Kumizhi13

நேசம்-13

மழைக்கு பதுங்கிய கோழிக் குஞ்சாய், மெத்தையின் மேல் தன்னைச் சுருட்டிக்கொண்டு, உறங்கிக் கொண்டிருந்த சிவனியாவை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான் வருணபாண்டியன். காலை மணி ஏழைத் தாண்டிக் கொண்டிருந்தது. பலமுறை அன்பாய் அதட்டலாய் எழுப்பி விட்டும், இன்னும் அசையாமல் உறங்கும் அவளைத் திட்டிவிடத் தான் தோன்றியது.

நாள்தோறும் அவள் நினைவில் தூங்காமல் தவித்தவனுக்கு, முதல் நாள் இரவில் அவள் அருகாமை அவஸ்தயைக் கொடுக்க, ராக்கோழியாய் அவளை பார்த்தே இரவினை கடத்தி இருந்தான்.

‘ரொம்ப நல்லவனாட்டம் பொண்டாட்டி கிட்ட டயலாக் பேசிட்டு, இப்போ பார்த்து பெருமூச்சு விட்டு என்ன பிரயோஜனம்? இன்னைக்கு ஒரு நாள் அவ பெரிய பொண்ணா வளர்ந்துட்டான்னு நினைச்சு ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடி இருக்கலாம்’ என மனசாட்சி இடித்துரைக்க

“நான் நினைச்சு என்ன பிரயோஜனம்? அவளும் தானே இந்த முடிவுல இருக்கா? அப்புறம் எப்டி கொண்டாட்றதாம்?” இவனும் சலித்துக்கொள்ள

‘உனக்கா அவள சமாளிக்க தெரியாது? நொள்ளை சாக்கு சொல்லிட்டு வந்துட்ட…’ என அவனை காண்டாக்கி விட்டு மனசாட்சி படுத்துக் கொண்டது.

“இல்லன்னு புலம்பினவன் பக்கத்தில தான் இருக்கேன்னு ஏங்க வச்சுட்டியே பாப்பா? அதெப்படி உனக்கு மட்டும் இப்படி தூக்கம் வருது” என பார்த்துக் வைத்தே, தூங்கியும், தூங்காமலும் விடியலை எதிர் கொண்டு, அவளுக்காய் தேநீரும் தயாரித்து வைத்தான்.

“இப்டி உனக்கெல்லாம் டீ ஆத்தி குடுப்பேன்னு கனவுல கூட நினைக்கலடி, செக்யூரிட்டி ஆபிசர் போஸ்ட் கேட்டா, டீ மாஸ்டர் ரேஞ்சுக்கு இறக்கி வச்சுட்டே நீ!” என முனகிக் கொண்டே தான், அவளை எழுப்பி விடும் வேலையை தொடர்ந்தான்.

“நிறைய தடவ உசுப்பிட்டேன், இப்போ நீ எந்திரிக்கல அப்டியே பாத்ரூம்க்கு தூக்கிட்டு போயிடுவேன்”

“——- “ அசையவில்லை அவள்

“கோவிலுக்கு போயிட்டு, ஒன்பது மணிக்குள்ள உங்க அம்மா வீட்டுக்கு போகணும், இன்னைக்கு ஒருநாள் உங்கம்மா கிட்ட திட்டு வாங்காம இருக்க, சீக்கிரம் கிளம்புவோம், எந்திரி…”

“———-“

பொறுமை பறந்து, போர்த்திக் கொண்டிருந்த போர்வையை இழுத்தவன், அவளை உட்கார வைக்க முயல

“ஐயோ மாமா வலிக்குது” என கத்தி விட்டாள்.

“வலிக்குதா? நான் ஒண்ணுமே செய்யலயே! தூக்கி உக்கார வச்சது குத்தமா?”

“அய்ய ஆசையப் பாரு… சட்டுனு எந்திரிச்சா அடிபட்ட இடத்துல வலிக்கும் அத சொன்னேன்”

“எங்கே அடிபட்டது பாப்பா?”

