Nan Un Adimayadi–EPI 4

Nan Un Adimayadi–EPI 4

அத்தியாயம் 4

கண்ணீர் கவிதைகள்

இந்தக் கண்கள் எழுதுதே

கவிதை வரிகளால்

எந்தன் கன்னம் நனையுதே (தவமங்கை)

 

“டீச்சர்!”

வார்த்தைக்கே வலிக்கும் போல மென்மையாய் கேட்ட குரலில், திருத்திக் கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே மேசை மேல் வைத்து விட்டு வெளியே வந்து நின்றாள் தவமங்கை.

அவள் ரூம் வாசலில் வேறெங்கோ பார்த்தவாறு நின்றிருந்தான் காளை. என்ன ஏது என கேட்காமல் கையைக் கட்டியபடி அவனையேப் பார்த்தப்படி நின்றிருந்தாள் தவமங்கை.

தலையைக் குனிந்துக் கொண்டவன்,

“டீச்சர்!” என மீண்டும் மெல்லிய குரலில் அழைத்தான்.

அப்பொழுதும் அவள் பதில் பேசவில்லை. பதில் இல்லாததால் மெல்ல நிமிர்ந்து அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் காளை.

“ஒரு மனுஷிகிட்ட பேசனும்னா முகத்தைப் பார்த்து பேசனும் மிஸ்டர் முத்துக்காளை. அதுதான் பேசிக் மேனெர்ஸ். என்னைக் கூப்புட்டுட்டு காலை பார்க்கறீங்க! காலுலயா என் வாய் இருக்கு!” காட்டமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

‘முகத்தைப் பார்த்தா, பார்த்துக்கிட்டே இருக்க சொல்லுதே எலிசு! அதுவும் அந்த மூக்கு… அப்படியெ கிளி மூக்கு மாங்காய்தான். கன்னம் ரெண்டும் பங்கனப்பள்ளி மாதிரி பளபளன்னு மின்னுதே. அத பார்த்தாலே உப்பு மொளகா போட்டு சாப்பிடற மாதிரி கன்னத்தைத் தடவி தடவி சாப்பிட சொல்லுதே! உதடோ மல்கோவா பழத்த அழகா வெட்டி வச்ச மாதிரி அவ்வளவு அம்சமா இருக்கு. கண்ணு ரெண்டும், அந்தப் பார்வை…அத என்னன்னு சொல்ல!!! மாங்காவைத் துளைச்சு உள்ள போற வண்டு மாதிரி உன் பார்வை என் மனதை துளைச்சு உசுர உருவுது! இப்படிலாம் மனசன புரட்டிப் போட்டா அப்புறம் எப்படி அந்த முகத்தப் பார்த்து நான் பேச!’

மாங்காய் விளைவிப்பவனுக்கு வர்ணிப்பும் மாங்காயாகவே வந்தது.

சில விநாடிகள் மட்டும் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தவன் அவள் பார்வையின் வீச்சு தாங்காமல் மீண்டும் தலை கவிழ்ந்துக் கொண்டான்.

“மிஸ்டர் முத்துக்காளை!”

“சொல்லுங்க டீச்சர்”

“நிமிர்ந்து என்னைப் பாருங்க”

“நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன் டீச்சர்! நிமிர்ந்து மட்டும் பார்க்க சொல்லாதீங்க”

“அதாவது, உள்ளுக்கு சரக்க விட்டா மட்டும் தான் சாருக்கு பேச்சு வார்த்தை வரும், பாட்டு வரும், கிஸ்சடிக்க தில்லு வரும்! அப்படித்தானே?”

மாணாக்கர்களை டிசிப்பிலின் செய்ய பயன்படுத்தும் குரலை பயன்படுத்தினாள் தவமங்கை. அந்தக் குரலில் தெறித்த நக்கல், கோபம், கடுப்பு எல்லாம் முத்துக்காளையை நெளிய வைத்தது. வலது கையால் இடது பக்க நெஞ்சை லேசாகத் தடவி விட்டுக் கொண்டே இவள் ரூமுக்கு அருகே இருந்த வாழை மரத்தில் கண்ணைப் பதித்திருந்தான்.

