KP-8

KP-8

குறும்பு பார்வையிலே – 8

இயல்பாகவே ஆகாஷ்  பெயருக்கு ஏற்றார் போல் பரந்த மனம் கொண்டவன். அவன் மனதின் காரணமோ, பிறவிக் குணமோ கேலி, கிண்டல் நையாண்டி என்று சந்தோஷமாகவே இருப்பான். இன்று ஸ்ருதியை சந்தித்ததால் சற்று அதீத மகிழ்ச்சியோடு இருந்தான். தேன் உண்ட வண்டாக, அவன் சற்று உல்லாசமாகத் தான் திரிந்தான்.

ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி அவன் படி ஏற, “நீ ஏன் டா, இவ்வளவு சந்தோஷமா இருக்க? உன் தங்கச்சி தானே அவ தோழிகளோட வெளிய போறதா சொன்னா?” என்று ஆவுடை பாட்டி கேட்க, ‘வெளிய போறாளா? இந்நேரத்துக்கா?’ என்று கண்களைச் சுருக்கினான் ஆகாஷ்.

“என்ன டா தெரியாத மாதிரி பாக்குற? கீதா உன் கிட்ட சொல்லிட்டேன். சாயங்கால நேர படம், அதனால நீ தான் அவளை கூட்டிட்டு போற, திரும்ப கூட்டிட்டு வரன்னு சொன்னா?” என்று ஆவுடை பாட்டி கேட்க, ‘கேடி… இப்படி எல்லாம் வேற சொல்லிருக்காளா? என் கிட்ட கேட்காம?’ என்று கண்களைச் சுருக்கினான் ஆகாஷ்.

“என்ன டா கீதா என் கிட்ட கதை விட்டிருக்காளா?” என்று ஆவுடை பாட்டி தன் பேரனின் முகத்தைப் பார்த்துக் கேட்க, ‘இன்னைக்கு கீதாவை கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்போமா?’ என்ற விபரீத ஆசை ஆகாஷுக்கு தோன்ற, தன் நாக்கை துரத்தினான்.

“பாட்டி…” என்று அழைத்தபடி தன் பாட்டியின் முன் சோபாவில் வசதியாக அமர்ந்தான்.

“என்ன கதை விட்டா கீதா?” என்று கேட்டுக்கொண்டே, ஆகாஷின் தாயார் சுமதி வந்து அமர,  ‘ஐயோ… அம்மா வந்துட்டாங்க. பிரச்சனை பெருசாகிடும்.’ என்ற எண்ணத்தோடு, “ஈ…” என்று சிரித்து வைத்தான் ஆகாஷ்.

தன் தங்கையைக் காட்டிக்கொடுக்க விரும்பாமல், “என் கிட்ட சொல்லாம, கீதா அப்படி சொல்லுவாளா?” என்று தன் தங்கையை விட்டுக்கொடுக்காமல் கேட்டு வைத்தான் ஆகாஷ்.

“என்ன டா… உங்க அம்மா வந்தவுடனே ஏதோ பேச்சை மாத்துற மாதிரி தெரியுது?” என்று கண்ணாடியை இறக்கி தன் பேரனிடம் கிசுகிசுத்தார் ஆவுடை பாட்டி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை பாட்டி…” என்று கூறிக்கொண்டு வேகமாக எட்டுகள் எடுத்து வைத்து, “கீதா… கீதா… கீதா…” என்று அழைத்துக்கொண்டு அவன் அறையை நோக்கி நடந்தான் ஆகாஷ்.

“எப்ப பாரு… பாட்டியும் பேரனும் ரகசியம் பேசவேண்டியது.” என்று முணுமுணுத்தபடி  கழுத்தை நொடித்து கொண்டு போனார் சுமதி.

“கீதா… கீதான்னு ஏன் என் பெயரை ஏலம் விடுற?” என்று தன் கண்களுக்கு மையிட்டபடி கேட்டாள் கீதா.