“இடுப்புல தான், உங்க கைங்கரியம்… அதுக்கு தானே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனது மறந்தாச்சா…”

“ஓ… எந்த பக்கம்? இங்கிட்டா? அங்கிட்டா?” என தன் கைகளை கொண்டு, அவள் இடுப்பில் வலம் வர நெளிந்து வைத்தாள்.

“அதெல்லாம் சொல்ல மாட்டேன்…”

“ம்ப்ச்… சும்மா சொல்லுடி, நான் என்ன எட்டியா பாக்கப் போறேன்”

“இந்த… இந்த… பக்கம்” என இடது பக்கத்தை காட்ட, அவனுக்கு மேலும் வசதியாகிப் போனது,

“மேலயா? கீழயா? நடுவுலயா” என கூகிள் மேப்பின்(map) ஆராய்ச்சியை அவள் இடையினில் நடத்திட,

“இப்போ கை எடுக்க போறீங்களா? இல்லையா? கூச்சமா இருக்கு”

“அடிபட்டத தானே கேக்குறேன்! அதுக்கும் தடா போடுவியா?” என அவளை விட்டு விலகவும், அவள் எழுந்து நின்ற நேரம், அவளை இழுத்து மடியினில் அமர வைத்தவன்

“எங்கேன்னு கரெக்டா சொல்லிட்டுப் போ… நான் இடத்தை அடையாளம் காட்ட தான் சொல்றேன், காமிக்க சொல்லல?”

ரொம்ம்ம்பபபப…. நல்லவன்டா நீ’ என மனதிற்குள் நக்கலடித்தவள்

“இப்போ தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க கைய எடுங்க?” கடுப்பில் அவள் எகிற

“நீ சொல்லல… இன்னைக்கு பூரா என் மடியில தான் உக்காந்திருப்ப…”

“யோவ் மாமா! ரொம்பத் தான் ஆசைதான் உனக்கு” சொல்லியபடியே நகர முயற்சிக்க, அது முடிந்தால் தானே, தன் கால்களுக்குள் அவளது கால்களை தடுத்து வைத்திருந்தான்.

‘அவ்ளோ நல்ல பிள்ளையா நேத்தேல்லாம் சீன் போட்டுட்டு, இப்போ படுத்தி எடுக்குறத பாரு இந்த மட மாமா!’ என மனதிற்குள் பல்லைக் கடித்தவள்

“நேத்து ஒரு நல்லவர இங்கே பார்த்தேன் எங்கே போனாரோ?, நல்லவேளை நைட்டிய மாட்டினேன், இல்லைன்னா என்னோட நிலைமை என்னத்துக்கு ஆகுறது” அவனைப் பார்த்து சொல்லி வைக்க

“பேச்ச மாத்தாதே எங்கேன்னு சொல்லு?”

“இங்கே…” என தன் கை கொண்டு காட்ட, அங்கே தன் கைகளை வைத்தவன் “ஆயின்மேண்ட் போட்றியா இல்லையா?”

“போட்டுப்பேன்… இப்ப ரெண்டு நாளா முடியல”

“ஏன்” பேசினாலும் அந்த இடத்தை விட்டு, அவன் கைகள் நகலவில்லை.

“டைம் கிடைக்கல” என்ற படியே எழுந்து கொள்ள, உட்கார்ந்த நிலையில் இருந்தே அவளது இடையை அணைத்தவன், அடிபட்ட இடத்தில் தடவிட்டு முத்தத்தை வைக்க, ஏகத்துக்கும் நெளிந்து வைத்தாள்.

“விடுங்க மாமா, லேட் ஆகுது, இப்டியெல்லாம் செஞ்சா நான் கோவிச்சுப்பேன்”

“மூஞ்சிய தூக்காதே! போய் ரெடியாகு” என ஒரு வழியாய் அனுப்பி வைத்தான்.

