Kadhal 18

ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டு இப்போது திரும்பி பின்னோக்கியும் செல்ல முடியாமல் அடுத்து என்ன செய்வது என்றும் புரியாமல் தான் படும் தவிப்பை சொல்ல வார்த்தைகள் இன்றி சித்தார்த் தனக்குள்ளேயே அவை எல்லாவற்றையும் மூடி வைத்திருந்தான்.

இன்னும் ஒரு டைரி முழுதாக திறந்து பார்க்கப்படாமல் இருக்க இன்றைக்குள் எப்படியாவது எல்லா டைரியையும் படித்து முடித்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் தான் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான்.

******************************************

அடுத்த நாள் காலை வழக்கம் போல மேக்னா வேலைக்கு செல்வதற்காக தயாராகி கொண்டு நிற்க அவளது இரு கைகளிலும் கட்டுப் போடப்பட்டிருந்ததைப் பார்த்து பதட்டம் கொண்ட வள்ளி
“மேக்னா! கையில் என்ன ஆச்சு?” என்று கேட்க

“நேற்று பழம் வெட்டும் போது தெரியாமல் வெட்டிக்கிட்டேன் ம்மா” வாய்க்கு வந்த காரணங்களை எல்லாம் கூறி அவரை சமாதானப்படுத்தி விட்டு தன் வேலைக்கு புறப்பட்டு சென்றாள்.

வெகு ஆர்வத்துடன் மேக்னா தனபாலனின் அலுவலகம் செல்ல அந்த இடமோ அன்று மொத்தமாக அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

அந்த பதட்டம் நிறைந்த நிலைக்கான காரணம் அவளுக்கு தெரிந்து இருந்தாலும் தன் முகத்தை வெகு சாதாரணமாக வைத்து கொண்டு அங்கே நின்று கொண்டிருந்த நபர் ஒருவரின் அருகில் சென்றவள்
“அண்ணா! என்னண்ணா ஆச்சு? ஏன் எல்லோரும் இவ்வளவு பதட்டத்துடன் இருக்காங்க?” குழப்பத்துடன் கேட்பது போல் கேட்கவும்

அந்த நபரோ மெல்லிய குரலில்
“உனக்கு விஷயமே தெரியாதா? நேற்று ராத்திரி ஐயாவோட தம்பியும், அவனோட பிரண்ட்ஸும் சேர்ந்து போன கார் ஆக்சிடெண்ட் ஆகி இருக்கு” என்று கூற

“அய்யய்யோ! அவங்களுக்கு என்ன அண்ணா ஆச்சு?” மேக்னா பதட்டத்துடன் கேட்பது போல அவரைப் பார்த்து வினவினாள்.

“மொத்தமாக காரில் இருந்த ஐந்து பசங்களும் ஸ்பாட் அவுட் அதிலும் ஐயாவோட தம்பிக்கு தலையில் பலமான அடி வேறயாம் நல்லா குடிச்சுட்டு போய் காரை ஓட்டுனா இப்படி தான் ஆகும் எல்லாம் அந்த கடவுள் கொடுத்த தண்டனை தான்!”

“ஏன்ணா அப்படி சொல்லுறீங்க? அந்த பசங்க பாவம் இல்லையா?”

“யாரு அவங்களா? சரியான பொறுக்கி பசங்க வெறும் கம்பு ஒன்றுக்கு சேலை கட்டி விட்டாலும் அவனுங்க விட்டு வைக்க மாட்டானுங்க அவனுங்களுக்கு இது தேவை தான் ஏன் நீயே அந்த பசங்களை அடிச்சவ தானே உனக்கு தெரியாதா?” அந்த நபர் வியப்பாக அவளைப் பார்க்கவும்

அவசரமாக மறுப்பது போல தலை அசைத்தவள்
“இல்லை இல்லை நான் அந்த ஒரு பொண்ணு கிட்ட தான் அவங்க அப்படி நடந்ததாக நினைத்து இருந்தேன் ஆனா அவங்க எப்போதும் இப்படி தான்னு நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்” என்று கூற

