kurumbuPaarvaiyile-20
kurumbuPaarvaiyile-20
குறும்பு பார்வையிலே – 20
ஆகாஷின் காத்திருப்பில் நொடிகள், நிமிடங்களாக மாறி, நிமிடங்கள் மணித்துளிகளாக மாறி நாட்களும் கடந்து திருமண நாளும் வந்தது. ஸ்ருதி வரவில்லை. அவனும் அவளைத் தேடிச் செல்லவில்லை.
அவர்களுக்கு இடையில் பயணித்த காதல் குறைந்துவிட்டதா? இல்லை காணாமல் போய் விட்டதா? பதிலறியா கேள்விகள் ஆகாஷை சுற்றி கொண்டிருந்தது.
ஆகாஷ், அவன் தான் திருமணத்தை நிறுத்தியதாகக் கூறினாலும், ஊர் உலகம் பல விதமாக பேச ஆரம்பித்தது. ஊரில் இருந்து, வியாபார வட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்ட ஸ்ருதியின் குடும்பம் அவர்கள் மேல் பல பழிகளைச் சுமந்து கொண்டாலும், ஆகாஷிற்கும் அவன் குடும்பத்திற்கும் பல அவமானங்களைத் தேடித் தந்தது தான் நிஜம்.
இந்த அவமானத்தை மறைக்க, ஒதுக்க ஆகாஷிற்கு வேறு ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்று சுமதி ஒற்றைக் காலில் நின்றார். ஆனால், பலன் தான் கிடைக்கவில்லை.
‘என்னால், ஸ்ருதியை தவிர வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்ள முடியுமா?’ இந்த கேள்வி எழுகையில் அவன் கண்கள் கலங்கியது. மறுப்பாகத் தலை அசைத்துக் கொண்டான்.
திருமணத்தை மறுத்து விட்டாலும், ஊரார் பேச்சு, குடும்பத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை என அனைத்தும் ஆகாஷிற்கு ஸ்ருதியின் மேல் கோபத்தையே அதிகரித்தது.
காதலில் நெகிழும் அவன் மனம், இப்பொழுது கோபத்தில் இரும்பாக மாற ஆரம்பித்தது.
அவன் காத்திருந்தான். காத்திருந்தான். காத்திருந்தான்.
அவன் அறையின் ஓரத்தில் அந்த கிப்ட் பாக்ஸும் பிரிக்கப்படாமல் காத்திருந்தது. ஒருவேளை அந்த கிப்ட் பாக்ஸ் திறக்கப்பட்டிருந்தால், இல்லை கைமாறியிருந்தால், அவர்கள் வாழ்க்கையும் திசை மாறி இருக்குமோ?
எங்கோ ஒரு ஜோடியைப் பார்த்தால், ‘நான் ஸ்ருதியை தேடிப் போயிருக்க வேண்டுமோ?’ என்ற கேள்வி அவன் மனதில் எழும் பொழுது, அவன் அறிவு, ‘நீ ஏன் போக வேண்டும்?’ அவன் தன்மானத்தைச் சீண்டிப் பார்த்து அவன் எண்ண ஓட்டத்திற்குத் தடா போட்டது.
‘ஸ்ருதி என்னை நினைப்பாளா?’ என்ற கேள்வி எழுகையில், ‘நினைத்திருந்தால், என்னைத் தேடி வந்திருப்பாள்.’ என்று அவன் தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான்.
‘காதல்…’ அன்று இனித்த காதல் இன்று கசக்க ஆரம்பித்தது. ஸ்ருதியின் நிராகரிப்பு, இழந்த காதல், அனைவருக்கு முன் அவமானம், குடும்பத்தினரின் கோபம் என அனைத்தும் ஆகாஷை மெல்ல மெல்ல மாற்ற ஆரம்பித்திருந்தது.
ஆகாஷின் மனதில் ஸ்ருதியின் மேல் கோபம். கோபம் மட்டுமே! கோபம் வெறுப்பாக மாறி, வெறுப்பு கனலாகப் பொங்கி நாட்கள், மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருண்டோடின.
கீதா அவள் மேற்படிப்பை முடித்துவிட்டு, பி.எச் டீ படிப்பதாகக் கூறிக்கொண்டு அவள் துறையில் ஆராய்ச்சி வேலையில் மூழ்க ஆரம்பித்திருந்தாள்.
