குறும்பு பார்வையிலே – 13
ஆகாஷ் அவன் பேச்சை முடித்துக்கொள்ள, அவன் அலைபேசி மீண்டும் ஒலித்தது.
“சொல்லு ஸ்ருதி… ஸோ சாரி…என்னால வர முடியலை.” என்று அவன் குரல் குழைய, “இந்த வேலை எல்லாம் வேணாம். இங்க தான் ஏர்போர்ட்ல எங்கேயாவது சுத்திட்டு இருப்பீங்க. சீக்கிரம் வாங்க.” என்று ஸ்ருதி கண்டிப்போடு கூற,”ஹே… எப்படி கண்டுபிடிச்ச?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் ஆகாஷ்.
“இது தான் உங்களுக்கு எப்ப பாரு வேலையே! எத்தனை தடவை தான் நான் ஏமாற மாதிரியே நடிக்குறது?” என்று அவள் கேள்வியாக நிறுத்த, “ஹே… ஹே… எதோ இப்ப கண்டுபிடிச்சதும், பேச்செல்லாம் ரொம்ப ஓவர். அப்படி எல்லாம் என்னை யாரும் அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது.” என்று அவன் கேலி பேசினான்.
“சீக்கிரம் வாங்க.” என்று அவள் கூற, “பாட்டி சொல்லலியா? நான் தாத்தா கூட தான் இருக்கேன். வந்திருவேன்.” என்று ஆகாஷ் கூற, “நீங்க எங்க என்னை பாட்டி கூட பேச விட்டீங்க?” என்று அவள் கேட்டுக்கொண்டே பேச்சை முடித்துக் கொண்டாள்.
ஆகாஷ் ஷண்முக சுந்தர தாத்தாவோடு கம்பீரமாக நடந்து வந்தான். அவன் கண்கள் கம்பீரம் குறையாமல், கண்ணியம் குறையாமல் ஸ்ருதியை அளவிட்டுக் கொண்டிருந்தது.
கம்பீரமாக, அசட்டையாக நின்று கொண்டிருந்த ஸ்ருதியின் முகத்தில் ஓர் வெட்க புன்னகை.
கார்த்திக் அவள் புன்னகையை வைத்து, ஆகாஷின் வருகையைத் தெரிந்து கொண்டான்.
‘கல்யாணம் பெண்களுக்கு வெட்கத்தை கொண்டு வரும் போல.’ என்று எண்ணிக்கொண்டான்.
ஆகாஷ் வந்ததும், கார்த்திக்கிற்கு கை குலுக்கினான். கைகுலுக்கல் மட்டும் தான் கார்த்திக்கிடம் இருந்தது.
ஸ்ருதி பாட்டியிடமும், தாத்தாவிடமும், கீதாவிடமும் பேசிக்கொண்டிருந்தாள். பேச்சு மட்டும் தான் அங்கு, அவள் கவனம் முழுவதும் அவனிடம் தான்.
‘என்ன இவங்க ரெண்டு பேரும் இப்படி பார்த்துக்கறாங்க? இப்ப ஸ்ருதி பண்ணிக்கிட்டு இருக்கிற ப்ராஜெக்ட் என்ன நிலைமையோ?’ என்ற சந்தேகம் கார்த்திக்கின் மனதில் வந்தது.
“நீங்க ரெண்டு பேரும் இல்லைனா, ஆபீஸ் வேலை எல்லாம் யார் பார்த்துப்பா?” என்று ஆகாஷ் அக்கறையாக கேட்க, “அப்பாவும், அங்கிளும் பார்த்துப்பாங்க. நாங்க ரெண்டு பேரும் இப்ப தானே தலை எடுத்தோம்.” என்று கார்த்திக் கூறினான்.
“உங்களுக்கு எதுக்கு சிரமம், நாங்க ஸ்ருதியை பத்திரமா பார்த்துப்போம். அவ எங்க வீட்டு பொண்ணு தானே?” என்றார் ஆவுடை பாட்டி.