“அது வந்து.. அது நான் இல்ல டீச்சர்”

“எக்ஸ்கியூஸ் மீ! கம் அகேய்ன்!!!”

“எங்க டீச்சர் வரனும்?”

மூன்று முறை மூச்சை இழுத்து வெளியிட்டுக் கோபத்தை சமன் செய்தவள்,

“கம் அகேய்ன்னா திரும்ப வெளங்கற மாதிரி சொல்லுங்கன்னு அர்த்தம்” என சொன்னாள்.

“ஓஹோ, சரிங்க டீச்சர்! நானும் கம் எகேய்ன் வரேன்! நேத்து அப்படிலாம் நடந்துக்கிட்டது நான் இல்லை டீச்சர், எனக்குள்ள இருந்த இன்னொருத்தன். நான் முத்துக்காளை அவன் மொரட்டுக்காளை. வெள்ளிக்கிழமை நைட்டான அவன் டான்னு ஆஜராகிடுவான் டீச்சர். டேஞ்சர் பார்ட்டி! என்னாலயே அவன அடக்க முடியாது! அதனால அன்னைக்கு மட்டும் அவன் முன்னாடி வராம இருந்துக்குங்க டீச்சர். ப்ளீஸ் டீச்சர்! அவன் பண்ண அட்டகாசத்துக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். மன்னிச்சிருங்க டீச்சர், மன்னிச்சிருங்க!”

நெஞ்சைத் தடவிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள்,

“காயம் ஆழமா?” என கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல டீச்சர்!”

“காட்டுங்க மிஸ்டர் முத்துக்காளை, நான் பார்க்கறேன்! மருந்து எதாச்சும் போட்டிங்களா?” என கேட்டாள்.

சட்டென இன்னும் கொஞ்சம் பின்னால் நகர்ந்தவன்,

“இல்ல டீச்சர்! லேசான கீறல் தான். மஞ்சப் பத்துப் போட்டுட்டேன். சரியாப் போயிடும்” என சொன்னான்.

நேற்று இரவு காளை கன்னத்தில் முத்தமிடவும் அதிர்ந்துப் போனாள் தவமங்கை. அந்த அதிர்ச்சி அடுத்து அவன் பாடிய பாடலில் ஆத்திரமாக உருவெடுத்தது.

“விடு, விடு! விடுடா” என இவள் தள்ள முயல, பாறையை குண்டூசியால் தள்ளுவது போல அது முடியாத காரியமாக இருந்தது. தனியாக இருப்பவளிடம் அத்துமீறியவன் மேல் கொலைக் காண்டாக, சட்டை பட்டன் அவிழ்ந்து அவள் கண் முன்னே தெரிந்த அவன் நெஞ்சப் பகுதியில் பலம் கொண்ட மட்டும் கீறிவிட்டாள். அது கொடுத்த வலியில் பட்டென பிடியைத் தளர்த்தினான் காளை.

“ஏன் எலிசு மாமன கீறுன? கையக் காட்டு நகம் ஒடஞ்சுருச்சா பாக்கலாம். வலிக்கிதா எலிசு?” என ரத்தம் வந்த தன் நெஞ்சைக் கவனிக்காமல் அவள் கையை இழுத்து நகங்களை ஆராய்ந்தான் காளை.

கோபமாகத் திட்ட வாயெடுத்தவள், அவன் செய்கையில் வாயடைத்துப் போனாள். நாமம் போட்ட மாதிரி மூன்று கோடுகள் அவன் நெஞ்சில் தெரிய, தோல் லேசாகப் பிய்ந்து ரத்தம் வேறு வந்தது. அவன் கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்டவள், அவன் காயத்தை ஆராய கிட்டேப்போனாள். அவள் நெருங்கவும் நகர்ந்துக் கொண்டவன், கையைத் தூக்கி கிட்டே வர வேண்டாமென சைகை செய்தான்.

