UkU 1

UkU 1

உயிர் காதலே உனக்காகவே…!

வாழ்வில் பல உணர்வுகள், பல விதமாகத் தோன்றினாலும், காதல் என்ற ஒன்று மட்டும் நம் உயிரில் கலக்கும் அற்புதமான உணர்வு.
எனது 25 வருட வாழ்க்கையில் நான் உணர்ந்திராத அந்த அற்புத உணர்வுகள் அவள் முகத்தைப் பார்த்த நொடி பொங்கிப் பெருக, அந்த நொடி என்னுள் ஆழமாய் அழுத்தமாய் தன் தடத்தைப் பதித்தவளை தடுக்கவியலாமல் தவித்தபடியிருந்தேன்.

ஆணென்ற கர்வம் அடியோடு அழிந்து போக, அவளிடம் மண்டியிட்ட மனதை மீட்கும் வழியறியாது தவிக்கும் சுகமான அவஸ்தையை எனக்குப் பரிசளித்தவள். அவள் என் தேவதை.

போன ஜென்ம பந்தத்தின் விட்டகுறை, தொட்டகுறையோ? பார்த்த முதல் பார்வையிலேயே ஒருத்தியால் இப்படி கொள்ளையடிக்க முடியுமா…? என்னுள் நிகழும் மாற்றங்கள் அதிசயமாய் இருக்க… வாழும்நாள் முழுமைக்குமான பந்தம் இதுவென உள்ளம் உறுதி செய்ய…

அவளைப் பார்த்த நொடிகளில் இருந்து என் வாழ்க்கை நிகழ்வுகளின், உள்ளத்து உணர்வுகளின் எழுத்து வடிவமாய் இக்குறிப்பேடு..

காதலின் நினைவலைகள்…!

என் தேடல் நீயென்றால்
உன்னில் தொலைவதும்
ஒரு சுகமே…!

18. 05.2009

திருவண்ணாமலை… அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையோனின் திருமேனியே மலையாய் இருப்பதாக ஐதீகம். பனிப்புகை சூழ்ந்த மலை மெல்லிய வரி வடிவமாய்த் தெரிந்து ஆசீர்வாதம் செய்வது போல இருந்தது.
பஸ்ஸை விட்டு இறங்கி பாதம் மண்ணில் பட்டதில் இருந்து மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. ‘ உன் உயிரின் சரிபாதியை சந்திக்கப் போகிறாய்’ என்று உள்ளுணர்வுகள் உணர்த்தும் செய்தி ஏனோ அப்பொழுது அந்த நொடி எனக்குப் புரியவில்லை.

பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகமின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்டது. கண்ணாடியைத் துடைத்து அணிந்து கொண்டேன். குளிர்க் காற்று போட்டிருக்கும் உடையை மீறி உடலைச் சிலிர்க்கச் செய்ய,
சிலிர்த்த உடலைக் குறுக்கே கைகளைக் கட்டி அடக்கியபடி, இரவெல்லாம் செய்த பயணத்தின் விளைவாக உடல் வலிக்க, தானாக முறுக்கிக் கொண்டது உடல்.
அணிந்திருந்த ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடியை ஒற்றை விரலால் சற்று நளினமாக ஏற்றி விட்டுக் கொண்டபடி, என் ஒற்றை பேக்பேகைத் தோளில் போட்டு கொண்டு, இரண்டு பெரிய ரோலர் சூட்கேஸ்களை இரண்டு கைகளால் பற்றி உருட்டியவாறு பஸ்நிலையத்தைவிட்டு வெளியே வந்தது என் கால்கள்.
இருள் பிரியாத அதிகாலையில் மலைக் காற்று எலும்புக்குள் ஊடுருவ பற்கள் தானாகத் தந்தியடித்தன. சுற்றிலும் சுழன்ற பார்வை டீக்கடையில் நிலைக்க, சற்றுத் தொலைவில் இருந்த டீக்கடையை நோக்கி மெல்ல நடந்து போனேன்.

