oviyam-16

நேரம் அதிகாலை இரண்டு மணி. இரு உள்ளங்களும் நித்திரையைத் தொலைத்துவிட்டு விழித்திருந்தன. இளஞ்செழியன் முகத்தில் அப்படியொரு திருப்தி. மயங்கிப் போயிருந்தான். ஆனால் அவன் முகத்தில், பார்த்தால் மற்றவரை மயங்க வைக்கும் புன்னகை பூத்திருந்தது.

முகம் பார்க்கவே மறுத்த அந்த முல்லைப் பூவை அவன்வழிக்குக் கொண்டு வருவதற்குள் அவனுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. நாணத்தை மட்டுமே பரிசாகத் தந்த பெண்மைக்குள் ஒரு பெரிய போராட்டத்தின் பின்புதான் உருகிக் கரைந்திருந்தான் இளஞ்செழியன்.

“மாது…”

“ம்…” களைப்பாக வந்தது அவள் குரல். தன் மார்பில் முகம் வைத்திருந்தவளைக் குனிந்து பார்த்தான் செழியன். ஓய்ந்து போயிருந்தாள் பெண். காலையிலிருந்து நடந்தது அனைத்தும் அவளை மனதளவில் மட்டுமல்லாது உடலளவிலும் பாதித்து இருந்தது அப்போதுதான் புரிந்தது செழியனுக்கு. மனைவியின் தலையை மெதுவாகத் தலையணைக்கு இடம் மாற்றியவன் எழுந்து கொண்டான்.

“எங்கப் போறீங்க?”

“இதோ வந்திடுறேன் டா.” சொல்லிவிட்டு நகர்ந்தவன் நேராகக் கிச்சன் வந்தான். ஃப்ரிட்ஜில் பால் இருந்தது. தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி வைக்கும் படி வேலைக்கு அமர்த்தி இருந்தவரிடம் ஏற்கனவே சொல்லி இருந்தான்.

பாலை சீக்கிரம் சூடு பண்ணி சற்று அதிகமாகவே இனிப்பைச் சேர்த்தவன் அதை எடுத்துக்கொண்டு ரூமிற்கு வந்தான்.

“மாதவி… சிட் அப்.”

“ம்…”

“இந்தப் பாலைக் கொஞ்சம் குடி.” கட்டிலில் சாய்ந்திருந்தவள் நேராக நிமிர்ந்து உட்கார அவளிடம் ‘மக்’ ஐ நீட்டினான்.

“ஐயோ! இவ்வளவா?”

“ம்ஹூம்… ரெண்டு பேருக்கும்.”

“ஓ…” அவள் பாலுக்காகக் கையை நீட்ட அவள் பக்கத்தில் அமர்ந்தவன் மனைவிக்கும் புகட்டி விட்டான்.

“போதும்.”

“ம்ஹூம்… இன்னும் கொஞ்சம் குடி மாதவி.”

“இதுக்கு மேல குடிக்க முடியாதுங்க.”

“இன்னைக்கு நான் சொல்ற எதையுமே கேக்கக் கூடாதுங்கிற முடிவோட இருக்கியா நீ?”

“ஏன்? அப்படி நீங்க சொல்லி இன்னைக்கு எதைக் கேக்கலை நான்?”

“இஞ்சார்ரா… எம் பொண்டாட்டி போட்டுத்தாக்குறா!” செழியன் பெருங் குரலெடுத்துச் சிரிக்க மாதவியின் முகம் சிவந்து போனது.

“டேய் செழியா! போதும் நிறுத்துடா.”

“அடிங்… பேரைச் சொன்னதும் இல்லாம யாரைடி டா போடுற?”

“ஐயையோ! டாக்டர் பால் கொட்டிடப் போகுது.” அவன் அவளோடு மல்லுக்கு ஆயத்தமாகப் பதறிப் போனாள் மாதவி.

“இன்னும் கொஞ்சம் குடி மாதவி.”

“ம்…” அவள் சமர்த்தாகப் பாலைக் குடித்து முடிக்க அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான் செழியன்.

“மாதவி…”

“ம்…”

“கல்யாணம் இன்னைக்கு ரொம்ப நல்லா நடந்தது இல்லை?”

“ம்…” அவள் குரலில் அத்தனை மகிழ்ச்சி.

“உனக்கு ஏதாவது குறை இருந்துச்சா டா?”

“என்னப் பேசுறீங்க நீங்க? நான் அப்படியே மலைச்சுப் போயிட்டேன். அருணுக்கிட்டக் கூடச் சொன்னேன்.”