“உன் மேக் அப் ஐட்டம் எல்லாம் என் ரூம்ல தான் இருக்கு பாதி நேரம். இது ஒரு பேச்சிலர் ரூம்  மாதிரியா இருக்கு?” என்று ஆகாஷ் தன் தங்கையிடம் வம்பிழுக்க,  “அந்த பஞ்சாயத்தை அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப எதுக்கு என் பெயரை ஏலம் விட்ட அதை சொல்லு. எனக்கு நேரம் ஆகுது அண்ணா.” என்று சிணுங்கினாள் கீதா.

“யாரை கேட்டு, என்கிட்டே கேட்டதாவும், நான் கொண்டு போய்விட்டு கூட்டிட்டு வரதாவும் சொன்ன? நீ எங்க போறன்னே எனக்கு தெரியாது.” என்று ஆகாஷ் அண்ணனாகச்  சிடுசிடுக்க, “யாரை கேட்கணும்?” என்று புருவம் உயர்த்தினாள் கீதா.

“என்னை…” என்று ஆகாஷ் தோள்களை குலுக்க, “என் அண்ணன் நான் சொன்னா மறுக்க மாட்டான். நான் கேட்டு இல்லைன்னு சொல்லமாட்டான்.” என்று அவன் பக்கம் திரும்பி தன் சகோதரனின் தலையில் பனிக் கட்டியை வைத்தாள் கீதா.

“இந்த ஐஸ் வைக்குற வேலையெல்லாம் வேண்டாம். எங்க போற?” என்று கறாராகக் கேட்டான் ஆகாஷ்.

“அண்ணா… அண்ணா படத்துக்கு. ப்ளீஸ் அண்ணா… உன்னை நம்பி தான் நான் பிரெண்ட்ஸ் கிட்ட வரேன்னு சொல்லிருக்கேன் அண்ணா. நான் படம் பார்த்ததும் என்னைப் பிக்கப் பண்ணவும் வந்திரு அண்ணா.” என்று கெஞ்சுதலாகக் கேட்டாள் கீதா.

‘வேலை ஆகணுமுன்னா எத்தனை அண்ணா போடுறா?’ என்ற எண்ணம் தோன்ற அவனுக்கு அப்படி ஒரு யோசனை தோன்றியது.

‘ஹா…ஹா… என்கிட்டயேவா?’ என்ற எண்ணத்தோடு, “சரி… சரி… வா… கொண்டு போய் விடுறேன். நான் இன்னைக்கு வேலையா இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப?” என்ற கேள்வியோடு சம்மதம் தெரிவித்தான் ஆகாஷ்.

“நீ தான் இன்னைக்கு வெட்டின்னு எனக்கு தெரியுமே. உன் லேப்டாப் பாஸ்வார்ட் எல்லாம் தான் எனக்கு தெரியுமே. அதைப் பார்த்துத் தான் நான் பிளானெ போட்டேன்.” என்று கூறி நாக்கை துருத்தி கடித்துக் கொண்டாள் கீதா.

ஆகாஷ் அவளை முறைக்க, “ஐயோ… அண்ணா… நேரமாச்சு மீ எஸ்கேப்.” என்று கூறிக்கொண்டு அறையை விட்டு வெளியே ஓடிவிட்டாள் கீதா.

அவன் தலையசைத்துச் சிரித்துக் கொண்டான்.

ஆகாஷ் காரை சாலையில் கவனத்தோடு செலுத்த, கீதா வளவளத்துக் கொண்டிருந்தாள். ஆகாஷ், அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டும், சிரித்துக் கொண்டு காரை சாலையில் வலது பக்கமாக திருப்பினான்.

அத்தனை போக்குவரத்து இல்லாத சாலைக்கு சென்றதும், “ஏய்… அண்ணா. எங்க போற? இப்படி தானே போகணும்?” என்று இடது பக்கத்தைக் காட்டினாள் கீதா.

“ஹா… ஹா… உன்னை கடத்தி கொண்டு போறேன் என் அருமை தங்கையே!” என்று கேலி பேசினான் ஆகாஷ்.

