Kaadhal 12

 

பழைய நினைவுகளில் லயித்து நின்ற மேக்னா தன்னை யாரோ ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு செல்வதை உணர்ந்து அந்த நபரிடம் இருந்து தப்பிக்க போராட அந்த வலிய கரங்களில் இருந்து அவளால் விலக முடியாது இருந்தது.

தன் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி தன்னால் முடிந்த மட்டும் பலம் கொண்டு அந்த கரங்களை தள்ளி விட்டவள் படபடப்போடு சத்தமிட்டு கத்துவதற்காக திரும்பி பார்க்க அவள் முன்னால் நின்று கொண்டிருந்த சித்தார்த் அவசரமாக ஓடி வந்து அவள் வாயை தன் கை கொண்டு மூடி இருந்தான்.

“உஸ்ஸ்ஸ்! சத்தம் போடாதே! யாரும் பார்த்துடப் போறாங்க” பதட்டத்துடன் சுற்றிலும் பார்த்து கொண்டே அவன் கூற அதிர்ச்சியில் விழிகள் விரித்து அவனைப் பார்த்து கொண்டு நின்றவள் அவனது கையை விலக்கி விடும் எண்ணம் சிறிதும் இன்றி நின்று கொண்டிருந்தாள்.

யாரோ ஒருவர் தான் தன்னை இப்படி இழுத்துக் கொண்டு செல்கிறார்கள் என்று அவள் நினைத்து இருக்க அந்த இடத்தில் சித்தார்த் இருக்கக்கூடும் என அவள் சிறிதும் நினைத்து இருக்கவில்லை.

யாராவது வருகிறார்களா எனப் பார்த்து கொண்டே மேக்னாவின் புறம் திரும்பியவன் அவளது ஆச்சரியத்தில் விரிந்து இருந்த விழிகள் இரண்டையும் பார்த்து மெய் மறந்து போனான்.

ஆரம்பத்தில் நீதிமன்றத்தில் வைத்து அவளை பார்த்த போது இருந்த விழிகளுக்கும் இப்போது இருக்கும் அவளது விழிகளுக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதை போல ஒரு எண்ணம் அவன் மனதிற்குள் உதித்தது.

அன்று பொலிவிழந்து இலக்கின்றி எங்கோ வெறித்துக் கொண்டு இருப்பதை போல இருந்த அவளது விழிகள் இன்று பன்மடங்கு பொலிவுடன் இருப்பதை போல அவனுக்கு தோன்றியது.

அதிர்ச்சியில் விரிந்து இருந்த அவளது விழிகள் ஆழ்கடலாக அவனை ஈர்க்க அவன் மூளையோ தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்தது.

அந்த விழிகளுக்குள் தன்னை மீண்டும் மீண்டும் தொலைத்து கொள்ள வேண்டும் என்பது போல அவன் மனது ஆசைப்பட அவன் கால்களோ தன்னிச்சையாக மேலும் இரண்டு அடி அவள் புறம் நகர்ந்தது.

இங்கே சித்தார்த் தன்னிலை மறந்து மேக்னாவின் விழிகளுக்குள் ஈர்க்கப்பட்டு கொண்டிருக்க மறுபுறம் அவளும் என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வுக்குள் சிக்கி திக்குமுக்காடி கொண்டு நின்றாள்.

இது நாள் வரை எந்த ஆடவனையும் இத்தனை நெருக்கமாக அவள் வர விட்டதில்லை அதற்கு அனுமதித்ததும் இல்லை.

ஆனால் இன்று இருவரும் மூச்சுக்காற்று உரசிக் கொள்ளும் இடைவெளியில் இருக்க அந்த நிலையில் இருந்து விலகும் எண்ணம் கூட அவளுக்கு தோன்றவில்லை.