“அண்ணா… ஒரு டீ…”
குளிருக்கு இதமாக கொதிக்கக் கொதிக்க இருந்த டீயை உதடுகளைக் குவித்து லேசாக ஊதி நிதானமாக உறிஞ்சிக் குடித்த பின், கண்ணாடி டம்ளரை வைத்து விட்டு சில்லரையை மேலே வைத்தபடி,
என்னுடையப் பையைத் திறந்து, அதனுள் இருந்த திருமணப் பத்திரிக்கையை எடுத்து, அதன் மீது விழிகளை ஓட்டிக் கொண்டே,

“அண்ணா… ராஜராஜேஸ்வரி திருமண மஹால் எப்படிப் போகனும்?”

“இங்கயிருந்து கொஞ்சம் தொலைவு தம்பி… நீ ஆட்டோல போயிடு. இருபத்தைஞ்சு ரூபாய் கேட்பான்.”

“ஓ… சரிண்ணா. தேங்க்ஸ்.”
சாலையின் எதிர்புறத்தில் ஆட்டோக்கள் அணிவகுத்திருக்க, நிதானமாக நடந்து சாலையைக் கடந்து, ஒரு ஆட்டோவைப் பேசி அமர்த்திக் கொண்டு, ஆட்டோ ஓடும் பாதையில் விழிகளை ஓட்டிக் கொண்டே வந்தேன்.

பழக்கமில்லாத ஊர் வேடிக்கைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. கோவிலை அரை வட்டம் சுற்றிய ஆட்டோ தன் பயணத்தைத் தொடர்ந்தது. என்னுடைய நோக்கியா அலைபேசி இசைக்கவும் எடுத்து நம்பரைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது.

ஒன்றரை வருடங்கள் கழித்து வெளிநாட்டிலிருந்து வரும் என் வருகைக்காக குடும்பமே வாசலில் நிற்கும் என்று தெரியும்தான், அதற்காக இன்றுமா…? எங்கள் வீட்டு தேவதையின் திருமணத்திற்கு அல்லவா நான் வந்து கொண்டிருப்பது. அலைபேசியின் அழைப்பை ஏற்றேன்.

“ஹலோ… நான் ஊருக்குள்ள வந்துட்டேன் பெரியப்பா.”

“…”

“ஆட்டோ ஏறியிருக்கேன். நானே வந்துடுவேன் பெரியப்பா.”

“…”

“அதெல்லாம் சுகமா இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துடுவேன். நேர்ல பேசிக்கலாம் பெரியப்பா.”

அலைபேசியை அணைத்து பாக்கெட்டினுள் வைத்தேன். சற்று நேரத்தில் திருமண மண்டபம் வந்துவிட வாசலில் இறங்கும் போதே என்னைச் சூழ்ந்து கொண்டனர் அனைவரும்.

எனது குடும்பத்தைப் பற்றி சொல்லவில்லையே நான்… ஆச்சி, அய்யா(தாத்தா)வுக்கு நான்கு பிள்ளைகள். முதலில் பெண்ணும் பிறகு வரிசையாக மூன்று ஆண் பிள்ளைகள் அவர்களுக்கு.

பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, என் அம்மா, அப்பா, அனைவரது பிள்ளைகள் எல்லோரும் ஒரே கூட்டுக்குடும்பமாக இருக்கிறோம்.

மதுரையில் மேலமாசி வீதியில் பாண்டியன் குடும்பத்தார் என்ற பெயரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. புகழ் பெற்ற துணிக்கடை மற்றும் பாத்திரக்கடை நகைக்கடைக்கு உரிமையாளர்கள் நாங்கள். எனது அய்யா சங்கரபாண்டியன் உருவாக்கிய ஸ்தாபனங்கள் இவை.
அவரது வயதின் காரணமாக தளர்ச்சியடைய, அவரை ஓய்வெடுக்கச் செய்து விட்டு. எனது பெரியப்பா சித்தப்பா அப்பா மாமா அனைவரும் இணைந்து பார்த்துக் கொள்கின்றனர். பெரியப்பாவிற்கு இரண்டு பெண்கள் என்னுடைய அக்காள்கள் திருமணம் முடித்து உள்ளூரிலேயே வசிக்கிறார்கள்
எனது தந்தைக்கு நான் மட்டுமே. வெகுநாட்களாக குழந்தையில்லாமல் தவமாய் தவமிருந்து பெற்ற மகனாம் நான்.

