KOA 16

16

“இதை இப்பவே பிரிச்சு பார்க்குறியா?”

அவள் தந்த அன்பளிப்பை பிரித்ததும் அதில் லயித்து போனான். அத்தனையும் தன் சிறு வயது முதல் கல்லூரி காலம் வரை எடுத்திருந்த புகைப்படங்கள். சிறு வயது படங்கள் அனைத்திலும் வெண்பா இவனை கட்டிக் கொண்டோ, கை பிடித்துக் கொண்டோ நின்றிருந்தாள்.

ஆல்பத்தின் முடிவில் இருவரின் நிச்சயதார்தத்தில் எடுத்த போட்டோவும் இருந்தது.நீண்ட நேரம் அதையெல்லாம் பார்த்தவன், அவளை பார்த்து முறுவலித்தான்.

“நல்லா இருக்கு , தேன்க்ஸ்”

“ம்ம் இருக்கட்டும்”

காலையில் இருந்த குழப்ப நிலை மாறி இப்போது அவன் உள்ளம் வெண்பாவின் செயலால் நெகிழ்ந்து போயிருந்தது. வெண்பாவை கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்ற, அதற்கான முதல் முயற்சியாய் மெதுவாக அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்தான். 

அவன் செயல் அவளுக்கும் சிலிர்த்தது. தலை குனிந்து கொண்டிருந்தவளின் நாடி பற்றி முகம் நிமிர்த்தியவன்,

“வெண்பா…”

பதிலேதும் இல்லை!

அவள் அமைதியை சம்மதமாய் எடுத்துக் கொண்டவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.அதில் இறுக ஆரம்பித்திருந்தாள்…தனக்கு பிடித்தமில்லை என்பதாய் அவள் உடல் மொழியும் மாறிவிட்டிருந்தது. 

அவள் செய்கையில் விழியன் அவளை பார்க்க அவன் பார்வையை தவிர்த்தாள். 

“என்னம்மா?”

“இது வேண்டாம் விழியன்”

‘அடிப்பாவி எங்க வந்து என்ன டீ சொல்றே!’

அவளிடமிருந்து விலகினான்.

உற்சாகம் எல்லாம் வடிந்து போனது அவனுக்கும்…எதுவும் பேசத் தோன்றாமல், கட்டிலில் இருந்து எழுந்தவன், தன் பட்டு சட்டை வேஷ்டியில் இருந்து ஷார்ட்ஸ்க்கு மாறி,

“தூங்க போ வெண்பா. காலையில் சீக்கிரமா எங்கையோ போகணும்னு சொன்னாங்க”

அவளுக்கு புரிந்தது விழியனின் ஏமாற்றம் .. என்னதான் தன்னை தயார் படுத்தி வைத்தாலும் எதுவோ ஒன்று அவளை அவனிடம் ஒன்ற விடாமல் தடுத்தது. எழுந்து கட்டிலில் தன் பக்கம் போனாள்…

அவனுக்கு மிகுந்த ஏமாற்றம் தான். வெளிகாட்ட முடியவில்லை. வெண்பாவும் சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் எதையும் யோசிக்க தோன்றாது படுத்துக் கொண்டாள்.இரவு விளக்கை போட்டிருந்தவன் அவளுக்கு முதுகு காட்டிக் கொண்டு படுக்க , தூக்கமாவது ஒன்றாவது! அவளும் புரண்டு கொண்டு தானிருந்தாள், வெகு நேரமாய்! எப்போது உறங்கினாள் தெரியாது!

தூங்காத விழிகள் இரண்டும் விழியனது. அவளை பார்த்த படி புரண்டு படுத்தவன் அதிகாலையில் தான் கண் அசந்தான்!

“விழியன் விழியன் ..எழுந்திரு”

அவளே தான், சின்ன ஜரிகை போட்ட பட்டுப் புடவையில் இருந்தாள். நேற்றை விட இன்று இன்னமும் அழகாய் தெரிந்தாள். மேக்கப் போட்டு ஏற்கனவே குடி கொண்டிருந்த அழகை எல்லாம் மறைத்த விஷயம் இப்போது தான் அவனுக்கு தெளிவானது!

எழுந்து அமர்ந்தவன் , கண்ணைக் திறக்க சிரமப்படுபவன் போல் நீண்ட நேர ஆக்டிங்கில் தன் புது மனைவியை ரசித்துக் கொண்டிருந்தான்.

எத்தனை பட்டாலும் புத்தி வருதா!

‘போனில் பேசிய லட்சணத்தை பார்த்து, என்னை அப்படியே கட்டி பிடிச்சு முத்தம் கொடுப்பேன்னு நினைச்சேன். நேத்து அல்வா தான் கொடுத்தே!’

மனதுக்குள் அவளை வைதாலும் , கண் தன் கடமையை ஒழுங்கே செய்து கொண்டிருந்தது!

