KKRI – 10

அன்றைய சண்டைக்கு பிறகு இரவு சமையல் வேலைகளை முடித்துவிட்டு  ராகவ் மற்றும் பிரீத்தி இருவரையும் வீட்டிற்கு அழைக்க சென்றாள் மது. ராகவ் ஊரிலிருந்து வந்தும் தன்னுடைய பிளாட்டை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டான். அவனுக்கு உதவியாக பிரீத்தியும் சில வேலைகள் செய்தாள்.

“மது ஊரிலிருந்து எப்போ வந்தா பிரீத்தி..” என்று ராகவின் குரல் வாசல் வரை கேட்கவே “அவ வந்து மூணு நாளாச்சு..” என்றாள் பிரீத்தி சிரித்தபடியே.

அவளின் சிரிப்பிற்கு பின்னாடி இருக்கும் அர்த்தம் புரியாமல் அர்த்தம் புரியாமல் “எதுக்கு பிரீத்தி சிரிக்கிற..” என்று காரணம் கேட்டான் ராகவ்.

“அவ வந்து மூணு நாளுதான் ஆச்சு. ஆனால் இந்த மூன்று நாளில் மூவாயிரம் முறை சண்டை போட்டிருப்பாங்க. இவங்க இருவரும் எப்படித்தான் இப்படி சலிக்காமல் சண்டை போடுறாங்களோ. இவங்க சண்டையை நிறுத்த இடையில் தலையை விட்டவங்க நிலை அதோ கெதிதான்..” என்றவள் சொல்ல ராகவ் வாய்விட்டுச் சிரித்தான்..

‘பிரீத்தியும் இங்கதான் இருக்கிறாளா?’ என்றபடி சத்தம் போடாமல் வீட்டிற்குள் நுழைந்தாள் மது. அவர்கள் இருவரும் பேச்சின் சுவாரசியத்தில் அவளின் வரவை கவனிக்க மறந்தனர்.

“இரண்டும் கீரியும், பாம்புதான் பிரீத்தி. நானும், கிருஷ்ணாவும்  ஒரே பிளாட்டில் இருக்கும்போது மது வந்தால் போதும் இந்த ஜானு கத்தி ஒரு வழி பண்ணிருவா. இவனுக்கு வர கோபத்துக்கு இவனும் அவளோட சரிக்கு சரி சண்டை போடுவான்..” என்று இருவரும் ஒரே வீட்டில் இருந்தபோது நடந்த நிகழ்வுகளை சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்தான் ராகவ்.

அவனுக்கு காபி போட சமையலறைக்கு சென்ற பிரீத்தியோ, “நிஜமாவே நீ சொல்வது உண்மைதான் ராகவ். இரண்டும் போட்ட சண்டை கொஞ்சமா நஞ்சமா? ஆன இந்த மது அந்தர்பல்டி அடிச்சான்னு இன்னும் எனக்கு புரியல..” என்றாள்.

“ஆமா நீ என்ன சொல்ற..” என்றபடி பொருட்களை சரியான இடத்தில் வைத்த ராகவ் முகம் திடீரென்று பிரகாசமாக மாற, “ஓஹோ ஒரு குரலுக்கு அடிமையான மனசு எப்படி இப்படி மாறிபோச்சு என்று கேட்கிற..” என்றவன் சிரித்தபடியே கேட்டான்.

அதற்குள் காபி கப்புடன் சமையலறையிலிருந்து வெளிவந்த பிரீத்தி, “ம்ம் அதுதான் எனக்கும் புரியல..” என்றவள் சோபாவில் அமர்ந்து காபியைப் பருகவே அவளுக்கு எதிரே இருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தான் ராகவ்.

“இருவரும் சண்டை போட்டாலும் ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்க மாட்டாங்க பிரீத்தி..” என்று இருவரும் தங்களை ஒரு ஆள் கவனிப்பதை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.

‘என்ன எங்க இருவரின் தலையும் இங்கே உருளுது..’ என்று மதுவும் அவர்களின் பேச்சில் கவனம் செலுத்த, “இவங்க சண்டை போடும் போது கூட நான் நினைக்கல பிரீத்தி, கிருஷ்ணா இவளுக்காக கல்யாணத்தை நிறுத்துவான். கடைசியில் பயபுள்ள சொன்ன மாதிரியே செஞ்சிருச்சு..” என்றவன் பேச்சுவாக்கில் உண்மையை உளறிவிட்டான்.