“என்னைத் தொடாத எலிசு! நீ கர்ப்பக்கிரகத்து சிலை மாதிரி, உன்னைத் தொட்டு நான் பூசை செய்யலாம். ஆனா நானு அந்தக் கோயில் வாசல்ல கெடக்கற செறுப்பு மாதிரி. என்னைத் தொட்டு நீ அழுக்கா போயிடாத எலிசு!” லேசாக கண்ணீர் எட்டிப் பார்த்தது அவன் கண்களில்.

‘இது என்னடா லாஜிக்கு! என்னை நீ தொட்டாலும், உன்னை நான் தொட்டாலும், தொட்டது தொட்டதுதானே! பட்டது பட்டதுதானே!’ ஆனானப்பட்ட டீச்சரையே குழப்பி விட்டவன்,

“வழி விடு வழி விடு வழி விடு

என் தேவி வருகிறாள்!!!” என பாடிக் கொண்டே தள்ளாடியபடி நடந்து உள்ளேப் போய் விட்டான்.

அவனைப் பாம்பு என எண்ணவும் முடியாமல் பழுதை என தள்ளவும் முடியாமல் திண்டாடிப் போய் அங்கேயே நின்றிருந்தாள் தவமங்கை. அன்றிரவு தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டுப் படுத்தவள், மறுநாள் கண்டிப்பாக அவனிடம் பேசி இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என முடிவெடுத்தாள். பிறகே தூங்க முடிந்தது அவளால்.

சனிக்கிழமை கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நம் காளையோ அன்று அதற்கு லீவ் விட்டிருந்தான். காதலி அளித்திருந்த காயத்துக்கு மருந்து கூட போடாமல், சுருக் சுருக்கென அது வலிக்கும் போதெல்லாம் காதல் பரிசு அது என மகிழ்ந்துப் போனான்! அடிக்கடி தொட்டு தடவி சந்தோஷப்பட்டுக் கொண்டான். அக்கா வேறு வந்திருக்க, நெஞ்சில் காயத்தைப் பார்த்து அவன் ஆத்தா கூப்பாடு போட்டால் இவன் குடி போதையில் கொடுத்த கன்னத்து முத்தம் நடு வீட்டில் அலசி ஆராயப்படும் ஆபத்தும் இருப்பதால் அன்று ஆயில் பாத்துக்கு ஹாலிடே!

காலையிலேயே மன்னிப்புக் கேட்க தான் மங்கையின் ரூம் வாசலில் வந்து நின்றிருந்தான். அவன் ஆத்தாவும் அக்காவும் சமையலில் இருக்க, கமுக்கமாக இங்கே வந்திருந்தான்.

“டீச்சர் என்னதான் சமாதானம் சொன்னாலும் மொரட்டுக்காளை செஞ்சது தப்புத்தான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கறதா இருந்தாலும் அடுத்த வெள்ளிக்கிழமை வருவான், அப்போ குடுங்க. இப்ப உங்க முன்னுக்கு நிக்கற இந்த அப்பாவி முத்துக்காளைய அவனா நெனைச்சு தண்டிச்சிடாதீங்க டீச்சர்!” பார்வை இன்னும் வாழை மரத்தில் தான் இருந்தது அவனுக்கு.

“முத்துக்காளை, முரட்டுக்காளைன்னு டபுள் ரோலா சார் உங்களுக்கு? தவமங்கை, தவவேங்கை, தவகாங்கை(சூடு) இப்படின்னு என்னை ட்ரிபள் ரோல் செய்ய வச்சிடாதீங்க, தாங்கமாட்டீங்க! லுக் ஹியர் மிஸ்டர் காளை, எனக்கு ஆத்தாவ ரொம்ப புடிச்சிருக்கு. அவங்க முகத்துக்காகத்தான் இவ்வளவு நடந்தும் இந்த வீட்டுல இன்னும் இருக்கேன். இன்னொரு தடவை முத்துக்காளையோ இல்ல முரட்டுக்காளையோ, என் கிட்ட வாலாட்டுனா ஸ்ட்ரேய்டா போலிஸ் ஸ்டேஷன் தான். உங்காத்தா முகத்துக்காகக் கூடப் பார்க்க மாட்டேன். அண்டேர்ஸ்டேண்ட்?”