அவனுக்கான உடைகள் எல்லாம் எடுத்து வைத்திருந்தாள்.

“எல்லாரும் ரெடி, சீக்கிரம் கிளம்பு விழியன்” சொன்னவள் அதற்கு மேல் அவன் முன் நிற்கவில்லை! 

நான்கு நாட்களில் சென்னை கிளம்பிவிட்டனர், இருவர் மட்டும்! ரேணுகா திரும்ப நாளாகும் என்றுவிட்டாள்.

வீட்டுக்கு வந்த பிறகும் கூட எந்த மாற்றமும் இல்லை. அவன் அறையில் உரிமையாய் தன்னை பொருத்திக் கொண்டவளால் கணவன் என்ற உரிமையை மட்டும் அவனுக்கு தர இஷ்டமில்லை. விழியன் தன்னாலான முயற்சியை தற்சமயமாய் கை விட்டுவிட்டான்! 

மதிவதனி மதனின் திருமணம் கோவிலில் வைத்து நடந்தது. அதன் பின் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன் போல் ஏற்பாடு செய்திருந்தனர். திருமணம் முடிந்த சொச்ச நாளில் நண்பனின் திருமணத்துக்கு வந்த விழியன் வெண்பாவை கண்ட மதியின் பெற்றோருக்கு அத்தனை ஆனந்தம்!விழியன் வெண்பா புகைப்படம் எடுத்துக் கொள்ள மணமக்களை நெருங்கிய சமயம் ரதியும் அவர்களிடம் வந்தாள்!

இருவருக்கிடையே பேச்சுவார்த்தையே இல்லை, அவள் வருவாள் என்று மதிவதனி நினைக்கவே இல்லை… ஆனால் ஆபிஸில் அனைவருக்கும் தருவது போல் அவளுக்கும் பத்திரிக்கை வைத்திருந்தாள் மதி. அதன் பலன் ரதி மீனா மேடம் இன்று ஆஜர்! 

தன்னை அவள் மறுபடியும் தொடர ஆரம்பித்து விட்டாளோ என இருந்தது விழியனுக்கு! கூரூப் போட்டோ எடுக்க வெண்பா பக்கம் நிற்காமல் விழியன் புறம் அவள் நகர முனைய, விழியன் இவள் எண்ணமறிந்து தன் மனைவியின் பக்கம் நின்று அவள் தோளில் உரிமையாளனாய் கை போட்டுக் கொண்டான்!

வெண்பாவை பற்றித் தெரியும் ! ஆனாலும் அதனை சிந்திக்காது தன் மனைவியின் மேல் அதிகம் உரிமை எடுத்துக் கொண்டதை போல் காட்டினான் விழியன். 

ரதியால் இந்த காட்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவன் திருமணத்தை எப்படியாவது நிறுத்திவிடலாம் என்று யோசித்து செயல் படுத்துமுன் திருமணம் நடந்தேறிவிட்டது! இப்போதானால் மனைவியிடம் உரிமையாய் இருக்கிறான்! வெண்பா அவனுடன் இணக்கமாகி விட்டாளா?

விழியன் போட்ட கை போட்டபடியே வைத்திருந்தான், ரதி அவனை கவனிக்கிறாள் என்று தெரிந்துமே. வெண்பாவுக்கு சங்கடமாக இருந்தது. இரண்டு முறை எடுத்து விட முயன்றாலும், பழைய இடத்துக்கே அந்த கை வந்துவிட்டது..

“கை எடு விழியன், எல்லார் முன்னாடியும் என்ன செய்றே! நான் எங்கேயும் போயிட மாட்டேன்” அடிக்குரலில் சொன்னாலும் சட்டை செய்யவில்லை இவன். இத்தனை சம்பாஷனைகளும் புன்னுருவலுடன் நடக்க, தள்ளியிருந்து பார்த்துக் கொண்டிருந்த ரதியால் அவன் இளித்துக் கொண்டிருந்த காட்சிகளை பார்க்க முடியவில்லை. 

அவனை திருமண கோலத்தில் பார்த்ததே அவளை இன்னமும் கொன்று கொண்டிருந்தது. ஒரு காலத்தில் அவள் தான் அவனுக்கு ஸ்பெஷல். அவன் பக்கம் நிற்கும் உரிமை தனக்கு மட்டுமே என்று நினைப்பு தவறி போனது. இன்று தன்னிடம் யாரோ எவரோ என்பதாய் நடந்து கொள்கிறான்! 

மதிவதனியின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரகாஷ், ரதியின் பக்கம் அமர்ந்திருந்தான்..ஹலோ என்றதோடு முகம் திருப்பிக் கொண்டாள். அந்த கேண்டீன் சந்திப்புக்கு பிறகு அவனை ஒதுக்க ஆரம்பித்திருந்தாள். ஆனால் அவனால் அப்படி விட முடியவில்லை. பிரகாஷின் பார்வை அவளுடையதை தொடர, அவளோ விழியனை காண்பதில் மூழ்கி இருந்தாள்.. 