இப்பொழுது அவள் ஆகாஷின் அறைக்குச் செல்வதில்லை. ஆகாஷே அவன் அறைக்கு எப்பொழுது வருகிறான். எப்பொழுது திரும்புகிறான் என்று யாருக்கும் தெரிவதில்லை. அவன் அறையில் டாம் அமைதியாக ஒரு ஓரமாகக் கிடந்தது.
‘அண்ணனின் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது?’ என்று கீதா மருகாதே நாளே இல்லை. குடும்பத்தினர் அனைவரும் ஆகாஷிடம் திருமணத்திற்காகப் பலவாறு பேசிவிட்டு தோல்வியையே தழுவிக் கொண்டனர்.
‘இப்பொழுது ஸ்ருதியின் மேல் காதலா?’ இந்த கேள்விக்கு அவனுக்குப் பதில் தெரியவில்லை. ஆனால், இனி அவன் வாழ்வில் எந்த பெண்ணுக்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருந்தான் ஆகாஷ்.
‘போதும்! வாழ்வில் நான் ஒரு பெண் மேல் அன்பு வைத்ததும் போதும். நான் ஜென்மத்திற்கும் அனுபவிப்பதும் போதும்.’ என்று ஆகாஷ் முடிவு எடுத்துக்கொண்டான்.
முன்பு போல் அவன் மற்ற பணிகளில் ஈடுபடுவதில்லை. வேலை… வேலை… வேலை… இதுவே ஆகாஷின் தாரக மந்திரம்.
பல கோடிகள் லாபத்தில் புரண்டது அவன் வியாபாரம். அவன் சந்தோசம் மட்டுமே நயா பைசா இன்றி நஷ்டத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.
அவ்வப்பொழுது கீதாவிடம் பேசுவான். பழைய துள்ளல் இல்லை என்றாலும், அவன் கேலியும் நையாண்டியும் அவன் பேசும் ஓரிரு வார்த்தைகளில் வெளிப்பட்டுவிடும். பிறவி குணம் மாறுமா என்ன?
ஸ்ருதி அவனது கடந்த காலமாகிப் போனாள்.
இத்தனை வருடங்களாகச் சலசலப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்த அவன் வாழ்வில் இப்படி ஒரு திருப்புமுனையை அவன் எதிர்பார்க்கவில்லை.
விதியை சபித்துக்கொண்டான். தன் தலை எழுத்தைச் சபித்துக் கொண்டான். யூஸ் வாஷிங்டன் நகரில் ரோபோடிக்ஸ் பற்றிய மாநாட்டில் அமர்ந்திருந்தான்.
இப்பொழுது ஆகாஷ் அவன் வியாபாரத்தில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருந்தான். ரோபோடிக்ஸ் போன்ற புதிய முயற்சியில் அவன் நேரடியாக ஈடுபடுவதில்லை. ரோபோடிக்ஸ் ஸ்ருதியை நினைவு படுத்துவது போன்ற பிரமை அவனுள். அவனுக்குக் கீழே பல பணியினரை வைத்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். அவை வெற்றியை நோக்கிப் பயணித்து லாபத்தையும் ஈட்டிக்கொண்டு தான் இருந்தது.
இது போல் மாநாட்டிற்கு எப்பொழுதும் வேறு யாரையாவது அனுப்பி விடுவான். ஸ்ருதியை நேரடியாகத் தொடர்பு கொள்ளாவிட்டாலும், அவள் எங்கு இருப்பாள் என்ற அனுமானம் அவனுள் இருக்கத் தான் செய்தது. ஸ்ருதியை பற்றி சிந்திக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். அதனாலேயே தவிர்த்து விடுவான்.
ஆனால் இன்று?
அந்த மாநாட்டில், இந்தியாவில் வளர்ந்து வரும், அதுவும் ரோபோடிக்ஸில் திறமையாகச் செயல்பட்டு வரும் முக்கிய பிசினெஸ் மக்னெட் என்ற முறையில் அவனுக்குத் தக்க மரியாதை கொடுக்க பட்டிருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தான்.
வழக்கமாக வராதவன் வந்திருப்பதால், கூடுதல் கவனமும், வரவேற்பும் இருந்தது.
அவனுக்கு அறிமுகமான சிலரும் அங்கு. அவன் கிளைண்ட்ஸ் என்று வீடியோ கால் மூலம் அறிமுகமான வெளிநாட்டவர் சிலரும் அவர்களுள் அடக்கம்.
ஆனால், ‘வேண்டாம்… வேண்டாம்…’ என்று நினைத்தலும், அவன் ஆழ் மனம் அவன் அருகே இருந்த நாற்காலியில் ஸ்ருதியை தேடத்தான் செய்தது.
