kurumbupaarvaiyile-17

குறும்பு பார்வையிலே – 17

ஸ்ருதி சற்று ஒதுங்கி வர, அவள் தலைச் சுற்றல் அதிகமாகி கீழே சரிய, அவளை ஒரு வலியக் கரங்கள் தாங்கி பிடித்தது.

அவர்கள் உதவியோடு, ஸ்ருதி கண்களைத் திறக்க, “இப்படி கல்யாண நேரத்தில் உடம்பில் தெம்பில்லாமல் மயங்கி விழுந்தா மாப்பிளை வீட்டுக்காரங்க என்ன நினைப்பாங்க?” என்று கடிந்து கொண்டார் செல்வி கார்த்திக்கின் தாயார்.

ஸ்ருதி அவர்களை சற்று மிரட்சியாகப் பார்த்தாள். “என்ன அப்படி பாக்குற? கார்த்திக் தான் சொல்றானே, நீ எப்பவும் வேலை வேலைன்னு ஆபிசலையே இருக்கேன்னு.” என்று செல்வி இன்னும் சிடுசிடுத்தார்.

“செல்வி விடு. பாவம் ஸ்ருதி. அவளே சோர்வா தெரியுறா. வேலை மேல  அதிகம் அக்கறை உள்ள பொண்ணு. அது தான் கொஞ்சம் ஸ்ட்ரைன் பண்ணிருப்பா. நீ வேற சிடுசிடுன்னு. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இங்க தான் இருப்பாங்க.” என்று கார்த்திக்கின் தந்தை நவநீதன் கூறினார்.

‘இவர்களுக்கு என் மேல் சந்தேகமே வரவில்லையே. நான்… நான்…’ என்று அவள் எண்ணம் தறி கேட்டு ஓட, அந்த எண்ணத்தை ஒதுக்கி விட்டு, ‘கார்த்திக் வீட்ல இந்நேரம் எப்படி இங்க வந்தாங்க?’ என்ற கேள்வியோடு அவர்களைப் பார்த்தாள்.

ஸ்ருதியின் கேள்வி புரிந்தது போல், “உனக்கு கிபிட் வாங்க வந்தோம். நீயும் இருந்தா நல்லாருக்குமுன்னு அம்மா சொன்னாங்க. ஆண்ட்டி இன்னைக்கு கடைக்கு வரதா சொன்னாங்க. அது தான் அதே நேரம் வந்துட்டோம்.” என்று கார்த்திக் அவள் பார்வைக்கு விளக்கம் கொடுத்தான்.

‘நல்லது தான்.’ என்று எண்ணிக்கொண்டு, “எல்லாரும் அங்க தான் இருக்காங்க.” என்று கூறிக் கொண்டு ஸ்ருதி முன்னே நடக்க, கார்த்திக் அவள் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.

“அம்மா… அப்பா… நீங்க போங்க. நாங்க இதோ வரோம்.” என்று கார்த்திக் கூற, அவர்கள் முன்னே செல்ல, “என்ன பிரச்சனை?” என்று நேரடியாகக் கேட்டான் கார்த்திக்.

‘யாரிடமாவது சொல்ல வேண்டும். என்னால் ஆகாஷ் வரும் வரை இந்த பாரத்தைத் தனியாகச் சுமக்க முடியவில்லை.’ அவள் மனம் துடித்தது.

‘ஆனால், கார்த்திக் என்ன நினைப்பான்?’ என்ற கேள்வி எழ, அவள் தன் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

‘ஆகாஷ்… வந்துவிடுவான். அவனிடம் நேரில் சொல்ல வேண்டும். அவன் பார்த்துக்கொள்வான். அதுவரை… அதுவரை மட்டும்தான்.’ என்று உருபோட்டுக்கொண்டு, ‘ஒன்றுமில்லை…’ என்பது போல் மறுப்பாகத் தலை அசைத்தாள்.

“ஆகாஷ், கிட்ட பேசினியா?” என்று கார்த்திக் கண்களைச் சுருக்க, “ம்… தினமும்! எல்லாரும் தேடுவாங்க.” என்று கூறிக்கொண்டே, அவள் முன்னே நடக்க, வேறுவழியின்றி பேச வழி இல்லாமல் கார்த்திக் அவளை மௌனமாக பின் தொடர்ந்தான்.

சுமதி, “ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ்…” என கூறிக்கொண்டு மருமகளுக்காக பிளாட்டினமும், வைரமும் வாங்கி தள்ளினார்.

ஆண்கள் பெரிதாக எதிலும் தலையிட்டுக் கொள்ளவில்லை.