மெல்ல நிமிர்ந்து செவசெவவென சிவந்திருந்த அவள் முகத்தை ரசனையுடன் பார்த்தவன், மீண்டும் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

“இனிமே இப்படி நடக்காது டீச்சர்! நீங்களும் வெள்ளிக்கிழமை மட்டும் மொரட்டுக் காளை கண்ணுல சிக்காம இருந்துக்குங்க. கெட்டப்பையன் அவன்”

அவனை முறைத்தப் பார்த்தவள் ரூம் உள்ளே போக திரும்பினாள்.

“டீச்சர்!”

“சரியான டார்ச்சர்! இன்னும் என்ன?”

“இல்ல, ஸ்கூட்டி வேணும்னு கேட்டீங்களாம்! பெரிய தனக்காரரு போன் அடிச்சாரு. பசியாறிட்டு என் கூட வரீங்களா டவுனுக்கு? வண்டி எடுத்துடலாம்! நீங்க வேற கண்ணாலம் ஆகாத பொண்ணு! அந்த வாத்திக் கூட காருல இங்கிட்டும் அங்கிட்டும் போனா, ஊருல நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க! அதான் இன்னிக்கே ஸ்கூட்டி வாங்கிடலாம் டீச்சர்”

“காருல போனா நாலு விதமா பேசறவங்க, கல்யாணம் ஆகாத உங்க கூட ஒரே வீட்டுல இருக்கேனே அப்போ பேச மாட்டாங்களா மிஸ்டர் காளை?”

“அது..அது.. நான் ஒழுக்கத்துல ராமன் மாதிரி டீச்சர். என் கூட உங்கள இணைக்கூட்ட எவனுக்கு தில்லு இருக்கு? வகுந்துட மாட்டேன் வகுந்து!”

“யாரு, நீங்க ராமன்? இத நாங்க நம்பனும்? இந்த கட்டிப்புடிக்கறது, கிஸ்சடிக்கிறது எல்லாத்தையும் ஒழுக்க லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டாங்களா மிஸ்டர் காளை?”

“மறுபடியும் சொல்லறேன் டீச்சர் அது நான் இல்ல!!!”

அவனுக்கு பதிலளிக்காமல் உள்ளே புகுந்து கதவை சாற்றிக் கொண்டாள் தவமங்கை.

“ஹ்ம்ம்..எந்நேரமும் முரட்டுக்காளையா இருந்துடனும்னு ஏக்கமா இருக்கே, என்னடா எனக்கு வந்த சோதனை!” என முனகிக் கொண்டான் காளை.

“அடேய் காளை! டீச்சர் ரூமு வாசல்ல என்னடா செய்யற? அடங்கமாட்டீயா நீயீ!” என ஆத்தாவின் குரல் வர அடித்துப் பிடித்து மாட்டுத் தொழுவத்துக்கு ஓடினான் காளை.

முடியை அள்ளிக் கொண்டையாய் முடிந்த காமாட்சி தன் மகளிடம்

“அந்த சரசா வீட்டுல ஜாதகம் குடுத்து உட்டுருக்காங்கடி! அந்தப் புள்ளயும் இவன பார்க்கற போதுலாம் மாமா மாமான்னு கூவிக்கிட்டு திரியறா! ஜாதகம் பொருந்தி வந்தா, இவன கையக் காலக் கட்டித் தூக்கிட்டுப் போய் தாலியக் கட்ட வைக்கனும்டி! அது வரைக்கும் எனக்கு துளி உறக்கம் வராது!” என புலம்பினார்.

வெளியே போக கிளம்பி வந்த மங்கை, அடுப்படிக்கு வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் புன்னகைத்த ராஜேஸ்வரி,

“வாங்க மங்கை, சாப்பிடலாம்” என அழைத்தாள்.

அவளுக்குப் பதில் புன்னகையைக் கொடுத்தவள்,

“ஆத்தா வாசம் தூக்குது! என்ன மெனு இன்னிக்கு?” என கேட்டப்படியே தட்டை எடுத்துக் கொண்டு மணக்கட்டையில் அமர்ந்தாள். அவளோடு வாண்டுகளும் அமர்ந்துக் கொண்டார்கள்.

