kurumbu paarvaiyil-12

குறும்பு பார்வையிலே – 12

சில நொடிகள் தாமதத்திற்குப் பின் அலைபேசியை எடுத்தான் ஆகாஷ்.

“ஆகாஷ்… பாதிலையே போனீங்களே? கேட்டுடீங்களா?” என்று ஸ்ருதி ஆர்வமாகக் கேட்க, “அது… வந்து…” என்று தடுமாறினான் ஆகாஷ்.

அவன் தடுமாற்றத்தை புரிந்து கொண்டு, “சரி விடுங்க. அம்மா வேண்டாமுன்னு சொல்லலை. யோசிச்சாங்க, அவ்வுளவு தான். நான் பேசிக்குறேன்.” என்று ஸ்ருதி புரிதலோடு கூறினாள்.

“தேங்க்ஸ் டாலி.” அவன் குரல் உணர்ச்சிவசப்பட்டு ஒலித்தது. “இது உங்களுக்கு செட் ஆகலை.” என்று கேலி பேசினாள் ஸ்ருதி.

சிரித்துக்கொண்டான் ஆகாஷ்.

“டாம் எப்படி இருக்கு?” என்று அவள் கேட்க, “அது தான் மேடம் வேண்டாமுன்னு சொல்லிடீங்கள்ல? அது தான் தூக்கி போட்டுட்டேன்.” என்று கூற, “தூக்கி போட்டுடீங்களா?” என்று அவள் அதிர்ச்சியாகக் கேட்டாள்.

“தூக்கி போட்டுட்டேனா, ஓரமா இருக்குன்னு அர்த்தம்.” என்று அவன் ராகம் பாட, அவன் அருகே வந்த கீதா தலையில் அடித்துக்கொண்டாள்.

‘போ…’ என்று ஆகாஷ் கண்களால், செய்கை காட்ட, “முடியாது…” என்று முணுமுணுத்துக்கொண்டு அவன் முன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள் கீதா.

ஆகாஷ் தன் தங்கையின் முன் பேச முடியாமல் தடுமாற, “யாரும் பக்கத்தில் இருக்காங்களா? உங்க ரூமில் இல்லையா நீங்க?” என்று ஸ்ருதி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

“ஹி…ஹி… ” என்று சிரித்து ஆகாஷ் மழுப்ப, “போடுறது கடலை. இதுல என்ன சிரிப்பு?” என்று கீதா அவள் காதை அவன் அலைபேசி அருகே வைத்துக் கொண்டு நின்றாள்.

கீதாவின் காதை ஆகாஷ் திருக, “ஆ…” என்று அவள் அலற, அவள் வாயை இறுக மூடினான் ஆகாஷ்.

‘உன் ரூம்க்கு போ.’ என்று அவன் விரல் உயர்த்தி மிரட்ட, “ம்…ச்…” என்று கீதா தோள் குலுக்கி அவன் முன் சட்டமாக அமர்ந்தாள்.

வேறு வழியின்றி ஆகாஷ் அவர்கள் நிச்சயதார்த்தம் புடவை எடுக்கச் செல்லும் நாளை மட்டும் பேசிவிட்டு அவன் அலைபேசி பேச்சை முடித்துக் கொண்டான்.

“கீதா… நீ ரொம்ப பண்ற.” என்று கடுப்பாகக் கூறிக் கொண்டு, அவள் முன் அமர்ந்தான் ஆகாஷ்.

‘அதை எல்லாம் சட்டை செய்வேனா?’ என்று தன் சகோதரனின் முகம் பார்த்து, “என்ன பேசுவீங்க?” என்று அக்கறையாகக் கேட்டாள் கீதா.

“ஏன் அதை தான் நீயும் கேட்டியே?” என்று அவன் கடுப்படிக்க, “க்ளுக்…” என்று சிரித்தாள்.

“சிரிக்காத… நீ பண்ற சேட்டைக்கெல்லாம், உனக்கு லவ்வே செட் ஆகாது.” என்று ஆகாஷ் கூற, “நான் லவ் பண்ண மாட்டேன் அண்ணா. இந்த மெல்லினம், இடையினம், வல்லினம் எல்லாம் எனக்கு செட் ஆகாது. நான் நேரா உயிர் மெய் தான்.” என்று கீதா தீவிரமாகக் கூறினாள்.