எனது சித்தப்பாவுக்கும் இரண்டு பெண்கள். அவர்களும் என்னைவிட வயதில் மூத்தவர்களே.

இருவருக்கும் திருமணம் முடிந்து மதுரையை ஒட்டிய அழகர் கேவிலில் இருக்கின்றனர். ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருக்கும் எனது சகோதரிகள் இருவரையும் மணமுடித்துக் கொடுத்திருக்கிறோம்.

அத்தைக்கு மூன்று பெண்கள் அவர்களும் என்னைவிட வயதில் மூத்தவர்களே. மூத்த மதினிக்கும் இரண்டாவது மதினிக்கும் மதுரைக்குள்ளே வரன் அமைய, அவர்களை நல்லபடியாக திருமணம் செய்து கொடுத்தாயிற்று.

மூன்றாமவள் என்னை விட ஆறுமாதங்கள் மட்டுமே மூத்தவள். அவளுக்குதான் உள்ளூருக்குள் வரன் அமையாமல் வெளியூரில் தகைந்திருக்கிறது. அவளுடைய திருமணத்திற்குதான் திருவண்ணாமலை வந்திருக்கிறேன்.

சகோதரிகள் நான்கு பேர், அத்தை மகள்கள் மூன்று பேர் இருந்தாலும் குடும்பத்தின் ஒற்றை ஆண்வாரிசான என் மீது அனைவருக்கும் பிரியம் அதிகம். அனைவரும் ஒன்றாகவே வளர்ந்ததால் எங்களுக்குள் அத்தை மகள் மாமன் மகன் உறவில்லாமல் சகோதர பாசமே நிறைந்திருந்தது.
இப்பொழுதும் நல்லநாள் விசேஷம் என்றால் பெரிய வீட்டுக்கு அனைவரும் கூடிவிட திருவிழா போல விருந்தும் களிப்புமாக இருக்கும் எங்கள் வீடு.

ஆட்டோவில் வந்து மண்டப வாசலில் இறங்கியதும் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்க, அவர்களது அன்பு மழையில் சுகமாக நனைந்து கொண்டபடி, அனைவருக்கும் பதில் கூறிக்கொண்டே கூட்டத்தில் எனது பார்வை ஆச்சியைத்தான் தேடியது.
அவரைத் தேடிக் கொண்டே மண்டபத்தினுள் நுழைந்தேன். பொதுவாக அம்மாவைப் பெற்றவரைத்தான் ஆச்சி என்று கூப்பிடுவார்கள்.

ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்றாக வளர்ந்ததால், எனது அத்தை மகள்கள் கூப்பிடுவதைப் பார்த்து, நாங்கள் அனைவரும் அவரை ஆச்சி என்று கூப்பிடவும், அதை யாரும் மாற்றவும் இல்லை.

ஆச்சிக்கு சற்று முதிர்ந்த வயது. என் மீது மிகுந்த பாசம் உடையவர். என் கண்களின் துழாவலிலே கண்டு கொண்டார் பெரியப்பா.

“ஆச்சியத் தேடுறியா ராசா? வயசாயிடுச்சி இல்ல… பயணம் கொஞ்சம் ஒத்துக்கல தூங்கறாங்க.”
பெரியப்பாவின் பதில் என்னை வருத்தப் படுத்தியது.

“நம்ம ஊர்ல இல்லாத மண்டபமா? அங்க கல்யாணத்தை வைக்க வேண்டியதுதானே பெரியப்பா? இவ்வளவு தூரம் ஆச்சியும் அய்யாவும் பயணம் பண்ணா உடம்பு தாங்குமா?”

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அவங்க ஊர்லதான் கல்யாணம் வைக்கனும்னு சொல்லும் போது என்ன செய்ய ஆனந்தா… ?

ஆச்சியும் அய்யாவும் திடமாதான் இருக்காங்க. உன்னைப் பார்த்ததும் ஆச்சி துள்ளி குதிக்கத்தான் போறாங்க. நீ வந்ததும் எழுப்பி விடச் சொன்னாங்க.”

