KP-9

KP-9

குறும்பு பார்வையிலே – 9

பேச்சை வளர்க்க விரும்பாமல், ஸ்ருதி மௌனித்தாள்.

என்ன பேசுவதென்று தெரியாமல், ஆகாஷ் மெளனமாக  ஸ்ருதியை கண்களால் பருகியபடி, தன் பானத்தைப் பருகி கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில், “நான் கிளம்புறேன்.” என்று ஸ்ருதி எழுந்து கொள்ள, விடை அனுப்ப மனமில்லாமல், விடை கொடுத்தான் ஆகாஷ்.

ஸ்ருதி காரை அவள் வீட்டை நோக்கிச் செலுத்தினாள்.

‘ஆகாஷோடு தான் இனி நம் வேலை. என் மனதை அவன் அறிந்து கொள்வானோ?’ என்ற கேள்வி எழ, “ஆகாஷ் தெரிந்துகொள்வதில் ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால், எனக்கே சரியா தெரியாத  விஷயத்தை?” என்று தனக்கு தானே கேள்வியைக் கேட்டுக்கொண்டு காரை திருப்பினாள் ஸ்ருதி.

ஸ்ருதியின் எண்ணம் ஆகாஷை சுற்றி வந்தது. அவளது ரோல்ஸ் ராய்ஸ், அவள் எண்ணத்திற்கு ஏற்ப, சற்று வேகமாகவும், சற்று நிதானமாகவும் பயணித்தது.

‘சரி… பாப்போம். அது தான் இனி தினமும்  ஆகாஷை பார்ப்போமே!’ என்று தன் எண்ண ஓட்டத்தை நிறுத்தி கொண்டாள் ஸ்ருதி.

அவள் அறைக்குச் சென்று குளித்து உடைமாற்றி,  அறையிலுள்ள  சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள்  ஸ்ருதி.

அவள் எதிரே இருந்த பொம்மையில் உள்ள கண்கள் குறும்பு பார்வையோடு அவளைப் பார்க்க, அவள் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.

காதல் நோய் ஆக்டொபஸாய் அவளைச் சுற்றி வளைக்க ஆரம்பித்தது.

அவள் வெட்க புன்னகையோடு, தன் மடிக்கணினியில் பர்சனல் என்று பெயரிட்டு, ஏதோ செய்துவிட்டு அதை யாரும் பார்க்கும் முன் மூடிவிட்டாள்.

ஆகாஷ் தன் தங்கையை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான்.

‘கீதாவிடம், ஸ்ருதியை பார்த்தது பற்றிச் சொல்லுவோமா?’ என்ற எண்ணத்தோடு அவன் வண்டியைச் செலுத்த,  “அண்ணா… செம டையார்ட்.” என்று கூறிவிட்டு கீதா   சீட்டில் சாய்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள்.

“படம் பார்க்க தானே செய்த? என்னவோ படம் எடுத்த மாதிரியே ஸீன் போட வேண்டியது.” என்று ஆகாஷ் தன் கவனத்தைச் சாலையில் வைத்தபடி கூற, “ஆ… ஏன் சொல்ல மாட்ட?” என்று கீதா சண்டைக்குத் தயாரானாள்.

ஆகாஷ், அமைதியாக வண்டியைச் செலுத்த, “படம் எடுத்தவங்க வருஷ கணக்கா எடுத்திருப்பாங்க. நாங்க அப்படியா? மூணு மணி நேரம் தொடர்ந்து பார்க்கணும். எவ்வளவு கஷ்டம் தெரியுமா? கண்ணு பார்க்கணும். கை தட்டணும். வாய் சிரிக்கணும். கொஞ்சம் பிரேக்ல பாப் கார்ன் வாங்கணும். ஐஸ் கிரீம் வாங்கணும். எல்லாம் சாப்பிடணும்.” என்று கீதா தன் கஷ்டத்தைக் கூற, “ஓ!”என்று கேட்டுக்கொண்டான் ஆகாஷ்.

“என்ன ஓ? புக் படிக்கறதும் அப்படி தான். எழுத்தாளருக்கு என்ன? அவங்க பாட்டுக்கும் தோன்றதை மாச கணக்கா, வருஷ கணக்கா எழுதி வச்சிடறாங்க. தொடர்ந்து படிக்குற நமக்கு தானே கஷ்டம்.” என்று கீதா தீவிரமாகக் கூற, “ஓ! அப்படி…” என்று தலை அசைத்துக்கொண்டான் ஆகாஷ்.