‘அது தான் ஆன்ட்டிக்கு பயமே. கல்யாணம் முடிஞ்சா தான் அவங்க வீட்டு பொண்ணு. அது வரைக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாதுன்னு சரியா தான் சொல்லிருக்காங்க.’ என்று எண்ணியபடி, “சிரமம் எல்லாம் இல்லை. ஸ்ருதி வீட்லருந்து யாரவது வரணும் இல்லையா? அது தான் முறைன்னு ஆன்ட்டியும், அங்கிளும் சொன்னாங்க.” என்று இன்முகமாகக் கூறினான் கார்த்திக்.
‘அது என்ன யாரோ ஒரு பையனை கூட அனுப்பறது. சொந்தபந்தமில்லையா?’ என்று ஆகாஷின் தயார் சுமதி, குறை பட்டுக்கொண்டது வேறு விஷயம்.
பாட்டி, தாத்தா இருவரும் அதைக் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை. கீதாவோ கார்த்திக்கை பார்த்ததும், ‘இவனை எங்கயோ பார்த்திருக்கோமே?’ என்ற சிந்தனையில் தன் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள்.
பாட்டியும், தாத்தாவும் அமர்ந்து விட, கீதா தன் அண்ணன் அருகே அமர்ந்து கொண்டாள். கார்த்திக் தன் தோழி அருகே அமர்ந்து கொண்டான்.
அருகே அமர்ந்திருந்த தன் தங்கையை பார்த்து, “இதுக்கு தான் நான் உன்னை வர வேண்டாமுன்னு சொன்னேன்.” என்று கேலி போல் பேசி, தன் தங்கையை வம்பிழுத்தான் ஆகாஷ்.
“ஹி… ஹி… இதுக்கு தான் நான் வரேன்னு சொன்னேன். ட்ரிப் முடியுற வரைக்கும் உன் கூடவே இருப்பேன்.” என்று கீதா கூற, “ஸப்பா…” என்று பெருமூச்சு விட்டான் ஆகாஷ்.
கீதா தன் கண்களைச் சுழலவிட்டாள். “அண்ணி பக்கத்தில் இருக்கிறது யாரு? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு?” என்று கீதா கண்களைச் சுருக்கி கேட்க, “ஹலோ… இது பசங்க டயலாக். அழகான பொண்ணுகளை பார்த்தா, நாங்க தான் இதை காலம் காலமா சொல்லுவோம்.” என்று ஆகாஷ் கூறினான்.
“ஏன் நாங்க சொன்னா இந்த உலகம் ஒதுக்காதா?” என்று கேட்டுக்கொண்டே, கார்த்திக்கைப் பார்த்தபடி, “பையன் அவ்வுளவு நல்லாருக்கான?” என்று ஆகாஷின் காதில் கிசுகிசுத்து மீண்டும் அவனைப் பார்த்தாள்.
“ஓகே…” என்று கீதாவின் உதடுகள் முணுமுணுக்க, “ஏய்… நான் உன் அண்ணன்.” என்று சிடுசிடுத்தான்.
“நல்லாருக்கான்னு சொன்னா உடனே லவ் பண்ணிருவோமா? பார்த்ததும், டோம்ன்னு கால்ல விழுறதுக்கு என்னை உன்னை மாதிரி லூசுன்னு நினைச்சியா?” என்று தன் சகோதரனின் சிடுசிடுப்பில், கடுகடுத்தாள்.
“ஸ்ருதி… உனக்கு நாத்தனார் கொடுமை இருக்கும்னு நினைக்குறேன்.” என்று அவள் காதில் கிசுகிசுத்தான் கார்த்திக்.
“டேய்… ஏண்டா… சின்ன பொண்ணு.” என்று ஸ்ருதி கூற, “எப்ப பார்த்தாலும் வம்பு பேசுது ஸ்ருதி. அன்னைக்கு என்னை பத்தி, அவங்க பிரெண்ட்ஸ்க் கிட்ட பேசி சிரிச்சா. இன்னைக்கும் நம்மளை பத்தி தான் பேசுறா.” என்று கார்த்திக் புகார் கடிதம் வாசித்தான்.