எனது தந்தையின் பதிலைக் கேட்டு, ஏனோ எனக்குக் கடுப்பாக இருந்தது. மாப்பிள்ளை வீட்டினர் மிகுந்த கெடுபிடியானவர்கள் போல என்று எண்ணிக் கொண்டேன். பெண் வீட்டில் திருமணம் செய்வதுதானே வழக்கம்… இவர்கள் எப்படி இங்கு திருமணம் வைக்கச் சொல்லலாம் என்று பொருமிக் கொண்டது உள்ளம்.
என்னைச் சமாதானப் படுத்தும் விதமாக, “ இங்கன மாப்பிள்ளை வீட்டுக்காரவுக பெரிய ஆளுக… அவக பக்கம் நிறைய ஆளுக வருவாகன்னு இங்கயே வைக்கச் சொல்லிட்டாக. நமக்கு ஒரு சிரமமும் வைக்கலப்பு… அவகளே எல்லா ஏற்பாட்டையும் பார்த்துக்கிட்டாக.” மாமா பதில் கூறினார்.

“அவங்க இங்க பெரிய ஆளுங்கன்னா நாம நம்ம ஊர்ல பெரிய ஆளுங்க மாமா. நீங்க இங்க கல்யாணம் வைக்க ஒத்துகிட்டு இருக்கவே கூடாது.”

“சரிடா பெரிய மனுஷா… வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சதும், பெரிய மனுஷத் தோரணை வந்துடுச்சி எம்புள்ளைக்கு… அடுத்து உன்னோட கல்யாணத்தை நம்ம ஊர்லயே வைக்கனும்னு நாம பொண்ணு வீட்டுல கன்டிசன் போட்டுடலாம்.
சுடுதண்ணிக்கு ஸ்விட்ச் போட்டிருக்கேன். போய் முதல்ல பயண அலுப்பு தீரக் குளி ராசா. அதுக்குள்ள ஆச்சி எழுந்துடுவாங்க.”

என் உடைகளை எடுத்துக் கொடுத்து பெரியம்மா அதட்டியதும் குளிக்கச் சென்றேன். மெல்ல விடிந்து ஆரஞ்சு வண்ண சூரியக்கதிர்கள் எங்கும் பரவிக் கொண்டிருந்தது.
நல்ல வெள்ளை நிறத்தில் முழுக்கைச் சட்டையும் க்ரே கலர் பேண்ட்டும் அணிந்து, தலையைச் சீவி, கண்ணாடியில் முகத்தைச் சரிபார்த்து அறையை விட்டு வெளியே வந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட அறை முதல் மாடியில் இருந்தது.

திருமண மண்டபத்தை அளந்தது எனது விழிகள். ‘ம்ம்… பரவாயில்லை நல்ல பெரிய மண்டபம்தான்’ மனதினுள் நினைத்தபடி, மாடி பால்கனியில் இருந்து கீழே எட்டிப் பார்த்தேன். என் வயதை ஒத்த நான்கைந்து ஆண்கள் நின்றிருந்தனர்.

மாப்பிள்ளை வீட்டினராக இருக்கக்கூடும் என்று எண்ணியபடி நின்றிருந்த வேளையில், மேல் மாடியில் இருந்து என்மீது சில்லென்று ஒரு வாளித் தண்ணீர் ஊற்றப் பட்டது. வெறும் தண்ணீர் மட்டுமல்ல ஏதோ சாயம் கலந்த தண்ணீர்.

“யூ… ஷிட்… நான்சென்ஸ்… “ கடுப்புடன் பல்லைக் கடித்தபடி நிமிர்ந்து பார்க்க, ஒற்றை ஆள்காட்டி விரலை வாயில் வைத்தபடி அதிர்ந்து நின்றிருந்தாள் ஒரு பெண். கண்களிலும் கண்ணாடியிலும் சாயநீர் வழிய நெற்றிக்கண்ணைத் திறக்காத குறையாக நான் முறைக்கவும்,

பதட்டத்துடன், “அச்சோ… ஓடு… ஓடு…“ என்றபடி அப்பெண் ஓடிப்போக, மாடி விளிம்பில் இருந்த காலி வாளி என்னை நோக்கி வேகமாக வந்தது…
அலையடிக்கும்….

உயிரின் வேட்டை ஆரம்பம்…!

நாள்… 10. 12. 2019. நேரம்… அதிகாலை மணி 6.30.