எதேச்சையாக பார்க்கும் பார்வையில்லை அது! வைத்த கண் வாங்காத பார்வை !பிரகாஷுக்கு என்னவோ சரியில்லை என்று பட்டது. ரதியின் மனதில் எரிமலை வெடித்து கொண்டிருந்ததை அவன் அறியான். 

நண்பன் திருமணத்தில் கடைசி வரை நின்று உதவ நினைத்த விழியன், இந்த பாதகியால் சீக்கிரமே கிளம்ப முடிவெடுத்தான். விடைபெறும் முன்னர், பிரகாஷிடம் வந்து அவனை அறிமுகப்படுத்தினாள் வெண்பா.

“ஹலோ பிரகாஷ், ஐயம் விழியன்” என்றவனை அங்கிருந்த ரதி பார்வையால் விழுங்கி கொண்டிருந்தாள்.

“இது ரதிமீனா, என் டி.எல்” அவளையும் வெண்பா அறிமுகப்படுத்த,

“தெரியுமே, நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க தானே!”

மறந்தும் கூட அவளை முன்னமே தெரிந்தவள் போல் காட்டிக் கொள்ள அவன் முயலவில்லை. பிரகாஷின் கண்கள் எல்லாவற்றையும் நோட்டம் விட்டு தான் கொண்டிருந்தது!

விழியனும் வெண்பாவும் விடைபெற்றுக் கொண்ட சிறிது நேரத்தில் ரதியும் கிளம்ப,

“எப்படி போறே ரதி? நான் வேணா காரில் டிராப் செய்றேனே!”

“இல்லை வேண்டாம் பிரகாஷ், நானே போயிடுறேன்”

“கமான் ரதி, காரில் கூப்பிட்டு போனா லவ் பண்ணியாகனும்னு சொல்லிட மாட்டேன், வா”

அவனுடன் வாதாடாமல் காரில் பயணமாக, டிராபிக் சிக்னலில் வைத்து,

“ரதி உனக்கு மிஸ்டர் விழியனை ஏற்கனவே தெரியுமா?” என்றான் திடுதிப்பென்று!

அவன் கேள்வியில் தன் யோசனையில் இருந்து வெளியே வந்தவள், 

“ என்ன கேட்டீங்க பிரகாஷ்”

“உனக்கு வெண்பா ஹஸ்பண்ட் விழியனை ஏற்கனவே தெரியுமா?”

சற்று யோசித்தவள்,

“தெரியும்”

எப்படி என கேட்பது அவனுக்கு அநாகரிகமாய் பட , அதை தவிர்த்து விட்டான்…அவளாக சொல்வாளா என்று பார்க்க, அவள் பேச்சு முடிந்தது என்பது போல் வெளியே பார்க்க ஆரம்பித்து விட்டாள். திடீரென்று கண்ணில் இருந்து கண்ணீர் வடிவதையும் அதை அவள் துடைத்துக் கொள்வதையும் ஓரக் கண்ணால் பார்த்தான் பிரகாஷ்…

“என்ன ஆச்சு ரதி, எனி பிராப்ளம்?”

“நோ கொஞ்சம் தலை வலி”

“ஹாஸ்பிட்டல் போகலாமா ரதி?”

“அதெல்லாம் வேண்டாம், எனக்கு டிராவலில் பேசினாலே தலை வலிக்கும்”

அதன் பின் அவன் பேச்சை வளர்க்காமல் வண்டியை ஓட்ட, ரதி சீட்டில் தலை சாய்த்து கண் மூடிக் கொண்டாள். இன்னமும் கண்களில் நீர் வடிந்தது, அதை துடைக்கும் எண்ணம் கூட இல்லாதிருந்தத்வளை பார்க்க பிரகாஷிற்கு பாவமாய் போனது..

வழியில் ஒரு மருந்து கடையில் வண்டியை நிப்பாட்டியவன், எதையோ வாங்கிக் கொண்டு வருவதை பார்த்தாள். மறுபடியும் தன் நிலையை அவள் தொடர , அவன் சரியாய் அவள் ஹாஸ்டலில் கொண்டு வந்து விட்டான். 

எப்படி அவனுக்கு அந்த இடம் தெரியும் என்பது கூட ரதி யோசிக்கவில்லை. இறங்கியதும்,

“நன்றி பிரகாஷ்” என்று கிளம்ப,

“ரதி, இந்த தலைவலி டேப்லட்ஸ் போட்டுக்கோ” என்று அந்த கவரை தந்தான்.