“ம்ம்ம்ம்! என்ன பண்ணுறது தப்பு பண்ணா தண்டனை அனுபவித்து தானே ஆகணும்” பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே அந்த நபர் அங்கிருந்து நகர்ந்து செல்ல அவர் கூறி விட்டு சென்ற அந்த வசனம் அவள் செவிகளுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

‘தப்பு பண்ணா தண்டனை அனுபவித்தே ஆகணும்’ மீண்டும் மீண்டும் அந்த வசனத்தை தனக்குள்ளேயே மீட்டிப் பார்த்து கொண்டவள்

‘நான் செய்ய வேண்டிய தப்பு இன்னமும் இருக்கு அது முடிந்ததற்கு அப்புறம் மொத்தமாக தண்டனை அனுபவித்தே தீருவேன்’ தன் மனதிற்குள் சபதம் எடுத்துக்கொண்டு தனபாலனின் வருகைக்காக காத்து நின்றாள்.

தன் ஒட்டுமொத்த பாசத்திற்கும் உரித்தான தன் ஒரே தம்பியை இழந்த சோகத்தில் மொத்தமாக தன் பலத்தை இழந்தது போல தடுமாற்றத்துடன் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த தனபாலனைப் பார்த்ததுமே மேக்னாவின் முகத்தில் அத்தனை பரவசம் குடி கொள்ள ஆரம்பித்தது.

தன் எதிரியின் வீழ்ச்சியை நேருக்கு நேராக காணும் போது அந்த நிலை தனக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் இவ்வளவு சந்தோசத்தை ஏற்படுத்துமா? என தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் அந்த ஒவ்வொரு நொடியையும் மனதார விரும்பி ரசித்து கொண்டு நின்றாள்.

அவள் தனபாலனது முகத்தை வெற்றிக் களிப்போடு பார்த்து கொண்டு நின்ற நேரம் ஒரு போலீஸ் வாகனம் வேகமாக அந்த கட்டடத்தின் முன்னால் வந்து நின்றது.

போலீஸ் வாகனத்தை பார்த்ததுமே மேக்னாவின் முகத்தில் இருந்த வெற்றிக் களிப்பு சட்டென்று மறைந்து போய் சிறிது அச்சம் உருவாக ஆரம்பித்தது.

‘போலீஸ் இங்கே எதற்கு? ஒருவேளை நான் தான் இதை செய்து இருப்பேன் என்று கண்டுபிடித்து விட்டார்களோ?’ மேக்னா குழப்பத்துடனும், அச்சத்துடனும் அவர்களை பார்த்து கொண்டு நிற்க

தனபாலன் முன்னால் வந்து நின்ற இன்ஸ்பெக்டர் ஒருவர்
“ஸார்! உங்க தம்பியோட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் அன்ட் பாடி வந்து இருக்கு வந்து கையெழுத்துப் போட்டு எடுத்துக்கோங்க அப்புறமாக உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயமும் பேசணும் கொஞ்சம் வர முடியுமா?” என்று கேட்க தடுமாற்றத்துடன் எழுந்து நின்றவர் தள்ளாடியபடியே அவர்களை பின் தொடர்ந்து சென்றார்.

‘போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் ஏதாவது குளறுபடி இருக்குமோ?’ அச்சத்துடன் தன் முகத்தில் அரும்பிய வேர்வைத் துளிகளைத் துடைத்து விட்டு கொண்டவள் யாரும் அறியா வண்ணம் தனபாலனைப் பின் தொடர்ந்து சென்று ஒரு மறைவான பகுதியில் நின்று கொண்டாள்.

“ஸார்! கையெழுத்து!” இன்ஸ்பெக்டர் நீட்டிய காகிதத்தில் கைகள் நடுங்க கையெழுத்துப் போட்ட தனபாலன் ஒரு பொட்டலமாக இறக்கப்பட்ட மகேஷின் உடலைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழ சுற்றி நின்ற அனைவரும் கண்கள் கலங்கி நின்றிருந்தனர்.

