KKRI – 17

அத்தியாயம் – 17

இருள் சூழ்ந்த வானத்தை வெறித்துக்கொண்டு தனியாக நின்றிருந்த அவனைப் பார்த்த மதுவின் பார்வை அவனின் மீது கேள்வியாகப் படிந்தது.

‘இந்த நேரத்தில் இங்க என்ன பண்றாரு..’ என்ற கேள்வியுடன் அவனை நெருங்கிய மதுவின் காலடி ஓசையைக் கூட கவனிக்காமல் நின்றிருந்தான். அவளும் அவன் அருகே நின்று நிலா ஊர்வலம் செல்லும் வானத்தைப் பார்த்தாள்.

‘இங்கே வந்த பிறகு ரொம்ப அமைதியாக இருக்கான்..’ என்று மனதிற்குள் நொடித்துகொள்ள அதைத் தடுக்கும் எண்ணத்தோடு காற்றில் கலந்து வந்தது அந்த கானம்..

உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா

இறக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தன் சோகம் தீர்வதற்கு இதுபோல் மருந்து பெரிதில்லையே

அந்தக் குழலைப்போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே..” என்ற பாடலின் வரியில் அவள் தன்னைத் தொலைத்தாள்.

அவள் சொன்ன ஒரு வார்த்தை தான் அவர்களின் பிரிவிற்கு ஆரம்பப் புள்ளியானது. அந்த புள்ளியை வைத்தவள் புள்ளிமானாக வலம்வர அந்த புள்ளியில் கோலம் போட்ட அவனின் வாழ்க்கையோ அவனின் முகத்தை மற்றவர்களுக்கு தவறாக படம்பிடித்துக் காட்டியது.

அந்த பாடலில் இருந்த வலி அவளின் நெஞ்சினைச் சுட விழிமூடி மூடிய நின்றாள். அவளின் கண்ணின் ஓரமாக கண்ணீர் துளி கசிந்தது அவனின் அளவுகடந்த காதலை நினைத்து. தவறு செய்தவள் நிம்மதியாக இருக்க தவறே செய்யாத அவனோ குற்றவாளி கூண்டில் நிற்கிறான். இந்த காலத்தின் விளையாட்டுதான் என்ன? விடை தெரியாத கேள்வி..

இரவு வேளையில் வானில் மேகக்கூட்டம் ஊர்வலம் செல்ல பாதி தேய்ந்த வெண்ணிலாவும் அதன் இடையே மறைந்து மறைந்து பயணிப்பதைப் பார்த்தவனின் உடலைத் தழுவியது தென்றல் காற்று.

அவன் ஊரிலிருந்து வந்த நொடியிலிருந்து இதுவரை அவனிடம் யாருமே பேசவில்லை தாரிகாவைத் தவிர. அந்தளவுக்கு கிருஷ்ணாவின் மீது கோபமாக இருந்தனர் அவனின் குடும்பத்தினர்.

வீட்டிற்குள் செல்ல நினைத்து திரும்பிய கிருஷ்ணா அப்பொழுது தான் அருகே நின்ற மதுவைக் கவனித்தான். அவளின் மூடிய விழிகளின் ஓரமாக கண்ணீர் கசிந்திட, “மது..” என்று அழைத்து அவளின் கைபற்றி அருகே இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் மார்பில் வந்து விழுந்த மதுவை இறுக்கமாக அணைத்துக்கொண்ட கிருஷ்ணா, “என்னடா பயமாக இருக்க..” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

அவள் மறுப்பாக தலையசைக்க, “வேற என்ன மது..” என்றவனின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. அவள் மௌனமாக அவனின் மார்பில் சாய்ந்திருந்தாள். அந்த இரவு நேரம் அவர்களின் மௌன நிலைக்கு ஏகாந்தமானது..

“இங்கே வந்தும் எல்லோரும் உன்னையும் என்னையும் பிரிச்சிருவாங்க என்று பயந்துட்டே வந்த இல்ல. இங்க எல்லோரும் என் மேல்தான் கோபமாக இருக்காங்க. இந்த நிமிஷம் வரை தங்கையைத் தவிர மற்ற யாரும் என்னோட சகஜமா பேசல. இப்போ புரியுதா நான் ஏன் ஆறு மாசம் ஊருக்கே வராமல் இருந்தேன்னு..” என்றவனின் வார்த்தைகள் அவளின் மனதை பதறச் செய்தது.