“ஓ… மாதவி இங்கப்பாரு, இதைப்பத்தித் தான் உங்கிட்டப் பேசணும்னு நினைச்சேன்.” அவன் சற்றுச் சிந்தனையோடு சொல்லவும் மாதவி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னாச்சு?”

“நீ மலைச்சுப் போற அளவுக்கு இங்க ஒன்னும் நடந்துடல்லை, புரியுதா?”

“என்ன டாக்டர் இப்படிச் சொல்றீங்க? எவ்வளவு பெரிய ஆளுங்க…”

“இதான்… இதான் வேணாங்கிறேன். என்ன எப்பப் பார்த்தாலும் பெரிய ஆளுங்க பெரிய ஆளுங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கே? பணமும் செல்வாக்கும் இருந்தாப் பெரிய ஆளுங்களா?”

“இல்லையா?”

“இல்லை… என்னையும் சரி என்னோட குடும்பத்தையும் சரி இனி இப்படி மலைச்சுப் போய் பார்க்காதே மாதவி. இனி நான்தான் நீ. என்னோட குடும்பம் உன்னோட குடும்பம். அதுல நீயும் ஒருத்தி. புரிஞ்சுக்கோ.”

“ம்…”

“கல்யாணத்தை விட ரிசப்ஷன் இன்னும் க்ராண்டா இருக்கும்.”

“அப்படியா?”

“ம்… அப்பாக்கு நிறைய பிசினஸ் பீப்பிள் இருக்காங்க மாதவி. ஒருத்தரைக் கூப்பிட்டுட்டு இன்னொருத்தரைக் கூப்பிடலைன்னா நல்லா இருக்காது. அது பாட்டுக்கு அது. நீ எதையும் கண்டுக்காத, புரியுதா?”

“ஆமா… கல்யாணத்துக்கும் ரிசப்ஷனுக்கும் இடையில எதுக்கு ஒரு வாரம் இடைவெளி? அவ்வளவு ஏற்பாடுகள் பண்ணனுமா என்ன?”

“அது ஊருக்குச் சொன்ன காரணம். என்னோட கணக்கே வேற.”

“என்னக் கணக்கு?”

“கல்யாணம் முடிஞ்ச கையோட எம் பொண்டாட்டியை இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும், அதான்.” அவன் பதிலில் அவனை அதிசயமாகப் பார்த்தாள் மாதவி.

“ஏனப்படி?”

“சொல்லத் தெரியலை மாதவி. எனக்கே ஏன்னும் புரியலை. அன்னைக்கு அவ்வளவு வேதனை மனசுல. நீ பாட்டுக்கு வந்து வீட்டுல மாப்பிள்ளை பார்க்குறாங்கன்னு சிம்பிளாச் சொல்லுறே. என்னால அதைத் தாங்கிக்கவே முடியலை. என்னோட வாழ்க்கை உங்கூடத்தான்னு கற்பனையிலேயே நான் வாழ ஆரம்பிச்சுட்டேன்.”

“………….” மாதவி வாயடைத்துப் போனாள்.

“இப்போ இன்னைக்கு இப்படி இருக்கோமே… அன்னைக்கு உன்னோட அருகாமைக்காக எம்மனசு எவ்வளவு ஏங்கிச்சுத் தெரியுமா? ஆசைப்படுற பொண்ணு பக்கத்துல இருக்கா. ஆனா மனம் விட்டுப் பேச முடியலை, பக்கத்துல வர முடியலை, சின்னதா ஒரு முத்தம் குடுக்க முடியலை… கொடுமை மாதவி அது.”

“செழியன்…” அவள் இதழ்கள் இயல்பாக அவன் பெயரை உச்சரிக்கவும் செழியனுக்குப் பித்தம் தலைக்கேறியது. அவள் கன்னங்கள் இரண்டையும் இறுகப் பற்றியவன்,

“செழியன் தான்டீ… உன்னோட செழியன். உனக்கு மட்டும் தான் இந்தச் செழியன். உனக்கில்லைன்னா வேற யாருக்கும் இல்லைடீ…” என்றான் முரட்டுத்தனமாக. மாதவி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

“உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்தி இருக்கேனில்லை?”

“ம்… ரொம்பவே… அதுக்குப் பழிவாங்கத்தான் அள்ளிக்கிட்டு வந்திருக்கோமில்லை.”

“தாராளமாப் பழிவாங்குங்க. உங்க இஷ்டம் போல பழிவாங்கலாம்.”

“இல்லையா பின்ன? அதென்ன… மேடம் மனசு வெச்சாத்தான் செழியன்னு கூப்பிடுவீங்களா? இல்லைன்னா ‘டாக்டர்’ தானா?”