மேக்னா கூட ஒரு கணம் தான் அவசரப்பட்டு விட்டோமோ? என கவலையுடன் குற்றவுணர்ச்சி மேலெழ தனபாலனை நிமிர்ந்து பார்க்க அந்த நொடி அவள் மனதில் எழுந்த குற்றவுணர்ச்சி சட்டென்று காணாமல் போய் பழி வாங்கும் எண்ணமே மேலோங்க ஆரம்பித்தது.

“ஸார்! கன்ட்ரோல் யுவர் செல்ப்” தனபாலன் அருகில் நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் அவரது கையை ஆதரவாக பற்றி அழுத்தி கொடுத்து விட்டு

“உங்க தம்பியும், அவங்க பிரண்ட்ஸும் ரொம்ப போதையில் கார் ஓட்டிப் போய் இருக்காங்க போதையில் கார் கன்ட்ரோல் இல்லாமல் அந்த உடைந்த பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்து இருக்கு கார் விழுந்த வேகத்தில் எல்லோருக்கும் பலத்த அடி உங்க தம்பிக்கு தான் ரொம்ப பலத்த அடி போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டும் அப்படி தான் வந்து இருக்கு வேறு யாரும் வேணும்னே பண்ணதாக தெரியல அப்படி உங்களுக்கு யாரு மேலயும் சந்தேகம் இருந்தால் சொல்லுங்க நான் விசாரித்து பார்க்குறேன்” கேள்வியாக அவரைப் பார்க்க

மறுப்பாக தலை அசைத்தவர்
“அது தான் குடித்துட்டு காரை ஓட்டி இருக்கான்னு தெளிவாக சொல்லி இருக்கே அதற்கு மேல மறுபடியும் மறுபடியும் என்ன விசாரிக்க இருக்கு? இப்படி குடிச்சுட்டு அற்ப ஆயுசுல போய் சேரணும்னு அவன் விதி இதோடு இந்த கேஸை முடிங்க இன்ஸ்பெக்டர் திரும்ப திரும்ப பத்திரிகைகாரர்களுக்கு என் தம்பியும், என் பதவியும் காட்சிப் பொருளாக இருக்க வேண்டாம்” என்று விட்டு மற்ற கடைமைகளையும் முடித்து விட்டு உள்ளே சென்று விட மேக்னாவிற்கு அப்போது தான் பெரும் ஆறுதலாக இருந்தது.

“என்ன ஸார் இந்த கேஸை இப்படியே முடிச்சுடணும்னு சொல்லிட்டு இங்கே திரும்ப அவர் முன்னாடி இன்னொரு தடவை விசாரித்து பார்க்கவான்னு கேட்குறீங்க?” அந்த இன்ஸ்பெக்டர் அருகில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஆச்சரியமாக அவரை பார்த்து கேட்க

புன்னகையுடன் அவரை திரும்பி பார்த்தவர்
“இது எல்லாம் ஒரு சின்ன பார்மலிட்டிஸ் ராஜன்! அந்த ஆளும், அவன் தம்பியும் இந்த எம்.எல்.ஏ பதவியை வைத்து எவ்வளவு ஆட்டம் போட்டாணுங்க? அது மட்டுமா ஒரு மந்திரியை தன் கைக்குள் வைத்துக் கொண்டு அவன் பண்ண அழிச்சாட்டியம் எல்லாம் கணக்கே இல்லை அவனுங்க ஆடுன அந்த ஆட்டத்திற்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவனை நானே அடித்து சாக வைத்து இருப்பேன் அந்த கடவுள் முந்திகிட்டாரு ஒரு வேளை இந்த ஆளு மறுபடியும் இந்த ஆக்சிடெண்ட் பற்றி விசாரிக்க சொல்லி இருந்தாலும் நான் இதே விஷயத்தை தான் சொல்லி இருப்பேன்” என்று கூறவும் அந்த கான்ஸ்டபிளும் அவருடன் இணைந்து சிரித்துக் கொண்டே அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு கொண்டு நின்ற மேக்னா தன் மனதிற்குள்
‘இந்த தனபாலன் எல்லோரையும் தன் பதவியாலும், அதிகாரித்தினாலும் தான் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கான் உண்மையாக அவனுக்கு ஆதரவு வழங்குற ஆட்கள் ரொம்ப குறைவு அந்த ஆட்கள் கிட்ட இருந்து இவனை பிரித்தாலே போதுமே! அப்போ என்னோட வேலை இன்னமும் இலகுவாக முடிந்து விடும் போலவே!’ என்று நினைத்து கொண்டவள் மறுபடியும் தன் முகத்தை எதுவும் நடவாதது போல வைத்து கொண்டு மகேஷின் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டாள்.

