kkavithai17

kkavithai17

கவிதை 17

இரவு முழுவதும் அம்மாவும் மகனும் நன்றாக அடித்துப் போட்டாற் போல உறங்கி இருந்தார்கள். காலையில் இருவரும் கண்விழித்த போது சூரியன் உலாக் கிளம்பி இருந்தான்.

அன்றைக்கு வானிலை மிகவும் நன்றாக இருந்தது. சூரியக் கதிர்கள் அந்தக் காலைப்பொழுதில் பூமியை முத்தமிட்ட வண்ணம் இருந்தன. இதுபோன்ற வண்ணமயமான பொழுதுகள் அமைவது அபூர்வம் என்பதால் இங்கு வசிக்கும் மக்கள் இந்நாட்களை முடிந்த வரை அனுபவித்துக் கொள்வார்கள்.

லில்லியன் புதிதாக விட்பியில் அமைக்கும் அந்த ஹோட்டலை மற்றைய இடங்களை விட கொஞ்சம் அதிக வசதி வாய்ப்புகளோடு அமைக்கத் திட்டமிட்டிருந்தார். அந்த வசதிகளில் நீச்சல் குளமும் அடக்கம். நிர்மாணிக்கப்பட்டு முடிந்த கட்டிடத்தை அடுத்ததாக இரண்டு நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒன்று பெரியவர்களுக்கானது, இன்னொன்று சிறுவர்களுக்கு. நீச்சல் குள வேலைகள் முழுதாக நிறைவடைந்திருந்ததால் பவித்ரா அன்று ஹரியை சிறுவர்களுக்கான இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.

நீர் நல்ல வெதுவெதுப்பாக இருக்கவே சின்னவனை உள்ளே இறக்கிவிட்டு வேடிக்கைப் பார்த்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் பெண். சுற்றிவர ஆங்காங்கே வேலை செய்பவர்களும் இருந்ததால் எந்தப் பயமும் இருக்கவில்லை. ஹரிக்கு அன்று ஆனந்தம் தாங்க முடியவில்லை. 

“அம்மா கம்.” என்று பவித்ராவையும் அழைத்தபடி அவனது இடை வரை இருந்த நீரில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.

“ஹரி!” தண்ணீரைத் தாறுமாறாகக் குழந்தை அடித்து விளையாடவும் பவித்ராவின் மேலும் நீர் தெறித்தது. 

“அம்மா கம்… யூ கம்.” தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு வார்த்தைகளை வைத்துத் தன் தாயைத் தன்னோடு விளையாட அழைத்தான் சிறுவன்.

“ம்ஹூம்… அம்மா புடவைக் கட்டி இருக்கேன், முடியாது.” பவித்ரா மறுத்துவிட்டு அப்படியே அமர்ந்திருந்தாள். சின்னவன் சிறிது நேரம் விளையாடி முடித்ததும் ஒரு பணியாள் வெட்டிய ஆப்பிள் துண்டுகளை ஒரு ப்ளேட்டில் கொண்டு வந்து கொடுத்தார். இது கூடவே இருக்கும் பெண்மணியின் ஏற்பாடு. அம்மாவும் மகனும் உல்லாசமாக இருக்கும் வேளைகளில் இது போன்ற வேலைகளை அவர் கவனித்துக் கொள்வார்.

“ஹரி, ஸ்நாக் டைம்.” சொன்னபடி பவித்ரா நீச்சல் குளத்தின் அருகே போனாள். குழந்தையும் சமத்தாக அவள் அருகே வந்தது. ஆப்பிளோடு கூடவே ஃபோர்க் கும் இருக்கவே இலகுவாகக் குழந்தைக்குப் பழத்தை ஊட்டி முடித்தாள். உண்டு முடித்ததுதான் தாமதம் குழந்தை மீண்டும் தண்ணீரில் ஆட்டம் போட்டது. 

சின்னதாக இருந்த நான்கைந்து காற்றடைத்த பந்துகளைத் தூக்கிப் போட்டு விளையாடியது. பவித்ரா ஒரு புன்னகையோடு மகனையே பார்த்தபடி இருந்தாள்.

“அம்…மா…” 

“என்ன ஹரி?”

“கம்… அ…ம்…மா…” மீண்டும் குழந்தை அவளை நீரில் விளையாட அழைத்தான். அடம்பிடிக்கும் போது அவனது அம்மா இப்படித்தான் நாலு முழ நீளத்தில் வரும். அதற்கு மேலும் பிகு பண்ணாமல் புடவையோடு நீரில் இறங்கினாள் பவித்ரா. அம்மா தண்ணீரில் இறங்கியதும் குழந்தைக்கு மகிழ்ச்சி பொங்கியது.