“அன்னைக்குச் சொன்னதுதான் இன்னைக்கும். அது உங்க சாமர்த்தியம் டாக்டர்.” அவள் வம்பை விலை கொடுத்து வாங்கினாள். உல்லாசமாகச் சிரித்தவன் அவன் சாமர்த்தியத்தைக் காட்ட ஆரம்பித்திருந்தான்.

0-0-0-0-0

மாதவி கிச்சனில் நின்றிருந்தாள். அப்போதுதான் குளித்து முடித்துவிட்டு ஒரு சாம்பல் வண்ணக் காட்டன் புடவை கட்டி இருந்தாள். பார்டரும், ஹெட் பீஸும் மெரூன் வண்ணத்தில் இருந்தது.

கூந்தலில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு சாம்பார் வைத்துக் கொண்டிருந்தாள். லேசாகப் பசிக்க ஆரம்பித்திருந்தது. வீட்டில் சமையலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஃப்ரெஷ்ஷாக இருந்தன.

நேற்று இரவு உண்டு முடித்த இரவு உணவு இன்னும் நிறைய மீதமிருந்தது.‌ அனைத்தையும் தூக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, கணவனுக்குப் புத்தம் புதிதாகச் சூடாகச் சமைத்துக் கொண்டிருந்தாள். ஓரளவு நன்றாகச் சமைக்க வரும்தான். இருந்தாலும் செழியன் என்ன சொல்லுவானோ? தன் சமையல் அவனுக்குப் பிடிக்குமா?

“மாது…” இடையைக் கை வளைக்க கழுத்து வளைவில் அவன் மூச்சுக்காற்று. சட்டென்று திடுக்கிட்டுத் திரும்பினாள் மாதவி.

“என்னடா? நான்தான்.”

“நான்… பயந்துட்டேன்.”

“ஏன்?”

“வேற யோசனையில இருந்தனா… அதான்.”

“அப்படியென்ன யோசனை? நான் வந்தது கூடத் தெரியாம?”

“இல்லை… என் சமையல் உங்களுக்குப் பிடிக்குமோன்னு…”

“இதெல்லாம் ஒரு மேட்டரா? எதுக்குக் கஷ்டப்படுத்திக்கிறே? நேத்து கீயைக் குடுக்கிறதுக்கு ஒருத்தர் வந்தாரில்லை… அவர்தான் இப்போ இந்த வீட்டைப் பார்த்துக்கிறார். அவங்க வைஃப் கிட்டச் சொன்னா வந்து சமைச்சுக் குடுப்பாங்க, சரியா?”

“ம்… நானும் ஓரளவு சமைப்பேங்க.”

“அதைச் சாப்பிட்டுட்டுச் சொல்றேங்க.” அவன் கண்ணடித்தான்.

“குளிச்சிட்டு வர்றீங்களா, எனக்குப் பசிக்குது.”

“இதோ… பத்து நிமிஷத்துல வந்தர்றேன்.” அவன் பாத்ரூமிற்குள் புகுந்து கொள்ளவும், ஃபோன் அடிக்கவும் சரியாக இருந்தது. மாதவி எட்டிப் பார்த்தாள். டாக்டர் சந்திரமோகன் அழைத்துக் கொண்டிருந்தார். என்னவாக இருக்கும்? எதற்காக இவர் இந்நேரம் அழைக்கிறார்?!

“ஹலோ…”

“குட்மார்னிங் மாதவி… எப்படிம்மா இருக்கே?”

“நல்லா இருக்கேன் சீஃப்.”

“செழியன் எங்கம்மா?”

“பாத்ரூம்ல இருக்காங்க சீஃப்.”

“ஓ…”

“ஏதாவது அவசரமா சீஃப்?”

“எனக்கு எப்படிச் சொல்றதுன்னு புரியலைம்மா.”

“என்னாச்சு சீஃப்? ஏதாவது ப்ராப்ளமா?”

“கொஞ்சம் சீரியஸான கேஸ்தாம்மா. பேஷன்ட்டுக்கு செவென்டி ப்ளஸ். செழியன் இருந்தா எனக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும்… ஆனா…”

“தயங்காமச் சொல்லுங்க சீஃப்.”

“இல்லை மாதவி… இங்க இருந்தா டிஸ்டர்பா இருக்கும்னுதான் அவ்வளவு தூரம் போயிருக்கான். இப்பவும் நான் கூப்பிடுறது…”

“அது பரவாயில்லை சீஃப். ரொம்ப அவசியம் இல்லைன்னா நீங்க கூப்பிட மாட்டீங்க.”