பெங்களூரு லால்பாக் சாலை அந்தக் காலையிலும் தீ பிடித்தாற் போல பரபரப்பாக இருந்தது. சாலையோரத்தில் இருந்த குல்மொஹர் மரங்கள் பரபரப்பைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் பூக்களை உதிர்த்தபடி இருந்தது. போக்குவரத்து போலீசாரும் பரபரப்பாகச் செயல்பட்டு போக்குவரத்தை வேறு திசைக்குத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தனர்.
போலீசுக்குக் கட்டுப் படாமல் மக்கள் கூட்டம் தள்ளுமுள்ளுடன் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தற்காலிகமாக தடுப்பு அமைத்து சுற்றிலும் கயிறு கட்டி மக்களைத் தடுக்க முயற்சி நடந்து கொண்டிருந்தது.
அதன் நடுவே ஒரு மனிதன் ஏடாகூடமாக கீழே விழுந்து கிடந்தான். அவனது வயிற்றுப் பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறி குளமாகத் தேங்கி உறைந்து போயிருந்தது.

அவனைச் சுற்றி சாச்பீசால் கோடு கிழிக்கப்பட்டு இடம் மார்க் செய்யப் பட்டு இருந்தது. அரசு மருத்துவர் வரவழைக்கப் பட்டு உடனடியாக ஸ்பாட் போஸ்ட்மார்ட்டம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

கையுறை அணிந்த சிலர் லென்சை வைத்துக்கொண்டு பரபரப்பாக அந்த இடத்தில் ஏதேனும் தடயங்கள் கைரேகைகள் கிடைக்குமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே, சைரன் வைத்த வாகனங்களில் உயரதிகாரிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

எப்படியாவது தங்கள் பத்திரிக்கையில் முதலில் செய்தி வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் கேமராவோடு முண்டியடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள், அந்தப் பகுதியை தங்களது ப்ளாஷ் லைட்டுகளால் வெளிச்சத்தில் மின்னச் செய்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் இருந்தவர்களும் தங்கள் அலைபேசியில் புகைப்படங்களைப் பதிவு செய்து சுடச் சுட இணையத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். நொடி நேரத்தில் நூறு அலைபேசிகளுக்கு மேல் பரவி அந்த நிமிடத்தின் பரபரப்பான செய்தியாக மாறியது இந்தப் புகைப்படங்கள்.

அந்த இடமே ஒரு போர்க்களம் போல பரபரப்பாக இருந்தது. உள்ளே என்னதான் நடக்கிறது என்று எட்டிப் பார்க்க முயன்று தோற்ற ஒருவன் அருகில் நின்றவன் தோளைச் சுரண்டி கன்னடத்தில்,

“என்னய்யா ஆச்சு? செத்தது யாரு? எதுக்கு இவ்வளவு போலீசு குவிஞ்சு கிடக்குது?”

“நம்ம ஊர் சப் கலெக்டர யாரோ குத்திக் கொன்னுட்டாங்க. இன்னிக்கு காலையிலதான் நடந்திருக்கு. அதான் இவ்வளவு போலீசு.” கன்னடத்திலே பதிலைக் கூறியவன் மீண்டும் மும்முரமாக வேடிக்கை பார்க்கத் துவங்கி விட்டான்.

(பெங்களூரைப் பொருத்தவரை எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும், மற்றவர்களிடம் அவர்கள் பேசும் மொழி பெரும்பாலும் கன்னடம்தான். ஆனால் இங்கு நாவலில் வசனங்கள் அனைத்தும் நமது வசதிக்காக தமிழில் உள்ளது.)

இவ்வளவு பரபரப்புக்கிடையிலும், நிதானமாக ஸ்பாட் போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவரிடம் பேசி தகவல்களைப் பெற்றுக் கொண்ட பெங்களூரு மாவட்ட சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை அதிகாரி, பத்திரிக்கையாளர்களை நோக்கி வந்தார்.

முண்டியடித்துக்கொண்டு அவரை நெருங்கிய பத்திரிக்கையாளர்கள் சரமாறியாகக் கேள்விகளை எழுப்பினர். அவர்களைக் கையமர்த்தியவர் பேசத் துவங்கினார்,

“காலையில் வாக்கிங் வந்த சப் கலெக்டர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலையாளியைத் தேடும் பணி தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. விரைவில் கொலையாளியைக் கைது செய்வோம்.”