‘நம்ம வீட்ல ஒரு ரோல்ஸ் ரொய்ஸ் இருந்தா, இவங்க வீட்ல கூட ரெண்டு இருக்கு. அத்தோட நம்மளை விட கூட ரெண்டு பிசினெஸ் கொஞ்சம் அரசியல் பலம். அதுக்கு இத்தனை அலட்டலா?’ என்ற கேள்வி ஸ்ருதியின் தாயார் மனதில் எழ, அவர் ஒதுங்கிக் கொண்டார்.

‘நான் எதாவது பேசி, எந்த பிரச்சனையும் வந்திற கூடாது.’ என்று பெண்ணின் தாயாக எண்ணிக்கொண்டார்.

சுமதி மேலும்  ஸ்டேட்டஸ் என்ற பெயரில் கனம் கனமாக நகைகளை எடுக்க, ஸ்ருதி கடுப்பாக உணர்ந்தாள்.

அவள் பொறுமை எல்லை மீறி கொண்டே போக, “எனக்கு இதெல்லாம் பிடிக்கலை.” பட்டென்று வெளி வந்தது அவள் வார்த்தைகள். மற்ற அனைவரும் அவளை பதட்டமாக பார்க்க… சுமதியோ, “இல்லை உங்க வீட்டில் வாங்க முடியலைனாலும்…” என்ற அவர் சிறிதும் அசராமல் ஆரம்பிக்க, “இல்லை அத்தை. எனக்கு பிடிக்கலை.” அழுத்தமாகக் கூறினாள் ஸ்ருதி.

“என்ன பார்வதி, ஸ்ருதி இப்படி பேசுறா, நீ அமைதியா இருக்க?” என்ற ஈஸ்வரன் தன் மனைவியின் காதில் கிசுகிசுக்க, “சம்பந்தி பேச்சும் ரொம்ப ஓவேரா தா இருக்கு. ஸ்ருதியே பேசி முடிச்சிப்பா விடுங்க.” என்ற கூறிவிட்டார் பார்வதி.

“இல்லை அத்தை, இதை விட பெருசா அம்மா வாங்கி தரேன்னு சொன்னாங்க. எனக்கும் பிடிக்காது, ஆகாஷுக்கும் பிடிக்காது அப்புறம் எதுக்குன்னு சொல்லிட்டேன்.” என்று கூறி மேலே வாங்குவதையும் நிறுத்திவிட்டு, அவர் ஸ்டேட்டஸ் என்ற வார்த்தைக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டாள் ஸ்ருதி.

ஆகாஷ் பெயரைச் சொன்னதும் சுமதி தன் வாயை மூடிக்கொண்டார். பாட்டி அமைதியாக அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தன் மனதிற்குள் ஒரு சபாஷ் போட்டுக்கொண்டாள் கீதா. இதற்கிடையில், கீதாவும், கார்த்திக்கும் சில வார்த்தைகளோடும், பார்வை பரிமாற்றத்தின் மூலம் நலம் விசாரித்துக்கொண்டனர்.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து, ஆகாஷ் திரும்பும் நாளும் வந்தது.

‘கிளம்பும் பொழுது வேலை அதிகம்.’ என்று அவன் இரண்டு நாட்களாக ஸ்ருதியிடம் பேசவில்லை.  ஆகாஷ் அன்று அதிகாலை திரும்பியிருந்தான்.

ஸ்ருதி பல முறை அழைத்தும் ஆகாஷிடம் பதில் இல்லை. ‘ரொம்ப வேலையோ?’ என்ற எண்ணம் ஸ்ருதிக்குள் எழுந்தது.

‘நேரில் போய் ஆகாஷை பார்க்க வேண்டும்.’ என்று கீதாவிடம் அவன்  அலுவலகத்துக்குக் கிளம்பிவிட்டதை உறுதி செய்து கொண்டு ஆகாஷின் அலுவலகத்திற்குச் சென்றாள்.

ஸ்ருதி ஆகாஷின் அறைக்குள் செல்ல, அவன் மடிக்கணினிக்குள் மூழ்கி இருந்தான்.

ஸ்ருதியை பார்த்ததும், ‘ஐந்து நிமிடம்.’ என்பது போல் செய்கை காட்டினான்.

ஸ்ருதிக்கு எங்கோ வலிப்பது போல் இருந்தது.  ‘நானாக தேடி வந்தது தவறோ? எங்கோ என் மரியாதையை நான் இழந்து விட்டேனோ?’ என்று குற்றம் செய்த அவள் மனம் வண்டாக அவளை குடைய ஆரம்பித்தது.

ஸ்ருதி மௌனித்தாள். மௌனிப்பது மட்டுமின்றி நிதானிக்கவும் செய்தாள்.