மேக்னா வேலைக்கு சேர்ந்து மேலும் ஒன்றிரண்டு மாதங்கள் கடந்து இருந்த நிலையில் தனபாலன் மீண்டும் தன் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தார்.

என்னதான் அவர் தன்னை மற்றவர்கள் முன்னிலையில் இயல்பாக காட்டி கொண்டாலும் அவரது மனதிற்குள் இருக்கும் ஒரு வெறுமையான உணர்வு அவர் முகத்தில் தென்படாமல் இல்லை.

தனபாலனைச் சூழவுள்ள மற்றவர்கள் கண்களுக்கு அந்த வெற்றுணர்வு தென்படாவிட்டாலும் மேக்னா அதை நன்றாகவே கவனித்து வந்தாள்.

அவரது ஒவ்வொரு அசைவுகளையும் வெகு நுணுக்கமாக கவனித்து வருபவளுக்கு இந்த ஒரு சிறு மாற்றத்தை கவனிப்பது அத்தனை சிரமமாக இருக்கவில்லை.

தனபாலனுக்கே தெரியாமல் அவருடன் இருப்பவர்களை மெல்ல மெல்ல அவரிடம் இருந்து தூரமாக்கியவள் அவரது சாம்ராஜ்யத்தை ஒரு வெற்றிடமாக மாற்றி கொண்டு வந்தாள்.

மகேஷ் இறப்பதற்கு முன்னர் இருந்தது போல கடத்தல் வேலைகளிலும், அரசியல் வேலைகளிலும் தன் கவனத்தை செலுத்த முடியாமல் தனபாலன் சிரமப்பட அதைக் காரணமாக காட்டி அவரின் கீழ் வேலை பார்த்த பலபேர் மற்றும் ஒரு முக்கியமான மந்திரியும் விலகி செல்ல, மற்றவர்கள் சிலர் வேறு வேறு கட்சிகளுக்கு தாவிச் செல்ல ஆரம்பித்திருந்தனர்.

தன் உடன் இருப்போர் தன்னை விட்டு பிரிந்து சென்றால் அது எவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தனபாலனுக்கு புரிய வைத்து அதை பார்த்து அவர் படும் வேதனையில் மேக்னாவின் உள்ளம் குதூகலத்திப் போகும்.

உலகத்தை உணர ஆரம்பித்த வயதில் தன் நண்பியை தன்னிடம் இருந்து பறித்து, உலகத்தை நன்கு உணர்ந்து நிற்க வேண்டிய வயதில் தன் அன்னை போன்ற உறவை இழந்து தான் பட்ட தவிப்பை விட இன்னும் பன்மடங்கு தவிப்பை தனபாலனுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் அடுத்த அடியை மேக்னா எடுத்து வைத்தாள்.

சாதாரணமாக பேசுவதை போல எல்லோரிடமும் பேசி அவர்கள் மனதை மாற்றி தனபாலனிடம் இருந்து எல்லோரையும் விலகிப் போக செய்தவளால் அவரோடு உண்மையான ஆதரவோடு இருந்தவர்களை தூரம் விலக்க முடியவில்லை.

நூற்றுக்கணக்கான ஆட்களோடு இன்னமும் தனபாலன் தன் சாம்ராஜ்யத்தை வெகு சிரமப்பட்டு கட்டிக் காத்து கொண்டு இருக்க மேக்னாவிற்கோ அதைப் பார்க்கும்
போதெல்லாம் கோபம் என்னும் தீ கொழுந்து விட்டெறிய ஆரம்பிக்கும்.