“இந்த சாப்பிடுற வேலை எப்படி?” என்று ஆகாஷ் தீவிரமாகக் கேட்பது போல் அவளைச் சீண்ட , “ஐயோ! அது அதை விட கஷ்டம். தெரிஞ்சதை பண்ணா, தெரிஞ்சது தானேன்னு சுமாரா பண்ணிடுவாங்க. அதை சாப்பிடறதும் கஷ்டம். சரி தெரியாததைப் பண்ணா, யு டியூப் பார்த்து பண்றேன் நம்மளை கொல்லுவாங்க. சாப்பிடுற நமக்கு தான் ரொம்ப கஷ்டம்.” என்று கீதா சோகமாகக் கூறினாள்.

“ம்…” என்று அவளை கேலி போல் அவன் சிலாகிக்க, “இன்னொரு கஷ்டமான விஷயம் இருக்கு சொல்லட்டுமா அண்ணா?” என்று பாசமாகக் கேட்டாள் கீதா.

‘சொல்லு கேட்டுதானே ஆகணும்.’ என்பது போல் தலை அசைத்தான் அவன்.

“லவ் பண்றது கூட ஈஸி. ஆனால் லவ் பண்றவங்க பேசுறதை கேட்குறது, அவங்க முக பாவனையை பாக்குறது எல்லாம் கொடுமையோ கொடுமை அண்ணா.” என்று கீதா கண்சிமிட்டிச் சிரித்தாள்.

“எப்படி வசதி? அடுத்த தடவை படத்துக்கு பிக்கப், ட்ரோப் வேணுமா இல்லைனா… அம்மா, இனிமேல் இவளைப் படத்துக்கு விட வேண்டாமுன்னு சொல்லட்டுமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் ஆகாஷ்.

“ஈ…” என்று சிரித்தாள் கீதா.

‘இதுக்கே ரொம்ப கலாய்க்குறா. இதுல இன்னைக்கு ஸ்ருதியை பார்த்ததைச் சொன்னோம் அவ்வுளவு தான்.’ என்று எண்ணிக்கொண்டு மேலும் பேசாமல் மௌனமாகக் காரை செலுத்தினான் ஆகாஷ்.

ஓரிரு நாட்கள் கழித்து, அன்று ஆகாஷ் ஸ்ருதியின் கம்பனிக்கு வருவதாக ஏற்பாடு. ஆகாஷின் கம்பெனியின் உள்ளமைப்பு பற்றி கார்த்திக் தான் கேள்விப்பட்டதை ஸ்ருதியிடம் பகிர்ந்திருந்தான்.

‘நம் கம்பனியும் ஒன்றும் குறைச்சலில்லை.’ என்று நம்பிக்கையோடு காத்திருந்தாள் ஸ்ருதி.

ஆகாஷ், வரவேற்பறைக்கு வர, வரவேற்பறை வந்து அவனுக்கு கைகொடுத்து    முகமன் தெரிவித்தாள்.

ஆகாஷ் அவளுக்கு, சிவப்பு நிற ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை நீட்ட, “இது என்ன புதுசா இருக்கு? நாங்க தானே குடுக்கணும்?” என்று சந்தேகம் கேட்டாள் ஸ்ருதி.

“ஏன் நான் குடுத்தா தெய்வகுத்தமா?” என்று ஆகாஷ் புருவம் உயர்த்த, “இல்லை நான் கொடுத்தா, சிவப்பு ரோஜாக்களை வாங்கிக்க மாட்டீங்களா?” என்று ஆழமான குரலில் ஆகாஷ் கேட்டான்.

அந்த சிவப்பு ரோஜாக்கள் ஒவ்வொன்றும், அவன் மனதைக் கூறுவது போன்ற பிரமை. இல்லையில்லை காதல் சொல்வது போன்ற பிரமை தோன்ற ஸ்ருதி அவள் நிறுவனத்தில் நின்றால் கூட, ஒரு நொடி தயங்கினாள்.

மறுக்க வழியின்றி, மறுக்க மனமின்றி அந்த ரோஜா பூங்கொத்தைப் பெற்றுக்கொண்டாள் ஸ்ருதி.