அடுத்தநொடி வேகமாக நிமிர்ந்த மது அவனின் விழிகளை நேருக்கு நேர் பார்த்து, ‘நான் உனக்கு எதுவுமே செய்யல. அப்புறம் எப்படி என்மேல் இவ்வளவு பாசம்..’ என்று இதழசைவில் கேட்ட மதுவின் கேள்வியில் அவனின் உள்ளக்கதவு திறந்தது.

“கல்யாணத்திற்கு முன்னாடி நான் உன்கூட சண்டை போட்டுட்டே இருந்ததால் என் மனசு உனக்கு புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உங்கூட போடும் குட்டி சண்டையை நான் என்னையே அறியாமல் பலமுறை ரசித்து இருக்கேன்..” என்று சொன்ன கிருஷ்ணா மறந்தும், ‘காதல்..’ என்ற வார்த்தையைச் சொல்லவில்லை என்பதை அவளும் கவனித்தாள்.

‘அதுக்காக நீ இப்படி பண்ணலாமா..’ அவள் இதழசைவில் கேட்க அவளின் கன்னம் தட்டி காரணம் இல்லாமல் சிரித்தவனை அவள் கேள்வியாக நோக்கினாள்.

‘எனக்கு நீ வேணும். உன்னை இழக்க என்னால முடியாது. அதன் உனக்கும் சேர்த்து நானே பழி ஏத்துகிறேன். காதலில் பொய் சொல்வதைவிட காதலி செய்யும் தவறை மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல் மறைக்கும் காதல் கணவன்  நானாகத்தான் இருப்பேன்..’ அவளை இமைக்காமல் நோக்கி அவனின் விழிகள் எதையோ அவளுக்கு உணர்த்த நினைத்தது.

அவனின் பார்வையைப் படிக்கும் முன்னேரே கண்டது உண்மையா என்னும் அளவுக்கு அவனின் பார்வை நொடியில் மாறிக்கொண்டான்.

“வா மது நம்ம கீழே போலாம்..” என்றழைக்க, ‘இந்த பார்வைக்கு அர்த்தம் என்னவாக இருக்கும்?’ என்ற சிந்தனையுடன் மறுப்பாக தலையசைத்து மறுத்தாள் மது.

“ஏன் மது இப்படி அடம்பிடிக்கிற..” என்று அவன் எரிச்சலோடு கேட்க, ‘உன் பார்வை ஏதோ சொல்லுச்சு. அது என்னன்னு தெரியாமல் நான் கீழே வரமாட்டேன்..’ என்றாள் அவள் இதழசைவில் தெளிவாகவே.

“அதெல்லாம் எதுவுமே இல்ல..” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு நகர நினைத்தவனின் முன்னே கைநீட்டி அவனைத் தடுத்தாள் மது. அவனுடைய பிடிவாதத்தைவிட இப்பொழுது அவளின் பிடிவாதம் அதிகமாக இருந்தது.

அதுவும் ருத்ராவின் அம்மா அவளைப் பார்த்தும் கோபப்படாமல் அவளை சமாதானம் செய்தது இப்பொழுது அவளின் மனதில் வந்து போனது.

‘எனக்கு இரண்டு விஷயம் சொல்லு கிருஷ்ணா..’ என்றாள் அவனும் அவளின் மீது பார்வையைப் பதித்தவண்ணம்.

“என்ன..” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான் கிருஷ்ணா.

‘உன்னோட குடும்பத்தைவிட நான் உனக்கு முக்கியமானவளா..’ என்று கேட்க, “ஆமா..” என்றான் அவனும் அழுத்தமாகவே.

‘நீ ருத்ராவைக் காட்டிக்க சம்மதம் சொல்லித்தான் கல்யாண ஏற்பாடு நடந்தது. நான் வந்தபிறகு நீ என்மேல் காட்டிய அக்கறைக்கு காரணம் காதலா?’ என்று அவனை சந்தேகமாகப் பார்த்தவளின் பார்வையில் கிருஷ்ணா சுக்குநூறாக உடைந்து போனான்.

தன்னுடைய நேசத்தை அவள் பொய்யாக மாற்றியதை நினைத்து, “உன்னைக் காதலிச்சிட்டு அவளோட கழுத்தில் தாலிகட்ட நான் என்ன பைத்தியகாரனா? உனக்காகத்தான் நடக்க இருந்த கல்யாணத்தையே நிறுத்தினேன். அன்னைக்கு கல்யாணம் ருத்ராவாக நிறுத்தல. அவளை நான் நிறுத்த வெச்சேன்..” என்று மனதிலிருந்த அனைத்தையும் கொட்டுவிட்டு அவளைவிட்டு விலகிச் சென்றான்.