இவன் செய்கையில் உண்மையிலேயே தலை வலிப்பது போல் இருந்தது. இப்படி கவனிக்கிறேன் பேர்வழின்னு தான் ஒருத்தன் என் மனசை கொன்னு போட்டிருக்கான்…இப்ப நீயா!? எவன் அக்கறையும் எனக்கு தேவையில்லை. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்! நீங்க எல்லாரும் உங்க வேலையை பாருங்க டா என்று கத்த தோன்றியது!

“வேண்டாம் பிரகாஷ், நான் தலைவலிக்கு டேப்லட் போடுறது இல்லை. எதையும் பழகிக்க நான் விரும்பலை.. பை” என்றபடி உள்ளே சென்றுவிட்டாள்.

பிரகாஷுக்கு அவளின் இந்த திமிரான பதிலில் கோவம் வரவில்லை. அவளை பற்றிய சிந்தனையில் வீடு வந்து சேர்ந்தவன், முன்னமே எடுத்து வைத்திருந்த ரதியின் தந்தை சங்கர நாராயணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

அன்றிரவு, அவனுக்கும் அவளுக்குமாய் உணவு சமைத்துவிட்டு விழியனை அழைக்க வரவே இல்லை.பெல் அடித்தடித்து கை ஓய்து போனது தான் மிச்சம்.

மாடி ஏறி சென்றாள் அவனை அழைக்கவென்று. கட்டிலில் அமர்ந்து கையிலிருந்த டைரியில் எதையோ கிறுக்கி கொண்டிருந்தான்.இவள் செல்லவும் , அதை மூடி கட்டிலுக்கு அடியில் வைத்தவன் என்ன என்க,

“எத்தனை தடவை பெல் அடிச்சேன், சாப்பிட வாங்க. எனக்கு வேலை முடிச்சிட்டு தூங்கணும்”

‘நீ தூங்குறதிலேயே இரு வேற எதுவும் யோசிச்சிடாதே’ முனுமுனுத்துக் கொண்டான்!

“புருஷனை பெல் அடிச்சு எல்லாம் கூப்பிடுற பழக்கம் வச்சிக்காதே! என் அம்மா வசதிக்காக வச்சது அது!” சொன்னபடி அறையை விட்டு வெளிவர, அவள் வராமல் உள்ளுக்குள் இருந்தாள். 

“நீயும் வா, இங்க என்ன பண்றே?”

“போயிட்டே இருங்க, நைட்டி மாத்திட்டு வந்திடுறேன்” கதவையடைத்த பின், அந்த கட்டிலுக்கு அடியில் இருந்த டைரியை எடுத்தாள். புத்தம் புது டைரி, நாலு பக்கங்கள் மட்டுமே இது வரையில் எழுதியிருந்தான்!

‘ இந்த பழக்கம் எல்லாம் இருக்கா உனக்கு!’ முன் பக்கம் உள்ளதை எல்லாம் படிக்காமல் இப்போது என்ன எழுதினான் என்று பார்க்க,

‘எனக்கு பிறகு கல்யாணம் ஆனவனுக்கு எல்லாம் என்னென்னவோ நடக்குது, நான் மட்டும் இன்னும் பேச்சிலர்! ஆண்டவா உனக்கு என் மேல் இரக்கம் இல்லையா?’ அதன் பக்கம் ஒரு சோக முகத்தை வரைந்து வைத்திருந்தான்.

படித்ததில் சிரிப்பு தான் வந்தது. சற்று நேரம் சிரித்து நேரம் கடத்தியவள், அவசர அவசரமாய் உடை மாற்றிக் கொண்டு இறங்க, அவன் பாதி சாப்பாட்டில் இருந்தான்.

அவனை பார்க்கவும் மறுபடியும் சிரிப்பு வந்துவிட்டது. அடக்கினாலும் அடங்காது உரக்கச் சிரித்து வைத்தாள்.

“என்ன ஆச்சு வெண்பா? ஏன் இப்படி சிரிக்கிற?”

ஐயோ அதை என் வாயால வேற சொல்லணுமா?

“ஒண்ணுமில்லை, நேத்து பார்த்த காமெடி நியாபகம் வந்திட்டு”

அவள் சொல்லியதில் நம்பிக்கை இல்லை. சாப்பிட்டு முடிக்கும் வரை அடிக்கடி அவனை பார்த்து சிரித்தவளை அடக்கும் வகையாய்,

“வெண்பா சும்மா சிரிச்சு என்னை டீஸ் பண்ணாதே! இன்னும் ஒரு தடவை இப்படி சிரிச்சேன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது பார்த்துக்கோ”

வாயை மூட நினைத்தாலும், அடங்காத வாய் ஆயிற்றே, சட்டென்று

“என்ன பண்ணுவே?”

இதற்கு மேல் இவளை சும்மா விட கூடாது, தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் அவளை நெருங்கினான்.

Comments