‘நிச்சயம் இங்கு இருப்பாள்.’ அவன் மனம் அடித்து கூற, கண்மூடி அவனை நிதானித்துக் கொண்டான்.
மேடையில், “ஹலோ குட் மார்னிங்!” அவள் குரல் இனிமையாக அவன் காதில் பாய்ந்தது.
இல்லை, ‘வெறுப்பாக எதிரொலித்தது.’ என்று அவன் எண்ணிக்கொண்டான் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
இத்தனை வருடம் கழித்து அவளைப் பார்த்ததில் அவன் மனம் சிலிர்த்தது. அவன் இதயம், ‘தடக்… தடக்…’ என்று ஓட ஆரம்பித்தது.
அவனோடு இருப்பவர்களில் ஒருத்தியாக அவன் அவளைத் தேட, அவள் மேடை மேல் நின்று கொண்டிருந்தாள். அவனுள் சற்று பிரமிப்பு தான்.
பொறாமை என்றெல்லாம் சொல்ல முடியாதது. ‘ஸ்ருதியின் வளர்ச்சியில் எனக்கு எப்படி பொறாமை வர முடியும்?’ என்று எண்ணியாடி அவன் உதடுகள் ஏளனமாக வளைந்தது.
‘ஸ்ருதி என்னைப் பார்க்கிறாளா? பார்ப்பது போல் தான் இருக்கிறது? ஆனால், அவள் சற்றும் தடுமாறவில்லையே? நான் தான்… நான் தான்…’ அவளை பற்றி என்ன ஆரம்பித்து அவன் தன்னை தானே நிந்தித்துக்கொண்டான்.
‘அழுத்தக்காரி… இல்லைனா என்னை விட்டுட்டு போயிருப்பாளா?’ அவன் கேள்வி அதே இடத்தில் வந்து நின்றது.
அவள் பேச்சு சுவாரசியமாக வாழ்க்கை தத்துவதோடு தொடங்கியது. தவறுகளில் சறுக்காத மனிதர்கள் இல்லை. சறுக்கி விழுந்தவன் அனைவரும் முட்டாள் இல்லை. ஆனால், எழுந்து ஓடாமல், தவறியதை எண்ணி அங்கே முடங்கியவன் மட்டுமே…” என்று முடிக்காமல் அழகாகச் சிரித்தாள்.
அந்த வாக்கியத்தை சொல்லும் பொழுது அவள் கண்கள் ஒருமுறை இவனை தொட்டு மீண்டது போல் உணர்ந்தான் ஆகாஷ்.
சில நகைச்சுவை, பின் அனைவருக்கும் வரவேற்பு உரை , அதன் பின் ரோபோடிக்ஸ், ஹுமனோய்ட் ரோபோட்ஸ் அதாவது மனிதர்களைப் போல உள்ள ரோபோட் என்று ரோபோட்ஸ் பற்றி அத்தனை தெளிவாகப் பேசினாள்.
ஆகாஷின் கண்கள் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தது. ‘திறமைசாலி தான். ஆனால், இத்தனை திறமைசாலியா? இந்த சில வருடங்களில், அளவுக்கு அதிகமாக உழைப்பைப் போட்டு அவளை உயர்த்தி இருக்க வேண்டும்.’ அவளைப் பார்த்தபடி கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.
‘சிக்கென்ற தேகம், அதை எடுப்பாகக் காட்டிய உடை, பளபளவென்று சிவந்த மேனி. கண்ணைக் கவரும் என்று சொல்லமுடியாவிட்டாலும், அனைவரையும் கவரும் முழு நீள கவுன். அழகு தான். இந்த ஊரு கிளைமேட்டுக்கு இன்னும் ஜொலிஜொலிப்பா இருக்கா போல?’ என்று சிந்திக்க ஆரம்பித்தான்.
‘நான் தான் இவளை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறேனோ? இவளுக்குச் சிறிதும் கவலை இல்லையோ?’ என்ற எண்ணத்தோடு அவன் அமர்ந்திருக்க, சிலரை அழைத்து அவர்களுக்கு மரியாதை நிமித்தமாகப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அப்பொழுது ஆகாஷின் பெயர் அழைக்கப்பட, அவன் உணர்ச்சி துடைத்த முகத்தோடு மேடைக்குச் சென்றான். வேறு ஒருவர் பரிசு வழங்க, அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அவன் கட்டுப்பாட்டை மீறி, அவன் கண்கள் அவளை அளவிட்டது. அவள் முகத்தில் சிறிதும் சலனமில்லை. முழுமனதோடு புன்னகைத்தாள். “தேங்க்ஸ் பார் கமிங்.” என்று இனிமையான குரல் வேறு. அவன் நெற்றி சுருங்கியது.