‘நமக்கு இன்னும் இடையினம், வல்லினமே தெரியல. இதுல உயிர்மெய்ன்னா?’ என்ற சந்தேகத்தோடுத் தங்கையைப் பார்த்தான்.

“அதெல்லாம் உனக்கு இப்ப புரியாது. அதெல்லாம் சிங்கள் மிங்கில் கான்செப்ட்.” என்று அவள் தோள்களைக் குலுக்க, ஆகாஷ் அவளை இன்னும் குழப்பமாகப் பார்த்தான்.

கீதா அவனை மேலும் கீழும் நக்கலாக பார்க்க, அவள் பார்வையில் தன்னை சுதாரித்துக்கொண்டு “உன் எதிர் கால திட்டம் என்ன?” என்று தெரியாதவன் போல் கேட்டான்.

“இப்ப யு. ஜி. அப்புறம் பி.ஜி. அப்புறம் பிஎச். டி. இதெல்லாம் முடிஞ்சி டும்…டும்…டும்… ” என்று செய்கையோடு கூறினாள் கீதா.

“நீ பேசுற பேச்சுக்கு உனக்கு நேரா டும்…டும்…டும்… மாதிரி தான் தெரியுது.” என்று ஆகாஷ் அவன் அறையின் சோபாவில் அமர்ந்து கூற, “திஸ் ரூம் சோ டிஸ்டர்பன்ஸ்.” என்று கடுப்பாகக் கூறி, தலையைச் சிலுப்பிக் கொண்டு தற்காலிகமாக அவன் அறையை விட்டு வெளியேறினாள்.

‘இதை அப்பவே பண்ணிருக்கலாம்.’ என்று புன்னகைத்துக்கொண்டான் ஆகாஷ்.

பணி, கனவு எனச் சுவாரசியமான அலைப்புறுதல்களோடு ஆகாஷ் ஸ்ருதியின் நாட்கள் நிச்சியதார்தத்தை நோக்கி நகர்ந்தது. அவன் அவளுக்காக நிச்சயதார்த்தத்திற்கு ஆகாய நிறத்தில் சேலை பரிசளித்திருந்தான். அவளும் அவனுக்கு அதே நிறத்தை ஒட்டி கோட் சூட் பரிசளித்திருந்தாள்.

அன்று நிச்சயதார்த்தம். கூட்டம் அலைமோதியது. கல்யாணம் என்று எண்ணுமளவுக்குக் கூட்டமும், ஆர்ப்பாட்டமும்  அரங்கேறிக் கொண்டிருந்தது.

கார்த்திக் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கீதா அவள் தோழிகளோடு வேலை செய்கிறேன் பேர்வழி என்று சுற்றிக் கொண்டிருந்தாள்.

அவள் இளஞ்சிவப்பு நிறத்தில் தாவணி என்றும் சொல்லலாம். சோலி என்றும் சொல்லலாம் என்பது போல் ஒரு உடை அணிந்திருந்தாள். ஆங்காங்கே மணிகள் தொங்கி கொண்டிருந்தன. அவள் காதில் ஜிமிக்கி, மாட்டி அசைந்தாடிக் கொண்டிருந்தது.

“கீதா…” என்று அழைத்துக்கொண்டு ஆகாஷ் கீதாவை நெருங்க, அவள் தோழி கூட்டம் சிட்டாகப் பறந்தது.

“கல்யாணம் பொண்ணை விட உன் மேக் அப் அதிகமாக இருக்கு.” என்று ஆகாஷ் கேலி பேச, “அண்ணா… அப்படினா கல்யாண பொண்ணுக்கு மேக் அப் பத்தலைன்னு அர்த்தம்.” என்று அவள் அசட்டையாக கூற, “அப்படியா சொல்ற? சரி வா… அதைக் கல்யாண பொண்ணு கிட்ட சொல்லிட்டு வந்திருவோம்.” என்று அவன் அது தான் முக்கியம் போல் கூறினான்.

“அது தான் பார்த்தேன். என்னடா காத்து இந்த பக்கம் வீசுதுன்னு? என்னால வர முடியாது. வேணுமின்னா நீ போய் பாரு.” என்று கெத்தாகக் கூறினாள் கீதா.

“நான் மட்டும் போனா நல்லாருக்காது. நீயும் வர. உன்கிட்ட வரியா, வரலையான்னு நான் கேட்கலை.” என்று பேசியபடியே, அவளைக் கையேடு இழுத்துச் சென்றான் ஆகாஷ்.