அவன் வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றிருந்தாள் மது. இதுநாள் வரை மனதில் கேட்ட கேள்விகளுக்கு இன்று அவனிடமிருந்தே பதில் வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் நிஜத்தில் நடந்தது தான் அவளின் இந்த அதிர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

பிறகு ஏதோ நினைவில் மீண்டும் அவளருகே வந்த கிருஷ்ணா, “இங்க இருக்கிற யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்ல. எனக்கு நீதான் முக்கியம்..” என்றவளை நெருங்கி நின்று அவளின் விழிகளை ஊடுருவிப் பார்த்தவன்,

“நீ ஆறுமாதமாக லண்டனில் இருந்தது எனக்கு நல்ல தெரியும். அதெல்லாம் தெரிந்துதான் நம்ம பிரச்சனையை நம்மாலே பேசி தீர்க்கணும்னு அமைதியாக காத்திருந்தேன். நானாக எதுவும் பிளான் பண்ணி பண்ணல. ஆனா எல்லாமே எனக்கு சாதகமாக நடந்துச்சு..” என்று நிறுத்திவிட்டு அவளின் முகத்தை இரு கரங்களில் ஏந்தியவன்,

“நான் செய்தது தவறுன்னு உனக்கு தோன்றினால் நீயே அதுக்கான தண்டனை கொடு.  உன்னை வேற எவனுக்கோ விட்டுகொடுக்க நான் தயாராக இல்ல. நீயே என்னை வெறுத்து ஒதிக்கினாலும் எனக்கு என் மது வேண்டும்..” என்றான் அவன் பிடிவாதமாக

‘கிருஷ்ணா..’ அதிர்வுடன் அவள் அழைத்திட அதை உணரும் நிலையில் அவன் இல்லை. அவன் அவளைவிட்டு விலகிச்செல்ல மாடிப்படிகளின் கைப்பிடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவளின் கண்களில் கடந்தகாலம் படமாக விரிந்தது.

“ஹலோ” என்றவரின் குரலைக் கேட்டதும் தாமரையின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.

“நான் மதுரையிலிருந்து தாமரை பேசறேன் நிர்மலா..” அவர் தன் பெயரைச் சொன்னதும், ‘தாமரை’ என்று புருவம் சுருக்கி யோசித்த நிர்மலா அவரின் குரலை அடையாளம் கண்டுவிட, “செந்தாமரை எப்படி இருக்கிற..” என்று கேட்டார்.

“நான் நல்ல இருக்கேன்..” என்றவரின் குரலில் மகிழ்ச்சி பொங்கியது..

“ம்ம் வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க..” என்று பேச்சு திசைமாற, “எல்லோரும் நல்லா இருக்காங்க..” என்றாள் தாமரை.

“என்னோட நம்பர் எப்படி உனக்கு கிடைத்தது தாமரை?” என்று புரியாமல் கேட்டார் நிர்மலா.

“எல்லாம் நம்ம தங்கியிருந்த வீட்டில் இருந்த பிரபாவதி தான் கொடுத்தாள்” என்றதும் நிர்மலாவின் முகம் மலர்ந்தது.

பத்து வருடங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரே குடியிருப்பில் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தவர்கள். நிர்மலாவும் – தாமரையும் உயிர் தோழிகளைப் போலவே பழகினர். அதன்பிறகு வேலைக்காக சென்னை வந்துவிட்டனர் ராம்குமாரும் நிர்மலாவும்!

இத்தனை வருடங்களுக்கு பிறகும் அவர்கள் பேசிக்கொள்ள வாய்ப்பு அமைந்தது பெரிய விஷயம் கடவுளின் செயல் என்று சொல்லலாம்.

“அவள் சென்னை வரும் பொழுது உன்னை பார்த்தது, அதற்கு பிறகு உன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் சொன்னா. இன்னைக்குதான் அவளை சந்தித்தேன் நம்பர் கொடுத்தால் அதன் உடனே போன் பண்ணிட்டேன்..” என்று வருத்ததுடன் ஒலித்தது தாமரையின் குரல்.

பலவருடங்களுக்கு பிறகு பேசியதால் தன் மனதிலிருந்த பாரத்தை தாமரையிடம் கூறினார்.அதில் மனம் லேசாகிவிடவே அவரின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.

“தானாக நடந்த எந்தவொரு விசயத்திற்கும் யாரும் பொறுப்பாக முடியாது தாமரை நீ இயல்பாக பேசு..” என்றார் நிர்மலாவும் கலங்கும் கண்களை மூடித் திறந்து தன்னைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.