“டேய்…. நீயெல்லாம் ஒரு அண்ணனா? யாரவது தங்கச்சியை கடத்தி கொண்டு போவாங்களா?” என்று கடுப்பாகக் கேட்டாள் கீதா.

“காரியமாகனும்முனா யாரை வேணா கடத்தலாம்.” என்று ஆகாஷ் கூற, “லூசு அண்ணா… ஹீரோ ஹீரோயினை தான் கடத்தணும். இப்படி தங்கை, பாட்டி, தாத்தா எல்லாம் கடத்த கூடாது.” என்று வியாக்கியானம் பேசினாள் கீதா.

யாருக்கும் இடைஞ்சல் இல்லாத சாலை ஓரத்தில், வண்டியை நிறுத்தினான் ஆகாஷ்.

“அது சரி… உன்னை கடத்துறது. பாட்டியை கடத்துறது எல்லாம் ஒன்னு தான்.” என்று ஆகாஷ் சாவகாசமாகப் பேச, “அண்ணா… நேரம் ஆச்சு அண்ணா. எனக்கு படம் பெயர் போடும் பொழுதே பார்க்கணும். எல்லாரும் எனக்காக காத்திருப்பாங்க. ப்ளீஸ் அண்ணா.” என்று கெஞ்சினாள் கீதா.

‘அப்படி வா வழிக்கு.’ என்று தலை அசைத்து, “இப்ப சொல்லு இடையினம்னா என்ன?” என்று ஆகாஷ் புருவம் உயர்த்தி ரசனையோடு கேட்டான்.

“ஐயோ அண்ணா… அதெல்லாம் ஒண்ணுமில்லை. சப்ப மேட்டரு.” என்று கல்லூரி பெண்ணாக அவள் பேச, அவளை மேலும் கீழும் பார்த்தான் ஆகாஷ்.

“அண்ணா. இதுக்கு கடத்தல் எல்லாம் ஓவர் அண்ணா.” என்று கீதா அத்தனை அண்ணா போட்டுச் சமாளித்தாள்.

பதில் சொன்னால் தான், என்று ஆகாஷ் தலை அசைத்தான்.  “இடையினம்னா… ய ர ல வ ழ ள. டபுள் சைடும் ஒகே ஆகியிருக்கும். கொஞ்சம் கரடு முரடான பாதை. அவங்க போன் பண்னுவாங்கன்னு நீ தவிப்ப… நீ பண்ணணுமுன்னு அவங்க தவிப்பாங்க. நீ இன்னும் அந்த ஸ்டேஜ்க்கு வரலை .” என்று விளக்கம் போல் கூறி கடுப்பாக முடித்தாள் கீதா.

“இப்ப வண்டி எடு.” என்று கீதா கோபமாகக் கூறிவிட்டு, சினத்தின் காரணமாகப் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

ஆகாஷ் தன் தங்கையின் தலையில் செல்லமாகத் தட்டி, வண்டியை முன்னை விட வேகமாகச் செலுத்தி அவளை நேரத்திற்குக் கொண்டு சேர்த்தான் அந்த அன்பு சகோதரன்.

வண்டியில் இருந்து இறங்கி விட்டு, “அண்ணா .” என்று அழைத்து, பாதி தான் சொன்னேன் இன்னும் இருக்கு. நீ நினைச்சது நடக்கலை. தோத்தாங்கொளி.” என்று கீதா நாக்கை துரத்திவிட்டு கண்சிமிட்டிச் சிரித்துக்கொண்டே  சாலையை வேகமாகக் கடக்க அப்பொழுது ஒரு கார் வேகமாக வந்தது.

“ஏய் பார்த்து…” என்று கூறிக்கொண்டு, காரிலிருந்து இறங்கி அவளை தன் பக்கம் இழுத்தான் ஆகாஷ்.

தன் அண்ணனின் மேல் சாய்ந்து நின்றாள் கீதா. ஆகாஷின் இதயம் வேகமாகத் துடித்தது.