என்னதான் தன் மனதிற்குள் கோபம் மற்றும் பழி வாங்கும் உணர்வு நிறைந்து போய் இருந்தாலும் தனபாலன் முன்னால் அவள் எப்போதும் இயல்பாகவே தன்னை காட்டிக் கொள்வாள்.

அவர் கொடுக்கும் வேலைகளை எல்லாம் எந்த குறையும் இன்றி செய்து முடிப்பவள் அவர் நம்பிக்கையை எந்த நேரத்திலும் இழந்து விடக்கூடாது என்பதில் வெகு தெளிவாக இருந்தாள்.

அன்றொரு நாள் வழக்கம் போல ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கடத்தல் பொருட்களை கொண்டு செல்லும் வேலையை மேக்னாவின் பொறுப்பில் தனபாலன் கொடுத்திருக்க அந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இன்னும் ஒரு சில நபர்களோடு அவள் தன் பயணத்தை ஆரம்பித்தாள்.

போகும் வழியில் வரும் தடைகளை எல்லாம் தன் பேச்சால் ஒன்றும் இல்லாமல் செய்து கொண்டு வந்தவளுக்கு அந்த பொருட்களை எல்லாம் கை மாற்றும் இடத்தில் தான் கனவிலும் எதிர்பாராத ஒரு சம்பவத்தை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நர்மதா தன் பள்ளிக்கூடத்தில் இருந்து தனியாக அந்த வீதி வழியாக வந்து கொண்டிருந்த வேளை வீதியின் மறுபுறம் நின்று கொண்டிருந்த மேக்னா அவள் கண்களுக்கு தெளிவாக தென்பட்டாள்.

அவளை அந்த இடத்தில் பார்த்ததுமே ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஒன்று சேர
“அக்கா!” சந்தோஷக் கூச்சலோடு நர்மதா அவளை ஓடி வந்து அணைத்து கொள்ள அவளை அந்த இடத்தில் எதிர்பாராத மேக்னாவோ அதிர்ச்சியாகி போய் நின்றாள்.

“ந..நர்..மதா! நீ…நீ எங்கே இங்கே?” தடுமாற்றத்துடன் அவள் வினவ

“அதை நான் தான் அக்கா உங்க கிட்ட கேட்கணும் இந்த வழியாக தான் நான் தினமும் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு போவேன் இன்னைக்கு நான் ஸ்கூல் போயிட்டு கட் பண்ணிட்டேன் ஸாரி அக்கா” தன் காது இரண்டையும் மன்னிப்பு கேட்பது போல பிடித்து கொண்டவள்

“ஆமா நீங்க எங்க இங்கே? இன்னைக்கு ஆபிஸ் போகலயா? ஆமா இவங்க எல்லாம் யாரு? எங்க என்ன பண்ணுறீங்க? இன்னைக்கு ஏதோ முக்கியமான டீலிங் ஆபிஸில் இருக்குன்னு தானே சொன்னீங்க அப்புறம் எதற்கு இங்கே நிற்குறீங்க?” பதிலுக்கு கேள்வியால் அவளை துளைத்து எடுத்தாள்.

“மேக்னா சீக்கிரம் சரக்கை கை மாற்றிட்டு கிளம்பலாம் ஆளுங்க சேர்ந்துடப் போறாங்க” மேக்னாவின் அருகில் நின்று கொண்டிருந்தவன் ஒருவன் சுற்றிலும் ஒரு முறை நோட்டம் விட்டு கொண்டே கூறவும்

அவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ச்சியான நர்மதா
“சரக்கா?” கேள்வியாக அவளை நோக்கினாள்.

“நான் எல்லாம் சொல்லுறேன் நர்மதா நீ முதல்ல வண்டியில் ஏறு” வலுக்கட்டாயமாக அவளை காரில் ஏற்றியவள் தான் கொண்டு வந்த பொருட்களை கை மாற்றி விட்டு வேகமாக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டாள்.

