Puthu Kavithai 5

Puthu Kavithai 5

  • admin
  • January 20, 2020
  • 0 comments

5

பத்தாவது முறையாகத் தன் கை கடிகாரத்தைப் பார்வையிட்டான் பார்த்திபன். தொழில் முறை சந்திப்புக்காக நுங்கம்பாக்கம் பார்க் ரெஸ்டாரன்ட் வந்திருந்தான்.

அந்தப் பகல் நேரத்திலும் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். யார் யாரோ… இந்த மக்களுக்கு ஓய்வே கிடையாதா என்று தோன்றும் அவ்வப்போது!

நீ மட்டும் என்ன? என்ற கேள்வியை எழுப்பியது மனம். ஆமாம்… தானுமே ஓய்வை விரும்புவதில்லையே! காரணம் என்ன? மெல்லிய புன்னகை உதட்டில் வந்து ஒட்டிக்கொண்டது.

வேறு வழியில்லை அவனுக்கு. தன்னை விழுங்கக் காத்திருந்த பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க அவன் தேர்ந்தெடுத்த வழியது.

“சர்… யுவர் ஆர்டர் ப்ளீஸ்…” பவ்யமாக அந்த வெய்ட்டர் கேட்க,

“என்னுடைய நண்பர் இன்னும் வரவில்லை… சற்றுபொறுத்து சொல்கிறேன்…” என்று அனுப்பி விட்டு மீண்டும் மணியைப் பார்த்தான். வருவதாகச் சொன்ன நேரத்தைத் தாண்டி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன.

பார்த்திபன் எப்போதுமே நேர மேலாண்மையைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவன். சொன்னால் சொன்னபடி! இது அவனது தாரக மந்திரம்!

ஆனால் அதை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாதே. அதிலும் இது போலக் காத்திருப்புக்களைப் பார்த்திபன் ஒரு போதும் விரும்புவதே இல்லை. ஆனால் வரும் நபர் அவனுக்கு மிகவும் முக்கியமானவர். வெகுகால நண்பர், நலன் விரும்பி!

இவர் போன்ற சிலருக்காக நிறைய விட்டுக்கொடுக்கலாம். அவரும் தொழில் முறையில் தான் சந்திக்க வருகிறார் என்றாலும், அதைத் தாண்டிய நல்ல நட்பு இருவருக்கும் உண்டு!

சென்னைக்கு வந்த காரணங்களில் அவருடனான சந்திப்பும் மிக முக்கியமான ஒன்று.

அதிலும் காரமடையிலும் கோவையிலும் இருந்து விட்டு சென்னையின் மாசும் தூசும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கோவையிலும் வாகன நெரிசல் மிகவும் அதிகம் தான். ஆனால் இந்தளவுக்கு மோசம் இல்லை. இங்கு வெயிலும் அதிகம், மாசும் அதிகம். அதனால் தானோ என்னவோ சென்னையை அவ்வளவாக அவன் விரும்புவதில்லை.

ஆனால் தொழில் இங்கும் இருக்கிறதே. அதனால் தான் அவ்வப்போது வருவது. எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்து விட்டு காரமடை ஓடிவிடத்தான் அவனது மனதும் எண்ணும்.

அதற்குப் பல காரணங்கள்!

ஒரு இடம் பிடித்திருப்பதற்கும், அதுவே பிடிக்காமல் போவதற்கும் ஒரே காரணமாக இருக்க முடியுமா? கண்டிப்பாக இருக்க முடியும்.

ஆயிற்று… மீண்டும் வந்தாயிற்று. ஆனால் அந்த நினைவுகளிலிருந்து மீண்டு வந்தாயிற்றா என்று அவனது மனசாட்சி கேள்வி எழுப்பியது.

பார்க் ஹோட்டல் அவனது பழைய நினைவுகளைக் கிளறி விட்டுக்கொண்டிருந்தது.

பார்க்குக்கு முன் இருந்த அமெரிக்க தூதரகம்!

அதன் வாசலில் அமெரிக்க விசாவுக்காக தான் காத்துக்கொண்டிருந்த நாட்கள்!