முதலில் அவனின் பேச்சு புரியாமல் அவனின் பக்கம் திரும்பிய பிரீத்தி, “டேய் ராகவ் என்னடா சொல்ற?” என்று அதிர்ந்தபடியே விழிவிரிய கேட்டாள்.

அவனிடம் விளக்கம் கேட்டு வைத்த பிறகுதான் உண்மையை உளறிவிட்டது புரிந்து பின்னதலையை தடவிவிட்டு, “ஒன்னும் இல்ல பிரீத்தி..” என்றான் அவசரமாக அவளை சமாளித்தான் ராகவ்.

அவன் சொன்ன அர்த்தம் பிரீத்திக்கு புரியாவிட்டாலும் அதைக் கேட்டுகொண்டிருந்த மது வந்த சுவடே அறியாமல் திரும்பிச் சென்றுவிட்டாள்.

“ஏய் என்னவோ இருக்கு சொல்லுடா..” என்றாள் அவள் மிரட்டலாக கேட்க ராகவ் அமைதியாக இருந்தான். அவனின் மௌனமே சொன்னது அவன் அந்த விஷயத்தை சொல்ல போவதில்லை என்று!

இனியும் இவனிடம் கேட்டு பயனில்லை என்று உணர்ந்தவள் வேறு விஷயங்கள் பேசினார். ராகவ் பேசிய விஷயத்தை பற்றிய யோசனையுடன் வந்த மது அவனின் மீது மோதி நின்றாள்.

அவள் நிமிர்ந்து பார்க்க, “இந்த சாக்லேட்..” என்று அவளிடம் கொடுத்துவிட்டு, “இன்னைக்கு நான் வாங்கிக் கொடுத்துட்டேன். நாளைக்கு நீ வாங்கித் தரணும் ஞாபகத்தில் வெச்சுக்கோ..” என்றவனை அவள் இமைக்காமல் பார்த்தாள்.

அவளின் பார்வையில் தன்னைத் தொலைத்த கிருஷ்ணா தன்னைக் கட்டுபடுத்த முடியாமல் எதிரே நின்றிருந்த மதுவின் கையைப்பிடித்து இழுத்து கண்ணிமைக்கு நொடியில் அவளின் இதழில் ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு, “ஸ்வீட் செம..” என்றவன் அவளைவிட்டு விலகிச் சென்றான்.

ராகவின் பேச்சில் முதலிலேயே குழப்பத்துடன் இருந்தவள் இப்பொழுது இவனின் செயல் புரியாமல், ‘கிருஷ்ணா நீ எப்படி இடையே எதுவுமே நடக்காத மாதிரி நடந்துக்கிற..’ என்ற கேள்வியுடன் அவன் கொடுத்த சாக்லேட்டை வாயில் போட்டுவிட்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.

அதன்பிறகு வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்றது. கிருஷ்ணா மதுவின் வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டை வந்தாலும் அவர்களின் வாழ்க்கை படகு சீராகச் சென்றது.

ஜானு செய்யும் சேட்டைகளை எல்லாம் அவளின் வழியில் சென்று புரிந்து கொள்ள முயன்றாள் மது. இருவரும் வேலைக்கு சென்று திரும்ப வீடு திரும்பினால் சிரிதுநேரமாவது அவர்கள் ஜானுவுடன் விளையாடிவிட்டு தான் மற்ற வேலைகளைக் கவனிப்பார்கள்.

அன்று ஒரு அரசு விடுமுறை என்ற காரணத்தினால் இருவரும் வீட்டில் இருந்தனர். அவனின் கண்டிஷன் போலவே தினமும் ஒரு ரோஜா பூவோடு வந்து அவனை துயில் எழுப்பினாள் மது.

‘கிருஷ்ணா..’ அவனின் தோளைத் தட்டிய மதுவின் விரல்வழியாக உணர்ந்து விழிதிறந்து பார்த்தான் . இளம்பச்சை நிறத்தில் ஒரு காட்டன் புடவையில் அமர்ந்திருந்த மதுவின் முகம் தாமரை மலர் போல மலர்ந்திருந்தது. ஈரம் காயாத கூந்தலை தளர்வாக பின்னியிருந்த மதுவின் ஜடை இடையைத் தொட்டது.