“ஆமா மாதவி. பேஷன்ட்டுக்கு ஏதாவது நடந்திருச்சுன்னா என்னோட மனசாட்சியே என்னைக் கொன்னுடும்.”

“நீங்க ஏற்பாடு பண்ணுங்க சீஃப். அவங்க வருவாங்க.”

“மாதவி… நீ என்னைத் தப்பா எடுத்துக்காதம்மா.”

“ஐயையோ! என்ன சீஃப் நீங்க?”

“இல்லைம்மா… இப்படிக் கூப்பிடுறது எனக்கே சங்கடமாத்தான் இருக்கு. இருந்தாலும் எனக்கு வேற வழியில்லை. டிக்கெட் புக் பண்ணிடுறேம்மா. செழியன் நேரா ஏர்போர்ட் போனாப் போதும். நைட்டுக்குள்ள திரும்ப அங்க வந்திடலாம்.”

“ஒன்னும் பிரச்சனை இல்லை சீஃப். நீங்க எல்லா ஏற்பாடும் பண்ணிடுங்க.”

“ரொம்ப தேங்க்ஸ் மாதவி.” சந்திரமோகன் ஃபோனை வைக்கவும் டைனிங் டேபிளில் சமைத்ததை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் மாதவி. செழியன் அப்போதுதான் குளியலை முடித்துவிட்டு வெளியே வந்தான்.

“வா மாதவி சாப்பிடலாம்.”

“ம்…” அவனோடு அமர்ந்தவள் முதலில் அவனுக்குப் பரிமாறினாள்.

“மாதவி… இன்னைக்கு ஃபுல்லா ஊர் சுத்துறோம். அன்னைக்குப் போனோமில்லை அந்தக் கோயில். அதுக்கு இன்னைக்குப் போறோம். அங்க பூ வித்தாங்க இல்லை அந்த அம்மா? அவங்களைக் கண்டிப்பா மீட் பண்ணுறோம்.” சந்தோஷ மிகுதியில் செழியன் ஆர்ப்பரிக்க, ஒரு புன்னகையோடு அவனுக்குப் பரிமாறிய படி உண்டு கொண்டிருந்தாள் மாதவி.

“முதல்ல சாப்பிடுங்க டாக்டர்… மத்ததை அப்புறமாப் பேசிக்கலாம்.”

“ஓகே டா. சாம்பார் ரொம்ப டேஸ்டா இருக்கு.” செழியன் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசாமல் இருந்தவள் அவன் உண்டு முடித்ததும்,

“சீஃப் கூப்பிட்டிருந்தாங்க.” என்றாள்.

“யாரு? சந்திரமோகன் அங்கிளா?”

“ம்…”

“என்னவாம்?” செழியனின் நெற்றி சுருங்கிப் போனது.

“இன்னைக்கு ஒரு ஆப்பரேஷன் இருக்காம். கொஞ்சம் க்ரிட்டிக்கலாம்.” மாதவி சொல்லும் போதே செழியனின் முகத்தில் எரிச்சல் தோன்றியது.

“மாதவி…”

“போய்ட்டு வாங்க டாக்டர்.”

“என்னப் பேசுற மாதவி நீ?” அவன் சலித்த குரலில் அவனருகில் வந்தாள் மனைவி.

“வேணும்னா இன்னும் ரெண்டு நாள் கூட இங்கத் தங்கலாம். இப்போக் கிளம்பினா ராத்திரிக்குள்ள திரும்ப வந்திடலாம்.”

“நீ முடிவே பண்ணிட்டியா?”

“சீஃப் கிட்ட டிக்கெட் போடச் சொல்லிட்டேன்.” சொன்னவளை முறைத்தபடி ரூமிற்குள் போனான் செழியன். மாதவி பின்னோடு போன போது கட்டிலில் சாய்ந்திருந்தான் கணவன், கோபமாக. மாதவி அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“டாக்டர்… கிளம்புங்க ப்ளீஸ்.”

“உனக்கு எம்மேல லவ்வே இல்லை மாதவி.” அவன் குற்றச்சாட்டில் அவள் புன்னகைத்தாள்.

“ஏன் அப்படிச் சொல்லுறீங்க?”

“இருந்திருந்தா என்னை அனுப்புறதிலேயே குறியா இருப்பியா?”

“இப்போக் கிளம்பினா நைட்டுக்குள்ள வந்திடலாம். அதுக்கு இவ்வளவு அலப்பறையா? எழும்பி ரெடியாகுங்க டாக்டர்.”

“நீ எப்படி மாதவி தனியா இருப்பே?”