“அண்ணா, விஷ்ணு, மதுமதி மூவரும் என்ன பண்றாங்க..” என்றவர் தயக்கத்துடனே கேட்க, “அவரு வீட்டில் இருக்காரு. விஷ்ணு கனடாவில் வேலை பார்க்கிறான். மது சென்னையில் வேலை பார்க்கிறா..” என்றதும் மறுபக்கம் மௌனம் நிலவியது.

அவளுடைய பெண் இந்த நிலையில் இருக்கும் பொழுது இந்த விசயத்தைச் சொன்னால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று அவரின் மனம் பதறியது.

“தாமரை லைனில் இருக்கிற இல்ல..” என்றதும், “நம்ம கண்ணனுக்கு திருமணம் ஏற்பாடு பண்ணியிருக்கிறோம்.. நீங்க கல்யாணத்திற்கு குடும்பத்துடன் வந்தால் சந்தோஷமாக இருக்கும்..” என்றார் தயக்கத்துடன்.

சிறிதுநேரம் மௌனத்திருக்கு பிறகு,  “என்னால வரமுடியாது தாமரை. அவருக்கு ரொம்ப முடியல. நான் எதற்கும் மதுவிடம் பேசிவிட்டு உங்களுக்கு போன் பண்ணுகிறேன்..” என்றதும்தான் செந்தாமரையின் மூச்சு சீரானது..

அதன்பிறகு தாமரையின் குடும்பத்தை விசாரிக்க, “பெரியவனுக்கு திருமணம் முடிந்து ஏழு வயதில் மகன் இருக்கான். பொண்ணு இன்னும் காலேஜ் முடிக்கல..” என்ற தாமரையின் குரலில் சந்தோஷம் வெளிபடையாக தெரிந்தது.

இருவரும் பேசிவிட்டு போனை வைக்க, மதுவின் சிந்தனையும் அவரை ஆக்ரமித்தது. “நிர்மலா..” என்ற கணவனின் குரல் அவரின் கவனத்தை ஈர்க்கவே எழுந்து அவரின் அறைக்குள் நுழைந்தார்.

“யாரிடம் பேசிட்டு இருந்த..” என்றவரின் பார்வை மனைவியின் மீது நிலைத்தது.

“நம்ம திருச்சியில் ஒரு குடியிருப்பில் இருந்தோம் இல்ல. அங்கே நம்ம வீட்டிற்கு பக்கத்துவீட்டில் தங்கிருந்த செந்தாமரைதான் போன் பண்ணிருந்தாங்க..” என்ற நிர்மலாவின் முகம் மலர்ந்திருந்தது

“ஓ ஆறுமுகம் குடும்பத்தை சொல்கிறாயா?” விழிகளில் பழைய நினைவுகள் வந்து சென்றது. அவர் பேசியதை கணவரிடம் பகிர்ந்து கொண்ட நிர்மலா, “நம்ம கல்யாணத்திற்கு போக முடியாது. அதனால் நம்ம மதுவை அனுப்பி வைக்கலாம்..” என்றார்.

அவரோ மனைவியின் முகத்தை ஆழ்ந்து நோக்கிவிட்டு, “திருமணம் எப்போ?” என்று கேட்க, “இன்னும் ஒரு மாசம் இருக்கு..” என்றவர் கணவரின் சம்மதத்தை எதிர்பார்த்தார். அவளை மதுரை அனுப்புவதில் முனைப்பாக இருந்தார்.

அவளை மீட்டுயேடுக்க அந்த முடிவை எடுத்தார். ஆனால் என்னதான் இருந்தாலும் கணவனின் பதிலுக்காக அவரின் மனம் ஏங்கியது.

“ம்ம் அவளுக்கும் அதுவொரு மாற்றமாக இருக்கும்.. சரி அவளுக்கு விருப்பம் இருந்தால் அவளை அனுப்பி வை..” என்று அரை மனதாகவே சம்மதித்தார். ஆனால் அவரின் மனதில் ஏதோவொரு நெருடல் ஏற்பட்டது.

அந்த அறையைவிட்டு வழியே வந்த நிர்மலாவின் மனம் மாற்றத்தை விளைவிக்க காத்திருந்த நாளும் கைகூடவே, ‘இந்த திருமணத்திற்கு எப்படியும் அவளை அனுப்பிவைக்க வேண்டும்..’ என்று உறுதியாக முடிவெடுத்தார்.

அவர் மகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேலையிலிருந்த மதுமதியின் அவளின் கவனத்தை ஈர்த்தது “கீன்” என்ற ஒலி.