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால இந்தக் கொலை நடைபெற்று இருக்குமா?” பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப,

“விரிவான விசாரணையில் அதுகுறித்த தகவல்கள் தெரியவரும்.”

“தடயம் ஏதாவது கிடைத்ததா?”

“கொலைக்கான மோட்டிவ் என்னவாயிருக்கும்னு உங்க கருத்தைச் சொல்லுங்க?”
தன்னைச் சூழ்ந்த கேள்விகளைப் புறந்தள்ளியவர், “தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு விரைவாக விசாரணை முடுக்கி விடப்படும்.”
பதிலைக் கூறியவர் மேற்கொண்டு எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் விடுவிடுவென்று சென்று தனது வாகனத்தில் ஏறிச் சென்றார்.

கொலை செய்யப்பட்ட சப்கலெக்டரின் உயிரற்ற உடலும் விரிவான பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு கூடியிருந்த கும்பல் கலைக்கப்பட்டது. சற்று நேரத்தில் அந்த சாலையின் போக்குவரத்தும் ஒழுங்கு செய்யப்பட்டது.

லால்பாக் அருகாமையில் உள்ள ஜெயாநகர்…. புகழ் பெற்ற தனியார் பெண்கள் விடுதி… நான்கு மாடிக் கட்டிடத்துடன் கம்பீரமாக நின்றிருந்தது. கண்டிப்புக்குப் பேர் போன விடுதி அது. கல்லூரியில் பயிலும் மற்றும் வேலைக்குப் போகும் பெண்கள் பணம் கட்டித் தங்கியிருந்தனர்.

அந்த விடுதியின் இரண்டாவது மாடியில், தலைக்குக் குளித்து ஈரமாக இருந்த தலைமுடியை ஹேர் ட்ரையர் உதவியால் காய வைத்தபடி பேசிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

அவள் சுஜிதா. தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். உடலோடு வைத்துத் தைத்தது போல ஒரு ஜீன்ஸ் பேண்ட்டும், சற்றுத் தொளதொளவென்ற விதத்தில் மேல்டாப்பும் அணிந்திருந்தாள்.
மாநிறத்திற்குச் சற்று கூடுதலான நிறமும், திருத்தப்பட்ட புருவங்களும், சற்று அளவில் பெரிய கண்களும், குளிரில் கன்றிச் சிவந்த கன்னங்களும், வடிவான இதழ்களும் அவளை அழகியாகக் காட்டின. அலையலையாக இருந்த தலைமுடியைத் தோள் வரை வெட்டியிருந்தாள். அது அவளை நவநாகரீகப் பெண்ணாகக் காட்டியது.

அந்த அறையில் இருந்த கட்டிலில் முகம் வெளியே தெரியாதவாறு கம்பளியால் முக்காடு போட்டுக் கொண்டு படுத்திருந்தாள் ஒரு பெண். அவள் ஹரிணி.

ஹரிணிகார்த்திகேயன்… அவளது மேனி மெலிதாக நடுக்கத்துடன் இருந்தது. உள்ளே இதயம் முரசு கொட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் அந்த அறையை பங்கிட்டு தங்கியிருந்தனர்.

“ஹரிணி… எழுந்திரிடி… காலேஜ்க்கு டைம் ஆகிடுச்சி. இப்பப் போனாதான் டிபன் சூடா இருக்கும். ருசி இல்லைன்னாலும் கடகடன்னு முழுங்கிட்டு வந்திடலாம். ஆறிடுச்சின்னா வாயில வைக்க முடியாதுடி.”

தோழியிடம் இருந்து பதில் வராமல் போகவும், அவளது கம்பளிப் போர்வையை லேசாக இழுத்தவாறு,

“உடம்புக்கு ஏதும் பண்ணுதா…? இந்தக் குளிர்ல வாக்கிங் போகாதன்னு சொன்னா கேட்குறியா? போயிட்டு வந்து சுருண்டு படுத்திருக்க. இன்னைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு. கண்டிப்பாப் போகனும் எழுந்திரிடி.”
அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே அறை வாசலில் அரவம் கேட்டது. பக்கத்து அறையிலிருந்து தீபிகா வந்திருந்தாள்.