“அக்கா! என்ன அக்கா நீங்க பண்ணுறீங்க? நீங்க ஏதோ தப்பு பண்ணுறீங்க அக்கா இது சரி இல்லை முதல்ல வாங்க வீட்டுக்கு போகலாம் அப்பா, அம்மா கிட்ட இதை பற்றி பேசலாம் வாங்க அக்கா!”

“………”

“அக்கா! என்ன எதுவும் பேசாமல் இருக்கீங்க? நீங்க என்ன வேலை பார்க்குறீங்க? அதையாவது சொல்லுங்க”

“…….”

“அக்கா!” தான் கேட்ட கேள்விகளுக்கு பதில் பேசாமல் தலை குனிந்து இருந்த மேக்னாவின் தோளைப் பற்றி நர்மதா உலுக்க முகம் இறுக அவளை நிமிர்ந்து பார்த்தவள்

தன் முன்னால் இருந்த டிரைவரின் புறம் திரும்பி
“அண்ணா! கொஞ்சம் வண்டியை ஓரமாக நிறுத்துங்க” என்று விட்டு தன் முன்னால் இருந்த நபர்களை பார்க்க அவர்கள் இருவரும் காரில் இருந்து இறங்கி நின்றனர்.

அவர்கள் எல்லோரும் காரில் இருந்து சிறிது தூரம் தள்ளி சென்று நின்றதும் நர்மதாவின் புறம் திரும்பியவள்
“சொல்லு இப்போ உனக்கு என்ன தெரியணும் நான் என்ன பண்ணுறேன்? என்ன வேலை பார்க்குறேன்? இங்கே எதற்கு வந்தேன் அது தானே?” என்று கேட்க அவளும் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

தான் ஆரம்பித்தில் ராணியின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தது முதல் இப்போது தனபாலனின் கீழ் வேலை பார்ப்பது வரை கூறி முடித்தவள் மகேஷின் விபத்து பற்றி மட்டும் கூறாமல் தவிர்த்தாள்.

அவள் கூறியதை எல்லாம் கேட்டு நர்மதா அதிர்ச்சியின் உச்சத்தில் லயித்து இருக்க
“நர்மதா!” மேக்னா தவிப்போடு அவள் கையை பிடித்துக் கொண்டாள்.

“நான் தப்பு பண்ணி இருக்கேன் தான் நர்மதா ஆனா அதற்கு எல்லாம் பின்னாடி ஒரு காரணம் இருக்கும் அதை நீயும்…”

“வேணாம் நீங்க இதற்கு மேல் எதுவும் சொல்ல வேணாம் நான் முதல் தடவை உங்களைப் பார்த்த போது உங்க தைரியத்தையும், பேச்சையும் பார்த்து அவ்வளவு வியந்து போய் இருந்தேன்

கிட்டத்தட்ட என்னோட ரோல்மாடலாக உங்களைப் பார்த்தேன் ஆனா நீங்க இது வரைக்கும் பண்ண காரியம் எல்லாம் கேட்கும் போது உங்களைப் பார்க்காமலேயே இருந்து இருக்கலாம் போல இருக்கு ஏன் அக்கா நீங்க இப்படி எல்லாம் பண்ணீங்க? வேண்டாம் அக்கா இது வரை போனது போகட்டும் இனிமேலும் இந்த பாவம் உங்களுக்கு வேண்டாம் எல்லாவற்றையும் விட்டுட்டு வந்துடுங்க அக்கா ப்ளீஸ்!”

“இல்லை நர்மதா என்னால முடியாது! அந்த தனபாலனிற்கு ஒரு இறுதி முடிவு கட்டாமல்
நான் இதை கை விட முடியாது”

“தப்பு பண்ணா அவங்களை அந்த கடவுள் தண்டிப்பாருக்கா நீங்க எதற்காக வீணாக உங்க வாழ்க்கையை அழிக்கப் பார்க்குறீங்க வேண்டாம் க்கா ப்ளீஸ்!”

