KP-6

KP-6

குறும்பு பார்வையில் – 6

“அண்ணா…” என்று ஆகாஷின் முன் கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு நின்றாள் கீதா.

‘என்ன?’ என்று அவன் விழிகளை உயர்த்த, “பாட்டிக்கு ஓகே… தாத்தாவுக்கு ஒகே… அப்பாவுக்கு ஒகே… அம்மாவுக்கு…” என்று கீதா இழுக்க, பொறி தட்டினார் போல், தன் நெற்றியை சுருக்கினான் ஆகாஷ்.

‘இவ்வளவு நாள் இல்லாம, இந்த காலைப் பொழுதில்…’ என்று சிந்திக்கும் பொழுதே, “பொய் சொல்லுவ? பொய் சொல்லுவ?” என்று கேட்டுக்கொண்டே, “நங்…” என்று கீதாவின்  தலையில் கொட்டினான் ஆகாஷ்.

“டேய்… மண்டு அண்ணா! இதைக் கண்டுபிடிக்க இவ்வுளவு நேரமா?” என்று கேட்டுக்கொண்டே விலகி ஓடினாள் கீதா.

“நீ மெல்லினம் ஸ்டேஜ்ல் இருக்கிறது உறுதியாகிருச்சு. கல்யாணுமுன்னா ஒரு பதட்டம். என் அண்ணன் நான் பொய் சொன்ன உடனே கண்டுபிடிச்சிருவான். இவ்வுளவு நேரம் ஏமாந்திருக்க மாட்டான். காதலில் விழுந்த அடையாளமா, உன் மூளை மந்தமாகிருச்சு.” என்று கீதா தன் சகோதரனைப் பார்த்து நாக்கை துருத்தினாள்.

“உன்னை…” என்று ஆகாஷ் அவளை விரட்ட, கீதா அறையை விட்டு வெளியே ஓடி ஆவுடை பாட்டி மீது மோதி நின்றாள்.

ஆகாஷ் பின்னே வர, “என்னடா இது வயசு பிள்ளையை விரட்டி பிடிச்சிக்கிட்டு?” என்று தன் கண்ணாடியைச் சரி செய்தபடி கேட்டார் பாட்டி.

“இவ காலேஜில் என்ன படிக்குறான்னு நான் சொல்லட்டுமா?” என்று ஆகாஷ் பாட்டியிடம் கேட்டுக்கொண்டே, தன் தங்கையைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.

‘சொல்லு…’ என்று கெத்தாக நின்றாள் கீதா. ‘இவ என்ன இப்படி கெத்தா நிக்குறா?’ என்று ஆகாஷ் தன் ஒற்றை கண்ணைச் சுருக்கி அவளைச் சந்தேகமாகப் பார்த்தான்.

“நானும் சொல்லுவேன்…” என்று கீதா ஆகாஷின் காதில் கிசுகிசுக்க, “என்ன கிசுகிசுப்பு?” என்று பாட்டி இவர்கள் இருவரையும் கூர்மையாகப் பார்த்தார்.

“அதுவா பாட்டி…” என்று கீதா ராகம் பாட,  ‘இவ எதை சொல்ல போறா?’ என்று  ஆகாஷின் இதயம் “தடக்… தடக்…” என்று ஓட ஆரம்பித்தது.

“நான் சொல்றேன் பாட்டி… கீதா என்ன சொல்றானா, மெல்லினமுனா…” என்று ஆகாஷ் அவன் கண்களை உருட்ட, “சொல்லுடா மெல்லினமுனா? ஏன் நிறுத்திட்ட?” என்று ஆவுடை பாட்டி சந்தேகம் கேட்டார்.

“நான்  சொல்றேன்.” என்று ஆரம்பித்தாள் கீதா. “மெல்லினமுனா… யாரவது பீச்சல போனா… அவங்களை… அவங்களை…” என்று கீதா தன் சகோதரனை ஓர கண்களால் பார்த்துப் பெரு மூச்சு விட்டாள்.

“தடக்… தடக்…” என்று ஓடிக்கொண்டிருந்த அவன் இதயம் இப்பொழுது வெளியே வந்துவிடுவது போல் வேகமாக ஓடியது.

‘இவளுக்கு எப்படி தெரியும்?’ என்று ஆகாஷ் தன் தங்கையை முறைக்க, தன் சகோதரனின் கேள்வி புரிந்தது போல், “டாம்….” என்று செல்லமாக அழைத்தாள் கீதா.

‘ஏன் என் டாமை எடுத்த?’ என்று தன் தங்கையைக் கடுப்பாகப்  பார்த்தான் ஆகாஷ்.