“இன்னிக்கு ஊத்தப்பம் போட்டுருக்கேன் கண்ணு! தோ இவளுக்கு ரொம்ப புடிக்கும்” என மகளைக் காட்டி சொன்னார் காமாட்சி.

“சமையல் முடிஞ்சதுனா எல்லாம் உட்காருங்க. நாமளே பரிமாறிக்கிட்டு சாப்பிடலாம்” என அழைத்தாள் மங்கை.

மச்சக்காளை தோட்டத்துக்குப் போயிருக்க, பெண்கள் மூவரும் உணவு உண்ண அமர்ந்தார்கள். அப்பொழுதுதான் உள்ளே வந்த காளை,

“சாப்பிட ஆரம்பிச்சாச்சா!” என கேட்டப்படியே பெண்களுக்கு பரிமாற வந்தான்.

“டேய் நீ உக்காருடா! நான் போடறேன்” என ராஜேஸ்வரி எழ, தோளை அழுத்தி அமர வைத்தான் அவள் தம்பி.

“அடிக்கடி நான் செய்யறதுதான, உக்காந்து சாப்பிடுக்கா! உன் வீட்டுக்குப் போயிட்டா பம்பரமா சுழலனும். இங்கயாச்சும் கொஞ்சம் ரெஸ்டு எடு” என சொல்லியபடியே பார்த்துப் பார்த்துப் பரிமாறினான்.

தவமங்கைக்கு உணவிடும் போதெல்லாம் காமாட்சியின் பார்வை அவன் மேலேயே இருந்தது. அவளது முகத்தைப் பார்க்காமல் தட்டை மட்டும் பார்த்து உணவிட்டான் காளை. பின் அதிதிக்கும் அருணுக்கும் ஊட்டி விட ஆரம்பித்தான்.

எல்லோரும் சாப்பிட்டு கைக்கழுவ, காளையின் அருகே வந்த மங்கை,

“போகலாமா?” என கேட்டாள்.

“வெளிய போகும் போது எங்கன்னு கேட்க கூடாதுன்றது நம்ம ஊரு சம்பிரதாயம்த்தா! அதனாலே நீயே சொல்லிடேன்” என கேட்டப்படியெ அவள் அருகில் வந்து நின்றார் காமாட்சி. பார்வை மட்டும் மகனிடம் இருந்தது.

“ஸ்கூட்டி ஒன்னு செகண்ட் ஹேண்டா வாங்கறதுக்கு இருக்கேன் ஆத்தா! உங்க மகனுக்குத்தான் இந்த மாதிரி விஷயமெல்லாம் தெரியும்னு சொன்னாங்க. அதான் அவர் கூட டவுனுக்குப் போறேன்”

“எதுக்குத்தா ஸ்கூட்டி எல்லாம்! அதான் அந்த அழகான வாத்தியாரு பையன் கூட்டிப் போய் கூட்டி வருதுல்ல! ஸ்கூட்டில போறேன்னு குண்டும் குழியுமா கெடக்கற ரோட்டுல நீ வேற விழுந்து கிழுந்து வச்சா கஸ்டமாயிடும்த்தா”

“எத்தனை நாளுக்கு இன்னொருத்தவங்க கைய எதிர்ப்பார்க்கிறது? எனக்கு சுயமா எல்லாம் செய்யனும் ஆத்தா! நான் கவனமா இருப்பேன்! கவலைப்படாதீங்க!” என அன்பாக சிரித்தவளை அதற்கு மேலும் தடுக்க முடியாமல் அமைதியானார் காமாட்சி.

அவள் வாசலுக்குப் போய்விட, மகனின் கையைப் பிடித்து நிறுத்தினார் காமாட்சி.

“இங்க பாருடா காளை! உன்னை நல்லவன்னு நம்பி வருது அந்தப் பொண்ணு! பத்திரமா கூட்டிப் போய் பத்திரமா கூட்டி வரனும்! எதாச்சும் கோக்குமாக்கு பண்ணி வச்ச, விளாசிடுவேன் விளாசி!”

