En Jeevan 1

என் ஜீவன் நீயடி…!

சென்னை… உமையவள் மயிலாக வந்து இறைவனை வழிபட்டமையால் மயிலை என்றழைக்கப்பெறும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள் ஆலயம்… நித்தமும் ஆறுகால பூசைகள் தவறாமல் நடைபெற, பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வீற்றிருக்கும் கபாலீஸ்வரரை கண்கொட்டாமல் பார்த்தபடி நின்றிருந்தான் அவன் அர்ஜுன். பின்னணியில் திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் ஒலித்தபடி இருந்தது.
திடத்துமனமும் பொறுமையும் திறமையும் தரும்

சிந்தனையும் அதி நுட்பமும்

தீனர்கள் இடத்தில் விசுவாசமும் என்றும் அவர்

தீப்பசி தணிக்க நினைவும்

கடக்க அரிதான ஜனன கடல் கடந்து

கதிகாண மெய்ஞ்ஞான மோனக்

கப்பலும் தந்துதவி செய்து ரக்ஷித்து

கடைத்தேற அருள் புரிகுவாய்

விடக்கடு மிடற்றினன் இடத்தில் வளர் அமுதமே

விரிபொழில் திருமயிலை வாழ்

விரைமலர்க்குழல் வல்லி மரை மலர்ப்பதவல்லி

விமலி கற்பக வல்லியே
பூஜைக்கான ஏற்பாடுகளை முடித்த சிவாச்சாரியார் அர்ஜுனின் அருகே நின்றிருந்த அவனது பெரிய தாயார் சரஸ்வதியிடம் வந்து,

“அம்மா… பூஜையை ஆரம்பிச்சிடலாமா?” என்க… சற்று வேதனை சுமந்த விழிகளுடன் அர்ஜுனை ஏறெடுத்துப் பார்த்தவர், “ஆரம்பிச்சிடுங்க சாமி” எனவும் கருவறைக்குள் நுழைந்து சிவாச்சாரியார் மிகுந்த பயபக்தியுடன் அந்த ஈசனுக்கு குறைவில்லாமல் பூஜைகளை செய்யத் துவங்கினார்.
கண்கொட்டாமல் சிவனைப் பார்த்தபடி நின்றிருந்தவனின் சிந்தை பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தது. யாருடைய பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்பது மெத்தப் படித்த அவனுக்கு நன்கு தெரியும். இறைவனடி சேர விரும்பும் உயிரைப் பிடித்து வைக்க முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும்.

இருப்பினும் நம் உயிருக்கு நிகரான பாசத்தை வைத்திருக்கும் ஜீவனின் இறுதிக்காலங்களில் உடனிருப்பது கொடுமை. பாசம் வைத்த ஜீவன் படும் அவஸ்தைகளைக் கண்கொண்டு பார்க்கவும் முடிவதில்லை. அவருடைய வேதனையை தாம் வாங்கிக் கொள்ள முடியும் என்றால் உடனடியாக அதைச் செய்திருப்பான்.

அவனது பாட்டி அலர்மேல்மங்கை மீது அவ்வளவு பிரியம் அவனுக்கு. தாய் தந்தையின் முகம் கூட அவனுக்கு நிழலாகத்தான் நினைவிருக்கிறது. ஏழு வயது சிறுவனாக இருக்கும் போது விபத்து ஒன்றில் மரணமடைந்தவர்கள் என்பதைத் தாண்டி வேறு எதுவும் அவனுக்குப் பெரிதாக நினைவு இல்லை.

மெல்லிய கண்ணாடி வளையல்கள் நிறைய அணிந்திருந்த வளைக்கரங்கள் அவனுக்கு உணவூட்டிய காட்சி சில நேரங்களில் நினைவுக்கு வரும். இன்னமும் ஆழமாக யோசனை செய்து பார்த்தால் மஞ்சள் பூசிய கன்னங்களும் அதனை மெலிதாக உரசிச் செல்லும் ஜிமிக்கியும் நினைவிருக்கிறது.

மஞ்சள் மணக்கும் தாலிச்சரடு புரண்ட கழுத்தில் தலைசாய்த்து உறங்கிய நினைவுகளின் எச்சம் அடிமனதில் இருக்கிறது. இறுக மூடிக்கிடக்கும் ரோஸ்நிற பிஞ்சு விரல்களை விரித்து அதனுள் தன் விரலை நுழைத்து விளையாடிய நினைவுகள் இருக்கிறது.

