kurumbuPaarvaiyile-16

குறும்பு பார்வையிலே – 16

ஸ்ருதி அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

‘திருமணத்துக்கு இன்னும் ஒரு மாசம், பத்து நாள் இருக்கு. இந்த ஒரு மாசமும், நான் தினமும் ஆகாஷோடு ஒர்க் பண்ணனுமா ? அது சரி படாது. இது ஒரு இன்னோவேஷன் ப்ரோஜெட் தானே. கல்யாணத்துக்கு அப்புறம் பண்ணிக்கலாம்.’ என்ற சிந்தனையோடு இருக்க, அவள் அலைபேசி ஒலித்தது.

“டாலி…” என்று ஆகாஷின் குரல் ஒலிக்க, “ம்…” என்றாள், அவன் அழைப்பை உள்வாங்கிக்கொண்டு, ‘கோபமா இருப்பாளோ?’ என்ற கேள்வி அவன் மனதில்.

தன் எண்ணங்களை ஒதுக்கி வைத்து விட்டு, “நம்ம ப்ரொஜெக்ட்டை, கல்யாணத்துக்கு அப்புறம் பண்ணுவோமா?” என்று அவன் தயக்கத்தோடு கேட்க, “தேங்க்ஸ் ஆகாஷ். நானும் அதையே தான் நினச்சேன்.” என்று சற்று கவலை நீங்கினார் போல் கூறினாள்.

அவள் குரலில் தெரிந்த நிம்மதியில், ‘என்னைத் தினமும் பார்க்காமல் இருப்பதில் இத்தனை நிம்மதியா?’ என்ற கேள்வி எழுந்தாலும், அவன் எதுவும் கேட்கவில்லை.

‘இது நானா?’ என்ற கேள்வி அவனுள். மேலே என்ன பேசுவது என்று தெரியாமல், அவள் தடுமாற, ‘இது நான் தானா?’ என்று கேள்வி அவளுள்ளும்.

அங்கு நொடிகள் மௌனமாக கடக்க, “வச்சரட்டுமா?” என்று குரல் கம்ம கேட்டாள் ஸ்ருதி.

“ம்…” என்றான் அவன். தொடரவும் மனமில்லாமல், வைக்கவும் மனமில்லாமல் அவள் தடுமாற, “டாலி…” என்ற அவனது அழைப்பு, அவளை நிதானிக்கச் செய்தது.

‘நடந்தது தப்பு தான். ஆனால், இருவரும் அதைக் கடந்து தானே ஆக வேண்டும். எத்தனை நாள் அதைப் பிடித்துக் கொண்டு தொங்குவது?’ என்ற கேள்வி அவனுள் எழுந்தது.

“போட்டோஸ் நம்ம கிட்ட மேரேஜ் அப்ப தான் காட்டுவாங்க போல. சைடுல இருக்கிற டிஸ்பிலேல தெரியும் போல.” என்று ஏதோ ஒன்று பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசினான்.

“ம்…” கொட்டிக்கொண்டாள் ஸ்ருதி.

“எதையும் யோசிக்காத.” விஷயத்துக்கு வந்தான் அவன்.

“நல்லா சாப்பிடு.” என்று சற்று அவளை அரவணைக்கும் விதமாகப் பேசினான். புன்னகைத்துக் கொண்டாள் ஸ்ருதி.

“டாலி… சிரிக்குற தானே?” என்று அவன் குரலில் சற்று கேலி எழ ஆரம்பித்தது.

“உங்க கிட்ட பேசும் பொழுது சிரிக்காம எப்படி?” என்று அவனுக்கு இசைந்தே அவளும் பேசினாள்.

இப்பொழுது அவனும் புன்னகைத்துக்  கொண்டான்.  “சரி… நான் தினமும் பேசுறேன்.” என்று கூறிக்கொண்டு மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டான்.

அவன் சிந்தனை அவளையே சுற்றியது.  ‘இசைவாள். எனக்காக, எனக்காக எல்லா விஷயத்திலும் இசைவாள். ஆனால், நான் அவள் நம்பிக்கையை காப்பாற்றவில்லை.’ என்ற எண்ணம் தோன்ற, மனம் வருந்தி அவன் கண்களில் இரு துளி கண்ணீர்.

