உயிர் தேடல் நீயடி (எபிலாக்)
ஆறு வருடங்களுக்கு பிறகு,
அந்த உயர்ரக மகிழுந்து சாலையில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவ்யதர்ஷினி காரை செலுத்தும் வேகத்திலேயே அவளின் மனநிலை தெரிந்தது.
அவளின் கறைகள் துடைத்த அழகு முகத்தில் கடுப்பு கூடி தெரிய, வாய் பாட்டிற்கு கோபமாக ஏதோ முணுமுணுத்திருக்க கைகள் பாட்டிற்கு காரை இயக்கிக் கொண்டிருந்தன.
இப்போது விபி நிறுவனத்தின் சரிவிகித பங்குதாரராக காவ்யாவும் இருந்து வருகிறாள். முதன் முதலில் விபீஸ்வர் இதைப்பற்றி சொன்னபோது காவ்யா தயங்கினாள் தான்.
“நான் எப்படி விபு? வேண்டாமே” காவ்யா தயக்கமாக மறுப்பு சொல்ல, “உன்கிட்ட சஜெஷன் கேக்கல பேபி இன்ஃபார்ம் பண்றேன். நீ முன்ன வீட்ல போரடிக்குது என்னோட வேலைக்கு வரட்டுமான்னு கேட்ட இல்ல, அப்பவே முடிவு பண்ணிட்டேன், என்னோட ஒய்ஃப் எனக்கு கீழே வேலை செய்றவளா இல்ல, எனக்கு ஈக்குவல் பொசிசன்ல இருக்கணும்னு. அப்பவே ஃபிப்டி ஷேர்ஸ் உன் பேர்ல மாத்த ஏற்பாடு பண்ணிட்டேன்” என்று விளக்கியவனை விழி விரிய பார்த்திருந்தாள்.
“என்ன, இதை உன்கிட்ட சொல்லி உன்ன சர்பிரைஸ் பண்ண தான் இவ்வளவு லேட் ஆகிடுச்சு” என்று குரல் இறங்கி சொன்னவனை நெகிழ்வோடு அணைத்து கொண்டாள்.
தன்னவளை தன்னோடு இறுக்கி கொண்டவன், “வெறும் ஹக் மட்டும் போதாதே பேப்” கிசுகிசுக்க, அவன் முகம் முழுவதும் தன் இதழ் ரேகைகளை பதித்திருந்தாள்.
ஆனந்த அவஸ்தையாய் அவள் விழியோரம் கண்ணீரும் தேங்கி நிற்க, “ஹே அழுமூஞ்சி இப்ப ஏன்டி அழற” என்று கடிந்தபடியே அவள் கண்களை துடைத்து விட்டான்.
“உங்களை புரிஞ்சுக்காம முன்ன ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் விபு” என்க.
“ஆமா இல்ல, என்ன பண்ணலாம்?” விபீஸ்வர் தீவிரமாக யோசித்து, “டெய்லி தௌசண்ட்ஸ் ஆஃப் கிஸ்ஸஸ் ஃபைன் பண்ணணும்” என்று தீர்ப்பெழுதி கண்ணடித்து குறும்பாய் சிரித்து வைக்க, “போங்கு, அதெல்லாம் தர முடியாது” என்று விலகியவளை பிடித்து இழுத்து, “இட்ஸ் ஓகே பேபி அப்ப இதையும் நானே ஃபைன் பண்ணிறேன்” என்று பெண்ணவளை திக்குமுக்காட செய்திருந்தான்.
காதல் வாழ்விலும் தொழிற் துறையிலும் இருவரும் கைக்கோர்த்து பயணிக்க, குடும்ப எண்ணிக்கை கூடி இருக்க, அவர்களின் தொழில் வளர்ச்சியும் ஏற்றத்தை தொட்டிருந்தது.
இன்றைக்கு முக்கிய சந்திப்பிற்காக தான் இருவரும் வந்திருந்தனர். கடைசி நேரத்தில் விபீஸ்வர் முக்கிய வேலையென்று நழுவி இருந்தான்.