“ஹேய் சுஜி… ஹரிணி… உங்களுக்கு விஷயம் தெரியுமா? பெங்களூர் சிட்டி சப்கலெக்ட்டர யாரோ கொன்னுட்டாங்களாம். இங்க பாருங்க ஃபோட்டோஸை. லால்பாக் ரோடு ஹெவி ட்ராஃபிக்கா இருக்குன்னு சொன்னாங்க.” என்றபடி தனது அலைபேசியில் இருந்த புகைப்படங்களைக் காட்டி பகிர்ந்து கொண்டாள்.
அதுவரை முக்காடு போட்டு படுத்திருந்த ஹரிணி,

“என்னது…? கலெக்டரா…?” என்றபடி அதிர்ச்சியோடு எழுந்து அமர்ந்தாள். வேகமாக தீபிகாவின் கையில் இருந்த அலைபேசியை வாங்கி அந்தப் படங்களைக் கூர்ந்து பார்க்கலானாள்.
ஹரிணி இருபது வயது இளம் பெண். அப்பா கார்த்திகேயன் அம்மா சுபத்ரா. லால்பாக் சாலையில் உள்ள கல்லூரியில் இளநிலை ஊடகவியல் இறுதியாண்டு படிக்கும் மாணவி. சென்ற வருடம்வரை பெங்களூரில் பெற்றோரோடு வசித்து வந்தவள்.

அவளது தந்தைக்கு கிடைத்த பணியிடமாற்றத்தால் பெற்றோர் தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட, இவள் இந்த ஒரு வருடப் படிப்பை நிறைவு செய்வதற்காக விடுதியில் தங்கியிருக்கிறாள்.

நல்ல வெளுப்பான நிறமுடைய அவளின் முகம் மேலும் வெளுத்திருந்தது. திருத்தமான முகத்தில் இருந்த அழகான கண்களில் லேசான அதிர்ச்சியும் பயமும் சரிவிகிதத்தில் இருந்தது. அதிர்ச்சியில் லேசாகப் பிளந்திருந்த அதரங்கள் செர்ரியை நினைவூட்டியது.

தோள்வரை இருந்த கூந்தலை ஒன்று சேர்த்து சற்று உயரமாக குதிரைவால் கொண்டையாக்கியிருந்தாள். காதில் அளவில் சற்று பெரிதான வளையங்கள். கருநீல நிறத்தில் வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட ட்ராக் பேண்ட்டும் ஹூடி ஜாக்கெட் ஒன்றும் அணிந்திருந்தாள்.
அவளது அதிர்ந்த முகத்தைப் பார்த்து, “இவ ஏன்டி இவ்வளவு அதிர்ச்சியாகுறா?” ஆச்சர்யப்பட்ட தீபிகா… “ட்ராஃபிக்ல நீந்தி காலேஜ் போக லேட் ஆகும். பேசாம மட்டம் போட்டுடலாமா?” என்று கண்ணடிக்க…

“உதை வாங்குவ… விவேகன் சார் கிளாஸ் இருக்கு. முக்கியமான கிளாஸ். கிளம்பு போய்.”
அலைபேசியை தீபிகாவிடம் தந்ததும் அவள் சென்றுவிட, தலையில் கை வைத்துத் தாங்கியபடி கட்டிலில் அமர்ந்திருந்த ஹரிணியை வினோதமாகப் பார்த்த சுஜிதா,

“என்னடி ஆச்சு உனக்கு?”
ஒன்றுமில்லை என்பது போலத் தலையை அசைத்தவள் மௌனமாகவே இருக்கவும்,

“ஹரிணி… கிளம்பலையா காலேஜ்க்கு? தலை வலிக்குதா? டேப்லெட் போடறியா?” வேண்டாம் என்பது போலத் தலையை அசைத்தவள், மெதுவாக நிமிர்ந்து,

“சுஜி… நான் அந்தக் கலெக்டர் கொலையை நேர்ல பார்த்தேன்டி.” ஹரிணியின் வார்த்தைகள் நடுங்கியபடி வெளிவந்தது.
ஹரிணியின் பேச்சை நம்ப முடியாத போதும் பயத்தில் மிரண்டிருந்த கண்கள் உண்மை பேசுவதைப் புரிந்து கொண்டாள் சுஜி.