“ஆமா… நான் பாப்பா பாருங்க. நேத்து வந்தவங்களோட வைஃபை வரச்சொல்லுங்க. அதுவும் இப்போ வேணாம். நான் கொஞ்ச நேரம் நல்லாத் தூங்கணும். ஈவ்னிங் வந்தாங்கன்னா அவங்களோட பேசிக்கிட்டே சமையலை முடிச்சிடலாம். அதுக்கப்புறம் நீங்க வந்திடுவீங்க. அவ்வளவுதானே…” அவள் இலகுவாகத் திட்டம் போட அவளையே பார்த்திருந்தான் இளஞ்செழியன். முகத்தில் ஏக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது. கணவனின் அருகில் நெருங்கி உட்கார்ந்தவள் அவன் நெற்றி மயிரைக் கோதிக் கொடுத்தாள்.

“எவ்வளவு பெரிய டாக்டர் நீங்க! அங்க ஏற்கனவே மூனு சர்ஜன் இருக்காங்களாம். இருந்தாலும் எனக்கு செழியன் கூட இருந்தாத் திருப்தியா இருக்கும்னு சீஃப் சொல்றாங்க. எனக்கு அவங்க அப்படிச் சொல்லும் போது எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா? கடமை முக்கியமில்லையா டாக்டர்?”

“அப்போக் குடும்பம் முக்கியமில்லையா மாதவி?”

“கண்டிப்பா முக்கியம் தான். இப்போ நீங்கக் குடும்பத்துக்கு முக்கியம் குடுக்கலைன்னு நான் சொல்லவே இல்லையே?”

“பேசிப் பேசியே என்னை ஒரு வழி பண்ணிடு நீ.”

“கிளம்புங்க டாக்டர்… ப்ளீஸ்…‌”

“கிளம்பினா எனக்கு என்னக் குடுப்பே?”

“என்ன வேணும் உங்களுக்கு?”

“ம்…” அவன் யோசிக்கவும் அவள் சிரித்தாள்.

“அன்னைக்குக் கார்ல வச்சு என்ன சொன்னே?”

“என்ன சொன்னேன்?”

“நான் ஆரம்பிக்கிறேன், நீங்க முடிச்சு வைங்கன்னு சொன்னியில்லை?”

“ம்…”

“இன்னைக்கு நீயே ஆரம்பிச்சு நீயே முடிக்கணும். அப்பத்தான் கிளம்புவேன்.” விரல்கள் தாளமிட அவன் அவளையே குறும்பாகப் பார்த்திருந்தான். மாதவி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

“ஐயோ!‌ லேட் ஆகுது மாதவி, சீக்கிரம். கடமை ரொம்ப முக்கியம் இல்லையா?” வேண்டுமென்றே கேலி பண்ணியவன் அவளைச் சட்டென்று இழுத்தான். அவன் முகத்தோடு மோதி நின்றவள் அவன் இதழ்களில் இதழ் பதித்தாள். ஆனால் அதற்கு மேல் முன்னேற அவளுக்குத் தைரியம் இருக்கவில்லை. இளஞ்செழியனின் கழுத்து வளைவில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

“ஹா… ஹா… இது செல்லாது செல்லாது.” செழியனின் குதூகலக் குரல் அந்த இடத்தையே நிறைத்து நின்றது.

0-0-0-0-0-0

காலிங் பெல்லை அழுத்திவிட்டு அமைதியாக நின்றிருந்தான் அருண். கையில் அம்மா கொடுத்த பேப்பர் இருந்தது.

“வாங்க சீனியர்.” அர்ச்சனாவின் குரல் கேட்கவும் திகைத்துப் போனான் அருண்.

“உள்ள வாங்க.”

“பரவாயில்லை… அத்தை இருக்காங்களா?”

“இதோ… அம்மா…” அழைத்தபடி உள்ளே போனாள் அர்ச்சனா. சற்றுநேரத்தில் கற்பகம் விரைந்து வந்தார்.

“அருண்… வாப்பா. என்ன வெளியே நின்னுக்கிட்டு.”

“பரவாயில்லை அத்தை. அம்மா இந்த லிஸ்டை உங்ககிட்டக் குடுத்துட்டு வரச் சொன்னாங்க.”

“நீ முதல்ல உள்ள வா அருண்.” விடாப்பிடியாக அருணின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனார் கற்பகம்.

“எதுக்குத் தயங்குறே? இது உன்னோட அக்கா வீடு. இங்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அருண். ஏய் அர்ச்சனா! அண்ணியோட தம்பி வந்தா உள்ள கூப்பிடத் தெரியாதா உனக்கு?”