“ம்… என்னத்த படிக்கறீகளோ? மெல்லினமுன்னா என்னனு கூட சட்டுனு சொல்ல தெரியல. ங ஞ ண ந ம ன தான் மெல்லினம்.” என்று கூறிக் கொண்டு, தலையில் அடித்துக்கொண்டே சென்றார் பாட்டி.

கீதா தன் அண்ணனைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரித்தாள்.

“இடையினம் ன்னா என்ன?” என்று தன் தங்கையிடம் சந்தேகம் கேட்டான் ஆகாஷ்.

“கொஞ்சம் செலவாகும்.” என்று கீதா தன் கழுத்தைத் திருப்ப, “என்ன வேணும்?” என்று தழைந்து போனான் ஆகாஷ்.

“அண்ணி பெயர் என்ன?” என்று கீதா கேட்க, “ஸ்ருதி…” என்று வெட்கத்தோடு கூறினான் ஆகாஷ்.

“என்னை அவங்க கிட்ட  அறிமுகப்படுத்துறியா?” என்று கீதா ஆர்வமாகக் கேட்டாள்.

“ஏய்… நான் இன்னும் அவங்க கிட்ட சொல்லவேயில்லை…” என்று பதறினான் ஆகாஷ்.

“ஓ… இவ்வுளவு தானா?” என்று சோகமாகக் கேட்டாள் கீதா.

“சரி… சரி… இடையினம்ன்னா என்னனு சொல்லு?” என்று ஆர்வமாகக் கேட்டான் ஆகாஷ்.

“உன் ஸ்பீட்க்கு நீ இன்னும் மெல்லினம் ஸ்டெஜான்னே எனக்கு சரியா தெரியலை. இதுல அதுக்குள்ள உனக்கு இடையினம் கேட்குது… போ…போ… நீ இன்னும் வளரனும் தம்பி.” என்று கெத்தாகக் கூறிவிட்டு, இம்முறை ஆகாஷிடம் அகப்படாமல் ஓடிவிட்டாள் கீதா.

‘இவ என்ன சொல்றா? நானே ஏற்கனவே குழம்பி இருக்கேன். இதுல இவ வேற… இன்னமும் குழப்புறாளே.  சரி பார்ப்போம்.’ என்று தனக்கு தானே சமாதானம் செய்துகொண்டு தன் வேலையைத் தொடர சென்றான் ஆகாஷ்.

கடற்கரை நீரில் நனைந்ததால், மீண்டும் குளிப்பதற்காக குளியலறைக்குள் சென்றாள் ஸ்ருதி. ஷவரில் இருந்து விழுந்த நீர் அவள் தேகத்தைத் தீண்டிச் செல்ல அவன் தீண்டிய இடம் நினைவு வர, அவள் முகத்தில் ஓர் வெட்க புன்னகை பூத்தது.

“ஆகாஷ்…” அவள் உதடுகள் அவன் பெயரை உச்சரித்தது.

 

‘ஹண்ட்ஸாம் தான்… நல்லவன் தான்…’ என்று சிந்திக்க ஆர்மபித்து, “ஆனால் வாய்க் கொழுப்பு ஜாஸ்தி.” என்று முணுமுணுத்தாள் ஸ்ருதி.

‘நான் ஏன் அவனைப் பத்தி யோசிக்கிறேன்?’ என்ற கேள்வியோடு தன் தலையில் விழுந்த நீரைச் சிலுப்பிக்கொண்டாள் ஸ்ருதி.

‘எனக்காக ஏன் அவன் சிப்பி எடுக்க வேண்டும்?’ என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.   ‘வேண்டாம்…’ என்று அவள் நினைத்தாலும் அவள் எண்ணம் அவனைச் சுற்றியே வந்தது.

‘கார்த்திக் சொன்னது போல, அன்று கை கொடுத்திருந்தால்…’ என்ற எண்ணம் ஓட்டம் ஓட, “இல்லை… இந்த செய்திருந்ததால்… எண்ணமே நமக்கு வேண்டாம்.” என்று கூறிக்கொண்டாள் ஸ்ருதி.

‘நான் அவனை பற்றி சிந்திப்பது போல், அவனும் என்னைப் பற்றிச் சிந்திப்பானா? நான் ஏன் அவனைப் பற்றி யோசிக்குறேன்?’ ஸ்ருதியின் எண்ணங்கள் தறிகெட்டு ஓட, அவள் உடல்  நடுங்கியது.

“இல்லை… இல்லை…” தனக்கு தானே உருபோட்டுக் கொண்டாள் ஸ்ருதி.