அடர்த்தியான புருவங்களுக்கு கீழ் இருந்த அவனது கூர்மையான விழிகள் அவளை மொத்தமாக கட்டிப் போட்டு வைத்திருக்க அவர்கள் இருவரது மூச்சுக்காற்று சத்தத்தை தவிர அந்த இடத்தில் வேறு எந்த சத்தமும் இல்லாமல் கனத்த அமைதி நிலவியது.

அவள் இதழ்கள் மீதிருந்த தன் கையை மெல்ல விலக்கியவன் தன்னிச்சையாக அவள் காதோரம் இருந்த முடிக்கற்றைகளை மெல்ல விலக்கி விட்டான்.

மேக்னா தன்னிலை மறந்து அவனையே பார்த்து கொண்டிருக்க அந்த பார்வையின் வீச்சை தாங்கிக் கொள்ள துணிவின்றி சித்தார்த்தோ தன் கண்களை மூடிக்கொண்டான்.

அவனது ஒரு புற மனது அவளை நெருங்க சொல்லி தூண்ட மறுபுறம் கடமை உணர்வு நிறைந்த மனதோ அவனை அங்கிருந்து விலகிச் செல்ல அறிவுறுத்தி கொண்டிருந்தது.

இரு மன எண்ணங்களுக்கும் நடுவில் சிக்கி கொண்டு மெல்ல தன் கண்களை திறந்தவன் அவளைப் பார்க்க அவளோ எந்தவித அசைவும் இன்றி நின்று கொண்டிருந்தாள்.

மேக்னா தன் வாழ்நாளில் எத்தனையோ ஆண் மகன்களை கடந்து வந்திருக்கிறாள்.

காலேஜ், வேலை பார்த்த இடம், பேருந்து என எங்கெங்கோ எல்லாம் பல பேரை அவள் சந்தித்தது உண்டு.

அவர்களை எல்லாம் பார்த்த போது தோன்றாத உணர்வு இப்போது சித்தார்த் அருகில் இருக்கும் போது அவளுக்கு தோன்றுவது போல இருக்க சட்டென்று தன் கண்களை மூடியவள்
‘இங்கே இருந்து போ மேக்னா!’ என தனக்குத்தானே அறிவுறுத்தி விட்டு அவசரமாக அங்கிருந்து விலகிச் செல்ல பார்க்க அவனது கரமோ அவளது கரத்தை பற்றி இருந்தது.

மேக்னா அவனது தொடுகையில் திடுக்கிட்டு கேள்வியாக அவனை நோக்க பற்றிய அவளது கரத்தை விடாமல் அவள் முன்னால் வந்து நின்றவன் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே
“ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லிட்டு எதுவும் பேசாமல் போனால் எப்படி?” என்று கேட்க அப்போது தான் அவளுக்கு தான் எதற்காக இத்தனை நேரம் காத்து நின்றோம் என்ற எண்ணமே நினைவுக்கு வந்தது.

சித்தார்த் இயல்பாக பேச ஆரம்பிக்க அவளும்
உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு
“ஐயோ! ஸாரி இன்ஸ்பெக்டர் மறந்தே போயிட்டேன்” என்றவாறே சுற்றிலும் ஒரு தடவை திரும்பி பார்த்து கொண்டாள்.

“என்னாச்சு மேக்னா? யாரைத் தேடுறீங்க?”

“இல்லை ஸார் யாராவது இருக்காங்களான்னு பார்த்தேன் யாரும் இல்லை கொஞ்சம் இங்கேயே இருங்க இன்ஸ்பெக்டர் ஸார் ஒரு ஐந்து நிமிஷத்தில் நான் வர்றேன்” என்று விட்டு செல்ல போன மேக்னா தன் கரத்தை எதுவோ பற்றி இருப்பதை போல இருக்கவே பதட்டத்துடன் திரும்பி பார்த்தாள்.