அவளின் உதடுகளில் புன்னகை மலரும் மொட்டு போல அளவாக இருக்க பனிபடர்ந்த ரோஜாபோல இருந்த இதழ்கள் அவனை முத்தமிட அழைத்தது. அவளின் கையிலிருந்து ரோஜா பூவை ஒரு கரத்தில் வாங்கிகொண்டு மறுகரத்தால் அவளை இழுத்து அணைத்தவன்,

“குட் மார்னிங் ஸ்வீட்டி..” என்றவன் அவளின் இதழ்நோக்கி குனிய அவனின் நோக்கமறிந்து அவனைப் பிடித்து தள்ளிவிட்ட மது, ‘காலையில் நீ உன்னோட வேலையைக் காட்டாதே..’ என்று அவளின் மிரட்டலுக்கு  பயப்படும் ஆளா நம்ம கிருஷ்ணா.

“ஒரு கிஸ் கொடுக்க எத்தனை போராட்டம்..” என்று கடைசியில் அவன் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கிய பிறகுதான் தன்னுடைய பிடியைத் தளர்த்தினான்.

‘இவனோட தினமும் இதே ரோதனையா போச்சு..’ என்று திட்டிக்கொண்டே விலகி எழுந்த மதுவின் முகமோ செந்தாமரை மலராக மலர்ந்திருந்தது. அவளின் இதழசைப்பை வைத்தே அவள் சொன்னதைப் புரிந்துகொண்டவன்,

“ஒரு முத்தத்திற்கு உன்கிட்ட இத்தனை போராட்டம் நடத்த வேண்டியிருக்கு. நீ எல்லா பாடமும் பாஸ் மார்க் வாங்குவதற்குள் எனக்கு அறுபது வயசாகாம இருந்த அதுதான் பெரிய விஷயம்..” காலையில் தத்துவம் பேசிய கிருஷ்ணாவின் முகத்தில் டவலைத் தூக்கிப் போட்டாள் மது.

‘முதலில் போய் குளி..’ சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே செல்ல குளியலறைக்குள் புகுந்தான் கிருஷ்ணா.

அவன் வருவதற்குள் காலை சமையலை முடித்துவிட்டு ஜானுவிற்கு ஆப்பிள் கட் பண்ணி வைத்துவிட்டு ‘ஜானு..’ என்றவள் கிளியை நோக்கி கைநீட்ட அவளின் கையைப் பற்றிக்கொண்டது.

அவள் நேராக சென்று ரேடியோவைப் போடவே இருவருக்கும் தகுந்தாற்போல ‘அலைபாயுதே’ படத்தில் பாடல் பாடியது.

“பச்சை நிறமே பச்சை நிறமே.. இச்சை மூட்டும் பச்சை நிறமே..

புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே.. எனக்கு சம்மதம் தருமே” என்று பாடலை ரசித்தபடி அவள் டைனிங் டேபிளில் கொண்டு போய் ஜானுவை இறக்கிவிட இரண்டு சிறகையும் விரித்தபடி சுற்றிச் சுற்றி நடந்தது.

ஒரு முக்கியமான வேலை விஷயமாக வெளியே செல்ல கிளம்பிய கிருஷ்ணா அறையைவிட்டு வெளியே வந்தான். இருவரும் சேர்ந்து டென்ஸ் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து “ம்ம் காலையில் ஆட்டத்தை தொடங்கியாச்சு போல..” என்றவன் அவர்களை நோக்கி வந்தான்.

‘வீட்டில் இருந்தா நான் இப்படித்தான். அதெல்லாம் நீங்க கண்டுக்க கூடாதுன்னு சொல்லிருக்கேன் இல்ல..’ என்ற மது அவனுக்கு பரிமாறிவிட்டு அவனுடன் சேர்ந்து இவளும் சாப்பிட அமர்ந்தாள்.

“என்ன உங்க அண்ணா போன் பண்ணினானா?” என்று கிருஷ்ணா பேச்சைத் தொடங்கினான்.