நாட்கள், அதன் போக்கில் நகர்ந்தது.  இருவரும் பேசினார்கள். அன்றைய விஷயத்தைப் பற்றி இருவரும் பேசவில்லை.

நடந்ததை மறுத்தார்களோ? இல்லை மறந்தார்களோ? இல்லை மறைக்க நினைத்தார்களோ? அவர்களுக்கே  வெளிச்சம்.

அனைவரும் கல்யாண வேலையில் மூழ்கியிருக்க, ஆகாஷ், ஸ்ருதி அலுவலக வேலையில் மூழ்கி இருந்தனர்.

அன்று பிப்ரவரி பதினான்கு. காலையில் அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தாள். ஸ்ருதியின் மனதிலும் ஆயிரம் எண்ணங்கள். ஆயிரம் ஆசைகள். ஆனால், ஏதோ ஒன்று அவளை தடுக்க, அவள் அலுவலகம் நோக்கி பயணித்து கொண்டிருந்தாள்.

அவள் சென்று கொண்டிருந்த சாலையில் அத்தனை கூட்டம் இல்லை. ட்ராபிக் போலீஸ் அவள் வண்டியை மடக்க, வண்டியை ஓரங்கட்டிவிட்டு வண்டியிலிருந்து இறங்கினாள் சற்று சலிப்போடு.

போக்குவரத்து காவல் துறையினர், ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தனர்.

‘எல்லா டாக்குமெண்ட்ஸும் இருக்கு. நம்மளை எதுக்கு மடக்கணும்?’ என்ற எண்ணத்தோடு அவள் போக்குவரத்து காவல் துறையினரை நோக்கி நடந்து சென்றாள்.

ஸ்ருதியிடம் அவர்கள் அனைத்து கோப்புகளையும் சரிபார்த்துவிட்டு, அவளிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்ப, ஒன்றும் புரியாமல் அவள் முதலில் அமைதி காத்தாள்.

பின் அவர்களிடம் ஸ்ருதி சட்டம் பேச, அங்கு வாக்குவாதம் முற்ற, இதற்கு மேல் தாங்காது என்பது போல் மரத்தின் மேலிருந்து வெள்ளை பூக்கள் மழையாகப் பொழிந்தது.

ஸ்ருதி அண்ணாந்து பார்க்க, பூக்கள் சில நிமிடங்கள் பொழிந்து கொண்டே இருந்தது.

பூ மழை  பொழிந்து, ஸ்ருதி   தன்னை  நிதானிப்பதற்குள் அந்த போக்குவரத்து காவல் துறையினர் மாயமாக மறைந்திருந்தனர்.

ஆனால், அவள் எதிரே இரு கைகளையும் விரித்துக்கொண்டு கையில் சிவப்பு ரோஜா கொத்தோடும், சாக்லேட் பொக்கேவோடும் நின்று கொண்டிருந்தான் ஆகாஷ்.

“குறும்பா…” என்று முனங்கிகொண்டு, இத்தனை நாள் அவனை பார்க்காத வேகத்தில் அவன் மார்பில் சரண் புகுந்தாள் ஸ்ருதி.

“உங்க வேலை தானா?” என்று சட்டென்று விலகி கொண்டு கேட்டாள்.

மேலும் கீழும் தலை செய்தபடி, “ஹாப்பி வாலெண்டைன்ஸ் டே டாலி.” என்று அவன் கண்களில் காதல் வழிய கூற, ஸ்ருதி புன்னகைத்துக் கொண்டாள்.

“நம்ம ஆளுங்க தான். சாவியை அவங்க கிட்ட குடுத்திரு. நாம ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு அப்புறம் ஆபீஸ் போவோம்.” என்று அவன் கூற, தலை அசைத்து அவனோடு சென்றாள் ஸ்ருதி.

இருவரும் மேஜையில் எதிரெதிரே அமரந்தனர்.

“கோபமா டாலி?” அவன் வார்த்தைகள் ஒரு முடிவோடு வந்து விழுந்தது.

ஸ்ருதி அவனை பதட்டத்தோடு பார்த்தாள். மறுப்பாகத் தலை அசைத்தாள்.

“ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் நீ என்னை குறும்பான்னு கூப்பிட்டுருக்க.” ஏக்கத்தோடு ஒலித்தது அவன் குரல்.

“இன்னைக்கு தான் நீங்க குறும்பா இருந்துருக்கீங்களோ?” சந்தேகமாகக் கேட்டாள்.

“இல்லை இன்னைக்கு தான் உன் கோபம் குறைஞ்சிருக்குன்னு நினைக்குறேன்.” அவன் கூற, “இப்ப எதுக்கு இந்த பேச்சு?” என்று கேட்டாள் ஸ்ருதி.

“நான் ரெண்டு நாளில் ஜெர்மனி போறேன். ரோபோடிக்ஸ் சம்பந்தமா ஆஃபிஸில் மீட்டிங்.” என்று அவன் கூற, “ஓ…” அவள் குரல் இறங்கியது.

அவள் கைகளை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டான்.

“நான் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி தான் வருவேன். உன் கிட்ட நேரில் பேசணுமுன்னு நினச்சேன்.” என்று கூறிக்கொண்டு, “கோபமா?” என்று பழைய இடத்தில் நின்றான் ஆகாஷ்.

“கோபப்பட என்ன இருக்கு? தப்பெல்லாம் என் பேரில் வச்சிக்கிட்டு?” என்று முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் கேட்டாள் ஸ்ருதி.

“அது எப்படி தப்பு உன் பெயரில்ன்னு சொல்ல முடியும்? நான் தான்.” என்று அவன் கூற, அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“நடந்தவை ஒரு நிகழ்வு, அப்படினா அது இரண்டு பேருக்கும் பொருந்தும். தப்புனா அதில் இரண்டு பேருக்கும் பங்கு இருக்கு.” அழுத்தமாகக் கூறினான் ஆகாஷ்.

ஸ்ருதி எதுவும் பேசவில்லை. அவனை உணர்ச்சி துடைத்த முகத்தோடு பார்த்தாள்.

“கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;” என்ற பாரதியரின் வரியை அவன் கூற,   ‘ஆகாஷ் மீண்டுவிட்டான். நான் தான் இன்னும் குழப்பிக் கொண்டு இருக்கிறேனோ?’ என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது.

‘இவளை எப்படிச் சரி செய்ய?’ என்ற எண்ணத்தோடு, “கல்யாணத்துக்கு முன்னாடி ஜாலியா பொண்ணுகளை சைட் அடிக்க தான் ஜெர்மனி போறேன்.” என்று அவன் விளையாட்டாகக் கூற, “இதுக்கு குறும்பான்னு கூப்பிட மாட்டேன். என் ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கும்.” என்று அவள் கூற, “வெயிட்டிங் டாலி.” என்று அவன் பெருங்குரலில் சிரித்தான்.

சிரித்துக் கொண்டே அவன் அவளிடம் ஒரு பரிசை நீட்டினான். அவள் அதைத் திறக்க, அங்கு வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட இதயம் இருக்க, அதை ஆர்வமாக கையில் எடுத்தாள்.

“என் இதயம் டாலி.” அவன் உணர்ந்து கூறினான். அவள் தலை அசைத்துக்கொண்டாள்.

“திற!” அவன் குரல் கட்டளையாக ஒலித்தது.

‘எப்படி?’ என்பது போல் அவள் அவனைப் பார்க்க, “உனக்கு தெரியும்.” என்று கூறி அவன் கண்ணடித்தான்.

“குறும்பா!” அவள் வெட்கப்பட, அந்த இதயம் திறந்து கொண்டது.
‘குறும்பா.’ என்று ஸ்ருதி அழைத்தால், திறப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த இதயம். அவளால் மட்டுமே அவன் மனக்கதவை திறக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லி இருந்தான் ஆகாஷ்.

“லவ் யு டாலி. லவ் யு சோ மச்… என் உயிர் உள்ள வரை என் காதலும் இருக்கும்.” என்று ஆகாஷின் குரல் மெல்லிய இசையின் பின்னணியோடு ஒலித்தது.

உணர்ச்சி பெருக்கில், ஸ்ருதியின் கண்கள் காதலை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. “லவ் யு சோ மச்…” என்று கூறினாள் ஸ்ருதி.