“ஹே!” என்று பவித்ரா மேல் நீரை இறைத்தது. பந்தைத் தூக்கிப் போட்டது.

“டேய்! டேய்! கண்ணா… அம்மா நனைஞ்சிடுவேன்டா!” பவித்ரா எவ்வளவு சொல்லியும் அவன் ஆர்ப்பாட்டம் அடங்கவில்லை. தெறித்த நீர் ஆங்காங்கே அவள் புடவையை நனைத்திருக்க அதற்கு மேலும் அங்கே நிற்பது நன்றாக இருக்காது என்பதால் உள்ளே போகலாம் என்று நினைத்தாள் பவித்ரா.

“ஹரி, போதும்… ரூமுக்குப் போகலாம் வாங்க.”

“நோ…” குழந்தை மறுத்தது.

“இல்லையில்லை, இன்னைக்கு இவ்வளவு நேரம் விளையாடினது போதும், நாளைக்கு விளையாடலாம் ஓகே.” 

“அ…ம்மா…” மீண்டும் நீரை விட்டு வெளியே வர மறுத்த சின்னவனைச் சமாதானம் பண்ணிக்கொண்டு திரும்பிய பவித்ரா அப்படியே திகைத்து நின்று போனாள்.

டவலை எடுப்பதற்காகத் திரும்பிய பெண் பார்த்ததெல்லாம் சற்றுத் தொலைவில் இவர்களையே பார்த்தபடி நின்றிருந்த ரிஷியைத்தான், கூடவே ஆலிவர். இவள் தங்களைப் பார்த்து விட்டாள் என்று தெரிந்ததும் இதுவரை ஆச்சரியப் பார்வையோடு நின்றிருந்த ஆலிவர் ரிஷியின் தோளில் லேசாகத் தட்டிவிட்டு அப்பால் போய்விட்டான். 

பவித்ரா திகைத்துப் போய் நின்று விட்டாள். எப்படியும் தன்னைத் தேடிக்கொண்டு ரிஷி வருவான் என்று தெரியும். ஆனால் இத்தனைச் சீக்கிரத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை.

“அம்…மா…” தன்னை நீரில் விளையாட விடாமல் வெளியே அழைத்த அம்மா டவலை எடுக்காமல் பிரமித்த படி நிற்கவும் சின்னவனின் குரல் உயர்ந்தது. ரிஷியின் பார்வை இப்போது குழந்தையிடம் தாவியது. அவன் ஒற்றைப் புருவம் லேசாக ஏறியதை அவ்வளவு தூரத்திலும் பவித்ராவினால் கவனிக்க முடிந்தது.

டவலால் குழந்தையைச் சுற்றியவள் மெதுவாகவே அங்கிருந்து அகன்றாள். ரிஷியை தாண்டிக் கொண்டுதான் ஹோட்டல் ரூமிற்குள் போக வேண்டும். எத்தனை நேரம்தான் அங்கேயே நிற்க முடியும்?!

பவித்ரா குழந்தையைத் தூக்கிய படி மெதுவாக ரிஷியின் அருகே வந்தாள். அனல் தெறித்த அவன் முகத்தைப் பார்த்த போது பெண்ணுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.

தன்னை ரிஷி என்ன சொன்னாலும் அதுபற்றி பவித்ரா கவலைப்படப் போவதில்லை. ஆனால் குழந்தை இருக்கும் போது கணவன் ஏதாவது சொல்லி விடுவானோ என்று அவள் மனம் பதைபதைத்தது.

“இங்க நீ என்ன பண்ணுறே?” ரிஷியின் குரலில் அளவுக்கு மீறிய கோபம் இருந்தது. அந்தச் சீறலைக் கேட்ட குழந்தை பவித்ராவின் கழுத்தைக் கட்டிக் கொண்டது. புதிய மனிதன் ஒருவன் புதிதாகத் தன்னிடம் பாசத்தைப் பொழியும் தன் அம்மாவை அதட்டுவதை அந்தக் குழந்தை விரும்பவில்லைப் போலும்.

“அ…ம்மா…” ஹரியின் கண்களில் கண்ணீர் கோர்க்க ஆரம்பித்தது.

“அம்மாவா? யாருக்கு யாரு அம்மா?” ரிஷியின் குரலில் இன்னும் சுருதி ஏற பவித்ரா இப்போது வாயைத் திறந்தாள்.