அவள் பார்வை சென்ற திசையை திரும்பி பார்த்தவன் தன் கரம் இன்னமும் அவளது கரத்தின் மீதிருப்பதைப் பார்த்து விட்டு தன் நாக்கை கடித்து கொண்டே
“ஸாரி! ஸாரி! மேக்னா!” அவசரமாக தன் கையை விலக்கி கொள்ள

அவளோ சிறு தலை அசைப்புடன்
“ஒரு ஐந்து நிமிஷம் இங்கேயே இருங்க” என்று விட்டு அங்கிருந்து நடந்து சென்றாள்.

‘டேய் சித்தார்த்! என்ன காரியம் டா பண்ணிட்ட நீ? உதவி கேட்டு வந்த ஒரு பொண்ணு கிட்ட போய் இப்படி அத்துமீறி நடக்க பார்த்துட்டியேடா! இப்போ மேக்னா உன்னை பற்றி என்ன நினைத்து இருப்பா? எல்லாம் இந்த பாழாய் போன மனதால் வந்தது அதை
முதலில் அடக்கி வைக்கணும் தேவையில்லாத நினைப்பை எல்லாம் உருவாக்கி இம்சை படுத்துது அது தான் அன்னைக்கே மேக்னாவிற்கு உதவி பண்ணுறது மட்டும் தான் இப்போதைய வேலைன்னு முடிவுக்கு வந்த தானே! அப்புறம் ஏன்? அவ்வளவுக்கு உன் மனதை உன்னால கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க முடியலயா?’ சித்தார்த் சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வை எண்ணி தன்னைத்தானே நொந்து திட்டிக் கொண்டிருக்க

மேக்னாவோ தனியாக பேசி கொண்டு நின்றவனைப் பார்த்து குழப்பத்துடன்
“ஸார்! ஏதாவது பிரச்சனையா?” என்றவாறே அவன் முன்னால் வந்து நின்றாள்.

“ஆஹ்! சேச்சே! அதெல்லாம் ஒண்ணும் இல்லையே!” இயல்பாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளது கையில் இருந்த சிறியதொரு பெட்டியை ஆராய்ச்சியாக நோக்கினான்.

“இது?” சித்தார்த் கேள்வியாக அவள் கையில் இருந்த அந்த சிறு பெட்டியை சுட்டிக் காட்டி கேட்க

“எனக்கு ஜெயிலுக்கு வந்த அப்புறம் தான் டயரி எழுதும் பழக்கம் வந்தது இதில் நான் எழுதிய டயரி எல்லாம் இருக்கு என் வாழ்க்கையில் நடந்த எல்லா விடயங்களையும் சொன்னால் தான் உங்களுக்கு என்னை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும் எனக்கு உதவி பண்ணவும் முடியும் அதனால தான் இதை எல்லாம் உங்க கிட்ட கொடுக்கிறேன் அது மட்டுமில்லாமல் இங்கே வைத்து நிறைய நேரம் பேச முடியாது இதை எல்லாம் படித்து பார்த்துட்டு எனக்கு உதவி பண்ண முடிந்தால் மறுபடியும் வாங்க எனக்கு பொய்யான விஷயங்களை சொல்லி இங்கே இருந்து வெளியே போக மனசு இல்லை நீங்க வருவீங்கன்னு நான் காத்துட்டு இருப்பேன் என்னால இங்கே நிறைய நேரம் நிற்க முடியாது நான் வர்றேன் ஸார்” தன் கையில் இருந்த சிறு பெட்டியை அவனிடம் கொடுத்தவள் வேகமாக அங்கிருந்து விலகிச் சென்றாள்.

அவசரமாக அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்ற மேக்னாவையே சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்றவன்
“மேக்னா! ஒரு நிமிஷம்!” வேகமாக ஓடி வந்து அவள் முன்னால் வழி மறித்தவாறு வந்து நின்றான்.

“என்னாச்சு இன்ஸ்பெக்டர் ஸார்?”

“அது வந்து மேக்னா ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி”

“எதற்கு?”