அதன் பின் இருவரும் ஸ்ருதியின் அறையை நோக்கி நடந்தனர்.

ஸ்ருதியின் கம்பனி முழுதுமாக ஆட்டோமேட்டட் விதமாக தான் இயங்கி கொண்டிருந்தது. பணமும், டெக்னாலஜியும், போட்டி போட்டு கொண்டு அதன் இருப்பை காட்டிக்கொண்டிருந்தது.

ஸ்ருதி முகமன்களுக்கு பின் எதுவும் பேசவில்லை. ஆகாஷ், கம்பெனியை நோட்டமிட்டான். அவன் நிமிடங்களில், அவர்களின் பொருளாதார நிலைமையயும், டெக்னாலஜி பிரயோகத்தையும் கணக்கிட்டு இருந்தான்.

அவர்கள் கம்பனி அளவு இல்லை என்றாலும், பல முன்னனி நிறுவனங்களுக்குச் சவால் விடும் விதமாகவே அமைந்திருந்து ஸ்ருதியின் நிறுவனம்.

ஆகாஷும் எதுவும் பேசவில்லை. ஸ்ருதியின் அறைக்குள் சென்றதும், அவன் கண்கள் அவளை அளவிட்டது.

“வாவ்! பியூடிபியுல்.” என்று அவன் உதடுகள், நிறுத்தி நிதானமாகக் கூறியது. அவன் கண்கள் அவளை ரசித்துப் பார்த்து கொண்டிருந்தது.

ஸ்ருதி, இந்த நேரடி பாராட்டை எதிர்பார்க்கவில்லை. வெட்கம் கலந்து என்ன சொல்வதென்று சற்று தடுமாறினாள்.

வேறு யாராகவோ இருந்திருந்தால், ஸ்ருதி இதைக் கையாண்ட விதம் வேறாக இருந்திருக்கும். ‘இவனுக்கு நான் இடம் கொடுத்துவிட்டேன்.’ என்ற எண்ணத்தோடு, நொடிக்கும் குறைவான நேரத்தின் தடுமாற்றத்திற்குப் பின், “தேங்க்ஸ்.” என்று கூறினாள் ஸ்ருதி.

“கம்பனி அமைப்பை சொன்னேன்.” என்று அவள் நன்றியின் உள்  அர்த்தம் புரிந்தும் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு கூறினான்.

‘நான் என்ன எதிர்பார்க்கிறேன்? இவன் என்னைப் பாராட்ட வேண்டும் என்றா? இவன் யார் என்னைப் பாராட்ட?’ என்ற எண்ணத்தோடு, சரேலென்று அவள் நிமிர்ந்து பார்க்க, அவன் கண்களோ குறும்பு மின்ன பல செய்திகள் கூறியது.

‘இவனுக்கு எப்பவும் விளையாட்டு தான். எப்பவும் கேலி தான். ஆனால், எனக்கு இவனைப் பிடித்துத் தொலைத்திருக்கிறது போல இருக்கே’ என்ற எண்ணத்தோடு,ஸ்ருதி தன்னை நிதானித்துக் கொண்டாள்.

“நானும் அதை தான் சொன்னேன். நீங்க என்ன நினைச்சீங்க?” அவன் குறும்பை அவன் பக்கமே திருப்பினாள் ஸ்ருதி.

ஆகாஷ் அவளை மெச்சுதலாக பார்த்து, “பிரில்லியண்ட்.” என்று சிலாகித்தான்.

ஸ்ருதி அவனை யோசனையாக பார்க்க, “உங்களை தான் சொன்னேன். இப்பவும், அப்பவும்.” என்றான்  புன்னகையோடு.

“உண்மையை ஒத்துக்கொண்டு தானே ஆக வேண்டும்.” என்று விளையாட்டு  போல் என்றாலும், தன் நிமிர்வை நிலை நிறுத்திக்கொண்டே, அவனை அமரும்படி செய்கை காட்டினாள்.

‘இவனிடம் பேசினால், பேச்சு வளர்ந்து கொண்டே போகும்.’ என்ற எண்ணம் தோன்ற, அவள் தொடர்ந்து வேலையைப் பற்றிப் பேசத் துவங்கினாள்.