வேகமாகச் சென்று அறைக் கதவைச் சாற்றியவள், அவளருகே அமர்ந்தாள்.

“என்னடி சொல்ற? நிஜமாத்தான் சொல்றியா?”

“சத்தியமா சொல்றேன். காலையில லால்பாக் ரோடுல வழக்கம் போல வாக்கிங் போகும் போது ஒருத்தன் அவரை கத்தியாலக் குத்தறதைப் பார்த்தேன்டி. ஆனா அப்ப அது கலெக்ட்டர்னு எனக்குத் தெரியல. இப்ப ஹரிணி பிக்ஸ் காட்டினா இல்ல… அப்பதான் தெரிஞ்சது. இப்ப என்னடி செய்யறது?” பதட்டத்தோடு வந்தன வார்த்தைகள்.
அவளது பேச்சில் அதிர்ந்து போன சுஜி, “கொலைப்பண்ண ஆளை நீ பார்த்தியா?”

“ம்ம்ம்…” என்றபடி குழப்பமான பார்வையோடு மண்டையை ஆட்டியவளைத் தானும் குழப்பமாகப் பார்த்த சுஜி,

“என்னடி சொல்ற…? பார்த்தியா இல்லையா?”

“பார்த்தேன்டி… ஆனா அவன் கறுப்பு கலர்ல லாங் கோட் போட்டிருந்தான். தலையில ஹூடி… அதுமட்டுமில்லாம முகத்துல மங்கி கேப்… அவனோட கண்ணு மட்டும்தான் வெளிய தெரிஞ்சுது. கைல க்ளவுஸ் போட்டிருந்தான். கத்தியால குத்திட்டு…. அந்தக் கத்தியை அவன் கோட்லயே துடைச்சிட்டு, அவன் கோட்டுக்குள்ள போட்டுகிட்டான். முகம் சுத்தமா தெரியல.”

“ஆள் எப்படி இருந்தான்?”

“நார்மலான ஹைட் வெயிட் இருந்தான். வேற எதுவுமே தெரியலடி.”

“ஏதாவது வண்டியில வந்தானா… வண்டி நம்பரப் பார்த்தியா நீ…”

“இல்ல… அவன் நடந்துதான் வந்தான். ரொம்ப நிதானமா வந்தான். கலெக்டரக் குத்திட்டு நிதானமா நடந்து போனான்.”

“என்னடி சொல்ற? அப்ப அங்க ஆளுங்க யாருமே இல்லையா?”

“ம்கூம்… யாருமே இல்ல. நான் அந்த ரோட்டுலயே நின்னு பார்த்தேன். நாம போலீஸ்க்குப் போய் சொல்லலாமா?” குழப்பத்தையும் பயத்தையும் சரிவிகிதமாகக் கலந்து முகத்தில் ஏந்தியபடி தன்னை நோக்கிக் கேட்ட தோழியைப் பார்த்த சுஜி, சற்று யோசனையுடன்,

“போலீஸ்க்குப் போய் என்னன்னு சொல்றது. கொன்னவனைப் பத்தின ஒரு அடையாளம்கூடத் தெரியாம… கறுப்புக் கலர் லாங் கோட், ஹூடி, க்ளவுஸ், மங்கி கேப்லாம் இங்க மழைக்கும் குளிருக்கும் நிறைய பேரு வழக்கமா போடறதுதானே…”

“போலீசுக்கு சொல்லாம இருக்கறது தப்பில்லையா?”

“தப்புதான்… ஆனா இதனால நமக்கு ஏதாவது பிரச்சனை வந்தா என்ன செய்யறது? நீ கொலைய பார்த்தது கொலைகாரனுக்குத் தெரிஞ்சா அவன் உன்னைச் சும்மா விடுவானா?”

“அவன் கொலை பண்றதை நான் பார்த்தது அவனுக்குத் தெரியும்டி.” ஹரிணி தயங்கியபடிக் கூற… சுஜியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. பயத்தில் வெடவெடவென நடுங்கியவாறே…

“எ…என்னடி சொல்ற…?”

—வேட்டை தொடரும்.

error: Content is protected !!