“பார்த்து போக மாட்டியா? எப்பப்பாரு விளையாட்டு தானா?” என்று அவளைக் கடிந்து கொண்டான் ஆகாஷ்.

“அதை நீ சொல்றியா?” என்று கீதா கேட்க, “ம்… ச்…” என்று குரல் எழுப்பி, தன் தங்கைக்குத் தண்ணீர் கொடுத்தான்.

“நீ படம் பார்த்துட்டு வா. நான் இங்க பக்கத்துல எதாவது ஷாப்பிங் பண்ணிட்டு இருக்கேன். அப்படியே கூட்டிட்டு போயிடுறேன்.” என்று ஆகாஷ் பொறுப்பாகக் கூறினான்.

அருகே நின்று கொண்டிருந்த ஆகாஷின் இதய துடிப்பு இன்னும்  கேட்க, “அண்ணா… உன்னை கட்டிக்கப் போறவங்க  ரொம்ப கொடுத்து வச்சவங்க அண்ணா.” என்று கீதா ஆழமான குரலில் கூற, ஆகாஷின் முகத்தில் ஓர் வெட்க புன்னகை பூத்தது.

“என்னை மறந்திர மாட்டியே?” என்று கீதா கேலி பேச, தன் தங்கையின் தலையை ஆதரவாகத் தடவினான் ஆகாஷ்.

“இப்படி எல்லாம் அன்பை பொழிஞ்சா நாங்க முழுசா இடையினமுக்கு விளக்கம் சொல்லிருவோம்முனு நினைக்காத.” என்று கீதா கெத்தாகக் கூற, “நீ பத்திரமா போயிட்டு வா. நேரம் ஆச்சு.நான் கண்டுபிடிச்சி சொல்றேன்.” என்று தன் தோல்வியை ஒத்துக்கொண்டான் ஆகாஷ்.

“அது…” என்று கீதா கூறிவிட்டு சாலையை நிதானமாகக் கடந்தாள்.

தன் தங்கையின் கேலியில் அவன் உள்ளம் நெகிழ்ந்தது.

‘அப்படி என்ன பெருசா சொல்லிட போறா? இதுக்கு இவ்வுளவு கெத்து ஏதோ பெரிய விஷயம் மாதிரி. உறவுகளிடம் தோற்பதும், தோற்பது போல் நடிப்பதும் எத்தனை சுகம்?’ என்ற எண்ணத்தோடு தன் தங்கை அவள் தோழிகள் இருக்கும் இடம் வரை செல்வதைப் பார்த்துவிட்டுக் கிளம்பினான் ஆகாஷ்.

அவன் அருகே இருந்த காபி ஷாப் செல்ல, அங்கு மடிக்கணினியோடு அமர்ந்திருந்தாள் ஸ்ருதி. அங்கு ஒரு சிலரே இருந்தனர் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு.

“ஹலோ… ஸ்ருதி. எப்பவும் வேலை தானா?” என்று கேட்டுக்கொண்டே அவள் முன் அமர்ந்தான் ஆகாஷ்.

“கிளைண்ட்ஸோட ஒரு பிரெண்ட்லி மீட்.” என்று ஸ்ருதி சுருக்கமாக சொல்ல, “முடிஞ்சிருச்சா? இல்லை இனிமேல்தானா?” என்று கேட்டான் ஆகாஷ்.

“முடிஞ்சிருச்சு. நான் தான் அப்படியே மினிட்ஸ் ஆப் மீட்டிங் ரெடி பண்ணிட்டு போகலாமுன்னு.” என்று தான் செய்த வேலைகளுக்கு சேவ் பட்டனை தட்டிவிட்டு அவன் முகம் பார்த்தாள்.

“பயங்கர சின்சியர் போல நீங்க?” என்று அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலோடு கேட்டான் ஆகாஷ்.

“உங்களை மாதிரி ஆளுங்களோட போட்டில நிற்கணுமே?” என்று தன் மடிக்கணினியை மூடி வைத்தபடி பட்டும் படாமலும் கூறினாள் ஸ்ருதி.