‘ஸ்ருதியால் இப்படி என்னை மறக்க முடியுமா? ஒரு சின்ன சலனம் கூட ஏற்படாதா? அவளுக்கு என் நினைப்பே இல்லையா?’ என்ற கேள்வியோடு தலை அசைத்துக் கொண்டு கீழே இறங்கினான். மனதிலும் பெரிய அடி. மேடையில் நின்றவளை திருப்பி பார்த்தபடியே இறங்கினான். அவனால், பழைய இடத்துக்குச் செல்ல முடியவில்லை.
ஆங்காங்கே மேஜைகளும் இருந்தன. அதில் அமர, அவன் காதில் ஸ்ருதியின் குரல் ஒலித்தது.
“என்ன காற்று இந்த பக்கம் வீசுது?” ஸ்ருதியின் புருவங்கள் நெளிந்தது.
அவன் அதிர்ச்சியாக மேடையின் பக்கம் திரும்ப, அங்கும் அவள் நின்று கொண்டிருந்தாள்.
‘வாவ்! மேடையில் ஸ்ருதியை போலவே உள்ள ஹுமனோய்ட் ரோபோட்.’ ஆகாஷ் அசந்துவிட்டான்.
அந்த நொடி, அவன் கோபம், வெறுப்பு காதல் என அனைத்தும் மறந்து பிரமிப்பு மட்டுமே. ஸ்ருதியையும், மேடை மேல் இருக்கும் அவளைப் போன்ற ஹுமனோய்ட் ரோபோட்டையும் மெச்சுதலாகப் பார்த்தான். அவன் கண்கள் பெரிதாக விரிந்து, விரிந்த மேனிக்கே நின்றது. அதில் பாராட்டு மட்டுமே.
அந்த பொறாமை இல்லாதா பாராட்டை அவன் இதழ்கள் கூறாவிட்டாலும், அவன் கண்களிலிருந்து பெற்றுக் கொண்டாள் ஸ்ருதி, ‘இவன் தான் ஆகாஷ்!’ என்ற எண்ணத்தோடு.
நொடிகள் தான். தன்னை சரிபடுத்திக் கொண்டான் ஆகாஷ்.
மேடையிலிருந்த ஸ்ருதியை போல உள்ள ஹுமனோய்ட் ரோபோட்டை பார்த்தான். மீண்டும் ஸ்ருதியை பார்த்தான்.
“ரெண்டும் ஒன்னு தான். மனசே கிடையாது.” வஞ்ச புகழ்ச்சி அணி போல் கேலி பேசினான் ஆகாஷ்.
‘யாருக்கு மனசில்லை? இதை போல் எப்பவும் இடக்குமடக்கா பேசிட்டு, போனவ செத்தாலா, இல்லையானு கூட பார்க்காத இவனுக்கு மனசு இருக்கு. எனக்கு இல்லையா?’ என்ற ஸ்ருதியின் கோபம் சுறுசுறுவென்று ஏறியது.
தன் கோபத்தை மறைத்துக் கொண்டு, “சிலரோட பழகிய சகவாச தோஷம். மனசு செத்து போச்சு. காலம் கடந்து தான் புரிஞ்சிது, மனசே இல்லைனா ரொம்ப நல்லதுன்னு.” என்று கிடைத்த சந்தர்ப்பத்தில் பதிலடி கொடுத்தாள் ஸ்ருதி.
அவள் பேச்சில் தலை அசைத்து, “ஒரு ஸ்ருதியையே நாடு தாங்காது, இதுல ரெண்டு வேறையா?” என்று அசராமல் கேட்டான் ஆகாஷ்.
“என்னை போல உள்ள இந்த ஹுமனோய்ட் ரோபோட் இந்த கானபெரென்ஸ்க்கு மட்டும் தான். மீட்டிங் முடிஞ்சதும், அதன் உருவத்தை மாத்திருவோம். இல்லைனா பல குழப்பம் வந்திரும்.” என்று அவன் கேள்விக்குப் பதில் போல் கூற, “சிலரால் எப்பவும் குழப்பம்முனு தெரிஞ்சா சரி.” என்று அவன் உதடுகள் நக்கலாக மடிந்தது.