“இல்லை அது வந்து நான் ரொம்ப நேரமாக உங்களை கூப்பிட்டேன் நீங்க வேற ஏதோ யோசனையில் இருந்தீங்க போல என்னைப் பார்க்கவே இல்லை அது தான் உங்க கையை பிடித்தேன் நீங்க பயத்தில் சத்தம் போட்டுடுவீங்களோன்னு பயந்து தான் உங்க வாயையும் மூடிட்டேன் யாரும் நம்ம பேசுவதை பார்த்துடுவாங்கன்னு தான் உங்களை நான் அந்த இடத்தில் இருந்து அப்படி கூட்டிட்டு வந்தேன் ஐ யம் ஸாரி மேக்னா!”

“இட்ஸ் ஓகே இன்ஸ்பெக்டர் ஸார் ஆனா இன்னொரு தடவை இனி இப்படி பண்ணிடாதீங்க! நீங்க அந்த இடத்தில் இருந்ததால் தான் நான் அமைதியாக போனேன் இல்லேன்னா வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருக்கும் அதோடு நான் எப்போதும் ஒரே மாதிரி இருப்பேனான்னு எனக்கே தெரியாது நான் வர்றேன் ஸார்” சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்து தலை அசைத்தவள் அவனைக் கடந்து செல்ல

அவனோ
“இவ என்ன சொல்லுறா? இன்னொரு தடவை இப்படி பண்ணா நம்மள காலி பண்ணிடுவேன்னு சொல்லாமல் சொல்லுறாளா?” என்று யோசித்து கொண்டிருக்கையில்

“என்னடா எல்லாம் பேசியாச்சு போல?” புன்னகையுடன் அவன் முன்னால் வந்து நின்றாள் ஜெஸ்ஸி.

“ஆஹ்! ஆமா ஆமா பேசியாச்சு” சித்தார்த் தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவனாக கூற

“ஆமா இது என்ன?” கேள்வியாக அவன் கையில் இருந்த பெட்டியை நோக்கினாள் ஜெஸ்ஸி.

“இதில் மேக்னாவோட டயரிஸ் இருக்கு இதில் தான் அவளைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கேன்னு சொன்னா இதை எல்லாம் படித்து பார்த்தால் தான் அவளோட கேஸைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் போல”

“ஓஹ்! அப்போ இவ்வளவு நேரமும் இதைத்தான் பேசிட்டு இருந்தீங்களா?”

“ஆமா”

“அப்படியா?” ஜெஸ்ஸி கேலியாக சிரித்துக் கொண்டே தன் கையை கட்டிக் கொண்டு ஆராய்ச்சியாக அவனைப் பார்த்து கேட்க

குழப்பமாக அவளைப் பார்த்தவன்
“ஆமா அப்படித்தான் மேக்னா சொன்னா அது சரி நீ ஏன் ஒரு மார்க்கமாக சிரிச்சுக்கிட்டே என்னைப் பார்த்து கேள்வி கேட்குற?” என சற்று தயக்கத்துடன் கேட்டான்.

“ஒண்ணும் இல்லையே!” இயல்பாக தன் தோளைக் குலுக்கிய படி கூறி விட்டு அவள் முன்னால் நடந்து செல்ல

அவனோ
“ஹேய்! ஜெஸ்ஸி என்ன விஷயம் சொல்லு? எதற்காக அப்படி கேட்ட?” என்று கேட்டவாறே அவளை பின் தொடர்ந்து சென்றான்.

“இல்லை கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ஒரு காவல் பறவையும், சிறைப் பறவையும் காதல் பறவைகளாக மாறிப் போன மாதிரி இருந்தது அது தான் அப்படி கேட்டேன்” ஜெஸ்ஸி இயல்பாக புன்னகையுடன் கூறி கொண்டு தன் பாட்டில் நடந்து செல்ல அவள் கூறியவற்றை கேட்டு சித்தார்த் அந்த இடத்திலேயே உறைந்து நின்றான்.