“இல்லையில்லை… அவங்க கூப்பிட்டாங்க. நான்தான்…” அருண் அந்த வீட்டுக்குள் வருவதற்கே தயங்குவது கற்பகத்திற்குப் புரிந்தது. அது நல்லதற்கில்லையே! தனது மருமகளின் உறவுகள் இப்படி ஒதுங்குவது தனது மகனின் இல்வாழ்க்கைக்கு அத்தனை நல்லதல்ல.

“கல்யாணத்துக்கு வந்தவங்க அத்தனை பேரும் ஊர் சுத்திப் பார்க்கக் கிளம்பிட்டாங்க. நானும் அர்ச்சனாவும் தான் இருக்கோம். அதனால எந்தத் தயக்கமும் தேவையில்லை அருண்.”

“அம்மா இந்த லிஸ்ட்டை உங்கக்கிட்டக் குடுக்கச் சொன்னாங்க அத்தை. ரிசப்ஷனுக்குத் தேவையான எல்லா டீடெயில்ஸும் இதுல இருக்காம்.”

“அடடா! அதை ஃபோன்லயே சொல்லி இருக்கலாமே?”

“இல்லை… அது மரியாதை இல்லைன்னு சொன்னாங்க.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போத அர்ச்சனா ஒரு பெரிய ட்ரேயோடு வந்தாள்.

“எடுத்துக்கோங்க சீனியர்.”

“இதெல்லாம் எதுக்கு?”

“பரவாயில்லை அருண். முதல்முதலா நம்ம வீட்டுக்கு வந்திருக்கே. சாப்பிடுப்பா.” கற்பகம் வற்புறுத்தவும் மறுக்க முடியாமல் வடையையும் காஃபியையும் எடுத்துக் கொண்டான்.

“கல்யாணம் நல்லபடியா நடந்துச்சு இல்லை?”

“ஆமா அத்தை.”

“உங்களுக்கு எந்தக் குறையும் இருக்கல்லையே?”

“இல்லையில்லை.”

“ஆனா… செழியனும் மாதவியும் இப்போ நம்மக் கூட இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்…”

“ஆமா…” பதில்கள் மிகவும் சொற்பமாகவே வந்ததை கற்பகம் கவனிக்கத் தவறவில்லை.

“நான் என்னப்பா பண்ண முடியும். இங்க இருந்தா சதா ஹாஸ்பிடல்ல இருந்து கால் வரும்னு சொல்லிட்டான். அதுவும் ஒரு வகையில சரிதான். சரியாச் சாப்பிட முடியாம, நிம்மதியான தூக்கமில்லாம… ஒரே ஓட்டம் தானே?” இப்போது அருண் லேசாகச் சிரித்தான்.

“ஆமா… உன்னோட ஐடியா என்ன அருண்? இன்டர்ன் முடிச்சிட்டு மேற்கொண்டு என்னப் பண்ணப் போறே?”

“இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை அத்தை. ஒழுங்கா ஒரு இடத்துல வேலையை எடுத்துக்கிட்டு அம்மா அப்பாவை நல்லாப் பார்த்துக்கணும். மாதவிக்கு நிறையச் செய்யணும். என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வர ரொம்பக் கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்களை முதல்ல நல்லாக் கவனிக்கணும்.”

கற்பகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. செழியனும் பொறுப்பான பிள்ளை தான். ஆனால் இந்த அளவிற்குக் கிடையாது. பணத்திற்குக் குறைவில்லாததால் இத்தனை முதிர்ச்சியை அவனிடத்தில் தாய் கண்டதில்லை.

காலேஜில் நடந்த சம்பவத்தை வைத்து அருணை ஒரு முரட்டுப் பயலாகத்தான் எண்ணி இருந்தார் கற்பகம். ஆனால் அந்தக் கல்லுக்குள்ளும் ஈரம் இருந்தது. அந்தச் சின்னப் பையன் மேல் அவருக்கு மரியாதை தோன்றியது.

0-0-0-0-0

அன்றைக்கு முழுவதும் நல்ல ஓய்வில் இருந்தாள் மாதவி. செழியன் கிளம்பிப் போன போதே நேரம் பத்தைத் தாண்டி இருந்தது. அப்போது தூங்கியவள் தான். நான்கு மணிக்குத்தான் எழும்பினாள்.

அந்த ஊரின் இதமான சீதோஷ்ணம் படுக்கையை விட்டு எழ விடாமல் அவளைக் கட்டிப் போட்டிருந்தது. நேற்றைய உணவு ஃப்ரிட்ஜில் இருந்ததால் அதைச் சாவகாசமாகச் சூடு பண்ணி உண்டாள்.