‘இது காதலா?’ அவள் மனம் அறிவிடம் கேட்டது.

 

அறிவோ பதில் தெரியாமல், ஸ்தம்பிக்க… ‘ச்ச… இது காதலிக்கிற வயசெல்லாம் இல்லை… கம்பனி., ஆராய்ச்சின்னு பொறுப்பான இடத்தில் இருக்கும் எனக்கு காதல் எண்ணமெல்லாம் வருமா?’ என்று தெளிவு படுத்திக்கொண்டாள்.

“இப்படி தண்ணிக்கு கீழே நின்னுகிட்டு இருந்தா, இன்னைக்கு பீச்சல நடந்தது தான் ஞாபகம் வரும்.” என்று கூறிக் கொண்டே தன் குளியலை முடித்துக்கொண்டு வெளியே வந்தாள் ஸ்ருதி.

மேஜை மேல் இருந்த கிளிஞ்சல்கள் கண்ணில் பட,      ‘நான் மனசுக்கு நெருக்கமானவங்க போட்டவை தவிர வேற யார் போட்டோவையும் என் கிட்ட வச்சிக்கறதில்லை.’  அவன் கூறிய வார்த்தைகள் அவள் செவிகளில் எதிரொலித்தது.

‘என்ன சொல்ல வாரான்? இருக்கா? இல்லையா? இருக்கு ஆனால் இல்லை மாதிரி பேசுறான்…’ என்று எண்ணியபடி தலை அசைத்துக் கொண்டாள்.

‘இல்லையான்னு நான் கேட்டுருந்தா? இருக்கனுமோன்னு பதில் கேள்வி கேட்டிருப்பான். இருக்கான்னு கேட்டிருந்தா, நீங்க நெருக்கமான்னு கேட்டிருப்பான்…’ என்று கடுகடுப்போடு கண்களை உருட்டினாள் ஸ்ருதி.

‘கடலில் இருந்து காப்பாத்திட்டு என்ன நக்கல்?  அவன் புன்னகையிலும், அவன் பார்வையிலும் குறும்புதான்…’ என்று புன்னகையோடு, “குறும்பா…” என்று முணுமுணுத்தாள் ஸ்ருதி.

“ஸ்ருதி… என்ன நான் வந்து நிக்குறது கூட தெரியாம, அந்த சிப்பியை பார்த்து சிரிக்கிற, முறைக்குற, தனியா பேசுற?” என்று கடுப்பாகக் கேட்டார் பார்வதி.

“அம்மா…” என்று அசடு வழிந்தாள் ஸ்ருதி.

“என்ன நொம்மா… இப்படி பொம்மை, ஆராய்ச்சி, படிப்பு, வேலைன்னு இருந்தா உனக்கு பைத்தியம் தான் பிடிக்குமுன்னு நினச்சேன். அப்படியே நடந்திருச்சு. இந்நேரம் கல்யாணம் பண்ணிருந்தா, உனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கும்.” என்று புலம்ப ஆரம்பித்தார் பார்வதி.

“அம்மா… சும்மா இருங்க… எப்பப்பாரு கல்யாணம் குழந்தைன்னு. நான் இப்ப தான் படிப்பை முடிச்சிருக்கேன்.” என்று ஸ்ருதி முகத்தைச் சுருக்க, “படிப்பை இல்லை டீ… மேற்படிப்பை…” என்று தலையைச் சிலுப்பிக்கொண்டு கூறினார் பார்வதி.

 

“அம்மா… பார்த்து கழுத்து சுழுக்கிக போகுது.” என்று கேலி பேசினாள் ஸ்ருதி.

“என்னை கேலி பண்ணறதெல்லாம் இருக்கட்டும். சீக்கிரம் சாப்பிட வா. உன்னைக் கூப்பிடத்தான் வந்தேன்.” என்று மகளை அழைத்துக்கொண்டு சென்றார் பார்வதி.

மேஜையில், ஈஸ்வரன் காத்திருக்க, “அப்பா…” என்று அழைத்துக்கொண்டு அவர் அருகே அமர்ந்தாள் ஸ்ருதி.

“என்ன ஸ்ருதி… கோவிலுக்கு போயிட்டு வந்துட்டியா?” என்று ஈஸ்வரன் கேட்க, “ம்… அப்பா…” என்று கூறினாள் ஸ்ருதி.

‘ஆகாஷை பற்றி விசாரிக்கலாமா?’ என்ற கேள்வி மனதில் எழ, யோசனையோடு அமைதியாகச் சாப்பிட்டாள் ஸ்ருதி.