தன் வேலையைச் சாவகாசமாக முடித்து விட்டு, தன் மடிக்கணினியை மூடி வைத்தான் ஆகாஷ்.

“சொல்லு ஸ்ருதி.” அவன் வார்த்தைகள் தெளிவாக வந்து விழுந்தது.

‘எதை சொல்ல? எப்படி சொல்ல?’ என்ற கேள்வி வந்தது. ‘இத்தனை நாள் கழித்து என்னைப் பார்க்கும் பொழுது இவன் என்னை வரவேற்கும் விதம் இப்படி தான் இருக்குமா?’ என்று அவளுக்கு எங்கோ பொறி தட்டியது.

‘ அலட்சியமா? இல்லை ஒருவேளை அதீத வேலை தானோ?’ என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் ஸ்ருதி.

இருப்பினும், சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல, அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

“இல்லை… ஏன் போன் எடுக்கலை? பேசவே இல்லையே?” என்று தடுமாற்றத்தோடு நிறுத்திக் கொண்டாள்.

“என்ன பேசுற ஸ்ருதி. உனக்கு நம்ம வேலை பற்றி தெரியாதா?” என்று நேரடியாகக் கேட்டான் ஆகாஷ்.

‘அவன் கேட்பது சரி தானோ?’ என்ற கேள்வி எழ, அவன் மேலும் பேசிய வார்த்தைகளில் ஸ்ருதி திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

“இந்த பார்… நம்ம ஸ்டேட்டஸ், நம்ம பிசினெஸ் எல்லாம் தாண்டி எனக்கு உன்னை பிடிக்கும், அதுக்காக என்னால உன்னை மட்டுமே நினைச்சுகிட்டு இருக்க முடியுமா?” என்று அவன் புருவம் உயர்த்தினான்.

அவன் ஸ்டேட்டஸ் என்று கூறியதில் ஸ்ருதியின் கோபம் சர்ரென்று ஏறியது.  ‘ஸ்டேட்டஸ்… இவன் அம்மா சொல்லும் அதே வார்த்தை. இப்படி எல்லாம் இவன் பேச மாட்டானே? அப்படி என்ன பெரிய ஸ்டேட்டஸ்?’ என்ற கேள்வி அவளுள் எழுந்தது.

அவனிடம் விவாதிட, அவள் மனம் துடிக்க, ‘வேணாம்! என் மனநிலை சரியில்லை. நான் எதையும் இப்பொழுது பேசக் கூடாது.’ என்று தன் வாயை இறுக மூடிக்கொண்டாள்.

‘ஆகாஷின் மனநிலையும் சரியில்லை. சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லாமல், என்னால் சரியாகப் பேச முடியாது. இப்படி இவன் பேசுகையில், நான் சொல்ல வந்ததை எப்படிச் சொல்ல?’ என்று எண்ணியவாறே, ஸ்ருதி விருட்டென்று எழ, “என்ன எழுந்துட்ட?” என்று ஆகாஷ் கேள்வியாக நிறுத்தினான்.

“இப்படிக் கோபப்படக்கூடாது டாலி.” அவன் வார்த்தை சீண்டலாக ஒலித்தது.

காணாமல் போயிருந்த டாலி ஒலித்தது சீண்டலாக! ஸ்ருதி அதை மனதில் குறித்துக் கொண்டாள்.

“கோபப்பட்டு என்ன ஆக போகுது? உன்னால என்னை வேண்டாமுன்னு சொல்ல முடியுமா?  நமக்குள்ள நடந்ததை இல்லைன்னு சொல்ல முடியுமா?” என்று அவன் புருவங்கள் வளைந்தது.

ஸ்ருதியின் கண்களுக்கு அவன் கண்களில் குறும்பு தெரியவில்லை. மாறாகக் கேலியே தெரிந்தது.

‘இவன் பேசும் பேச்சில், இவன் முன் நான் மயங்கி விழுந்து விடுவேனோ?’ என்ற அச்சம் அவளுள் எழுந்தது.

ஆனால், அவள் வைராக்கியமும், தன்மானமும் அவள் அச்சத்தோடு பலமாகப் போட்டிப் போட்டது.

தன் பாதத்தைத் தரையோடு ஊன்றி, தன்னை திடப்படுத்திக் கொண்டாள்.

‘ஆகாஷ் எதை சொல்லுகிறான்? அன்று நடந்ததையா? அப்படினா… அப்படினா… இவன் என்ன பேசினாலும், நான் கோபப்படக்கூடாதா? நான் கோபப்படவில்லையே?சாதாரணமாகத்தானே எழுந்தேன். இவன் என்னென்னமோ பேசுறானே?’ குழம்பியிருந்த அவள் மனம் மேலும் குழம்பியது.