ஸ்ருதி ஆகாய நிற சேலையில் தேவதையாகக் காட்சி அளிக்க, இமைக்க மறந்து அவளைப் பார்த்தான் ஆகாஷ் .

‘காதலால் ஏற்படும் சித்த பிரமைக்கு மருந்தே கிடையாதா?’ என்ற எண்ணத்தோடு, “ம்… க்கும்…” என்று கீதா கனைப்பொலி எழுப்ப, ஆகாஷ் தன்னை சுதாரித்துக் கொண்டான்.

ஸ்ருதியும் அப்பொழுது தான் திரும்பி பார்த்தாள். முதலில் இவர்கள் பரிசு கொடுத்த உடையை அனைத்து கொள்வதாக ஏற்பாடு. அதன் பின், மாப்பிள்ளை வீட்டில் கொடுக்கும் சேலையை மாற்றிக் கொள்வதாக திட்டம். அதன்படி ஸ்ருதி ஆகாய நிற சேலையை உடுத்தி இருந்தாள்.

ஆனால், ஸ்ருதி வாங்கி கொடுத்த உடையை ஆகாஷ் அணியவில்லை. ஸ்ருதியின் முகத்தில் அப்பட்டமாக ஏமாற்றம், கோபம் தெரிய கீதா தன் சகோதரனைப் பார்த்தாள். நொடிப்பொழுதில், “அண்ணா… நீ வேற டிரஸ் போடுறதா தானே சொன்ன?” என்று கேட்க, “செலெக்ஷ்ன் பிடிக்கலை. போடலை.” என்று தோள்களை குலுக்கினான்.

“கீதா…” என்று அதற்குள் யாரோ அழைக்க, அவள் விறுவிறுவென்று ஓடினாள்.

“செலெக்ஷன் பிடிக்கலைன்னா, அப்பவே மாத்திருக்க வேண்டியது தானே?” என்று கடுப்பாகக் கேட்டாள் ஸ்ருதி. ‘நான் மட்டும் இவன் எடுத்துக் கொடுத்ததை போடணுமா?’ என்ற கோபம் அவளுள்.

“அப்ப தோணலை. இன்னைக்கு தோணுச்சு.” என்று அசட்டையாகக் கூறியபடி, அவளை நெருங்கினான். ‘இவனுக்கு எப்பவுமே எல்லா விஷயமும் சாதாரணம் தானா?’ என்ற ஏமாற்றம் கலந்த கேள்வி அவளுள்.

இவர்களுக்கு தனிமை கொடுத்து அனைவரும் வெளியே சென்றிருக்கவே ஆகாஷ் உரிமையோடு அருகே வந்தான். ஸ்ருதி அவனை சற்று தடுமாற்றமாகவே பார்த்தாள்.

அவளுள் சற்று படபடப்பு. கொஞ்சம் வெட்கம். அதை எல்லாம் மிஞ்சுமளவு கோபம்.

“உன்னை முதன் முதலில் கோபமா தான் பார்த்தேன். நீ அப்பவே அழகு. இன்னைக்கும் கோபமா இருக்க. ரொம்ப அழகு டாலி நீ.” அவள் காதோரத்தில் அவன் கிசுகிசுத்தான்.

அவனைத் தட்டிவிட்டாள். “நான் சொல்றதை செய்யாமல், இப்படி ஐஸ் வைக்குற வேலை எல்லாம் வேண்டாம்.” என்று தன் உதட்டைச் சுழித்தாள்.

அவள் எதிர்பாராத நேரத்தில், அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு, “கோபபட்டா  இது தான் என் தண்டனை. லவ் யு டாலி.” என்று கூறிவிட்டு ஸ்ருதி அவளை சுதாரிப்பதற்குள் மாயமாக மறைந்தான் அந்த குறும்புக்காரன்.

‘இவனிடம் கோபித்துக்கொள்ளவா? இல்லை இவனிடம் நான் விட்டுக்கொடுத்துப் போகவா?’ என்று தெரியாமல், அவள் சுய அசலில் மூழ்க, ஸ்ருதியின் தோழிகள் கேலியோடு அவளைச் சூழ்ந்தனர்.

கீதா வேலைகளைச் செய்துகொண்டு அங்குமிங்கும் பரபரப்பாக ஓட, எதிரே கார்த்திக் ரோஜா இதழ்கள் கொண்ட தாம்பூலத்தட்டோடு வந்தான்.