ஆனால் தந்தையின் முகம் தாயின் முகம் ஃபோட்டோவில் பார்த்ததுதானே ஒழிய அவர்களுடன் இருந்த நாட்கள் ஒன்றுகூட நினைவில் இல்லை. அந்த வளையணிந்த கரங்கள் தாயுடையதுதானா என்ற சந்தேகம் கூட இருக்கிறது. வெளேரென்று புகைப்படத்தில் பார்த்த தாய்க்கும், தான் சாய்ந்து உறங்கிய மஞ்சள் மணத்த மாநிறக் கழுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகத் தோன்றும் அவனுக்கு.

ஏழு வயது சிறுவனுக்கு இதெல்லாம் நினைவில் லேசாகவாவது இருந்திருக்க வேண்டும். மூன்று நான்கு வயதில் நிகழ்ந்த நிகழ்வுகளே மற்றவர்களுக்கு நினைவிருக்கையில் தனக்கு ஏன் இவையெல்லாம் நினைவில் இல்லை என்ற குழப்பம் அவனுக்குள் உண்டு. ஆனால் அதை யாரிடமும் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை.

தாய் தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் அவனை வளர்த்தவர் அவனது பாட்டி அலர்மேல்மங்கை. சிறுவயதில் இருந்து அவன் எதற்குமே ஏங்காதவாறு மகள் வயிற்றுப் பேரனான அவனைக் கண்ணுக்குள் பொத்தி வைத்து வளர்த்திருந்தார்.

அவன் ஆசைப்பட்டது எதுவாக இருந்தாலும் அவன் வாய்விட்டு கேட்கும்முன் அவனிடம் இருக்கும். அதேசமயம் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கண்டிப்பும் அவனுக்கு இருக்கும். எந்த அளவுக்கு அவன்மேல் பாசமாக இருப்பாரோ அதே அளவுக்கு கண்டிப்பும் காட்டுவார்.

அவனும் தன் பாட்டியின் சொல்லை எதற்கும் மீறியதே இல்லை. பாட்டியின் சொல்தான் வேதம் அவனுக்கு. சிறுவனாக இருந்த போதிலிருந்து பாட்டி போதித்த சில நன்னெறிகள் அவனுடைய இரத்தத்தில் கலந்தவை.

கல்லூரி இளைஞனாக துள்ளித் திரியும் பருவத்திலும் எந்த சீர்கேடான பழக்கங்களிலும் அவன் மனம் நாடிச் செல்லாததற்குக் காரணம் அவனது பாட்டியின் போதனைகளே. இந்த முப்பது வயதிலும் பாட்டியின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அவர் சொல்வதைக் கேட்டு நடக்கும்படி அவனை வளர்த்திருந்தார்.

அர்ஜுனுக்கு தாய் தந்தை ஆசான் பாதுகாவலன் என அனைத்து விதமாகவும் உடனிருந்த பாட்டி கடந்த ஒரு வாரமாக படுத்தபடுக்கையாக கிடப்பது மனதளவில் வெகுவாக பாதித்திருந்தது அவனை.

அவர் மீண்டு வருவது சிரமம். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கின்றன என்று டாக்டர்கள் கூறவும் வெகுவாக உடைந்து போனான்.

தனது பாட்டிக்கு சிறு வயது இல்லை என்று அவனுக்கும் தெரியும். எழுபது வயது மூதாட்டிக்கு உண்டான இயல்பான உடல் உபாதைகள் அவருக்கு இருப்பதும் அவனுக்குத் தெரியும்.

இருப்பினும் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து பாட்டி எழுந்துவிட மாட்டார்களா என்ற எண்ணத்திலே ஒரு வாரமாக சென்னையில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அபிஷேகம் ஆராதனை அனைத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தான்.

கிணிகிணியென்று ஒலித்த மணியோசையில் தன்னுணர்வு பெற்றவன் எதிரே ஜோதிஸ்வரூபமாகத் தெரிந்த அடிமுடி காணமுடியாத ஈசனைக் கண்ணாறக் கண்டு தனது பாட்டிக்காக வேண்டுதலை முடித்து வெளியே வந்தான்.