“நீ ஏன் கார்த்திக் எப்ப பாரும் அந்த பொண்ணையே நோட்டம் விடுற?” என்று தோழனுக்குக் கிடுக்கு பிடி போட்டாள் ஸ்ருதி.
“இதை தான் நல்லதுக்கே காலம் இல்லைன்னு சொல்றது.” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டான் கார்த்திக்.
“அண்ணி…” என்று அழைத்துக்கொண்டு கீதா, ஸ்ருதியிடம் பேச, “நீ வேணா ஸ்ருதி பக்கத்தில் உட்கார்ந்துக்கோ. கார்த்திக் இங்க வந்திருவான்.” என்று ஆகாஷ் கூற, சந்தோஷமாகத் தலை அசைத்தாள் கீதா.
கீதா, எழுந்து கொள்ள கார்த்திக்கும் எழுந்து கொண்டான்.
இடம் மாறுகையில் கீதா தடுமாறிச் சுதாரித்துக்கொள்ள, “ஒவ்வொரு தடவையும் என்னால பிடிக்க முடியாது.” என்று கார்த்திக்கின் குரல் கீதாவுக்கு மட்டும் கேட்பது போல் ஒலித்தது.
கீதாவுக்கு அவன் யாரென்று பிடிபட, ‘அன்னைக்கு நடந்த கலாட்டாவில் இவன் முகத்தை நான் சரியா பார்கலையே.’ என்று யோசித்து, ‘கண்களில் கேலியா? இல்லை தோழமையா?’ என்ற கேள்வி கீதாவின் மனதில்.
‘எதுவா இருந்தால் என்ன, நாம அவன் போக்கிலே போவோம்.’ என்று முடிவு எடுத்துக்கொண்டு, “அதுக்கு அவசியம் இருக்காது.” என்று அவனைப் போலவே கூறிக்கொண்டு ஸ்ருதியின் அருகே அமர்ந்து கொண்டாள்.
ஆகாஷ், கார்த்திக்கின் பேச்சு தொழிலைச் சுற்றி இருந்தது.
ஸ்ருதி அவ்வளவாக பேசவில்லை. இல்லை கீதா பேசவிடவில்லை என்றும் சொல்லலாம். கீதா வளவளத்துக் கொண்டிருந்தாள். அவள் கல்லூரி கதை என ஆரம்பித்து, பேச்சு முழுதும் அவள் சகோதரனைச் சுற்றியே இருந்தது.
ஸ்ருதிக்கும் அந்த பேச்சு இனித்தது. அவர்கள் மலே விமான நிலையம் வந்தடைந்தனர்.
பாட்டி, தாத்தாவை பத்திரமாக அழைத்து வந்தனர்.
ஆகாஷ், பாட்டி தாத்தாவிடம் நலன் விசாரித்து, தங்கையிடம், “எல்லாம் சரியா?” என்று கேட்டுக்கொண்டு, ஸ்ருதியிடமும் கண்களால் நலம் விசாரித்துக்கொண்டான்.
அந்த விசாரிப்பு, அவளை மயிலிறகாக வருட, புன்னகையோடு தலை அசைத்துக்கொண்டாள் ஸ்ருதி.
ஆகாஷின் இந்த செயல் கார்த்திக்கை கூட ஈர்த்தது. ‘நல்லவன், புத்திசாலி, திறமையானவன்… இதை எல்லாம் தாண்டி ஸ்ருதி கொடுத்து வைத்தவள்.’ என்ற எண்ணம் தோன்றியது கார்த்திக்கிற்கு.
மாலதீவ்ஸ் “பிரைவேட் ஐலண்ட்.” என்று கூறப்படும் மால்தீவிஸில் உள்ள தனித்தீவுக்கு செல்வதாக ஏற்பாடு. அவர்களை அழைத்து செல்ல, வேக படகு (ஸ்பீட் போட்) வர அவர்கள் அதில் ஏறி பயணிக்க ஆரம்பித்தனர். அவர்களோடு போட்டோக்ராபர் மற்றும் அவர்கள் அணியும். அதில் ஆண்களும், பெண்களும் அடக்கம்.