எதிரே வந்த கார்த்திக்கின் மீது அவள் மோத, கட்டியிருந்த தாவணி அவளைச் சற்று இடறிவிடக் கீழே சரிந்தாள் கீதா. கார்த்திக்கின் கைகள் அவளை விழாமல் தாங்கிக் கொள்ள, அவன் கைகளில் உள்ள தாம்பூலத்தட்டு சரிந்து கீதாவுக்குப் பூமழை தூவியது.

 

கார்த்திக், கீதா சில நொடிகளில் விலகிக் கொள்ள, தாம்பூலத்தட்டை எடுத்துக்கொண்டு வேகமாக நகர்ந்தான் கார்த்திக்.

“என்னடி இன்னைக்கு உங்க அண்ணி தான் ஹீரோயின். நீ இல்லை. என்னமோ ஹீரோயின் மாதிரி உனக்கு பூமழை தூவறாங்க” என்று கீதாவின் தோழிகள் கேலி பேச, “ஏன் செகண்ட் ஹீரோயினுக்கு பூ தூவினா ஏத்துக்க மாட்டீங்களா?” என்று மிடுக்காகக் கேட்டாள் கீதா.

“ஓ… ஓ… அப்படி போகுதோ கதை? அப்ப ஹீரோ? ம்… அது தான் இப்படி இடையோடு அணைத்து, பூமழை தூவி நேரா இடையினம் பயணிக்கறீங்களோ?” என்று கார்த்திக் அவளை பிடித்தது போல் பிடித்து மற்றொருத்தி ராகம் பாட, “ச்சீ…” என்று வெட்கப்பட்டாள் கீதா.

“பாரேன் கீதாவுக்கு கூட வெட்கம்.” என்று தோழி ஒருத்தி கேலி செய்ய, “அவன் யாருன்னு கூட எனக்கு தெரியாது. நான் பிஎச். டீ. பண்ணனும். என் வாழ்க்கையில் மண்ணள்ளி போட்றாதீங்க. வந்தோமா… சாப்பிட்டோமா கிளம்பினோமான்னு இருக்கனும்.” என்று அவள் மிரட்ட, மீண்டும் அங்குச் சிரிப்பலை பரவியது.

 

அங்கு எழுந்த சிரிப்பலையில், கார்த்திக்கின் கவனம் அங்குத் திரும்பியது. ‘சரியான வானர கூட்டமா இருக்கும் போல? நம்மளை தான் எதோ கேலி பேசி சிரிக்குதுங்க.’ என்று எண்ணியபடியே தன் வேலையைக் கவனிக்கச் சென்றான்.

ஸ்ருதி மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள்.

அவளை அமர வைத்து அங்குச் சடங்குகள் அரங்கேறின. கார்த்திக்கின் பெற்றோர் நவநீதன், செல்வி முக்கிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

ஆகாஷின் தாத்தா, பாட்டி ஷண்முக சுந்தரம் ஆவுடைம்மை முன்னிலையில் அனைத்தும் நடைபெற்றது.

ஸ்ருதியின் தந்தை ஈஸ்வரன் அனைவரிடமும் இன்முகமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஸ்ருதியின் தாய் பார்வதி சற்று பதட்டமாகக் காணப்பட்டார்.

தன் மகள் வாழப்போகும் வீட்டில் அனைவரையும் கணக்கிட்டுக் கொண்டிருந்தார். ஆகாஷின் தாய் சுமதியைத் தவிர அனைவரும் இன்முகமாகவே காட்சி அளித்தனர் .

‘மாமியார் மட்டும் தான் பிரச்சனை போல. அப்படி என்ன பெரிய பிரச்சனை தர முடியும் ஸ்ருதிக்கு? மாமியாரைச் சமாளிக்க முடியாத அளவுக்கு என் பெண்ணை நான் கோழையாக வளரக்கலை.’ என்று தீர்மானித்துக் கொண்டு அனைவரிடம் தலை அசைத்துப் பேசிக்கொண்டிருந்தார்.

ஆகாஷ், முன் வரிசையில் அமர்ந்து தன் வருங்கால மனைவியைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஸ்ருதி அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவள் கோபமும் அவனை ஈர்த்தது.