ஆறு அடி உயரத்தில் உயரத்துக்கேற்ற உடற்கட்டோடு, சுண்டினால் ரத்தம் வரும் அளவு சிவந்த நிறத்துடன் இருந்தான் அர்ஜுன். அலையலையான கேசம் ஜெல் தடவி படிய வாரப்பட்டிருக்க, தீட்சண்யமான கண்களும் கத்தி போன்ற நேரான நாசியும், கத்தையான மீசையும், இரண்டு மூன்று நாட்கள் ஷேவ் செய்யாத தாடியும் பேரழகனாகக் காட்டியது அவனை.

தூய வெண்பட்டு இடையில் அணிந்து மேலே சட்டை போடாமல் அங்கவஸ்திரம் கொண்டு போர்த்தியபடி கருவறையை விட்டு வெளியே வந்தவனை மொய்த்தன பல கண்கள். ஆண்களே பொறாமைப்படும் அளவுக்குப் பேரழகனாக இருந்தவனை பெண்களின் கண்கள் விட்டுவைக்குமா என்ன?

சுற்றுப்புறத்தைச் சட்டை செய்யாது, பிரகாரத்தை வலம் வந்தவன், நேராக அன்னதானம் நடக்கும் மண்டபம் நோக்கிச் சென்றான்.

அன்னதானம் செய்வதற்குண்டான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்துக் கொண்டிருந்தான் அர்ஜுனின் வலது கை, கம்பெனியின் ஜிஎம், உயிர் நண்பன், உடன்பிறவா சகோதரன் என்ற அனைத்து அடைமொழிகளுக்குச் சொந்தக்காரனான ஸ்ரீராம்.

குணத்திலும் அழகிலும் சாட்சாத் அந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பிம்பமாக இருப்பவன் தனக்கேற்ற சீதையை தேடும் பணியை பெற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு சீதை வரும் நாளுக்காக காத்திருக்கிறான்.

ஸ்ரீராமும் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவன்தான். அவனது தந்தை மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அன்னை இல்லத்தரசி. ஒரு தமக்கை திருமணமாகி மும்பையில் இருக்கிறார்.

அர்ஜுனுடன் சிறுவயதில் இருந்தே ஒன்றாக ஒரே வகுப்பில் படித்து, கல்லூரிப் படிப்பையும் நண்பர்கள் இருவரும் இணைபிரியாமல் முடித்திருந்தனர். கல்லூரி படிப்பை முடித்ததும் அர்ஜுன் தனது தொழில்களை கையில் எடுக்கும் போது ஸ்ரீராமையும் உடனழைத்துக் கொண்டான். தனக்கு அடுத்த அளவுக்கு உயரிய பதவி கொடுத்து தன்னுடனே வைத்துக் கொண்டான்.

ஸ்ரீராமின் தந்தைக்குச் சொந்தமாக சென்னையின் மையப் பகுதியில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் மூன்று இருக்க அதையும் நிர்வகித்து வருகிறான் ஸ்ரீராம். அர்ஜுன் எள் எனும் முன் எண்ணெயாக நிற்கும் ஸ்ரீராமை அலர்மேல்மங்கைக்கும் மிகவும் பிடிக்கும். மேலும் அர்ஜுனின் நலனை வெகுவாக பேணுபவன் என்பதால் மங்கைக்கு ஸ்ரீராம் மீது மிகுந்த நம்பிக்கையும் உண்டு.

அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை கவனித்துவிட்டு அர்ஜுன் அருகே வந்த ஸ்ரீராம்,

“அர்ஜுன் முதல்ல கொஞ்சம் பேருக்கு உன் கையால அன்னதானம் குடுத்துட்டு நீ ஹாஸ்பிடல் கிளம்புடா. மீதிய நான் இங்க இருந்து பார்த்துக்கறேன்.”

“ம்ம்ம்… ஓகே ஸ்ரீ… இன்னைக்கு முக்கியமான மீட்டிங் ஏதாவது இருக்கா?”

“இருக்கு அர்ஜுன். நம்ம கம்பெனி பீனட் பட்டர் யூனிட்டுக்கு மெஷினரீஸ் சப்ளை பண்ற விஷயமா பேச ஜெர்மன்ல இருந்து டெலிகேட்ஸ் வந்திருக்காங்க. அவங்களோடப் பேசி ஒப்பந்தம் ஒன்னு கையெழுத்தாகனும். இது மட்டும் நீதான் செய்யனும். மீதிய நான் பார்த்துக்கறேன்.”