“என்ன ஸார் பதிலையே காணோம்?”
சிறிது நேரம் தான் கூறியதற்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் வராது போகவே சிரித்துக் கொண்டே அவள் குழப்பமாக அவன் புறம் திரும்பி பார்த்தாள்.

தன் கையில் இருந்த பெட்டியை இறுக பற்றிக்கொண்டு அதிர்ச்சியாகி நின்றவனின் அருகில் புன்னகையுடன் வந்தவள்
“என்ன காவல் பறவை திடீர்னு அமைதி பறவை ஆகிடுச்சு?” அவன் தோளில் கை வைத்து வினவ சற்றே சங்கடமாக அவளை ஏறிட்டு பார்த்தவன் எதுவும் பேசாமல் அமைதியாகி நின்றான்.

“சித்! என்னாச்சு டா? நான் ஏதாவது தப்பாக சொல்லிட்டேனா?”

“சேச்சே! அப்படி இல்லை ஜெஸ்ஸி நான் தான் மேக்னாவைப் பார்த்து கொஞ்சம் என் கட்டுப்பாட்டை இழந்துட்டேன் அது தான் கில்டியா இருக்கு” சித்தார்த் சிறு கவலையுடன் முகம் வாட கூறவும்

“ஹேய்! சித்! நான் உன்னை கில்டி ஆக்கணும்னு இதை சொல்லலடா தூரத்தில் நின்று உங்க இரண்டு பேரையும் நான் பார்த்துட்டு தான் இருந்தேன் அந்த பொண்ணு மேல உனக்கு ஏதாவது அபிப்பிராயம் இருக்கான்னு நான் ஏற்கனவே உன் கிட்ட கேட்டேன் தானே? இப்போ இதைப் பார்த்ததும் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன்” ஜெஸ்ஸி அவன் முக வாட்டத்தை தாளாமல் அவசரமாக தன்னிலை விளக்கம் அளிக்க

புன்னகையுடன் அவள் புறம் திரும்பியவன்
“நீ அந்த அர்த்தத்தில் கேட்கலன்னு எனக்கு தெரியும் ஜெஸ்ஸி பட் நீ கேட்டதற்கு அப்புறம் தான் நான் பண்ண தப்பே புரியுது மேக்னா கிட்டயும் நான் ஸாரி சொல்லணும்” என உண்மையாக மனம் வருந்தி கூறினான்.

”எனக்கு என்னவோ அந்த பொண்ணுக்கும் உன் மேல் ஈர்ப்பு இருக்குற மாதிரி தான் தோணுது”

“என்ன?” அவள் கூறியதைக் கேட்டு சித்தார்த் வியப்பாக அவளைத் திரும்பி பார்த்தான்.

“ஒரு பொண்ணா நான் யோசித்து பார்த்தப்போ…”

“பொண்ணா? யாரு? யாரு?” சுற்றிலும் தேடுவதைப் போல அவன் பாவனை செய்ய

அவனது தோளில் தட்டியவள்
“ஏய்! போடா உன் கிட்ட போய் சொன்னேன் பாரு” என்று விட்டு வேகமாக முன்னால் நடந்து செல்ல

அவனோ
“ஹேய்! ஜெஸ்ஸி! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ம்மா நில்லு” என்றவாறே அவளை வேகமாக நெருங்கிச் சென்றான்.

“சரி சரி இப்போ சொல்லு எதை வைத்து மேக்னாவிற்கும் என் மேல் ஈர்ப்பு இருக்குன்னு சொன்ன?” ஜெஸ்ஸியின் வழியை மறித்து வந்து நின்றவாறு அவன் கேட்டான்.

“……..”

“ஹேய்! ஜெஸ்ஸி ம்மா இப்படி அமைதியாக இருந்து என் டென்ஷனை ஏற்றாதேம்மா என் இதயம் தாங்காது ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்!”