இன்னமும் பசுமையாக அவனது நினைவுகளில்.

அந்தக் காலம் மீண்டும் வராதா? ஏக்கமாக இருந்தது அவனுக்கு. அந்தக் காலம் எவ்வளவு அழகானதோ, அதே அளவு வலிகளையும் கொடுத்த காலமல்லவா!

அமெரிக்க வேலை ஒன்று மட்டுமே அவனது லட்சியமாக, கனவாக இருந்த காலமது! எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருந்தான், தன் அமெரிக்க கனவுக்காக. அப்படிப் பைத்தியமாக. அமெரிக்காவில் வேலைப் பார்க்க வேண்டும். அந்த நாட்டிலேயே செட்டிலாக வேண்டும். அது ஒன்று மட்டுமே அவனது தாரக மந்திரமாக இருந்தது ஒரு காலத்தில். அதன் பொருட்டு நிறைய இழக்கக் கூடாததை இழந்துமாயிற்று. அவையெல்லாம் திரும்பக் கிடைக்காதவை இல்லையா?

அமெரிக்க தூதரகத்தின் வாசலில் தான் காத்திருந்த அந்தக் காலங்கள்… அதைத் தொடர்ந்து, காலம் தன்னை நெருப்பிலிட்டுப் புடம் போட்ட அனுபவங்கள்… துரோகங்கள்… ஏமாற்றங்கள்… முதுகில் குத்தப்பட்ட சம்பவங்கள்… அதற்குக் காரணமாக இருந்தவர்கள்… அதன் காரணமாக விலகியவர்கள்… அது கொடுத்த வலிகள்… காயங்கள்… ஆறாத பச்சை ரணங்கள்!

நீரில் குளித்தாலும், நெருப்பில் எரித்தாலும் தங்கம் கறுக்காதே. கறுத்தவை?

யார் கறுத்தாலும் கடந்து விடலாம். ஆனால் கறுக்க கூடாத உறவுகளும் கறுத்துப் போனதே!

அந்த வலியில் ஆழ நினைத்த மனதை ஆழ விடாமல் இழுத்துக் கட்டி, ஒருமுகப்படுத்த முனைந்தான் பார்த்திபன்.

மூச்சை உள்ளுக்குள் இழுத்தான் ஆழமாக. சில்லென்ற சுவாசம் நுரையீரலை நிறைத்தது. மெல்ல வெளியே விட்டான்.

ஒன்று… இரண்டு… மூன்று… என்று எண்ணிக்கொண்டே தன்னுடைய புலன்களை ஒருநிலைப்படுத்தினான் கண்களை மூடியவாறு.

ப்ரீத் இன்… ப்ரீத் அவுட்… ப்ரீத் இன்… ப்ரீத் அவுட்…!

மனம் சமன்பட்டது.

“ஹலோ பார்த்தி…” வருவதாகச் சொன்ன மேகநாதன்.

ஜீன் பேன்ட், கதர் வெள்ளை சட்டை. நெற்றியில் குங்கும பொட்டு. கிட்டத்தட்ட ஐம்பதைக் கடந்த பிராயம். ஆனாலும் இவன் அவரைப் பெயர்ச் சொல்லித்தான் அழைப்பது. அவரும் அதைத்தான் இவனிடம் விரும்புவார். நண்பர். நட்புக்கு வயது ஒரு பொருட்டா?

தனது ட்ரேட் மார்க் பெரிய புன்னகையோடு அழைத்தவரை பார்த்துப் புன்னகைத்தான்.

முக்கியமான இடைத் தரகர் அவர். இரும்புப் பொருட்களை வாங்கி விற்பதுதான் அவரது வேலை.

“வந்து ரொம்ப நேரமாகிடுச்சா?” கேட்டுக் கொண்டே அமர்ந்துகொண்டே அமர்ந்தார்.

“ம்ம்ம்… ஒரு ஹாப் அன் அவர் தான் ஆச்சு நாதன்…” மெல்லிய புன்னகை அவனது முகத்தில்.