அவர்களிடம் நிறைய பெட்டிகள் இருக்க, “அண்ணா… இந்த பெட்டி முழுக்க உங்களுக்கு டிரஸ் தானா?” என்று கீதா கேட்க, “ஆமா, எல்லா இவங்களுக்காக அளவெடுத்து தைத்தது.” என்று கூறினாள் அந்த ப்ரி வெட்டிங் போட்டோ ஷுட் அணியில் உள்ள பெண்மணி.
“ப்ளூ, வெள்ளை தீம் இங்க முடிச்சிக்கலாம். அப்புறம் கேரளா போகணும்.” என்று பாட்டி கூற, ஏற்கனவே திட்டத்தை அறிந்ததால் அனைவரும் மௌனமாகத் தலை அசைத்தனர்.
ஆம்! மால்தீவ்ஸ் முடித்துக்கொண்டு கேரளா செல்வதாக அவர்கள் திட்டம்.
“பாட்டி இது என்ன காம்பினேஷன்? மால்தீவ்ஸ், கேரளா.” என்று கீதா கேட்க, “இங்க ஸ்டைலிஷ் ஷூட். அங்க ட்ரடிஷனல் ஷூட்.” என்றார் பாட்டி.
“இருந்தாலும் இந்த சின்ன வயசில் உங்களுக்கு எவ்வளவு அறிவு பாட்டி?” என்று பாட்டியைக் கலாய்த்தாள் கீதா.
கீதாவின் பேச்சில், அனைவரின் முகத்திலும் புன்னகை விரிந்தது.
“ஏய்!” என்று பாட்டி கீதாவை மிரட்ட, “ஏன், தாத்தா, இந்த பாட்டியைக் கண்டிக்க மாட்டீங்களா?” என்று கீதா பாவமாகக் கேட்டாள்.
“ஏன் கீதா கண்டிக்கணும்? எங்க காலத்தில் இப்படி எல்லாம் பொண்ணு, மாப்பிள்ளையை விடவே மாட்டாங்க. அது தான் நான் எங்க எண்பதாவது கல்யாணத்துக்கு இப்பவே ப்ரீவெட்டிங் ஷூட் முடிச்சிக்கலாமுன்னு இருக்கேன்.” என்று தாத்தா தீவிரமாக கூற அங்குச் சிரிப்பலை பரவியது.
ஸ்பீட் போட் கடலுக்குள் செல்ல செல்ல அவர்கள் அனைவரும் பேச்சை விடுத்து இயற்கையை ரசிக்க ஆரம்பித்தனர்.
எங்கும் நீலம். சுற்றிலும் கடல். கீழே சுத்தமான நீர். மேலே படர்ந்து விரிந்த வானம். அந்த அழகு அனைவரையும் கவர்ந்து மௌனிக்கச் செய்தது.
ஆகாஷ் தன்னவளோடு அதை ரசிக்க முடிவு செய்தவன் போல் அவள் அருகே நின்று கொண்டான்.
“இடம் ரொம்ப அழகு டாலி. உன்னை மாதிரி.” கடலையும், வானத்தையும் பார்த்துக் கொண்டே கூறினான்.
மறுப்பாகத் தலை அசைத்து, “கள்ளம் கபடம் இல்லாத உங்க மனசு மாதிரி தெளிவான இடம்.” என்று அந்த இடத்தின் தூய்மை, தெளிவு, நேர்த்தியை ரசித்துக்கொண்டே கூறினாள் ஸ்ருதி.
படகின் அசைவில், அவர்கள் இடைவெளி இடைவெளியைக் குறைத்துக்கொண்டது.
அவன் அருகாமையை ரசித்து, அதே நேரம் தடுமாற்றத்தோடு அவனைப் பார்த்தாள். அவன் புருவம் உயர்த்த குறுஞ்சிரிப்போடு தலை அசைத்துக்கொண்டாள் ஸ்ருதி.
“குறும்பா… எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரியே பார்க்க வேண்டியது.” அவள் உதடுகள் முணுமுணுத்தது.