“போதும் போதும் ஓவரா கெஞ்சாதே! சொல்லுறேன்”

“சரி சொல்லு” அவனது ஆர்வத்தை பார்த்து புன்னகைத்து கொண்டவள் தன் மனதில் நினைத்ததை அவனிடம் கூறினாள்.

“ஒரு பொண்ணு அவ அனுமதி இல்லாமல் ஒரு ஆளு அவளைத் தொடுவதை அனுமதிக்க மாட்டா ஆனா மேக்னா நீ அவளைத் தொட்ட போது அப்படி எதுவும் பண்ணல ஒரு பொண்ணு தனக்கு நம்பகமானவங்களை மட்டும் தான் தனக்கு பக்கத்திலேயே வர அனுமதிப்பா சோ அதை வைத்து பார்க்கும் போது எனக்கு அப்படி தோணுச்சு”

‘ஆமாலே! மேக்னாவும் அமைதியாக தானே நின்னா அப்போ ஜெஸ்ஸி சொன்ன மாதிரி அவளுக்கும்’ குதூகலத்துடன் அவன் யோசிக்கையில்

அவனது உள் மனதோ
‘இட்ஸ் ஓகே இன்ஸ்பெக்டர் ஸார் ஆனா இனி இப்படி பண்ணிடாதீங்க நீங்க அந்த இடத்தில் இருந்ததால் தான் நான் அமைதியாக போனேன் இல்லேன்னா நான் எப்போதும் ஒரே மாதிரி இருப்பேனான்னு எனக்கே தெரியாது நான் வர்றேன் ஸார்’ சிறிது நேரத்திற்கு முன்பு மேக்னா கூறியதை அவனுக்கு நினைவு படுத்தியது.

‘சேச்சே! அப்படி எல்லாம் இருக்காது ஜெஸ்ஸி தான் என்ன நடந்ததுன்னு தெரியாமல் பேசுறா’ தன் மனதிற்குள் உண்மை நிலையை எண்ணி அவன் பேசி கொண்டு நிற்க

“என்னாச்சு சித்? ரொம்ப நேரமாக அமைதியாக இருக்க?” ஜெஸ்ஸி அவனது அமைதியான தோற்றத்தை பார்த்து சிறு தயக்கத்துடன் வினவினாள்.

புன்னகையுடன் அவளை பார்த்து இடம் வலமாக தலை அசைத்தவன்
“ஒண்ணும் இல்லையே!” என்று விட்டு

“சரி ஜெஸ்ஸி பங்ஷன் ஆரம்பிக்கப் போறாங்க போல நீ அங்கே போ நான் இந்த பெட்டியை ஜீப்பில் வைத்துட்டு வர்றேன்” என்றவாறே அவளது பதிலை எதிர்பாராமல் அவளைக் கடந்து சென்றான்.

அவனது விசித்திரமான நடவடிக்கைகளைப் பார்த்து தன் தோளைக் குலுக்கிக் கொண்டவள் விழா நடக்கும் இடத்திற்கு நகர்ந்து செல்ல மறுபுறம் சித்தார்த் மேக்னாவைப் பற்றிய சிந்தனைகளிலேயே உழன்று கொண்டிருந்தான்.

குடியரசு தின விழா நிகழ்வுகள் ஆரம்பித்து அவை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க சித்தார்த்தோ அந்த நிகழ்ச்சியில் எந்தவித ஈடுபாடுமின்றி ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தான்.