இன்னும் நடுக்கத்தை மறைக்க, நாற்காலியில் மீண்டும் அமர்ந்தாள்.

“முதல் சந்திப்பில் என்னை அவமானப்படுத்தின, இப்ப பாரு உனக்கு வேற வழி இல்லை. நீயும், உன் பிஸினஸும் என் கையில். ஒரு வாரத்தில் கல்யாணம்.” என்று சாவதானமாகக் கூறினான்.

‘அன்று நடந்ததுக்கே இப்படி பேசுறான்? இதில் குழந்தை பத்தி தெரிஞ்சிதுன்னா?’ என்று கேள்வி எழுந்தது.

‘இவன் எகத்தாளம் இன்னும் கூடிவிடுமோ?’

ஸ்ருதியின் கண்ணீர் வெளி வர துடிக்க, ‘இவன் முன் அழ கூடாது.’ என்ற எண்ணத்தோடு அவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.

“என்ன அப்படி பாக்குற? உன்னால் என்னை தவிர வேற யாரையும் கல்யாணம் செய்துக்க முடியுமா?” என்று அவள் முன் எழுந்து வந்து அவள் தலை  முடியை ஒதுக்கி, அவளை வரிவடிவமாகத் தீண்டியபடியே கண்சிமிட்டி  கேட்டான் ஆகாஷ்.

ஸ்ருதி எதுவும் பேசவில்லை, “அப்புறம் எதுக்கு இப்படி பொசுக்குன்னு கோவப்படுற? எதோ லவேர்ஸ் பிரேக் அப் பண்ற மாதிரி. அதுக்கு தான் வழி இல்லையே! ” என்று அந்த நாள் நினைவில் அவன் கண்சிமிட்ட, ஸ்ருதியின் உலகம் தட்டாமாலை சுற்றியது. அவன் தொடுதலில் கரைந்து போகும் அவள் இன்று தொலைந்து போனாள்.

அவன் நெருக்கம், அவன் தீண்டல் அனைத்தும் அவளுக்கு நெருப்பாய் சுட்டது.

‘என்ன?’ என்பது போல் அவன் புருவம் உயர்த்த, மறுப்பாகத் தலை அசைத்தாள்.

“எதாவது பேசணுமா?” என்ற அவன் கேட்க, ‘பேச மட்டும் இல்லை. அதற்கு மேலும் ஒன்றுமில்லை.’ என்று அவள் மனம் சிந்திக்க ஆரம்பித்தது.

மறுப்பாகத் தலை அசைத்து, அவள் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

ஒரு எட்டு எடுத்துவைத்து, அவளை இடையோடு அணைத்து, அவளை தன்வசமாக்கி, “…” என்று ஆகாஷ் அவள் செவிகளில் இன்னும் ஏதேதோ கிசுகிசுத்தான்.

அவன் பேசிய வார்தைகள் கணவன் மனைவிக்குள் பேசும் வார்த்தைகள் போல் இருந்தாலும், அவள் எதை இழந்து விட்டாள் என்று இன்னும் சொல்லாமல் சொல்லியது.  விலகிக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள் ஸ்ருதி.

‘உன்னை ஏமாறவைப்பேன்.’ அவன் என்றோ சொன்ன வார்தைகள் இருவரின் காதிலும் ஒரு சேர ஒலித்தது.

‘நான் எங்க தோற்றேன்? இவனை காதலிக்கும் பொழுதா? இல்லை கட்டுப்பாடில்லாமல், என் கண்ணியத்தைத் தொலைக்கும் பொழுதா? இல்லை இன்னும் தோற்கவில்லை? திருமணம் நடைபெறவில்லை. என் தன்மானமும், சுயகௌரவமும் இன்னும் எங்கோ ஓரத்தில் ஓட்டிக்கொண்டே இருக்கிறதா?’ என்ற கேள்விகள் எழ, உலகமே வெறுத்தார் போல் அவள் காரை நோக்கி நடந்தாள்.

அவள் கைகள், அவள் கண்கள் அனைத்தும் அதன் போக்கில் வேலை பார்த்துக்கொண்டு தான் இருந்தது.

ஆனால், அவள் அறிவோ, ‘ஆகாஷ் யார்? எப்படிப் பட்டவன் ?’ என்ற கேள்வியை ஆங்காரமாகக் கேட்டது.

அவள் உதடுகளும், “ஆகாஷ் யார்? ஆகாஷ் யார்?” என்ற முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

குறும்புகள் தொடரும்…