“அத்தான்… பிள்ளைக்கு முன்னாடி எதுவும் பேசாதீங்க, ப்ளீஸ்.”

“பிள்ளையா?! யாரோட பிள்ளை?! உனக்கும் எனக்கும் பொறந்திச்சா இந்தப் பிள்ளை?!” இடக்கு முடக்காகவே கேள்விகள் வந்து வீழ்ந்தன.

“அத்தான் ப்ளீஸ்.” பவித்ரா ரிஷியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே ஹரியை இதுநாள் வரைப் பார்த்துக் கொண்ட பெண் அங்கே வர சட்டென்று குழந்தையை அவரிடம் கொடுத்தாள் பவித்ரா. ஆனால் அந்தப் பெண்ணிடம் ஹரி போக மறுக்கவே பவித்ராவின் நிலை மிகவும் தர்மசங்கடமாகிப் போனது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு பவித்ரா மேலே நடக்கவும் ரிஷியின் கோபம் தலைக்கு மேல் ஏறியது.

“பவித்ரா!” குரல் கர்ஜித்தது. கோபத்தையும் தாண்டி ரிஷியின் மனது இப்போது வேதனைப்பட்டது. உன்னை விட எனக்கு இந்தக் குழந்தைதான் இப்போது முக்கியம் என்று ஒவ்வொரு இடத்திலும் தன் மனைவி சொல்லாமல் சொல்வது போல உணர்ந்தான்.

‘பவித்ராவா இது?!’ ரிஷியின் மனது உள்ளுக்குள் குமுறியது. 

‘ஒரு வார்த்தை என்னிடம் பேச ஆரம்பத்தில் தயங்கிய பவித்ராவா இது?! அவள் பேசும்போது வார்த்தைக்குக் கூட வலிக்காமல் பேச நினைப்பாளே?! அப்படிப்பட்டத் தன் மனைவியா இன்றைக்கு எனக்கு இத்தனை வலியைக் கொடுக்கிறாள்?!’

தான் இதை விட மிகவும் அதிகமான வலியைத் தன் மனைவிக்கும் கொடுத்திருக்கிறோம் என்பதை ரிஷி அந்த நொடி சிந்திக்கத் தவறிவிட்டான்.

ரிஷி அந்த இடத்தில் சில கணங்கள் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டான். தனக்கு இப்போது பொறுமை நிரம்பவும் அவசியம் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு உள்ளே போனான். இதற்கிடையே ரிஷியின் தலையை அந்த ஹோட்டல் வளாகத்திற்குள் பார்த்த மாத்திரத்திலேயே லில்லியனுக்கு தகவல் போயிருந்தது. 

ரிஷி வந்த வேகமும் அவன் முகத்தில் இருந்த கோபமும் கூடவே இதுநாள் வரை இருந்த அந்தப் பெண்மணிக்கு நன்றாகப் படவில்லை. சட்டென்று லில்லியனை அழைத்துவிட்டார். போதாதற்கு ரிஷி வந்தவுடன் பவித்ராவை விசாரித்த முறையிலேயே ஒரு வெறித்தனமான மூர்க்கம் இருப்பதையும் அந்தப் பெண் புரிந்து கொண்டார்.

இப்போது பவித்ராவின் அறையை அவர் கை காட்டவும் ரிஷி அறையை நோக்கி நடந்தான். அந்த நடையில் நிதானம் இருந்ததா, கோபம் இருந்ததா என்று யாருக்குமேப் புரியவில்லை.

“ரிஷி.” அழைத்தது ஆலிவர். ரிசப்ஷனில் நின்றிருந்தவன் நண்பனிடம் வந்தான். குழந்தையும் பவித்ராவும் உள்ளே போவதை அவனும் பார்த்திருந்தான்.

“கொஞ்சம் பொறுமையா இரு ரிஷி.”

“பார்த்தியா?” ரிஷி பல்லைக் கடித்தான்.

“பார்த்தேன்… நாம நினைக்கிறதை விட நிலைமை இன்னும் கொஞ்சம் சிக்கலா இருக்குமோன்னு எனக்குத் தோணுது ரிஷி.”

“புரியலை.”

“இந்தக் குழந்தை விஷயத்துல உன்னோட வைஃப் ரொம்பவேத் தீவிரமா இருக்காங்கன்னு நான் நினைக்கிறேன்.”

“அவளுக்குப் பைத்தியம் புடிச்சிருக்கு!”