“சாரி பார்த்தி… நம்ம ஊர் ட்ராபிக் பற்றித்தான் தெரியுமே உங்களுக்கு… சொன்னா சொன்ன நேரத்துக்குப் போகவே முடியாது. யாரோ விஐபி வர்றாங்கன்னு ட்ராஃபிக்கை க்ளோஸ் பண்ணிட்டாங்க… அடிச்சு பிடிச்சு வர்றதுக்குள்ள ஒரு வழியாகிடுது…”

“பரவால்லை…” என்று சிரித்துக்கொண்டே கூறியவன், “தெரிந்ததுதானே…” என்று மற்ற தொழில் விஷயங்களைக் கேட்க ஆரம்பித்தான்.

நடுவில் வெய்ட்டர் வந்து உணவை சர்வ் செய்துவிட்டுப் போக,

“பார்த்தி, இப்ப வந்திருக்க ஐட்டம் ரொம்பவே ரேர்… ஒரு சிக் இண்டஸ்ட்ரி… நஷ்டமாகிடுச்சுன்னு சொல்லி மூடிட்டாங்க… மொத்த மெஷினரியும் ஸ்க்ராப்க்கு தான் வருது… நல்ல வால்யுவான பீஸ்…” மேகநாதன் உணவை தனது தட்டிற்கு இடம் மாற்றியபடியே கூற,

“ம்ம்ம்… ஐட்டம் எங்க இருக்கு?”

“ஆந்திரால… ஸ்ரீசைலம்… ஆக்சுவலா அது ஒரு பேப்பர் ஃபேக்டரி…”

“ஏன் பேப்பருக்கு என்ன மேகநாதன்? நல்லா தானே போயிட்டு இருக்கு… அதை ஏன் ஷட் டவுன் பண்ணாங்க?”

“ப்ரொடக்ஷன்ல நஷ்டம் ஆகுதே! தண்ணி பிரச்சனை… ஒர்க்கர்ஸ் பிரச்சனை… அரசியல்வாதிகள் நெருக்கடி… பேப்பர் பல்ப் விலை கூடி போச்சுன்னு நிறைய ரீசன் சொல்றான்… ஆக்சுவலா அண்ணன் தம்பி இரண்டு பேரும் அடிச்சுகிட்டு பிரிஞ்சுட்டாங்க பார்த்தி. அதனால் இந்த ஃபேக்டரி காலி…” என்றவர் சற்று இடைவெளி விட்டு, “நான்கு தலைமுறையா கோலோச்சின குடும்பம்… இப்படிப் புத்தி கெட்டு பண்ணிட்டாங்க…” என்று கூறவும், பார்த்திபனுக்கு உள்ளுக்குள் வருத்தமாக இருந்தது.

“நம்ம மக்கள் ஏன் தான் இப்படி இருக்காங்க? ஒன்னை அழிக்கறது ஈசி… ஆனா உருவாக்கறது எவ்வளவு கஷ்டம் இல்லையா? அந்த ஃபேக்டரியை ஆரம்பிக்க அவங்க கொள்ளுத் தாத்தா எவ்வளவோ சிரமப்பட்டு இருப்பாங்க… இவங்களுக்கு ஏன் இது புரியல…”

“ஆமா பார்த்தி… வெள்ளைக்காரன் காலத்துல ஆரம்பிச்ச ஃபேக்டரி… இப்ப இவங்க இரண்டு பேருடைய ஈகோவால அழிஞ்சு போச்சு…”

“அது ஒண்ணுமில்ல மேகநாதன்… இவங்க கஷ்டப்பட்டு உருவாக்கியிருந்தா அதோட கஷ்டம் தெரிஞ்சு இருக்கும். நோகாம, கஷ்டம் தெரியாம கைக்கு வந்ததா இருக்கும். அதான்…” லேசான புன்னகையோடு கூறினாலும் அவன் கூறிய வார்த்தைகள் மிகுந்த வலியோடு, அனுபவித்த அனுபவங்களின் வெளிப்பாடாக வெளிவந்த வார்த்தைகள். அதை அறிந்தவர் மேகநாதன்.