ஸ்ருதி அவனைக் கோபமாகப் பார்க்க, அவளுக்கு மேடையிலிருந்து அழைப்பு வந்தது.
அவளை போலவே, ஹுமனோய்ட் ரோபோட் செய்து ஒரு மாநாட்டைத் தொகுத்து வழங்கவும் செய்த அவள் திறமையைப் பாராட்டிப் பேச, அனைவரும் கைகளை அவளைப் பாராட்டும் விதமாகத் தட்டினர்.
அந்த அரங்கமெங்கும் கரகோஷம் எழும்பியது.
ஆகாஷின் கைகளும், அவளுக்காக மேலே எழும்பியது. சற்றும் முன் அவனை சிறிதும் கண்டு கொள்ளாதது ரோபோட் தான் என்பதில், அவன் மனம் சற்று முன் விழுந்த அடியிலிருந்து மீண்டு கொண்டது. ‘அவளுக்கும் என் நினைப்பு இருக்கிறது.’ எண்ணிக் கொண்டிருக்கையில் சுதாரித்துக் கொண்டான்.
‘என்னை மாதிரி ரோபோட்டை பார்த்தால் கூட தடுமாறும் அளவுக்கு இல்லை.’ என்று தன்னை தானே நொந்துக்கொண்டான்.
‘என் நினைப்பு இருந்தால் என்ன இல்லைனா என்ன?’ என்று அவள் நினைப்பை உதறினான்.
கவனத்தை அவள் பக்கம் திருப்பினான். அனைவரும் அவளைப் பாராட்டிக் கொண்டிருந்தனர்.
‘கெட்டிகாரி தான். திறமைசாலியும் தான். ஆனால், திமிர் பிடித்தவள்.’ என்று அவளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். அவள் அவனை நோக்கி வருவாள் என்று அவன் உள் மனம் கூற, சிறிது நேரத்தில் அதைப் பொய்ப்பிக்காமல் அவளும் வந்து, “என்ன காற்று இந்த பக்கம் வீசுது?” என்று அதே கேள்வியில் நின்றாள்.
“உன்னை பார்க்க தான். ஆனால், உனக்காக இல்லை.” அவன் வார்த்தை சற்று காட்டமாக வந்து விழுந்தது.
புன்னகைத்தாள். “தெரியும். எனக்காக வந்திருந்தா, என்னைக்கோ வந்திருப்பீங்க!” அவள் குரல் ஆழமாக ஒலித்தது.
‘நான் வரவில்லை என்று ஏங்கினாளா?’ அவள் குரலில் அவன் மனம் ஒரு நொடி தடுமாறி பதறியது. ஸ்ருதியின் முகம் அவள் குரலுக்கு சம்பந்தம் இல்லாத அசட்டையை வெளிப்படுத்த, “என்னை வேண்டாமுன்னு தூக்கி போட்டுட்டு போனவங்க பின்னாடி நான் ஏன் போகணும்?” என்று அவன் கூற, “நியாயம் தான்.” என்று மெச்சுதலாக கூறி தோள்களைக் குலுக்கினாள்.
அவள் தோள்களைப் பிடித்து உலுக்கி, ‘ஏன் போன?’ என்று கேட்க வேண்டும் என்று ஆங்காரம் அவனுள் எழும்பியது.
அதை மறைத்துக்கொண்டு, “விட்டுட்டு போனது நீ.” என்று கடுப்பாகக் கூறினான்.
“போகவைத்தது நீங்க.” அவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
“ஆமாம்… நான் தான் நீ என்னை விட்டு போய்டுன்னு சொன்னேன்.” என்று அவன் எகிற, பேச்சு செல்லும் திசையைக் கணக்கிட்டு “எதுக்கு பழைய கதை?” என்று அவள் சிலுப்பிக்கொண்டாள்.
“ஆமாம் எதுக்கு முடிந்து போன கதை?” என்று அவனும் விடாமல் கூறினாள்.
அவனை ஒரு நொடி அவள் பார்க்க, சட்டென்று மீட்டுக்கொண்டாள்.
அதற்கிடையில் சிலர் அவள் அருகே வந்து அவளை பாராட்ட, “எல்லாத்துக்கும் என் பேமிலி தான் காரணம். என் ஹஸ்பேண்ட் தான் எல்லாத்துக்கும் முழு சப்போர்ட்.” என்று அவள் புன்முறுவலோடு கூற, அவன் முகம் இறுகியது.
அவன் முக இறுக்கத்தில் அவள் புன்னகை விரிந்தது.
குறும்புகள் தொடரும்…