அப்பொழுது வந்தமர்ந்தான் கார்த்திக். “கார்த்திக்… வா… வா… உன்னைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு.” என்று பார்வதி கூற, “வேலை ஆன்ட்டி.” என்று கூறிக்கொண்டே ஸ்ருதியை நோட்டமிட்டான்.

“என்ன மேடம் அமைதியா சாப்பிடுறாங்க?” என்று கேட்டான் கார்த்திக். “பேசினா எப்படி சாப்பிட முடியும்?” என்று புருவம் உயர்த்தினாள் ஸ்ருதி.

“ஓல்ட் ஜோக்.” என்று கார்த்திக் அவளை மட்டம் தட்டினான். “ஓல்ட் இஸ் கோல்ட்.” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டு, வெண்ணெய் தொட்டு அடையின் அடுத்த துண்டை சாப்பிட்டாள் ஸ்ருதி.

“நீ எதுக்கு ஸ்ருதி கிட்ட பேசிகிட்டு. அவ இப்படி தான் இடக்கா பேசுவா. நீ சாப்பிடு.” என்று பார்வதி கார்த்திக்கு அடையைப் பரிமாறினார்.

“அது சரி தான். நீ சாப்பிடு கார்த்திக்.” என்று ஈஸ்வரன் கார்த்திக்கை உபசரிக்க, “அப்பா…” என்று சிணுங்கினாள் ஸ்ருதி.

“எனக்கு அடுத்த அடை வேணும்மா. அதனால சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் உங்க அம்மா சொல்றது தான் சரி.” என்று ஈஸ்வரன் அறிவிக்க, “சாப்பாடு முக்கியம் அங்கிள்.” என்று அவருக்கு ஹைப்பை செய்தான் கார்த்திக்.

“அங்கிள் கொஞ்சம் வேலை இருக்கு. சாப்பிட்டுட்டு நான் ஸ்ருதியோட ஒர்க் பண்ணனும்.” என்று கார்த்திக் கூற, “ம்..கூம்… நீ ஒர்க் பண்ணு. இது
வீக் எண்டு. அதனால நான் ஒன்லி டாய்ஸ் மேக்கிங்…” என்று கூறினாள்.

“சரி… சரி… நீ உன் வேலை பண்ணு… பட் நாம சேர்ந்து தான் டிசைன் முடிவு பண்ணனும்.” என்று கார்த்திக் கூற, சம்மதமாகத் தலை அசைத்தாள் ஸ்ருதி.

அதன் பின் இருவரும் வேலைகளை பற்றி முடிவு செய்து கொண்டு, கார்த்திக் கோடிங் வேலையில் இறங்க, ஸ்ருதி பொம்மைகள் செய்ய ஆரம்பித்தாள்.

அவள் பொம்மைகளை செய்து முடித்தபின் அதற்கான கண்களை செய்ய ஆரம்பித்தாள் ஸ்ருதி. அவள் செய்து முடித்த கண்களைப் பார்த்து ஸ்ருதி மென்னகை புரிந்தாள்.

அவள் புன்னகையைப் பார்த்த கார்த்திக் அவள் செய்த கண்களைப் பார்த்தான்.

கார்த்திக்கின் நெற்றி சுருங்கியது. ‘குறும்பு கொப்பளிக்கும் கண்கள். இது ஆகாஷின் பார்வை.’ என்ற எண்ணம் தோன்ற ஸ்ருதியிடம் எதுவும் கேட்காமல் மௌனமாக தன் வேலையைச் செய்தான் கார்த்திக்.

மறுநாள் ஆகாஷின் அலுவலகத்தில், அவன் அனுமதியோடு கார்த்திக் அவனை காண அவன்  அறை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

‘பொம்மை மாதிரி இருக்கும், பொம்மை செய்யும் என் டாலி வருவான்னு பார்த்தா கார்த்திக் ஏன் வரணும்?’ என்ற யோசனையோடு அவனுக்காக காத்திருந்தான் ஆகாஷ்.

ஆகாஷ் புன்னகையோடு கார்த்திக்கை வரவேற்க, அத்தனை விசாலமான புன்னகை கார்த்திக்கின் முகத்தில் இல்லை. முகமன் கருதியே கார்த்திக்கின் புன்னகை இருந்தது.

கார்த்திக் சுற்றி வளைத்து பேசவில்லை. நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான். அவன் கேட்ட கேள்வியில் ஆகாஷின் கைமுஷ்டி இறுகியது. புன்னகை தழுவிய அவன் கண்கள்  கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

குறும்பா, டாலியோடு குறும்புகள் தொடரும்…

 

error: Content is protected !!