ஆப்பரேஷன் என்னவாகிற்றோ என்ற கவலை இருந்த போதும் கணவனை அழைக்கவில்லை. எப்படியும் நான்கைந்து மணித்தியாலங்கள் பிடிக்கும். அதைவிட அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஐந்து மணிபோல செழியன் சொன்ன பெண்மணி வந்து சேர்ந்தார். நல்ல கலகலவென்று பேசினார். மலையாளம் கலந்த தமிழ் தான் என்ற போதும் மாதவிக்கு நன்றாகவே புரிந்தது.

இரண்டு பையன்கள் இருக்கிறார்களாம். பேசிக்கொண்டே படபடவென்று சமையலை முடித்திருந்தார் பெண். அவர் கணவர் ஃப்ரெஷ்ஷாக நாட்டுக்கோழி கொடுத்து விட்டிருந்தார் போலும். மாதவியும் சிறுசிறு உதவிகள் செய்ய ஒரு விருந்தே சமைத்து முடித்துவிட்டார். வீடே கமகமத்தது.

நேரம் ஏழைத் தாண்டத் தொடங்கிய போது அந்தப் பெண் கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டார். வீட்டில் அவர் பையன்களுக்குப் பசிக்கும் என்று அவர் கவலைப்படவே அவரை அனுப்பிவிட்டாள் மாதவி.

அந்த வீட்டில் குளிருக்குத் தேவையான எல்லா முன் எச்சரிக்கை ஏற்பாடுகளும் இருந்ததால் மாதவிக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.

வெந்நீரில் குளியலை முடித்தவள் அன்றைக்கு அவன் வாங்கிக் கொடுத்த அந்த மெல்லிய இளமஞ்சள் நிற ஷிஃபானை உடுத்திக் கொண்டாள். சேலையை உடுத்தும் போதே மாதவிக்குச் சிரிப்பு வந்தது. சும்மாவே டாக்டர் கூத்தாடுவார், இதில் இந்தப் புடவையை வேறு கட்டினால் சலங்கை கட்டி விட்டது போல்தான் இருக்கும்.

சரியாக எட்டு மணிக்கு வீட்டின் முன்பாகக் கார் நிற்கும் சத்தம் கேட்கவும் எட்டிப் பார்த்தாள் மாதவி. செழியன் தான் இறங்கிக் கொண்டிருந்தான். கொஞ்சம் மலைப்பாங்கான பிரதேசம் என்பதால் டாக்ஸி தான் அவனுக்கு வசதியாக இருந்தது.

வீட்டுக்குள் வந்தவன் முகத்தில் அத்தனைக் களைப்பு. இருந்தாலும் மனைவியைப் பார்த்த அவன் முகம் ஜொலித்தது. அவளைப் பார்த்துப் படு உல்லாசமாக விசிலடித்தான்.

“ஆப்பரேஷன் என்ன ஆச்சு?” மாதவியின் முகம் சிவந்து போனாலும் சமாளித்துக் கொண்டு கேட்டாள். அவளை ஒரு முறைச் சுற்றி வலம் வந்தவன் கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு மேலிருந்து கீழாக அவளை ஒரு தினுசாகப் பார்த்தான்.

“டாக்டர்! உங்களைத்தான் கேக்குறேன்… ஆப்பரேஷன் என்ன…” கணவனின் பார்வை தங்கிச் சென்ற இடங்களைப் பார்த்த போது மாதவிக்கு வார்த்தைகள் சிக்கிக் கொண்டது.

“நான் சாப்பாடு எடுத்து வெக்கிறேன்.” மெதுவாக அந்த இடத்தை விட்டு நகரப் போனவளை அப்படியே அலாக்காகத் தூக்கித் தட்டாமாலை சுற்றினான் டாக்டர்.

“ஐய்யோ! என்னப் பண்ணுறீங்க? நான் விழுந்திடப் போறேன் செழியன்!” அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு பயத்தில் அலறினாள் மாதவி.

“ஹா… ஹா… என்னைக் காலங்காத்தால தொரத்தியுட்டே இல்லை… அதுக்கு ஏதாவது நான் குடுக்க வேணாமா?” அவன் சிரிப்பு பலமாக இருந்தது. அவள் மெல்லிடையில் அவன் கரம் அழுத்தம் கொடுத்தது.

“மாது…” அந்தக் குரல் பெண்ணுக்கு ஏதேதோ சேதிகள் சொல்லச் சட்டென்று பேச்சை மாற்றினாள்.

“பசிக்கல்லையா?”

“பசிக்குது தான்.”

“அப்போக் குளிச்சுட்டு வாங்க, சாப்பிடலாம்.”

“ம்… போரா இருந்துதா?”