‘ஜெஸ்ஸி சொன்ன மாதிரி இந்த கேஸைப் பற்றி நான் விசாரிக்காமலே இருந்து இருக்கலாமோ? இப்போ தேவையில்லாத எண்ணம் எல்லாம் மனதிற்குள் வர ஆரம்பிக்குது இது எல்லாம் எங்கே போய் முடியும்னே தெரியலையே! நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேனோ?’ காலம் கடந்த ஞானோதயம் போல காலம் கடந்த சிந்தனை அவன் மனதிற்குள் தோன்ற அடுத்த கட்டத்திற்கு செல்வதா? வேண்டாமா? என அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

‘இல்லை சித்தார்த் நீ தேவையில்லாத விடயங்களைப் பற்றி எல்லாம் யோசிக்குற உன் கவனம் இனி எப்போதும் இந்த கேஸைப் பற்றி மட்டும் தான்! வேறு எதிலும் இல்லை கன்ட்ரோல் யுவர் செல்ஃப் சித்தார்த்! கன்ட்ரோல்!’ தான் மனதிற்குள் நினைத்ததை அப்படியே பின்பற்றி நடப்பது போல சித்தார்த் தன் மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நினைத்து இருக்க கடவுளோ அவனது இந்த நடவடிக்கையை பார்த்து புன்னகைத்து கொண்டார்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை என்ற பாடல் வரிகள் இந்த நேரத்தில் சித்தார்த்திற்கு தான் பொருந்துமோ என்னவோ?

விழா முடிந்து அதிதிகள் மற்றும் விஷேட அங்கத்தவர்கள் எல்லாம் கலைந்து செல்ல ஆரம்பிக்க சித்தார்த், ஜெஸ்ஸி மற்றும் இன்னும் சில காவலர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்வதை மேற்பார்வை செய்து கொண்டு நின்றனர்.

எல்லா வேலைகளும் முடிந்து சித்தார்த் அங்கிருந்து வெளியேறி செல்ல அத்தனை
நேரமாக அவனையே பார்த்து கொண்டிருந்த மேக்னா
‘இன்ஸ்பெக்டர் ஸார் என்னைப் பற்றிய உண்மை எல்லாம் உங்களுக்கு தெரிந்த பிறகு மறுபடியும் நீங்க என்னை பார்க்க வருவீங்களா? என்னைப் பற்றிய உண்மை தெரிந்தால் அவங்க உயிர் இருக்காதுன்னு சொன்ன நானே இப்போ என்னைப் பற்றி சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துட்டேனே! ஏன் எனக்கு மட்டும் வாழ்க்கையில் நான் எதிர்பாராதது எல்லாம் நடக்குது? இன்னும் எனக்கு என்னென்னவெல்லாம் நடக்க இருக்குதோ தெரியலையே!’ என தன் மனதிற்குள் தன் நிலையை எண்ணி வருந்திக் கொண்டு நின்றாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு அவனருகில் மெய் மறந்து நின்ற நிலை மறந்து போய்
தன்னை பற்றி எல்லாம் தெரிந்த பிறகு மறுபடியும் அவன் தன்னை சந்திக்க வருவானோ? மாட்டானோ? என்ற ஒரு எண்ணமே அந்த கணம் அவள் மனம் முழுவதையும் வியாபித்து இருந்தது.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்த சித்தார்த் மேக்னா கொடுத்த பெட்டியை தன் மேஜையின் மீது வைத்து விட்டு அதில் முதலாவதாக இருந்த டயரியை பிரித்து படித்துப் பார்க்கத் தொடங்கினான்.

அவளது தாய், தந்தையின் இறப்பு, ஜமுனாவின் அறிமுகம், ராணியுடனான அவளது வாழ்க்கை பயணம், ப்ரியாவின் பிரிகை, ராணிக்கு வந்த தனபாலனின் மிரட்டல் என எல்லாவற்றையும் படித்து கொண்டு வந்தவன் அந்த டயரியில் இறுதியாக இருந்த சுதர்சனின் கடத்தல் சம்பவத்தை படித்ததும்

‘மேக்னா! நீயா இப்படி பண்ண?’ அதிர்ச்சியில் தன் கையில் இருந்த டயரியை தவற விட்டு விட்டு சிலையென உறைந்து போய் அமர்ந்திருந்தான்…….