அழகான பட்டுச் சேலையில் இவள் கிளம்பி நிற்க,

“ஷப்ப்பா… அசத்துற சிவும்மா! சேலை கட்டினாலே ஒரு மார்கமா தான் தெரியுற என் கண்ணுக்கு…” சொல்லியபடி அருகில் வந்து அவள் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டவன், கன்னத்தில் தன் தடத்தை பதிக்க முனைய

“டைம் ஆச்சு மாமா, சீக்கிரம் கிளம்பலாம்” என அவனை தூர நிறுத்த, பொங்கியபாலில், துளி தண்ணிர் தெளித்து அடக்கியது போல் பாண்டியனின் மோன நிலை கலைந்தது,

‘மனுசனோட பீலிங்க்ஸ் தெரிஞ்சு தான் தடுக்குறாளா? இல்ல நெஜமாவே தெரியாதா இவளுக்கு? எப்ப தான் வளரப் போறாளோ தெரியலையே? இப்போவே எனக்கு மூச்சு முட்டுது’ புலம்பியபடி, மனைவியை அழைத்துச் செல்லவென தனது “ராயல் என்பிஃல்ட் கிளாசிக்” எடுத்துக் கொண்டு வந்தான்

“எத்தன தடவ வண்டியில கூட்டிட்டுப் போகச் சொல்லி கேட்டிருப்பேன், உங்க பெட்டெர் ஆஃப்க்கு மட்டும் தான்னு சொல்லி என் வாய அடைச்சுருக்கலாம்”

“எதுக்கு? இத சொல்லியே நீ ஒட்றதுக்கா? சும்மாவே உனக்கு பேச தெரியாது, நான் எடுத்து குடுத்து வேற நீ பேசி வைக்கவா?”

“பிடிச்சுக்க ஹாண்டில் இல்ல மாமா…”

“பொண்டாட்டி மட்டுமே உக்காரணும்னு நினைக்கிறவன், அவ என்னை மட்டுந்தான் பிடிச்சுட்டு வரணும்னு நினைக்க மாட்டேனா?”

“பாண்டியரே! முடியல??? மனசை தொட்டுட்டீங்க போங்க…”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உனக்கு நான் செஞ்சத, நீயும் செஞ்சு என்னை பழி வாங்கிக்கோ… வா…”

“வருமாமா… டிட் ஃபோர் டாட்… உங்களுக்கு உங்க காரியம் ஆகணும். மாட்டேன்னு சொன்னா விடவா போறீங்க? நடக்கட்டும்… நடக்கட்டும்” கணவனின் எண்ணம் போலவே, அவன் இடுப்பினில் கை போட்டுக் கொண்டு, ஒட்டு மொத்த சந்தோசத்துடன் புதுமண தம்பதிகள் உத்தங்குடிக்குப் புறப்பட்டு சென்றனர்.

பக்கத்து வீட்டு சுமங்கலி ஒருவர் ஆரத்தி கரைக்க, வந்தவர்களை “வா” என்று சொல்லி விட்டு செங்கமலம் உள்ளே சென்று விட்டார்.

“யாரையும் கூப்பிடலையாம்மா?”

“அவங்கவங்களுக்கு வேலை இருக்காம் சிவா, வரலன்னு சொல்லிட்டாங்க…”

“கனி அண்ணி? ரவி அண்ணா?”

“வேலை இருக்குன்னு சொல்லிட்டாங்க…” தாயின் விட்டேத்தியான பேச்சை சிவனியா ரசிக்கவில்லை

நேற்று திருமணம் முடிந்த பெண்ணிடம் கோவிலுக்கு சென்றாயா? பெரியவர்களை பார்த்தாயா? என கேட்க வேண்டிய கேள்விகள் எத்தனையோ இருக்க, செங்கமலம் ஒதுங்கி நின்றது இருவருக்கும் பிடிக்கவில்லை.

யாருக்கு வந்த விருந்தோ என்று அங்கே அமர்ந்தே இருக்கவும் பாண்டியனுக்கு விருப்பமில்லை.

“வேலை இருக்கு பாப்பா… மதியம் போல வர்றேன்”

“சாப்பிட்டு போகலாம் தம்பி” என்று வாய் வார்த்தையாய் சொன்னாலும், அவனை ஏறிட்டு பார்க்கவில்லை செங்கமலம்.