ஆரம்பக் காலங்களில், அவன் சிரமப்பட்ட நேரங்களில் எல்லாம் எதையுமே எதிர்பார்க்காமல் அவனோடு நின்றவர். அவனது தந்தை மேல் கொண்ட பிரியமும் மரியாதையும் அவரை அவனோடு நிற்கச் செய்தது. இருவருக்குமான நட்பையும் இறுகச் செய்தது.

“கண்டிப்பா பார்த்தி. அனுபவங்கள் இடர்களைத் தருகின்றன. இடர்கள் அனுபவங்களாகின்றன.” புன்னகையோடு அவர் கூற, ஒரு கசப்பான புன்னகையால் அதை அங்கீகரித்தான்.

ஒரு பெரிய மூச்சை இழுத்துக் கொண்டு, “ம்ம்ம்… ஆமா நாதன்…” என்றவன், “அந்த யூனிட்ல எல்லாமே அசார்ட்டடாதானே இருக்கும். நமக்கு எச்எம்எஸ் எவ்வளவு தேறும்?”

“அசார்டட் தான். ஆனால் கிட்டத்தட்ட எய்ட்டி பர்சன்ட் எச்எம்எஸ் தேத்தலாம். அதான் அந்த யூனிட்டை எப்படியாவது முடிக்கணும்ன்னு நம்ம வினோதகனும் முயற்சி பண்ணறார்.” என்று குரலை தளைத்துக் கொண்டு கூற,

“ஓ… அப்படியா? அவரும் ட்ரை பண்றாரா?” என்று கேட்டவன் சற்று யோசித்தான். அவர் இதில் இருக்கிறார் என்று அறிந்தும் தான் இதில் இறங்க வேண்டுமா என்ற கேள்வி அவன் மனதுக்குள் எழுந்தது.

ஆனால் இன்னொரு மனமோ, அவருக்குக் கொஞ்சம் டஃப் ஃபைட் கொடுத்தால் தான் என்ன என்று கேட்டது. மனதோரம் அமர்ந்திருந்த பழிவாங்கும் குணம் சற்று மேலேறிப் பார்த்தது.

இன்னொரு மனமோ, தமக்கையின் கணவராயிற்றே என்று கூற, சற்று யோசித்தவன், இந்த விஷயத்தில் வினோதகனை வீழ்த்தியே தீருவது என்ற முடிவுக்கு வந்தான். அக்காள் கணவர் என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு தன்னுடைய வியாபாரத்தை இழக்க அவன் தயாராக இல்லை.

அதோடு தோல்வி தரும் வலிகள் எப்படியிருக்கும் என்பதை அவரும் தான் தெரிந்து கொள்ளட்டுமே!

“அவரும் இருக்கட்டுமே பார்த்தி. இது வியாபாரம். அவருக்கு முடிஞ்சா அவர் வாங்கட்டும். இல்லைன்னா நாம பார்க்கலாம். ஆனா ஒன்னு… நல்ல ஐட்டம். விட்டுடாதீங்க. அதைத்தான் சொல்வேன். வாங்கிட்டா நானே அசார்டட்ல இருந்து பிரிச்சு கொடுத்துடறேன்.” அவருமே கூறியது அவனுக்கு ஒப்புதலாகத்தான் இருந்தது.

“சரி… ஃபோட்டோஸ் காட்டுங்க மேகநாதன்.” என்று கேட்க,

அவரது செல்பேசியில் எடுத்து வைத்த, அந்த தொழிற்சாலையின் புகைப்படங்களை ஒவ்வொன்றாகக் காட்டி விளக்கினார்.

அவ்வளவு பெரிய தொழிற்சாலை அது. அது இயங்காமல் இருப்பதற்கான அடையாளமாக மெஷினரிகள் துருப்பிடித்துப் போய் இருந்தது. அவையெல்லாம் வெறும் இயந்திரங்களாக அவன் கண்ணுக்கு தெரியவில்லை.