‘ம்ம் ஆமா நேற்று நைட் செட் பண்ணினான்..’  என்று சாதாரணமாக ஆரம்பித்த மதுவின் மனதில் திடீரென்று அந்த சந்தேகம் எழுந்தது.

“அத்தை மாமா எப்படி இருக்காங்க மது..” என்றவன் கேள்விகளை அடுக்க அவளின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்வதைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தியவன் “மது என்னடா அமைதியா இருக்கிற..” என்று கேட்டான்.

‘எங்க அம்மா அப்பாவை விடு. அத்தை மாமா, தாரிகா எல்லோரும் எப்படி இருக்காங்க? நான் இங்கே வந்து இரண்டு மாசம் முடிய போகுது. ஆனால் நீ இன்னும் உங்க வீட்டைப் பற்றி ஒரு வார்த்தை பேசல..’ மனதில் எழுந்த சந்தேகத்தை அவனிடம் இதழசைவில் கேட்டாள்.

“அம்மா அடிக்கடி போன் பண்ணிட்டுதான் இருக்காங்க. நான் இன்னும் ஊருக்கு போவது பற்றி யோசிக்கல..” என்று பிடிகொடுக்காமல் பேசியவன் பாதி சாப்பாட்டில் எழுந்து கைகழுவச் சென்றான்.

கிருஷ்ணா சாதாரணமாக இருப்பது போல மற்றவர்களின் கண்களுக்கு தெரிந்தாலும் அவனின் மனதில் ஏதோவொரு விஷயம் அழுத்திக் கொண்டிருப்பதை இந்த இரண்டு மாதத்தில் உணர்ந்தாள் மது.

அவன் திரும்பி வரும்வரை பொறுமையாக காத்திருந்த மது, ‘கிருஷ்ணா பதில் சொல்லிட்டு போ..’ என்று அவனின் கையைப்பிடித்து  அவன் செல்வதைத் தடுத்தவள் அவனின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தாள்.

அவளின் பார்வையை எதிர்கொண்ட கிருஷ்ணாவின் விழிகள் ஏதோ சொல்ல முயற்சிக்க,  ‘என்னால் தான் நீ ஊருக்குப் போகாமல் இருக்கிறாயா?’ என்று அவனிடமே கேட்க அவன் மெளனமாக இருந்தான்.

‘நான் என்ன பண்ணினேன்..’ இதழசைவில் புரியாமல் குழப்பத்துடன் கேட்க அவளின் முகத்தை இரு கைகளால் தாங்கிய கிருஷ்ணா அவளின் பார்வையில் தன்னுடைய பார்வையை கலக்கவிட்டான்.

சிலநொடி அமைதிக்கு பிறகு, “நீ ஊருக்குப் போன விஷயம் இன்னைக்கு வரை அவங்களுக்கு தெரியாது. என்னோட கஷ்டம் அவங்களுக்கு தெரிய வேண்டான்னு நினைச்சு மறைச்சிட்டேன். அவங்க எடுத்த முடிவால் அவங்க மகன் வாழ்க்கை வீணாப்போச்சு என்று வருத்தபடுவாங்க இல்ல..” அவன் நிறுத்தி நிதானமாகக் கூறியவனை இணைக்காமல் பார்த்தவளின் முகம் களையிழந்து போனது.

அவளின் நெஞ்சத்தை யாரோ கசக்குவது போல ஒரு வலி உள்ளுக்குள் எழுந்தது. அவனின் பார்வையில் தென்பட்ட நிதானம் அவளை மீட்டெடுக்க, ‘ஸாரி கிருஷ்ணா..’ என்றவளின் கண்கள் தானாக கலங்கியது.

அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டவனோ, “நமக்குள்ள ஆயிரம் பிரச்சனை வந்தாலும் அதை நம்மாதான் பேசித் தீர்க்கணும் மது. நமக்கு இடையே யாரும் வரகூடாதுங்கற சுயநலம் கொஞ்சம் இருக்கு மது..” அவன் அவளின் கூந்தலை வருடியபடி தொடர்ந்தான்..