முறைக்க ஆரம்பித்துவிட்டான் கணவன் என்பதை கண்டு கொண்டவள்

“அம்மா மிச்சம் வேலைய நான் முடிக்கிறேன், நீ வந்து உக்காரும்மா”

“அவ்ளோ தான்! வேலை முடிஞ்சுது… நீ இலை மட்டும் போடு“ என சொல்லியவர் மகளை விட்டே, மாப்பிள்ளைக்கு பரிமாற வைத்து ஒதுங்கிக் கொண்டார்.

அந்த நேரமே பாண்டியனின் உள்ளம் ஏதோ சரியில்லை என்றே நெருடத் தொடங்கினாலும், வெளியே காட்டாமல் கிளம்பி விட்டான்

“ஏன்மா… ஒரு மாதிரி இருக்க? சரியா பேசக் கூட இல்ல”

“நான் நல்லாதான் இருக்கேன், சாப்பிட்டு முடி”

“ரெண்டு பெரும் சேர்ந்து சாப்பிடுவோம் வா…”

“வேலை இருக்கு சிவா! நீ சாப்பிடு”

“என்ன ஆச்சும்மா? நீ சரியில்ல… எதையோ மறைக்கிற? நான் இனிமே இங்கே வரமாட்டேன்னு நினைச்சுட்டியா? அப்டியெல்லாம் இல்லம்மா, எப்போவும் போல நான் வந்து தங்குவேன்”

“உனக்குனு குடும்பம் ஆயிடுச்சு சிவா… மாப்பிள்ளை, மாமியார், தாத்தா, அண்ணன், கொழுந்தன்னு ஒரு பட்டாளமே உனக்காக இருக்கு. அவங்கள பாரு மொதல்ல…”

“அப்போ நீ இல்லையா என் குடும்பத்துல?, ஏன் இப்படி சொல்றே? சரியாவே பேச மாட்டிக்க?” கேட்கும் போதே சிவனிக்கு முகம் முழுவதும் கலக்கம் கொண்டது.

“நான் சரியா பேசாதது இப்போ தான் உனக்கு தெரியுதா?”

“என்னம்மா சொல்றே?”

“உன்னை பாண்டியன் எப்போ சென்னைக்கு பாக்க வந்தானோ அப்போ இருந்தே நான் உன் கூட சரியா பேசல… அத நீ கவனிக்கல இப்போ வரைக்கும்”

“அடுத்தடுத்து கல்யாண வேலை, ஆபீஸ் வேலைன்னு கவனிக்க மறந்திருப்பேன்ம்மா”

“ஒஹ்… அப்டியா? ஒரு நாளுக்கு ரெண்டு தடவை பேசுற அம்மா, ரெண்டு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே பேசுறாளேன்னு கூட நினைக்க முடியாத படி, நீ ரெக்க கட்டி பறந்திருக்க அப்டிதானே?”

“இல்லம்மா,,, வேலை சேர்ந்து போச்சு… அதான் பத்திரிக்கை, சேலை செலக்சன் கூட மாமாகிட்டயே பாக்க சொன்னேன்”

“அவன்கிட்ட சொன்னவளுக்கு, அம்மாகிட்ட சொல்ல வாய் வரல, நேரம் கிடைக்கல அப்டித்தானே?”

“அவர் உன்கிட்ட சொல்லிடுவார்னு நினைச்சேன்மா”

“நான் உனக்கு அவ்ளோ தூரமா போயிட்டேனா சிவா?”

“அப்படி இல்லம்மா…“

“எவ்வளவு ஆசையா இருந்திருப்பேன் என் மக கல்யாண வேலை எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்யனும்னு, எவ்ளோ கனவு கண்டிருப்பேன், இப்டி எல்லாத்தையும் அவன்கிட்ட தாரை வார்த்து குடுத்து, என்னை ஓரமா நீக்க வச்சுட்டியேடி?”