“சீக்கிரம் வீட்டிற்கு வாடா..” என்ற நிர்மலாவின் குறுஞ்செய்தியைப் பார்த்தும் விஷ்ணுவைத் தேடிச் சென்று விவரம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிய மதுவின் மனதில் கேள்விகள் அணிவகுத்து நின்றது. அதே சிந்தனையுடன் ஸ்கூட்டியை எடுத்தவள் சீரான வேகத்தில் வீட்டைநோக்கி பயணித்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்த மது காலிங்பெல்லை அடிக்கவே ஓடிவந்து கதவைத் திறந்தார் நிர்மலா.

‘அம்மா என்ன விஷயம்?’ வந்தும் அவள் தன்னுடைய விசாரணையைத் தொடங்கிவிட, “நீ முதலில் போய் ரிப்ரெஷ் ஆகிட்டு வா சொல்றேன்..” என்றவர் மகளுக்கு காபி போட சமையலறைக்குள் செல்ல நேராக குளியலறைக்குள் புகுந்தாள்.

அவள் குளியலறையிலிருந்து வெளிவரவே டேபிளின் மீதிருந்த காபியை எடுத்துகொண்டு ஜன்னலோரம் நின்றாள். வானில் கார்மேகங்கள் சூழ்ந்திருக்க குளிர் தென்றல் இதமாக வீசிய கணமே மேகங்கள் ஒன்றோடோடு ஒன்று மோதி சண்டையிட்டது.

மெல்ல மழைத்தூறல் போட தொடங்கியது. சிறிதுநேரத்தில், ‘சட சட’ என்று மழையின் வேகம் பொழிய தொடங்கியது..

ஜன்னலின் அருகில் நின்று வெளியே பொழியும் மழையை வேடிக்கை பார்த்துகொண்டே காபியை மெல்ல பருக குளிரின் சூட்டிற்கு அந்த காபி இதமாக இருந்தது.

நிர்மலா மகளின் அருகில் சென்று அவளின் தோளைத் தொட, அவரின் விரல்களின் வழியே உணர்வு பெற்று, வெடுக்கென்று திரும்பிய மகளைப் பார்த்தவரின் முகம் கனிந்துவிட, “இங்கே நின்று என்ன வேடிக்கை வா உன்னோடு கொஞ்சம் பேசணும்..” மகளை அழைத்து படுக்கையில் அமரவைத்தார்.

“என்னோட தோழி செந்தாமரை ஊரிலிருந்து போன் பண்ணியிருந்தாங்க” என்றதும் மீண்டும் அவளின் பார்வை ஜன்னலின் பக்கம் திரும்பியது. அவரைப்பற்றி எந்தவிசயமும் அவளுக்கு தெரியாது. அவர் அம்மாவின் தோழி என்பதை தவிர. அதனாலோ என்னவோ அவளுக்கு அந்த பேச்சில் கவனம் செல்ல மறுத்தது

“அவளோட மகனுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்காங்கலாம்.. நம்மள ஊருக்கு வர சொல்லியிருக்காங்க. என்னால வர முடியாது என்று சொல்லிட்டேன்.. நீ ஊருக்கு போகிறாயா?” என்றவர் மகளின் முகத்தைக் கேள்வியாக நோக்கினார்.

‘இந்த கேள்வியைக் கேட்கதான் என்னை வேலையிலிருந்து வர சொன்னீங்களா?’ என்று இதழசைத்தாள் மகள்.

“ஆமாம்மா.. உனக்கும் ஒரு மறுத்தல் கிடைக்கும்..” என்றவர் மகளை கேள்வியாக நோக்க அவளின் முகத்தில் எந்தவொரு மாறுதலும் இல்லை. அவளின் முகம் தெளிந்த நீரோடை போல தெளிவாக இருந்தது.

சிறிதுநேரம் சிந்தனைக்கு பிறகு அவள் மறுப்பாக தலையசைக்க, “இல்ல மது நீ இங்கே இருந்து அப்பாவை நினைத்து வருத்தபடுவதை விட, அங்கே போய் கொஞ்சநாள் இருந்துட்டு வாம்மா.. நீ வருவதற்குள் அப்பாவுக்கும் சரியாகிவிடும்..” அவர் எடுத்துச் சொல்ல மௌனமாகவே இருந்தாள்.

பிறகு, ‘நான் ஊருக்கு போகிறேன்..’ என்று இதழை மட்டும் அசைத்துவிட்டு அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு கலகலவென்று சிரித்துவிட்டு ஓடிய மகளை பார்த்து, அவரின் கண்கள் கலங்கியது.