“இல்லை நர்மதா! நான் எல்லா உண்மைகளையும் சொன்னால் நீ புரிஞ்சுப்பேன்னு தான் இதை எல்லாம் சொன்னேன் ஆனா நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற”

“முடியாது அக்கா நான் புரிஞ்சுக்க மாட்டேன் என் அக்கா தப்பான வழியில் போவதைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன் இப்போவே நான் வீட்டில் இதை போய் சொல்லி உங்களை அந்த நரகத்தில் இருந்து மீட்டு எடுக்கிறேன்”

“நர்மதா! வேண்டாம் சொன்னா கேளு! அப்புறம் நீ ஸ்கூல் கட் பண்ண விஷயமும் அம்மா, அப்பாவுக்கு தெரிய வரும்”

“பரவாயில்லை அக்கா ஸ்கூல் கட் பண்ணதும் இதுவும் ஒரே அளவுக்கு தப்பான விடயம் இல்லை ஐ யம் ஸாரி எனக்கு என் மேக்னா அக்கா வேணும்!” மேக்னாவின் கையை தட்டி விட்டு காரில் இருந்து நர்மதா இறங்கப் போக

அந்த பக்கமாக வேகமாக வந்த கார் ஒன்று அவள் இறங்குவாள் என்று எதிர்பாராமல் வந்து அவளை மோதாமல் இருக்க சற்று அவசரமாக விலகிச் செல்ல அதை எதிர்பாராத நர்மதாவோ
“அக்கா!” என்ற அலறலோடு மயங்கி சரிந்தாள்.

“நர்மதா!” பதட்டத்துடன் மயங்கி விழுந்த நர்மதாவை ஓடி வந்து தாங்கிக் கொண்ட மேக்னா அவசரமாக தன்னுடன் வந்த நபர்களை அழைக்க சிறிது நேரத்தில் அந்த கார் வேகமாக காற்றை கிழித்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்றது.

“நர்மதா! நர்மதா! ப்ளீஸ் எழுந்திருடா! நான் எந்த தப்பும் பண்ணல டா நர்மதா! ப்ளீஸ் நீயும் என்னை விட்டு போயிடாதேடா” எப்போதும் எதற்காகவும் கலங்க மாட்டேன் என்று சபதம் எடுத்து இருந்தவள் இப்போது தன் சுற்றுப்புறம் மறந்து கண்ணீர் வடிக்க அவளது கண்ணீர் துளி பட்டு நர்மதா மெல்ல தன் கண்களை விழித்துக் கொண்டாள்.

“அக்கா!” ஹீனமாக ஒலித்த நர்மதாவின் குரல் கேட்டு

“என்ன ம்மா சொல்லு?” மேக்னா பதட்டத்துடன் அவளருகில் குனிந்து கொள்ள

அவளோ
“அம்…மா, அ…ப்பா பா…வம் க்கா” என்றவாறே கண்கள் கலங்க கூறினாள்.

“நீயும் என்னை புரிஞ்சுக்கலயே!” தவிப்போடு தன் பார்வையை வெளியே சுழல விட்டவள்

சிறிது நேரம் தன் கண்களை மூடி திறந்து விட்டு
“அண்ணா வண்டியை நீலகிரிக்கு விடுங்க” என்று கூறவும் சுற்றி இருந்த அனைவரும்

“என்ன?” அதிர்ச்சியாக அவளை திரும்பி பார்த்தனர்.

“சொன்னதை செய்யுங்க” கண்டிப்பான குரலில் அவள் கூற அவளது கோபம் ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்து இருந்ததனால் என்னவோ அவர்கள் எதுவும் மறுத்து பேசவில்லை.

காலையில் ஒன்பது மணிக்கு தொடங்கிய அவர்கள் பயணம் நண்பகல் இரண்டு மணிக்கு நீலகிரியில் வந்து முடிந்தது.

வரும் வழியில் ராணியின் மூலமாக நீலகிரியில் தனக்கு தெரிந்த ஒன்றிரண்டு நபர்களுடன் பேசி கொண்டு வந்தவள் நர்மதாவை அங்கே வெகுவான பாதுகாப்பிற்கு மத்தியில் தங்க வைப்பதற்கு முழுமையான ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு மறுபடியும் சென்னையை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்தாள்.