“டாலி…” அவன் கிறக்கமாக கூற, “ம்…” இத்தனை நேரம் கிடைக்காத தனிமையை ரசித்தனர்.
மௌனம் மட்டுமே குடியிருக்க, அவர்கள் இறங்க வேண்டிய தனித் தீவு வரவும் நேரம் சரியாக இருந்தது.
அனைவருக்கும் தனித்தனி அறைகள் கொடுக்கப் பட்டிருந்தது. அவர்கள் வசதிக்கு ஏற்ப அவர்கள் அறைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
“ஈவினிங் ஒரு போட்டோ செஷன் முடிக்கலாம்.” என்று போட்டோக்ராபர் கூற, அனைவரும் சம்மதமாகத் தலை அசைத்தனர்.
கார்த்திக், கீதா இருவரும் கடற்கரைக்கு ஏதுவாக உடை அணிந்து வந்தனர்.
உடை வடிவமைப்பாளர்கள், அலங்கார நிபுணர்கள் என அனைவரின் உதவியோடு ஸ்ருதியும், ஆகாஷும் போட்டோ ஷூட்க்கு தயாராக வந்தனர்.
ஆகாஷ் பெய்க் நிறத்தில் ( சற்று சந்தனமும் மணலும் கலந்த நிறம் என்றும் சொல்லலாம்) முக்கால் பாண்ட் அணிந்திருந்தான். நீல சாயலைக் கொண்ட டர்கோய்ஸ் நிறத்தில் கேஸுவல் சட்டை அணிந்திருந்தான். அவனுக்கு அது பொருத்தமாகவும், இன்னும் வசிகரமாகவும் அவனைக் காட்டியது.
ஸ்ருதி முழு வெள்ளை நிறத்தில் நீள கவுன் அணிந்திருந்தாள். அதில் ஆங்காங்கே ஆக்ஷின் சட்டை நிறத்திற்குப் பொருந்துவது போல் தூவப்பட்ட மலர்கள். அவள் தோள்களுக்கு கீழே ஆரம்பித்த அந்த கவுன் மெலிதாக தோள்களில் ஒரு கயிற்றை மட்டுமே தாங்கிக் கொண்டு நின்றது.
அவள் இடை வரை அவள் அங்க வடிவை எடுப்பாகக் காட்டிய உடை, அவள் இடுப்புக்குக் கீழ் இதழ் இதழாக அமைக்கப்பட்டு, அவள் உயரத்திற்கு அமைந்திருந்தது.
ஸ்ருதிக்கு அந்த உடை பாந்தமாகப் பொருந்தி இருந்தது. அவள் அதில் இன்னும் அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிந்தாள்.
இருவரையும் பார்த்த பாட்டியின் கண்களில் ஒரு திருப்தி தெரிந்தது. அவர்களைப் படம் பிடித்து, வாட்ஸாப்ப் இல் தன் குடும்ப குரூப்க்கு அனுப்பினார் பாட்டி.
சுமதியும், சங்கரனும் அவர்கள் உடையில் தெரிந்த செழிப்பிலும், அந்த இடத்தின் அழகிலும் சந்தோஷமாக ஒரு சிரிக்கும் ஸ்மைலியை பதிலாக அனுப்பினர்.
அந்த கடற்கரையின் மணற்பரப்பில் இருந்த நாற்காலியில் பாட்டியும், தாத்தாவும் காற்று வாங்கியபடி அமர்ந்தனர்.
மற்ற அனைவரும் சற்று தூரம் நடந்தனர்.
காமெராவை எப்படி பார்க்க வேண்டும், என்ன மாதிரியான போஸ் என்று அவர்கள் பேச்சு ஆரம்பிக்க, முதலில் சுவாரஸ்யமாக இருந்தாலும் பின் சலிப்பு தட்டி விடவே கார்த்திக் “ம்… ச்…” கொட்டி வேறு பக்கம் நடக்க ஆரம்பித்தான்.
“ரொம்ப மொக்கையா இருக்கு. அப்படி தானே?” என்று கேட்டுக்கொண்டு அவனோடு நடந்தாள் கீதா.