“என்னோட மனைவி பற்றி யாரும் தப்பா பேசக்கூடாது. நம்ம கல்யாணம் இரண்டு வீட்டோடு சம்மதத்தோடு நடக்கல மது. ருத்ரா திருமணம் நிறுத்தியதும் உன்னை இழுத்து மணமேடையில் உட்கார வெச்சிட்டாங்க..” அதற்கு மேல் பேச பிடிக்காமல் அமைதியானான்.

அவர்களின் திருமணம் நடக்கும் முன்னே நடந்த பல விஷயத்தில் அவளுக்கு சந்தேகம் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் அவள் அதைப்பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அவள்தான் உலகமென்று சுத்தும் கிருஷ்ணாவின் காதல் அவளை யோசிக்க விடவில்லை.

கிருஷ்ணா – ருத்ராவின் திருமணம் ஏன் நின்றது என்ற மதுவின் கேள்விக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.

மது அவனோடு சரிக்கு சரி சண்டை போட்டுவிட்டு அன்று நடக்கும் விஷயத்தை வெளிப்படையாக சொல்வாள். மது இன்றுவரை மனதார தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற உண்மையை அவனும் உணர்ந்தே இருந்தான்.

ருத்ரா ஏன் திருமணத்தை நிறுத்தினாள் என்ற காரணத்தை இன்றுவரை மதுவிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறான். அது தெரிந்தால் மது கோபபடுவாளா?

பாலா என்ற குரலுக்கு சொந்தகாரனை மனதாரக் காதலித்துவிட்டு கடைசி நிமிஷம் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு கிருஷ்ணாவிற்காக தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டதாக நினைத்தாள்.

ஆனால் இன்றுவரை மனதிற்கு அவள் கற்பனை செய்த உருவம் மட்டும் மறையாமல் இருந்தது. அவள் அனுபவித்த அனைத்து வலியையும் அவனுக்கு இந்த ஆறுமாத பிரிவில் கொடுத்துவிட்ட மதுவால் அவனை விலக்கிவிட்டு செல்ல மனமில்லாமல் இன்றும் மௌனமாக இருக்கிறாள்.

இருவரும் உண்மையை மறைத்துவிட்டதாக நினைத்து தங்களுக்குள் ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கின்றனர். இருவரும் எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தனரோ? ஜானு சிறகடித்து பறந்த சத்தம்கேட்டு இருவரும் தன்னிலைக்கு மீண்டனர்.

“சரி மது நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்..” என்றவன் அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.

அவனை எப்படி ஊருக்கு அழைத்து செல்வது என்ற சிந்தனையுடன்  அமர்ந்திருந்த மது நேரமாவதை உணர்ந்து மதிய சமையலை சமைக்கச் சென்றாள்.

அவளின் கவனம் முழுவதும் வேறு எங்கோ இருக்க கேஸில் சுடுதண்ணீர் கொதித்து ஆவியாகிப் போனது. அப்பொழுதுதான் தன்னுடைய சிந்தனையிலிருந்து வெளிவந்த மது சுடுதண்ணீரை இறக்கி வைக்க அது தவறி கீழே விழுந்தது.

வீடு முழுவதும் கொட்டிய சுடுதண்ணியைப் பார்த்த மது, ‘ஐயோ..’ என்று தலையில் அடித்துக்கொண்டே அதை துடைக்க துணி தேடும் பொழுது, “ராதா.. ராதா..” என்றபடி தன்னுடைய தளிர் நடையுடன் அங்கே வந்தது ஜானு.

அவளைப் பார்த்த மதுவின் மனதில் பதட்டம் அதிகரிக்க, ‘ஐயோ ஜானு தள்ளிப்போ கீழே சுடுதண்ணீர் கொட்டியிருக்கு..’ என்றவள் சைகையில் சொல்ல ஜானுவிற்கு எதுவும் புரியவில்லை. அது அவளை உற்றுப் பார்த்துவிட்டு இரண்டடி எடுத்து வைத்தது.

‘ஜானு வாராதடா. என்னோட செல்லம் இல்ல சொல்வதைக் கேளு.’ என்று அவள் அதை தடுக்க வரும் முன்னே கொத்திக்கும் சுடுதண்ணீரில் காலை வைத்துவிட்ட ஜானு “கீ.. கீ.. கீ..” என்று கத்தியது.