“ஹா… ஹா…” என்று சிரித்து கொண்டான் ஆகாஷ்.

வெண்பற்கள் தெரிய அவன் சிரிக்க, “பார்த்து முத்துகள் உதிர்ந்திர போகுது.” என்று ஸ்ருதி நமட்டு சிரிப்போடு கூற, “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். முத்துக்கள் எல்லாம் விழாது.” என்று கண்களில் குறும்பு மின்னத் தீவிரமாகப் பதில் கூறினான் ஆகாஷ்.

அவன் தீவிரத்தில், வந்த சிரிப்பை மறைத்துக்கொண்டு, ‘இவன் சிரிப்பில் நான் மயங்குவேன். இன்னும் பேசினால் நான் தடுமாறுவேன்.’ என்று எண்ணிக்கொண்டே,”நேரமாச்சு. நான் கிளம்பனும்.” என்று ஸ்ருதி கிளம்ப, “ஓ…” என்று ஏமாற்றமான குரலோடு அவனும் எழுந்து  கொண்டான்.

ஸ்ருதி வேகமாக ஒரு எட்டு எடுத்து வைக்க, அதே நேரம் ஆகாஷும் எழ, அவன் மேல் மோதி நின்றாள் ஸ்ருதி.

இதை எதிர்பார்க்காத ஆகாஷ் உடலால் தடுமாறவில்லை என்றாலும், மனதால் ஸ்தம்பித்து நின்றான். ‘அவள் வாசம், அவள் தீண்டல், அவள் அழகை விட, அவள் பேச்சை விட, அவள் கம்பீரத்தை விட, அவள் நிமிர்வை விட இனிக்கிறதே.’ என்ற எண்ணம் தோன்ற அமைதியாக நின்றான் ஆகாஷ்.

ஸ்ருதி சற்று தடுமாறினாள். ஆனால், ஸ்ருதி கீழே விழும்முன் அவன் கைகள் அவளைத் தாங்க அவள் தேகத்தை தீண்டுமுன், அந்த மேஜையைப் பிடித்துக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

காற்று செல்லும் அளவுக்கு மெல்லிய இடைவெளியே அவன் கைகளுக்கும், அவளுக்கும்!

ஆகாஷ் கண்ணியமாக தன் கைகளை விலக்கி கொண்டான். அந்த கண்ணியத்தில், அவள் கரைந்து போனாள். அவள் கரைதலில் அவன் கவர்ந்து போனான்.

‘தன் எண்ணம் அவனுக்குத் தெரிந்துவிடுமோ?’ என்ற கேள்வியோடு தர்மசங்கடமாக உணர்ந்தாள் ஸ்ருதி.

‘தன் எண்ணத்தை அவளுக்குத் தெரிவிக்க வேண்டும்.’ என்ற சிந்தனையோடு அவன் தர்மசங்கடமாக அவளைப் பார்த்தான்.

அவளை அனுப்ப விழையாமல், சட்டென்று சுதாரித்துக் கொண்டு, “கிளம்பும் பொழுதே தடுமாறுதே. உட்காருங்க எதாவது சாப்பிட்டுட்டு போகலாம்.” என்று ஆகாஷ் ஏக்கத்தோடு கூறினான்.

செல்ல வேண்டும் என்று ஸ்ருதியின் அறிவு கூறினாலும், வேண்டாம் என்ற மனமே வென்று கொண்டது. அவளும் அமர்ந்து கொண்டாள்.

‘வெட்கம் பிடுங்கி தின்ன.’ என்றெல்லாம் சொல்ல முடியாது. ஸ்ருதியிடம் சின்ன தடுமாற்றம் அவ்விளவு தான்.

ஆகாஷ் சகஜ நிலைக்கு திரும்பி, “நம்ம ப்ராஜெக்ட் ஒர்க், நம்ம ஆபிசில் ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று பேச்சை வேலையின் பக்கம் திருப்பினான்.