“யக்கா! பாருக்கா உங்க ஆத்தாவ! என்னைப் பார்த்தா டீச்சர் கையைப் புடிச்சு இழுக்கறவன் மாதிரியா இருக்கு? டீச்சர் சுத்தமான மழைத்தண்ணி மாதிரிக்கா! நான் மழைதண்ணி பட்டதும் சேறா போகிற செம்மண்ணுக்கா! நாங்க சேர்ந்தா வாழ்க்கையே சேறாகிப் போகும்க்கா! சொல்லுக்கா உங்காத்தாகிட்ட”

“மழை, சேறு, செம்மண்ணுன்னு நல்லா சோக்காத்தான் பேசறான் உன் தம்பி. என் பொழப்புல மண்ணள்ளி போட்டு என் மொகத்துல சேத்த வாரி இறைக்காம இருந்தா சரி!”

“ஆத்தா! அவனே சும்மா இருந்தாலும் அதையும் இதையும் பேசி அவன் மனசுல சலனம் வர வச்சிடுவீங்க போல! போத்தா போய் பேரப்புள்ளைங்கள பாருங்க” என அனுப்பி வைத்தாள் தன் அன்னையை.

“நீ போய்ட்டு வாடா காளை! என் தம்பிய பத்தி எனக்குத் தெரியும். ஆத்தா சொல்லுறத எல்லாம் மனசுல வச்சிக்காதே”

“மிஸ்டர் காளை” என மங்கை குரல் கொடுக்க, இவ்வளவு நேரம் சோகமாக இருந்த முகத்தில் பல்ப் எரிய, வேட்டி நுணியை ஒரு கையில் தூக்கிக் கொண்டு வேக எட்டு எடுத்து வைத்து,

“இதோ வந்துட்டேன் டீச்சர்” என குரல் கொடுத்தப்படியே நகர்ந்தான் முத்துக்காளை.

‘பேசிக்கிட்டு இருக்கறப்போவே ஓடிட்டானே! பியூஸ் போன பல்ப் மாதிரி இருந்தவன், டீச்சர் ஒத்தக் குரலுல தவுசன்ட் வாட்ஸ் பல்பு மாதிரி பிரகாசமாகிட்டானே! ஆத்தா சொன்னது நெஜமா இருக்குமோ! எனக்கு பல்பு குடுத்துடுவானோ என் தம்பி!’

வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டு மங்கை ஏறுவதற்காக நின்றிருந்தான் காளை. வண்டியின் பின்னால் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு ஏறியவள்,

“போகலாம் மிஸ்டர் காளை” என சொன்னாள்.

“சரி டீச்சர்” என சொன்னவன், அவளுக்கு எந்த விதமான சங்கடமும் வராதவாறு பார்த்து மெதுவாகத்தான் ஓட்டினான். அவளும் வேடிக்கைப் பார்த்தவாறே பயணித்தாள். எதிர்காற்று முகத்தில் மோத பயணிப்பதும் சுகமாகத்தான் இருந்தது. இந்த சுகமெல்லாம் குறுக்கே ஓடி வந்த ஒரு குழந்தையை இடித்து விடாமல் இருக்க காளை திடீரென பிரேக் அடிக்கும் வரைதான்! அவன் அடித்த பிரேக்கில் இவள் முன்னே தள்ளப்பட்டு அவன் முதுகில் மோதி நிற்க, எங்கே இவள் விழுந்து விடுவாளோ எனும் பதட்டத்தில் வலது கையில் ஒரு ஹேண்டிலைப் பிடித்தவன் மறு கையைப் பின்னால் கொண்டு வந்த அவள் இடுப்பை அழுத்திப் பிடித்திருந்தான்.

பிண்ணனியில் இளையராஜா இசையில் காதல் தேவதைகள்,

“நம்தன தம்தன நம்தன நம்தன

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ” என பாடியது யார் காதுக்கு கேட்டதோ இல்லையோ, முத்துக்காளையின் காதுக்கு நன்றாக கேட்டது!!!!

(உங்களுக்கும் கேட்டிருந்தால் கமேண்டில் வந்து செப்புங்கோ!!!)

 

(அடிபணிவான்)

error: Content is protected !!