வேறுவழியின்றி காவ்யா தனியாகவே சந்திப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை. சற்று தயக்கம் இருக்க தான் செய்தது. இதுவரை விபீஸ்வருடன் இணைந்தே அனைத்து சந்திப்புக்களிலும் பங்கேற்று இருக்கிறாள். விபீஸ்வர் தனித்தோ காவ்யா தனித்தோ பங்கேற்க வேண்டிய நிலை வந்ததில்லை.
இன்று காரணமே சொல்லாமல் விபீஸ்வர் சென்றிருந்தது இவளுக்கு கோபத்தை கிளப்பி இருந்தது.
இன்றைய தொழில்முறை சந்திப்பை தனித்து வெற்றிகரமாகவே முடித்திருந்தாள். சந்தோசம் தான் ஆனாலும் அவன் அருகில்லாதது ஏதோ போல வெறுமை தோன்றியது.
விபீஸ்வருக்கு பலமுறை முயன்றும் அவன் பதில் தராதது வேறு இவளை கொதிநிலைக்கு ஏற்றி இருக்க, வீட்டை நோக்கி வேகமெடுத்திருந்தாள்.
சாலையோர காட்சிகளில் ஏதோ இவளின் பார்வையில் பட வேகத்தை குறைத்து காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிக் கொண்டாள்.
அங்கே சாலையோர நடைப்பாதையில் ஒரு சிறுவன் பிச்சை பாத்திரம் ஏந்தி நின்றிருந்தான்.
சிறு குறுத்தின் அவல நிலையைப் பார்த்து இவள் மனம் கனத்தது. அருகில் சென்று பேச்சு கொடுத்தாள்.
“உங்க அப்பா அம்மா எங்கே? தனியாவா இங்க நக்கிற!”
“எனக்கு அப்பாம்மா எல்லா இல்ல, ஆயா மட்டுதென், அது கோயில்தெருல பிச்சை எடுக்குது நான் பஸ்டாண்டில பிச்சை எடுகிறேன், பசிக்குது பத்து ரூபா போடு கா…” என்றான் அந்த ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன்.
காவ்யா தன் கைப்பையில் இருந்து ஒரு பிஸ்கேட் பாக்கெட்டை எடுத்து கொடுக்க வாங்கி உடனே பிரித்து சாப்பிட தொடங்கினான்.
“அப்ப காசு தரமாட்டியா?” அவன் மறுபடி கேட்க, “ம்ஹும் மாட்டேன், காசு நாம வேலை செஞ்சு சம்பாதிக்கணும் இப்படி பிச்சை எடுத்து கேக்க கூடாது” என்றாள்.
“எங்களுக்கு எந்த வேலையும் தெரியாதே” என்று கைவிரிக்க,
“உங்களுக்கு சாப்பாடு, துணி தந்து படிப்பு, வேலை சொல்லி கொடுக்க வேண்டியது எங்க பொறுப்பு” என்க.
“ஐய படிப்பா நா எல்லா வரல, அதெல்லா எனக்கு வராது” என்று சிறுவன் சத்தமிட்டான்.
“சரி, படிக்கலனா பரவால்ல ஏதாவதொரு வேலை கத்துக்கலாம் இல்ல, பிச்சை எடுக்காம வேலை பார்த்து சம்பாதிக்கலாம், உன்ன மாதிரி நிறைய பசங்களுக்கு படிப்பும் வேலையும் சொல்லி தரோம்” என்றவள் ஒரு ஆல்பத்தை எடுத்து காட்ட, அதில் பல குழந்தைகள் படிப்பது, வேலை பயிற்சி எடுப்பது போன்ற புகைப்படங்கள் இருந்தன.
“இவன் காசி, என் தோஸ்த், இவனையும் நீங்க தான் இட்டுனு போறீங்களா, சரி நானும் வரேன்” என்றவனை அழைத்து கொண்டு அவன் ஆயாவை தேடி சென்றாள்.