“எத்தனை மணிக்கு அப்பாயிண்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிருக்கு ஸ்ரீ. பாட்டிக்கூட காலையில கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வரேன்டா. பாட்டி கொஞ்சம் ரெகவர் ஆகற வரை எனக்குத் தொந்தரவு இல்லாம பார்த்துக்கோ ஸ்ரீ.”

“ஷ்யூர் அர்ஜுன்… நீ இதைச் சொல்லனுமா? நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன். நீ காலையில முழுக்க பாட்டிகூட இரு. மதியம் ஒரு மணிக்கு ஹோட்டல் சவேரால அவங்களுக்கு லஞ்ச் அரேஞ்ச் பண்ணிருக்கோம். நீ அவங்களோட ஜாயின் பண்ணிட்டு அப்படியே அந்த காண்ட்ராக்ட்ட பேசி முடிச்சிடு.”

நண்பர்கள் பேசிக் கொண்டிருக்க, சரஸ்வதி அன்னதானத்தைத் துவக்கி வைக்க அர்ஜுனை அழைக்கவும், அவன் சென்று அவனது கரத்தால் முதலில் சிலருக்கு உணவை வழங்கிவிட்டு மீதியை ஸ்ரீராமிடமும் சரஸ்வதியிடமும் ஒப்படைத்துவிட்டு பாட்டியைக் காண அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.

சென்னையின் பிரதான சாலையில் அந்த அதிகாலையில் ட்ராபிக் அவ்வளவாக இல்லாததால் அந்த வெளிநாட்டுக்கார் வெண்ணையாக வழுக்கியது. மௌனமாக முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அர்ஜூனின் மனமெங்கும் பாட்டியின் நினைவுகள்.
ஏழு வயதில் தாய் தந்தையை இழந்து நின்றதில் இருந்து இன்று வரை அவன் மீது எல்லையில்லாத பாசம் வைத்த ஜீவனின் பிரியத்தை எண்ணிக் கொண்டான்.

தன் நிழலைக்கூட நம்பாமல், தள்ளாத வயதிலும் சென்ற வாரம் வரை என்னை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டவரை, இழந்து விடுவோமோ என்று எண்ணும் போதே கண்களோரம் கசிந்தது.

யாருமற்ற அநாதரவாக இருப்பது போல எண்ணங்கள் அலைமோதின… துயரத்தின் பிடியில் சிக்கி இருந்தவனுக்கு தன் மனதை நிறைத்த தேவதையிடம் பேசினால் சற்று பாரம் குறையும் என்று தோன்ற, உடனடியாக தன் ஆசை மாமன் மகள் ஸ்வேதாவுக்கு அழைத்தான்.

அலர்மேல்மங்கையின் மகன் மணிவாசகத்தின் மகள்தான் ஸ்வேதா. புகழ்பெற்ற கல்லூரியில் ஃபாஷன் டிசைனிங்கில் முதுநிலைப் பட்டமேற்படிப்பை முடித்தவள், விடுமுறையில் தனது பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்தாள்.
ஸ்வேதா சிறந்த அழகி. பால் போன்ற வெளுத்த சருமமும், நல்ல வனப்பான உடல்வாகும் உடையவள். மாதம் இருமுறை பார்லருக்குச் சென்று அவளது அழகைப் பராமரிப்பதில் அவளை ஒருமுறையேனும் திரும்பிப் பார்க்காமல் செல்வதில்லை அவளைக் கடந்து செல்பவர்கள்.

அர்ஜுனுக்கும் அவளது அழகின் மீது மயக்கம் உண்டு. இத்தகைய பேரழகியைத் திருமணம் செய்யும் உரிமையும் தனக்கு உண்டு என்பதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு அவனுக்கு.

மறுமுனையில் அழைப்பு எடுக்கப்படாமல் போக, மீண்டும் முயற்சித்தவனின் காதில் விழுந்த தூக்கக் கலக்கத்துடன்கூடிய ஹலோ அவனைப் பரவசப்படுத்தியது. சன்னச் சிரிப்புடன் மணியைப் பார்த்துக் கொண்டவன்,

“ஓய்… தூங்குமூஞ்சி மணி ஒன்பதாகப் போகுது. இன்னும் பெட்ட விட்டு எழும்பலையா?”

“இவ்வளவு காலையில ஏன் மாமா ஃபோன் போடுற?” தூக்கம் கலையாத சினுங்கல் வெளிப்பட்டது அவளிடம் இருந்து.