எத்தனையோ பேருக்கு உணவிட்ட அமிர்த கலசம்! பல நூறு குடும்பங்களைக் காப்பாற்றிய தாய்! இப்போது துருப்பிடித்து வாழ்விழந்து கண்ணீருடன் இருப்பதாகத் தோன்றியது.

அதை உருவாக்கியவர் எவ்வளவோ கனவுகளுடன் அதை உருவாக்கி இருக்கலாம். அவருக்கு எவ்வளவோ சிரமங்கள் வந்திருக்கலாம். அவற்றையெல்லாம் தகர்த்து அவ்வளவு பெரிய தொழிற்சாலையைச் சாத்தியப்படுத்துவது ஒன்றும் சாதாரணம் இல்லையே.

பொறுப்பில்லாமல் அதை இப்படி அழிய விட்டுப் பார்த்திருப்பவர்களை நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருந்தது.

“இது பல்ப் கிரைண்டிங் யூனிட். கிட்டத்தட்ட முழுசுமே ஹை குவாலிட்டி எச்எம்எஸ்.” என்று ஒரு புகைப்படத்தை காட்டி மேகநாதன் கூற, தன்னுடைய உணர்வுகளைத் தள்ளி வைத்து விட்டு வியாபாரியாக அதைப் பார்வையிட்டான்.

கண்டிப்பாக நல்ல ஐட்டம் தான் என்று அவனது அறிவு கூறியது. அவனது ஸ்டீல் ரோலிங் மில்லுக்கு மூன்று மாதத்திற்கான மூலப் பொருளுக்கு ஆகும் என்று கணக்கீடு செய்தது.

“எவ்வளவு டன் இருக்கும்?”

பார்த்திபன் கேட்க, அவரும் சொன்னார். பெரிய அளவுதான்.

“எவ்வளவு கேக்கறாங்க?”

“டென் சி கேக்கறாங்க. நைன் சி க்கு நான் முடிக்கலாம்ன்னு பார்க்கறேன்.” என்று மேகநாதன் கூற,

“ம்ம்ம் சரி. முடிச்சுருங்க. கொஞ்சம் கூடப் போனாலும் பரவால்லை நாதன்.” என்று அவன் கூற, அவர் புன்னகைத்தார். அவனுடைய மனம் எதைக் கணக்கிடுகிறது என்பதை அவர் அறியாமல் இல்லை. ஆனால் மாமன் மச்சானின் போட்டிக்குள் அளவுக்கு மீறி நுழைய அவரால் முடியாது.

அதை நினைத்து அவர் சிரிக்க, அவன் கேள்வியாகப் பார்த்தான்.

“என்ன நாதன்?”

“நாளைக்கே நீங்க இரண்டு பேரும் வெள்ளைக்கொடி பறக்க விட்டுட்டீங்கன்னா, வினோதகன் கிட்ட எனக்கு செம டோஸ் கிடைக்கலாம்.” என்று மீண்டும் அவர் சிரிக்க,

“நீங்க எனக்கு மட்டும் தான் பண்ணனும்ன்னு நான் நினைக்கவே இல்லை நாதன். அவரும் வியாபாரி, நீங்களும் வியாபாரி.” என்றவன் இடைவெளி விட்டு, “வியாபாரத்தில் உறவுமுறைகளுக்கு இடம் கிடையாது.” என்று இறுக்கமான முகத்தோடு கூறியவன், ‘ஒரு சில உறவுகள் என்றுமே ஒட்டவும் ஒட்டாது…’ என்று நினைத்துக் கொண்டான். ஆனால் வெளிப்படையாகக் கூறவில்லை.

கூறமாட்டான்.

உறவுகளுக்குள்ளான கசப்புகளை வெளிப்படையாக்க அவன் என்றுமே விரும்பியதில்லை. இருவருக்கும் சரியில்லை என்பது அனைவரும் அறிந்தது. அதை எப்போதும் அவன் வெளிப்படையாக ஒப்புக்கொள்வதும் இல்லை. மறுப்பதும் இல்லை அவ்வளவே!

