டியது தலைவி சித்திரை தான் என்று மனதின் ஓரத்தில் எண்ணம் அரித்துக் கொண்டிருந்தது. சித்திரைக்கு அதை பொருட்படுத்தும் எண்ணம் இல்லை, இத்தனை மக்களின் மகிழ்ச்சிக்கு முன்னால் தன் இருப்பை மறந்து அவளும் கொண்டாட்டத்தில் திளைத்திருந்தாள்.