“ஏன்மா நீ சொல்ல வேண்டியது தானே? என் பொண்ணு சம்மந்தப் பட்டத எல்லாம் நானே பார்க்குறேன்னு”

“எப்டி சொல்ல? சொன்னா கேட்டுக்குற ஆளா அவன்? ஒரு பொண்ணுக்கு கல்யாணங்கிறது எவ்ளோ பெரிய விஷயம், அதுக்கே நீ என்னை கேக்கமா தானே, அவன்கிட்ட சம்மதம் சொன்னே? அப்போ அவன் என்னை எந்த இடத்துல வைப்பான்னு யோசிக்க வேணாமா நீ”

“நீ சரின்னு சொன்ன பிறகு தானே கல்யாணம் நடந்தது. நானா சம்மதம் சொல்லல…”

“அடி வெளுத்துருவேன் ராஸ்கல், அம்மா சம்மதம் சொன்னா போதும்னா என்ன அர்த்தம்? உனக்கு பிடிச்சிருக்குன்னு தானே நினைக்கிறோம், எதுவா இருந்தாலும் அம்மாகிட்ட கேளுங்கன்னு சொல்லி இருக்கலாமே சிவா!”

“அப்படித்தானேம்மா சொன்னேன்”

“நீ சொன்ன முறை வேற! உன் பேச்சு குடுத்த தைரியம் தான், அவன் பொண்ணு கேட்டு வந்ததும், எல்லோரும் என்னை சம்மதம் சொல்லச் சொல்லி வற்புறுத்தினது எல்லாம்”

அந்த நேரத்தில் அவளும் பேசிய பேச்சை நினைவுபடுத்தி பார்க்க, அவளுக்கும் அது கொஞ்சம் நெருடலாகவே பட்டது. அப்படி ஒரு பதிலை சொல்ல வைத்த பாண்டியனின் மேல் கோபம் துளிர் விட ஆரம்பித்தது.

“அவன்கிட்ட பேசின பேச்ச என்கிட்ட சொல்ல தோணுச்சாடி?, அவ்ளோ திட்டியும் அவன் கூட ஊர் சுத்திட்டு, அவன் வாங்கி குடுத்த போஃன கையில வச்சுட்டு இருந்திருக்கே… இத என்கிட்ட சொல்ல உனக்கு பயம் வேற வந்து தொலையுதோ?”

“நான் வேண்டாம்னு சொன்னேன், மாமா கேக்கல… ஏற்கனவே நிறைய திட்டிட்டே நீ! அதான் சொல்ல பயமா இருந்துச்சு”

“கல்யாணம் பேசியிருக்கான் உன்கிட்ட, அப்போவும் இந்த திட்டு வாங்க பயந்து, நீ சொல்லல, சொல்லாம விட்டது இது மட்டுந்தானா? இல்ல இன்னும் வேற எதுவும் இருக்கா?” என கமலம் பூடகமாய் பேச

“போதும்மா… வாய்க்கு வந்தபடி கேள்வி கேட்டுட்டு இருக்காதே? நீ எப்டி நினைச்சாலும் சரி, அப்போவும், இப்போவும், நான் உன் பொண்ணு தான்”

“இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லடி, உனக்கும், எனக்கும் நடுவுல மூணாம் மனுஷன் வந்து, உன்னோட கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டது எனக்கு பிடிக்கல, அவங்க சொல்றதுக்கு முன்னால உனக்கு என்கிட்ட சொல்லவும் தோணல, எல்லாமே தனக்கு தான் தெரியும்ன்னு, என்னை தள்ளி வச்சு அவன் எல்லா வேலையும் பண்ணினது உனக்கு தப்பா தோணல அப்படித்தானே?” தன் மனக்குமுறல்களை மொத்தமாய் கொட்டிக் கொண்டிருந்தார் செங்கமலம்.

“அம்மா போதும் விடு, நான் அப்டி இருந்திருக்க கூடாது தான், இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன், இதை மனசுல வச்சுட்டு என்கிட்டே சரியா பேசாம இருக்காதே?”