ஆனால் அவனே உணராத இன்னொரு விஷயம் என்னவென்றால், அவனுக்கு மன்னிக்கவே தெரியாது. மறக்கவும் முடியாது. விட்டுக்கொடுக்கவும் தெரியாதவன் அவன். ஒருமுறை கசந்தவற்றை மீண்டும் சுவைக்க அவன் என்றும் விரும்பியதே இல்லை.

உறவென்பது கொடுக்கல் வாங்கல் சமாச்சாரமோ, லேவாதேவியோ அல்ல. மெல்லிய உணர்வுகளால் கட்டப்பட்ட ஒரு மாலை. விட்டுக்கொடுத்து அன்பு, நம்பிக்கை என்ற நாரால் கட்டப்பட்டால் மட்டுமே அது அர்த்தமுள்ள மாலை, இல்லையென்றால் அது வெறும் உதிரிப்பூ மட்டுமே.

உதிரிப்பூக்கள் உதிரும் வரை தனித்திருக்க மட்டுமே முடியும்!

“கண்டிப்பா பார்த்தி. எனக்கு அதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு வியாபாரத்தை ஒருத்தர் கிட்ட கமிட் பண்ணிட்டு, லாபத்துக்காக இன்னொருத்தருக்கு மாற்றி விடறளவு நான் நேர்மையற்றவனும் இல்லை. இந்த நேர்மைதான் அய்யாவுக்கு என்னிடம் பிடிச்ச விஷயமும் கூட. அதனால் தான் உங்களைப் போன்றவர்களின் நம்பிக்கையையும் நான் சம்பாதித்து இருக்கேன்.” என்று உணர்ந்து கூற, எதிரில் அமர்ந்திருந்தவன் அவரது கையைப் பற்றி அழுத்தினான்.

“கண்டிப்பா நாதன். அந்த நம்பிக்கை உங்க மேல எனக்கு நிறையவே இருக்கு.” என்று அவன் கூற, அவர் புன்னகைத்தார்.

“சரி… எப்ப போய் பார்க்கலாம்? பிடிச்சு இருந்தா அங்கேயே நான் டீலிங்கை முடிச்சுடுவேன்…” என்று சாதரணமாகக் கூற, மேகநாதன் அறிவார், ஒன்று பிடித்திருந்தால் அதை எப்படிப்பட்டேனும் முடிக்காமல் விட மாட்டான் என்று, வியாபாரத்தை பொறுத்தவரை!

“இன்றைக்கு விலையை முடிச்சுடறேன். இன்னைக்குத் திங்கள் கிழமை. ம்ம்ம் வெள்ளிக்கிழமை உங்களுக்கு ஓகேன்னா ஸ்ரீசைலம் போய்ப் பார்த்துட்டு, ஓகேன்னா ஸ்பாட்லையே பேமென்ட் பண்ணி முடிச்சுடலாம்.” கணக்கிட்டு அவர் கூறியதை புன்னகையோடு அங்கீகரித்தான் பார்த்திபன்.

“ம்ம்ம்… சரி…”

“பார்த்தி… இன்றைக்கு ஈவினிங் நீங்க ப்ரீயா?”

“ஏன் நாதன்?”

“வீட்டில் ஒரு ஃபங்க்ஷன். இன்வைட் பண்ணத்தான்.” என்றதும் அவன் புன்னகையோடு,

“சாரி நாதன்… ஈவினிங் ஒரு கமிட்மென்ட். பொண்ணு பார்க்க போறோம்.” அவனுக்கு ஏனோ அது பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. எதையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கடமை! அதுவொன்று மட்டுமே.

“வாவ்… ஆல் தி பெஸ்ட். பொண்ணு என்ன பண்றாங்க?” பெரிய புன்னகையோடு மேகநாதன் கேட்க,

“ப்ச்… நான் எதையும் கேட்கலை. அம்மாவோட ப்ளான். வேற வழியில்லை.”