சென்னைக்கு திரும்பி வரும் வழியில் அவளது பழைய வீட்டை பார்த்ததுமே அவளையும் அறியாமல் காரை நிறுத்த சொன்னவள் காரில் இருந்து இறங்கி தன் வீட்டையே சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்றாள்.

அந்த பகுதியில் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாததால் என்னவோ அந்த வீடு இன்று வரை கவனிப்பாரற்று பூட்டியே கிடந்தது.

சுந்தரி மற்றும் சம்பந்தனோடு ஒன்பது வருடங்களாக இந்த வீட்டில் தான் எப்படி எல்லாம் இருந்தோம் என்று எண்ணி பார்த்தவள் இப்போது மரங்களால் சூழ்ந்து காடு போன்ற தோற்றத்தில் இருந்த அந்த வீட்டை பார்த்து கண் கலங்கி போனாள்.

“ஒரு பத்து நிமிஷம் எல்லோரும் இங்கேயே இருங்க!” கட்டளையிடுவது போல கூறி விட்டு அந்த வீட்டின் பெரிய காம்பவுண்ட் சுவற்றை தாண்டி எகிறி குதித்தவள் அந்த வீட்டின் பின்புறமாக இருந்த படி வழியே ஏறி ஒரு அறை ஒன்றுக்குள் நுழைந்து கொண்டாள்.

முழுவதும் ஒட்டடை பிடித்து, இருட்டாக, தூசு நிறைந்து போய் இருந்த அந்த அறையை சுற்றி பார்த்தவள் அங்கிருந்த மேஜை ஒன்றில் இருந்த ஒரு புகைப்படத்தை தன் கையில் எடுத்துப் பார்த்தாள்.

அந்த புகைப்படம் அவளது எட்டாவது வருட பூர்த்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

அந்த புகைப்படத்தை பார்த்ததுமே அவளது இதழோரம் சிறு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

தன் சிறு வயது நிகழ்வுகள் எல்லாம் அவள் கண்கள் முன்னால் அழகிய காட்சியாக விரிய சிறிது நேரம் அந்த நினைவுகளில் அவள் தன்னை மூழ்கடித்து கொண்டாள்.

தன் அன்னை, தந்தையின் இறுதி நினைவாக அந்த புகைப்படத்தை தன் கையில் எடுத்துக்கொண்டவள் மீண்டும் தன் வந்த வழியே திரும்பிச் சென்று காரில் ஏறி கொள்ள மறுபடியும் அந்த கார் சென்னையை நோக்கி புறப்பட்டது.

காரில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் அந்த புகைப்படத்தையே மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டவள்
‘சுந்தரி ம்மா!’ கண்கள் கலங்க அதை தடவிக் கொடுத்த படியே கண்களை மூடி சாய்ந்து கொண்டாள்.

‘சுந்தரி ம்மா எப்போதும் என் கூடவே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் எடுத்து வந்த புகைப்படம் என் நிழலாக எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்’ மூன்றாவது டைரியின் இறுதி பக்கத்தில் ஒரு ஓரத்தில் எழுதப்பட்டிருந்த அந்த வசனம் அப்போது தான் சித்தார்த்தின் கண்களில் பட்டது.

‘அப்படி என்றால் இந்த போட்டோ?’
ஒரு கையில் மேக்னா கொடுத்த டைரியும், மறு கையில் நேற்று அவன் கண்டெடுத்த புகைப்படமும் இருக்க அந்த நேரம் தான் அவனுக்கு எல்லாம் நன்றாக புரிய ஆரம்பித்தது.

மேக்னாவின் ‘சுந்தரி ம்மா’ என்ற அழைப்பை பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருந்த சித்தார்த் இப்போது தான் அந்த பெயரை நன்றாக கவனித்து பார்த்தான்.

‘அப்போ இந்த மேக்னா தான் என் அத்தை பொண்ணா?’ எது நடக்க கூடாது என்று அவன் நினைத்து இருந்தானோ அதுவே இப்போது உண்மையாகி அவனை பேசாமடந்தையாக்கி இருந்தது……

error: Content is protected !!