KT1
KT1
நீண்ட கடற்கரை…
எதிரே பொன் வண்ண மணல் பரப்பு…
கவி பாடும் பேரலைகள்..
அந்த அலையின் கவிதையை ரசித்தபடி மணலை அளந்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள், மிதுரா.
அவளின் முகத்தில் சிந்திய சந்திரனின் ஒளிக்கற்றைகள் வெள்ளித்தட்டாய் அவளை மின்னச் செய்தது.
கண்களில் மகிழ்ச்சி பிராவகமாய் ஊற்று எடுத்து இருந்தது.
இரு இதழ் இடையிலே சதா ஒட்டி இருக்கும் புன்னகை அன்று மட்டும் ஏனோ பெரியதாக விரிந்து இருந்தது.
எதிர் வந்து மோதும் இளந் தென்றலைப் போல அவளது மனதும் மிகவும் இலேசாக இருந்தது.
இருக்காதா பின்னே?
அவளுக்குள் ஜனித்த காதலுக்கு இன்றோடு ஒரு வயதாகப் போகிறதே.
மனதில் பொங்கிய அந்த சந்தோஷத்தோடு அவள் அருகில் இருந்த பாக்கெட் சைஸ் ரேடியோ பெட்டியைப் பார்த்தாள். பார்த்ததும் அவளது கண்களில் காதல் கசிந்தது.
அவளது மனதைக் கொள்ளைக் கண்டவன் அவளுக்காக அளித்த பரிசு அது. மிருதுவாக அவளது விரல்கள் அந்த ரேடியோ பெட்டியை வருடியது.
மணிக்கட்டைத் திருப்பி பார்த்தாள். இன்னும் பதினொன்றாவதற்கு ஒரு நிமிடம் மட்டுமே இருந்தது. அவளது இதயம் சட்டென பரபரப்புற்றது.
வேக வேகமாக அலைப்பேசியை எடுத்தாள்.
“சிற்பி, மணி பதினொன்னு ஆகப் போகுது. மறக்காம ரேடியோவை ஆன் பண்ணு.. இன்னைக்கு கண்டிப்பா ‘சில்லுனு ஒரு காதல்’ நிகழ்ச்சியிலே ஆர்.ஜே. ஆதன் என் கதையை சொல்லப் போறாங்கனு நினைக்கிறேன்.. ” என்று தன் உயிர்த்தோழி சிற்பிகாவிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு வானொலியை உயிர்ப்பித்தாள்.
உயிர்ப்பித்த அடுத்தக் கணமே காதுகளை நிறைத்தது ஆதனின் குரல்.
அவளது துன்பத்திலும் இன்பத்திலும் அவளுக்கு தோள் கொடுக்கும் குரல் அது. சோர்ந்துப் போகும் போது எல்லாம் அந்த குரலின் நிழலில் தான் சுருண்டுப் படுத்துக் கொள்வாள்.
இதற்கு முன்பு அவள் அனுப்பிய மின்னஞ்சலை ஆதன் வாசித்து இருக்கிறான். இப்போது அவள் அனுப்பிய இரண்டாவது மின்னஞ்சலை ஆதன் வாசிக்கப் போகிறான் என்ற நம்பிக்கையோடு அவள் காத்துக் கொண்டு இருக்க அந்த நம்பிக்கையை சிதைக்காமல் மேலும் ஆதனின் குரல் ஒலித்தது.
“இனிய இரவு வணக்கம் நண்பர்களே..
இன்றும் ஒரு மனதுக்கு இதமான அதே சமயம் கொஞ்சம் நெருடலான காதல் கதையைப் பகிரப் போகிறேன். இன்னைக்கு நான் பகிரப் போகும் அந்த காதலுக்குச் சொந்தக்காரர் மிதுரா. இவங்க எனக்கு ஏற்கெனவே பரீட்சயமானவங்க.
இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாங்க. இவங்களோட மின்னஞ்சலை வாசிக்கிறதுக்கு முன்னாடி இனிமையான ஒரு பாடலைக் கேட்டு வந்துடலாம்.. தொடர்ந்து கேளுங்க ஆரஞ்ச் எப்.எம். ” என்று ஆதன் பேசி முடித்தவுடன் பாடல் ஒளிபரப்பாகத் துவங்கியது.
இங்கே மிதுராவோ பலமடங்கு பரபரப்பானாள். சீக்கிரமாக உறங்கிவிடும் குணமுண்டு என்று சொல்லும் காதலனிடம் இன்று உறங்கக்கூடாதென சத்தியத்தை வாங்கி இருந்தாள். வாங்கிய சத்தியத்தை எண்ணி இப்போதும் அவள் மனதுக்குள் ஒரு கிண்டல் சிரிப்பு.
உறங்காமல் இருக்கும் அவனுக்கு வேக வேகமாய் குறுஞ்செய்தியை அனுப்ப அலைபேசியை எடுத்தாள்.
“கார்த்திக் சீக்கிரமா ஆரஞ்ச் எஃப். எம் கேளு. நம்மளோட காதல் கதையை சொல்லப் போறாங்க. ” என்று அவள் டைப் செய்துவிட்டு அனுப்புவதற்கு எத்தனித்த நேரம் அவளது காதலனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்து இருந்தது.
வேகமாக எடுத்துப் பார்த்தவளது இதயமோ தடதடத்தது.
சட்டென நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.
அதுவரை உதடுகளில் ஒட்டிக் கொண்டு இருந்த புன்னகை தணல் பட்ட பனியாய் சுருண்டுப் போனது.
கண்களில் முன்பு இருந்த ஒளிர்வில்லை. அது இதயத்தின் கதறல் ஒலியை ஒரு பொட்டு நீராக தன்னுள் பதுக்கி வைத்து கன்னத்தில் வழிவதற்கு தயாராய் இருந்த நேரம் அவள் காதுகளில் வந்து விழுந்தது அந்த வரிகள்.
ஒரு கோடி புள்ளி வெச்சு
நான் போட்ட காதல் கோலம்..
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சுடுச்சு காலம் காலம்..
“மிதுரா let’s breakup. Let end this. நான் உனக்கு வேண்டாம்.. நாம பிரிஞ்சுடலாம்.” என்று அவன் அனுப்பி இருந்த அந்த குறுஞ்செய்தியே மூளையை ரிங்காரமிட்டது
“ஏன் கார்த்திக் என்னை வேண்டாம்னு சொன்னே?” என்று திரும்ப திரும்ப அந்த கேள்வியையே கேட்டபடி திக்பிரம்மை பிடித்தபடி அந்த கடற்கரையில் அமர்ந்து இருந்தாள் மிதுரா.
காதல் தீண்டுமா?