“எப்படி விட சொல்றே சிவா? அன்னைக்கே நம்மள நிக்க வச்சு, என் வீடு, நான் சொல்றபடி தான் கேக்கனும்னு சொன்னவன், இப்போ பொண்டாட்டி ஒண்ணும் இல்லாதவளா வந்திருக்கான்னு, எப்போ, எங்கே குத்தி கட்டி பேசுவான்னு தெரியலையேடி? இத நினைச்சு நினைச்சே எனக்கு சோறு தண்ணி இறங்க மாட்டேங்குதே” மன கலக்கங்களுடன் தான் தாய் மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“அப்படி எல்லாம் இல்லம்மா… மாமா ரொம்ப மாறிட்டாங்க, அன்னைக்கு பேசினதுக்கு ரொம்ப வருத்தப்படுறாங்க” என்றவள் அவன் தன்னிடம் பேசிய அனைத்தையும் கூற, அதற்கும் குற்றம் கண்டு பிடித்தார் செங்கமலம்.

“அப்போ அவன் நல்லவன்னு நிரூபிக்க தான் இந்த கல்யாணமா? இப்போவும் பாதுகாப்பு, பத்திரம்ன்னு சொல்லி தான் உன் வாய அடைச்சு வச்சுருக்கானா? இதுல இவன் சொன்ன பாசம், காதல் எல்லாம் வரவே இல்லையேடி”

“இல்லம்மா என்கிட்டே லவ் சொன்னாரேம்மா…” என அரும்பாய் பூத்திட்ட சிரிப்பில் மகள் சொல்ல

“அப்படி இருந்தா நேரடியா என்கிட்டே வந்து இதுதான் விசயம்ன்னு சொல்லி இருக்கலாமே? ஏன் என்னை இழுத்து வச்சு உன்கிட்ட பேசணும், இது வரைக்கும் ஒரு சமாதனப் பேச்சு கூட என்கிட்டே பேசி வைக்கலையே?”

“அவருக்கு அப்போ தான் தோணிருக்கும் போலம்மா, உடனே என்கிட்டே சொல்லிட்டார்”

“சொல்லட்டும்… ஏன் சீக்கிரமே கல்யாணம் வைக்கணும்?, கொஞ்ச நாள் எடுத்து சிரமம் இல்லாம செஞ்சுருக்கலாமே? நானும் கொஞ்சம் பொறுமையா என் பொண்ணுக்கு எல்லா சீர், வரிசை செய்ய வழி செஞ்சுருப்பேனே? இப்படி வெறுங்கையா சபையில நிக்க வச்சுட்டானே! இத மனசுல வச்சு மறுபடியும் நம்மை குத்தி காட்டி பேச மாட்டான்னு என்ன நிச்சயம்?”

“என்னம்மா இப்படி சொல்ற? அப்படி எல்லாம் கிடையாது, ரொம்ப தப்பா யோசிக்கிற நீ?”

“பொண்ணுங்க மனசுல நேசம் வந்தா இப்படிதான்… பிரியம் வச்சவங்க என்ன செஞ்சாலும் அத மறக்க செய்யும், அவங்கள பத்தி நல்ல விதமாவே தான் நினைக்க வைக்கும், கூடவே கல்யாணம் ஆயிட்டா கேக்கவா வேணும், நீயும் அதுக்கு விதிவிலக்கா என்ன?”

“எனக்கு ஒண்ணும் அப்படிப்பட்ட பாசம் எல்லாம் இல்லம்மா? அவர் தான் என்கிட்டே சொல்லியிருக்கார்” என சிவனியா சிலிர்த்துக் கொள்ள

“அத என்கிட்டயே சொல்றியாடி? உங்கப்பாவ காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவ நானு, எனக்கு தெரியாதா ஒரு பொண்ணோட மனசு? அவன் செஞ்சது அவ்ளோ சீக்கிரம் என்னால ஜீரணிக்க முடியாதப்போ, நேரடியா பாதிக்கப்பட்டவ நீ! உன்னால எப்படி மறந்து, மன்னிச்சு கல்யாணம் வரைக்கும் வர முடிஞ்சது. கொஞ்சம் யோசனை பண்ணிப் பாரு, எல்லாம் தானா விளங்கும்.”

“அப்படி எல்லாம் இல்லம்மா! நான் அது மாதிரி யோசிச்சு பாக்கல?”