அவளின் எண்ணம் புரிந்தவன் போல் அவளைப் பேசவிட்டு, பேச்சை வேலையின் பக்கம் திருப்பினான் ஆகாஷ்.

இருவரும், விபத்தின் பொழுது தகவல் அனுப்பும் கருவியைப் பற்றி தீவிரமாகப் பேச ஆரம்பித்தனர். அவர்கள் பேச்சில், அவர்கள் பொது அறிவு,  தொழில் நுட்ப அறிவு, சமுதாய அக்கறை என அனைத்தும் மேலோங்கி இருந்தது.

ஸ்ருதி, ஆகாஷின் திறமை கண்டு வியந்து மனதிற்குள் அவனை மெச்சிக் கொண்டிருந்தாள்.

பெண்களின் மேல் ஆகாஷிற்கு பெரும் மதிப்பு இருந்தாலும், ஸ்ருதியின் திறமை, அறிவு, அவள் ஆளுமை திறன், அதையும் தாண்டிய அவள் அழுத்தமான பிடிவாத குணம் என அனைத்தையும் பார்த்து மெய் சிலிர்த்துப் போனான்.

அப்பொழுது ஸ்ருதிக்கு அலைபேசியில் அழைப்பு வர, “ஒன் மினிட்.” என்று கூறிக்கொண்டு, அவள் விலகிச் சென்றாள்.

அவர்கள் ஸ்ருதியின் மடிக்கணினியில் ஏதோ டாக்குமெண்ட் பார்த்துக் கொண்டிருக்க, ஆகாஷ் அதைத் தொடர்ந்தான். அப்பொழுது அவன் அறியாமல், அவன் விரல்கள் பர்சனல் டாக்குமென்டில் பட்டுவிட, அங்கிருந்து இதய வடிவ பூக்கள் மலர ஆரம்பிக்க அதை ஆச்சரியமாகப் பார்த்தான் ஆகாஷ்.

பூக்களைத் தொடர்ந்து, அதில் ஒளிர்ந்தது சில வரிகள்.

“நான்!  நான்! நான்!  இலக்கணமும் இலக்கியமும்  பொய்யாகிப் போனதே…

ஏனோ ? ஏனோ?

தொலைந்தேன் நான்! உன் குறும்புப் பார்வையில்…

வீழ்ந்தேன் நான்! உன் மந்தகாச புன்னகையில்…”

இது தான் தொடக்கமோ? எங்கே செல்லும் இந்த பயணம்?

அந்த நொடி ஸ்தம்பித்து நின்றான் ஆகாஷ்.

‘முற்றுப் பெறாத கவிதை. அவளே அவள் மனதை முழுதாக அறிந்து கொள்ளவில்லை போல!’ என்று எண்ணிக்கொண்டு அதை மூடி விட்டான் ஆகாஷ்.

அதற்குள் ஸ்ருதி வந்துவிட, ஆகாஷ் எதையும் அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை.   ஆகாஷின் மனம் அந்த வரிகளையே சுற்றிக் கொண்டு வந்தது,   ‘தொலைந்தது அவளா? இல்லை நானா?’ என்ற கேள்வியோடு.

ஆகாஷ், மதிய வேளையில் வேலையை முடித்துவிட்டுக்  கிளம்பினான்.

வரிகளை பார்த்த நொடியில் சில முடிவுகள் எடுத்திருந்தான் ஆகாஷ்.

‘என்னை தேடி வருவ ஸ்ருதி.’ என்று அவன் அவளை அளவிட்டுக்கொண்டே, தலை அசைத்து விடை பெற்றான்.

மறுநாள், ஸ்ருதி அவனைத் தேடி வந்தாள். புயலாக நுழைந்தாள். அவனைக் கட்டிக்கொண்டு, அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

வேலையில் அவள் வேகத்தைக் கண்டு பிரமித்தவன், இன்று  காதலிலும் அவள் வேகத்தைக் கண்டு ஸ்தம்பித்து நின்றான்.

குறும்புகள் தொடரும்…

அன்பான வாசகர்களே,

காதலில் வெற்றி பெற்றாலும், இன்றைய சூழலில் நம் கலாச்சாரத்திலிருந்து விலகிச் செல்லும் காதலும், திருமண முறையும் நமக்கு வரமா? சாபமா?

 

 

 

error: Content is protected !!