“இங்கப்பாரு ரிஷி, அவசரப்படாதே, கொஞ்சம் நிதானமாப் பேசு, ஆத்திரப்பட்டு இன்னும் இன்னும் நிலைமையைச் சிக்கல் ஆக்கிக்காதே.”

“ம்…” ஒரு உறுமலோடு பவித்ரா இருந்த அறையை நோக்கிப் போனான் ரிஷி. இவன் வருவான் என்று தெரிந்து அறையைப் பூட்டாமலேயே வைத்திருந்தாள் பெண். ரிஷி கதவைத் திறந்ததும் அது திறந்து கொண்டது. உள்ளே அந்தக் குழந்தையோடு சிரித்துப் பேசியபடி அதற்கான தேவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.

ரிஷி கடுகடுத்த முகத்தோடு அங்கிருந்த படுக்கையில் அமர்ந்து கொண்டான். அவர்கள் இருவரையும் பாராமல் விரல்களைக் கோர்த்தபடி நிலத்தைப் பார்த்து அமர்ந்திருந்தான்.

பவித்ராவும் எதுவும் பேசாமல் குழந்தையின் தேவைகளைக் கவனித்தவள் பிற்பாடு தொலைபேசியில் யாரையோ அழைத்தாள். இவள் பேசி முடிக்கவும் அந்தப் பெண்மணி வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே போய்விட்டார். கணவனும் மனைவியும் இப்போது தனித்து அந்த அறையில் இருந்தார்கள். இருவருக்கும் சட்டென்று பேசும் எண்ணம் இருக்கவில்லைப் போலும். அங்கே சில நொடிகள் அசாத்திய அமைதி நிலவியது.

“அத்தான்.” பவித்ராதான் ஆரம்பித்தாள்.

“கிளம்பு வீட்டுக்குப் போகலாம்.” சட்டென்று சொன்னான் ரிஷி.

“போகலாம்… ஆனா குழந்தையும் நம்மக் கூட வரும்.” பவித்ராவும் உறுதியான குரலில் கூற ரிஷிக்கு எங்கிருந்துதான் அத்தனைக் கோபம் வந்ததோ?! கட்டிலை விட்டு எழுந்தவன் பவித்ராவின் கழுத்தைத் தன் ஒற்றைக் கையால் அழுத்திப் பிடித்திருந்தான்.

“நானும் போனாப் போகுது போனாப் போகுதுன்னு பார்த்தா, நீ ரொம்பத்தான் என்னைப் போட்டுப் பார்க்கிறே! சின்னப் பொண்ணு… ஏதோ முட்டாள் மாதிரி பண்ணுறான்னு விட்டுப் பிடிச்சா, நீ ரொம்பத்தான் எகிறுரே?!” ரிஷி என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு வாய்விட்டுச் சத்தம் போட்டான்.

“முட்டாளா?! யாரு? நான் முட்டாளா த்தான்?” பவித்ராவும் இப்போது மல்லுக்கு நின்றாள். ஜன்னல் கதவுகள் மூடி இருந்ததால் இவர்களது சத்தம் வெளியே யாருக்கும் கேட்கவில்லை.

“நீ இல்லாம வேற யாருடீ?”

“முட்டாள்தனம் பண்ணினது நீங்க, எவ கூடவோக் குடும்பம் நடத்தினது நீங்க, இதையெல்லாம் பண்ணிட்டு ஒன்னுமேத் தெரியாத உத்தமன் மாதிரி வந்து என்னைக் கட்டிக்கிட்டது நீங்க, இதுல நான் முட்டாளா?” கணவனின் ஒற்றைக் கையைத் தன் இரு கைகளாலும் விலக்கிவிட்டுக் காளி போல நின்றிருந்தாள் மனைவி.

“ஆமாடீ! அவளோட குடும்பம் நடத்தினேந்தான், யாரு இல்லேன்னா? எழவெடுத்த இந்த நாட்டுல இதெல்லாம் தப்பேக் கிடையாது, நான் என்னத்தைடீ கண்டேன், கொழுப்பெடுத்துப் போய் நான் ஸ்ரீ லங்கா வருவேன், அங்க உன்னைப் பார்ப்பேன், என்னமோ உலகத்துல இல்லாத அழகியே நீதான்னு… டாமிட்!” வேகமாகப் பேசிக்கொண்டு வந்த ரிஷி இப்போது அங்கிருந்த மேஜையில் ஓங்கிக் குத்தினான்.