“பாட்டிக்கு நேத்துல இருந்து ரொம்ப முடியலைடா. மனசே கஷ்டமா இருக்கு. அதான் உன்கிட்ட பேசினால் கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவேன்னுதான் ஃபோன் போட்டேன். டிஸ்டர்ப்பா இருந்தா வச்சிடறேன்.”

“இல்லல்ல… அதான் எழுப்பிட்டியே… பேசு. பாட்டிக்கு இப்ப எப்படி இருக்கு. நாங்க டூரைக் கேன்சல் பண்ணிட்டு ஊருக்கு வரோம்னு சொன்னதுக்கும் ஒத்துக்கலை நீ. இன்னும் ரெண்டு நாள்தான் ஊருக்கு வந்துடுவோம்.”
ஆல் இந்தியா டூர் போக வேண்டுமென்று ஸ்வேதா ஆசைப்பட, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவளது பெற்றோருடன் அனுப்பி வைத்திருந்தான்.

பாட்டியின் உடல்நிலை சீர்கெடவும் ஊருக்குத் திரும்பி வந்துவிடுகிறோம் என்று கூறியிருந்தாள் ஸ்வேதா.

ஆனாலும் அவளது குரலில் இருந்த ஏக்கத்தை உணர்ந்து கொண்டவன். டூரைக் கேன்சல் செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தான். ஆகவே அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு பதினைந்து நாட்கள் சுற்றுலாவை முடித்துவிட்டு ஊர்திரும்ப ஆயத்தங்களை செய்திருந்தனர்.

“ம்ம்ம்… டாக்டர் ஒன்னும் நம்பிக்கையா சொல்ல மாட்டேங்குறாங்க. வயசாகுதில்லையா? அந்த வயதுக்குரிய தளர்ச்சி வேற இருக்கு. பார்க்கலாம். கடவுள் மேல பாரத்தைப் போட வேண்டியதுதான்.
சரி உன்னை வேற தொந்தரவு செய்துட்டேன். நீ டூரை என்ஜாய் பண்ணிட்டு வா. நான் இங்க பாட்டியை பார்த்துக்கறேன்.” அழைப்பைத் துண்டித்தவனுக்குள் சற்று நெருடலும் இருந்ததுதான்.

என்னதான் தான் டூரைத் தொடரச் சொன்னாலும் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்றதும் மாமாவுக்குக்கூட உடனே தனது தாயைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையா?

ஸ்வேதா சிறுபெண். அவளை எந்த குற்றமும் சொல்ல முடியாது. இந்த மாமாவும் அத்தையும் ஒரு பேச்சுக்குக்கூட உடனடியாக வருகிறோம் என்று கூறவில்லையே… என்று எண்ணிக்கொண்டான்.

ஆனால் இவர்கள் இப்படி பற்றற்று இருப்பதற்கும் தனது பாட்டிதான் காரணம் என்றும் உறுதியாக நம்பினான். அலர்மேல்மங்கை அர்ஜுனுடைய தந்தையின் தூரத்து உறவான சரஸ்வதி பெரியம்மாவை நம்புமளவுக்குக் கூட தனது சொந்த மகனான மணிவாசகத்தை நம்புவதில்லை. சற்று தள்ளியே நிறுத்தி விடுவார்.

தனது இருபத்து நான்காம் வயதில் தொழில் பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்த போது, மாமாவையும் உடன் வைத்துக்கொள்ள விரும்பிக் கேட்டபோது பிடிவாதமாக மறுத்து விட்டவரை வியப்போடு எண்ணிக் கொண்டான். வீட்டு நிர்வாகமும் சரஸ்வதி பெரியம்மாதான் கவனித்துக் கொள்வது.

மாமாவும் அத்தையும் தங்களுடன் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தாலும் எந்த வித அதிகாரமும் அவர்களுக்கு இல்லாதபடி அனைத்தையும் பார்த்துக் கொண்டவர் அலர்மேல்மங்கை. அதற்கு என்ன காரணம் என்று இதுவரை கேட்டும் அவர் சொன்னதில்லை.

தன் மீது உயிரையே வைத்திருக்கும் பாட்டிதான் தன்னுடைய காதலுக்கு முதல் எதிரி என்பதையும் வேதனையோடு நினைத்துக்கொண்டான். அவர் சொன்ன எந்தப் பெண்ணையும் மணமுடிக்க அவன் தயாராயில்லை. அவனுக்குப் பிடித்த ஸ்வேதாவை அவனுக்கு மணமுடித்து வைக்க அலர்மேல்மங்கை இதுவரை ஒப்புக்கொள்ளவும் இல்லை.