வந்த நட்புக் கரத்தை மறுக்க கார்த்திக்கிற்கு மனசில்லை. ‘எப்படி இருந்தாலும், இந்த ஒரு வாரம் நமக்கு ஒரே கம்பனி இந்த பொண்ணு தான்.’ என்ற எண்ணத்தோடு, “கார்த்திக். ஸ்ருதிக்கு நல்ல பிரென்ட். வெல் விஷேர். இப்படி எப்படி வேணாலும் சொல்லலாம்.” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டே அவன் கை நீட்ட, “கீதா. ஆகாஷ் தங்கை. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். தெரியாத விஷயம்னா… ம்… ரொம்ப வாய் ஜாஸ்த்தி. ஆனால், ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.” என்று அவன் நீட்டிய நட்புக் கரத்தை பற்றிக் கொண்டாள்.
அவள் அறிமுகத்தில் அவன் “பக்…” என்று சிரித்து விட்டான். அதன் பின் அறிமுக படலத்தில் ஆரம்பித்து, அவர்கள் இருவரின் கால்தடங்களும் அந்த மென்மையான மணற்பரப்பில் ஒன்றாக நடக்க ஆரம்பித்தது. திசை மாறப்போவது தெரியாமல்!
புகைப்படக்குழு மும்முரமாக அவர்கள் வேலையை ஆரம்பித்தது.
அந்த இடம் சற்று வித்தியாசமாக காட்சி அளித்தது. இருபக்கமும் வெண்மையான அலைகளோடு, அந்த நீலகடல் மெல்லமாக குழந்தை போல் தவழ்ந்து வந்தது. இடையில் மணல் பரப்பு. அதில் ஆகாஷ், ஸ்ருதி இருவரும் எதிர் எதிர் திசையில் நடப்பது போல் ஓர் வீடியோ ஷூட். ஆகாஷின் கம்பீரமான நடை. ஸ்ருதியின் நளினமான நடை இரண்டும் அழகாகப் பொருந்திக் கொண்டது. அது ஒரு அழகான கேண்டிட் ஷாட்டாக அமைந்தது.
அடுத்து போட்டோக்ராபர் சொன்ன ஷாட்டில் இருவருக்குள்ளும் சற்று தயக்கம் மேலோங்கியது.
கடல் அலை மண்ணை தொடும் விளிம்பில், நீரில் படாமல் ஆகாஷ் ஸ்ருதியை இடையோடு அணைத்துத் தாங்கி பிடிக்க வேண்டும். அவளோ அவன் மேல் சாய்ந்து நிற்க வேண்டும்.
இருவரும் கடலுக்கும், மணல் பரப்புக்கும் இடையில் உள்ள விளிம்பில் மட்டுமில்லை மனதின் போராட்டத்தின் விளிம்பிலும் நின்று கொண்டிருந்தனர்.
ஆகாஷ் அவளை நெருங்கவே, அவன் மூச்சு காற்று அவளை தீண்டியது. கயிற்றில் தொங்கும் உடை அணியமாட்டேன் என்று சொல்லுமளவுக்கு ஸ்ருதி கிடையாது. அவள் நவீன காலத்து பெண் தான். ஆனால், அதே உடையில் ஒரு ஆணின் இத்தனை நெருக்கத்தில், அவளுக்கு மூச்சு முட்டியது. அவனும் பல நவீன உடையில் பல பெண்களை பார்த்திருக்கிறான் தான். ஆனால், இவ்வளவு பக்கத்தில், அதுவும் உரிமை உள்ள பெண்ணை. அவனக்கு சற்று தடுமாற்றம் தான்.
“சார்… ஷூட்டுக்கு ரெடியா?” என்று போட்டோக்ராபரின் அசிஸ்டன்ட் கேட்க, இருவரும் சம்மதமாகத் தலை அசைத்தனர்.
‘விலகிச் சென்றால் அவன் என்ன நினைப்பானோ?’ என்ற கேள்வி அவள் மனதில்.
‘நெருங்கவில்லை என்றால் அவள் என்ன நினைப்பாளோ?’ என்ற கேள்வி அவன் மனதில்.