பார்வதியின் கண்கள் ஆகாஷை அளவிட்டது. ‘இது என்ன மாப்பிள்ளை இப்படி பார்த்துட்டு இருக்கிறார்? விட்டா இன்னைக்கே தாலி கட்டி கூட்டிட்டு போயிருவார் போலிருக்கே? இதுக ப்ரிவெட்டிங் ஷூட் போகணுமுன்னு வேற நிக்குதே.’ என்று யோசித்தார் பெண்ணின் அன்னையாக.

சடங்குகள் முடிந்து, ஆகாஷ் ஸ்ருதியின் அருகே நிற்க, ஸ்ருதி அவனை மருந்துக்கும் திரும்பிப் பார்க்கவில்லை.

“டாலி… என்னை பாரேன்.” அவன் அவள் காதில் கிசுகிசுத்தான்.

“எல்லாரும் நம்மளை தான் பார்ப்பாங்க.” என்று அவள் கூற, “பார்க்கட்டும். எனக்கு யாரைப் பத்தியும் கவலை இல்லை.” என்று அவன் கூற, அவனுக்குச் சிறிதும் சளைக்காமல், “எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், நான் எடுத்துக் கொடுத்த சட்டையைக் கூட போட பிடிக்காதவங்க கிட்ட எனக்கென்ன பேச்சு?” என்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள் ஸ்ருதி.

“டாலி… நீ முகம் திருப்பினா, என் தண்டனை உனக்கு தெரியும். எல்லார் முன்னாடியும் தண்டனை கொடுக்க நான் தயார். வாங்க, உன் கன்னங்கள் தயாரா?” என்று அவன் குறும்பு கொப்பளிக்கக் கேட்க, “உங்களை…” என்று அவள் அவனைக் கோபமாகப் பார்க்க ஆரம்பித்து, ஆச்சரியத்தோடு புன்னகைத்தாள்.

“நல்லாருக்காக டாலி?” என்று அவன் புருவம் உயர்த்த, “மாத்திட்டிங்களா? எதுக்கு இந்த விளையாட்டு?” என்று அவள் கோபப்பட முயன்று தோற்றுக் குழைந்தாள்.

“உன்னை கோபப்பட வைத்து, உனக்கு ஹாட்டா ஒரு லவ் யு சொல்லலாமுன்னு தான்.” என்று அவன் கிரக்கமாகக் கூற, ஸ்ருதி அழகாக வெட்கப்பட்டாள்.

‘கம்பீரமான தன் தோழியா இது?’ என்று கார்த்திக் சந்தேகமாகப் பார்க்க, “அண்ணா… எல்லாரும் உன்னை பாக்குறாங்க. கொஞ்சம் கெத்தா இரு அண்ணா. கல்யாணத்துக்கு அப்புறம் காலில் விழலாம் அண்ணா.” என்று கீதா ஆகாஷின் அருகே கெஞ்சுவது போல் கேலி செய்தாள்.

அவர்கள் புன்னகை, வெட்கம் என் அனைத்தும் கேமரா தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டது.

நிச்சயதார்த்தம் முடிந்து, கல்யாணத்திற்கு சரியாக ஒன்றரை மாதத்திற்கு முன் பிரிவெட்டிங் ஷூட் செல்லும் நாளும் வந்தது.

ஸ்ருதியோடு கார்த்திக் செல்வதாகவும், ஆகாஷ் வீட்டில் பாட்டியும், கீதாவும் செல்வதாகத் திட்டமிடப்பட்டது.

விமான நிலையத்தில் ஸ்ருதி, கார்த்திக் காத்திருக்க, பாட்டியும், கீதாவும் வந்தனர்.

அப்பொழுது ஸ்ருதியின் அலைபேசி அழைக்க, “ஸ்ருதி… சாரி ஸ்ருதி. நான் கொஞ்சம் பிஸி… நீ போய்கிட்டே இரு. முதலில் உன் ஷூட்டிங் தான். அப்புறம் தான் நான். வேலை அப்படி. நான் நாளைக்கு ஜாயின் பண்ணிருவேன்.” என்று ஸ்ருதி மேலே பேச இடம் கொடுக்காமல், ஆகாஷ் தன் அலைபேசி பேச்சை முடித்துக்கொண்டான்.

ஸ்ருதி மீண்டும் அழைத்து, பேசிய பேச்சில் ஆகாஷ் அதிர்ச்சியாக நின்றான்.

குறும்புகள் தொடரும்…