“அவனுக்கு உன்மேல உண்மையிலேயே காதல் இருக்கோ இல்லையோ எனக்கு தெரியல? ஆனா உனக்கு அவன் மேல வண்டி வண்டியா இருக்குடி… சந்தோசமா இரு, கூடவே ரொம்பவே கவனமா இரு சிவாம்மா”

“என்னம்மா இப்டி சொல்றே! அப்படியே கவுத்திட்டியே”

“ரொம்ப கோபக்காரனா, முரடனா இருக்கான்டி… எப்போ, எத தூக்கி, யாரைச் சாத்துவான்னு தெரியல? பத்திரமா நல்லா வச்சுப்பான். ஆனா பிரியமா இருப்பானா? அது தான் எனக்கு சந்தேகமா இருக்கு, எந்த ஒரு சீர் வரிசையும் செய்ய விடாம அவன் கல்யாணத்தை நடத்திகிட்டத பாக்குறப்போ, எனக்கு மனசு வேற விதமா யோசிச்சு வைக்குது” மொத்தமாய் பாண்டியனின் மீதான நம்பிக்கையை தன் மனதில் இருந்து தகர்த்திருந்தார் செங்கமலம்.

“புரியலம்மா நீ சொல்றது?”

“அன்னைக்கு நடந்த மாதிரியே ஒண்ணும் இல்லாம வந்தவன்னு உன்னை வெளியே அனுப்பிடுவானொன்னு பயமா இருக்கு சிவாம்மா…”

“அப்டியெல்லாம் நடக்காதும்மா…”

“நடக்காம இருந்தா சந்தோசம் தான்… நானும் அந்த மாதிரி பேச்சு வராம இருக்க தான் யோசனை பண்ணியிருக்கேன். இனிமேலாவது கொஞ்சம் நல்லா சம்பாதிக்க நினைக்கிறேன், நான் வேலை பாக்குற ரைஸ்மில் ஓனரோட மாப்பிள்ளை, சிங்கப்பூர்ல பெரிய ஹோட்டல் வச்சு நடந்துறாங்களாம், அங்கே நம்ம ஊர் சாப்பாடு செய்ய சரியான ஆள் கிடைக்கலன்னு சொல்லி வேலைக்கு கூப்பிட்டாங்க, நானும் வர்றேன்னு சொல்லிட்டேன், இப்போ போனா ஒரு ஆறுமாசம் கழிச்சு தான் வருவேன் சிவா…”

“என்ன சொல்றே? என்னை கேக்காம எப்படிம்மா நீ முடிவெடுக்கலாம்?” அதிர்ச்சியும் கோபமும் ஒன்றாய் வர ஆரம்பித்தது சிவனியாவிற்கு.

“உனக்கு இன்னும் நல்லா சீர் செய்யணும்னு நினைக்கிறேன் சிவா…”

“அப்போ எனக்கு கல்யாணம் முடிவான பிறகு தான், நீ இந்த முடிவுக்கு வந்திருக்கே அப்படிதானே?”

“ஆமா சிவாமா! நீ பத்திரமா ஒரு இடத்துல இருக்கேங்கிற நிம்மதி இருக்கு, இந்த மாதிரி தூரமா போய் சம்பாதிச்சா தான், நாலு காசு பார்த்து, கொஞ்சம் கூடுதலா உனக்கு சீர் செய்யவும் முடியும், ஊர்க்காரங்க முன்னாடி கொஞ்சம் கௌரவமாவும் நடமாட முடியும், முக்கியமா உன் புகுந்த வீட்டுல என்னத்த கொண்டு வந்தேன்னு உன்னை யாரும் கேக்க முடியாதுல்ல, அதுக்கு தாண்டி நான் ஒத்துக்கிட்டதே, நாளைக்கு சாயந்திரம் அவங்களோட கிளம்புறேன்.”