இருவரும் நெருங்க ஆரம்பித்தனர்.
‘அன்றும் இதே போல் கடற்கரையில் அவன் காப்பாற்றினான் தான். ஆனால், அது எதிர்பாராமல் நடந்தது. இன்று இவர்கள் முன்னிலையில். இந்த நொடி எத்தனை நொடிகளாக நீடிக்குமா?’ என்ற கேள்வி இருவரின் மனதில்.
“ரெடி…” என்று போட்டோக்ராபரின் குரல் ஓங்கி ஒலிக்க, அவன் அவளை நெருங்கினான். ஆனால், அவள் இடையைத் தீண்ட வில்லை. அவன் கைகளுக்கும் அவள் இடைக்கும் இடையே மெல்லிய இடைவெளி. அவனுள் ஏதோ ஒரு தயக்கம்.
அவளும் அவனை நெருங்கினாள். ஆனால், அவன் மேல் சாயவில்லை. அவளுக்குள்ளும் வெட்கம். இருபக்கமும் கடற்கரை. அந்த அலையில் மெல்லிய காற்று வீச, அவர்களுக்கு இடையே மெல்லிய இடைவெளி இருப்பதை உறுதி செய்வது போல் காற்று புகுந்து கொண்டது. இருவரின் உடலும் சிலிர்த்தது.
“சார்… கொஞ்சம் ரொமான்டிக் லுக். குட்டி ஸ்மைல். ரெண்டு பேரும் ரொம்ப நெர்வஸா தெரியறீங்க.” என்று போட்டோக்ராபர் கூற, இருவரும் விலகிக் கொண்டனர்.
“இன்னும் இந்த மாதிரி நிறைய ஷாட்ஸ் இருக்கு சார்.” என்று அவன் பல படங்களை நீட்ட, இருவரும் அதிர்ந்து விழித்தனர்.
“லவ் மேரேஜ் தானே சார்? இப்படி தயங்குறீங்க?” என்று போட்டோக்ராபர் கேலி பேச, ஆகாஷ் சிரித்துக்கொண்டான். அந்த இலகுவான பேச்சில் ஸ்ருதியின் முகத்திலும் வெட்க புன்னகை தொற்றிக்கொண்டது.
“ஒன்ஸ் அகைன் சார்.” என்று அவன் கூற, இருவரும் அதே நிலையில் மெல்லிய இடைவெளியோடு நின்று கொண்டனர். இம்முறை இருவரின் முகத்திலும் அவர்கள் அறியாமல் வெட்க புன்னகை. அவள் புன்னகை அவனை ஈர்க்க, அவன் அவளை ஆசையாகப் பார்த்தான். அவளோ அவனை பார்க்க தயங்கி கொண்டு, அவன் முகத்தைப் பார்க்காமல் அவன் சட்டையைப் பார்த்தாள்.
“சூப்பர் சார்.” என்று போட்டோக்ராபர் கூற, “சட்டை நல்லாருக்கா?” என்று கேட்டான் ஆகாஷ். அவள் விலக எத்தனிக்க அவள் கைகளைப் பிடித்து நிறுத்தினான் ஆகாஷ்.
‘என்ன?’ என்பது போல் அவன் புருவம் உயர்த்த, அவள் மறுப்பாகத் தலை அசைத்தாள்.
இதெல்லாம் அவர்களுக்கு தெரியாமல், அந்த கேமரா உள் வாங்கிக்கொண்டது.
அவளின் உடையை ரசித்தபடி, “மிஸ் வால்ட் எல்லாம் என்ன அழகு? டாலி அதை விட பல மடங்கு!” என்று அவன் கூற, அவள் வெட்கப்பட்டு விலகி நடந்தாள்.
அவனுள்ளும் தடுமாற்றம் தான். போட்டோக்ராபர் கூறிய அடுத்த ஷாட், அவர்களின் தடுமாற்றத்தை இன்னும் அதிகப் படுத்தியது.
ப்ரீ வெட்டிங் ஷூட் தொடரும்… தடுமாற்றங்களும் தொடரும்…
குறும்புகள் தொடரும்…