ஆனால் அவரது சம்மதம் இல்லாமல் எதையும் செய்யவும் அவனால் முடிவதில்லை. தன்னுடைய நலனைத் தவிர வேறெதையும் அவர் நினைப்பதில்லை என்று அவனுக்கு உறுதியாகத் தெரியும்.

மணிவாசகம் சற்று சுயநலம் மிக்கவர்தான். ஆனால் அதற்காக ஒன்றும் அறியாத ஸ்வேதாவை மறுப்பது ஏன் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.

எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் விஷப் பாம்பின் குட்டியும் ஒரு விஷமுள்ள பாம்புதான் என்பதை அவனுக்கு காலம்தான் புரியவைக்க வேண்டும். ஆனால்…

வயதும் அனுபவமும் மிக்க மங்கைக்கு அது நன்றாகவே புரிந்து இருந்தது.
கார் அந்தப் பெரிய மருத்துவமனையின் உள்ளே நுழைந்தது. ஏதோ பெரிய பூங்காவினுள் நுழைந்தது போல புல்வெளிகளும் பல வகை வண்ண மலர்களும் காட்சியளித்தது.

நோயின் வேதனையோடு வருபவர்களுக்கும். நோயாளியின் கஷ்டத்தைக் கண்டு மனம் வருந்தும் உறவினர்களுக்கும் மன அமைதியைத்தரவே இப்படி பூங்காக்கள் அமைக்கப் பட்டிருந்தன.

துளிக் குப்பையில்லாமல் காரோடும் பாதை முழுவதும் தூய்மையாக பராமரிக்கப் பட்டிருந்தது.

வெண்ணையாக வழுக்கிச் சென்ற கார் மருத்துவமனை நுழைவாயில் முன்பு நிற்கவும் கார்க் கதவை திறந்து விட்டு வணக்கம் வைத்த செக்யூரிட்டியிடம் லேசாகத் தலையை அசைத்தவன் விடுவிடுவென்று பாட்டி அனுமதிக்கப்பட்ட ஐசியூவை நோக்கிச் சென்றான்.

பொதுவாக ஐசியூவினுள் யாரையும் நோயாளியைப் பார்வையிட அனுமதிப்பதில்லை. ஆனால் அர்ஜுனுடன் படித்த அவனது நண்பனும் அந்த மருத்துவமனையில் ஒரு பங்குதாரர் என்பதால் அவனுக்கு அந்த சலுகை கிடைத்திருந்தது.
தன்னுடைய காலணிகளைக் கழட்டி வெளியே விட்டவன் அங்கிருந்த செவிலிப் பெண்ணின் உதவியோடு ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட கோட் கையுறை மாஸ்க் அனைத்தும் அணிந்து கொண்டு உள்ளே சென்றான்.

உடல் தளர்ச்சி மேலும் அலர்மேல்மங்கையை வயதைக்கூட்டி காண்பித்துக் கொண்டிருந்தது. சுருக்கங்கள் விழுந்த முகத்தின் மீது இருந்த ஆக்ஸிஜன் மாஸ்க் அவர் தடையின்றி சுவாசிக்க உதவிக்கொண்டு இருந்தது.

இரண்டு கைகளும் கட்டிலின் மீது பதிந்து கிடக்க, நரம்போடிய அந்தக் கைகளில் சலைனும் மருந்தும் ஏறிக்கொண்டிருந்தது. தூய வெண்மை நிற விரிப்பு அவரது இடுப்பு வரை போர்த்தப்பட்டு, நிற்சலனமாக உறங்கிக் கொண்டிருந்தார்.
உறங்கும் போதும் அந்த உருவத்தின் கம்பீரம் குறையாமல் இருந்தது. அவரது உடல்

நிலையை எடுத்துக் காட்டும் வகையில் பல கருவிகள் அவர் உடலோடு ஒயர்களால் இணைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது.

அநாவசிய சப்தம் எழுப்பாமல் மெல்ல அடியெடுத்து வைத்து பாட்டியின் அருகில் சென்றவன், அவரது முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான். மெல்லிய அசைவுகள் அவரது புருவங்களில் தெரியவும், அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து அவரது கரங்களை மெதுவாக வருடினான்.