“இதை கேட்க, நான் என்னவெல்லாம் பண்ண வேண்டியது இருக்கு.” அவன் கேலி பேச, அவளும் ஒரு பரிசுப் பொருளை நீட்டினாள்.

“உங்களை இன்னைக்கு பார்ப்போமுன்னு என் உள் மனசு சொல்லுச்சு.” என்று அவள் கூற, “ஹே…” என்று சத்தம் செய்து கொண்டு அவன் அதைத் திறக்க முற்பட, “இதை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தான் பிரிக்கணும்.” அவள் கட்டளையிட, “என்னை பத்தி தெரிஞ்சுமா இப்படி சொல்ற?” என்று அவன் கேலி பேசினான்.

“தெரிஞ்சதால் தான் சொல்றேன். நான் சொன்ன நீங்க கேட்பீங்க.” என்று அவள் கூற, அவன் கேட்டுக்கொண்டான்.

பல சமாதானங்கள், பல தைரியமூட்டும் வார்த்தைகள் என சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவன் ஜெர்மனி கிளம்புமுன் பார்க்கும் சந்தர்ப்பம் அமையுமா என்று தெரியவில்லை என்று கூறிக்கொண்டு அவளை அலுவலகத்தில் இறக்கிவிட்டுவிட்டுக் கிளம்பினான் ஆகாஷ்.

ஆகாஷ் ஜெர்மனிக்கு பயணித்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. இன்னும் இரண்டு  வாரத்தில் கல்யாணம். ஒரு வாரத்தில் ஆகாஷ் வந்துவிடுவான். தினமும் ஆகாஷும், ஸ்ருதியும் அலைபேசி வழியாக பேசி கொள்கிறார்கள். திருமணத்தின் நாள் நெருங்க, நெருங்க ஆகாஷின் கேலியும், சந்தோஷமும் கூடிக்கொண்டு தான் இருந்தது.

ஸ்ருதி சற்று சோர்வாக கட்சி அளித்தாள். அவளுக்கு சில சந்தேகங்கள், யாரிடம் கேட்பது என்று தான் தெரியவில்லை. சாப்பிட்டால் பிரட்டிக்கொண்டு வந்தது. வீட்டில் சாப்பிடுவதை தவிர்த்து விட்டாள். வேலை வேலை என்று தன்னை அலுவலகத்திலே புதைத்துக் கொண்டாள்.

சந்தேகத்தை நிவர்த்தி பண்ண வேண்டும் என்று அவள் அறிவு கூறினாலும், அவள் மனம் அதை எதிர்கொள்ள அஞ்சியது.  யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

அகாஷிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. அவளுக்கே உறுதியாக தெரியாததை, அவள் எப்படி ஆகாஷிடம் பகிர்ந்து கொள்ளுவாள்.

அன்று நகை எடுப்பதாகவும், சேலை எடுப்பதற்காகவும் ஆகாஷ் வீட்டினர் ஸ்ருதியையும், அவள் வீட்டினரையும் அழைத்திருந்தனர்.

அனைவரும் நகை எடுக்க, அங்கு கடையில் இவர்களுக்கு ஜூஸ் கொடுக்க, ஸ்ருதிக்கு பிரட்டிக்குக் கொண்டு வந்தது.

“ஸ்ருதி உடம்புக்கு என்ன?” என்று கம்பீரமாகக் கேட்டார் சுமதி.

“ஒண்ணுமில்லை அத்தை நைட் வேலை. தூங்கலை.” என்று சமாளித்தாள் ஸ்ருதி.

“அது தான் கல்யாணம் வரைக்கும் ரெஸ்ட் எடு. ரொம்ப பிரஷர் பண்ணிக்காதான்னு சொன்னேன்.” என்று பார்வதி கடிந்து கொள்ள, ஸ்ருதி மௌனமாக நின்றாள்.

கூட்டத்தில் இருந்து ஸ்ருதி சற்று விலகி நிற்க, அவளுக்கு மேலும் தலை சுற்ற அவள் மயங்கிச் சரிந்தாள். நேரமோ, விதியின் விளையாட்டோ தாங்கி பிடிக்க ஆகாஷ் அருகில் இல்லை.

குறும்புகள் தொடரும்…

error: Content is protected !!