“அததது அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டும் பார்த்தி. உங்களுக்கு நான் அட்வைஸ் பண்ண முடியாது, நீங்க எல்லாமே தெரிஞ்சவர் தான்… ஆனா என்னோட வயசுக்குண்டான அனுபவத்தில் சொல்றேன்…” என்று கூறவும்,

“ச்சே ச்சே… உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு நாதன். நீங்க என்னுடைய வெல்விஷர்.”

“அதனால் தான் சொல்றேன். உங்களுக்கும் முப்பதாகப் போகுதே…! இவ்வளவு நாள் போய்டுச்சு. இன்னமும் லேட் பண்ணக் கூடாது. நமக்குன்னு ஒரு குடும்பம் இருக்கணும்… அதோட சந்தோஷமே தனிதான். அந்தச் சந்தோஷம் இன்னமும் உங்களை உழைக்க வைக்கும்.” என்று நண்பராக அறிவுரை கூறியவரை சிறு புன்னகையோடு பார்த்தான்.

அவனுக்கும் புரிந்திந்திருந்தது. வலிகளை மறந்து வாழ்க்கையை வாழத்தான் அவனும் நினைத்தான். ஆனால் மூளைக்குத் தெரிந்தது மனதுக்குத் தெரியவில்லை. பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது.

இப்போது ஒப்புக்கொண்டு வந்திருப்பதும் தன் தாயாருக்காக!

அவரிடம் பேசிக்கொண்டு நிமிர்ந்தவனின் பார்வையில் விழுந்தது மதுவந்தி!

யாரோ ஒருவனின் கைகளைத் தொற்றிக்கொண்டு, கிட்டத்தட்டத் தோளில் தொங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தவளைப் பார்க்கும் போது அவனுக்குள் கோபம் கொதிக்கத் துவங்கியது.

அதிலும் அவளது உடை?

உடையா அது?

பளீரென்ற பால் வண்ண நிறத்தை வெளிச்சம் போட்டு காட்டிய, தொடையை இறுகக் கவ்விய ஷார்ட்ஸ். மேலே ஒரு கையில்லாத டாப்ஸ். விரித்து விடப்பட கூந்தல், தலைக்கு ஏற்றிவிட்ட கூலர்ஸ், இடது கையில் ஒரு பெரிய வாட்ச் மட்டும் அணிந்து, அவனோடு சிரித்தபடி நுழைந்தவளைப் பார்த்த போது ரத்தம் கொதித்தது.

கோபத்தோடு அவனது பார்வை போகும் திசையைப் பார்த்தார் மேகநாதன். நொடியில் அவளை அடையாளம் கண்டுகொண்டார்.

“பார்த்தி… அது உங்க அக்கா பொண்ணு தானே?” என்று அவர் கேட்ட கேள்வியில் அவனுக்கு உயிர் போய் வந்தது போல இருந்தது.

அவ்வளவு அவமானமாக உணர்ந்தான்.

“ம்ம்ம்…” என்று கூறினானோ? உறுமினானோ?

“இந்தப் பிள்ளைகளுக்குப் பயமே இல்லாம போயிட்டது பார்த்தி. பாருங்க எவ்வளவு தைரியமா ஜோடியா வருதுங்க. அதுவும் இப்ப தானே ஸ்கூல் படிக்குது இந்தப் பொண்ணு?” என்று அவர் கேட்க,

“இப்ப காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் போகப் போறா.” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கூற,

“ப்ச்… காலக் கொடுமை…” என்று அவர் நொந்து கொண்டிருக்கும் போதே மதுவின் பார்வை வட்டத்தில் பார்த்திபன் விழுந்திருந்தான்.

இறுக்கமாக, அவளை நோக்கிய மையமான கோபம் கொப்பளிக்கும் பார்வையுடன் அமர்ந்திருந்தவனைப் பார்த்தபோது நொடியில் அவளது முகம் மாறியது. உடலில் நடுக்கம் பிறந்தது.

முந்தைய தினம் வாங்கிய அடி அவளது நினைவுக்கு வந்தது.

அவளையும் அறியாமல் சஞ்சயின் கையை விட்டாள்.

error: Content is protected !!