“ப்ளடி ஸ்ரீ லங்கன் இடியட்! உன்னைப் பார்த்த உடனேயே தலை கிறுகிறுத்துப் போய் கட்டிக்கிட்டேன் பாரு, நான்தான்டீ பைத்தியக்காரன்!”

“ஆமா! நான் ப்ளடி ஸ்ரீ லங்கன்தான்! ஸ்ரீ லங்கன் பேரன்ட்ஸுக்கு பொறந்த ப்ளடி இடியட்தான்! ஆனா நீங்க வெள்ளைக் காரங்களுக்குப் பொறந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சே!” மனைவியின் கேலியில் ரிஷிக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

“இவரு கண்டவளோடயும் குடும்பம் நடத்துவாராம், அவ என்னடான்னா இவரை வளைச்சுப் போட பிள்ளையைப் பெத்துக்குவாளாம்! இதுதான் உங்க எழவெடுத்த நாகரிகம்னா நான் ப்ளடி ஸ்ரீ லங்கனாவே இருந்துட்டுப் போறேன் சாமி.”

“பவித்ரா! எங் கோபத்தைக் கிளறாத!”

“கோபப்பட வேண்டியது நான்! நான்தான் இப்பக் கோபப்படணும்! நீங்க வாயை மூடிக்கிட்டு நான் சொல்லுறதைக் கேட்கணும்!”

“அதுக்கு வேற யாரையாவது பாரு!”

“ஒவ்வொரு நேரத்துக்கு ஒவ்வொன்னு பார்க்கிறது நீங்க! அது எனக்குப் பழக்கமில்லை!”

“ஓஹோ! அப்போ… எவளோப் பெத்ததை வளர்க்கிறதுதான் உங்கப் பழக்கமோ?!”

“எவ பெத்திருந்தா என்ன, இது உங்க குழந்தைத்தானே? இதே மாதிரி ஒன்னைத்தானே நான் பெத்துக்கணும்னு ஆசைப்பட்டேன்.” ஆங்காரமாக ஆரம்பித்த பவித்ரா கண்ணீரில் முடிக்கவும் இப்போது ரிஷியும் உடைந்து போனான். இது நேரமும் தன்னோடு மல்லுக்கட்டிய மனைவியை அவனால் இலகுவாக எதிர்க்க முடிந்தது. ஆனால் அவள் கண்ணீர் விட ஆரம்பித்த போது ரிஷி துடித்துப் போனான்.

“பவீ!” ஒரே எட்டில் அவளை அடைந்தவன் அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான். அவன் மார்பிலேயே கதறித் தீர்த்தது பெண்.

“நான் எவ்வளவு ஆசையாசையாக் கனவு கண்டேன், அத்தான் மாதிரியே எனக்கொரு பையன் வேணும்னு, ஆனா…” அதற்கு மேல் பேச முடியாமல் பவித்ரா தவித்தாள்.

“இங்கப்பாரு பவி, இப்பவும் எதுவும் கெட்டுப் போகலைம்மா, நீ இல்லைன்னா எனக்கு எதுவுமே இந்த உலகத்துல இல்லைடி, புரிஞ்சுக்கோ.” ரிஷி பேசப் பேச பவித்ரா விம்மி அழுதாள்.

“எனக்குத் தெரியாமலேயே எனக்கு எதிரா எல்லாம் நடந்திருக்கு, இது மட்டும் நியாயமா?” ரிஷி கேட்ட போது பவித்ரா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“அத்தான், ஒன்னை மட்டும் நீங்க நல்லாப் புரிஞ்சுக்கணும், யாரு யாருக்கு எதிரா வேலை பண்ணினா, சதி பண்ணினா இதெல்லாம் எனக்குத் தெரியாது, தெரியவும் வேணாம், எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இப்ப ஒன்னே ஒன்னுதான், உங்க குழந்தை ஒன்னு இப்போ அநாதையா நிக்குது, இதே குழந்தை எனக்குப் பொறந்திருந்தா அதை நான் எப்பிடியெல்லாம் வளர்த்திருப்பேன்? பாவம், இந்தச் சின்னக் குழந்தை என்ன த்தான் தப்புப் பண்ணிச்சு?”

“அதுக்கு?” ரிஷியின் கண்கள் இப்போது இடுங்கியது.

“இதே குழந்தையை நான் பெத்திருந்தா எப்பிடியெல்லாம் வளர்த்திருப்பேனோ… அதே மாதிரி எல்லா உரிமைகளோடவும் இந்தக் குழந்தை வளரணும்!”