“ம்ஹூம்… அந்த அக்கா வந்திருந்தாங்க. இப்போத்தான் கிளம்பிப் போனாங்க. ரொம்ப நல்ல மாதிரி. டக்கு டக்குன்னு சமையலை முடிச்சிட்டாங்க.”

“ஓ…”

“இப்படியே எவ்வளவு நேரத்துக்கு நிக்கப் போறீங்களாம்?” அவள் கேட்ட பின்புதான் அதை உணர்ந்தவன் மெதுவாக மனைவியை இறக்கி விட்டான்.

“ஆப்பரேஷன் என்ன ஆச்சு டாக்டர்?”

“டோன்ட் வொர்ரி பேபி. சக்ஸஸ் தான். கொஞ்சம் வயசான பேஷன்ட். உலகத்துல உள்ள வியாதியெல்லாம் இருக்கு அவருக்கு. அதான் அங்கிள் பயந்திருக்காங்க.”

“ஓ… இப்போ நல்லா இருக்காரா?”

“ம்…”

“என்ன சாப்பிட்டீங்க?”

“ஹாஸ்பிடல் கேன்டீன் தான்.”

“ஏன்? அத்தைக்கிட்டச் சொல்லியிருந்தா லன்ச் அனுப்பி இருப்பாங்க இல்லை.”

“ம்ஹூம்… அதுக்கெல்லாம் டைம் வேஸ்ட் பண்ண முடியாது மேடம். கிடைச்சதை சாப்பிட்டுட்டு அடுத்த ஃப்ளைட்டைப் புடிச்சுட்டேன்.”

“சரி சரி… குளிச்சுட்டு வாங்க.” அங்கேயே தான் நின்றால் அவன் நகரமாட்டான் என்பதால் மாதவி கிச்சனுக்குள் போனாள். பத்து நிமிடத்தில் எல்லாம் அவன் தலையை நனைத்துக்கொண்டு வந்து நின்றான்.

“இந்நேரத்துக்கு எதுக்குங்க தலைக்கு ஊத்தினீங்க?”

“இத்தனை நேரமும் தியேட்டர்ல நின்னது. குளிக்கலைன்னாத் தூக்கம் வராது மாதவி எனக்கு.”

“ஓ… அப்படியா? நீங்க சாப்பிடுங்க, நான் தலையைத் துவட்டி விடுறேன்.”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ வந்து உக்காரு சாப்பிடலாம்.” அன்றைக்கு ஒரு விருந்தே தயாராக இருந்ததால் செழியன் ஒரு பிடி பிடித்தான்.

“சாப்பாடு சூப்பர் மாதவி! பேசாம அந்த அக்காவை நம்ம வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போலாமா?” அவன் கேட்ட தினுசில் இருவரும் சிரித்தார்கள்.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு மாதவி ரூமிற்குள் வந்த போது செழியன் அவளிடம் ஒரு கவரை நீட்டினான்.

“என்னங்க இது?” அவள் கேட்டபோதும் அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக அவளையே பார்த்திருந்தான். உள்ளே ஓர் லெட்டர் இருந்தது. மாதவி கவனமாக அதைப் படித்தாள். கண்கள் ஆச்சரியத்தில் மலர்ந்து போனது.

“எவ்வளவு பெரிய ஆப்பர்சூனிட்டி! என்னால நம்பவே முடியலை!”

“ஆனா நான் போகப்போறது இல்லை மாதவி.”

“ஏங்க?”

“ஃபாமிலியைக் கூட்டிக்கிட்டுப் போக முடியாதாம்.”

“அதுக்காக!‌ ஒரு மாசம் தானேங்க?”

“அதெல்லாம் முடியாது… அதைத் தூக்கிப் போட்டுட்டு நீ இங்க வா.” மனைவியைத் தன்னருகே இழுத்தவன் அனைத்தையும் மறந்து அவளுக்குள் கரைந்து போனான்.

கனடாவில் நடக்க இருக்கும் அனைத்து உலக இதய மருத்துவர்களுக்கான ஒரு மாநாட்டின் அழைப்பிதழ் தான் அந்தக் கடிதம். ஒவ்வொரு நாடும் தங்களிடம் இருக்கும் பத்துத் தலைசிறந்த இதயநோய் நிபுணர்களைத் தெரிவு செய்ய வாய்ப்புக் கிடைத்திருந்தது. அதில் இளஞ்செழியனும் தேர்வாகி இருந்தான்.

ஆனால் அந்தப் பொன்னான வாய்ப்பை மறுத்துவிட்டு அப்போது ‘மாது… மாது…’ என்று பிதற்றிக் கொண்டிருந்தான் அந்தத் தலைசிறந்த மருத்துவன்.