ஸ்ருதி சரலென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.  “நீங்க பேச்சு மாறுறீங்க. வேலையை எங்க கம்பனியில் செய்றதாதான் பேச்சு.” என்று அவள் கூற, “பேச்சு மாறலை ஸ்ருதி. பேச்சை மாத்தலாமான்னு பாக்குறேன்.” என்று அவன் புன்னகையோடு கூறினான்.

‘இவனுக்கு சீரியஸ் பேச்சே கிடையாதா? எப்பொழுதும் கேலி பேச்சு தானா?’ என்று அவனைக் கூர்மையாகப் பார்த்தாள் ஸ்ருதி.

“என்னங்க இப்படி சைட் அடிக்கறீங்க?” என்று அவன் பதட்டமாக அவளை சீண்ட, ஸ்ருதி அவனைக் கோபமாக  முறைத்துப் பார்த்தாள்.

அவன் குறும்போ, கண்களில் கேலியோடு அவளை சீண்ட, நொடிக்குள் புரிந்து கொண்டு, “எவ்வளவு மார்க் தேறுவேன்னு கேட்பீங்கன்னு நினச்சேன்.” என்று அவன் பாணியிலே பதில் கூறினாள் ஸ்ருதி.

“அதை ஏங்க கேட்கணும்? நமக்கெல்லாம் நூறு பத்தாது. நம்ம பெர்சனாலிட்டி அப்படி.” என்று மெட்டுவிடாமல், கெத்தாக, அதே நேரம் விளையாட்டு போல் கூறினான் ஆகாஷ்.

“எங்க ஊரில் இதை தலை கணமுன்னு சொல்லுவோம்.” என்று ஸ்ருதி நிதானமாகக் கூற, “எங்க ஊரில் தன்னம்பிக்கைன்னு சொல்லுவோம்.” என்று அசராமல் கூறினான் ஆகாஷ்.

“ஆஹா… நல்லது தான்.” என்று கூறினாள் ஸ்ருதி.

“என்ன இந்த பக்கம்?” என்று ஸ்ருதி பேச்சை திசை திருப்ப, “தங்கை படத்துக்கு போயிருக்கா. பிக்கப் அண்ட் ட்ரோப் நம்ம தான்.” என்று அவன் கூற, “உங்க வருங்கால மனைவி ரொம்ப கொடுத்து வச்சவங்க.” என்று ஏன் எதற்கு என்று யோசிக்க மனமில்லாமல் அவனை ஆழம் பார்த்தாள் ஸ்ருதி.

அவன் அவளை புரியாமல் பார்க்க, “பிக் அப்… ட்ரோப் பண்ணி அனுபவம் இருக்கு. எதிர்காலத்தில் உதவுமுன்னு சொல்ல வந்தேன்.” என்று அவள் சமாளிக்க, “எதுக்கு ஸ்ருதி பிக்கப் ட்ரோப் பண்ணிக்கிட்டு? மனைவினா கூடவே போகிற வேண்டியது தான்?” என்று அவன் அவளை ஆழம் பார்த்தான்.

‘தான் எதுக்குக்காக கேட்டோம்.. இவன் என்ன நினைச்சிருப்பான்? சும்மா பார்த்தத்துக்கே சைட் ன்னு சொன்னான். இன்னும் கேலி பேசுவானோ?’ என்ற எண்ணத்தோடு, அவன் பேச்சை மனதில் கொண்டே அவள் மௌனித்தாள்.

அவன் பேச்சில், ‘அகப்பட்டுக்கொள்வோமோ?’ என்று அவன் பேச்சில் அவள் விலகி ஓட, அவள் பேச்சைச் சாதகமாக்கி அவள் எண்ணத்தை அறிந்து கொள்ள முடிவு செய்தான் ஆகாஷ்.

ஸ்ருதியின் எண்ணங்கள் வெளியேறுமா? ஆகாஷின்  எண்ணங்கள் ஈடேறுமா?

குறும்புகள் தொடரும்…

 

error: Content is protected !!