“உன்னை போக விடமாட்டேன்ம்மா… நீ போகாதே! நான் சம்பாதிக்கிறேன், அதுல நீ என்ன செய்யணுமோ, அத செய்யலாம், என்னை விட்டு போகாதேம்மா! என்னால இருக்க முடியாது, எனக்கு இந்த கல்யாணம் வேணாம், நான் மாமா வீட்டுக்கு போகமாட்டேன், உன்கூடவே இருக்கேன், நாம ரெண்டு பேரும் சென்னைக்கு போயிடலாம்” சொல்லியபடியே சிறு சேயாய் தாயின் மடியை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“சின்ன புள்ளையாட்டம் இதென்ன பேச்சு சிவா… உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அதுக்கு ஏத்த மாதிரி பொறுப்பா இருக்க பழகிக்கோ, அது தான் உன் வீடு, இங்கே தனியா இருந்து மோட்டுவளையத்தை பாக்குறதுக்கு பதிலா, சம்பாத்தியம் பண்றேன்னு தனியா இருக்கப் போறேன். அவ்ளோ தான் வித்தியாசம்.”

“இப்போ நீ குடுத்திருக்குறதே போதும்மா, மேற்கொண்டு வேற எதுவும் வேணாம் எனக்கு”

“உன் புருஷன் இருக்குற நிலைமைக்கு இதெல்லாம் கால் தூசி சிவா!, அவரும் கௌரவமா சொல்லிக்கிற மாதிரி செய்யணும்”

“இல்ல… நீ சொல்றத நான் நம்ப மாட்டேன். உனக்கு என்மேல கோபம் இருக்கு. அதான் இப்படி போறேன்னு சொல்ற நீ!”

“அப்படியெல்லாம் இல்லடி தங்கம்… எனக்குன்னு இருக்குறது நீ மட்டும் தானே? அதான் கொஞ்சம் புத்தி பிசகி ஏதோதோ பேசிட்டேன், இப்போ பாரு அம்மாக்கு கோபம் எல்லாம் போயிடுச்சு, ஆறுமாசம் அங்கே வேலை பார்த்துட்டு, மேற்கொண்டு ஒத்து வந்தா, தொடர்ந்து வேலை செய்யலாம்னு முடிவுல இருக்கேன்” என்றே அவள் உச்சிமுகர்ந்திட

“நிச்சயமா ஒத்துக்க மாட்டேன்… எனக்கும் நீ மட்டும்தான் இருக்க… நீ போகக் கூடாது, நான் வேலைக்கு போய் உன்னை சந்தோசமா வச்சுப்பேன், என்னை நம்பும்மா.”

“அடம்பிடிக்காதே சிவாம்மா! அங்கே சொல்லியாச்சு, நாளைக்கு கிளம்புறேன், ரெண்டு நாளைக்கு ஒரு தடவ, இல்ல தோது பார்த்து பேசுறேன். அங்கே நீ யாரோட மனசும் கோணாம நடந்துக்க பாரு, உன்னோட துடுக்கு தனத்தையேல்லாம் மூட்டை கட்டி வச்சுடு, ஒழுங்கா உன் புருஷன் கூட குடித்தனம் பண்ணப் பாரு தங்கம், அடாவடிப் பொண்ணு இல்ல நீ, நல்ல பொண்ணுன்னு பேர் எடுக்கணும்” தன் முடிவில் நிலையாய் நின்றவர், தன் மன பாரத்தை எல்லாம் மகளிடம் கொட்டி விட்ட திருப்தியில் கிளம்புவதற்கான முனைப்புகளை கவனிக்க ஆரம்பித்தார்.

தன் பெண்ணின் மனதில் தீராத பாரத்தை ஏற்றி வைத்ததை ஏனோ அவர் அறியவில்லை, தன் பேச்சுக்கள் எல்லாம் எப்படிப்பட்ட ஒரு காயத்தை, குற்றவுணர்வை அந்த பெண்ணிற்க்கு ஏற்படுத்தும் என்பதை சிந்தித்தும் பார்க்கவில்லை.

மகளை மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தச் சொன்னவருக்கு, தனது ஆதங்கம் எல்லாம் மகளை குழப்பி, மனநிம்மதி இழக்கச் செய்யும் என்பதை ஏனோ மறந்தே போனார்.