“இல்லைன்னா?”

“இல்லைங்கிற வார்த்தைக்கு இடமேயில்லை த்தான், என்னோட இந்த முடிவுக்கு யாரு எதிரியா நின்னாலும்…” பெண் முடிக்காமல் நிறுத்தியது.

“நின்னாலும்?” கூரிய வாள் போல வந்தது ரிஷியின் குரல்.

“எனக்கு அவங்க வேணாம்.” உறுதியாகச் சொன்னாள் பவித்ரா.

“அது நானா இருந்தா?”

“நீங்களும் எனக்கு வேணாம்!” 

“ஓ… என்னைவிட உனக்கு இந்தக் குழந்தை அவ்வளவு பெருசாப் போச்சில்லை?!”

“உங்களோட குழந்தைங்கிறதாலதான் எனக்கு இந்தக் குழந்தைப் பெருசாப் போச்சு.” 

“யாரைத் தண்டிக்கணும்னு நினைக்கிறே பவித்ரா? என்னையா?”

“யாரையும் தண்டிக்க நான் நினைக்கலை த்தான், எனக்குத் தெரிஞ்ச நியாயம் இதுதான்.”

“நான் தப்புப் பண்ணிட்டேங்கிறதுக்காக என்னைப் பழிவாங்க நீ நினைக்கிறே.”

“நீங்க தப்புப் பண்ணிட்டீங்க எங்கிற வார்த்தையிலேயே நான் பாதி நொறுங்கிட்டேனே த்தான், இதுல நான் எங்கிருந்து உங்களைத் தண்டிக்கிறது?”

“அப்போ நீ இப்பப் பண்ணுறதுக்குப் பெயரென்ன?”

“எங் கண்ணு முன்னாடி ஒரு தவறு நடக்கிறப்போ என்னால வேடிக்கைப் பார்க்க முடியாது, ஒரு குழந்தையோட வாழ்க்கை சீரழிஞ்சு போறதை என்னாலப் பார்த்துக்கிட்டுச் சும்மா இருக்க முடியாது.”

“இதால எவ்வளவு பிரச்சினைகள் வரும்னு நீ யோசிச்சுப் பார்த்தியா?”

“அதை நீங்க ஒரு கணம் யோசிச்சிருந்தா இவ்வளவு பிரச்சினை வந்திருக்காதே!”

“……….” ரிஷி பேசவில்லை. அவன் தலை தானாகக் குனிந்தது.

“சாரி… யாரையும் காயப்படுத்தணுங்கிறது என்னோட நோக்கமில்லை, அதுக்காக என்னோட கடமையில இருந்து நான் விலகிடப் போறதுமில்லை.”

“அப்ப உன்னோட முடிவு என்ன பவித்ரா?”

“இந்தக் குழந்தை என்னோடதான் இருக்கும், இதுக்கு அம்மா நான்தான், அம்மாவோட கண்டிப்புல வளர்ந்தே ஒரு குழந்தை இப்பிடித் தறுதலை ஆகியிருக்கே… கண்டிப்பு இல்லாம இந்தக் குழந்தை வளர்ந்தா இன்னும் என்னெல்லாம் நடக்கும்?”

“………..”

“எனக்குத் தெரியாம என்ன வேணும்னாலும் நடக்கட்டும், எனக்கு அதைப்பத்திக் கவலையில்லை, ஆனா எனக்குத் தெரிஞ்சு எந்தத் தவறும் நடக்க வேணாம், உங்களுக்கு வேணும்னா இது ரொம்பச் சின்ன விஷயமாத் தெரியலாம், ஆனா எனக்கு அப்பிடியில்லை த்தான், எம் மனசாட்சி என்னைக் கொன்னுடும்.”

“……..”

“நாளைக்கே நமக்கொரு குழந்தை பொறந்து அது அமோகமா வளரும் போது என்னோட மனசாட்சியே என்னைக் கொன்னுடும், அங்கொரு குழந்தை அநாதையா வளருதே பவித்ரா, அதுக்கு நீ என்ன நியாயம் பண்ணினேன்னு என்னைத் தினமும் சாவடிக்கும்.” 

“………”

“அந்த அநியாயத்தைப் பண்ண என்னால முடியாது.” பவித்ரா தீர்க்கமாக அதற்கு மேலும் பல நிமிடங்கள் பேசினாள். 

ரிஷி எதுவுமே பதில் சொல்லவில்லை. மௌனமாக அமர்ந்திருந்தான்.

 

Leave a Reply

error: Content is protected !!