பேரனின் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டவர், மெல்ல விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தார். கண்ணோரங்கள் லேசாகச் சுருங்குவதில் இருந்து அவர் அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறார் என்றுப் புரிந்து கொண்டான்.
தானும் மெல்லப் புன்னகைத்தவன், “சீக்கிரம் உங்களுக்கு சரியாகிடும் பாட்டி. நல்லபடியா குணமாகி பழையபடி கம்பெனிக்கு வரனும் பாட்டி.” என்று அவருக்குத் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசினான்.

பேரனை ஆதுரம் பொங்கும் விழிகளோடு நோக்கியவர். லேசாகக் கரங்களை அசைத்து தன் முகத்தில் இருக்கும் மாஸ்கை அகற்றச் சொன்னார்.

“வேணாம் பாட்டி மூச்சுவிட சிரமமா இருக்கும்.” என்று பதறியவனை வாஞ்சையாகப் பார்த்தவர், நர்ஸிடம் சைகை காட்ட அவள் சிறிது நேரம் மட்டும்தான் என்ற கன்டிஷனுடன் மாஸ்கை எடுத்துவிட்டாள்.

மூச்சிரைக்க மிகவும் சிரமப்பட்டு அவனிடம் பேசினார் மங்கை. “தைரியமா இருக்கனும். நீ வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிறவன். ஆனா அப்படி இல்ல ராசா. உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு என்னைக்கும் கவனமா இரு.” இதைப் பேசும் முன்பு வெகுவாக அவருக்கு மூச்சிறைத்துவிட, அவசர அவசரமாக அவர் முகத்தில் மாஸ்க் மாட்டப்பட்டது.

“என்ன பாட்டி? எதுக்கு ஸ்ட்ரெயின் பண்ணிக்கிறீங்க? நீங்க நல்லபடியா ரெகவராகி வருவீங்க… எப்பவும் எனக்கு எது நல்லதோ அதை நீங்க கூடவே இருந்து வழிநடத்துவீங்க. பதட்டப்படாம ரிலாக்ஸா இருங்க பாட்டி.”
என்று ஆறுதல் கூறியவனின் கரங்களை நடுங்கிய தனது கரத்தால் பற்றிக் கொண்டபடி ஆயாசமாகக் கண்ணை மூடிக் கொண்டார்.

மூடிய விழிகளின் வழியே லேசாக கண்ணீர் கசிந்தது. அந்த முதிர்ந்த மூதாட்டியின் மனதில் சொல்ல முடியாத பாரம் ஒன்று இருப்பது அவனுக்குத் தெரியவில்லை. அதை அவர் அவனிடம் தெரியப்படுத்தவுமில்லை. இறைவன் மீது பாரத்தைப் போடுவதைத் தவிர்த்து அவருக்கு வேறு வழியும் இல்லை.

தீர்க்கப் படாத கணக்கு ஒன்று பாக்கி இருப்பது அவரது நெஞ்சை வெகுவாக அறுத்தது. ஆனால் தீர்க்கும் வழியும் புலப்படாததில் செய்வதறியாமல் அவரது உள்ளம் மருகிக் கொண்டிருந்தது.

அறியாமல் செய்தாலும் பாவம் பாவம்தானே… பாவ விமோசனம் கடவுளிடம் வேண்டுவதை விட, செய்த பாவத்திற்கு பிராயசித்தம் செய்வதுதானே முறை. இந்த ஜென்மத்தில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று கடவுளை மௌனமாக வேண்டிக் கொண்டார்.

அதே நேரத்தில் கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் வெகு சுமாரான ஒரு ஓட்டு வீட்டினுள் வெகு நேரமாகப் போராடிக்கொண்டிருந்த ஒரு உயிர் இறைவனடியைச் சேர்ந்தது.

இன்னார்க்கு இன்னார் என்று மனிதன் போடும் கணக்குகள் நிலைப்பதில்லை. ஆனால் யாரோடு யாரைச் சேர்ப்பது என்று இறைவன் போடும் கணக்குகள் துல்லியமாக இருப்பது விந்தையிலும் விந்தை….

தாயின் உயிர் பறவை கூட்டை விட்டுப் பிரிந்ததும், அவர்மீது கதறிக்கொண்டு விழுந்தவள், தாள முடியாத துக்கத்தை அழுகையில் கரைத்தாள். அவள்தான் சுபத்ரா.